Skip to content
Post Views: 1,249
அத்தியாயம் 7
வீட்டினுள் நுழைந்தவள் கைப்பையை சோபாவில் போட்டு விட்டு பொத்தென்று அமர்ந்தாள். மனம் முழுவதும் கோபம் கோபம் மட்டுமே.. கோபத்தை அடக்க முடியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டவளின் அலைபேசி தன் இருப்பிடத்தை காட்டியது…
Advertisement
எரிச்சலுடன் அலைபேசியை கையில் எடுத்தாள்.ராம் தான் அழைத்து இருந்தான். அனைத்திற்கும் முதல் காரணம் இவன் தானே என நினைத்தவள் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
“ஹலோ…” என்று எதிர் பக்கம் ராமின் குரல் கேட்டதும் தான் தாமதம் படப்படவென வெடிக்க தொடங்கி விட்டாள்.
Advertisement
Advertisement
“என்ன நினைச்சுட்டு நீ இப்படி பண்ணிட்டு இருக்க… வரவர நீ பண்றது சுத்தமா சரியில்ல ராம்… இப்ப எதுக்கு உன் பிரிண்ட்டை இங்க அனுப்பி வைச்சு இருக்க..ஒழுங்கா போக சொல்லிடு இல்லை நடக்கிறதே வேற…” கிட்டத்தட்ட கத்தினாள்.
அவளது கத்தலில் “ஸ்ஸ்..” என்று காதில் சுண்டு விரலை விட்டு ஆட்டிக் கொண்டே
Advertisement
“உனக்கும், இந்த வாண்டுக்கும் எப்ப பாரு காதுல காத்தறதே வேலையா போச்சு…” என்றான். வாண்டு என்ற சொல்லில் கண்களை இறுக மூடித் திறந்தவள்
“அண்ணா…” என்றழைத்தாள் அழுத்தமாக…
அவளது குரலில் தெரிந்த மாற்றத்தில் நாக்கை கடித்தவன் “சரி ஓகே.. அவனேங்க உன் பக்கத்துலயா இருக்கான்..” எனக் கேட்டான். இத்தனை நேரம் அவள் கத்தியது எல்லாம் வீண் என்பதை போல…
“ஆமா என் மடியில இருக்கிறான். அவன்ட போனை தரவா…” பல்லைக் கடித்தபடி கேட்டாள்.
“ம்ப்ச்…” என்றவன்
“எங்க இருக்கான் துகி…” தற்பொழுது ராமின் குரல் அழுத்தமாக ஒலிக்கவும்
“பிள்ளைங்க இரண்டு பேரையும் கூட்டிட்டு வெளியில போயி இருக்கான்…” என்றாள் வேண்டா வெறுப்பாக…
நிமிடம் எதிர்ப்புறம் பதிலில்லை
“ஹலோ…அண்ணா இருக்கியா டா…” துகியின் குரலில் தன்னிலைக்கு வந்தவன்
“ம்… இருக்கேன்…” என்றவன் நீண்ட நெடிய பெருமூச்சுடன்
“அவனை கொஞ்சம் நல்லா பார்த்துக்க துகி…” என்றான் மெல்லிய குரலில்.
“அவன் பண்ணதுக்கு மடியில வைச்சு கொஞ்சறது தான் பாக்கி.. நீ சொல்லிட்டல்ல இனி அதையும் பண்ணிடறேன்…” எரிச்சலாக கத்த எதிர்ப்புறம் அழைப்பு துண்டிக்கப் பட்டது…
“ப்ரெண்ட்டை சொன்னா நோப்பாளம் பொத்துக்கிட்டு வந்துடும்…மூனு வருசமா கண்டும் காணாம இருந்தவன் திடீர்னு வந்து பேசும் போதே சுதாரிச்சு இருக்கணும்…” முனகிக் கொண்டே அலைபேசியை சோபாவில் போட்டுவிட்டு அப்படியே படுத்து விட்டாள்.
மனம் நிலைக் கொள்ளாமல் தவித்தது. இத்தனை பெரிய துரோகம் செய்தும் தாய், தந்தை அண்ணன் என்று அனைவரும் அவன் பக்கம் இருப்பது வேதனையை கொடுத்தது.
“நீ மட்டும் என்ன பண்ற…அவனை பார்த்தாலே அவன் பண்ணதை மறந்துட்டு தானே நின்ன…’ என்ற எள்ளல் குரலில் மனம் சொல்ல. அதற்கு பதில் சொல்லாமல் தலைக் குனிந்தாள்.
அவளது தலை தாழ்ந்ததை கேலியாக பார்த்த மனமோ ‘என்ன கன்றாவி காதலோ… அவன் பண்ண துரோகத்தையும் மீறி அவனை ரசிக்கிற, எதிர்பார்க்கிற, அவனுக்காக ஏங்குற… எல்லாத்தையும் மறந்துட்டு சகஜமா பேச வேற செய்யற. இப்படியெல்லாம் பண்ண கேவலமா இல்லயா உனக்கு…’ என கேட்ட மனதிற்கு என்ன பதில் கூறுவாள் அவளும். மணாளன் செய்த அனைத்தையும் மறந்து விட்டேன் என்றா? இல்லை அவன் என்ன செய்தாலும் அவன் மீதிருக்கும் காதல் குறையவில்லை என்றா? அப்படி சொல்ல அவளுக்கே கூசியது.
மனம் கேட்கும் ஓவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள்… மனம் அதையும் இதையும் பேசிப் பேசியே அவளை கொலையாய் கொன்றது…
ஒன்று இரண்டு மூன்று என்று மொத்த மனமும் ஒன்றையொன்று வார்த்தைகளால் போர் தொடுத்துக் கொண்டிருந்த நேரம் துகி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தாள்.
அதேநேரம் குழந்தைகளுக்கு பிடித்த அனைத்தையும் வாங்கி கொடுத்துவிட்டு வீடு வந்து சேரவே இரவு பத்து மணியை கடந்த்திருந்தது.
வரும் வழியிலேயே சரண்யா உறங்கி விட சரண் மட்டும் கொட்டக் கொட்ட விழித்திருந்தான். வாகனம் நிறுத்துமிடத்தில் (பார்கிங் ஏரியாவில்) காரை நிறுத்தி விட்டு சரண்யாவை தூக்கி கொண்டவன் சரணை கைப்பிடித்து வீட்டினுள் அழைத்து சென்றான்.
வீட்டினுள் நுழைந்தவனின் கண்களில் சோபாவில் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த துகிரா விழுந்தாள். நிமிடம் தன் கண்ணாட்டியை ஆழ்ந்து பார்த்தவன் தங்களது அறைக்குள் நுழைந்தான்
சரண்யாவை படுக்கையில் கிடத்தி விட்டு சரணிடம் திரும்பியவன் “ப்பாப்பா கூட படுத்துக்க குட்டி…” என்றான்.
“எனக்கு தூக்கம் வரல… ” என்றான் கண்களை உருட்டி.
“அது சரி…சும்மா படுத்துக்க…நான் அம்மாவை கூட்டிட்டு வரேன்…” என்றதும் சிறிது யோசித்து விட்டு
“ஓகே…” என்றான்.
‘ அடேயப்பா…ரொம்ப தான்… அப்படியே இவன் அம்மாவை போல பண்றான் பாரேன்…’ மனதிற்குள் நினைத்து கொண்டே அறையை விட்டு வெளியில் வந்தான்..
சோபாவில் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த மனைவியை பார்த்தவன் கைகள் தன்னாலயே மங்கையின் கன்னத்தை வருடியது.. மெத்து மெத்தென இருந்த கன்னங்களில் இதழ்கள் பதித்தால் என்னவென்று தோன்றிய கணம்
‘அவளோட கால் எங்க எட்டுமோ அங்க மிதி விழும் பரவாயில்லயா?…’மனம் கேட்கவும்
“நீ என்கூட இருக்கிற வரைக்கும் நான் பிரம்மச்சாரியா தான் டா இருக்கணும்…” கடுப்படித்தவன் மனைவியை பூ போல ஏந்தி கொண்டான் தனது கைகளில்…
ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தவளுக்கு சட்டென காற்றில் மிதப்பது போலிருந்தது. இத்தனை நேரம் கத்திக் கொண்டிருந்த மனங்கள் மாயமாய் மறைந்தன… அக்கணம் மெல்ல் இமைகளை பிரித்தாள் துகி…
கண்களுக்குள் தன் காதல் கணவன் விழுந்தான். அவனது முகத்தையே இமைக்காது பார்த்தவளின் இதழ்கள் புன்னகையை பூசிக் கொண்டது.
மனைவியை கைகளில் தாங்கிக் கொண்டு செல்வதாலோ என்னவோ ஆடவனின் நெற்றியில் முத்து முத்தாக வியர்க்க ஆரம்பித்தது. அது அவனது கன்னத்தில் வழிந்து அவள் மீது விழுந்தன… ஆடவனின் வியர்வை துளிகளின் ஈரத்தை தன்னுள் உணரவும் தான் நடப்பது கனவல்ல நிஜம் என்று புரிந்தது பெண்ணிற்கு.
சட்டென்று அவனது கைகளில் இருந்து இறங்கியவள் “என்ன பண்ற…” எனக் கேட்டாள்.
அவளது குரலில் கடுமை குடியேறிருந்தது.
அதை அவனும் உணர்ந்து தான் இருந்தான் “என்ன பண்னேன்னு உனக்கு தெரியலயா?..” புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டான்.
” என்னைத் தொட்டு தூக்கிட்டு போக என்ன ரைட்ஸ் இருக்கு உனக்கு…” எனக் கேட்டவளது வார்த்தையில் அத்தனை அழுத்தம்.
“இன்னும் நமக்கு டிவோர்ஸ் ஆகலை.. இந்த ஒரு காரணம் போதாதா உன்மேல எனக்கு என்ன ரைட்ஸ் இருக்குன்னு சொல்ல..” புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டவனை முறைத்தாள் துகி.
“இப்பவே டிவோர்ஸ் தரணும்னாலும் நான் ரெடி தான்.. அதனாலே கொஞ்சம் தள்ளியே நில்லுங்க…” என்றாள் மிடுக்காக
அவளது பேச்சில் கோபம் வந்தது புருவத்தை உயர்த்தி “தள்ளி நிக்கணுமா?” எனக் கேட்டான்.
“எஸ் தள்ளி தான் நிக்கணும்…” என்றதும் இன்னும் கோபம் வர
மனைவியை நெருங்கியவன் பட்டென அவளது இதழ்களை அழுத்தமாக பிடித்து “ரொம்ப பேசற இந்த வாய்க்கு கண்டிப்பா தண்டனை தரணும்ன்னு என் மனசு சொல்லுது..” அழுத்தமாக பிடித்த இதழ்களை பூ போல வருடினான்.
பட்டென அவனது கைகளில் ஒன்று போட்டாள். அதில் கடுப்பானவன் இன்னும் நெருங்கி நின்று அவளது இதழ்களை இன்னும் அழுத்தமாக பற்றி தன் பக்கம் இழுக்க அவளது கண்கள் நெருப்பை பொழிந்தது.
அதையெங்கு அவன் கவனித்தான். அவளது ரோஸ் நிற இதழ்களை தான் விடாமல் பார்த்து கொண்டிருந்தான். மறவோனது பார்வை மெல்ல மாறியது.அவனது இதழ்கள் வதுகையின் இதழின் சுவையை அறிந்திட துடித்தன…
அக்கணம் “அப்பா.. ” என்ற சரணின் குரலில் இம்மியளவு நெருக்கத்தில் இருந்த இருவரும் சட்டென்று விலகி நின்றனர்.
“அம்மாவை அடிக்க போறீங்களா?..” தன் சின்ன கைகளை இடுப்பில் வைத்தபடி யாதவை முறைத்து கொண்டே கேட்டான்.
அவனது கேள்வியில் “ஊப்..” என்று காற்றை வாயில் நிரப்பி வெளியிட்டவன் சரணை தூக்கியப்படி “அப்பா குட் அப்பா தானே..” எனக் கேட்டான். சட்டென்று ஆமென்று தலையாட்டினான் சிறுவன்.
“அப்பறம் எப்படி அம்மாவை அடிப்பேன். குட் அப்பா எல்லாம் அம்மாவை அடிக்க மாட்டாங்க. ஆனா பேட் அம்மா எல்லாம் அப்பாவை அடிப்பாங்க,திட்டுவாங்க,ஏன் முறைக்க கூட செய்வாங்க…” ஓரக்கண்ணால் துகியை பார்த்தபடி அபிநயத்தோடு கூறினான்.
யாதவை முறைத்துவிட்டு
மகனிடம் திரும்பியவள் “அப்ப நான் பேட் அம்மாவா?..” கேட்டாள் துகி. அதற்கு சட்டென பதில் சொல்லாமல் கன்னத்தில் கை வைத்து யோசிப்பது போல் பாவனை செய்தான் வாண்டு.
பிள்ளையின் செய்கையில் யாதவ் இதழ்களை கடித்து சிரிப்பை அடக்க முயற்சி செய்ய, இவளோ கணவனை மேலும் முறைத்தாள்.
அக்கணம் “அம்மு எப்பவும் குட் அம்மு தான்..”என்றபடி உள்ளே நுழைந்தாள் சரண்யா…
மழலை மொழி எத்தனை அழகோ அதைவிட பாதி உறக்கத்தில் எழுந்து பேசும் மழலையின் குரல் அத்தனை அழகு. கண்களை தேய்த்து கொண்டே வந்த இளம் சிட்டை அள்ளிக் கொள்ள தோன்றியது யாதவிற்கு.
அதற்குள் “அழகு..” என்று துகி இளையவளிடம் செல்ல… மகளை பார்த்தது பார்த்தபடி நின்றான் யாதவ்.
தன்னை நெருங்கிய தாயை பார்த்துவிட்டு தந்தையை பார்த்தாள். அவனோ முகத்தை சோகமாக வைத்துக் கொள்ள “அப்பாவும் ரொம்ப ரொம்ப குட் அப்பா…” என்றாள். அவளது ‘ரொம்ப’ வில் துகி பிள்ளையை முறைக்க,யாதவோ சத்தமாக சிரித்தான்.
“வாங்க மா…” என்று கை நீட்ட குடுகுடுவென ஓடி சென்று தந்தையின் அருகில் நின்றாள். சரணை ஒரு கையில் வைத்தபடியே குனிந்து சரண்யாவை தூக்கி கொண்டவன் மனைவியை பார்த்தவன்
“எப்படி…” என்பதை போல் புருவத்தை ஏற்றி இறக்கினான்.
“க்கும்…” உதட்டை சுழித்து அழகு காட்டியவள் சமையலறை நோக்கி நடந்தாள்.
இரு பிள்ளைகளையும் கையில் ஏந்தியபடி நின்ற கணவன் இவளது கண்களுக்கு கவிதையாய் தெரிந்தான். நிமிடம் அங்கு நின்றாலும் அவளையும் அறியாமல் அவனை ரசித்து விடுவோம் என்று நினைத்து தான் சமையலைக்குள் நுழைந்து கொண்டாள்.
சில நிமிடங்களில் தன்னை நிலைப்படுத்தி கொண்டவள் பாலை காய்ச்சி வெளியில் சென்றாள்.
முற்றத்தில் மூவரும் இல்லாமல் இருக்கவும் நேராக தனது அறையை நோக்கி நடந்தாள். அவளது படுக்கையில் அத்தனை உரிமையாய் படுத்திருந்த ஆடவனை இமைக்காமல் பார்த்தாள்.
‘ஒழுங்கா எழுந்து போ…’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. ஆனால் குழந்தைகள் இருவரும் அவனின் மார்ப்பில் பந்தமாய் படுத்திருந்தனர். கண்களை இறுக மூடி திறந்தவள் ஒன்றும் சொல்லாமல் பாலை பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு சோபாவை நோக்கி நடந்தாள். குழந்தைகள் அழைத்தும் கூட மாட்டேன் என்றுவிட்டு அறையில் இருந்த சோபாவில் படுத்து கொண்டாள்.
அடுத்த சில நிமிடங்களில் உறங்கியும் போனாள். நீண்ட நாட்களுக்கு பிறகு படுத்ததும் உறங்கி இருந்தாள். அவனது அருகாமை கொடுத்த சுகமோ?
துகி உறங்கி விட்டதும் அவளைத் தூக்கி தனது அருகில் கிடத்தி கொண்டான் யாதவ்.
கண்ணாளானின் மூச்சுக் காற்றை சுவாசித்த பெண்ணின் இதழ்கள் தூக்கத்திலும் விரிந்தது… பெண்ணின் இதழ்களின் விரிப்பை பார்த்தவனது இதழ்களும் புன்னகையை பூசிக் கொண்டது அதே கணம் அவளது பிறை நெற்றியில் தன் முதல் முத்திரையை அழுத்தமாக பதித்தான்.
கோபத்தின் மொழி
அறிந்தேனடி….!!!
உன் விழி
மொழியால்..
******
ஆதவனின் செந்நிற கதிர்கள் தரணியின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தும் நேரம் கண்களை மெல்ல திறந்தாள் துகிரா… தூக்கத்தில் தெரியாத ஏதோ ஓர் பாரத்தை தற்பொழுது அவளில் உணர்ந்தாள். சட்டென கண்களை நன்றாக திறந்தவளுக்கு அத்தனை அதிர்ச்சியாக இருந்தது…
துகியின் அதிர்ச்சிக்கு காரணமானவனோ அவளின் கழுத்து வளைவில் நன்றாக முகம் புதைத்து அவளில் பாதியாக படர்ந்திருந்தான்.
முதல் முறை தன் அன்பனின் மெய் தீண்டலை தன்னுள் உணர்ந்தவளுக்கு ஒரு பக்கம் சிலிர்த்தது என்றால் மற்றொரு பக்கம் அத்தனை எரிச்சலாக இருந்தது…
நீண்ட நெடிய பெருமூச்சுடன் தன்னை நிலைப்படுத்தி கொண்டவள் அவனை எழுப்ப முயன்றாள்.ஆனால் அவனோ கும்பகர்ணக்கே டஃப் கொடுப்பது போல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.
பல்லைக் கடித்துக்கொண்டு “ஏய்… எழு…” என்றாள். அதற்கும் அவனிடம் பதில் இல்லாமல் போனது….
“ப்ச்…” என்றவள் அவனைத் தன்னிலிருந்து பிரிக்க முயல அதுவும் முடியாமல் போனது அவளால்.
“தடிமாடு…எழு டா…” என்றவள் அவனைத் தள்ள ஹிஹிம் அவளால் அவனை துளியும் அசைக்க முடியவில்லை…
வேறு வழியே இல்லையென நினைத்தவள் உறங்கி கொண்டிருந்தவனை இரண்டடி அடித்தாள். அது கூட அவனுக்கு தட்டி கொடுத்து உறங்க வைப்பது போல் இருந்திருக்க வேண்டும் மேலும் அவளது கழுத்தில் அழுத்தமாக முகம் புதைத்துக் கொண்டான்.
அதில் இவளுக்கு தான் இம்சையாகி போனது… கணவனின் சூடான மூச்சு காற்றும், மீசையின் குறுகுறுப்பும், வன் இதழ்களின் தீண்டலும் அவளுக்குள் பல இரசாயன மாற்றங்களை கொடுத்தது.
பல்லைக் கடித்துக்கொண்டு தன் உணர்வுகளை அடக்கியவள் மீண்டும் எழுப்ப எழுந்த பாடில்லை. அவன் எழவில்லையே என்ற கடுப்பில் அவனது தோள் வளைவில் பல் பதியும் அளவிற்கு கடித்து வைத்தாள்.
அதில் தூக்கத்தில் இருந்து பதறிப்போய் எல்லாம் எழவில்லை… ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து “என்ன?…” என்றான். அதற்கு பதில் பேசாமல் அவள் முறைத்தாள்.
துகியின் முறைப்பில் கடுப்பானவனாய் “என்னடி?நிம்மதியா ஒருத்தனை தூங்க விட மாட்டியா நீ? காலங்காத்தால மூஞ்சியை க்ளோஸப்ல காட்டிக்கிட்டு இருக்க. இப்ப என்ன வேணும் உனக்கு…” படபடவென பேசிவிட்டு அவளின் பதிலைக் கூட கேட்காமல் விலகி படுத்தான்.
நறுநறுவென பல்லைக் கடித்தபடி வாய்க்குள்ளே என்னவோ முனகி கொண்டே எழுந்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
துகி அங்கிருந்து நகர்ந்ததும்
“அப்பா…” நெஞ்சில் கை வைத்தவன்
‘இன்னும் கொஞ்சம் நேரம் முழிக்காம இருந்திருந்தோம்… குட்டி சாத்தான் கடிச்சே கொன்றுப்பா…’என நினைத்தபடி தன் தூக்கத்தை மீண்டும் தொடர்ந்தான்.
****
error: Content is protected !!