Skip to content
Post Views: 997
தேடல் – 1
வருடம் 2006,ஏப்ரல்.
Advertisement
இன்னும் நான்கு நாட்களில் செல்லப் போகும் பயணத்திற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்து கொண்டிருந்தான் அவன்.
வழமையாக என்றால் இந்த சாதாரண வேலையைக் கூட செய்ய விட மாட்டார் அவன் அன்னை சுமித்ரா.
Advertisement
Advertisement
மகனின் இந்த பயண முடிவில் கோபமாய் இருப்பதால் இரண்டு நாட்களாக அவனோடு பேச்சு வார்த்தை இல்லை. அப்படி தான் சொல்லிக் கொள்கிறார், கோபமாம் என்று!
அதை நினைத்து சிரித்து கொண்டவனின் இதழ்களில் எப்போதும் நிறைந்திருக்கும் புன்னகை.
Advertisement
“தாஸ்,பங்காரம்”என்ற தந்தையின் குரலில் பெட்டியை மூடி விட்டு திரும்பினான், அக்கினேனி கௌதம் காளிதாசன்.
“செப்பன்டி நாநா!” என்றவனிடம் அவர் கூற வருவது புரிந்து அமைதி.
“நாநா இப்படி சொல்ல கூடாது தான். ஆனா, அம்மாக் கோசம் இக்கடே உன்டானு!” என்றார் விஜயன் உடைந்த தமிழும், அழகிய தெலுங்குமாக.
முறுவலிப்புடன் தந்தையின் தோளை அணைத்துக் கொண்டான் கௌதம்.
“டேய் பாபு, நன்னு ஒப்பின்சகு (என்னை சமாதானப் படுத்தாதே)”என முறைக்க,
“ப்ச், நாநா நாக்கு அர்த்தமாயிந்தி! அதுக்காக அங்க போகாம இருக்கலாமா?” என்றான் இவனும் பிடி கொடுக்காமல்.
“பாவம்டா சுமி. நீயும் இல்லாம நானும் இல்லாம நல்லாவே இருக்க மாட்டா” என மனைவிக்காக பேசினார் விஜயன்.
“ப்ரசாத் இருக்கான் நாநா. அவன் பார்த்துப்பான், உங்க இஷ்டமைனாவ” என சிரித்தான்.
தானும் புன்னகைத்தவர்,
“நீ என்ன சொன்னாலும் சுமி நாக்கு இஷ்டமைனா தான்” என்றவர்,
“என்ன சொன்ன ப்ரசாத்தா?அதனு சின்ன பிள்ளவாடு ரா” என்றார்.
“ஹ்ம்ம்.இதை மட்டும் உங்க ரெண்டா மவன் கேட்டான். சண்டைக்கு நிப்பான் உங்க கூட” என சிரிப்புடன் அங்கலாய்த்த கௌதம், கொண்டு செல்லும் பொருட்களின் லிஸ்ட்டை ஒரு முறை சரி பார்த்தான்.
மகனையே பார்த்து கொண்டிருந்த விஜயனுக்கு அவன் முடிவில் சம்மதம் தான். இருப்பினும் மனைவியை நினைக்கையில் அவளுக்காக மகனைக் கூட தடுத்து நிறுத்தலாம் எனும் எண்ணம்.
“பங்கராம், உன் அம்மா பாவம்ல! இங்க எங்காவது மெடிக்கல் கேம்ப் போகலாம்ல?நான் வேணா உன் சீஃப் டாக்டர் கிட்ட மாட்லாடவச்சா?” எனக் கேட்க,
“ஆஹான், இப்படி சொல்ற நீங்க அம்மா கூட இருக்கிறது தானே?”என தந்தையைப் பிடித்துக் கொண்டான் இவன்.
“பங்கராம். அங்க நீ போறதுல எனக்கொன்னும் ப்ராப்ளம் இல்ல” என தப்பித்தவர்,
“சுமி பயப்படறா!”என்றார், இறுதியாய்.
“ஹ்ம்ம்.ஆனா நான் முடிவு பண்ணிட்டேன்பா. நேனு ஸ்ரீலங்காக்கி வெல்த்துன்னானு” என்றான், நான் சொல்லி விட்டேன் என்பதாக.
அந்நேரம்,
“இத்தனை சொல்லியும் அப்போ போகத் தான் போறல்ல?”என்றபடி கோபத்துடன் புயலென அறை நுழைந்தார் சுமித்ரா.
“ஏமிம்மா இதி!”என ஆண்கள் இருவரும் நெஞ்சில் கை வைத்துக் கொண்டனர்.
தந்தை – மகன் உரையாடலை பாதி கேட்டிருக்க,
“நீங்க அவனை போக வேண்டான்னு சொல்வீங்கன்னு பார்த்தா, பங்கராம் சிங்காரம்னு கொஞ்சிட்டு இருக்கீங்க” என கணவனிடம் காய்ந்தார் சுமித்ரா.
“மைனாம்மா!” என பேச வந்தவரை
“நீங்க பேசாதீங்க. அவனை போக சொல்லி சப்போர்ட் செய்றீங்க” என தடுத்து விட்டு,
“அம்மா பயம் உனக்கு புரியலையா கௌதம்?” என்றார் மகனிடம் கமறிய குரலில்.
அன்னையின் கண்ணீரில் உருகி விட்டது இவனுக்கு.
“ம்மா, அழாத” என்று தோளணைத்துக் கொண்டு கட்டிலில் அவரை அமர வைத்தான் கௌதம்.
மகனின் தோளிலே கண்களை துடைத்துக் கொண்டார் சுமித்ரா.
தந்தையும் மகனும் சிறு புன்னகையுடன் இவரை பார்த்திருக்க,
“போக மாட்டல்ல?”என நிமிர்ந்த படி கேட்டார் சிறு பிள்ளையாய்.
“இப்படி பாவமா கேட்டா சத்தியமா என்னால போக முடியாது தாம்மா” என அவரின் கன்னத்தை கிள்ளியவன்,
“வெறும் ஆறு மாசம் தானம்மா! போயிட்டு சீக்கிரமா வந்துடுவேன்” என்றான்.
“இப்படி தான் உங்கப்பாவும் ஒவ்வரு வாட்டியும் சொல்வாரு. ஆனா நான் தான் இங்க தனியா இருக்கனும் இல்லையா?” என்றார் சுமித்ரா ஆதங்கத்துடன்.
“அதி நா தப்பு காது பங்காரு!” என விஜயன் பாவமாய் சொல்ல,
“ஆமா ஆமா! அது உங்க தப்பில்ல தான். நீங்க ஆர்மில இருக்கீங்கன்னு தெரிஞ்சும் காதலிச்சேன் பாரு.என் தப்பு!” என்றார் கோபமும், கமறலுமாக.
“ஏடு கொண்டல வாடா!” என விஜயன் அலுத்துக் கொள்ள,
“வெங்கட் ரமணா கோவிந்தா கோவிந்தா” என முடித்து வைத்தான் கௌதம்.
சுமித்ரா இருவரையும் முறைக்க, வெடிச் சிரிப்பு ஆண்கள் இருவருக்கும்.
தெலுங்கானாவைச் சேர்ந்த விஜயன் ஒரு இராணுவ வீரன். விதி வசத்தால் தமிழ் நாட்டைச் சேர்ந்த சுமித்ராவை சந்திக்கநேர பின் இருவருக்கும் காதலாகி பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கரம் பிடித்திருந்தார்,அவரை. அதன் பின்னாவது இருவரின் வீட்டாரும் முழு மனதாக ஏற்றுக் கொண்டார்களா எனக் கேட்டால் இல்லவே இல்லை என்பது தான் பதில். அதிலும் ஆந்திராவில் பெரும் செல்வாக்கு படைத்தவர்கள் விஜயன் குடும்பத்தினர். மசாலா மில், பெரிய பெரிய அரிசி ஆலைகள் போதாதற்கு டிரான்ஸ்போர்ட் என அத்தனை தொழில்களிலும் தடம்பதித்திருக்க, பரம்பரை சொத்துக்களுக்கும் பஞ்சமில்லை.
ஆனால் என்ன!அந்த குடும்பத்திற்கு படிப்பு என்பது எட்டாக் கனியாகவே இருக்க, முதல் முதலில் படித்து அதிலும் கவர்மெண்ட்டில் வேலை பார்ப்பவர் என்றால் விஜயன் தான். இப்படியாய் இருக்கும் போது சுமித்ராவை திருமணம் செய்ய, இரு குடும்ப தரப்பினரும் அவர்களை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.
அதிலும் சுமித்ரா சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கவும், சொத்துக்காகவே விஜயனை காதலித்தார் என பேசினர் விஜயன் குடும்பத்தினர்.அந்த கோபத்தில் மனைவியைக் கூட்டிக் கொண்டு சுமியின் ஊரான சென்னைக்கே வந்துவிட்டார் அவர்.
சில மாதத்திலே மகள் மேலிருந்த கோபம் போன பின் சுமித்ராவின் வீட்டார் இருவரையும் ஏற்க, கௌதம் பிறந்த பின்பு தான் விஜயன் குடும்பத்தினர் இவர்களை ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் விஜயன் அவர் வீட்டாரோடு பட்டும் படாமலுமே உறவைப் பேணி வந்தார். தங்களுக்காக ஏற்காமல் மகன் பிறந்த பின் ஏற்றுக் கொண்டது ஒப்பவில்லை அவருக்கு.
மகனை அப்படியே விட முடியாமல் வேறு வழியின்றி சுமித்ராவுடன் உறவை வளர்த்துக் கொண்டனர். அப்பொழுதெல்லாம் தொலைபேசி அழைப்புக்கள் அவ்வளவாக இருக்காது இல்லையா? ஆகவே,சுமி அங்கு செல்ல நேரிடும் சமயங்களில் குத்து பேச்சுக்களும், முகத்திருப்புதல்களும் கிடைக்கும்.
விஜயனின் தாயார் பத்மினி மருமகளை பேசாத பேச்சுக்கள் இல்லை. விஜயனுக்காக பொறுத்துப் போனார் சுமித்ரா. இதைப் பார்த்து பொறுமை இழந்தவராய் விஜயன் முழுதாக உறவை முறிக்கப் பார்க்க அவரின் பாட்டி தான் சமாதானப்படுத்தினார்.
பேரனுடன் அவரும் சென்னை வந்து விட்டார். விஜயனும் இராணுவத்தில் இருக்க சுமிக்கு பாதுகாப்பாக இருக்கும் என அவரை சம்மதிக்க வைத்திருந்தார் சௌதாமினி. (விஜயனின் பாட்டி)
குடும்பத்திலிருந்து விலகி இருந்தாலும் விஜயன் மொழியையும், பாரம்பரியத்தையும் விடவில்லை. தங்கள் காதல் சின்னங்களான பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்தார் அவர்.
கௌதமிற்குப் பின்னர் கௌரவ் ப்ரசாத், சின்மயி என இரண்டு பிள்ளைகள்.
மூன்று பேருக்கும் தெலுங்கும், தமிழும் நன்றாகவே பேச வர, விஜயனுக்கு தமிழ் இன்னும் நாக்கில் நர்த்தனமாடிக் கொண்டிருந்தது.
“சுமி, அழாத தல்லி! நான் வேணா இன்னொரு மாசம் லீவ் போட்டு வீட்லயே இருக்கேன்” என கொஞ்சும் மொழியில் தமிழ் பேசி மனைவியை சமாதானம் செய்தார் விஜயன்.
தாரத்தை தமிழில் பேசி கவுப்பது அவரின் ஒரு வித தந்திரம். சாதாரணமாக அவர் தமிழ் பேசினாலே கொஞ்சுவது போல் தான் இருக்கும். இதில் கொஞ்சிப் பேசினால் கேட்க வேண்டுமா?
கணவன் பேச்சில் இளகும் இதயத்தை இறுக்கிப் பிடித்தவராய்,
“ஒரு மாசம் இருந்துட்டு அப்பறம் நீங்க பார்டருக்கு போயிடுவீங்க. பிறகு நான் என்ன செய்றதாம்?” என கவலையாய் சொல்ல, மனைவியை பாவமாய் பார்த்து வைத்தார் அவர்.
கணவன் வேலை தெரிந்து தான் காதலித்தார் சுமி. முதல் என்றால் அவர் வேலையைப் புரிந்து கொண்டு அவருக்கு அத்தனை உருதுணையாய் இருந்தார் என்பது மறுக்க முடியாது உண்மை. ஆனால் வயது செல்லச் செல்ல துணைவரின் துணையும், அருகாமையும் தேவைப்பட்டது.
மனைவியைப் புரிந்து கொண்டவராய் ஆறுதலாய் அவர் கரம் பற்றிக் கொண்டார் விஜயன்.
அவரைப் பார்த்து சுமித்ரா முறைக்க,
“எந்துக்குமா நானாவை முறைக்கறீங்க?”என சன்ன சிரிப்புடன் கேட்ட மகனையும் முறைத்தவர்,
“இப்ப தானே தெரியுது உங்களை பார்த்து தான் ரெண்டாவனும் பிடிவாதக்காரனா மாறிட்டான்னு! அவன் இருக்கானே,அந்த கெளரவ் பய!போலீஸ்க்கு படிக்க போறேன்னு இப்பவே சொல்லிட்டு திரியறான்” என பொருமலாய் சொல்லியவர் ப்ரசாத்தின் முடிவிற்கு எதிர்ப்பெல்லாம் தெரிவிக்கவில்லை என்பது தான் இங்கு ஹைலைட்!
அது இவர்களுக்கும் தெரியும். என்னதான் கௌரவும் போலீஸ்க்காக படிக்க இருப்பது சுமிக்கு விருப்பமில்லை யெனினும் அதைத் தடுக்கவில்லை அவர். பிள்ளைகளின் படிப்பு முடிவுகளில் என்றுமே கணவன் – மனைவி இருவரும் தங்கள் விருப்பங்களை திணித்ததில்லை.
அதிலும் மூத்த மகனை மருத்துவனாக்க சுமித்ரா ஆசைப்பட்டிருக்க,அதை சொல்லாமலே அவன் ஆசையும் அதாகிப் போனதில் இரட்டிப்பு மகிழ்ச்சி!
புன்னகை முகமாக இருந்த மகனை வாஞ்சையாய் பார்த்த சுமித்ரா,
“நீங்க தான் அடிக்கடி என்னை விட்டுட்டு ஆர்மி, நாடுன்னு இருக்கீங்கன்னு இவனை டாக்டருக்கு படிக்க வெச்சு என் பக்கத்துலயே வெச்சுக்கலாம்னு பார்த்தா. இப்போ இவனும் உங்கள மாதிரியே சேவை,மக்கள் போறேன்னு நிக்கறான்” எனக் கலங்கியவர்,
“டாக்டருக்கு படிக்க வெச்சிட்டு சேவை செய்யலைன்னா எப்படினு நீங்க கேக்கலாம். இங்கயே இருந்தா பரவால்ல. அவ்ளோ தூரம், என்னை விட்டு இலங்கைக்கு போகறேன்னு சொல்லும் போது ஒரு அம்மாவா சுயநலமாத் தான் யோசிக்கத் தோணுது”என்றார் கண்களைத் துடைத்துக் கொண்டு.
இன்னுமே இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த பாடில்லை. கிட்ட தட்ட இருபது வருடங்களுக்கு மேல் போர் நடந்து கொண்டிருக்க,கௌதம் அங்கு செல்ல இருப்பது தாயாய் பயத்தை விதைத்தது இவருக்கு.
அவர் பயமும் புரியத் தான் செய்தது இருவருக்கும்.
தாயின் கரத்தை எடுத்து தன் கரத்தில் வைத்துக் கொண்ட கௌதம் அவர் புறங்கையை ஆதூரமாய் வருடியபடி,
“என்னவோ தெரியல மா! அங்க போகனும்னு மனசு சொல்லிட்டே இருக்கு.அங்க இருக்கிற மக்கள் இன்னுமே தங்களுக்கான உரிமைக்காக போராடிட்டு இருக்காங்க.சின்ன குழந்தைங்க,ஆண்கள், பெண்கள்,வயசானவங்கன்னு இன்னும் எத்தனை பேர் இறந்.. ப்ச் என்னால வார்த்தையாக் கூட சொல்ல முடியலமா!” என்று மனம் கனக்க பேசினான்.
மகன் சொல்ல கேட்டிருந்த இருவருக்கும் நெஞ்சம் கனத்துத் தான் போனது. அன்றாடமும் இலங்கையில் நடப்பது பற்றி டீவி மூலமும், பத்திரிகை மூலமும் கேள்விப் பட்டிருந்தாலும் அதையும் ஒரு செய்தியாக கடந்து செல்லத் தான் முடிந்ததே அன்றி,வேறு வழி இருக்கவில்லை இங்கிருப்பவர்களுக்கு.
ஆனால் என்னவோ காளிதாசனுக்கு அங்கு செல்ல வேண்டும் என மனம் உந்திக் கொண்டே இருந்தது. மருத்துவம் படிக்கும் போதே இப்படி ஒரு முடிவில் தான் இருந்தான். ஆறு மாதம் அங்கு சென்று மருத்துவ தேவை உள்ளவர்களுக்கு இலவசமாய் மருத்துவ சேவை செய்யலாம் எனும் எண்ணம். ஏற்கனவே அங்கிருந்து இங்கு அகதியாய் வந்தவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் மருத்துவ கேம்ப் சென்று உதவி செய்திருக்கிறான்.
அவன் மனம் மற்றும் ஆன்மாவுக்கான தேடல் இது! அதை நடை முறைப்படுத்துவது போலவே இவர்களது தலைமை மருத்துவரும் ஏற்பாடு செய்திருந்தார்.
இளம் மருத்துவர்களை கொண்ட குழு இங்கிருந்து இலங்கையின் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று அங்கு சேவை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டிருக்க, முதலில் அரசாங்கத்திடமிருந்து இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால் தனியாராய் செல்வதாக இருந்து அதன் பின் தான் அரசாங்கத்திடமிருந்து அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
“ரொம்பவே போராடி கவர்மெண்ட் கிட்ட இருந்து பெர்மிஸன் வாங்கிருக்காரு எங்க சீப் டாக்டர் தயாளன்”என்றவன்,
“இந்த போர் பிரச்சனை ஒரு பக்கம்னா, ரெண்டு வருசத்துக்கு முன்ன வந்த சுனாமியாலயும் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க நானா! ஒரு வருசத்துக்கு மேலாகியும் அங்க நிலைமை இன்னும் சரியாகல.ஒரு டாக்டரா என்னோட ஆத்ம திருப்திக்கு இந்த சேவை”என்றான்.
“சொல்றது புரியாம இல்ல கெளப்பா! ஆனாலும் எனக்கு முழு மனசா போயிட்டுவான்னு சொல்ல முடியலையே” என வருத்தம் கொண்டார் சுமித்ரா.
அங்கு சென்று மகனின் உயிருக்கு எதுவுமானால் எனும் பயம் அவருக்கு. அப்படி நினைவெழுவதைக் கூட விரும்பவில்லை சுமித்ரா.
“அர்த்தமாயிந்தி ம்மா!” என அவரின் கைகளை கண்களில் ஒற்றிக் கொண்டவன்,
“மண்ணு தான் வேறே தவிர, மனுசனும்,உசுரும் ஒன்னு தானம்மா?”என்ற காளிதாசன் பேச்சில் பெற்றவர்கள் கண்ணில் மெல்லிய நீர்ப் படலம்.
விஜயன் அமோதிப்பதாய் தலையசைத்தவர் மனைவியைப் பார்க்க கண்ணில் நீரைத் தேக்கி முகம் தெளியாதவராய் இருந்தார் அவர்.
மகனுக்கு கண்ணசைவில் மனைவியை காட்டினார் விஜயன்.
புரிந்து கொண்ட கௌதம்,
“எங்க பாதுகாப்புக்கு எந்தப் பிரச்சனையும் இல்லம்மா! டாக்டர் தயா அதுக்கான எல்லா ஏற்பாடுமே செஞ்சிருக்காரு”என எவ்வளோ சொல்லிப் பார்த்தும் தயங்கியே இருந்தார் சுமித்ரா.
“நான் வேணா கால் பண்ணி தரட்டுமா? டாக்டர் கிட்ட கேக்கறீங்களா?” என்றவனிடம் இல்லையென தலையசைத்தவர் எப்படியாவது மகனை இங்கேயே இருக்க வைக்க எண்ணி இறுதியான அஸ்திரமாய்,
“நானாவது பரவால்ல, நீ இல்லாதது கஷ்டமா இருந்தாலும் சமாளிச்சுடுவேன் பா.ஆனா நம்ம சின்னு (சின்மயி) இருந்துடுவாளா?” எனக் கேட்க, நெடிய மூச்சொன்று அவனிடமிருந்து.
உண்மை தானே! அவனிங்கில்லை என்றால் தாயை விட தங்கை தான் தவித்துப் போவாள்,குழந்தை. அவனுக்குமே தங்கையை விட்டு இருப்பது சிரமமே!
பிறந்ததில் இருந்து தந்தையோடு அவள் இருந்த காலம் மிக சொற்பம். விஜயன் இராணுவத்தில் இருந்ததால், இவன் தான் தாயுமானவனாய் சின்மயியை பார்த்துக் கொண்டவன்.
தன்னால் முயன்று தங்கையை நினைக்காமல்,அன்னையையும், தங்கையையும் தம்பியிடம் பொறுப்புக் கொடுத்து விட்டுத் தான் இந்தப் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் கௌதம்.
இப்போது தாய் சொல்லவும் மனது பாரமாகியது. வெளியில் கேட்ட குரலில் அடுத்த நொடியே புன்னகையில் விரிந்தது, இவன் அதரங்கள்.
“அண்ணா”என சின்மயின் மழலை குரலோடு அவள் முன்னே வர,
“என்ன இங்க எங்கள விட்டுட்டு கூட்டமா பிளான் போகுது?”என்ற ப்ரசாத், தங்கையின் தோள்கள் இரண்டிலும் கரம் பதித்தபடி அவளைத் தள்ளிக் கொண்டு பின்னே வந்தான்.
முகம் முழுக்க விரிந்த சிரிப்புடன் காளிதாசனைப் பார்த்த சின்மயி கௌரவின் கைகளை உதறி விட்டு அண்ணன், அன்னைக்கிடையில் அமர்ந்து தமையனின் இடது கரத்தைப் பற்றிக் கொள்ள,வலது கரத்தால் தங்கையை தோளணைத்துக் கொண்டான் கௌதம் காளிதாசன்.
“ண்ணா, எங்க போகப்போத நீ?” என்றாள் அவன் விரல்களில் விளையாடியபடி. அவள் பேச்சு சரளரமாக இருந்தாலும் வார்த்தைக் கோர்வைகள் மழலைப் பேச்சை ஒத்திருக்கும்.
அதிலும்,சின்மயியை யாரும் பார்த்தால் பதினைந்து வயது நிரம்பிய மங்கையென அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.
டவுன் சின்றோமால்(down syndrome)பாதிக்கப்பட்ட குழந்தை அவள். வட்ட முகம்,சின்ன கண்கள்,குட்டி மூக்கு என டவுன் சின்றோம் குழந்தைகளுக்கே உரிய தோற்றம்.
ஆனால் அந்த வயதுக்கே உரிய பக்குவம் அவளிடம் இருந்தது. மகளை சாதாரண பிள்ளைகள் போலவே வளர்த்திருந்தார் சுமித்ரா.
மகளுக்காக தன் ஆசிரியர் வேலையை அர்ப்பணித்து அவளை முழுதாக பொறுப்பெடுத்துக் கொண்டார்.
அவர் வளர்ப்பில் குறையின்றியவளாக தன் வேலைகளை தானே செய்து கொள்வாள் சின்மயி.வீட்டுக்கு வேலைகளும் தெரியும். போன வருடம் பூப்படைந்தவளுக்கு அது பற்றி விளக்கம் எல்லாம் சொல்லிக் கொடுத்து அவளே அதைத் சாமாளிக்கவும் கற்றுக் கொடுத்திருந்தார் சுமி.
எந்த குழந்தையாக இருந்தாலும் அன்னை வளர்ப்பினில் தான் என்பது எத்தனை பெரிய உண்மை!
தங்கையின் தலையை பரிவாய் வருடி விட்டபடி தாயின் முகத்தைப் பார்த்திருந்தான் கௌதம்.
இவர்கள் அமைதியில் விடயம் என்னவென புரிந்து கொண்ட ப்ரசாத்,
“நீ போய்ட்டு வாண்ணா! நம்ம அம்மாவும்,சின்னுவும் என் பொறுப்பு” என்றான் பெரியவனாக.
“நீயே சின்னவன் கௌரவ்! நீ எங்களைப் பார்த்துப்பியா டா? உனக்கு என்ன தெரியும்!”என மகனை முறைத்தார் சுமித்ரா.
“ஐ’ம் டுவெண்ட்டி ம்மா!நாக்கு வள்ளு தெலுசு!என்னால உங்களைப் பார்த்துக்க முடியும்”என அழுத்தமாய்க் கூறியவன்,
“ஒரு ஆறு மாசம் தானே. அண்ணா அங்க போய் வந்தா என்ன? அவனும் இஷ்டப்படறான்ல? நீங்க முழு மனசா ஒத்துக்கலைன்னா அவனால போக முடியுமா?”என்றவன், தங்கையை அழைத்துக் கொண்டு, இவர்கள் பேசட்டுமென வெளி நடப்பு செய்து விட்டான்.
போகும் போது,
“கௌதம் அண்ணா இல்லைன்னா எங்கூட இருப்பியா சின்னு?”என தங்கையிடம் கெளரவ் ப்ரசாத் கேட்க, அவளோ இல்லையென்றவள், பின் ஆம் என்றாள்.
“நுவ்வு மஞ்சி (நல்ல) பிள்ளாடா”என தங்கையைக் கொஞ்சிக் கொண்டவன்,
சுமித்ராவை திரும்பிப் பார்த்து, “அம்மா இஸ் ஒன்லி செடு!(bad)” எனவும் அவனுடன் சேர்ந்து சிரித்த படி சென்றாள் சின்மயி.
அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் முகத்தில் இளக்கம்.
அதே முறுவலுடன் தன்னைப் ஏறிட்ட மனைவியிடம் கண்களால் கெஞ்சியபடி மகனைக் காட்டினார் விஜயன்.
கணவரிடம் நொடித்தக் கொண்ட சுமித்ரா,
“பத்திரமா போயிட்டு வா கௌப்பா” என்றார், மகன் கரத்தை ஒரு முறை அழுத்தி விடுவித்து.
“ம்மா?!!”என திகைத்தவன், அவரை அணைத்துக் கொண்டான். கண்கள் கலங்கும் போல் இருந்தது கௌதமிற்கு.
“டேய், இதென்ன கண்ல தண்ணி. அப்பறம் போக வேணான்னு சொல்லிடுவேன் பார்த்துக்கோ”என சிரிப்புடன் மிரட்டியவரிடம்,
“தேங்க்ஸ் கைஸ்!”என பெற்றவர்களின் கரத்தை பற்றிக் கொண்டு,விழி தாண்ட முயற்சித்த உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டுவரப் போராடித் தோற்றவனாக,
“மனிதம் மட்டுமே பேசும் மனுஷனா இருக்கறத விட, மனிதம் தொலையாத மனுஷனா இருக்க விரும்பறேன்ம்மா”என்று உணர்ச்சி வசப்பட்டவனின் மனிதம் ஒரு மனிதியின் கீழ் மண்டியிட இருப்பது மானுடத்தின் வேடிக்கையே!
error: Content is protected !!