Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய்

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 2

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய்  –  2

 

 

‘’என்ன கஷ்டம்ங்க?  பொண்ணு பேர்ல உள்ள சொத்தை மாப்பிள்ளைப் பேருக்கு கேட்கறோம்.  நீங்க சொல்றத பார்த்தா தான் எனக்கு சந்தேகமாயிருக்கு’’.  உங்களுக்கு உண்மையிலேயே பொண்ணுக்கு அந்த சொத்தை கொடுக்கறதுல விருப்பம் இருக்கற மாதிரி தெரியலீங்களே……..?



Advertisement

உங்க சொந்தத்துல இருந்து போன் பண்ணி சரியாத்தான் சொல்லியிருக்காங்க……, அவங்களை நம்பாதீங்க………, அவங்களுக்கு சொத்தையெல்லாம் குடுக்கற ஐடியாவே இல்ல, ‘’பொண்ணை கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டு, சொத்தை அவங்களே ஆட்டைய போடனும்னு நினைக்கறாங்கன்னு சொன்னது சரியாதான் இருக்கு.’’

உண்மையிலேயே சொத்து குடுக்கறவங்களாயிருந்தா……  இப்படி மழுப்பி பேசமாட்டீங்களே…… ?  அப்ப உங்களுக்கு அப்படியான எண்ணமே இல்லை, எங்களை ஏமாத்தனும்னு பார்க்கறீங்க என்று நக்கலாக பேசினார்.

அவரது நக்கல் பேச்சைக் கேட்டு குமாருக்கும் மாதவிக்கும் கோவம் வந்தது.

Advertisement

அவர் பேசுவதைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்து வந்திருந்தவர்களுக்கு கூட கோவம் வந்தது.

Advertisement

அதுவரை அவர்கள் பேசும் பொழுது இடையில் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்,  குமாரைப் பார்த்து இப்படி சொன்னதும் அவர்களுக்கும் கோவம் வந்தது.

பிறந்ததிலிருந்து குமாரைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவரைப் பற்றி நன்கு தெரியுமாதலால் மாப்பிள்ளையின் தந்தை பேசிய அபாண்டமான பேச்சை ஏற்க முடியாமல், அங்கு வந்திருந்ததில் வயதில் முதியவர் ஒருவர் பேச துவங்கினார்.

ஏங்க எங்க வந்து என்ன பேசறீங்க?  அவங்க வீட்டுக்கு வந்து அவங்களையே குறை சொல்வீங்களா…….?  எதை நம்பி கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களுக்கு சொத்தை எழுதி கொடுக்க சொல்றீங்க….?

Advertisement

இல்லங்க…….?  பொண்ணைப் பெத்தவங்களாயிருந்தா…… பொண்ணுக்கு அப்புறம் பொண்ணுக்குதான் வரும்னு நம்பிக்கையோட இருக்கலாம்.  இவங்களோ வளர்த்தவங்கதான, நாளைக்கு எதுவும் ஏமாத்தி பொண்ணுகிட்டேயிருந்து வாங்கிக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயங்க…? என்றார் நியாயம் கேட்பதாக நினைத்து.

அட அறிவே…….. எனப் பார்த்தார் அந்த பெரியவர்.

”ஏங்க……. வாங்கறவங்களாயிருந்தா, இவ்வளவு நாள் வாங்கியிருக்க மாட்டாங்களா…… விட்டு வச்சிருப்பாங்களா……,?’’

நீங்க பேசறதே ஊர் உலகத்தில இல்லாத வழக்கமாயில்ல இருக்கு.  எவ்வளவு வசதியிருந்தாலும் சொத்து கொடுக்கறவங்க அவங்க வீட்டு பொண்ணு பேர்லதான எழுதி குடுப்பாங்க, அதுதான ஊர் உலக வழக்கமும்.

அது எப்படியோ இருந்துட்டு போகட்டுங்க…….. எங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க பையன் பேர்ல சொத்தை எழுதி வைச்சீங்கனா……. மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம், இல்லனா நாங்க கிளம்பறோம்.

‘’கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி நெஞ்சுல கொஞ்சம் கூட ஈரமில்லாம பேசற உங்களுக்கு எதை நம்பி சொத்தை எழுதி வைக்க முடியும்?  நீங்க மட்டும் ஏமாத்தமாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?  உங்க பேருக்கு சொத்தை எழுதி வச்சிட்டு, உங்க பின்னாடி எங்க பொண்ணு நின்னுட்டு இருக்கனுமா……..?’’

இப்படி அடுத்தவங்க வீட்டு சொத்தை கேட்கறோமேன்னு கொஞ்சக் கூட வெட்கப்படாம வியாக்கியானம் வேற பேசுவீங்களா……?  எடுக்கறது பிச்சை? இதுல என்ன கௌரவம் வேண்டியிருக்கு? என ஆத்திரமாக பேசினாள் மாதவி.

‘’இந்தாம்மா…… பார்த்துப் பேசு, மரியாதையில்லாம பேசற வேலையெல்லாம் வேணாம், ஆம்பளைங்க பேசிட்டிருக்கும் போது பொட்டச்சிங்களுக்கு நடுவுல என்ன நாட்டாமை?’’  அப்புறம் எங்க வீட்டு பொம்பளைங்களும் பேசுவாங்க……

‘’அடி செருப்பால, எங்க வந்து, யார பொட்டச்சின்னு கைக்காட்டி சொல்ற?’’

அந்த பொட்டச்சி சொத்துக்கு தான நாக்கத் தொங்கப் போட்டுட்டு இங்க வந்து உட்கார்ந்திருக்கே?  பேசுவாங்களாமில்ல, ஒரு போனைப் போட்டு வரதட்சணை கேட்டு மிரட்டுறீங்கன்னு, மொத்த குடும்பத்தையும் தூக்கி உள்ள வச்சிடுவேன் பார்த்துக்கோ…….?

‘’யார் வீட்டு சொத்துக்கு யார் ஆசைபடறது?  கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி பேசுறவங்க, கல்யாணம் முடிஞ்சதும், சொத்துக்காக எங்க பொண்ணை என்ன வேணா பண்ணமாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?’’  இனி நீங்களே விரும்பி கேட்டாலும் இந்த சம்பந்தம் நடக்காது கிளம்புங்க எல்லாரும், என இரு கையையும் கும்பிட்டு வெளியே செல்லும்படி கைக்காட்டினாள் மாதவி.

குமார் மாதவியின் ஆங்காரத்தை அதிர்ச்சியாகப் பார்த்திருந்தார்.  கல்யாணமான இத்தனை ஆண்டுகளில் இதுமாதிரியான மரியாதையில்லாத வார்த்தைகளை உபயோகித்து, அடுத்தவர்கள் மனது நோகும்படி என்றும் மாதவி பேசியதில்லை.  இன்று மாதவி பேசிய வார்த்தைகளின் வீரியம் அவரை அதிர்வுக்குள்ளாக்கியிருந்தது.

வந்திருந்த எல்லோரும் சென்றிருந்தனர்.  வீடே வெறிச்சோடி இருந்தது. மாதவி சோர்ந்து போய் தொய்வுடன் தலையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் சரிந்திருந்தாள்.

அப்படியே கண்மூடி அமர்ந்திருந்தவள், சில கணங்களுக்கு பிறகு, தன்னை சுதாரித்து, கண்ணைத் திறந்தாள்.  எதிரில் அமர்ந்திருந்த குமார் அவளையேதான் பார்த்திருந்தார்.  கணவரின் பார்வையைப் புரிந்தவள் போல்…, இப்ப என்னை எதுக்கு முறைக்கறீங்க?  அவங்க பேசினது மட்டும் சரியா…..? என்றாள்.

இதுவரைக்கும் பூர்ணிமாவை வளர்த்து ஆளாக்கின என் அம்மாகூட அவள் சொத்தைப் பத்தி இவ்வளவு உரிமையா பேசவோ, இல்ல விக்கவோ நினைச்சது இல்ல.  இன்னும் நிச்சயமே நடக்கல அதுக்குள்ள சொத்தை அவங்களுக்கு மாத்தி எழுதனும்னு கண்டிஷன் போடறாங்க.

அவங்க கேட்டது குடுக்கலைனா நம்மள குத்தம் சொல்வாங்களா…..?  உடனே நாம சொத்தை சுருட்டிக்க பார்க்கறோம், ஆட்டைய போடப் பார்க்கறோம்னு பேசுவாங்களா……?

இது எல்லாம் அந்த பன்னாடை செந்தில் பையனால வந்த பிரச்சனை.  அவன்தான் இவங்களை கிளப்பி விட்டிருக்கான்.  அதான் அவர்  சொன்னாரே, நம்ம சொந்தக்காரங்க தான் போன் போட்டு சொன்னாங்கன்னு.  அவன் மட்டும் என கையில கிடைச்சான் அவனை நார் நாரா கிழிச்சிடுவேன்,  என்றாள், இன்னும் கோவம் குறையாமல்.

குமாருக்கு இவளது பேச்சில் இன்னும் எரிச்சல் வந்தது.  அவளையே விடாமல் முறைத்து கொண்டிருந்தார்.

அவரது பார்வையின் பொருள் மாதவிக்குத் தெரியும்.  குமாருக்கு எதிலும் நாகரிகம் வேண்டும்.  பேசும் பேச்சு, செயல் என எல்லாவற்றிலும் மரியாதையாக நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர், இன்று மனைவியின் பேச்சில் வெறுப்பு வந்திருந்தது.

மாதவி, ம்ப்ச்……… சும்மா இப்படியே பார்க்காதீங்க, என்னமோ தப்பு எல்லாத்துக்கும் நான்தான் காரணம்ற மாதிரியிருக்கு என்றாள் சலிப்பாக.

‘’உன்கிட்டயிருந்து இதை நான் எதிர்பார்க்கல மாது………’’

‘’அவங்க உங்களைப் பேசுவாங்க, என்னை வாய மூடிட்டு வேடிக்கை பார்க்க சொல்றீங்களா…….?  இன்னைக்கே இப்படி பேசறவங்க, கல்யாணம் முடிஞ்சதும் என்ன வேணா பண்ண மாட்டாங்களா……?’’  இவங்களை நம்பி எப்படி பொண்ணை கொடுக்க முடியும்….?.

இவ்வளவு அவங்க பேசியும், அந்த மாப்பிள்ளைப் பையன் ஒன்னும் வாய திறக்காம உட்கார்ந்திருக்கான்.  இந்த மாதிரி சுய புத்தியில்லாத, அப்பா பேச்சுக்கு தலையாட்டற, முதுகெலும்பு இல்லாதவனுக்கு எல்லாம் பூர்ணிமாவை எப்படி கட்டிக் கொடுக்க முடியும்?

கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது பிரச்சனைனா கூட, அவங்களை பேச விட்டுட்டு இவன் வேடிக்கைதான் பார்ப்பான்.  நாம சத்தமா பேசனாலே அதிர்ந்து பயந்து போய் பார்க்கறவளை, இந்த மாதிரியான கும்பலை நம்பி எப்படி கல்யாணம் பண்ண முடியும்?

நீ பேசனதை நான் தப்பு சொல்லல, ஆனால் மரியாதை இல்லாம பேசினது தான் எனக்குப் பிடிக்கல?  உனக்கு விருப்பமில்லன்னா சம்பந்தம் வேணாம்னு சொல்லி அனுப்பியிருக்கலாமில்ல.   அதை விட்டுட்டு அநாகரிகமா நடந்துக்கற மாதிரி பேசினது எனக்குப் பிடிக்கல.

அப்படி பேசலன்னா அவங்க கிளம்பியிருப்பாங்கன்னு நீங்க நினைக்கறீங்களா……..?  அவங்க எல்லாத்துக்கும் தயாராதான் வந்திருப்பாங்க.  எப்படியோ நம்ம வீக்னஸ தெரிஞ்சுகிட்டாங்க….

‘’என்ன…, அப்படிப் பார்க்கறீங்க?  அவர் பேசினதிலிருந்தே உங்களுக்கு தெரியலையா?  நாம செந்திலுக்கு பயந்து கல்யாணத்தை சீக்கிரம் முடிக்கிறோம்னு அவங்களுக்கு தெரிஞ்சிதான் வந்திருக்காங்க.’’   தைரியமா நம்ம கிட்டயே வந்து சொத்தை பையனுக்கு எழுதி குடுத்தாதான் கல்யாணம்னு பேசறாங்க.  அவங்களைப்பத்தி இதுலேயே தெரியலையா?

செந்தில் போன் பண்ணி ஏதோ இல்லாதத பொல்லாததுன்னு சொல்லியிருப்பான்.  ஒன்னும் ஒன்னும் இரண்டுன்ற மாதிரி இவங்களே யோசிச்சிட்டு, அவங்களை விட்டா நமக்கு இப்ப வேற வழியில்லன்ற மாதிரி வந்து பேசறாங்க.

இவங்க உண்மையிலே நியாயமானவங்களா இருந்திருந்தா செந்தில் போன் போட்டு பேசினதும், நம்மகிட்ட தான நேரா கேட்டிருக்கனும், இதமாதிரி சொல்றாங்க என்னங்க விஷயம்னு……, நேரிடையா கேட்டிருக்கனும், இல்ல பெருந்தன்மையானவங்களா இருந்தா பெரிசா எடுக்காம விட்டிருக்கனும்.

இரண்டுமே இல்லையே, இந்த பிரச்சனையை சாக்கா வச்சு எப்படி பூர்ணிமா பேர்ல இருக்கற சொத்தை அடைய நினைக்கலாம்னு தான திட்டம் போட்டு வந்தாங்க.

நீங்களே நினைச்சுப் பாருங்க கல்யாணம் வேணாம்னு நினைக்கறவங்க முன்னாடியே இதைப் பத்தி பேசாம, எதுக்கு நிச்சயம் பண்ற மாதிரி நேரா கிளம்பி வந்தாங்களாம்.

‘’நம்மகிட்ட நேரா வந்து கழுத்தில கத்திய வைக்கறது போல பேசினா, நாம கடைசி நேரத்துல என்ன பண்றதுன்னு தெரியாம அவங்க சொல்றதுக்கு ஒத்துப்போம்னுதான ஐடியா பண்ணி வந்திருப்பாங்க,’’ என மாப்பிள்ளை வீட்டாரின் எண்ணத்தை சரியாகக் கணித்துச் சொன்னாள் மாதவி.

அவள் சொல்லச் சொல்லதான் குமாருக்கு இப்படியும் இருக்குமோ என தோண ஆரம்பித்தது.  மாப்பிள்ளையின் அப்பா பேசும் பொழுதே இது செந்திலின் வேலையாகத் தான் இருக்கும் என ஊகி்த்திருந்தார்.  ஆனால் மாதவியளவு யோசித்திருக்கவில்லை குமார்.

மாப்பிள்ளையுடைய தந்தையின் எண்ணமும் அதுவே.  வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்னமே, அனைவரையும் அவரின் பேச்சின் மூலம் அடக்கி கூட்டி வந்திருந்தார்.

செந்தில் போனில் பேசியதும், சென்னையிலிருந்த உறவினரின் மூலம் விசாரித்து அவனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டார்.

ஆக, அவனுக்குப் பயந்து தான் யாரையும் அழைக்காமல், அவசர அவசரமாக நிச்சயம் செய்கிறார்கள் பெண் வீட்டுக் காரர்கள்.  எங்கே அவன் இடையில் புகுந்து திருமணத்தை நிறுத்தி விடுவானோ என பயந்து இருக்கிறார்கள் என சரியாக கணித்திருந்தார்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அவர்களிடம் நைச்சியமாக பேசி ‘’பூர்ணிமாவின் மேலிருக்கும் சொத்தை தன் மகன் பேருக்கு மாற்றி எழுதி வாங்கி விட்டால், பின் தன் ராஜ்ஜியம்தான் என மனக்கோட்டைக் கட்டி முன்னேற்பாட்டுடன் வந்திருந்தார்.’’  மாதவி போலிசுக்கு போவேன் என்று பேசவேதான் பயந்து மேலே ஏதும் பேசாமல் சென்றிருந்தார்.

அவர் அறியாதது மாதவியைப் பற்றி, பூர்ணிமா, குமாரைப் பற்றி எல்லாம் விசாரித்திருந்தவர், மாதவியைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

பூர்ணிமாவை அவளது அறியாப் பருவத்திலிருந்து தாயைப் போல் பேணிக் காப்பவள்.  தங்கையின் மீது அதிக அக்கறை கொண்டவள்.

செந்திலால் பூர்ணிமாக்கு பிரச்சனை என்றதுமே, அவளை தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துக் கொண்டாள்.  பூர்ணிமா சின்ன வயதிலிருந்தே பயந்த சுபாவமுடையவள்.  அவளுக்கு என்ன வேண்டுமென்பதை கூட வாய் திறந்து கேட்க மாட்டாள்.

அந்த மாதிரி பூஞ்சை குணமுடையவளை, இப்படிப்பட்ட வல்லூருகளை நம்பி எப்படி கொடுப்பது என மறுத்துவிட்டாள்.

ஹாலில் நடந்த அத்தனையும் கேட்டு விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள் பூர்ணிமா.  அழக்கூட தோன்றாமல் சுவற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.  அறையின் உள்ளே வந்த மாதவி பூர்ணிமாவிடம் வந்து அவளது தோளைத் தொட்டு அசைத்து நிகழ்வுக்கு கொண்டு வந்தாள். திரும்பி மாதவியைப் பார்த்தவள் அவளைக் கட்டிக் கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

ம்ப்ச்……. விடு, ‘’நீ செஞ்ச புண்ணியம், உன்னை அவங்க கிட்டேயிருந்து காப்பாத்தியிருக்குன்னு நினை.  இதே கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி நடந்திருந்தா என்ன பண்ண முடியும்.  அதுக்கு இது எவ்வளவோ தேவலை.  ஆரம்பத்திலேயே அவங்களைப் பத்தி நமக்கு தெரிய வந்தது நல்லதாப் போச்சு,’’ என அவளை சமாதானப் படுத்தினாள்.

அன்று முழுவதும் சோகமாகவே இருந்தவளை, மாதவிதான் சமாதானப் படுத்தி உண்ண வைத்து தூங்க வைத்தாள்.  மறுநாள் எப்பவும் போல் பூர்ணிமா வேலைக்கு கிளம்பி விட்டாள்.  வீட்டில் இருந்தால்…. கண்டதையும் யோசிப்போம் என பயந்தே வேலைக்கு வந்திருந்தாள்.

நல்லா ஸ்ட்ராங்கா……. ஒரு இஞ்சி டீ குடுப்பா……., வடை சூடா இருக்கா…….?

இருக்கு, என தலையசைத்தான் மதுசூதனன்.

இரண்டு மெது வடையும் குடுப்பா………

அங்கு அடுக்கி வைத்திருந்த பிளேட்டில் இருந்து ஒரு பிளேட்டை எடுத்து அதன் மேல் சின்ன சின்ன சைஸில் கட் செய்து வைத்திருந்த வாழையிலை ஒன்றினை வைத்து, அதில் இரண்டு மெது வடையை எடுத்து வைத்து, அதன் மேல் சட்னியையும் ஊற்றி  கொடுத்தான்.

அதனோடு அவர் கேட்ட மாதிரியான ஸ்ட்ராங்கான இஞ்சி டீயையும் போட்டுக் கொடுத்தான் மதுசூதனன்.  பக்கத்தில் அவன் அப்பா கலியமூர்த்தி வடையை தட்டி எண்ணெய் சட்டியில் போட்டு எடுத்துக் கொண்டிருந்தார்.

கலியமூர்த்தி, மது நீ வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வாயேன், நான் பார்த்துக்கறேன்.

மதுசூதனன், இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு போறேன் ப்பா…….., பசியில்ல….

மது, உனக்கு டீ வேணுமாப்பா…………

கலியமூர்த்தி, கொஞ்ச நேரம் ஆகட்டும், இப்ப தான சாப்பிட்டு வந்தேன் என மறுத்துவிட்டார்.  தனக்கு மட்டும் ஒரு டீயைப் போட்டு எடுத்துக் கொண்டு கடையின் உள் பக்கமாக இருந்த பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டு சிறுக சிறுக குடித்துக் கொண்டே, ரோட்டில் வருவோர் போவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்

சிதம்பரம் போவதற்கான பஸ் வந்து நின்று அதிலிருந்து மக்கள் இறங்கிக் கொண்டிருந்தனர்.  எப்பொழுதும் அந்த பஸ்ஸில் தான் பூர்ணிமா வேலைக்குச் செல்வாள்.  இன்று அவள் வருவதற்கு கொஞ்சம் கால தாமதமானதால், அரக்க பரக்க ஓடி வந்து பஸ் எடுப்பதற்கு முன் ஏறியிருந்தாள்.

இதை அவனது டீக்கடையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் மதுசூதனன்.  கண்கள் மட்டும் எதிரில் இருந்த சாலையை நோக்கிக் கொண்டிருந்ததே தவிர அவனது மூளை எல்லாம் வேறு சிந்தனையில் இருந்தது.

கடையைபற்றிதான் சிந்தித்து கொண்டிருந்தான்.  தொழிலுக்காக அவனுக்கு தெரிந்த இடத்தில் கடனாக வட்டிக்கு பணம் கேட்டிருந்தான்.  அதற்கு இன்று நேரில் வந்து பார்க்கச் சொல்லியிருந்தார்கள்.  அவனது சிந்தனை முழுக்க அதைப்பற்றி தான் இருந்தது.

டீயை குடித்து முடித்தவன் அடுத்தடுத்து வந்த கஸ்டமர்களை கவனிக்க என்று வேலையில் பிஸியானான்.  முட்லூரில், கடலூர் டூ சிதம்பரம் செல்லும் ஹைவேஸ் ரோட்டில் அமைந்துள்ளது அவர்களது கடை.  அது ஒரு ஜங்சன் என்று கூட சொல்லலாம்.  பஸ் நிறுத்தத்தில் அமைந்துள்ள இவர்களது கடையைப் போலவே பலதரப்பட்ட கடைகள் இருந்தன.

அவனது அப்பா காலத்தில் இந்த இடத்தில், இரண்டு மூன்று கடைகள்தான் இருந்தது.  இப்பொழுது எண்ணிக்கையின்றி அதிகமாகியிருந்தது.  இவனது அப்பாக்கு அந்த காலத்தில் இருந்தே டீக்கடை மட்டும் தான்.  அங்கே அவரைப் போல சின்னதாக தொழில் ஆரம்பித்தவர்கள் எல்லாம் இன்று தொழிலில் வளர்ச்சி அடைந்து முன்னேறியிருந்தனர்.

ஆனால் ‘’கலியமூர்த்தி மட்டும் அன்று ஆரம்பித்தது போலவே இன்றும் அதே டீக்கடைதான்.’’

கலியமூர்த்தி ஜமுனா தம்பதியருக்கு மதுசூதனன் பானு என இரண்டு மக்கள்.  மதுசூதனனை சின்ன வயதிலிருந்தே கடை வேலைக்கு கலியமூர்த்தி பழக்கப்படுத்தியிருந்தார்.

படிப்பிலும் அவனுக்கு பெரிதாக ஆர்வம் இல்லையென்பதால், எட்டாவதோடு அவனது படிப்பு நின்றிருந்தது.  படிப்புதான் மந்தமே தவிர தொழிலில் திறமையானவன்  எட்டாவதோடு தந்தையுடன் கடைக்கு வந்து விட்டான்.

தந்தையிடம் சொல்லிவிட்டு காலை உணவிற்காக வீட்டிற்குச் சென்றான்.  இவனைப் பார்த்ததும் பானு ”ம்மா….. அண்ணன் வந்துடுச்சி எனக் கத்தினாள்.”

”ஏன்டி, இந்த கத்து கத்தறவ, போய் அடுப்பை பத்த வச்சி கல்லை எடுத்துப் போடு இதோ வரேன் என்று கழுவ சென்றார்.”

பானு கேஸை ஆன் செய்து, தோசைக் கல்லை எடுத்து அடுப்பின் மேல் வைத்தாள்.  மதுசூதனன் சாப்பிடுவதற்கு ஏதுவாக தட்டு, சொம்பில் தண்ணீர் என எடுத்து வந்து வைத்தாள்.  அதற்குள் ஜமுனா கைகளை தன் சேலை முந்தியில் துடைத்தவாறே வந்து தோசை ஊற்ற ஆரம்பித்தார்.

ஜமுனா தோசை சுட சுட, பானு எடுத்துப் போய் மதுசூதனனுக்கு சாப்பிட வைத்தாள்.

”நீ சாப்பிட்டியாடா……?”

” ஹ்ம்ம்….. ஆச்சு ண்ணே.  நீ ஏன் இவ்வளவு லேட்டு இன்னைக்கு?”

மது, கடையில கொஞ்சம் கூட்டம் அதிகம், அதான் வர லேட்டாகிடுச்சு.  ஐந்து தோசைகளை சட்னியில் தோய்த்து சாப்பிட்டவன், சொம்புத் தண்ணீரை எடுத்து தொண்டையில் சரித்துக் கொண்டே போதும்மா…… என எழுந்துக் கொண்டான்.

மது, ஏன்? ம்மா…… காலையிலேயே தோட்டம் க்ளீன் பண்ண வேண்டியது தான?  வெயில் நேரத்துல போய் வேலைப் பார்க்கற என்றான் அக்கறையாக.

காலையில அம்மா சரசு அத்தை வீட்டு பங்ஷனுக்கு போயிட்டு இப்பதான் வந்தாங்க அண்ணே.

ஓஹ்……. என தலையசைத்துக் கொண்டே, தரையிலேயே படுத்து விட்டான்.

ஏன் ய்யா….? தரையில படுக்காதன்னு உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது, உள்ளாற போய் படுக்க வேண்டியதுதான.  ஏய் அவனுக்கு தலைகாணி கொண்டு வந்து கொடு .

பானு உள்ளே சென்று ஒரு தலையணை கொண்டு வந்து, அவனது தலையைத் தூக்கி அதில் வைத்தாள்.  அண்ணன் அருகிலேயே அவளும் உட்கார்ந்து கொண்டாள்.

ஜமுனாவும் அவன் பக்கத்தில் வந்து காலை நீட்டி அமர்ந்தவர், சரசு பையன் சங்கருக்கு நாலு நாள்ல கல்யாணமில்ல, அதான் இன்னைக்கு அவங்க வீட்டுல பந்தகால் நட்டாங்க, என்னை வரச் சொல்லி கூப்பிட்டிருந்தாங்க, காலையில அங்க போனதால எதுவும் செய்ய முடியல.

உன் தங்கச்சி லீவுல வீட்ல இருக்கான்னு தான் பேரு, ஒரு வேலை செய்யறாளா…..?

பானு, அம்மா…. எக்ஸாம் இருக்கு,  படிக்க தான் லீவ் விட்டிருக்காங்க, உனக்கு வேலை பார்க்க இல்ல….?

என்னத்த படிக்கறயோ, எப்பப்பாரு அந்த போனைத் தான் நோன்டிட்டிருக்க..

அண்ணா பாருன்னா….. இந்த அம்மா எப்பப் பார்த்தாலும் என்னை ஏதாவது சொல்லிட்டேயிருக்கு என்று சினுங்கிக் கொண்டிருந்தாள்.

ம்க்கும், போற இடத்துல உங்க அண்ணன் தான் வந்து வேலை செய்யப் போறானா….?  இங்கயே நாலு வேலை செஞ்சு பழகனாதான, அங்க போய் நல்லபேர் எடுக்க முடியும்.

ஏய்யா….. மது உன்கிட்ட ஒரு சேதி பேசனும்னு வந்து உட்கார்ந்தேன், இவ அதுக்குள்ள பேச்ச மாத்திட்டா….

மது எழுந்திரிக்காமல் தலையை மட்டும் நிமிர்த்தி தாயைப் பார்த்தான் என்னவென்று……….?

அது……  ஒரு சம்பந்தம் வந்திருக்கு, பொண்ணு படிச்சிருக்கு,    பார்க்க இலட்சணமாவும் இருக்கு.  நீ என்ன சொல்றே…….?

ம்மா….. ‘’படிச்ச பொண்ணெல்லாம் வேணாம்னு நான்தான் சொல்லிருக்கேன் இல்ல, அப்புறம் ஏன்? படிச்ச பொண்ண பார்க்கறீங்க.  எனக்கு அதெல்லாம் சரி வராதும்மா…..?  படிக்காதப் பொண்ணாவே பாருங்க.’’

‘’ஊருல இருக்கற எல்லாப் பொண்ணும் படிச்சிருக்கு, நானும் சல்லடைப் போட்டு தேடிட்டேன், எங்கப் போய் படிக்காதப் பொண்ணை பார்க்கறது, இனிமே உனக்காகத் தான் பொண்ணு பிறந்து படிக்காம வரனும்’’ என்றார் சலிப்பாக………

ஜமுனாவின் பேச்சைக் கேட்டு பானுக்கு சிரிப்பு வந்தது.  மதுசூதனன் திரும்பி அன்னையை முறைத்தான்.

‘’பின்ன என்னடா?  நீ ஒருத்தன் படிக்கலைனா…..? எல்லாருமே படிச்சிருக்கமாட்டாங்களா…..?  இந்த காலத்துல யாரு படிக்காம இருக்காங்க.  எந்த பொண்ணைப் பார்த்தாலும் குறைஞ்சது இரண்டு டிகிரியாவது முடிச்சிருக்குங்க.  இதுல படிக்காத பொண்ணுக்கு நான் எங்க போறது’’.

ஏன் என்னை முறைக்கற?  நீயும் ஒழுங்கா படிச்சிருந்தா…. இந்நேரம் வேலை, கல்யாணம்னு எல்லாம் நடந்து முடிஞ்சிருக்கும், ‘’உனக்கு இரண்டு குத்து இளையவன், அந்த சங்கர், அவனுக்கு கூட கல்யாணம் முடியப் போகுது’’ என அங்கலாய்த்தார்.

‘’அசதியா வந்து கொஞ்சம் மனுஷன் சாய முடியுதா?’’  இந்த வீட்டுல.  காலையிலேயே ஆரம்பிச்சிட்ட உன் பராணத்தை என அலுத்துக் கொண்டே கண்ணை இறுக மூடிக்கொண்டு திரும்ப படுத்துக் கொண்டான்.

 

 

தொடரும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!