Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெந்து தணிந்தது காதல்!

வெந்து தணிந்தது காதல்! – 2

 

வார்த்தைகள் வசீகரித்து இதயத்தின் வடம் பிடிக்குமா? வாய்மொழியின் ஒவ்வொரு வரியும் ஆடவனின் உயிர் குடிக்குமா?

சர்க்கரைக் கரைசலில் தேன்குழலாக.. தேன் குரலொன்று அவன் நெஞ்சக் கரைசலில் நர்த்தனமாடியது!

அவள் பார்வையிலே உறைந்து, குரலில் கரைந்தே விட்டிருந்தான் அவன்.



Advertisement

அவள் பாடி முடித்ததும் தன்னையும் அறியாது அவனது பார்வை, அவளையே பின் தொடர்ந்தது.

அந்த இடத்தை விட்டு அவள் அகன்ற பிறகும் கூடத் தன்னிலை திரும்பாது, இக, பர, சுகம் மறந்து மோனநிலையில் அவனிருக்க, அவனது நண்பரகள் அவனது தோளைப் பிடித்து உலுக்கித் தான் அவனைச் சுயநினைவுக்கு கொண்டு வந்தனர்.

“என்னாச்சுடா? ஏன் இப்படி இருக்க?” என்று நண்பர்களில் ஒருவன் கேட்க, அவள் சென்ற வழியையே பார்த்தபடி இருந்த ஷிவ்வோ,

Advertisement

“டேய்.. உன்கிட்ட அந்த ஜோஷுவா நம்பர் இருக்கு?” என்று கேட்டான் சம்மந்தமே இன்றி.

Advertisement

அதில் மற்றவர்கள் புரியாது குழம்ப, ஒருவன் மட்டும்..

“ஹ்ம்ம்.. இருக்குடா.” என்று கூறி அந்த அலைபேசி எண்ணைக் கொடுக்க, அதை ஷிவ் தனது மொபைலில் பதிவேற்றிக் கொண்டிருந்த சமயத்தில் மற்றொருவன்,

“எதுக்குடா அந்த ஜோஷுவா நம்பர் உனக்கு?” என்றிட.. ஷிவ்வோ,

Advertisement

“அவன் தான் அன்னைக்கு ரொம்ப சீன் போட்டானே? இந்த சந்திரகீர்த்தி வாரத்துல ஒரு நாள் கண்டிப்பா அவனோட ரெஸ்ட்டாரண்டுக்கு தனியா வருவா அப்படின்னு. அதைப் பத்திக் கேட்கறதுக்காகத் தான் அவன் நம்பர் கேட்டேன்.” என்று அவன் கூறி முடிக்க, அவனை ஆச்சர்யமாகப் பார்த்தனர் அவனது நண்பர்கள்.

ஏனென்றால் இதே நவிராவின் கான்செர்ட்டுக்கு அவனை அழைத்த பொழுது,

“டேய்.. என்னடா இன்னமுமா இந்த கான்செர்ட் எல்லாம் கேட்கறீங்க? அவங்களே சும்மா ரெக்கார்டாட் பாட்டெல்லாம் எடுத்துப் போட்டு, டப்பிங் பேசற மாதிரி வாய மட்டும் அசைப்பாங்க. இதுக்கு நாம அவ்வளவு காசைக் கொடுக்கணுமா?” என்று சலித்துக் கொண்டவன் தான் அவன்.

அப்படிப்பட்டவன் இன்று அதே நவிராவை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிறான் என்றால் அவனது நண்பர்களுக்கு ஆச்சர்யமாய் இருக்காதா என்ன?!

“தம்பி.. எனக்கு என்னவோ உன் மேல கொஞ்சம் சந்தேகமா இருக்கே! உன் பார்வையும் சரியில்ல.. உன் பேச்சும் சரியில்ல..” என்று அந்த நண்பர்கள் கூட்டத்தில் ஒருவன் கேட்க, அவனைப் பார்த்து மர்மமாய் சிரித்த ஷிவ், அதற்குள்ளாகத் தன் மனதில் ஒரு திட்டத்தைத் தீட்டி முடித்திருந்தான்.

***

முழு வெள்ளை வேட்டி சட்டையில் தயாராகி வந்த ஷிவ்வோ, தனது அறைக்கு அருகிலிருக்கும் மற்றோர் அறைக்குள் வேகமாக நுழைந்தான்.

முழுதாக முப்பது நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவனின் கண்கள் சிவந்திருந்தன. நெற்றி நரம்புகள் புடைத்திருக்க, இறுகி இருந்த முகம் அவன் உள்ளுக்குள் தகிக்கும் எரிமலை நெருப்பாய் கனன்று கொண்டிருப்பதை அப்பட்டமாகக் காட்டியது.

விறுவிறுவென வேக நடையுடன் வெளியேறியவன், வெள்ளை நிற பென்சில் ஏறி அமர, அந்தக் காரோ சீறிப் பாய்ந்து கிளம்பியது.

செல்லும் வழியெங்கும் அவனது உருவப்படங்கள் கொண்ட பேனர்கள்!

“துணை முதல்வரே!”

“எங்களின் வருங்காலமே!”

“போர்ப்படைத் தளபதியே!”

என்று ஆயிரக்கணக்கில் போஸ்டர்கள்.

ஒவ்வொன்றையும் ஆழமாகத் தழுவியபடி கடந்து சென்று கொண்டிருந்தன அவனது விழிகள்.

இன்று மிகப்பெரும் வெற்றிக்குப் பிறகு நடக்கவிருக்கும் முதல் மாநாடு.

ஆம்! தமிழகத்தின் அறுதிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைத்திருந்தது ஷிவ்வின் “வெற்றித் தமிழர் கட்சி.”

அந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்காக இப்பொழுது துணை முதல்வராகப் பதவியேற்றிருக்கும் ஷிவ்வின் தலைமையில் மிகப்பெரிய மாநாடு ஒன்று இன்று மாலை நடக்க இருக்கிறது.

அதற்கானப் பணிகளை மேற்பார்வையிடத் தான் அவன் இப்பொழுது கிளம்பியிருப்பது.

ஆனால் நேரே மாநாடு நிகழுமிடத்துக்குச் செல்லாமல், கட்சி அலுவலகத்துக்குச் செல்லுகிறான் அவன். கூடவே கட்சியின் முக்கிய அதிகாரிகளையும், மாநாட்டுப் பணிகளைச் செய்யும் நிறுவனத்தின் தலைமை அதிகாரியையும் அங்கு வரச் சொல்லியிருக்கிறான்.

முன்பெல்லாம் ஷிவ் என்றால், முரட்டுத்தனம் மட்டுமே! கட்சி கூட்டங்களாகட்டும், பொது மாநாடாகட்டும், தேர்தல் நேர பிரச்சாரமாகட்டும் அவனது வார்த்தைகளில் அனல் தெறிக்கும்.

ஆனால் இப்பொழுது அவனது இதழை விட்டு வார்த்தைகள் வெளிவருவதில்லை. மாறாக.. வெறும் பார்வையிலேயே வெந்தணல் பற்றிக் கொள்கிறது.

வார்த்தைகளால் வசவு மழை பொழியாது, ஒற்றைப் பார்வையில் நெஞ்சின் நீரை வற்றிவிடச் செய்கிறான் அவன்.

முன்பெல்லாம் எல்லா கட்சிப் பணிகளையும் தானே இறங்கிச் செய்பவன் தான். ஆனால் இந்தத் தேர்தல் முடிந்ததிலிலிருந்து எல்லாமே மாறிவிட்டது.

அதற்குக் காரணம்.. ஒரு விபத்து!

அதிலிருந்து இவன் எப்படி மீண்டு வந்தான் என்று அவன் கட்சிக்காரர்களுக்கே பெரும் வியப்பாய் இருந்தது.

முந்தைய நாள் தான் அவனது உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்று மருத்துவர்களின் அறிக்கை வந்திருக்க, மறுநாளே அவன் நலமுடன் இருப்பதாய் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

தேர்தலில் பெற்ற வெற்றியை முழுதாகக் கொண்டாட முடியாது துக்கத்தில் உழன்றிருந்த கட்சித் தொண்டர்களுக்கெல்லாம் அந்தச் செய்தி சர்க்கரையாக நெஞ்சுக்குள் கரைய, அடுத்த ஒரு வாரத்தில் அவன் எழுந்து நடமாட.. இதோ இந்த ஒரே மாதத்தில் முழு கட்சியை மட்டுமென்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டான்.

இதுபோல மாநாட்டு வேலைகளையெல்லாம் கடைசி நிமிடம் வரை பறந்து பறந்து செய்பவன், இந்த முறை விபத்தினால் உண்டாகியிருக்கும் உடல் பலவீனத்தினாலோ எனவோ, ஒரு கார்பப்ரெட் நிறுவனத்திடம் அந்த வேலைகளைக் கொடுத்துவிட்டு, வெறும் கட்டளைகளை மட்டும் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

இப்பொழுது திடீரென்று எல்லோரையும் இறுதி நேர மீட்டிங்கிற்கு அழைத்தால்.. அவனது பி.ஏ வான முத்து மாணிக்கத்துக்கே குழப்பமாக இருந்தது.

அனைவரும் அந்த மீட்டிங் அறைக்குள் நுழைய, அங்கு ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தான் ஷிவ்.

முகத்தில் எள்ளும் கொல்லும் வெடித்துக் கொண்டிருந்தது.

மாநாட்டு வேலைகளைப் பார்க்கும் அந்த ஈவென்ட் மனோஜ்மென்ட் கம்பெனியின் தலைமை அதிகாரி உள்ளே வர, அவரை நோக்கி..

“மிஸ்டர். நிர்மல், உங்க கிட்ட நான் என்ன சொல்லியிருந்தேன்?” என்றான் எடுத்ததுமே.

வந்ததும் வராததுமாக அவன் அப்படி கேள்வி கேட்கவும், அந்த நிர்மலுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை.

“எ.. என்ன சொன்னீங்க?” என்று அவன் திரும்பக் கேட்க, எரிச்சலுடன் கண் மூடித் திறந்தான் ஷிவ்.

“இந்த மாநாட்டு வேலையெல்லாம் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாம நடக்கணும் அப்படின்னு சொல்லியிருந்தேன் தானே?

இப்போ வழியெல்லாம் பேனர் வச்சிருக்கீங்க? அதுவும் மக்களோட உயிருக்கே ஆபத்தைக் கொடுக்கற விதமா ரோட்டுக்கு நடுவுல வச்சிருக்கீங்க.

ஏற்கனவே இந்த பேனர் கலாச்சாரத்தால தான் நிறைய உயிர் போயிட்டு இருக்கு. இதுனால இப்போ ஒரு சின்ன ஆக்சிடென்ட் நடந்தா போதும்.. எதிர்க்கட்சி எல்லாம் ஒன்னு சேர்ந்து நம்மள கிழி கிழின்னு கிழிப்பாங்க.

அவங்க பேசறதை பத்தி எனக்கு ஒன்னும் கவலை இல்ல. ஆனா என்னோட சுயலாபத்துக்காக மக்களைக் கஷ்டப்பட வைக்கமாட்டேன்.” என்று கூற, அவனை வியந்து பார்த்தனர் அனைவரும்.

இருக்காதா என்ன? மக்களுக்குத் தங்கள் முகம் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று முன்பு கட்டளையே பிறப்பித்திருந்தானே அவன்!

இப்பொழுது என்னவென்றால், ஏன் ஊரெங்கும் பேனர் வைத்தாய் என்று நிற்க வைத்துக் கேள்வி கேட்கிறான்!

நிர்மல் குழப்பமான முகபாவத்துடன், “இல்ல சார். ஒரு மாநாடு நடக்குது. அதுவும் மிகப்பெரிய தேர்தல் வெற்றிக்குப் பின்னாடி அப்படின்னா, இப்படி ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி, பேனர் வைக்கறது வழக்கம் தானே?” என்று தயக்கத்துடன் கூற, அவரைக் கை நீட்டித் தடுத்தான் ஷிவ்.

“உங்க கிட்ட இந்தப் பொறுப்பைக் கொடுக்கும்போதே எனக்கு இந்த பேனர் எல்லாம் வேண்டாம். டிஜிட்டல் முறைல மக்களுக்கு இந்த மாநாட்டைப் பற்றின அறிவிப்பு போனா போதும்னு சொன்னேன்.

ஆனா நீங்க இன்னும் ஐம்பது வருஷம் பின்னாடியே இருக்கீங்க. பேருக்குத் தான் பெரிய கம்பனி. ஒரு ரெண்டு நாள் நான் ஊர்ல இல்ல.

நானே உங்க கூட இருந்து ஒவ்வொன்னையும் சூபர்வைஸ் செய்யணும்னா, அப்பறம் நீங்க எதுக்கு சம்பளம் வாங்கறீங்க?” என்று அவன் கடுமையாகப் பேச, தலை குனிந்தான் நிர்மல்.

அத்தோடு.. “இங்க பாருங்க நிர்மல். மாநாட்டுக்கு வர எல்லாருக்கும் சாப்பாடு கொடுக்கறோம். மாநாடு முடிஞ்ச பின்னாடி, பிளாஸ்டிக் பாட்டல், சாப்பாடு பொட்டலம்னு எந்தக் குப்பையையும் நான் பார்க்கக் கூடாது.

அதை எல்லாம் மேனேஜ் செய்யற பொறுப்பையும், மக்களுக்குக் குப்பைத் தொட்டி எங்க இருக்குன்னு காண்பிச்சு அவங்களை கைட் செய்யற பொறுப்பையும் உங்க கம்பெனிகிட்ட தான் கொடுத்திருக்கேன்.

அதையாவது ஒழுங்கா செய்வீங்களா? இல்ல நான் மேடைல இருந்து கீழ இறங்கி வந்து ஒவ்வொரு குப்பையா பொறுக்கிட்டு இருக்கணுமா?” என்று ஆத்திரம் பொங்கக் கேட்க அந்த நிர்மலோ நடுநடுங்கிவிட்டான்!

“ஹையோ.. இல்ல இல்ல சார்.. இனி எந்த ஒரு தப்பும் நடக்காது சார்! ரொம்ப ரொம்ப சாரி சார். மன்னிச்சுடுங்க. இனி எங்க சைட்ல இருந்து எந்தத் தப்பும் நடக்காம பார்த்துக்கறோம்..” என்று காலில் விழாத குறையாகக் கெஞ்ச, அவனை ஆழ்ந்த ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கிளம்பிவிட்டான் ஷிவ்!

அவன் நடவடிக்கைகள் யாவும் அனைவருக்கும் புதுமையாக இருந்தது. முன்பெல்லாம் ஷிவ்வின் வாய் பேசாது!

எதிரில் இருப்பவர் யாராக இருந்தாலும் பொளேர் என்று கன்னத்தில் விழும் அறையில், அவன் செவிப்பறை கிழியும் போது தான் எதற்காக அந்த அறை விழுந்தது என்பதே அவனுக்குப் புரியும். அந்த அளவுக்குக் கோபக்காரன் ஷிவ்!

கோபம் வந்துவிட்டால், வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்கு வரைமுறையே இருக்காது.

அப்படிப்பட்டவன் இப்பொழுது அளந்து பேசுகிறான். ஒரே வார்த்தையில் வேலை வாங்குகிறான். அந்த வார்த்தையை மீறி எவரும் வேறு நினைக்கக் கூட முடியாத அளவுக்குக் கண்களிலேயே பயம் காட்டுகிறான்!

ஆச்சர்யமாக இருந்தது அவர்களுக்கு. கூடவே கொஞ்சம் அதிக பயமாகவும்!

இங்கு ஷிவ்வின் கட்சியின் அவனது கட்சிக்காரர்கள் எல்லோரும் இப்படி அவனது புது அவதாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள் என்றால், நவிராவுக்கோ நிலைமை தலைகீழாக இருந்தது.

தனது கட்சியின் அடுத்த வாரிசு என்று ஒரு வாரத்துக்கு முன்பு தான் நவிராவை அறிவித்திருந்தார் தயாளன்.

அரசியல், கட்சி, ஆட்சிப் பொறுப்பு என்று எதுவுமே தெரியாது நவிலாவுக்கு.

அவ்வளவு ஏன்? தமிழகம், அதன் கலாச்சாரம், அந்த மக்கள் என்று எதுவுமே தெரியாமல், அவள் பிறந்தது.. வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவில் தான். தமிழ் பேசக் கூட ஓரளவுக்குத் தான் தெரியும்.

அப்படிப்பட்டவளை காலம் இன்று தமிழகத்தின் பிரதானக் கட்சி ஒன்றிற்கு வாரிசாக்கியிருக்கிறது.

தனது வேகநடையுடன் அவள் கட்சி அலுவலகத்துக்குள் வர, அவளுக்கு முன்பாக அங்கு வந்து மேடையில் அமர்ந்திருந்தார் தயாளன்.

ஏற்கனவே தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த கட்சியின் பிற உறுப்பினர்கள், முக்கியத் தலைவர்கள் அனைவரும் அவள் வருவதை உணர்ந்தாலும் அதனை அசட்டை செய்து மேலும் தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டிருந்தனர்.

கால் செருப்பின் சத்தம் கேட்க, தரை அதிர நடந்து வந்தவள், தானாகவே மேடையேறினாள்.

யாரும் அழைக்காமலேயே மைக்கின் முன்பாகச் சென்றவள், ஸ்டான்டில் பொருத்தப்பட்டிருந்த மைக்கை தன் நடுங்கும் விரல்களால் பற்றிட.. அவளையும் அறியாது அவளுக்குள் ஊற்றெடுத்தது அவன் ஞாபகம்!

*****

அவள் கையிலிருந்த மைக்கை அவள் கையைப் பற்றியபடி தன் உதட்டருகே இழுத்தான் ஷிவ்.

இவள் அதில் இனிதே அதிர்ந்து இதழில் மென் சிரிப்புடன் பார்த்தபடி தொடர்ந்து பாட, அவளுடன் சேர்ந்து அவனுமே பாடினான்.

“In the moonlight, dreams take flight,
Together, we’ll embrace the night.”

என்று அவள் பாடிக் கொண்டிருக்கையில் தான் அவன் இடையிட்டான்!

“With this ring, a promise true,
Forever, darling, me and you!”

என்று கூறி தனது பாண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு வைர மோதிரத்தை எடுத்து நீட்டியபடி நவிராவின் முன்பு மண்டியிட்டான் ஷிவ்!

தன்னையும் அறியாது வந்துவிட்ட இந்த ஞாபகத்தில் கண்கள் சிவந்து கரிக்க, உள்ளுக்குள் பொங்கிய அழுகையில் நவிராவின் நாசி விடைத்தது!

தகுதியே இல்லாதவனிடத்தில் கொண்ட காதலால் இழக்கக் கூடாதவைகளை எல்லாம் இழந்து, முதுகில் கத்திக்குத்து வாங்கிய பின்பும் அவனது நினைவு இத்தனையாய் வலிக்கிறதென்றால்.. அத்தனை ஆழமாகவா இன்னமும் அவனைக் காதலிக்கிறேன் நான்? என்று அவள் மீது அவளுக்கே எழுந்த கோபம், தன் கண் முன்பு தன்னை மதிக்காது தங்களுக்குள் வெட்டிக் கதை பேசியபடி இருந்த கட்சிக்காரர்களிடம் பாய,

“சைலன்ஸ்” என்று அந்த அறையே அதிரும்படிக்குக் கத்தினாள் அவள்!

அந்த அதிர்வில் அனைவரும் ஒரு கணம் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, அதுவரை தனது உதவியாளிடம் கட்சி நிலவரத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்த தயாளனும் திகைத்துப் பார்த்தார்.

கண்களில் கனலுடன் நின்றிருந்தவளைக் கண்டு ஒரு கணம் தொண்டை வரண்டாலும், சட்டெனத் தன்னைச் சுதாரித்துக் கொண்டு மேலே எழுந்து வந்து, நவிராவின் கையிலிருந்து மைக்கை வாங்கினார் அவர்.

“வந்து.. இது.. இவ..” என்று சற்று தடுமாறியவர், ஒரு கணம் நிறுத்தித் தொண்டையைச் செருமித் தன்னை நிலைப்படுத்த முயல, அதைப் பார்த்த நவிராவின் கண்களில் பொறி பறந்தது.

அதைப் பார்த்த தயாளனுக்கு உள்ளுக்குள் லேசாக நடுக்கம் எழ.. முயன்று தன்னைச் சமனப் படுத்தியவர்..

“இது நவிரா சந்திரகீர்த்தி.. நம்ம கட்சில, எனக்கு அப்பறம் இவ தான். இனி கட்சியின் முக்கிய முடிவுகள்ல இவளுக்கும் பங்கு இருக்கு.

இவ இனிமே நம்ம மகளிரணித் தலைவியாவும் இருப்பா.” என்று கூற, அனைவரும் தயாளனின் உரையைக் கவனித்தாலும், அதில் கூறிய எதுவுமே அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்ற பாவத்தை மிக வெளிப்படையாகவே காட்டினர்.

அதைக்கண்ட தயாளனுக்கு, மற்ற உறுப்பினர்களின் எண்ணம் புரிந்தது.

இத்தனை நாள் வெளிநாட்டில், அதுவும் பாடகியாக இருந்தவள். அந்த நாட்டு கலாச்சாரத்துக்குத் தகுந்தபடி ஆடை அணிந்தவள்.. இதெல்லாவற்றையும் விட, ஊருக்குத் தெரியாமல், ரகசியமாய் தன்னுடன் குடும்பம் நடத்திய பெண்ணுக்குப் பிறந்தவள்!

இத்தனைக்கும் மேலே, இவள் கெட்டுச் சீரழிந்தது உலக செய்தியாக வேறு வலம் வந்து சந்தி சிரித்திருந்தது!

இப்படிப்பட்டவளை, இவள் தான் உங்கள் வருங்காலக் கட்சித் தலைவி என்று அறிமுகப்படுத்தினால், விளைவு இப்படித் தான் இருக்கும்.

என்ன? தன் மீதிருக்கும் பயத்தினால் அதற்கான காரணத்தை யாரும் கேட்க மாட்டார்கள் தான். ஆனால் இனி கட்சிக்குள்ளேயே இதுவரை இருந்த மரியாதை இருக்காது.

எல்லாம் யாரால்? எங்கிருந்தோ வந்த இவளால் தான்! என்று நினைக்க நினைக்க தயாளனுக்கு கொலைவெறி உண்டானது.

முன்பே இவளைக் கொலை கூடச் செய்யத் துணிந்தவர் தான். இப்பொழுதும் விட்டால், தன் வெறும் கைகளால் அவளது கழுத்தை நெரித்துக் கொன்றுவிடும் அளவுக்கு நவிலாவின் மீது அவருக்கு ஆத்திரம் இருக்கிறது தான்!

ஆனால் இப்பொழுது அவரது குடுமி, அவள் கையிலல்லவா இருக்கிறது!

எனவே தான் அவள் போடும் தாளங்களுக்கெல்லாம் நடுத்தெருவில் வித்தை காட்டும் குரங்காக ஆடிக் கொண்டிருக்கிறார் அவர்.

ஒருவகையில் கட்சியினரின் இந்த உதாசீனமும், அவமதிப்பும் அவருக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

எனவே அவளை இன்னமும் பலவீனப்படுத்த எண்ணி..

“நீங்க யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க தலைவனான நான், நீதிக்கும் – நேர்மைக்கும், நியாயத்துக்கும் – தர்மத்துக்கும் கட்டுப்பட்டவன்.

அதுக்காகத் தான் இவளுக்கு இந்தப் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருக்கு. நவிலா அரசியலுக்கு ரொம்ப புதுசுங்கறதால, அவளுக்கு உதவியா என்னோட பி.ஏ தான் இருக்கப் போறாரு.

சின்னக் குழந்தைக்கு, “ஆன்னா.. ஆவன்னா” சொல்லிக் கொடுக்கற மாதிரி, நாம நவிராவுக்கு நம்ம அரசியல்ன்னா என்னன்னு சொல்லிக் கொடுப்போம்.” என்று அவளை மிரட்டும் தொனியில் பேச, அவரையே பார்த்துக் கொண்டிருந்த நவிராவோ, தன் கையை நீட்டி அவரிடமிருந்த மைக்கைப் பறித்தாள்.

அவளது செய்கை தயாளனுக்கு ஆத்திரத்தை கொடுத்தாலும், வேறு வழியின்றி நகைமுகமாகவே அவரருகே நின்றிருந்தார்.

அதைக் கண்டவளோ மைக்கிலேயே.. “போங்க.. போய் உங்க சீட்டுல உட்காருங்க.” என்றாள் அலட்சியமாக.

அதைக் கண்டு தயாளன், “என்ன?” என்றபடி பார்க்க.. அதற்கு மேல் பொறுமையிழந்தவளாக..

“யோவ்.. போன்னு சொல்லறேன்ல?” என்று கத்த.. அவள் கட்சித் தலைவரையே, அதிலும் தன் சொந்த தகப்பனையே ஏக வசனத்தில் பேசியதைக் கேட்டு மொத்தக் கூட்டமும் அதிர்ந்து போனது.

அதிர்ச்சியிலும், அவமானத்திலும் தயாளன் தடுமாற, அவரது உதவியாள் தான் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கூட்டிச் சென்றான்.

தலைவரே இவளது பேச்சைக் கேட்டு இப்படி அமைதியாகச் செல்லுகிறார் என்றால்.. தங்களது நிலை என்ன? என்று யோசித்தபடியே அவர்கள் நின்றிருக்க, எந்தவொரு அலங்கார பேச்சுமின்றி நவிரா பேச ஆரம்பித்தாள்.

“எல்லாருக்கும் என்னைப் பத்தி பலவிதமான எண்ணம் இருக்கும். கருத்து இருக்கும்.!

எனக்கு அதைப் பத்தி எல்லாம் கவலை இல்ல. உங்க அபிப்பிராயங்களையோ, கருத்துக்களையோ நான் மதிக்கறதாவும் இல்ல.

ஆனா.. இங்க.. இனி.. நான் தான் உங்க தலைவி!

இதை மனசுல வச்சுக்கிட்டு, எனக்கு உரிய மரியாதை கொடுக்கறவங்க மட்டும் தான் இனி இந்தக் கட்சில இருப்பாங்க.

ஏன்னா.. இந்தக் கட்சியை உங்க தலைவர் என் பேருக்கு மாத்தி எழுதி கொடுத்துட்டார்.

இனி.. இது என் கட்சி!

இங்க நான் வைக்கறது தான் சட்டம். உங்க தலைவரே இனி கட்சில தொடரணுமான்னு நான் தான் முடிவு செய்யணும்!

இதுல யாருக்கெல்லாம் உடன்பாடு இல்லையோ.. அவங்க எல்லாரும் இப்பவே கிளம்பலாம்.” என்று கூறி கையைக் கட்டிக் கொண்டு அனைவரையும் இவள் கூர்மையுடன் பார்வையிட.. கூட்டத்திலோ கப்சிப்!

ஆனால் அதிலும் சண்டித்தனம் செய்யும் சில்வண்டு ஒன்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு தனது பானை வயிற்றைத் தூக்கியபடி முன்னே வந்து நின்றது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!