Skip to content
Post Views: 16,290
இலக்கணம் பெண்மையே!…
அத்தியாயம் 29
தேவி பொட்டிக் என்ற பெயர் பலகையை மீண்டும் ஒரு முறை தொட்டு பார்த்து கொண்டாள் தேவி. உடல் எல்லாம் சிலிர்த்து போனது. அவள் கனவில் கூட நினைக்காத நிகழ்வு.
சாதாரண குடும்ப பின்னணி கொண்ட பெண் தான் தேவி என்ற தெய்வானை. பத்தாவது முடிக்க, வீட்டில் வைத்திருந்து தையல் பழகி, பதினெட்டு தொடங்க கட்டி கொடுத்து விட்டார்கள். வாழ்வில் பெரியதான யோசனைகள் எல்லாம் இல்லை. குடும்பம், கணவன், பிள்ளைகள் என்ற சாதாரண எதிர்பார்ப்புகளுடன் கல்யாண வாழ்க்கைய தொடங்கினாள்.
Advertisement
வசதியான புகுந்த வீடு, ஒரே பையன், முசுடாக மாமியார் இருந்தாலும் தேவி குணத்திற்கு எல்லோரையும் இழுத்து கட்டி கொண்டாள். குழந்தை இல்லை என்ற நிலை வரும் வரை வாழ்க்கை சொர்க்கம் தான். எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் தேவிக்கு கிடையாது. எப்போதும் கொட்டி கொண்டே இருக்கும் மாமியார் தான், அடிக்கடி உரசி கொள்ளும் பெரிய நாத்தனார், சில நேரம் கிறுக்கு தனம் பண்ணும் கணவன் என்று எல்லோரையும் சரிகட்டி சந்தோசமாக தான் வாழ்ந்தாள்.
மாமியார் மெச்சி கொள்ளும் மருமகள் தான். குழந்தையின்மை மட்டும் தான் தேவி வாழ்க்கையை புரட்டி போட்டது. அதுவரை வாழ்க்கையில் குறையோ, நிறையோ சிரித்த முகமாக அரவணைக்கும் பெண், அதன்பின் ஆகாதவளாகி போனாள். பாலுக்கு உறை மோர் கூட இவள் கையால் வாங்க தயங்கி ஒதுக்கி வைத்தது ஒரு கூட்டம்.
ஒற்றை ஆண்வாரிசான குமரனுக்கு குழந்தை இல்லை என்பது பெரிதாக தாக்க. மருமகளுக்கான கடமை என்று சொல்லியே, தேவியின் அனுசரித்து குணமும், கிராமத்து வாடையும் சேர்ந்து சித்ரா குமரனின் இரண்டாம் மனைவியாக உள் நுழைந்து கொண்டாள்.
Advertisement
தன் தங்கை குணம் மாறுபட்டு போனது என்று தேவி அறிந்தாலும், குடும்பம் உடைய கூடாது, பிரச்சனை வீதி வர கூடாது என்று தேவியின் அமைதி, பொறுமை மட்டுமே குடும்பத்தை இழுத்து சென்றது. தேவியும் சக்களத்தியாக போட்டி போட்டு நின்றாள் என்றால் நிச்சயம் இவ்வளவு நாள் குடும்ப வண்டி ஓடி இருக்காது. அது எல்லோருக்கும் தெரியும் என்பதால், தேவிக்கு ஒரு மரியாதை இருக்கும். அதுவே சித்ராக்கு தான் இரண்டாவதோ என்ற எண்ணத்தை கொடுத்தது. அத்தோடு பெரிய விசயம், சித்ராக்கு முன்பே தேவியின் எட்டு வருட வாழ்க்கை குமரன் மனதில் அவளுக்கான தனிப்பட்ட இடத்தை கொடுத்து இருந்தது.
Advertisement
மூன்று பிள்ளைகள் பெத்து, ஊர், உறவுகள் முன் குமரன் மனைவியாக வளம் வந்தாலும், குமரனின் மனதில் மணவிக்கான இடம் தேவிக்கு மட்டும் தான் என்பதில் சித்ரா சரிந்து போனாள். ஊர், உலகில் முக்கியத்துவம் பெற்று, முன் நின்று என்ன பயன். கணவன் மனதில் தான் முன் இல்லையே என்ற எண்ணம் தான் தேவியோடு ஒன்ற முடியாமல் ஒதுங்க செய்தது.
வெளியில் நின்று பார்க்கும் யாருக்கும் தேவியே பரிதாபாத்துக்கு உரியவளாக தெரிவாள். சித்ரா வாழ்க்கையை வச படுத்தியவளாக தோன்றும். ஒரு வகையில் உண்மையும் கூட… பொது சபையில் மனைவியாக நிற்பது சித்ரா தான். மாமனார், மாமியார் உடன் ஒரு ஆளாக தேவி நிற்பாளே தவிர்த்து கணவனோடு கை கோர்த்து நிற்க முடியாது.
சித்ராக்கு பொதுவில் கிடைக்கும் மரியாதை, வீட்டில் இருக்காது. நீ இரண்டாவது, தேவி தான் முதல், அவள் வாழ்க்கையை நீ வாழ்கிறாய் என்ற வார்த்தைகள் தான் முன் நிற்கும். என்ன தான் பாண்டியம்மாள் குத்தி கொண்டு இருந்தாலும், அவருக்கு எதிலும் தேவியே நிற்க வேண்டும். அடுப்படியில் தேவியை தாண்டி யார் புழங்கினாலும் பிடிக்காது. குமரனுக்கு வீட்டிற்குள் நுழையும் போதே கண்கள் தேவியை தான் தேடும்.
Advertisement
இதெல்லாமே சித்ராவை காயப்படுத்த, அக்கா க்காக பிள்ளையை சுமக்கிறேன் என்றவள் அக்காவிடம் அண்ட விடாமல் வைத்து விட்டாள்.
நாளை கடை திறப்பு. பெரியதாக விமர்சையாக செய்யாமல் அவர்களுக்குள் செய்து கொண்டார்கள். யாருக்கும் சொல்லவும் இல்லை. விவகாரத்திற்கு எழுதி கொடுத்தாச்சு, இன்னும் வெளி வரவில்லை. அது வரும் போது நிச்சயம் பிரளயம் வரும். கண்டிப்பாக குமரன் விட மாட்டான். ஆனால், விவாகரத்து எளிதாக கிடைத்து விடும். அவனின் இரண்டு கல்யாணமே போதும் விவாகரத்து கிடைக்க…
தேவியின் கடை சிறியது தான். இரண்டு பெண்களோடு தேவி மட்டுமே. விசாலாட்சி பெயரே இருக்கட்டும் என்று தான் தேவி சொன்னது. ஆனால், சாலா ஒத்து கொள்ள வில்லை. சின்னதே ஆனாலும் தேவி தனியாக தெரிய வேண்டும் என்று நினைத்தாள்.
தேவிக்கு என்று ஒரு குட்டி டேபிள், சேர் போட பட்டது. தேவி தன்னில் கொஞ்சம் மாற்றம் செய்தாள். அவளின் அடர்ந்த கூந்தலை நேர்த்தியாக பின்னி, தளர பூ வைத்து, காதோடு ஒட்டிய தொங்காத பெரிய தோடு, கழுத்தில் தாலி கொடி அல்லாமல் வேற கனமான ஒற்றை சங்கிலி என்று பாந்தமாக இருந்தாள்.
“முதலாளி தோரணை தான்…” சாலா கூட கிண்டல் அடித்தாள்.
கடை திறந்து தனக்கென இருக்கும் சேரில் அமர்ந்து உடன் நெஞ்சம் துள்ளியது. தான இதை சாதித்தது, தன் கடையா இது, தனக்கு மட்டும் உரியது…
காய்கறி வாங்கி மீதி ஐம்பது ரூபாய் மிச்சம் இருக்கு அத்தை என்று கணக்கு சொல்லி கொண்டிருந்தவளா கடை முதலாளி.
தன் பெயரை மெல்ல ரசித்து கொண்டாள். தனக்கான அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது. அதுவும் நாப்பத்தி ஐந்து வயதில்…
தேவி சாய்ந்து கண் மூடி கொள்ள, கோடாக நீர் வடிந்தது. அது ஒதுக்கப்பட்ட வலி…
தனக்காக தான் தங்கை வந்தாள் என்ற எண்ணத்தில் தேவி முழுதாக விட்டு கொடுத்து தான் போவாள். சித்ரா மூன்று பிள்ளைகள் வளரும் வரை வேறுபாடு இருந்தாலும், பெரிதாக காட்டி கொண்டதில்லை. ஆனால், அடுத்தடுத்து?…
அன்று மூத்த மகளை பள்ளியில் சேர்க்க என்று வெளியில் சென்று இருந்த குமரனும், சித்ராவும் போனவர்கள், அதே வேகத்தில் திரும்பி வர,
“ என்னாலே? என்னாச்சு…” பாண்டியம்மாள் கேட்டார்.
“அது வந்து ம்மா…” தயங்கி தேவி முகம் பார்த்தான் குமரன். சித்ரா எப்பவும் போல அமைதியாக நின்று இருந்தாள்.
“என்ன சங்கதி மகனே?…” அழுத்தம் கூட்டி தாய் கேட்க, புரியாமல் பார்த்தாள் தேவி.
“அது பிள்ளைக்கு ஸ்கூல் சேர்க்க, சித்ரா பேர் குடுக்கணும்…”
“ பெத்தவ அவ தான். அவ பேரு தான குடுக்கணும்…”
“சரி தான்ம்மா. அப்ப ரேசன் கார்டு, ஆதர் கார்டு வேற எதுல எல்லாம் தேவி பேரு இருக்கோ அதுல எல்லாம் தேவி பேர எடுத்துட்டு சித்ரா பேர சேர்க்கணும்…” பட்டென்று சொல்லி விட,
பாண்டியம்மாள் மருமகள் முகம் தான் பார்த்தார். தேவி முயன்று தன்னை கட்டு படுத்தி கொண்டாள். இவர்கள் பார்க்க அழுது விட கூடாது.
“சரி தான் மகனே. நீ ரேசன் கார்டுல தேவி பேர எங்க அட்டை கூட சேர்த்து வச்சுட்டு. உன் குடும்பத்துக்கு தனி அட்டை போட்டுக்க…” எளிதாக பாண்டியம்மாள் சொல்லி விட்டார்.
அதை கடக்க முடியாமல் நின்றது தேவி தான். எட்டு வருடம் கொஞ்ச நஞ்ச மல்ல, பெத்த தகப்பன் பெயரை எடுத்து விட்டு தெய்வானை திருக்குமரன் என்று ஆசையாக மாற்றி கொண்டாள். மற்றவர்களுக்கு பெரிய விசயமாக தெரியவில்லை. தேவிக்கு மட்டும் வலித்தது. வெளியில் சொல்லவும் முடியாது. பிள்ளையை பள்ளியில் சேர்க்க பெத்தவர்கள் ஆதாரத்தை தானே கேட்கிறார்கள்.
அன்று முதல் நிறைய மாற்றம் தான். பொதுவில் மட்டும் சித்ரா நிற்க வில்லை. மற்றவர்கள் மனதிலும் குமரன் மனைவியாக சித்ரா தான் நிலை பெற்றாள். கல்யாணம், விசேஷம், வளைகாப்பு எதுவென்றாலும் வீட்டில் தேவி இருந்தாலும்,
“வீட்டுல யாரும் இல்லையா தேவி. பத்திரிக்கை கொடுக்கணும், சித்ரா கூட இல்லையா?…” இப்படி தான் கேள்வி வரும்.
மெதுவாக அந்த பத்திரிக்கை எடுத்து பார்க்க, திரு. திருக்குமரன் – சித்ரா என்று தான் இருக்கும். கோவில் நன்கொடை குடுக்கும் போதும், கணவன்,மனைவி பிள்ளைகள் என்ற இடத்தில் தேவி பெயர் இடம் பெறாது.
இதை ஒரு குற்றமாக வெளியில் சொல்ல கூடாது. உனக்காக தான் உன் தங்கச்சி வந்தா, வேற ஒருத்தியா இருந்தா உன்னை வீட்டை விட்டே துரத்தி விட்டு இருப்பா, மத்தவங்க யாரும் உன் கிட்ட பிள்ளையை தர மாட்டாங்க, கூட பொறந்தவ தூக்க செய்ய விடுறா, அவளை அனுசரிச்சு போ, பிள்ளை இல்லாத உனக்கு கடைசி காலத்துல யார் கஞ்சி ஊத்துவா?… பேச்சு எப்படி இருக்க, தேவி வலி அவளோடு தான்.
குடும்பமாக பரிவட்டம் கட்டி, பழம், தேங்காய் மாற்றும் பொழுது தேவி தனியே ஒதுங்கி தான் நிற்பாள். உண்மையில் சித்ரா பிள்ளையை கொடுத்தாள். தூக்க, வளர்க்க, பார்க்க என்று எல்லாம் தேவி தான். வேலைகளை உரிமையாக செய்பவளால் கண்டிப்பாய் உரிமையாக காட்ட முடியாது. தேவி பெரியம்மா என்று தான் பிள்ளைகள் வளர்ந்தார்கள். தாய், தந்தையாக நின்றது குமரன், சித்ரா தான்.
பாண்டியம்மாள் கூட, “பாரு தேவி, பத்து மாசம் சுமந்து வலி தாங்கி பிள்ளை பெத்தவ. வளர்க்க கொடுக்கலாம், உனக்கே உரிமையா தூக்கி கொடுக்க முடியுமா… நீ தான் புரிஞ்சு நடந்துக்க…”
உண்மைதான். பிள்ளைப்பேறு லேசுபட்ட காரியம் அல்ல. மூன்றில் ஒன்றை தனக்கு தருவாள் என்று நினைப்பதும் நியாயமில்லை. தன் வலி, தன் விதி, தன்னோடு தான்.
பொதுவாக சொல்லி விடுவார்கள். இரு தர மணம் எல்லா நம் வழக்கத்தில் உள்ளது தானே. அந்த காலத்தில் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள், இன்றும் பல இடங்களில் நடக்கிறது. வேற்றுமை எல்லாம் இல்லை, சமமாக தான் நடத்த படுவார்கள் என்று. ஆனால், அவரவர் வலி வெளி நின்று பார்க்கும் பலருக்கு தெரியாது. நாட்டில் சகஜமாக நடக்கிறது என்பதற்காக தப்பை, தப்பு என்று வாதாடத வரை நியாயங்கள் நேர்படாது.
இன்று தான் தேவி இயல்பாக இருந்தது. தனக்கான அங்கீகாரம் கிடைத்த நாள். நிச்சயம் சாலாக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். எந்த நாத்தனார், அண்ணன் மனைவிக்கு இவ்வளவு செய்வார்கள். நாத்தனார், மதினி உறவே எதிர்மறையானது. அதில் தங்களின் ஒற்றுமை நேர்மறையாக நின்றது.
ஒரு நல்ல வழியை காட்டி சாலா ஒதுங்கி நிக்க, தேவி யாரும் எதிர்பாராத ஒன்றை செய்தாள். அவள் நேர போய் நின்றது ஒரு மாணவர் விடுதி தான்.
“யாரை பார்க்கணும்?…” வார்டன் கேட்க.
“பிரபாகரன், செகண்ட் இயர்.”
அடுத்த சில நொடியில் அத்தம்மா என்று பிரபா வர, பார்த்த தேவிக்கு கண் கலங்கியது. சாலா அளவுக்கு மீனா ஒண்ட மாட்டாள். என் பிறந்து வீடு, நீ நேற்று வந்தவள் என்று உரிமை கொடி தூக்குபவள் தான். ஆனால், அவள் பிள்ளைகள் உடன் ஒண்ட விடுவாள்.
எதோ ஒரு வைராக்கியம் தேவி மனசில், அதற்கு யாரும் கேட்டு போக நினைக்க வில்லை. அப்படி பார்த்தால் பிள்ளை வரம் கொடுக்காத கடவுளையே கையெடுத்து வணங்கி கொண்டு தான் இருக்கிறாள்.
“வா, போலாம் பிரபா…”
“லீவுக்கா அத்தாம்மா?…”
“இல்லை, நிரந்தரமா…”
பிரபாக்கு தயக்கம் எல்லாம் ஒன்னுமில்லை. அத்தை தனியாக இருக்கிறார் என்று தெரியும். அவரோடு இருப்பதில் சந்தோசம் தான். அவர் தானே இவர்களை வளர்த்தது. சாலா சித்தி தன் வீட்டுக்கு அழைத்தாலும், பிரபாக்கு செல்ல விருப்பமில்லை.
அஜய், அஞ்சு அவர்கள் வாழ்க்கை முறையே வேறு. மேல்தட்டு முறை தான் இருக்கும். அத்தோடு அங்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். விருந்தாளியாக போவது வேறு, அடைக்கலம் தேடி போவது வேறு அல்லவா.
தேவி அத்தமாவிடம் அந்த பயம் இல்லை. அஜய் வருசத்தில் ஒரு நாள் தான் அம்மாச்சி வீடு வருவான். ஆனால், அருண், பிரபா எல்லாம் தடுக்கி விழுந்தால் கூட அங்கு தான்.
தேவி, மணிமாறனிற்கு அழைத்து வர சொல்லி விட்டாள். விசயம் கேள்வி பட்ட மணிமாறனுக்கும் அதிர்ச்சி தான்.
“ஏன் அண்ணா, உம் பிள்ளையை உன் தங்கச்சிக்கு தர மாட்டியா?…” பதில் தெரிந்தே கேட்டாள் தேவி.
“ஏய் கிருக்குபெய பிள்ளை. உங்க அண்ணனை நினைச்சது அம்புட்டு தானா. என்ன இருந்தாலும் பெத்தவ மாதிரி பாக்க முடியாம தான் ஹாஸ்டல போட்டேன். மூணு வேளை சாப்பாடு கிடைக்கும்ன்னு… ஆயிரம் பார்த்தாலும் அம்மா மாதிரி இல்லை. நீ தான தூக்கி வளத்த, உனகில்லாததா எடுத்துக்க…” சாதரணமாக மணிமாறன் சொல்லி விட, தேவிக்கு கண்ணீர் நிரம்பி விட்டது.
ஒரு உறுத்தல் இருந்தது, பெத்தவர்கள் பிள்ளையை தருவார்களா என்று… சாமி வரம் கொடுத்தாச்சு. தேவி கையெடுத்து வணங்க, பிடித்து கொண்டார் மணிமாறன்.
“மனசு நொந்து சாபம் விடாம, குடும்பத்தை கட்டி பிட்ட. நாங்க தான் உன்னை கையெடுத்து கும்பிடனும்…”
விசாலாட்சிக்கு வார்த்தையே வரவில்லை. தேவி கையை பிடித்து கதறி விட்டாள்.
சாலா என்ன தான் ஒட்டினாலும், சித்தி என்றதோடு பிள்ளைகள் ஒட்ட வில்லை. தேவி அவள் வாழ்வை பார்க்காமல், வேற குழந்தையை கூட தத்து எடுக்காமல், நாத்தனார் பிள்ளைகளை அரவணைக்கும் மனசு யாருக்கு வரும்.
நாப்பாத்தி ஐந்து வயதில், புருசனே இல்லை எனும் போது அவனோட தங்கை மகனை அரவணைத்து, அவனுக்காக ஓடும் குணம் யாருக்கு வரும். மணிமாறன், விசாலாட்சி பூரித்து போனார்கள்.
நிறைய கஷ்டம் பார்த்துட்டேன். இனிமேலாவது எனக்காக நான் வாழணும் என்று சொல்வது போய், தாயில்லா பிள்ளைகளுக்கு தாயாகிறேன் என்ற தேவியின் மனசு ஆச்சர்ய படுத்தியது.
error: Content is protected !!