Skip to content
Post Views: 1,396
மைவிழி – 3(a)
களைப்பாய் வீட்டிற்கு வந்தாள் வேதவி. முகம் எரிச்சலை அப்பட்டமாய் காட்ட கையிலிருந்த காயம் வேறு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாய்.போடப்பட்ட பேண்டஜையும் தாண்டி காயம் எரிந்தது.
Advertisement
“ஸ்ஸ்!”என வலியோடு முனகிக் கொண்டவள் வாய்க்குள் யமுனாவிற்கு திட்டிக் கொண்டாள், இதோடு ஐந்தாவது முறையாக.
இன்றைய காலை வகுப்பை முடித்து விட்டு வழமை போல் யமுனாவுடன் தான் புறப்பட்டிருந்தாள் இவள். ஆனால் என்ன?வழமையாய் ஸ்கூட்டியின் பின் உட்காருபவள் வேதவியின் பேச்சை மீறி தானே ஓட்டுவேன் என அடம்பிடித்ததில் வந்த வினையே இது!
Advertisement
Advertisement
வேதவி சொன்னதையும் கேட்காமல் அதிவேகமாய் வண்டியை ஒட்டி எதிரில் வந்த மோட்டார் வாகனத்தில் மோதப் போய் நொடியில் ஒடித்து திருப்பி தப்பித்தவர்கள் விழுந்து வாரியதெல்லாம் தனி கதையாகவே எழுதலாம்.
அதிலும் யமுனாவிற்கு பெரிதாய் அடி எதுவும் இல்லை. முழங்கை முழுவதும் உராய்ந்து தோல் வழண்டு இரத்தம் கசிய, இடுப்பிலும், காலிலும் நல்ல வலி மற்றவளுக்கு.
Advertisement
இவர்கள் பக்கம் தான் பிழை என்பதால் எதிரில் வந்தவனையும் பேச முடியாத நிலை. நண்பியை மனதுக்குள் வைதபடி பல்லை நறநறப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை வேதவிக்கு.
அப்போது யமுனாவை திட்ட ஆரம்பித்தவள் இதோ வீடு வந்தும் கடுகடுப்பதை விடவில்லை. இதில் வேறு ஹாஸ்பிட்டலில் முகம், பெயரறியா ஒருவனுக்கு உதவப் போய் வேதவியிடமிருந்து இன்னும் வாங்கிக் கொண்டாள் யமுனா.
“இவ கூட இனி எந்த சங்காத்தமும் வெச்சிக்கப்படாது ப்பா!” சத்தமாகவே சொல்லிக் கொண்ட வேதவி லேசாக நொண்டியபடி அறை நோக்கி செல்ல,
“ம்ம்மா!!”எனும் கூச்சலுடன் சங்கவி ஓடி வர அவளை அடிக்க துரத்தியபடி தமிழ் செல்வன்.
இருவரும் இவளை சுற்றி ஓட வேதவிக்கு இறங்கிக் கொண்டிருந்த எரிச்சல் ஏறத் தொடங்கியது.
“வேதா.. இவன்ட்டருந்து என்னைக் காப்பாத்து!!” எனும் சங்கவியின் அலறலும்,
“அடியே சங்கு மவளே!இன்னிக்கி நீ செத்தடி!” எனும் செல்வாவின் கத்தலும், வேதவியின் பொறுமையின் எல்லையை சோதிக்க,
“கொஞ்சம் சும்மா இருக்கீங்களா ரெண்டு பேரும்!”என அதட்டினாள் பெண்.
அதில் சங்கவியின் ஓட்டம் தடைப்பட, அக்காவின் அதட்டலை கண்டு கொள்ளாதவன் இது தான் சந்தர்ப்பம் என சங்கவியின் மேல் பாய்ந்திருந்தான்.
தமக்கை எனவும் பாராமல் கவியை அடி வெளுக்கத் தொடங்கியிருந்தான் தமிழ்ச் செல்வன்.
“டேய் அடிக்காதடா எருமை!”
“எம்மா எம் முதுகு!”
“அடியே பூதவி! வாயப் பார்க்காம, இந்த பரதேசிட்டருந்து என்னைக் காப்பாத்து டி இஇஇஇஇ!”
விழும் ஒவ்வரு அடிக்கும் சங்கவியிடமிருந்து அடி குரலின் அலறல்கள் வெளி வர, எரிச்சல் மண்டியிட இருவரின் சண்டையையும் சற்று நேரம் பார்த்தபடி நின்றிருந்தவள், அடித்துக் கொண்டிருந்த தமிழை இழுத்து அவன் பின் மண்டையில் பொளீரென ஒரு போடை போட்டாள்.
“ஆஆ!”என்றபடி பின் மண்டையை தடவிக் கொண்டவன், வேதவியை முறைக்க,
“என்னடா முறைக்கற!” என அவனை அதட்டியவள்,
வலித்த முதுகை தேய்த்து விட்ட படி எழுந்து நின்ற கவிக்கும் மண்டையில் ஒரு குட்டு வைத்தாள்,
“எப்போ பார்த்தாலும் என்னடி உங்க ரெண்டு பேருக்கும் சண்டை வேண்டி கெடக்கு” எனும் திட்டலோடு.
“அவன் தான் மொதல்ல அடிச்சான் வேதா” – கவி
“இல்ல அவ தான்!”
“நீதானடா அடிச்ச?”
“நீயேண்டி எம்மேல தண்ணி தெளிச்ச?” மீண்டும் அடுத்த போர் தொடங்க,
“நானே செம்ம எரிச்சல்ல இருக்கேன். எங்கிட்ட ரெண்டு பேரும் வாங்கிக் கட்டிக்காதீங்க” என்ற வேதவியின் மிரட்டல் வேலை செய்ததில் இருவரும் கப் சிப்!
அந்நேரம் இவர்களின் அலப்பறையை கேட்டபடி உள்ளே நுழைந்தார் சரஸ்வதி.
“விட்டுட்டு போன கேப்ல ஆரம்பிச்சிட்டாய்ங்க!”என தலையில் அடித்துக் கொண்டார்.
ஏற்கனவே போன பயணம் ஏமாற்றத்தைக் கொடுத்ததில் கவலையில் இருந்தவருக்கு பிள்ளைகளின் சண்டையில் கோபம் எழ,
“எப்போ பார்த்தாலும் இந்த வீட்ல சண்டை தானா?” என சத்தம் போட்டார் சரஸ்வதி.
கவியும், தமிழும் திருட்டு முழியுடன் அமைதியாய் நிற்க, தாயைக் கவனித்து விட்டு தன் அறைக்குள் நுழைந்தாள் வேதவி.
வெளியில் இருவருக்கும் சரஸ்வதி ஏசிக் கொண்டிருப்பது இவள் அறையிலும் எதிரொலிக்க சலித்தபடி குளியலறை சென்று வந்தவள், உடை மாற்றி விட்டு படுத்துக் கொண்டாள். சாப்பிடச் செல்ல மனமிருக்கவில்லை.
சரஸ்வதி வெளியில் சென்று வந்திருப்பது தெரிந்தாலும் இவளுக்கு இருக்கும் தலைவலியில் அதைப் பற்றி கேட்கவும் நினைக்கவில்லை.
அன்னை சாப்பிட அழைப்பதாக சைந்தவி சொல்லிச் செல்ல, இவள் பசியில்லை என்று விட்டு கண் மூடிக் கொண்டாள்.
சரஸ்வதி மகள் அறைக்கு வந்தவர் கண் மூடி இருந்தவளை பார்த்து விட்டு, மாலையில் சந்திரா வீட்டில் நடந்ததை நினைத்துப் பொருமினார்.
‘எப்படி ஒரு ஏமாற்று வேலை!’
சந்திரா மீது ஆற்றாமையும் கோபமும் எழுந்தது.
நடந்தது இது தான்! கணவனும் மனைவியுமாக சந்திரா வீட்டிற்குச் சென்ற போது அவர்களை வரவேற்று உபசரித்தார் சந்திரா. ஒட்ட வைத்த சிரிப்புடன் இருந்தவர் முகத்தில் சிறு பதட்டம் இருப்பதை கவனித்துக் குறித்துக் கொண்டார் சத்யநாதன். சரஸ்வதிக்கு அதெல்லாம் கவனத்தில் இல்லாமல் போனது.
இவர்கள் சென்று ஐந்து நிமிடம் கடந்த பிறகு தான் அங்கு வந்து சேர்ந்தார் சந்திராவின் கணவன் மூர்த்தி. நாதனை பார்த்து ‘வாங்க’ என அழைத்ததுடன் நிறுத்திக் கொண்டார். அந்த அழைப்பில் மருந்துக்கும் விருப்பு இருக்கவில்லை.
‘என்ன இது இப்படி?’
சரஸ்வதிக்கு என்னவோ போலாக பதட்டமாய் நாதன் முகம் பார்த்தவர் கணவன் முகம் அதிருப்தியைக் காட்டி நிற்கவும், இவர் மனதுக்குள் பயம் பிடித்துக்கொண்டது.
மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு மூர்த்தியிடம் பேச்சை தொடங்கினார் நாதன்.
“நாம முன்னாடி பேசிக் கிட்டது தான். என் பொண்ணு பத்தி உங்க மனைவி சொல்லிருப்பாங்கன்னு நினைக்கிறேன்..” என்று நிறுத்த,
அமைதியாக “ம்ம்” என்ற மூர்த்தி சந்திராவை பார்த்து வைக்க, சந்திரா அவரை கண்களால் மிரட்டுவது போல் இருந்தது நாதனுக்கு.
“அவங்க தான் வந்து கேட்டதா சரஸ்வதி சொன்னா. எனக்கு சுத்தி வளைச்செல்லாம் பேசத் தெரியாதுங்க. இங்க வந்து பார்த்ததுல உங்களுக்கு இதுல விருப்பமில்லைன்னு தோணுது! என்ன சொல்லணுமோ சொல்லுங்க?” என நேரடியாகவே கேட்டுவைக்க திடுக்கிட்டு தான் போனார்கள் மூர்த்தி தம்பதியினர்.
“ஏங்க”என பதறிய சரஸ்வதியை நாதனின் பார்வை அடக்கி விட,
“இல்லையே.. அப்படியெல்லாம் ஒன்னுமில்லங்க!” உடனடியாக மறுத்தார் சந்திரா பதட்டமாய். மூர்த்தியிடம் அமைதி.
ஆனால் நாதன் விடுவதாய் இல்லை. மகளின் வாழ்க்கை அல்லவா!
“அப்போ ஏன் பதட்டமா இருக்கீங்க? உங்க பதட்டம் நீங்க எதயோ மறைக்கிறதை அப்பட்டமா காட்டுது. மூர்த்தி கிட்ட காலைல பேசும் போதும் இப்படி தான் பேசினார். சொல்லுங்க மூர்த்தி எதை மறைக்கறீங்க?” என்று அடுக்கடுக்காய் கேட்டவரின் குரலில் விசாரணை செய்யும் தோணியே. சட்டதரணி சத்யனாய் மாற, திணறித்தான் போனார்கள் இருவரும்.
சரஸ்வதிக்கோ ‘என்ன இவரு கல்யாணத்த பேச வந்த இடத்தில குறுக்கு விசாரணை நடத்தறாரு’ என்று நெஞ்சில் கை வைப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
“அவர் வேற ஏதோ பதட்டத்துல பேசிருப்பார் – ங்க. எங்க மகனுக்கு பொண்ணு பிடிச்சி போச்சு. எனக்கும் சம்மதம் தான்” சந்திரா இதை சொல்வதற்குள் வியர்த்து வழிந்திருந்தார்.
இந்த முறை மனைவியை கண்களால் எரித்தார் மூர்த்தி.
நாதன் தாடையைத் தடவிக் கொண்டவர் அதன் பிறகு அமைதியாய் இருக்க,
“நீங்க சாப்டுங்க. நாங்க இதோ வரோம்!” என்ற சந்திரா, மூர்த்தியை அழைத்துக் கொண்டு சமயலறைக்குள் நுழைந்து கொண்டார். மென் குரலில் இருவருக்கும் வாக்கு வாதம் நடப்பது கூடத்தில் இருந்தவர்களுக்கு சன்னமாய் கேட்க, சரஸ்வதியை தான் நிச்சலனமான ஒரு பார்வை பார்த்து வைத்தார் சத்யன்.
அவருக்குமே என்ன சொல்வதென தெரியவில்லை. அவர்களின் நடவடிக்கையில் சரஸ்வதிக்கும் அதிருப்தியே.
“கர்ணன் வேற பொண்ணை விரும்பறான்னு உனக்கு தெரிஞ்ச அப்பறமும் நீ இப்படி செய்றது சரியில்ல சந்திரா!” மூர்த்தி மனைவியைக் கடிந்தார்.
“அவன் கிட்ட சொல்ற படி சொன்னா அவன் அதெல்லாம் விட்ருவான் – ங்க!” சந்திரா பிடிவாதமாய் இருக்க,
“அவனே சொல்லிட்டான் அந்தப் பொண்ணைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு. நீ எதுக்கு இப்படி பிடிவாதம் பிடிக்கிற”
“அவன் தான் தெரியாம பேசறான்னா..”என சலித்துக் கொண்டவர்,
“எவ்ளோ பெரிய இடம் இவங்க.! அவங்களே நம்ம பையனை கேட்டு வந்துருக்காங்க.. விடவா சொல்றீங்க! கல்யாணம் பண்ணிக்கிட்டா சரியாகிடுவான்” என்றார் தீர்க்கமாய்.
முதலில் தன் மகன் வேறு பெண்ணை விரும்புவதை அறியாமல் தான் சரஸ்வதியிடம் பெண் கேட்பது போல் பேசிருந்தார் இவர். ஆனால் கர்ணனிடம் இது பற்றி சொல்லப் போய் அவன் காதலிப்பதாக சொன்னது சந்திராவுமே எதிர் பார்க்காத ஒன்று!
மகன் காதலிப்பதில் துளியும் விருப்பமில்லை இவருக்கு. அதிலும் நாதன் குடும்பம் ஈரோட்டிலே வசதியும்,பெயர் போன குடும்பமும் கூட! அதை விடுவதில் மனமில்லை சந்திராவுக்கு.
அவர் மனதில் பல கணக்குகள். மகனைக் கூட திருமணத்திற்கு கட்டாயப்படுத்தும் நோக்கத்தில் இருந்தார். மீறி சம்மதிக்காமல் போனால் மிரட்டக் கூட தயாராய் இருந்தார் அவர். காலையில் கணவனைக் கூட மிரட்டியிருந்தார்.
மூர்த்திக்கு மனைவியிடம் பேசி வேலைக்காகாது எனப் புரிய, விருட்டென வெளியேறியவர், நாதன் தம்பதியிடம் மன்னிப்பை வேண்டி விட்டு, மனைவின் எண்ணத்தை மறைத்தவராக,தனது மகன் வேறு பெண்ணை விரும்புதாக மட்டும் கூறி விட்டார். இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை சந்திரா.
சரஸ்வதியும் திடுக்கிட்டு எழ, நாதனிடம் அமைதியும், நிதானமும்.
சந்திரா மறுத்து பேச வந்ததை கேட்பதாய் இல்லை சரஸ்வதி. மூர்த்தி மறைத்தாலும் சந்திராவின் எண்ணத்தை நொடியில் ஊகித்திருந்தார் அவர்.
ஒரே பார்வை. அதில் கீழிறங்கிப் போயிருந்தார் சந்திரா. இப்படியும் மனிதர்களா? ‘சீ’ என்றாகிப் போனது அவருக்கு.
“ரொம்ப நன்றி-ங்க!” அதிருப்தியுடன் பொதுவாய்ச் சொல்லியவர்கள் மேற்கொண்டு பேசப் பிடிக்காது அங்கிருந்து கிளம்பி இருந்தார்கள்.
ஈரோடு வந்து சேரும் வரையிலும் நாதன் மனைவியிடம் எதுவும் பேசவில்லை. வீட்டில் இவரை இறக்கி விட்டதும் உள்ளே கூட வராமல் சென்றிருந்தார்.அவர் கோபமும் புரிந்தது தான்.. ஆனால் இப்படி நடக்குமென இவரும் என்ன கனவா கண்டார். மகளின் எதிர்காலம் அடுத்து என்ன என்ற பயமும், கவலையுமே அந்த தாய்க்கு.
“ம்மா என்ன அங்கேயே நின்னுட்டீங்க?” வேதவியின் குரலில் தான் தெளிந்தார் சரஸ்வதி.
சட்டென முக பாவனையை மாற்றிக் கொண்டவர்,
“நீயேன் சாப்பிடல வேதா?” எனக் கேட்டார்.
“பசிக்கல மா” என்றவளை அப்போது தான் ஊன்றி கவனித்தார்.அவள் கையில் மருந்திடப்பட்டிருப்பதை கண்டவர் என்னவென பதறி வினவ,
இன்று காலையில் நடந்தது தொடங்கி ஹாஸ்பிட்டலில் நடந்தது வரை கதையாகக் கூற ஆரம்பித்தவள் தான்,அடுத்த ஒரு வாரத்திற்கும் அதையே சொல்லிச் சொல்லி உடன் பிறப்புக்களை அலறவிட்டாள். இடைச் சொருகலாக யமுனாவிற்கு திட்டுக்களும் சேர, தனக்கு அடிக்கடி புதையேறி இருமல் வரக் காரணம் வேதவி தான் என அவள் அறியாது போனது கவலைக்குரிய விடயமே.
error: Content is protected !!