Skip to content
Post Views: 2,720
கற்பனை 27
திருவின் முகம் கணவன் கேட்ட கேள்வியில் கூம்பிப் போனது. நிவாஸ் கேட்பதன் அர்த்தம் அவன் தன்னையும் நம்பவில்லை என்பது தானே? திருமணத்திற்கு முன்பே சொல்லியிருக்கலாம்தான். ஆனால் அதற்கு ஏதாவது இருந்திருக்க வேண்டுமே! திருமணமாகாத பெண்களின் மனதில் எத்தனையோ கற்பனைகளும் ,எதிர்பார்ப்புகளும் இருக்கும். பெண் பார்க்கவரும் ஆண்களில் பலரை மனதில் பிடித்திருக்கும். இது ஆண்களுக்கும் கூட சரிதான்.
Advertisement
நிதர்சனத்தில் யாரையோ ஒருவரை மணம் முடித்து அவரோடே மனம் ஒத்து வாழ்வது தானே தாம்பத்தியம். இதில் சந்தேகம் கொள்ள என்ன இருக்கிறது? நிரூபனை பிடித்திருந்தது நிஜம். காதல் என்று எண்ணியதும் உண்மையே! அவனது எண்ணம் புரிந்து விலகிவிட்டவள் இவள்தானே? அவன் பின்னோடே சென்று தன்னை தாழ்த்திக் கொள்ள அவள் எஞான்றும் விரும்பியது இல்லை.
ஏற்கனவே நிவாஸின் மனதில் மனைவி(தன் )மீது மரியாதை பொங்கி பிரவாகம் எடுக்கும்.இப்போது கேட்கவே வேண்டாம். நிரூபித்தால் கூட எதையும் ஒத்துக்கொள்ள மாட்டான் என்று சோர்ந்து போனது அவள் மனம்.
Advertisement
Advertisement
நிவாஸின் எதிர்பாராத கேள்விக்கு பதில் சொல்ல சற்றே யோசித்தவன், சுதாரித்துக்கொண்டு ,”அப்படி இல்ல நிவாஸ். அப்போவே சொல்லியிருந்தா நீ ரொம்பவே அப்செட் ஆகியிருப்ப. இவ்ளோதூரம் கல்யாண வாழ்க்கை வந்திருக்காது. இப்போ பாரு ..ரெண்டு குழந்தைகள் உனக்குன்னு வந்துட்டாங்க. எந்த ஆம்பளைக்கும் தன்னோட மனைவி யாரையோ விரும்பினான்னு சொன்னா மனஸுக்கு சரியா இருக்காது. இன்னிக்கும் நா வேணுமின்னே சொல்லல. ஏதோ ஒரு ப்லொவ். வெளியே சொல்லிட்டேன்”என்றுவிட்டு வீட்டுக்குள் தனக்கென ஒதுக்கப் பட்டிருக்கும் அறைக்குள் சென்றுவிட்டான்.
திருமகள் விக்கித்துப் போனாள் .அவளிடம் நிவாஸ் எதுவும் கேட்கவும் இல்லை.அவளை கீழாக நடத்தவும் இல்லை. பாராமுகம் கொண்டான். வெறுத்துப் போனாள் பெண். எதற்க்கு இந்த திருமணத்தை செய்துகொண்டேன் என்று வழக்கம் போல் கழிவிரக்கம்,மனதில் வெறுமை. நிரூபன் பற்றவைத்து விட்டு கிளம்பிவிட்டான்.
Advertisement
நிவாஸ் குழந்தைகளுடன் இருப்பவன் மனைவி புறம் திரும்பவே இல்லை. குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு, காப்பகத்தில் விடுவதை ஆரம்பித்து வைத்தவன் ,திருவுக்கு வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் குரோசேரி கடையில் வேலை வாங்கி கொடுத்து போகச் சொன்னான். அவ்வளவு வருஷங்கள் வீட்டிலேயே இருந்தவளுக்கு வேலைக்கு செல்ல கொஞ்சமே சோம்பேறித்தனம், மனதுக்குள் பயம்.அதோடு கொஞ்சமாய் சுதந்திர உணர்வு. கலவையான மன நிலையில் வேலைக்கு சென்று வரலானாள்.
அவள் வேலை பார்க்கும் இடத்திலேயே நிவாஸ் மாதாமாதம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவான். பில்லிங் கவுண்டரில் அவள் நின்று கொண்டிருந்தாலும் இவனிடம் கண்டுகொள்ளாத ஒரு அலட்சியம் இருக்கும். ஆரம்பத்தில் மனம் வலித்தாலும் பிறகு பழகிக் கொண்டாள் . அவளது சம்பள பணத்திலிருந்து கொஞ்சம் டாலர்களை எடுத்துக்கொள்ள்ளுவான். பிறகு தான் ஒருநாள் அவன் வாயிலிருந்து உதிர்ந்த முத்து ,”உன்னே இங்கே தங்க வச்சிருக்கேன்.அதுக்கும் சாப்பாடு செலவுக்குமா பணத்தை எடுத்துக்கறேன். அண்ட் நீ இங்கே குக் பண்றே. என்னோட பசங்களையும் வீட்டிலிருக்கும் பொழுது பார்த்துக்கறே. அதுக்காக அமௌண்ட் உனக்கு தனியா பே பண்றேன்.” அவன் என்ன சொல்கிறான் என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.
குழந்தைகளுக்கு அவள் அம்மா எனும் பொழுது அவர்களை பார்த்துக்கொள்ள பணம் தருகிறானா? அன்று முழுவதும் அவமானம் தாங்காமல் கதறி அழுதாள். ஆறுதல் சொல்ல ஆள் யாரும் இல்லை. விளக்கம் சொல்ல அவனும் இடம் தரவில்லை.
பெங்களூரு:
எத்தனை நாட்கள் நரேன் சாகேத்துடன் தங்க முடியும்?ஒரு வாரம் அவனுடன் இருந்தவன் அவன் தேறிவிட்டான் என்று நம்பிக்கையுடன் கிளம்பி சென்னை வந்துவிட்டான். தினமும் இரவில் நண்பனை அழைத்து நலம் விசாரிப்பதை வழக்கமாய் கொண்டான். சில சமயங்களில் சாருவும் கூட சில சமயங்களில் அவனுடன் பேசுவாள்.
ஜான்விக்கும் விநீதனுக்கும் இன்னமும் திருமணம் ஆகவில்லை என்றாலும்கூட மனதால் இருவரும் ஒன்றென உணரத்தொடங்கிவிட்டார்கள்.அவர்களை பொறுத்தவரை திருமணம் என்பது வெறும் வெளியுலகிற்கான அறிவிப்பு .கணவன் மனைவியாய் ,காதலுடன் வாழத்தொடங்கிய பிறகு வேறெதுவும் பெரியதாக தொண்டற்றவில்லைதான். ஆனாலும்,நாளை குழந்தைகள் பிறக்கும் பொழுது அவர்களுக்கென சமூகத்தில் ஒரு அங்கீகாரம் தேவை ஆயிற்றே. ஆம்,இப்போது ஜான்வி நாற்பத்து ஐந்து நாள் கருவை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள். அவள் வெளியேற வந்து முழுதாக ஏழு மாதங்கள் ஆகிறது.
ஜான்விக்கும்-சாகேத்துக்கும் விவாகரத்து கிடைக்க இன்னமும் ஓரிரு மாதங்கள் ஆகக் கூடும். நடுவில் பெரிய ரகளைகளையும் சந்தித்து விட்டார்கள் இருவரும். முதலில் வினீதனின் வீட்டிலிருந்து பெரிய குடும்பமே வந்தார்கள்.விநீதன் தான் எடுத்த முடிவில் உறுதியை காண்பிக்கவே அவர்கள் வாய் நிறைய சபித்துவிட்டு இனி உறவு இல்லை என்றுவிட்டு சென்றாயிற்று.
பிறகு ,எதேச்சையாக அலுவலக வேலை என்று ஜான்வியின் அப்பா பெங்களூரு வர,மகளின் வீட்டில் தங்கலாம் என்று சாகேத்தின் வீட்டுக்கு வந்தால் அவனோ ஜான்வியின் தற்போதைய முகவரியை கொடுத்து அனுப்பி வைத்தான். எவ்வளவு நாட்கள் இருவரது வாழ்க்கையை பற்றி பெற்றவர்களிடமிருந்து மறைத்து வைக்க முடியும் என்பது அவனுக்கு.
மகளைக் கண்டவருக்கு லேசாக மாரடைப்பு வந்துவிட விநீதன் அவரை மருத்துவ மனையில் சேர்த்து விட்டு ஜான்வியின் அம்மாவுக்கும் தகவல் சொன்னான். மருத்துவமனை விட்டு கிளம்பும் முன்,இனி தங்களுக்கு மகளே பிறக்கவில்லை என்றுவிட்டு அவர்களும் சென்று விட்டார்கள் . கொஞ்சம் அழுத ஜான்வி இவையெல்லாம் எதிர்பார்த்தவை தானே என்று தன்னை தேற்றிக் கொண்டாள் .
கடைசியாக சாகேத் பத்ரியின் வீட்டினருக்கும் விஷயம் சென்றுவிட ,துரையும் ராஜமும் துடித்துப் போனார்கள். குழந்தைகள் என்று எதுவும் பிறக்கவில்லை. பெற்றவர்களை வீட்டுக்குள் சேர்ப்பதில்லை என்று எவ்வளவோ விஷயங்களைக் கடந்து அவர்கள் இருவராவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று விலகி நின்றது தவறு என்று வெகு தாமதமாக யோசித்தார்கள்.
பெங்களூரு சென்று மகனை பார்க்கவேண்டும் என்று தீர்மானம் செய்திருந்த துரைக்கு கிளம்புவதற்கு ஒரு நாள் முன்பு பக்கவாதம் வந்து தொலைத்தது. சாகேத் காருக்கு ஓட்டுனரை நியமித்துக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தான். பெரிய மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார் துரை .நரேந்திரனுக்கு சாருவும் மருத்துவமனையில் ராஜாத்தி விட்டு சற்றும் நகர்ந்து செல்லவில்லை. பலவருஷ குடும்ப பழக்கம்.சாம்பசிவமும் கண்மணியும் கூட நடுநடுவே வந்து பார்த்துவிட்டு சென்றார்கள். இறுக்கத்தில் இருந்து யாராலும் வெளியே வர முடியவில்லை. மே மாதம் என்பதால் பள்ளியும் விடுமுறை.
சற்று சரியானதும் துரை சாகேத்திடம் கேட்டது “பள்ளியின் நிர்வாக பொறுப்பை அவன் ஏற்க வேண்டும் “என்பதையே மருத்துவமனையில் இருக்கும் பொழுது அவர் யோசித்தது மகன் இனி பெங்களூருவில் இருக்க வேண்டாம். இங்கே சென்னை வந்து வாழ்க்கையை மீண்டும் புதியதாக தொடங்கட்டும் என்று தான். சாகேத்துக்கும் அவர் மனம் புரியாமல் இல்லை.
“சரிப்பா.கண்டிப்பா இனிமே நிர்வாகம் நா என்னோட பொறுப்புல எடுத்துக்கறேன். நீங்க கவலை படாதீங்க. பட் முழுசா நா எல்லாத்தையும் கைல எடுக்க எனக்கு கொஞ்சம் நேரம் வேணும்.மினிமம் ரெண்டு மாசம். அங்கே என்னோட விவாகரத்து வழக்கு இருக்கு.வேலை அதுக்கு நோட்டீஸ் குடுக்கணும்.வீட்டையும் யாருக்காவது வாடகைக்கு விடணும். ரெண்டு மாசம் பகுதி நேரமா நா பார்த்துக்கறேன்”என்றுவிட்டான்.
இடது பக்கம் கையும் காலும் செயலிழந்துவிட்ட நிலையில் மனம் வேறு கொதிகலனாய் கொதித்துக் கொண்டிருக்கிறது துரைக்கு . ஒரே மகன். செல்லம் என்று கொடுத்து வளர்க்கவில்லை என்றாலும் பாசத்தை புகட்டித்தானே வளர்த்தார்கள்?
ஏன் மகன் தங்களிடம் எதையும் சொல்லாமல் விடுத்தான் என்று மனம் ஏங்கினாலும் அவன் சொல்லியிருந்தால் இன்னமும் அதிர்ச்சி அதிகமாக இருந்திருக்கும் என்றே நினைத்தார்கள் சாகேத்தின் பெற்றவர்கள்.
ஜான்வி பற்றிய எந்த விளக்கங்களையும் சாகேத் பெற்றவர்களுக்கு கொடுக்கவில்லை.அவர்களும் எதுவும் இவனிடம் துருவவில்லை .
“அவளை மட்டும் தப்பா நினைக்காதீங்க.எனக்கும் இதுல பங்கு இருக்கு. நா அவளுக்கு ஏற்றவனா இல்ல.”என்றுமட்டும் சொன்னான். மருத்துவமனை வாசம் முடிந்து துரை வீடு வந்து சேர்ந்து பத்துநாட்கள் ஆகிறது.பிசியோ தெரபியை செய்வதால் கொஞ்சம் பரவாயில்லை. இன்னமும் சாகேத் பெங்களூரு கிளம்பவில்லை. நரேந்திரனின் அம்மா கண்மணி இவர்கள் வீடு தேடி வந்தவர்,”இப்போதைக்கு நா ஸ்கூல் பொறுப்பை எடுத்துக்கிட்டு ஹெல்ப் பண்ண முடியும்.திரும்ப சீக்கிரம் வந்து நீ பொறுப்பை ஏற்கணும் சாகேத்” என்றார். கூட வந்த சாம்பசிவத்திற்க்கே மனைவியின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது.
திருமகளை பற்றிய கவலை, அதிலிருந்து தப்பிக்கும் வழி புரியாமல் தவித்துக்கொண்டிருந்தார் கண்மணி. மருமகள் அலுவலகம் செல்கிறாள். கணவர்,மகன் என்று எல்லோரும் அங்கே தான். மன குழப்பம் அதிகமாக இருக்கிறது என்று ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் தன்னை வேலையிலிருந்து விடுவித்துக் கொண்டார் கண்மணி. இப்போது மனம் இன்னமும் குழப்பம் கொள்வதால் திடீரென தோன்றியது தான் பள்ளி நிர்வாகம்.
ராஜம் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று மனதில் திணறிக் கொண்டிருந்தார் . தன்னால் இதை நிச்சயம் செய்ய முடியாது என்பது அவரது எண்ணம்.
ஒரு வகையில் அதுவும் சரியே. கணவன்,மகன் என்ற எல்லையை தாண்டி அவர் யோசித்ததே இல்லை. கணவரின் ஆசை கனவு இந்த பள்ளி என்பது ராஜம் அறிந்ததுதான்.
ஒரு வழியாக இருபது நாட்கள் கழித்து பெங்களூரு வீட்டுக்குள் நுழைந்தான் சாகேத். அவனுக்கு மூச்சு முட்டுவதுபோல் அடைத்துக்கொண்டு வந்தது. வேலையை விட்டு,ஊரை விட்டு மீண்டும் சென்னை வாசம். இங்கே மட்டும் என்ன இருக்கிறது என்று தன்னை தேற்றிக்கொண்டவன்,அன்றே அவனது மேலாளரை சந்தித்து பேச மெயில் அனுப்பினான்.அனுமதி எப்போது கிடைக்கும் என்றேல்லாம் தெரியாது . இன்று அலுவலகம் செல்வதா அல்லது வீட்டிலிருந்தே வேலை செய்வதா எண்டு யோசித்தவன் அலுவலகம் கிளம்ப முடிவு செய்தான்.
விவாகரத்து வழக்கு ஒரு முடிவுக்கு வந்தது. இருவருக்கும் விருப்பமே என்பதால் சீக்கிரம் கிடைத்துவிட்டது.ஏற்கனவே ,கவுன்சிலிங் சென்ற போதும் கூட இருவரும் மனமொத்து விவாகரத்து வேண்டும் என்பதில் தீவிரம் காட்டியிருந்தார்கள் . விவாகரத்து நாளன்று ஜான்வி விநீதனுடன் வந்திருந்தாள் . அவள் முகமே சொன்னது அவளது நிலை பற்றி. போதாத குறைக்கு மசக்கை வேறு அவளை வாட்டியது.வினீதனின் அக்கறை, ஜான்வியை நிறைய மாற்றியிருந்தது.
இருவரது அன்யோன்யம் கண்ட சாகேத்துக்கே இதுதான் சரி என்று தீர்மானமாய் தோன்றிவிட்டது. “இப்போது மூன்று மாதங்கள் முடிந்து நான்காம் மாதம் .உடல்நிலை ஒத்துழைக்காததால் வேலையில் பிரேக் எடுத்திருக்கேன் என்றாள் பெண்.” இதைத்தானே அவள் விரும்பினாள் . சாகேத் அவளிடம் “உடம்பை பார்த்துக்கோ ஜானு. எதையும் மனசுல வச்சு குழப்பிக்காத.குழந்தைக்கு நல்லது இல்லே. நானும் சென்னை போறதா முடிவு பண்ணிட்டேன். இனிமே நான் சென்னை வாசி தான். உனக்கு ஏதாவது தேவைனாலோ ,ஹெல்ப் வேணும்னாலோ நிச்சயமா என்னை காண்டாக்ட் பண்ணலாம். அஸ் எ பிரண்ட் அம் ஆல்வேஸ் தேர் போர் யூ”என்று விடைபெற்றான்.
ஏனோ பெண்ணவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. விநீதன் அவளை ஆறுதலாக அணைத்துக்கொண்டான். அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. நடுவில் ஜான்விக்கு திருமணம் நடந்து இந்த குழப்பம் ஏற்பட்டிருக்க வேண்டாம் என்று அவனுக்கு தோன்றியது.
சாகேத் சொன்னபடிக்கு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வீட்டையும் ஒரு வட மாநில தம்பதிக்கு வாடகைக்கு விட்டான். அவன் மனம் கொஞ்சம் லேசாகி இருந்தது. அந்த வாரம் சனிக்கிழமையன்று கிளம்பி சென்னை வந்துவிட்டான்.
சென்னையும் அவனுக்காக என்னவெல்லாம் வைத்துக்கொண்டு காத்திருக்கிறது என்று தெரியவில்லை.அவன் அப்பா முன்னைக்கு இப்போது பரவாயில்ல. கண்மணி பள்ளியை பார்த்துக்கொண்டாலும்,வீல் சேரில் அவர் தினமும் பள்ளிக்கு வருகிறார். ஜான்வியின் பெற்றோரும் வந்து நடுவில் இரண்டு முறை பார்த்துவிட்டு சென்றார்கள். துரையோ ராஜமோ அவர்களை எதுவும் கடிந்து சொல்லவில்லை. பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு பெற்றவர்கள் என்ன செய்ய முடியும்?
சாகேத்தும் அவர்களை அலைபேசியில் அழைத்து பேசுகிறான்.நடந்தவைகளில் அவனது பங்கு எவ்வளவு தூரம் என்பது அவனுக்கே தெரியும். வயதான காலத்தில் இந்த மாதிரியான அதிர்ச்சி. மாமனாரின் உடல்நிலை அவனை இன்னமும் இளக்கி இருந்தது. இனி,பள்ளியும் அதன் வளர்ச்சியும்தான் தனக்கு வாழ்க்கை என்று முடிவு செய்தான். இதோ,திங்கள் அன்று அவன் பள்ளிக்கு சென்றாக வேண்டும்.
error: Content is protected !!