இ.பி.கோ. 55 – அத்தியாயம் 1
அத்தியாயம் – 1
குழுமியிருந்த மேகக்கூட்டங்களை தன்னுள் இழுத்துக்கொண்ட காரிருள் மெல்ல அவ்விடத்தை சூழ்ந்து கருமையைப் பரப்ப, அதிரடியாய் அந்த இருளை கிழித்துக்கொண்டு மிகுந்த சத்தத்துடன் செந்தழல் கக்கி எரிமலையாய் வெடித்துச் சிதறி கரிய நிற புகையை வெளியேற்றியது அந்த ஆலை. அந்த இருட்டில் ஜகஜோதியாய் எரிந்த தணல் தன்னை சுற்றியுள்ள இடங்களுக்கு தன் வெப்பத்தையும் அதன் சிதறலையும் பரப்பிவிட, காற்றுடன் கலந்த அந்த நச்சு சுவாசக்குழாய் வழியே உயிர்களுள் நுழைந்து மெல்ல மெல்ல அனைவரையும் மூர்ச்சையாக்கியது.
மூடிய இமைகளுக்குள் கருமை வியாபித்து வண்ணங்கள் மரித்துவிட, திக்கற்ற நிலையில் கரை சேர துடித்தது அலைபாய்ந்த மனம். மூளையின் கட்டளைப்படி கரை தேடிய புலன்களுக்கு சிக்கியது அந்த சலசலப்பு. யாரோ அழைப்பது போலவும் உலுக்குவது போலவும் தோன்ற முயன்று தன் ஐம்புலன்களை கூர்மையாக்கி செவி தீண்டும் குரலை இனங்காண முயன்று அது ஒலித்த திசை நோக்கி கவனத்தை குவிக்க,
“இதுக்கே மயங்கிட்டியா என் ராசா. நீ வேலைக்கு போய் உன் தங்கச்சியை படிக்க வச்சி கரை சேத்துபுடுவேன்னு கனவு கோட்டை கட்டி வச்சிருக்கேனே, அதுல தண்ணியை மொண்டு ஊத்திடாதடா.” என்ற புலம்பல் வெகு அருகே கேட்டது.
Advertisement
அந்த குரலை தொடரும் முன் சுளீரென்று முகத்தில் குளிர்ந்த நீர் விசிறியடிக்கப்படுவதை உணர்ந்தவன் அது கொடுத்த வலியில் பதறியடித்து எழுந்தான்.
அவனை சுற்றி ஐந்தாறு பேர் நிற்பது மங்கலாக தெரிய, கண்களை கசக்கியபடி மெல்ல எழுந்தவன் முன் தண்ணீர் குப்பியை நீட்டினார் பார்வதி. இடக்கையை தரையில் ஊன்றியவன் மற்றொரு கரத்தில் தண்ணீர் குப்பியை வாங்கி வாயில் சரிக்க, அந்த குப்பி முழுதும் காலியானது. முந்தானை கொண்டு மகனின் ஈரமுகத்தை துடைத்துவிட்ட பார்வதி தவிப்பாய் மகனைப் பார்க்க, அவரை ஒரு பார்வை பார்த்தவன் அமைதியாய் எழுந்து நின்றான்.
சூரியன் தன் கோபத்தின் உச்சம் வந்திருக்க, பூமியில் இருப்பவர்களை வாட்டியெடுக்க முடிவு செய்துவிட்டார் போல. அனல் தெறித்தது அந்த மைதானத்தில். அங்கிருந்த அனைவரும் வியர்த்து விறுவிறுத்து இருந்தனர். ஆனால் சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லை.
Advertisement
ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற தகுதியை நிர்ணயிக்கும் போட்டிகள் அம்மைதானத்தில் நடைபெற, அப்போது தான் ஓட்டப்பந்தயத்தில் ஓடி முடித்து வந்தவன் அயர்ச்சியில் தன்னையும் மீறி மயங்கி இருந்தான்.
Advertisement
“இதுக்கே இப்படின்னா பாஸ் ஆகுறது கஷ்டம் பாத்துக்கோங்க.” என்றுவிட்டு சென்றார் அவர்களுக்கு தெரிந்த ஒரு ஏட்டையா.
“அதெல்லாம் அப்படிதான் சொல்வாங்க. ஆனா ஒருத்தவங்களை உள்ள கொண்டு வரணும் நினைச்சா கோக்குமாக்கு வேலை பாத்து உள்ள கொண்டு வந்துருவாங்க.” என்றார் மற்றொரு ஏட்டான ராமையா.
“நீங்க எல்லாம் சொல்றதை நம்பிதான் எங்க குடும்பமே இருக்கு.” என்ற பார்வதி கலக்கமாய் நிற்க,
Advertisement
“எங்களோட உதவி உங்களுக்கு தேவைங்குறதைவிட டிபார்ட்மென்டுல இருக்குற சிலருக்கு உங்க தயவு முக்கியம். அப்படியெல்லாம் விட்டுற மாட்டாங்க.” என்று கிசுகிசுத்தார் ராமையா.
“நாங்க வாய் திறக்ககூடாதுனு இடம் பாத்து அடிச்சிட்டீங்கல்ல.” என்ற அகிலனின் முகம் கடுகடுவென இருந்தது.
“அப்படியெல்லாம் இல்லைபா. முன்ன என்ன நடந்திருந்தாலும் இப்போ உங்களுக்கு நல்லதுதானே நடக்குது. இந்த வேலையை கெட்டியா புடிச்சி குடும்பத்தை பாக்குற வழியைப் பாரு.” என்று அவன் தோள் தட்டி சென்றார் ராமையா.
“அமைதியா இரு அகிலு.” என்று தோள் தொட்ட பார்வதியை எரிச்சலாய் பார்த்தவன்,
“அமைதியா நீ சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டி ஓடி, குதிச்சி, தாண்டி, இல்லாத குரங்கு வித்தையெல்லாம் காட்டிதானே வாரி விழுந்து வச்சேன். இன்னும் என்ன?” என்று முகம் திருப்பினான் அகிலன்.
“கோச்சிக்காதையா அகிலு. அப்பா இருந்தவரை அவரை நம்பி இருந்தோம், இப்போ எங்களுக்கு இருக்குற ஒரே நம்பிக்கை நீதான்.” என்று அவன் மீது பாரம் ஏற்றினார் அவர்.
ஆம், பாரம்தான். அப்படித்தான் அகிலன் மனம் இடித்துரைக்கிறது. பொறுப்புகள் பற்றிய கவலையின்றி சுற்றித் திறந்த இளங்காளையை குடும்பத்தை காட்டி முடக்கி விட்டார்கள் என்ற கோபம் அவனுக்குள் எரிமலையாய் தணலை கக்கிக்கொண்டிருக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தங்கையும் வெளியுலகத்தில் வேலை செய்து பிழைத்து பழகியிராத தாயும் அவனுக்கு கிடுக்கிப்பிடி போட்டு அவனின் சிறகுகளை வெட்டிவிட்டனர்.
அப்பாவிற்கு பின் குடும்பத்தை பார்க்கும் பொறுப்பு தனக்கு வரும் என்று தெரிந்தாலும் அதற்கு காலம் இருக்கிறது என்று அனாமத்தாய் கல்லூரியில் சுற்றிக்கொண்டிருந்தவன் இளங்கலை கல்வி முடித்தும் அப்படியே சுற்றிக்கொண்டிருந்தான். மேற்படிப்பு படி இல்லையென்றால் வேலைக்கு செல் என்று அவன் தந்தை சொல்லிப்பார்த்தும் கேட்காதவன் நண்பர்களுடன் வேலைக்கு செல்ல சிறிய கோர்ஸ் படிக்கிறேன் என்று ஒரு வருடம் ஓட்டினான்.
மகன் பொறுப்பின்றி ஊதாரி ஆகிவிடுவானோ என்று அவர் கவலை கொண்ட நேரம்தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. அதன் விளைவாய் காவலர் உடற்தகுதி தேர்விற்கு வந்திருக்கிறான் அகிலன். மனதே இன்றி கடமைக்கு ஓடியவனால் அந்த வெயிலில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சோர்வு ஆட்கொண்டு அவனை அசைத்துப்பார்த்தது. ஆனால் அந்த சோர்வெல்லாம் எங்களுக்கு கணக்கே இல்லை என்பது போல் அவன் சென்று நின்றாலே தேர்ச்சி பெற வைத்து, பயிற்சிகள் அளித்து வேலைக்கான ஒப்புதலையும் அனுப்பிவிட்டனர்.
அந்த இருபத்தி இரண்டு வயதில் வேண்டா விருப்பாய் காக்கி உடை அணிந்து சென்றவன் ஐந்து வருடங்கள் கழித்தும் அதே அதிருப்தியுடன் சுற்றிக்கொண்டிருந்தான்.
“வேணிக்கு அஞ்சாம் மாசம் ஆரம்பிச்சதும் மருந்து புழியனும் அகிலு.” என்று அலைபேசியில் பார்வதி அடுத்த சடங்கை தூக்கிக்கொண்டு வரவும் எரிச்சல் மண்டியது அகிலனுக்கு.
இப்போதுதான் தங்கை திருமண செலவு முடிந்து, விருந்து வைத்து, மாப்பிளைக்கு புது ராயல் என்பீல்டு பைக்கும் எடுத்துக் கொடுத்திருந்தான். அதற்குள் அடுத்த சடங்கா என்ற மலைப்பு அவனுக்கு.
“என்னடா அமைதியாகிட்ட? கருப்பு புடவை எடுத்து கொடுத்து வேணியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து மருந்து புழியனும்.”
“புடவைதான நீயே போய் எடுத்துடு. எப்போ வரணும்னு சொல்லு வந்துறேன்.” என்றான் எரிச்சலை மறைத்தபடி.
தங்கைக்கு செய்யக்கூடாது என்றில்லை, அதை பிடித்து செய்யுமளவுக்கு வாழ்க்கையில் அவனுக்கு எதிலுமே பிடித்தம் இல்லை. செய்ய போதுமான பணமும் இல்லை. வரவெல்லாம் தங்காது செலவில் சேர்ந்துவிடுகிறது.
காவல் துறையில் காவல் பணியில் கடைமட்ட பதவியில் சேர்ந்தவன் இன்னுமே அங்கேயே தேங்கி நிற்கிறான்.
அந்த காலம் முதல் இந்த காலம் வரை பல பெருமைகளை தன்னகத்தே வைத்துள்ள மாநில தலைநகரான சென்னைக்கு மிக அருகே செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ஒரு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலர் என்று சொல்லப்படும் கான்ஸ்டபிள் அவன். சம்பளம் குறைவு வேலை அதிகம்.
“என்னப்பா இப்படி சொல்ற… உன் பெரியப்பா, சித்தப்பா, அத்தைன்னு நெருங்கின சொந்தத்தையாவது கூப்புடனும். அப்புறம் மாப்பிள்ளை வீட்டு பங்காளிங்க வருவாங்களாம். ஒரு முப்பது நாப்பது பேருக்கு மதிய சாப்பாடு ஏற்பாடு பண்ற மாதிரி இருக்கும் அகிலு. இந்த வாரம் வீட்டுக்கு வாய்யா என்னனு பாத்து எல்லாம் சொல்லிபுடுவோம்.” என்று நீளமாய் பேச, அவனது கடுப்பு மறைந்து சோர்வு வந்தது.
ஒரு விசேஷத்திற்கு என்று சொந்தத்தை கட்டி இழுத்து கூப்பிடுவது எல்லாம் எவ்வளவு பெரிய வேலை என்று தங்கைக்கு திருமண ஏற்பாடு செய்யும் போதே கண்டுகொண்டான். இவர்கள் கலந்து பேசி ஒரு தேதி நேரம் குறித்தால், அது சரியில்லை வேறு பார் என்று ஆரம்பித்து யாருக்கு முதலில் சொன்னாய் என்று தொடர்ந்து இவர்களுக்கு சொல்லக்கூடாது என்று சொந்த பகையை காரணம் காட்டி இவர்கள் விழாவிற்கு கும்மியடிக்க முயன்றனர் பலர்.
அப்பா இருந்திருந்தால் இவ்வளவு இக்கட்டு இருந்திருக்காதோ என்று அவன் எண்ணாத நாளில்லை. சின்ன பையன் என்று இவனை தான் அனைவரும் அவர்கள் விருப்பிற்கு ஏற்ப வளைக்க முயன்று பந்தாடினர். இவனோ அந்த மொத்த எரிச்சலையும் அன்னையிடம் கொட்டிவிடுவான். அவருக்கோ மகனை விட்டால் நாதி இல்லை, என் மகன் தானே என்று அனைத்தையும் பொறுத்துக்கொண்டு மகளை எப்படியோ கரை சேர்த்துவிட்டார்.
ஆனால் மகளை பெற்ற பெற்றவர்கள் கடமை திருமணத்தோடு முடிவதில்லையே. இதோ அடுத்த நல்ல செய்தி வந்து ஒரு மாதம் ஓடிவிட்டது. அவன் தங்கை வேணி கர்ப்பம் தரித்து மூன்று மாதம் முடிந்து நான்கு சென்று கொண்டிருக்கிறது.
ஐந்தில் மருந்து பிழிந்து, ஏழில் வளையல் அடுக்கி, பத்தில் பேறு பார்க்க வேண்டும். அதன் பின் காப்பு போட்டு பெயர் சூட்டுவது, காது குத்தி மொட்டை அடிப்பது, பிறந்தது பெண் என்றால் தாய்மாமன் சடங்கு என்று பட்டியல் பெரிது. இவையனைத்தும் உறவை பலப்படுத்தும் பாலமாய் இருந்தவரை மகிழ்ச்சியாக சென்றது. என்று இதையெல்லாம் குடும்பத்தின் கவுரவம் என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கினார்களோ அதில் அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தரம் வரை மகிழ்ச்சியை மீறிய மிரட்சி வந்து செல்வது நொடி நேரமேனும் இயல்பாகிவிட்டது.
சரியான நிதி மேலாண்மை இல்லையென்றால் மகிழ்ச்சியை மீறிய சுமையாகி விடுகிறதே. அதுதான் அகிலன் நிலையும். சொந்த ஊரான திருச்சியில் ஒரு வருடம் பணியில் இருந்தவரை அன்னையிடம் சம்பளத்தை கொடுத்ததால் சீராக சென்ற குடும்ப நிர்வாகம், இவன் சென்னைக்கு வந்த பின் திணற ஆரம்பித்துவிட்டது.
அவன் தந்தையின் பென்சன் பணத்தை மீதம் பிடித்தே குடும்பத்தை இழுத்து வைத்திருக்கிறார் பார்வதி. இவன் சம்பளமெல்லாம் அவன் செலவுக்கும் திருமண செலவுக்குமே சரியாகிவிட்டது. இப்போது தான் சேமிக்கலாம் என்று கொஞ்சம் எடுத்து வைத்திருந்தான் அதற்குள் மீண்டுமா என்று அவன் நினைத்தது பார்வதிக்கு புரிந்திருக்கும் போல.
“என்னோட பழைய நெக்லெஸ் ஒன்னு இருக்கு, என் அம்மா போட்டது. அதை அடகு வச்சிக்கலாம் அகிலு.”
“அதுக்கெல்லாம் அவசியம் இல்லை. நான் வச்சிருக்கேன்.”
“நிசமாவா சொல்ற? உனக்கேது பணம்?” என்று பார்வதி நோண்டவும் மட்டுப்பட்டிருந்த எரிச்சல் மீண்டு வந்தது.
“நீ அடகு வச்சாலும் நான்தானே பணம் கட்டி மீக்கணும். அதுக்கு இருக்கிறதை வச்சி செஞ்சிடலாம். நாப்பது பேருக்கு எல்லாம் அவ்ளோ செலவு ஆகாது.” என்றான் பிரயத்தனப்பட்டு.
“இல்லை அகிலு,”
“தேதி பாத்து சொல்லு, சொல்ல வேண்டியவங்களுக்கு நான் போன் போட்டு எல்லாம் ஏற்பாடு பண்ணிடுறேன்.” வீட்டுக்கெல்லாம் வர முடியாது என்ற மறைமுக செய்தி தாங்கி வந்திருந்த அவன் வார்த்தைகளில் பார்வதிக்கு சந்தேகம் துளிர்விட்டு,
“வெளில கைநீட்டுறியா அகிலு?” என்று பட்டென கேட்டுவிட்டார்.
அவருக்கு பதில் சொல்ல முடியாமல் வேலை இருக்கிறது என்று அழைப்பை துண்டித்தவன் அந்த சிறிய அறையில் இருந்த வாஷ்பேஷனில் தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவினான். அந்த காலை விடியலே நல்ல ஆரம்பமாகி இருக்க, சலிப்புடன் துண்டு எடுத்து முகத்தை துடைத்து சன்னலோரம் அமர்ந்தான்.
“ஸ்டேஷனுக்கு கிளம்பாம என்னத்த வேடிக்கை பாத்துகிட்டு இருக்க?” என்ற குரலில் சலிப்பாக உச்சுக்கொட்டியவன் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு நகர, அவனுடன் அறை பகிரும் மற்றொரு காவலனான சந்துருவும் கிளம்ப ஆயுத்தமானான்.
குளித்து வந்த அகிலன் காக்கி உடையின் பொத்தான்களை பொருத்திக்கொண்டே வர, சட்டையினுள் அடங்க மறுக்கும் தொப்பையினால் இறுதி பொத்தான் தெறித்து விழுந்தது.
“ம்ச், இந்த சட்டை வேற!” கடுப்பில் சட்டையை வேகமாக கழற்றி வீசி எரிய, அதை சரியாக பிடித்த சந்துரு நண்பனை முறைத்துப் பார்த்தான்.
“என்னது இது? ஒரு காவலாளியே காவல் உடையை மதிக்காம தூக்கி எறியலாமா?” காக்கி சட்டையை அகிலன் முன்னே ஆட்டிக்கொண்டே அவன் பேச, பற்களைக் கடித்தான் அகிலன்.
“ஊசி நூலு இருந்தா உன் வாயை தச்சிடுவேன்டா.”
“ரெண்டையும் நான் தரேன், உன் சட்டையை முதல்ல தச்சி போடு.” என்ற சந்துரு ஊசி நூல் டப்பாவை அவனை நோக்கி வீச, சரியாக பிடிக்கமுடியாமல் அதை தவற விட்டிருந்தான் அகிலன்.
“உன்னையெல்லாம் எப்படித்தான் இன்னும் ஸ்டேஷன்ல வச்சி மேய்க்குறாங்களோ. ஒரு கேட்ச் ஒழுங்கா புடிக்கிறியா.” என்று அலுத்துக்கொண்ட சந்துரு தானே கீழே விழுந்ததை எடுத்து நண்பனின் சட்டையில் பொத்தானை பொறுத்தினான்.
“ஃபிட்டா இருக்க பாருடா. இப்படியே போச்சுன்னா உனக்கு முன்ன உன் தொப்பை தான் முதல்ல நிக்கும்.”
சந்துரு சொன்னதை காதில் வாங்காது தன்னை குனிந்து பார்த்தான், பின் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தையும் பார்த்தான்.
நேரம் காலம் பார்க்காமல் கிடைக்கும் அனைத்தையும் உள்ளே போட்டதன் விளைவாய் அரையடிக்கு வயிறு வெளியே தள்ளியிருந்தது. அதுவும் அந்த இருபத்தி ஏழு வயதில்.
பணியில் சேர்ந்த போது இளமைக்கே உரித்தான உடற்கட்டுடன் தான் சேர்ந்தான். வேலை பளு, அதைவிட அதன் மீதான பிடித்தமின்மை, பிடிப்பின்மை, ஆர்வமின்மை, இயலாமை எல்லாம் சேர்ந்துகொண்டு தோற்றத்தில் காட்டிவிட்டது.
பெருமூச்சு எழுந்து அடங்கியது.
“வாழ்க்கை இப்படியே போயிடுமாடா?”
“எப்படியே?”
“எடுபிடி வேலை, கோர்ட்டு கேஸுன்னு…” என்ற அகிலன் சந்துரு முகம் பார்க்க,
மும்மரமாய் பொத்தானை தைத்தவன் நண்பனிடம் சட்டையை கொடுத்து போடச் சொல்லிவிட்டு அவன் வேலையை பார்க்கச் செல்ல, அவனை பிடித்து நிறுத்தியிருந்தான் அகிலன்.
“பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு போற?”
“என்ன சொல்லணும் நான்? ஏற்கனவே நிறைய முறை உன்கிட்ட சொல்லிட்டேன்.” என்று முறைத்த சந்துரு, மனம் கேளாமல்,
“புடிச்ச மாதிரி வேற வேலை தேடிட்டு போ இல்லை இருக்கிறதை புடிச்ச மாதிரி மாத்திக்கோ.” என்றான்.
“வேற என்ன செய்யுறதுன்னும் தெரிலடா.” என்று பாவமாய் பார்த்தான் அகிலன்.
நான் சொல்லத்தான் முடியும் நீதான் உனக்கு வேண்டியதை தேடி செல்லவேண்டும் என்பது போல் பார்த்த சந்துரு உதடு பிதுக்கி அலுவலுக்கு கிளம்ப, நேரமாவது உணர்ந்து அவனும் கிளம்பினான்.
இருவரும் சந்துருவின் இருசக்கர வாகனத்தில் கிளம்ப, காவல் நிலையத்துக்கு அருகில் இருக்கும் சிறிய உணவகத்தில் தங்களின் ஆஸ்தான இடத்தில் அமர்ந்து இட்லி வடையை சாம்பார் சட்டினியில் முக்கி உள்ளே தள்ளினர்.
“ண்ணா, மாச கடைசி ண்ணா. கணக்கு முடிக்கணும்.” என்று தலை சொரிந்தபடி வந்து நின்ற கடை பையனை, முகம் இடுங்க, புருவம் உயர்த்திப் பார்த்தான் அகிலன்.
அதில் எச்சில் கூட்டி விழுங்கிய அந்த பையன், “இந்த மாசம் உங்க கணக்கை முடிக்கலைனா என் கணக்கை முடிச்சிடுவேன்னு சொல்லிட்டாரு ண்ணா. பாத்து பண்ணிவுடுங்க.”
அமர்ந்திருக்கும் அகிலனின் உயரத்துக்கு பணிந்து அவன் பேச, தலையசைத்து எழுந்தவன் கைகழுவிவிட்டு கடை கல்லாவிலிருக்கும் உணவக உரிமையாளரிடம் சென்றான்.
அந்த உரிமையாளர் பவ்யமாய் பார்ப்பது போல் பாவனையை மாற்ற, தோரணையாக மேசையில் முழங்கை ஊன்றியவன் சற்று குனிந்து, “என்ன கடையை காலி பண்ணனுமா? ஏதோ கணக்கு முடிக்கணும்னு சொன்னியாம்?”
“ஏய், விடுறா. அவரும் பொழப்பை பாக்கணும்ல.” என்று அகிலனை நெருங்கி அவன் தோள் தொட்ட சந்துரு, அன்று உண்டதிற்கான பணம் கொடுத்தான்.
“பொழப்பை பாத்தோமா கணக்கை முடிச்சோமான்னு இல்லாம நம்மகிட்ட கணக்கு கேக்குறது எல்லாம் என்ன பழக்கம்னு நீயே சொல்லு. இன்ஸ்பெக்டருக்கு கூட இங்கிருந்து தான் மூணு வேலையும் சாப்பாடு போகுது. அதுக்கெல்லாம் கணக்கு கேட்டா பொழப்பு ஓடுமா. பாத்து இருங்க சாரே.” என்று மிரட்டும் தொனியில் அழுத்தமாக பேசியவன் சந்துரு தோளில் கைபோட்டு கிளம்ப,
“இவங்களுக்கெல்லாம் தெண்டம் அழணும்னு இருக்கு.” என்று தலையில் அடித்துக்கொண்டார் அந்த உரிமையாளர்.
“பாவம்டா, எவ்ளோ வருஷமா கேக்குறாரு. கொஞ்சமாவது கொடுக்கலாம்ல.” என்ற சந்துருவை முறைத்துப்பார்த்த அகிலன்,
“இந்த வேலையில கிடைக்குற ஒரே நல்ல விஷயம் இதுதான். இந்த காக்கிசட்டைக்கு பயப்படுறவங்க இருக்குற வரைக்கும் இந்த வேலையில தொடரலாம்னு அப்பப்போ தோணுது.” என்று பந்தாவாய் பேசியவன் காவல் நிலையத்திற்குள் நுழைந்ததும் இறுகிவிட்டான்.
அவரவர் இடத்திற்கு சென்றமர்ந்து வேலையைப் பார்க்க, இன்ஸ்பெக்டர் வந்ததும் விறைப்பாய் எழுந்து சல்யூட்டு அடித்தவன் தொய்வாய் இருக்கையில் அமர, இன்ஸ்பெக்டர் அழைப்பதாய் வந்து சொன்னான் உதவியாளர்.
தொப்பியை போட்டுக்கொண்டு இன்ஸ்பெக்டர் அறையை தட்டிவிட்டு உள்ளே செல்ல,
“வாயா… உனக்கும் அந்த ஹோட்டல்காரருக்கும் என்ன பிரச்சனை? ஏதோ கணக்கு முடிக்கலையாம். பாத்து முடிச்சிவுடு. இந்த மாதிரி சின்ன சின்ன பஞ்சாயத்து எல்லாம் பார்க்க எனக்கு நேரமில்லை.” என்றவர், அவன் எதிரே ஒரு பைலை தூக்கிப் போட்டு,
“இதை கோர்ட்டுல சம்மிட் பண்ணிட்டு, அந்த பிக்பாக்கெட் கேஸுக்கு எவிடென்ஸ் ரெடி பண்ணு.” என்றதும் உடலை நேராக்கி விறைப்பாய் சல்யூட் அடித்தவன் கோப்பை எடுத்துக்கொண்டு சந்துருவை நோக்கிச் சென்றான்.
தன் முன் விறைப்பாய் நிற்பவனை ஏறிட்டு பார்த்தவன் கேட்காமலேயே சாவி எடுத்து நீட்ட, “அந்தாளுக்கு என் மேல என்ன காண்டுனு தெரில என்னை வெளில அனுப்புறதையே வேலையா வச்சிருக்காரு.” என்று பற்களுக்கிடையில் வார்த்தையை கடித்துத் துப்பியவன் வெடுக்கென சாவியை பிடுங்கிக்கொண்டு கிளம்பினான்.
அந்த டிவிஎஸ் பைக்கை எவ்வளவு முறுக்கினாலும் என் இஷ்டத்துக்கு தான் செல்வேன் என்று மிதமான வேகத்தில் சென்றது.
‘அந்த ஹோட்டல் காரனை ஒரு காட்டு காட்டணும், என்னையே போட்டு கொடுத்துட்டான்ல.’ என்று அந்த உணவகத்தை கடக்கும் தருவாயில் கருவிக்கொண்டான்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியதை செய்துவிட்டு அரசு வக்கீலையும் பார்த்துவிட்டு வந்தவன், வழியில் ஓரிடத்தில் கும்பலாய் இருக்கவும் வண்டியை நிறுத்தி என்னவென பார்க்க கூட்டத்தை விலக்கி நுழைந்தான்.
“ஹே, போலீஸ்டா…”
“போலீஸ்னா பயந்துருவோமா?” என்று இருவேறு ஆண் குரல்கள் கேட்க, கூட்டத்தின் மையத்தில் கத்திக் கொண்டிருந்த பெண், காக்கிச்சட்டை கண்ணில் படவும் தன் பேச்சை நிறுத்தி அகிலனிடம் வந்தாள்.
“இந்த பொறுக்கி பசங்களை என்னனு நீங்களே கேளுங்க சார். பட்டப்பகல்ல கூட எங்களுக்கு பாதுகாப்பு இல்லைனா எப்படி சார்.” என்று முறையிட, அகிலன் கூட்டத்தின் நடுவே அந்த பெண்ணுடன் இரு ஆண்கள் இருப்பதை கவனித்தான்.
பார்க்க பெரிய வேலையில் இருப்பவர்கள் போல் நேர்த்தியாய் உடை அணிந்திருந்தனர். இருவர் தோளிலும் லேப்டாப் பேக் இருந்தது. அந்த பெண் க்ராப் டீஷர்ட்டும் ஜீன்சும் அணிந்திருந்தாள். பின்னலிடாது, ஹேர்பேண்டிலும் அடைக்காது முடியை விரித்து விட்டிருந்தாள்.
மூவரின் தோற்றத்தையும் கணக்கிட்டவன் சுற்றி இருந்த கூட்டத்தை பார்த்து, “இப்படி கூட்டம் சேரக்கூடாது, கலைஞ்சு போங்க.” என்று கலைக்கப்பார்க்க, ஒரு சிலர் நகர்ந்து விட்டனர்.
கையில் போனுடன் அனைத்தையும் படம் பிடித்துக் கொண்டிருந்த சிலர் சுவாரஸ்யமாய் நடப்பவற்றை வேடிக்கை பார்க்க, முழங்கையை ஓங்கி நாக்கை துருத்தியவன் போனை பிடுங்கப் பார்க்க, எகிறிக்கொண்டு வந்தனர்.
“என்ன பிரச்சனைன்னு விசாரிக்காம எங்களை அடிக்க வரீங்க. போலீஸ் அராஜகத்தை கேட்க ஆளில்லைனு நினைச்சீங்களா?”
“எங்க வேலையை செய்ய விடாம குறுக்க நின்னு படம் பிடிக்குறேனு கேஸ் போட்டு உள்ள தள்ளவா உன்னை?” என்று அகிலனும் பதிலுக்கு எகிற,
“பொதுமக்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கத்தான் நீங்க இருக்கீங்க, ஆனா நீங்க எங்ககிட்டேயே பிரச்சனை பண்றீங்க.”
“யாருடா பிரச்சனை பண்றது? நீயா நானா?” என்று அகிலன் தன் நிலை விட்டு கீழிறங்க, வாக்குவாதம் முற்றியது.
“சார், சார்…” என்று அவன் கவனத்தை தன் பக்கம் திருப்பப்பார்த்தாள் அந்த பெண்.
“இரு மா, வரேன்.” என்ற இவன் முகம் எரிச்சல் காட்ட, வெளிப்படையாகவே சலித்தாள் அப்பெண்.
“பிரச்சனை எனக்கு சார். என்னனு கூட விசாரிக்காம அவங்க கூட மல்லுக்கட்டிட்டு இருக்கிறது நியாயமா?” என்ற அப்பெண்ணின் குரல் அவன் செவியை எட்டினாலும் அவன் செயலில் இறங்கவில்லை.
காக்கி சட்டை போட்டிருக்கும் தன்னையே ஒரு அலைபேசி வைத்துக்கொண்டு சாமானியன் மிரட்டுவதா என்று அகங்காரத்தில் போனை பிடுங்கும் முயற்சியில் இருந்தான் அகிலன். ஒரு கட்டத்தில் போனை பறித்தவன், மீண்டும் நாக்கை துருத்தி, விரல் நீட்டி எச்சரித்து அவனை செல்லும்படி செய்கை செய்ய,
“பாத்துக்கலாம் ப்ரோ, வாங்க.” என்று தங்களுக்குள் சமாதானமாக பேசி கலைந்து சென்றனர் அவர்கள்.
அவர்கள் செல்லவும்தான் அப்பெண் நினைவுக்கு வர, திரும்பிப் பார்த்தான். அங்கு அந்த இரு ஆண்கள் மட்டுமே இருந்தனர்.
“எங்க அந்த பொண்ணு?” என்று அவர்களிடம் கேட்க,
“சரியான ராங்கிதான் அந்த பொண்ணு. ஷேர் ஆட்டோல அந்த பொண்ணு எங்களுக்கு கீழ உக்காந்து இருந்துச்சு. தெரியாம என்னோட லேப்டாப் பேக் ஸிப் அந்த பொண்ணோட முடியில மாட்டிக்கிச்சு. அதுக்கு அந்த பேச்சு பேசுது.”
“இப்படி முடியை விரிச்சு போட்டுட்டு வந்தா எங்குட்டாவது மாட்ட தான் செய்யும்னு சொன்னா எங்ககிட்டேயே சண்டைக்கு வருது சார்.” என்றான் மற்றொருவனும்.
“இப்போ அந்த பொண்ணு எங்க?”
“ஏதோ ஆட்டோ வந்துச்சு ஏறி போயிடுச்சு.” என்று கைவிரித்தனர் இருவரும்.
“சரி, போங்க.” பிரச்சனை முடிந்தது என்று நினைத்து அவர்கள் இருவரை அனுப்பி வைத்தவனுக்கு அப்போது தெரியவில்லை பிரச்சனையே இனிமேல் தான் என்று.
