Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இலக்கணம் பெண்மையே

இலக்கணம் பெண்மையே!.. அத்தியாயம் 22.1.

இலக்கணம் பெண்மையே!…

அத்தியாயம் 22

      சாலாக்கு, அவள் கணவனை அழைப்பது கொஞ்சமும் விருப்பமில்லை. அவன் தனக்கோ, தன் பிள்ளைகளுக்கோ வேண்டாம் என்று தானே இவ்வளவும் செய்தது. கணவன் காலத்துக்கும் வேண்டும் என்றால் அவனின் தகாத உறவு தெரிந்த போதே, சொந்த பந்தங்களை கூட்டி பஞ்சாயத்து வைத்து ஷாலினி உடனான அவன் உறவை முறித்து தனக்கு மட்டுமே உரியவனாக மாற்றி இருக்கலாம் அல்லவா…

   பெரும்பாலான பெண்களின் முடிவும் அது தான். குடும்பம் என்ற சூழலை உடைத்து சமூகத்தை தனியே பிள்ளைகள் உடன் எதிர்கொள்ள பயந்து போய், கணவனை அனுசரித்து, சண்டை போட்டு, சரி செய்து என்று எப்படியோ இழுத்து கொள்கிறார்கள்.



Advertisement

   குடும்பம் என்ற கூட்டை முதலில் உடைக்கும் ஆண்ணின் பேச்சு வெளி வராது. ஆனால், உடைந்த கூட்டை கட்டி சேர்க்க மாட்டேன் என்ற பெண்ணின் செயல் எளிதாக விமர்சிக்க பட்டு விடும். அதனால் தான் சாலா, அமைதியின் பின் ஒளிந்து கொள்வது. பிரச்சனையும் பொதுவில் வைத்து, முடிவையும் பொதுவில் வைத்து ஒதுங்கி கொண்டாள். இன்று அஞ்சுவை முன்னிட்டு ஒரு போன் போட்டாலும், அதன் காரணம் வேறாக இருந்தாலும், அது ஒரு சமாதான உடன்படிக்கையாக தான் தெரியும். அதில் விசாலாட்சிக்கு உடன்பாடு இல்லை.

    பிள்ளைகளை வைத்து கூட அவனை சேர்க்க மனமில்லை. பிள்ளைகாக என்றால் அவள் ஏன் இவ்வளவு போராட வேண்டும். அவன் மன்னிப்பு கேட்ட போதே மன்னித்து உடன் இருந்து இருக்கலாம் அல்லவா… அதனால் தான் பெத்த தகப்பன் என்ற முறையில் கூட அவனை அழைக்கவும் இல்லை. வேற யார் மூலமும் சொல்லவும் இல்லை.

   பிரகாஷ் செய்த துரோகம் சாலாவை பொறுத்த வரை அவளுக்கானது மட்டுமல்ல, பிள்ளைகளுக்கும் அவன் செய்தது துரோகம் தான். ஆனால் என்ன அந்த துரோகத்தை பிள்ளைகள் உணர வில்லை. அதற்கு காரணமும் சாலா தான்.

Advertisement

    தங்களுக்கான சேமிப்பை அப்பா எடுத்து விட்டார், தப்பு பண்ணி விட்டார் என்ற அளவில் தான் பிள்ளைகள் உணர்ந்தார்கள். அதன் பாதிப்பை உணரவில்லை அல்லவா… எவ்வாறு உணருவார்கள்? பெற்றவன் சரியில்லை என்றாலும், வீடு வீடாக துணி வித்து கூட பெற்றவள் தூக்கி விட்டாள். வறுமையை உணரவில்லை, வலியும் தெரியவில்லை.

Advertisement

        பொய் சொல்லி விட்டு மன்னிப்பு கேட்பது போல சரியாகிவிடும் என்ற எண்ணம் தான். ஆனால், வறுமை, வலி இரண்டையும் முழுமையாக உணர்ந்தவள் தாய் அல்லவா. எளிதாக கடக்க முடியவில்லை.

        பெங்களூர் ஏர்போர்ட்டில் பிரகாஷ் கண்ணை மூடி அமர்ந்து இருந்தான். அவனுக்கு சற்று தள்ளி அவனை பார்த்த வண்ணம் அமர்ந்து இருந்தது ஷாலினி தான். அவளுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும். அதிக தலைவலியை குறைக்கும் பொருட்டு காபி குடிக்க வந்து இருந்தாள். நிச்சயம் பிரகாஷை எதிர்பார்க்க வில்லை.

     இவ்வளவு பிரச்சனை வந்தும், அவனை பார்த்த உடன் ஒரு பரவசம்,ஒரு துள்ளல். ஏதாவது பேச மனம் தூண்டியது. ஷாலினி ஓரளவு அவன் முடிவை அறிவாள். அவளை முற்று முழுதாக ஒதுக்கி விட்டான் என்பதும் தெரியும். ஆனாலும் ஒரு எதிர்பார்ப்பு. நீண்ட நாட்கள் ஆகி விட்டதால், தன் நினைப்பு கொஞ்சமாவது அவனில் தென்படுகிறதா என்று ஆவல்.

Advertisement

        அவன் தன்னை அறிய இவள் காத்திருக்க, இவளுக்கு முன்னே அவன் அறிந்து கொண்டதால் தான் கண் மூடி கொண்டான் என்பதை இவள் அறியவில்லை. இன்னும் முக்கால் மணி நேரம் இருக்க, கண் மூடியவன் திறக்கவே இல்லை. எல்லோர் முன்பும் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறான். ஆனால் இதுவரை நேருக்கு நேராக பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை. முழுதாக தவிர்த்து விட தான் நினைக்கிறான்.

         பொறுமை இழந்த ஷாலினி, அவன் முன்னே போய் நின்றாள். தன்னை ஏற்று கொள்வான் என்றெல்லாம் நினைக்க வில்லை. ஆனாலும், என்னவோ எதிர்பார்த்தாள்.

   “மாமா…” என்ற சத்தத்தில், இனி தப்பிக்க முடியாது என்று கண் திறந்தவன். நேருக்கு நேர் அவள் முகம் பார்க்க வில்லை.

  அவள் முகத்தில் வலியின் சிரிப்பு. உன் முகத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்ற குரல் எங்கோ ஒலித்தது.

   “என்னை பார்த்து பேசுங்க மாமா…”

     நிமிர்ந்து அமர்ந்தான். நேராக கண் பார்த்து, “எல்லாம் முடிஞ்சு போச்சு. என்ன பேசணும். இது தப்பு ஷாலினி. இனி என்னை விடு. இதற்கு அப்புறமாவது என்னை என் குடும்பத்தோடு வாழ விடு…”

   திகைத்து போய் பார்த்தாள் ஷாலினி. திக்பிரமை என்ற நிலை தான்.

    “எல்லாம் முடியட்டும், எதுவும் தொடர வேண்டாம் தான். ஆனால், இது தப்பு என்று இப்போது தான் தெரிகிறதா… என் குடும்பம் என்ற சொல்கிறான். இப்போது எனக்கு என்று ஒரு குடும்பமே இல்லையே…” கண்களில் நீர் திரள அவனையே பார்த்தாள்.

          ஒரு பெருமூச்சு விட்டு சமாளித்தவன், “இங்க பார் ஷாலினி. நான் உன்னை மட்டும் குத்தம் சொல்லலை. என் மேலயும் தப்பு இருக்கு. என் மேல தான் பெரிய தப்பு. நீயே முன் வந்தாலும், நான் ஒதுங்கி போய் இருக்கணும். இல்லை உன்னை ஒதுக்கி வச்சு இருக்கணும். ரெண்டையும் பண்ணாம உன்னை சரிபன்றேன்னு நினைச்சு தப்பு பண்ணிட்டேன்…” என்றவன்,

   “இனி என் வாழ்க்கையில உனக்கு இடமில்லை. நான் தான் தப்பு, பெரிய தப்பு. எனக்கு கிடைச்ச அருமையான குடும்பத்தை இழந்து நிக்கிறேன். நான் உன்னையும் குத்தம் சொல்ல முடியாது. நீ என்னையும் குத்தம் சொல்ல முடியாது. ரெண்டு பேரும் தெரிஞ்சு தான் தப்பு பண்ணோம்…”

    “ம்ச்… ஷாலினி எனக்கு இதை பேச பிடிக்கல. இனி நான் உன் வாழ்க்கையில் எப்பவும் வர மாட்டேன். நீ உன் வாழ்க்கையை பாரு, நான் என் வாழ்க்கையை பாக்குறேன்…”

     ஷாலினிக்கு என்னவோ கலகலவென சிரிக்க தோன்றியது.

      இதுவரை அவள் கேட்ட பேச்சுகளும், வாங்கிய அடியும், பட்ட வலியும், கடந்த அவமானமும் தண்டனையில்லை. இன்று பேசுகிறான் பார். அவன் வார்த்தைகள் தான் சரியான அடி. அதுவும் முதுகில்… வேற என்னென்ன சொல்ல போகிறான். நான் பிரச்சனை பண்ணாமல் ஒதுங்க வேண்டும். அதை எதிர்பார்க்கிறான்.

        அவள் அமைதி அவனுக்கு என்னவோ போல இருந்தது. பின்ன அத்தனை காதல் வசனங்கள் பேசி இருக்கிறான். ஊர் பார்த்தாச்சு நீ வேண்டும் என்று இவள் நிற்கிறாள். ஊர் பார்த்தாச்சு நீ வேண்டாம் என்று அவன் நிற்கிறான். இந்த மாதிரியான தொடர்பின் நிலைப்பாடு இப்படி தான் இருக்கும்.

     ஷாலினி அவனை கை பிடித்தால் தான் அவளுக்கு மரியாதை… ஆனால், பிரகாஷ் அவளை கை விட்டால் தான் அவனுக்கு மரியாதை. யார் யாரை யார் பக்கம் இழுப்பது.

      “இங்க பார் ஷாலினி. நான் விசாலாட்சி புருசன், ரெண்டு பிள்ளைகளுக்கு தகப்பன்னு தெரிஞ்சு தான் நீ…” என்று தயங்கியவன்,

       “நானும் என்னை நியாய படுத்த மாட்டேன். நான் செஞ்சதும் மிகப்பெரிய தப்பு தான். இனியாவது சரிசெய்ய நினைக்கிறேன். எம் பிள்ளைகளை பார்க்கணும். உனக்கு நல்ல வாழ்க்கை அமையும் ஷாலினி…” அவளிடம் மெளனம் மட்டுமே.

   “பிளீஸ் ஷாலினி. சாரி எல்லாத்துக்கும். ஆனா, எதுவும் வேண்டாம்…” என்றவன் அவளை பார்க்காமல் ஜென்ஸ் பாத்ருமில் நுழைந்து கொண்டான்.

    ஷாலினி பார்த்து தான் நின்றாள். பின் தொடர்ந்து கேள்வி கேட்க முடியாத ஓடி ஓடி ஒளிந்து கொண்டான். ஆனாலும், சபாஷ்… புத்திசாலி, பிழைத்து கொண்டான்.

    ஷாலினி தான் வேண்டும் என்று ஒரு வார்த்தை சொன்னால், பிரகாஷ் என்ற ஒருவன் இல்லாமல் போவான். அவனுக்கான அடையாளம் இல்லாமல் போகும். மன்னிப்பு வார்த்தைக்கு வார்த்தை கேட்கிறான். தயங்காமல் காலில் விழுகிறான். தலைகுனிந்து குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். குடும்ப பொறுப்பை சுமக்க தயாராக நிற்கிறான். இனி தப்பே செய்ய மாட்டேன் என்று வாக்குறுதியை அள்ளி விடுகிறான்.

  வேற என்ன வேண்டும் இவர்களுக்கு… ஒரு ஆண் இதற்கு மேல் எவ்வாறு இறங்கி வருவான். தலைகுனிந்து மன்னிப்பு கேட்ட பின் யாருக்கு தண்டிக்க தோன்றும். பரிதாபத்தை, அனுதாபத்தை சம்பாதித்து விட்டான். ஆக, ஜெயபிரகாஷ் ஜெயித்து விட்டான். அவன் தப்பியும் சரிசெய்து விட்டான்.

   ஆனால் ஷாலினி, குடி கெடுத்தவள், நன்றி கெட்டவள், உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணி விட்டாள், ஒழுக்கமில்லாதவள், வளர்ப்பு சரியில்லை, அலைஞ்சான், ஆள் மயக்கி… இன்னும் காதில் கேட்க கூடாத, இதுவரை கேட்காத வார்த்தைகள் எல்லாம் வாங்கி விட்டாள்.

   ரொம்ப எளிதாக அவளை ஒதுக்கி விட்டான். சட்டையை பிடித்து கேள்வி கூட கேட்க முடியாது. என்ன கேட்க முடியும். முதல் தூண்டுதல் இவள் பக்கம் இருந்து தான். அதுவே பெரும் பிழை அல்லவா.

    அந்த இடத்திலேயே மடிந்து அமர்ந்தாள். அவளை கண்டு கொல்லாமல் கடந்து சென்று விட்டான் ஜெயபிரகாஷ். அவளுக்கு புரிய வைக்கலாம். ஆனாலும், தனக்கு மேலும் பிரச்சனையாகி விட கூடாதே. இவள் கூட பேசியது தன் குடும்பத்திற்கு தெரிந்தால் என்ன ஆகும். என்றோ ஒரு நாள் வந்து போகும் உறவும் முடிந்து விடும். மன்னிப்பு என்ற இடத்தில் இருக்கிறான், அதை கெடுத்து கொள்ள விரும்பவில்லை.

   ஷாலினி பார்த்து தான் இருந்தாள். எதுவும் செய்ய தோன்ற வில்லை.

    விசாலாட்சி துணிந்து நின்ற மாதிரி எப்படி நிற்க முடியும். போலீஸ் ஸ்டேசன் போக முடியுமா? ஊர் பஞ்சாயத்து கூட்ட முடியுமா? நாலு பேரிடம் நியாயம் தான் கேட்க முடியுமா?

       அன்று விசாலாட்சிக்கு ஆதரவு தந்த கூட்டம் தன் பக்கம் நிக்குமா?… அவளுக்கு வாயாக பேசிய மக்கள், தனக்கு பேசுவார்களா? மாட்டார்கள். இருவரும் பெண்ணாக இருந்த போதும், நமக்கான பொது விதி உள்ளது. அதில் நிலை பிறழாமல் இருப்பவர்கள் மட்டுமே நியாயத்திர்க்கு உரியவர்கள்.

         தாம்பத்திய வாழ்க்கையில் காமம் வெறும் அஞ்சு சதவீதம் தான். அதை வைத்து காலத்தை தள்ளலாம், காலத்திற்கும் தள்ள முடியாது. என்றோ ஒரு நாள் உடைந்து போகும். அறுசுவையும் உண்ண தான் வேண்டும், ஒரு சுவையை மட்டும் எடுத்து கொள்ள முடியாது.

        ஷாலினிக்கு என்னவோ விசாலாட்சியை பார்க்க தோன்றியது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!