Skip to content
Post Views: 18,196
இலக்கணம் பெண்மையே!…
அத்தியாயம் 30
அஜய் பிரகாஷ்க்கு டெல்லி அகாடமியில் சிட் கிடைத்து விட்டது. சாலா பயங்கர பிஸி. இதில் பிரகாஷ் வேறு நொடிந்து போய் கிடக்க, எல்லாவற்றையும் தனியே சமாளிக்க வேண்டிய கட்டாயம். அவளுக்கு தெரிந்த வரை, டெல்லி எல்லாம் கை வராது. விவரம் ஒன்றும் தெரியவில்லை.
ஆனாலும் விசாலாட்சி, கணவன், கொழுந்தன் என்று யாரிடமும் உதவி கேட்க வில்லை. பிரகாஷ் கொஞ்சம் முன் வந்தான். தன்னுடன் வேலை பார்க்கும் ஆட்களை சொன்னான். அஜய் மட்டும் தந்தையோடு பேச்சு வார்த்தை வைத்து கொண்டான். தனி ஒருத்தியாக டெல்லி வரை சென்று மகனை மேற்படிப்புக்கு சேர்த்து விட்டு வந்தாள். அவளை பொறுத்த வரை அது பெரிய சாதனை தான்.
Advertisement
சாலா டெல்லியில் இருக்க, மதுரையில் பிரச்சனை வெடித்தது. வேற யார் குமரன் தான். அவனால் தேவியை விட்டு கொடுக்க முடிய வில்லை. இந்த வயதில் விவாகரத்து வாங்கி, தனியாக போய் என்ன சாதனை செய்ய போகிறாள். பிள்ளை இல்லாமல் ஓடி ஓடி யாருக்கு சொத்து சேர்த்து வைக்கிறாள். குமரன் ரகளையை கூட்டி கொண்டு இருக்க, தேவி தன் முடிவில் மாறாமல் நின்றாள்.
சித்ரா வழக்கம் போல அமைதி தான். ஆனாலும், எப்பவும் போல தொடரும் வலி, இப்போதும் இருந்தது. மூணு பிள்ளை பெத்தும், தான் இவனுக்கு ஒன்றுமே இல்லையா?… இள வயது பையன் போல பொண்டாட்டி வேணும்ன்னு துள்ளி திரிகிறான்.
எப்பவும் மகன் என்று ஆதரவு தரும் பாண்டியம்மாள். இப்போது ஒதுங்கி கொண்டார். அதன் காரணம் அவருக்கே தெரியும். தொடர்ந்து மீனாட்சி கனவில் வருவதும், தண்ணி, உணவு என்று ஏதேனும் கேட்டு வெளி திண்ணையில் நிற்பதும். பெற்றவள் கொண்டு வரும் போது அழுது கொண்டே ஓடி ஒளிவதுமாக தொடர்ந்து பாண்டியம்மாளுக்கு கனவுகள் வர,
Advertisement
“அய்யா! செத்தவளுக்கு நினைப்பு பிள்ளையை சுத்தி வருது போல… அதான் தெக்க கரை சேரல, வாவே ஒரு எட்டு பார்த்து வருவோம்…” என்று கணவரை அழைத்து கொண்டு மணிமாறனை காண சென்றார்கள்.
Advertisement
பெரியவன் சென்னையில் வேலையில் இருக்கிறான் என்று தெரியும். சின்னவன் தான் மதுரையில் படிப்பது.
மருமகனை பார்த்த முத்தையா, “மூத்த மக நினைப்பு நெஞ்சை அறுக்குது சாமி. நாங்க கண் பார்க்க போன உசுரு… உம்மை அக்கா எப்பவும் சொல்லுவா, சாலா தூரமா இருக்கா வெரைசா வர மாட்டா. நம்ம மீனா தான் பக்கத்துல இருக்கா, நமக்கு ஒன்னுன்னா மூத்த மக தான் முன்ன வந்து நிக்கும்ன்னு சொல்லுவா… அந்த மகளை கண்ணார காவு கொடுத்து நிக்கிரோம். எம்மட மனசு என்னா பாடு படும். நீங்க கொஞ்சம் நெனைச்சு பாருங்க தம்பி…”
பொங்கி வரும் கண்ணீரை அடக்கினார். அந்த வீட்டை பார்த்ததும் முன் வந்தது மீனாட்சி தான். ஏதேனும் வேலையாக இந்த ஊருக்கு வந்து மகளை ஒரு எட்டு பார்க்க வந்தால், கை நனைக்காமல் விட மாட்டாள். ஐம்பது கோழிக்கு மேல் எப்போதும் வீட்டில் இருக்கும். தன் அப்பரு என்று ஓடி ஓடு செய்வாள். இன்று உயிரோடு இருந்தால், பெற்றவர்கள் வந்ததற்கு சிட்டாக ஓடி வேலை செய்வாள்.
Advertisement
“ஏதோ ஒரு கோபம். ஒதுங்கி நின்னு போனோம். அதுக்காக மனசுல நினைப்பு இல்லாம போகுமா!… சின்னவனை நாங்க பாக்குரோம் தம்பி…” தயவாகவே முத்தையா கேட்க.
சின்ன சிரிப்போடு பார்த்த மணிமாறன், “சின்னவனை வேற ஒருத்தவக கிட்ட தூக்கி கொடுத்துட்டேன் மாமா…”
எதே! என்று நெஞ்சில் கை வைத்த பாண்டியம்மாள், “என்ன சொல்றீங்க?…”
“ம்ம்… பிள்ளை இல்லாதவக, கேட்டாங்க கொடுத்துட்டேன்…” சாவகாசமாக மணிமாறன் சொல்ல, பதறி போன முத்தையா,
“என்ன சின்ன பிள்ளையா தூக்கி கொடுக்க… எங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்க வேணாம். யார் அது?…”
முகம் மாறாமல், “தெய்வானை…” என்று சொல்ல,
“என்ன!… நம்ம தேவியா?”
“ம், ஆமா… பெத்தவ மாதிரி தூக்கி வளர்த்தது தேவி தான. அதான் அது கையிலே தூக்கி கொடுத்துட்டேன்…”
முத்தையா, பாண்டியம்மாள் இருவரும் பேச வார்த்தையே வராமல் அதிர்ந்து போனார்கள். தேவியிடம் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவே இல்லை. விசாலாட்சிக்கு என்றால் இவ்வளவு அதிர்ச்சி இருக்காது. சாலாவும், தேவியும் அவ்வளவு நெருக்கம்.
ஆனால், மீனாட்சி அப்படி இல்லை. பிரபா பிறக்கும் போதே தேவிக்கு நாள் சென்று குழந்தை இல்லாமல் இருக்க, பிறந்த குழந்தையை தூக்க கூட விட வில்லை பாண்டியம்மாள். பார்த்து கொள்ள ஆள் இல்லாமல், வேற வழி இல்லாமல் தான் கை குழந்தையாக இருந்த பிரபாவை குளிக்க, வைக்க என்று தேவிடம் கொடுத்தது.
பாண்டியம்மாள் மனது குத்தியது. அன்று குழந்தைக்கு கண்ணு பட்டும் போகும் தூக்காதே என்று ஒதுக்கிய தேவி தான். இன்று தாயில்லாமல் நிற்கும் தன் பேரனை ஆரவனைத்து நிற்பது. வார்த்தை வராமல் இடிந்து போனார் பாண்டியம்மாள்.
தனக்கு என்ன! இரு மகள்கள். இருவரும் கண் நிறைக்க கணவன், வளமான வாழ்க்கை, பிள்ளை இல்லையா என்ற சொல் வரும் முன்னே ஆளுக்கு இரு பிள்ளைகள் என்று நிறைவாக வாழ்கிறார்கள். தன் வீட்டிற்க்கு வந்தது தான் சோடை போனது என்று குத்தி குதறினார் தேவியை.
இன்று அவள் தான் தன் வம்சத்தை தாங்கி நிற்கிறாள். இவள் வயிற்றில் வம்சம் நிலைக்க வில்லை என்று தானே இவள் தங்கையை கொண்டு வந்தது. ஆனால், இவர்கள் வம்சத்தை காலத்திற்கும் தாங்கி நிற்க முன் வந்து விட்டாள். நாற்பத்தி ஐந்து வயதில் உழைக்க தொடங்குகிறாள். யாருக்காக? பெற்ற பிள்ளையும் அல்ல?, இரத்த சொந்தமும் அல்ல?, உடன் பிறந்த சொந்தமும் அல்ல?
சும்மா, தூக்கி வளர்த்த பாசம் மட்டுமே. நெஞ்சு கனத்தது பாண்டியம்மாளுக்கு… முத்தையா மனைவியை தான் பார்த்தார். ஏதேனும் சொல்லுவாளோ என்று, ஒன்றும் சொல்ல வில்லை பாண்டியம்மாள். அவருக்கு தெரியும். தாயில்லா பிள்ளைக்கு தாயாக இருப்பது அத்தனை சுலபம் அல்ல என்று… என் பேரன் இவள் யார் என்று கேட்க நொடி போதும். ஆனாலும் கேட்க வில்லை. தேவியின் அரவணைக்கும் குணம் தெரியும்.
இங்கு குமரன் தான் ஓயவில்லை. ஊரே பாரு, நாடே கேளு என்று கூவி கொண்டு இருந்தான். தன் தாய், தந்தை, தங்கை என்று எல்லோரும் தேவி பக்கமே. அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை. உடனடியாக தேவியின் பெற்றோர் உடன் மதுரைக்கு வந்து விட்டான்.
சித்ராக்கு ஆயாசமாக இருந்தது. ஐம்பது வயதில் அப்படி என்ன முதல் மனைவி மேல் பாசம் பொத்து கொண்டு வந்தது. பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்த உடன் தேவியோடு வெளியில் செல்வதை குறைத்து கொண்டான்.
ஏனெனில் பொது வெளியில் பார்க், ராட்டினம் என்று எங்கு சென்றாலும் தன் பிள்ளைகளின் உடன் பயிலும் பிள்ளைகள் வருவதால், காவ்யா கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தாள். விவரம் தெரிந்த பின் இரண்டாம் தாரத்து பிள்ளைகள் என்பதை அவமானமாக நினைத்தாள். அதுவும் பள்ளியில்,
“காவ்யா, நேத்து கோவில உங்க அப்பா கூட வேற ஒருத்தவங்க வந்து இருந்தாங்க. அவங்க யாரு?…” என்று கேட்பதும்.
பேரான்ஸ் மீட்டிங்க்கு சித்ரா சென்றால், “ஏங்க, கர்ணி அம்மா… போன வாரம் சந்தைக்கு உங்க வீட்டுகாரரை பார்த்தேன். அவங்க கூட ஒருத்தவங்க வந்து இருந்தாங்க. அதுவும் பைக்குல, யாருன்னு கேட்டேன். என் மூத்த சம்சாரம்ன்னு சொன்னாங்க. அப்ப நீங்க?” என்று எல்லாம் விசாரித்து அறிந்து கேட்கும் ஆட்களுக்கு பதில் சொல்லி திணறி போவாள் சித்ரா.
அவமானமாக இருக்க, பிள்ளைகளும் சங்கட பட, குமரன் தேவியோடு எங்கும் வெளியில் செல்வது இல்லை. மூன்று பிள்ளைகள் என்று வீடு நிறைய, தேவி தோட்ட வேலைக்கு என்று தள்ளி வச்சச்சு. அதுவும் காவ்யா பத்தாவது படிக்கும் போது, தேவி அறைக்கு குமரன் வருவது நின்று போனது.
தாம்பத்தியம் என்பது உடல் சுகத்தில் தொடங்கி உடல் சுகத்திலா முடிந்து போகும். தனி அறையில், துணை இருக்கும் கணவன் இல்லாமல் விட்டத்தை வெறித்து தேவி கிடந்தாள். பக்கத்து அறையில் கூச்சல் சத்தம் கேட்கும். சித்ராக்கு மூணு பிள்ளைகளும் அருகிலே இருக்க வேண்டும். பிள்ளைகள் உறங்காமல் கத்தி விளையாடுவதும், சித்ரா உறங்க சொல்லி அதட்டுவதும், குமரன் விடு சித்ரா நாளைக்கு லீவு தானே என்று சமாதானம் செய்வதும், பக்கத்து அறையில் சோர்ந்து கிடக்கும் தேவிக்கு தெளிவாக இருக்கும். ஒரு பெண்ணாக தேவி மனம் என்ன பாடு பட்டு இருக்கும்…
மீண்டும் அதே நிலைக்கு தேவி உடன்படுவாளா? ம்கூம்! தன்னை பெத்தவர்களை பார்த்தும் மனம் இறங்க வில்லை. குமரன் உடன் சித்ராவும் தான் வந்தாள். எப்போதும் போல அமைதி மட்டுமே….
“தேவி, நீ வீட்டுக்கு வரலை. உன் தங்கச்சியும் வாழ முடியாது. உன் கூடவே வாழ வெட்டியா வச்சுக்க… எம் பிள்ளைகளை பார்க்க எனக்கு தெரியும்…” குமரன் தன் கடைசி ஆயுதத்தை எறிந்தான்.
தேவி திடமாக நிற்க. உடைந்தது சித்ரா தான். புலி வருது என்று காத்து இருந்தது போல உண்மையில் புலி வந்து விட்டது. சித்ரா இதற்கு தானே பயந்தாள். இதோ தான் அவனுக்கு ஒன்றும் இல்லை என்று காட்டி விட்டான். அப்படி ஒன்றும் விட்டு விட மாட்டான் தான். அவள் கணவனை அவளுக்கு நன்றாக தெரியும். ஆனாலும், தேவி என்று வரும் போது சித்ரா ஒரு பொருட்டு இல்லை தானே…
தேவியின் பெற்றவர்கள் என்ன சொல்வார்கள். இந்த வயதில் இனி தனியாக இருந்து என்ன செய்ய? யாருக்கு இந்த ஓட்டம்? அதான் பிள்ளை இல்லையே? சித்ரா வாழ்க்கை வேறு இருக்கே?
அவர்கள் சித்ராவை உள்ளே கொண்டு வர, தேவி தீர்மானமாக சொல்லி விட்டாள்.
“அன்னைக்கு என்னை காட்டி சித்ராவை உள்ளே இழுத்தது போல, இன்னைக்கு அவளை காட்டி என்னை இழுக்காதீங்க. நீங்க பெத்தது ஒரு மக மட்டும் தான்…”
குமரன் அடங்க வில்லை. சித்ரா ஒரு பக்கம் பிடித்து இழுக்க, தேவி ஒரு பக்கம் கத்த. யாராலும் அடக்க முடியவில்லை. சாலாவும் ஊரில் இல்லை. முத்தையா, பாண்டியம்மாள் என்று யாருக்கும் அடங்க வில்லை. யாரை உதவிக்கு கூப்பிட என்று தெரியாமல் சாருபாலாவிற்கு அழைத்து உதவி கேட்டாள்.
அடுத்த நிமிடமே சாரு போலீசாருடன் நுழைந்து விட்டாள். அவளுக்கு ஏற்கனவே குமரன் மீது கோபம் இருந்தது. ரெண்டு பொண்டாட்டி வேணுமாம் எவ்வளவு தைரியம். வீர நெடுஞ்செழியன் அண்ணன் தான் போலீஸ் கமிஷனர். பெரிய இடத்து சிபாரிசு இருக்க, குமரனை குமுறி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
சாரு அவனை விடவில்லை, “மரியாதையா விவாகரத்து குடுத்துடு. உன் மூஞ்சிக்கு ரெண்டு பொண்டாட்டி கேட்குதோ… அன்னைக்கே உன்னை முட்டிக்கு முட்டி தட்டி, உள்ள தள்ளி இருக்கணும். உம் பொண்டாட்டியால தப்புச்சே… காடு வாவான்னுது, வீடு போ போன்னுது, இவனுக்கு ரெண்டு பேருமே வேணுமாம்ல. அறிவு கெட்ட முட்டா பைய… உன்னை சொல்லி குத்தமில்லை, உன் வளர்ப்பை சொல்லணும்…”
“பாடி தொங்கி போய், முடி நரச்சு போச்சு. இவனுக்கு இன்னும் இளமை ஊஞ்சல் ஆடுதாம். இதுல மூணு பிள்ளை, ரெண்டு பொண்டாட்டி. ஏண்டா டேய், தாலி கட்டுன பொண்டாட்டி, நமக்கு அடங்கி தான் போகணும்ன்னு நினைச்சியோ…” எகிறி கொண்டு இருந்தாள் சாரு. அவளுக்கு குமரனை ஒரு மனிதனாக கூட மதிக்க தோன்ற வில்லை.
அவளுக்கு பெண் அடிமைத்தனம் என்ற சொல்லே பிடிக்காது. ஊருக்கு வந்த சாலா பதறி அடித்து கொண்டு ஓடி வர, வீர நெடுஞ்செழியன் உள்ளே வந்து விட்டான்.
சாலாக்கு கண்களில் நீர் நிற்காமல் வடிந்தது. என்ன இருந்தாலும் உடன் பிறந்தவன், இரத்த பாசம் அடி வாங்கி கிடக்கும் போது கண்ணீர் வடிந்தது.
சாலாவும் முடிந்தளவு பேசி பார்த்தாள். குமரன் மசியவில்லை. சித்ராவும் கதறினாள். தேவிக்கு ஒரு மாதிரி பயமாக இருந்தது. தன்னால் தானோ என்று…
வீர நெடுஞ்செழியன் பேசினான். குமரானுக்கு தேவி மீது கோபம் கரை கடந்தது. தன் மனைவி, தன்னை தாண்டி யாரை தெரியும். அவ்வளவு பெரிய ஆளா நீ? என்னை விட்டால் யார் உனக்கு? என்று தெனவெட்டாக மோதி பார்க்க, ஜட்டியோடு போலீஸ் ஸ்டேசனில் உட்கார வைத்து விட்டாள். குமுறி கொண்டு இருந்தான் குமரன்.
சாலா மற்றும் தேவியை தனியே சந்தித்த நெடுஞ்செழியன்,
“இது ஆகாது சிஸ்டர். அவருக்கு புரிய வைக்க முடியாது. போலீஸ் கஸ்டடி தான் சரி…”
அதற்கு பெண்கள் இருவருக்கும் மனம் ஒப்பவில்லை.
லேசாக சிரித்த செழியன், “சிஸ்டர், உங்களுக்கு ஒரு கதை சொல்லவா… ஒருத்தன், தன் நண்பனிடம் விடுகதை போட்டானாம். என் உள்ளங்கையில் ஒரு பொருளை மூடி இருக்கேன். அதை கண்டு பிடின்னு…”
“அதற்கு அவன் சொன்னான். என்னன்னு நான் காண. ஏதாவது ஒரு யோசனை சொல்லு, கண்டுபிடிக்க…”
“அதற்கு அந்த நண்பன் சொன்னான். என் கையில் இருக்கும் பொருள் ஒரு பழம், நல்ல உருண்டையா இருக்கும்ன்னு…”
“உடனே அவன் பட்டுன்னு சொல்லிட்டான் ஆப்பிள்ன்னு. விடை சரியா?” என்று செழியன் கேட்க. புரியாமல் முழித்தார்கள் பெண்கள் இருவரும்.
“விடை தப்பு. அந்த நண்பன் கையில இருந்தது நெல்லி கனி. காரணம் என்ன தெரியுமா! முட்டாளை யோசிக்க வைக்க முடியும். ஆனா, சிந்திக்க வைக்க முடியாது. எந்த ஊர்ல உள்ளங்கையில் ஆப்பிள் பழம் அடங்கும். கொஞ்சம் சிந்திக்கணும்…”
“குமரனும் இப்படி தான். என் மேல என்ன தப்புன்னு யோசிக்கிறார். என் மேலையும் தப்பு இருக்குமோன்னு சிந்திக்கலை. இந்த மாதிரி ஆட்கள் என்னைக்கும் திருந்த மாட்டாங்க…”
“நான் என்ன தப்பு செஞ்சேன். ஊர், உலகத்துல நடக்காததா?… நீங்க தானே கல்யாணம் பண்ணி வச்சீங்க. குழந்தை இல்லை? எனக்கு வாரிசு வேணாமா? இப்படி தான் கடைசி வரை நியாயம் பேசுவார். இவருக்கு புரிய வைக்கிறதோ, தண்டனை கொடுக்குறதோ சுத்த வேஸ்ட். ஒதுங்கி போறது தான் பெஸ்ட்…”
“தேவி சிஸ்டர், நீங்க உங்க வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு போக, குமரன் கிட்ட இருந்து ஒதுங்கி போங்க… சேத்துல கல்லு எறியாதீங்க. சாக்கடையை சுத்தம் பண்ணா அது சந்தனமாகாது… அவர் கடைசி வரை தன்னை நியாயப்படுத்த மட்டும் தான் பார்ப்பார்…” தெளிவாக செழியன் சொல்ல. தேவிக்கு புரிந்தது.
பாவபட்டு, பரிதாப பட்டு தேவி ஒரு அடி எடுத்து வைத்தாள். குமரனின் கையில் இருந்து தப்பிக்க முடியாது என்று புரிய. செழியன் திட்டத்திற்கு உடன் பட்டாள்.
குமரனை பதினைந்து நாள் காவலில் வைத்த நன்றாக கவனித்து தான் அனுப்பினார்கள். விவாகரத்துக்கு கையெழுத்து போடுவதை தவிர, வேற வழியே அவனுக்கு கொடுக்க வில்லை. தேவி மட்டும் என்றால் அவனுக்கு பயமில்லை. ஆனால், அவளின் பின்னால் நிற்கும் ஆட்கள் அவனுக்கு பயத்தை கொடுத்தார்கள்.
error: Content is protected !!