Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இலக்கணம் பெண்மையே

இலக்கணம் பெண்மையே!… அத்தியாயம் 24.1

இலக்கணம் பெண்மையே!…

அத்தியாயம் 24

         விசாலாட்சி வேலையில் பயங்கர பிஸி. முதலில் அவனின் அழைப்பை கவனிக்கவில்லை. அதன் பின் கண்டுகொள்ள வில்லை. அஞ்சு விசயமாக தான் கூப்பிடுகிறான் போல என்று எடுக்காமல் தான் விட்டாள்.

   தொடர் அழைப்பும், அவசரம் என்று மெசேஜ் வரவும் தான் என்னவோ என்று பயந்து போய் போன் எடுத்தது.



Advertisement

   “ ஹலோ! சாலா, எனக்கு என்னவோ ஆகி போச்சு. இனி நான் அவ்வளவு தான். நான் என்ன பண்ண போறேன். எனக்கு ரொம்பவும் முடியாம போச்சு சாலா…” அழும் குரலில் சொல்லவும்,

   கொஞ்சம் தடுமாறி தான் போனாள் விசாலாட்சி.

        “என்ன ஆச்சு…” முயன்று சாதரணமாக கேட்க.

Advertisement

    “சுகராம்…”

Advertisement

  “ என்ன, என்ன சொன்னீங்க…”

     “ஐயோ! சாலா எனக்கு சுகர் வந்துருச்சு. கிட்னில கல்லு வேற இருக்காம். அதோட அல்சரும் சேர்ந்து இருக்கு…”

   “ ஓ…” தற்போது நிதானதுக்கு வந்து விட்டாள்.

Advertisement

    “ஓ… வா, என்ன இப்படி சொல்ற சாலா. நான் எவ்வளவு பயந்து போய் இருக்கேன் தெரியுமா! என்னை பார்த்த நீயே அதிர்ச்சி ஆயிடுவ. வெயிட் குறைஞ்சு, எலும்பு தெரியுது. அடிக்கடி தலை வலிக்குது, வயிறு குத்துது, படுத்தே கிடக்க சொல்லுது. சரியா வேலைக்கு கூடபோக முடியலை சாலா…” உருகும் குரலில் தான் பேசினான்.

      கணவன் குரலில் உண்மை இருந்தும் சாலாக்கு தான் ஒன்றும் பதறி துடிக்க வில்லை. கொஞ்சம் நின்று யோசித்தாள். எந்த பிரச்சனையின் பின் கணவனை அடிக்கடி பார்த்தாலும், ஊன்றி கவனித்தது இல்லை. அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. அதனால்,

       “என்ன வேணும் உங்களுக்கு? எனக்கு நிறைய வேலை இருக்கு…” பட்டுகொள்ளாமல் பேச,

    அந்த பக்கம் சத்தத்தையே k காணம். அதிர்ந்து நின்று விட்டான் போல,

    “மேடம், திருப்பூர்ல இருந்து லோடு வந்துருக்கு…”

   “ஓ… இதோ வாரேன். இறக்கி வைங்க…” என்றவள்,

     “ சுகர் ஒன்னும் சாக போற வியாதி கிடையாது. நாட்டுல பல பேருக்கு சுகர் இருக்கு. சாப்பாடு, மருந்து, மாத்திரையை சரியா போடுங்க. பிள்ளைக சம்பந்தமா எதாவதுன்னா கால் பண்ணுங்க…” என்ற சாலா, போனை கட் செய்து போய் விட்டாள்.

      அஞ்சனா பற்றி கேட்காததால் அவனுக்கு விசயம் தெரியவில்லை என்று ஊகித்து கொண்டாள். காரணம் மாமனாராக தான் இருக்க வேண்டும்.

    அந்த பக்கம் பேச்சே வராமல் நின்றது பிரகாஷ் தான். மனைவிக்கு தன் மேல் கோபம் என்று தெரியும். ஆனாலும் ஒரு நம்பிக்கை தனக்கு ஒன்று என்றால் ஓடி வந்து விடுவாள் என்று… என்ன தப்பு செய்தாலும் தனக்கு ஆபத்து என்றால் வருவாள், ஆறுதலாக பேசுவாள் என்று பழைய மனைவியை தான் மனம் நாடியது.

   ஆனால், சாலா செயல் பிரகாஷ் கனவில் கூட நினைக்காதது. ஒரு தலைவலி என்றால் கூட துடித்து போவாள். அவனுக்கு மிஞ்சி தான் பிள்ளைகள் கூட முக்கியத்துவம் பெரும். அவனை கொண்டு மட்டும் தான் அவள் இயங்குவாள்.

    ஆனால், இன்று ஒன்றுமே நடக்காதது போல, அவன் ஒன்றுமே இல்லாதது போல ஒதுக்கி விட்டாளே!… என்ன தவறு செய்தாலும் ஒரு கஷ்டத்தில் உடன் நிற்க வேண்டாமா… மனம் ஆற்றாமையில் வலித்தது.

   தன் மனைவியா இது? தன்னையே மீட்டு பார்க்க தொடங்கினான்.

        திருச்சியில் வசதி வாய்ப்பு இல்லாவிட்டாலும் மிகவும் மரியாதையான குடும்பம் ஜெயபிரகாஷ் உடையது. நான்கு பிள்ளைகளில் மூத்தவனாக பிறந்து பொறுப்புகளை தட்டி கழிக்காமல் தந்தைக்கு துணை நின்றவன் தான்.

     விசாலாட்சியை வாழ்க்கை துணையாக கை பிடிக்கையில் அவன் ஆரம்பகட்ட சம்பளம் பதினைந்தாயிரம் ரூபாய் தான். அவனுக்கு மட்டுமல்லாமல் அவன் குடும்பத்திற்கும் ஏற்ற மருமகளாக தான் விசாலாட்சி இருந்தது. பிரகாஷ் உடன் பிறந்த தம்பி, தங்கை மூவருக்கும் திருமணம் முடிக்கும் வரை பொது வருமானம் தான். கணவன் சம்பளத்தை தங்களுக்கு என்று தனியாக ஒதுக்கியது இல்லை.

        ஜெயபிரகாஷும் சும்மா சொல்ல கூடாது. குடும்ப நிலை உணர்ந்து சேமிப்பை சிக்கனப்படுத்தினான். ஆடம்பர சென்னை வாழ்க்கைக்கு சாலாவின் கட்டுபெட்டி தன் அழகாக கை கொடுத்தது. கிராமத்தில், கூட்டு குடும்ப நெறி முறையில் வளர்ந்தவள் என்பதால் சென்னை வாழ்க்கைக்கு பழகினாலும் தன் கணவன் குடும்பத்தை அனுசரித்தே செல்வாள்.

       அதனால் தான் நாராயணனுக்கு மற்ற மருமகளை விட சாலா மீது மதிப்பு அதிகம். ஒரு குடும்பத்தில் மூத்த மகனுக்கு எந்தளவுக்கு பொறுப்பும், கடமையும் உள்ளதோ அதே அளவுக்கு அந்த வீட்டின் மூத்த மருமகளுக்கும் உள்ளது. அதில் துளி குறையாமல் தன் தோளில் தாங்கியவள் விசாலாட்சி தான். தங்களுக்கென்று இரு பிள்ளைகள் வந்த பின்னும் பொது வீட்டுக்கு செய்வதை தடுத்தது கிடையாது. கணவனின் சட்ட திட்டம் என்னவோ அதை கொண்டு, அவன் வழியிலே வாழ பழகி கொண்டாள்.

   குடும்பத்தில் தனக்கான பொறுப்புகளை முடித்த பின் தான், தன் குடும்பத்திற்கு என்று சேமிப்பை தொடங்கினான். வருசம் போக வேலையில் தன்னை நிலை நிறுத்தி கொண்டான். அவனின் வருமானமும் பெருகியது. சாலாவும் அதே கட்டுதிட்டத்தோடு சொந்த வீடு, பிள்ளைகள் படிப்பு, எதிர்கால தேவை என்று கணவனின் வருமானத்தை சேமிப்பாக மாற்ற தொடங்கினாள். அதற்கு முழு ஒத்துழைப்பும் பிரகாஷ் கொடுத்தான்.

     சென்னை நகரின் மத்தியில் மூன்று படுக்கை அறை கொண்ட வீடு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. அதை நிஜமாக்கினாள் விசாலாட்சி. ஆம், அவ்வாறு தான் சொன்னான் பிரகாஷ். சம்பாத்தியம் கணவனோடதாக இருந்தாலும், மனைவியோட து அல்லவா…

     நல்ல வேலை, பொறுப்பான மனைவி, ஆணும், பெண்ணுமாக அழகான இரண்டு குழந்தைகள் என்று நிம்மதியான வாழ்க்கை தான். பிள்ளைகள் படிப்பு, எதிர்கால சேமிப்பு, கல்யாணம் என்று எல்லாவற்றிற்கும் திட்டம் வகுத்து தான் முன்னேறினாகள். இதில் சாலா செய்த சிறு தவறு, பின்னாளில் பெரியதாக நினைத்தது என்னவென்றால் சேமிப்பை பணமாக சேர்த்தது தான். இடமாகவோ, நகையாகவோ சேர்க்காமல் பணமாக சேர்த்து வைக்க, பின்னாளில் பிரகாஷ் கையால எளிதாக போனது.

         வாழ்க்கை தெளிந்த நீரோடையாக செல்ல, பிரகாஷ் வருமானம் மேலும் பெருகியது. அவனின் பன்னாட்டு கம்பெனியில் மேனேஜராக உயர்வு கிடைக்க, அதிக வருமானத்தோடு, பழக்கவழக்கம் மாறி போனது. சோசியல் டிரிங்க்ஸ் என்ற பெயரில் அவசியத்துக்கு குடிக்க ஆரம்பித்தான்.

            விசாலாட்சியும் அறிவாள். ஆனாலும் கணவன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை. பணமும், மதிப்பும் பெருக பிரகாஷை கையில் பிடிக்க முடியவில்லை. தன்னை குறித்தே பெருமையாக எண்ணி கொண்டான். அவன் குடும்பத்தையும் உயர்த்தி, அவனையும் உயர்த்தி கொண்டான் அல்லவா…

       பதவி உயர்வில் பிரகாஷ் தொழில் வட்டம் பெருகி பல நட்பு வட்டங்கள் உருவானது. அவன் வேலை செய்வது ஐரோப்பிய நிறுவனம் என்பதால் அடிக்கடி வெளிநாடு சென்று வந்தான். ஒரு முறை கூட தன் குடும்பத்தை அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்க வில்லை. வீடு, இரு பிள்ளைகள் என்றே சாலாவும் பழகி கொண்டாள்.

    வசதி பெருகவும் ஊட்டி, கொண்டைக்கனல், கேரளா என்று சென்று வந்தார்கள். அத்தோடு முக்கிய விசேஷம், கோவில், விழா என்று எங்கும் குடும்பமாக செல்வதால் சாலாவும் வேற என்ன வேண்டும் என்று இருந்து கொண்டாள்.

     தேவைகள் இருக்கும் போது ஒரு மனிதனுக்கு தேவையை நியைவு செய்வதிலேயே அவனின் முழு கவனமும் இருக்குமாம். பிரகாஷ்க்கு தன்னை சார்ந்த கடமைகள் முடிந்த பின் நிதானமாக மற்றவற்றை ஆராய தொடங்கினான்.

     அவனின் வெளிநாட்டு வாழ்க்கை, நட்பு வட்டம் எல்லாம் வேற வாழ்க்கை முறையை கடைபிடிக்க, தான் வாழும் வாழ்க்கை ஒன்றுமே இல்லை என்று தோன்ற தொடங்கியது. பொறுப்புகளும், கடமைகளும், கட்டுப்பாடும், இழுத்து பிடிக்கும் உறவுகளும் இல்லாத சுதந்திரமான வாழ்க்கை மீது ஈடுபாடு வர தொடங்கியது.

      தன் குடும்பத்தை பாதிக்காத வகையில் தன்னை சுதந்திரமாக மாற்றி கொண்டான். தப்புடைய ஆரம்பம் அங்கு தான் தொடங்கியது. தன் குடும்பத்திற்கு தெரியாமல் ஒளித்து, மறைத்து செய்யும் எதுவும் தவறு என்று அவன் உணரவில்லை.

     அவன் நட்பு வட்டங்களோடு கோவா ட்ரிப், நைட் பார்ட்டி என்று வாழ்க்கையை தனக்கு பிடித்த மாதிரி அமைத்து கொண்டான். விசாலாட்சி துளியும் கணவனை சந்தேகம் கொள்ள வில்லை. சரியில்லாத குடிகாரனோ, உதாரியோ கிடையாது பொறுப்பு மிக்கவன். தங்களுக்கு எந்த குறையும் இல்லை எனும் போது எவ்வாறு கணவனின் நடத்தையை அறிவாள்.

     நாப்பது வயது நாய் குணம் என்று சும்மா சொன்னார்கள். அவன் மனதில் விழுந்த சலனத்திற்க்கு சாலாவின் குறைகளை காரணமாக்கி கொண்டான். ஒரு மனைவியாக வீட்டில் அவனுக்கு எந்த சச்சரவும் இல்லாத அமைதியான வாழ்க்கையை கொடுத்த சாலா, அவனில் மதிப்பு குறைந்து தெரிந்தாள்.

          தன்னோடு வேலை பார்க்கும் பெண்கள் உடன் தன் மனைவியை சேர்த்து பார்த்து குறைகளை அடுக்கி கொண்டான். இவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கும் தனக்கு சாலா பொருத்தமில்லை என்ற எண்ணம் உருவானது. அவனின் கட்டுபெட்டி மனைவி கொஞ்சம் கடுப்படித்தாள்.

    அவனுக்கு அப்படியே எதிற்பதமாக விசாலாட்சி இருந்தாள். நடுத்தர வயதில் இருக்கும் எதிர்கால பயம் அவளுக்கும் இருந்தது. நாம் நன்றாக இருக்கும் போதே பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டும். நல்ல படிப்பை கொடுக்கணும், பெண் பிள்ளைக்கு நகை எடுக்க வேண்டும் என்று எண்ணம் சென்றது.

        அதிலும் அஜய் பருவ வயது வந்த போது அவனை கண்காணிப்பது, தனியே போன் பார்த்தால் என்ன பார்க்கிறான் என்று ஆராய்வது, வயதுக்கு வரும் நிலையில் இருக்கும் மகளுக்கு சொல்லி கொடுப்பது என்று அவளுக்கும் பிசியான வாழ்க்கை தான். குடும்பத்தில் பிரகாஷ் பெரிதாக ஒன்றும் செய்ய மாட்டான். எல்லாம் சாலாவுக்கு தான் என்று விட்டு விடுவான்.

        பிள்ளைகள் கேட்டது எல்லாம் வாங்கி கொடுப்பான். முடியாத நேரத்தில் பணமாக மனைவி கையில் திணித்து விடுவான். சாலாவும் கணவனிடம் எந்த வேலை பளுவையும் கொடுக்க மாட்டாள். பாவம் அவன், ஆபிஸ் வேலையே அதிகம் என்று வீட்டில் அவனுக்கு ஃப்ரீ பண்ணி கொடுப்பாள்.

         சாலாக்கு முப்பத்தி ஐந்து தொடங்கும் நேரம் தான் ஒழுங்கற்ற மாதவிடாய் வர தொடங்கியது. அதுவரை உடல் ரீதியாக பெரிதாக தொந்தரவு கிடையாது. எப்போதாவது வரும் காய்ச்சல்,தலைவலியை கூட ஒரு மாத்திரையில் அடக்கி அன்றாட தேவைகளுக்கு ஓடுவாள். கர்ப்பப்பை பிரச்சனை என்று ஆரம்பித்தது வேற எங்கெங்கோ கொண்டு செல்ல, முழுதாக துவண்டு போனாள். கணவன், பிள்ளைகள், உயிர் பயம் என்று எல்லாம் சேர்ந்து ஒரு மன அழுத்தத்தில் அவளை தள்ள, தனக்குள் மூழ்கியவளை கணவனாக கை கொடுத்த தூக்கமால், அவளின் கையை விட்டு முழுதாக விலகி கொண்டான்.

    தன் நோயில் இருந்து போராடி சாலா வெளி வந்து பார்க்கும் போது எல்லாம் அவள் கை விட்டு சென்று இருந்தது.

    ஒரு பெருமூச்சு விட்டு சாலா அடுத்த வேலையை பார்க்க தொடங்கினாள். தேவிக்கு தனியாக இடம் ஒதுக்கி கொடுக்க பட்டது. கை வேலைப்பாடு சேலை நல்ல வியாபாரம் தான். அதிக லாபமும் கொடுத்தது.

      தேவி கொஞ்சம் கொஞ்சமாக வரவு, செலவு, கொள்முதல் என்று தொழிலை படிக்க ஆரம்பித்தாள். தேவி உடன் நாலு பேர் வேலைக்கு நின்றார்கள்.

     சாலாக்கு மனதில் ஒரு யோசனை ஓடி கொண்டு தான் இருந்தது. தேவி நல்ல திறமைமிக்க பெண். அவள் வருமானத்தை ஒன்றாக முடக்க சாலா விரும்பவில்லை. தன்னிடம் அடைக்களம் கொண்டவளாக அல்லாமல் அவள் திறமை தனியாக தெரிய வேண்டும் என்று நினைத்தாள். அதனால் பல நேரங்களில் அவளையே கடையை பார்த்து கொள்ள சொல்லி தொழிலை பழக்கினாள்.

           தேவியும் மெதுவாக என்றாலும் கற்று கொள்ள தொடங்கினாள். என்ன தான் தேவி தன்னை மேம்படுத்தி கொண்டாலும், பல நேரம் ஒரு மாதிரி சோர்ந்து தான் போவாள். அதை சாலாவும் கண்டறிந்து ஆராய முற்பட்டாள். தேவியின் காயம் தான் என்ன?…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!