Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகம் சேர்ந்தாய் அதிசயனே

ASA 3

அகம் 3

மூன்று மணி நேரம் பயணம் செய்து வந்ததால் நால்வரும் குளித்து தயாரானதும் தான் அவர்களுக்கு பசி உணர்வும் ஏற்பட்டது. மதியும் மொழியும் இங்கே ரெசார்ட்டில் இருக்கும் உணவகத்தில் சென்று சாப்பிடலாம் என்று சொல்ல, இங்கேயே வரவழைத்து சாப்பிடலாம் என்று நயந்தினி கூறினாள்.



Advertisement

“ஜாலியா இருக்கும் க்கா, அங்கேயே போகலாம்,” என்று இரட்டையர்கள் அடம்பிடிக்க,

“பிள்ளைங்களுக்காக அங்கேயே போய் சாப்பிடலாமே,” என்று நளினி கூறவும்,

Advertisement

Advertisement

“ஆமாம் என்னோட விருப்பம் எதுவுமே உங்களுக்கு பெருசா தெரியாதே,” என்று நயந்தினி முறுக்கிக் கொண்டாள்.

“சரி நாங்க அங்க போய் சாப்பிட்றோம், உனக்கு இங்க ரூம்க்கு கொண்டு வந்து கொடுக்க சொல்றேன் போதுமா?” என்ற நளினி இருவரையும் கூட்டிக் கொண்டு வெளியேறியதும் தான், நயந்தினிக்கு தனிமை கிடைத்ததில் மனம் கொஞ்சம் மகிழ்ச்சியானது.

Advertisement

இங்கு வந்ததிலிருந்து சாகரி, ரோஹன் அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தாலும், விக்கியிடம் இருந்து ஏதாவது குறுந்தகவல் வந்திருக்கிறதா? என்று அவ்வப்போது அலைபேசியை பார்த்தப்படியே இருந்தவளுக்கு, எந்தவொரு குறுந்தகவலும் வந்திருக்கவில்லை என்பதில் ஏமாற்றம் கொண்டு விக்கிக்கு அழைத்துப் பார்த்தாள். ஆனால் அலைபேசி அழைப்பு ஏற்கப்படவில்லை.

ப்ளீஸ் விக்கி, காலை எடுத்துப் பேசுடா, நீ பேசாம இருக்கறது எனக்கு கஷ்டமா இருக்கு, நான் இங்க கிளம்பி வந்தது உனக்கு பிடிக்கல தான், ஆனா அதுக்காக என்னை என்ன செய்ய சொல்ற, நான் இப்பவே ஓவரா நடந்துக்கிட்டா, அப்புறம் நம்ம பிளானெல்லாம் சொதப்பிடும், அதான் அம்மா சொன்னதை ஒரேடியா மறுக்க முடியாம இங்க வந்தேன். பத்து நாள் தானே, அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கோ, அதுக்குப்பிறகு அம்மாவிடம் எப்படியாவது பேசி கன்வின்ஸ் செய்து நாம ரெண்டுப்பேரும் எங்கேயாச்சும் அவுட்டிங் போயிட்டு வரலாம், என்று அவள் குறுந்தகவல்கள் மூலமாக சமாதான தூது விட, அது சரியாக வேலை செய்ததோ, 

அடுத்த நொடி விக்கியின் எண்ணிலிருந்து அழைப்பு வரவும், உடனே அதை ஏற்றவள், “கோபம் போச்சா?” என்று கேட்க,

‘இன்னும் இல்லை. ஆனாலும் நீ சொன்னமாதிரி இப்பவே அவசரப்பட்டா சொதப்பவும் வாய்ப்பிருக்கு, அதனால உன்னை மன்னிக்கிறேன். ஆனா இந்த பத்து நாளும் அங்க தங்கி தான் ஆகணுமா? அம்மாவிடம் ஏதாவது பொய்யா காரணம் சொல்லிட்டு வர முடியாதா? நீ அங்க போனதே எனக்கு பிடிக்கல,” என்ற விக்கியின் பேச்சைக் கேட்டவளோ,

“நான் என்ன விருப்பப்பட்டா இங்க வந்தேன். எனக்கும் இங்க வர்றதுக்கு சுத்தமா பிடிக்கல தான், ஆனா வேற வழியில்லை. நீ சொன்னமாதிரி சீக்கிரமா இங்க இருந்து கிளம்ப ஏதாவது காரணம் கிடைக்குதான்னு பார்க்கிறேன். சரியா?” என்றாள் நயந்தினி.

“என்னவோ போ நயன், உன்னை நான் ரொம்ப மிஸ் செய்றேன்.” என்று விக்கி பதில் கூறவும்,

“நானும் தான்,” என்று நயந்தினி அதற்கு பதில் கூற, அப்போது அவள் அறையில் அழைப்பு மணி சத்தம் கேட்கவும்,

“அம்மா, தங்கையெல்லாம் வந்துட்டாங்க போல, நான் அப்புறம் பேசறேன்.” என்று நயந்தினி அவசரமாக அழைப்பை அணைக்க, மறுமுனையில் விக்கிக்கோ நயந்தினி அழைப்பை அணைத்ததில் கோபம் உண்டானது.

நயந்தினி அவசரம் அவசரமாக வந்து கதவை திறந்தவள், அங்கு வெளியில் நின்றிருந்த நபரை பார்த்து, ‘ஓ ரூம் சர்வீஸா? தெரிஞ்சிருந்தா, காலை கட் செய்யாம இருந்திருக்கலாமே,’ என்று மனதினில் நினைத்தப்படியே, 

“என்ன?” என்று வெளியே நின்றிருந்தவரிடம் கேள்வி கேட்க,

“உங்களுக்கான லன்ச் மேம்,” என்றார் வந்தவர்,

“ம்ம் வச்சிட்டு போங்க,” என்று அவருக்கு வழிவிடவும், அவர் கொண்டு வந்து அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு போகவும்,

இன்னும் தான் அன்னையும் தங்கைகளும் வரவில்லையே, அதனால் விக்கியை அழைத்து பேசலாமா? என்று ஒருபக்கம் மனம் நினைத்தாலும், உணவை பார்த்ததும் அவளுக்கு பசியும் அதிகமாக, பிறகு விக்கியிடம் பேசிக் கொள்ளலாம் என்று சாப்பிட ஆரம்பித்தாள்.

அவள் சாப்பிட்டு முடிக்கும் நேரம் அவளின் அன்னையும் தங்கைகளும் வந்துவிட, கூடவே ராகவியும் வந்தாள். அவளைப் பார்த்ததும் , “ராகவி அக்கா,” என்று நயந்தினி உற்சாகமாக ஆகிவிட,

“நேரில் பார்த்தா தான் இந்த உற்சாகமெல்லாம், எவ்வளவுநாள் ஆச்சு உன்னைப் பார்த்து? ஏன் வீட்டுக்கே வர மாட்டேங்குற?” என்று கேட்டாள் ராகவி.

அவர்கள் குடும்பம் வீடுமாறி போனாலும் நளினி மகள்களை அழைத்துக் கொண்டு அவ்வபோது அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டு வருவார். நயந்தினியும் ஆரம்பத்தில் அப்படி அவர்களோடு சென்றாள் தான், ஆனால் கடைசி இரண்டு வருடங்களாக அப்படி செல்வதை தவிர்த்து விட்டாள். 

இப்போது ராகவி கேட்கவும், “ஸ்டடிஸ்ல கவனம் வச்சதால தான் க்கா, மத்தப்படி உங்களைப் பார்க்க கூடாதுன்னு எல்லாம் இல்லை,” என்று நயந்தினி சாக்கு சொல்லவும்,

“சும்மா சொல்லாத, ஒரு நாள் விடு, ரெண்டு இல்ல மூனு மணி நேரம் கூட என்னோட ஸ்பென்ட் செய்யணும்னு உனக்கு தோணலையா? நானும் தான் ஒர்க்ல பிஸி ஆகிட்டேன். ஆனாலும் எப்பயாச்சும் அம்மா கூட உன் வீட்டுக்கு வருவேன். ஆனா அப்ப கூட நீ வீட்ல இருக்க மாட்ட, கேட்டா ஏதோ வேலைன்னு ஹாஸ்டல்ல இருக்கா அப்படின்னு ஆன்ட்டி சொல்லுவாங்க, ம்ம் அவ்வளவு பிஸி போல, இப்ப கல்யாணத்துக்கு கூட வர மாட்டேன்னு சொன்னியாமே? அந்த அளவுக்கு ஆகிப் போச்சா உனக்கு,” இன்று ராகவி உரிமையாக கோபப்பட, நயந்தினி அன்னையை முறைத்தாள்.

“எதுக்கு இப்போ அவங்கள முறைக்கிற, அவங்க வற்புறுத்தி கூப்பிடவே தான் நீ வந்திருக்க, இல்லை வந்திருக்க மாட்ட இல்லை. என் மேல உனக்கு அவ்வளவு தான் பாசம் அப்படித்தானே,” என்று ராகவி கேட்கவும்,

“அப்படி இல்லை க்கா, பத்து நாள் தங்க முடியாது. கல்யாணம் நெருக்கத்துல போலாம்னு தான் அம்மாவிடம் சொன்னேன். அவங்க உங்களிடம் வேற மாதிரி சொல்லிட்டாங்க,” என்றாள் சமாளிப்பாக,

“சும்மா காரணம் சொல்லாதே, இங்கேப் பாரு, இந்த பத்து நாளும் நீ என் கூட தான் இருக்கணும், அப்படி இப்படி நகரக் கூடாது சொல்லிட்டேன்.” என்று ராகவி அவளை தன்னோடு அழைத்துச் செல்ல, அதை பார்த்துக் கொண்டிருந்த நளினிக்கோ மகளை இங்கு அழைத்து வந்தது நூற்றுக்கு நூறு சரிதான் என்று இரண்டாவது முறையாகவும் தோன்றியது.

ராகவியும் நயந்தினியும் சென்றதும், “அம்மா நாங்க பீச்ல போய் விளையாடிட்டு வரோம் ம்மா,” என்று மொழியும் மதியும் கூற,

அவர்கள் இருவரும் கொஞ்சம் சுட்டித்தனம் செய்பவர் என்பதால், “பார்த்து ஜாக்கிரதையா விளையாடிட்டு, எந்த வால்த்தனமும் செய்யாமல் இருக்கணும்,” என்று நளினி அவர்களை அனுப்பி வைத்தார்.

அவர்கள் சென்றதும் தோழிக்கு ஏதாவது உதவியாக இருக்கலாம் என்று நளினியும் சாகரியை தேடிச் செல்ல, சாகரியும் தோழியைப் பார்த்ததும், “ரொம்ப சந்தோஷம் நளினி, பொண்ணு கல்யாணமா? எல்லோரையும் நல்லப்படியா கவனிச்சு அனுப்பணும், யாரிடமாச்சும் ஏதாவது உரிமையா வேலை செய்ய சொல்லி, தப்பா எடுத்துப்பாங்களோன்னு கொஞ்சம் பயமா இருந்தது. ஆனா உன்னிடம் எதுவா இருந்தாலும் உரிமையா சொல்லலாம், உன் வேலையெல்லாம் விட்டு பத்து நாள் இங்க தங்கறதுக்கு ரொம்ப நன்றி நளினி,” என்று சாகரி நெகிழ்ச்சியாக பேச,

“உனக்காக மட்டுமில்ல, எனக்காகவும் தான் முக்கியமா இங்க தங்க வந்தது.” என்று நளினி பீடிகை போட்டுப் பேசவும், சாகரி புரியாமல் பார்க்க,

விக்கி பற்றியெல்லாம் முழுதாக சொல்ல விரும்பாமல், “காலேஜ், ஹாஸ்டல்னு போனதுமே நயனி அப்படியே மாறிப்போயிட்டா சாகரி. எப்போதும் தனிமையில் தான் இருக்கா, வீட்டுக்கு வந்து ஒருமாசம் ஆகப் போகுது. எங்க யாரோடவும் ஒட்ட மாட்டேங்குறா, கடைசி வருஷம் படிப்பு, பிராஜக்ட், அதனால அடிக்கடி வீட்டுக்கு வராம ஹாஸ்டலில் இருக்கான்னு அப்போ கண்டுக்காம விட்டுட்டேன். இப்போ அவளை நினைச்சு கவலையா இருக்கு, அதான் இங்க கூட்டிட்டு வந்தா அவளிடம் ஏதாவது மாற்றம் வருமான்னு யோசிச்சேன்.” என்று நளினி கூறவும்,

“இப்போ பிள்ளைங்களை கவனமா தான் கையாள இருக்க வேண்டியதா இருக்கு, நீ செய்ததும் நல்லது தான்,” என்று சாகரியும் அதை ஆமோதித்தார்.

“சரி எல்லாம் சொந்தக்காரங்களும் வந்துட்டாங்களா?” என்று நளினி கேட்க,

“எங்கப்பக்கம் ஓரளவுக்கு எல்லாம் வந்துட்டாங்க, ரெண்டு நாளுக்குப் பிறகு தான் நிச்சயதார்த்தம். அதனால மாப்பிள்ளை வீட்டு சொந்தமெல்லாம் நாளைக்கு தான் வராங்க, நாளை மறுநாள் சாயந்தரம் அதுக்காக ஒரு கெட் டூ கெதர் பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கு, எல்லாத்தையும் கவனிச்சிக்க ஆள் சொல்லியிருக்கு தான், இருந்தாலும் பதட்டமா இருக்கு, அண்ணனும் அவரும் எல்லாம் பார்த்துப்பாங்க, இருந்தாலும் நிகர் இங்க இருந்தா எல்லாம் பக்காவா நடக்கும்,” என்று சாகரி கூறவும்,

“ம்ம் வேலை விஷயமா பெங்களூரு போயிருக்கறதா சொன்னல்ல,” என்று நளினி ஞாபகம் வந்து கேட்டார்.

“ம்ம் முடிஞ்ச வரை சீக்கிரம் வரப் பார்க்கிறேன்னு சொல்லியிருக்கான். அம்மாவும் அப்பாவும் இன்னும் ஊரிலிருந்து வரல, நிகர் இல்லாததால அண்ணா இங்க அரேஞ்மென்ட்ஸ்லாம் கவனிக்க முன்ன வந்துட்டாங்களா? அம்மாவையும் அப்பாவையும் வீட்டுக்கும் இங்கேயும் அலைகழிக்க வேண்டாம்னு கூட்டிட்டு வரல, அதான் நிகர் பெங்களூரில் இருந்து அப்படியே திருநெல்வேலிக்கு போய் அவங்களையும் அழைச்சிட்டு வருவதா சொல்லியிருக்கான். ஒருபக்கம் அவங்களை நினைச்சு வேற பயமா இருக்கு,” என்று சாகரி கூறவும்,

“ஏன் என்னாச்சு?” என்று நளினி புரியாமல் கேட்டார்.

“அம்மாவும் அப்பாவும் கிராமத்திலேயே இருந்து பழகிட்டாங்க, அதுவும் பழமையிலேயே ஊறிப் போனவங்க, கல்யாணத்துக்கு முன்ன வரை மாப்பிள்ளையும் பொண்ணும் பார்த்துக்கவே கூடாதுன்னு இப்போதும் சொல்லிட்டு இருப்பாங்க, ஆனா இந்தகாலம் அப்படியா இருக்கு, இதில் வடக்குப்பக்கம் சடங்கெல்லாம் வேற இருக்கு, இதெல்லாம் அம்மாவும் அப்பாவும் எப்படி எடுத்துப்பாங்கன்னு கூட தெரியல, பேசாம கல்யாணம் நெருக்கத்தில் கூட்டிட்டு வரலாம்னு சொன்னா, ராகவிக்கு நடக்கற விசேஷத்தில் தாத்தா, பாட்டி இல்லன்னா எப்படி அத்தை, நான்தான் இருக்கேனே அவங்களை சமாளிக்க வேண்டியது என் பொறுப்புன்னு நிகர் சொல்றான். ஆனாலும் எனக்கு பதட்டமா இருக்கு,” என்று சாகரி கவலையாக கூறவும்,

“அதான் உன் அண்ணன் மகன் சமாளிச்சிக்கறதா சொல்றான்னு சொல்றீயே, அப்புறம் என்ன? எல்லாம் நல்லப்படியா நடக்கும், கவலையை விடு,” என்று நளினியும் சமாதானம் செய்ததற்கு, சாகரியும் சம்மதமாக தலையசைத்துக் கொண்டார்.

ராகவி அழைத்ததற்கு வேண்டா வெறுப்பாக உடன் வந்தாலும் அங்கே ராகவியின் கல்லூரி தோழிகளையெல்லாம் பார்த்ததும், சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவருடனும் நயந்தினி ஒன்றிவிட்டாள். ராகவி சொன்னதுபோல் அவர்கள் அருகருகே வசித்தபோது, விடுமுறை சமயத்தில் அன்னை வேலைக்குச் சென்றுவிட்ட நேரங்களில் அவள் எப்போதும் ராகவியுடன் தான் ஒட்டிக் கொண்டு திரிவாள். அதனால் ராகவியின் பள்ளி தோழிகள், கல்லூரி தோழிகளை ராகவி வீட்டிற்கு அழைத்து வருவதால் அவர்களோடு நயந்தினிக்கும் நல்ல பழக்கம். சிலசமயம் தோழிகளுடன் வெளியே செல்லும்போது நயந்தினியையும் ராகவி உடன் அழைத்துச் செல்வதுண்டு. அவர்களுடனான பழக்கத்தில் தான், ராகவியை பின்பற்றி அவளும் கணினி பாடத்தை தேர்ந்தெடுத்து படித்ததும், பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்ததும்,

ராகவிக்கு நெருக்கமானவர்களை அவளுக்கும் பிடிக்கும் அப்படித்தான் இருந்தாள். ஆனால் ஒருவனைத் தவிர, அவனைப் பார்த்தது என்னவோ ஒரே ஒருமுறை தான், ஆனால் அவனை அப்போதே பிடிக்கவுமில்லை. அவனை மறக்கவுமில்லை. அதன்பின்னிருந்து ராகவியை நினைக்கும்போதெல்லாம் அவனும் தான் சேர்ந்து ஞாபகத்திற்கு வருகிறான். இப்போது அவன் இங்கு இல்லையென்றாலும் எப்படியும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவன் இங்கு வந்துவிடுவான் என்பதே அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இது அவர்கள் வீட்டு திருமணம். அவனை வரவேண்டாமென்று அவளால் கூற முடியுமா?

“நயனி, என்ன யோசனை?” ராகவி அழைக்கவும் நிகழ் உலகிற்கு வந்தவள், அதன்பின் அவர்களுடன் பேச ஆரம்பித்துவிட்டாள். இதில் விக்கியை அவள் மறந்தே போனாள். கடந்த இரண்டு வருடங்களில் இப்படி என்றுமே நடந்ததில்லை. எப்போதும் விக்கி, விக்கி இதே சிந்தனை தான் அவளுக்கு, அப்படித்தான் தன்னைத்தவிர வேறு எதைப்பற்றியும் அவள் யோசிக்கக் கூடாது என்பது தான் விக்கியின் எண்ணமும், அது நயந்தினி மனதில் நன்றாகவே பதிந்திருக்கிறது என்ற எண்ணத்தில் முதல்முறை விக்கிக்கு தோல்வி தான், இன்று தான் அங்கே சென்றாள். அதற்குள் தன்னை கூட நினைக்க முடியாத அளவிற்கு அங்கே அப்படி என்ன என்ற கேள்வியோடு விக்கி அங்கே கோபமாக இருப்பதை நயந்தினி யோசிக்காமல் போனாள். நயந்தினி விஷயத்தில் இதுதான் விக்கியின் முதல் தோல்வியா? ஏன் நளினியின் வெற்றி என்று சொல்லலாமோ,

இரவு படுப்பதற்கு தான் நால்வரும் அவர்கள் அறைக்கு வந்தார்கள். விக்கியின் குறுந்தகவல்களை அவ்வப்போது பார்த்தாலும் அதற்கு பதில் சொல்ல முடியாத சூழ்நிலையில் நயந்தினி இருந்தாள். அதிலும் மாலைக்கு மேல் அவள் அலைபேசி முற்றிலும் சார்ஜ் தீர்ந்து போய் அணைந்தும் போயிருந்தது.

இப்போது வந்து அலைபேசியை சார்ஜில் போட்டவள், விக்கியின் குறுந்தகவல்களை கவனிக்க, ‘கால் மீ,” என்று கிட்டத்தட்ட நூறு தகவல்களுக்கு மேல் வந்திருக்கவும்,

‘என்னாச்சு இந்த விக்கிக்கு, பைத்தியம் பிடிச்சிடுச்சா,’ என்று தான் அந்தநேரம் அவளுக்குத் தோன்றியது. அதில் ஒரு சலிப்பும் அவளுக்கு எழாமல் இல்லை.

‘சுத்தி ஆளுங்க இருந்துக்கிட்டே இருக்காங்க, இப்போ பேச முடியாது. மொபைலில் சார்ஜும் இல்லை. நைட் முடிஞ்சா பேசறேன் டா,’ என்று பதிலுக்கு ஒரு குறுந்தகவல்களை அனுப்பி வைத்தாள்.

அப்போது, “இவங்களுக்கு இப்போதும் ரெஸ்ட்டாரன்ட்ல போய் சாப்பிடணுமாம், சாப்பிட்டு வரும்போது உனக்கு நாங்களே டின்னர் எடுத்துட்டு வந்துட்றோம்,” என்று நளினி அவளிடம் கூற,

“என்னை விட்டுத் தனியா போறீங்களா, நானும் உங்களோட வந்து அங்கேயே சாப்பிட்றேன்.” என்று சொன்ன மகளை நளினி மட்டுமல்ல அவளின் சகோதரிகளும் வியப்பாக பார்த்தனர்.

“என்ன இப்படி பார்த்துட்டு இருக்கீங்க? பசிக்குது சீக்கிரம் வாங்க,” என்றபடி முன்னே சென்றவளிடம் ஏதாவது சொல்லி, மீண்டும் அவள் முருங்கைமரம் ஏறக்கூடாது என்பதால் அவர்களும் அமைதியாக அவள் பின்னே சென்றனர்.

பின் இரவு உணவை முடித்துக் கொண்டு நால்வரும் அறைக்கு வந்தனர். இரண்டுப்பேர் படுப்பது போல் இரண்டு கட்டில்கள் தனித்தனியே போடப் பட்டிருக்க ஒன்றில் மதியும் மொழியும் சேர்ந்து படுத்துக் கொள்வதாக கூற, நயந்தினிக்கோ அன்னையுடன் படுத்துக் கொள்ளும்படி ஆனது. கல்லூரிக்கு செல்வதற்கு முன்பு வரை அவள் அன்னையுடன் தானே படுத்துக் கொள்வாள். அது எல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தவளுக்கு மீண்டும் இந்த பத்துநாள் வாய்ப்பு கிடைத்தது ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும்,

இத்தனை நேரம் விக்கியை மறந்திருந்தவளுக்கோ, ‘விக்கியிடம் இருந்து அத்தனை மெசேஜ் வந்திருக்கு, அதுக்கெல்லாம் நான் சரியா ரிப்ளை கூட செய்யல, கால் செய்ய சொல்லியும் இதுவரைக்கும் நான் பேசல, விக்கிக்கு கண்டிப்பா என்மேல கோபம் இருக்கும், ஆனா இப்போ எப்படி போன் பேசுறது? அம்மா, தங்கச்சிங்க எல்லாம் இருக்காங்க, வீட்டில் இருந்திருந்தா நான் தனி ரூம்ல இருந்திருப்பேன். ச்சே நான் இங்க வந்திருக்கவே கூடாது. என்று மீண்டும் அவள் மனம் முருங்கை மரம் ஏற, இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தபடி படுத்திருந்தாள்.

எப்போதும் போல படுத்ததும் நளினி சிறிது நேரத்தில் உறங்கிவிட, விடுமுறை நாட்களில் மொழியும் மதியும் அத்தனை சீக்கிரத்தில் உறங்க மாட்டார்கள் என்றாலும், இன்று முழுக்க ரெசார்ட்டை சுற்றி வந்ததும், கடற்கரையில் ஆட்டம் போட்டது என்று களைப்பில் அவர்களும் உறங்கியிருந்தனர்.

அவர்கள் உறங்கட்டும் என்று உறக்கம் வந்தும் உறங்காமல் விழித்திருந்த நயந்தினி, மெல்ல எழுந்தவள் பால்கனிக்கு சென்றாள். ஆனால் பால்கனியில் இருந்து விக்கிக்கு பேசினாலும் உறங்கிக் கொண்டிருப்பவர்கள் விழித்துக் கொண்டால் என்ன செய்வது என்ற யோசனையில் நின்றிருந்தவளுக்கு, பக்கத்து பால்கனி கண்ணுக்குப் பட்டது.

காலையிலிருந்து இப்போது ரெஸ்ட்டாரன்ட்டில் சாப்பிட்டுவிட்டு அறைக்கு வரும்வரை கவனித்ததில், இவர்கள் அறைக்கு பக்கத்தில் இருக்கும் அறை பூட்டியே தான் இருந்தது. நாளைக்கு தான் மாப்பிள்ளை வீட்டு சொந்தங்கள் வருவதாக கூறியிருந்தார்கள். அவர்களில் யாரையாவது தங்க வைப்பார்களாக இருக்கும், இப்போது இந்த அறையில் யாருமில்லை என்பதால் பக்கத்து பால்கனியில் போய் பேசலாம் என்ற முடிவிற்கு வந்தாள். 

இரண்டு பால்கனிக்கு இடையில் கொஞ்சமாக தான் இடைவெளி இருந்தது. பள்ளியில் உயரம் தாண்டுதலில் முதல் பரிசு வாங்கியவள் என்பதால் அதை தாண்டுவது அவளுக்கு சிரமமாக இல்லை. எளிதாக அந்த பால்கனியை அடைந்தவள் அடுத்து விக்கிக்கு அழைக்க, முழுதுமாய் மணி அடித்தும் அழைப்பு ஏற்கப்படவேயில்லை. ஒன்றுக்கு மூன்று முறைமுறை அழைத்து அதன்பின் தான் அழைப்பு ஏற்கப்பட்டது.

ஆனாலும் மறுமுனையில் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும், “கோபமா விக்கி,” என்று நயந்தினி கேட்க,

“கோபப்படமா எப்படி? அங்கப் போய் ஒருநாள் கூட முழுசா முடியல, அதுக்குள்ள என்ன மறந்துட்ட இல்ல, உனக்கு நான் முக்கியமான ஆளா இல்லாம இருக்கலாம், ஆனா எனக்கு நீ ரொம்ப முக்கியம். உன்னைத்தவிர எனக்கு வேற யார் இருக்கா சொல்லு,” என்ற விக்கியின் பேச்சில் மொத்தமாக உருகிப் போனவள்,

“அப்படி இல்லடா, உன் மெசேஜ் பார்க்கும்போது மொபைலில் சுத்தமா சார்ஜ் இல்லை. அதான் பேச முடியல, அதில்லாம அம்மா, தங்கைலாம் கூட இருந்தாங்க, அவங்களை வச்சிக்கிட்டு நம்மளால ஃப்ரீயா பேச முடியாது. எல்லாம் இங்க ரெசார்ட்ல ஒரே ரூம்ல தங்கி இருக்கோம் தெரியுமா? என்னை என்ன செய்ய சொல்ற? இப்போக் கூட எல்லாம் தூங்கிட்டாங்கன்னு தெரிஞ்சு தான் பால்கனியில், அதுவும் பக்கத்து ரூம் பால்கனியில் வந்து பேசிட்டு இருக்கேன். நீ என்னோட நிலைமையை புரிஞ்சுக்காம கோபப்பட்றது எனக்கு எத்தனை கஷ்டமா இருக்கு தெரியுமா?” என்று நயந்தினி வருத்தமாக பேசவும் தான் விக்கிக்கு தன் தவறு புரிய,

“சாரி நயன், இந்த ஒருநாள் நீ என்னோட பேசாததே, நீ என்னைவிட்டு ரொம்ப தூரமா விலகிப் போனது போல எனக்கு தோனுது, என்ன செய்ய சொல்லு?” என்று விக்கியும் சமாதானம் பேச,

“எனக்கு புரியாம இல்லடா, நான் இங்க கல்யாணத்துக்கு வந்திருக்கேன். பத்து நாள் கண் திறக்கறதுக்குள்ள ஓடிடும், அப்புறம் கொஞ்சநாளில் நாம நினைச்சதை செய்யப் போறோம், அப்புறம் நீயும் நானும் மட்டும் தானே எப்போதும் இருக்கப் போறோம், அதனால கொஞ்சநாள் இதெல்லாம் பொறுத்துக்கிட்டா, அப்புறம் நாம நினைச்ச வாழ்க்கையை வாழலாம், அதுவரைக்கும் இப்படி பொறுமையை கைவிடாம இரு ப்ளீஸ், நான் சென்னை வந்ததும் உடனே நாம மீட் செய்வோம் சரியா?” என்று நயந்தினி சமாதானங்கள் பேசவும்,

“ம்ம் நீ சொல்றதும் சரிதான், இன்னும் கொஞ்சநாள் தானே, அட்ஜஸ்ட் செய்துக்கிறேன். ஆனாலும் பத்துநாள் நீ இருந்து தானே ஆகணுமா? ஏதாவது சாக்கு சொல்லி சீக்கிரம் வரப் பாரு நயன்.” என்று விக்கி சொன்னதும்,

‘அம்மாவே விட்டாலும் ராகவி அக்கா விடுவாங்களா தெரியலையே,’ என்று நயந்தினி மனதில் நினைத்துக் கொண்டவள், 

“சரிடா, ஏதாவது சான்ஸ் கிடைச்சா உடனே வரப் பார்க்கிறேன்.” என்று விக்கியிடமும் சமாதானங்கள் கூறினாள்.

அதன்பின், “சரி விக்கி, நாளைக்கு சிட்டுவேஷன் எப்படி இருக்குன்னு பார்த்து அதுக்கேத்த மாதிரி நானே கால் செய்றேன் சரியா?” என்று அவள் கூற, விக்கியும் அதற்கு ஒத்துக் கொள்ளவும், அலைபேசி அழைப்பை அணைத்தவள், அதேபோல் மீண்டும் பால்கனியை எளிதாக தாண்டியவள், சத்தமில்லாமல் வந்து அன்னையின் அருகில் படுத்தவளோ, சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள். ஆனால் அங்கு விக்கிக்கு தான் உறக்கம் சுத்தமாக தொலைந்திருந்தது. 

அகம் சேர்வான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!