Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய்

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 6

சரசு டீயைக் குடித்து வெளியே வந்தவர் ஜமுனா கிட்சனில் இருப்பதைப் பார்த்து அங்கே சென்றார்.

சரசு, என்ன அண்ணி சமையல் பண்ண ஆரம்பிச்சீட்டீங்களா…… ? என கேட்டுக் கொண்டே அங்கிருந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாக திறந்துப் பார்த்தவர், ஆச்சர்யமாக தாடையில் கை வைத்து ‘’இங்க பாரேன்…….., முடிச்சே போயிட்டீங்களா……’’ எல்லாம் தனியாவே செஞ்சீங்களா…..?  அப்ப நீங்க தூங்கவேயில்லையா……. ? என்றார்

அவரைப் பார்த்து சிரித்த ஜமுனா…… இருக்கட்டும் அண்ணி.   ஒரேடியா சாப்பாட்டை முடிச்சிட்டு கொஞ்சம் சாய்ஞ்சா போச்சு.

சரசு, அது என்ன கிரைண்டர்ல போட்டிருக்கீங்க அண்ணி………. ?



Advertisement

ஜமுனா, வடைக்கு உளுந்து ஊற வச்சிருந்தேன் ண்ணி.   எல்லாரும் தூங்கறதால சத்தம் போட வேணாம்னு, கிரைண்டர் போடாம இருந்தேன்.  அதான் இப்ப முழிச்சதும் போட்டேன்.

சரசு, அப்படின்னா….. கொஞ்சமா பாயாசமும் வச்சிருவமா ண்ணி.

நானும் அதான் நினைச்சேன்.  என்ன பாயாசம் செய்றது…?   உங்ககளுக்கெல்லாம் எது பிடிக்கும்னு ஒரே யோசனையா இருந்தது.  அதுதான் உங்களை கேட்டு வைக்கலாம்னு இருந்தேன்.

Advertisement

இங்க எல்லாரும் பருப்பு பாயாசம்னா விரும்பி சாப்பிடுவாங்க ண்ணி, அதையே வைக்கலாமா….?  உங்க வீட்ல சாப்பிடுவாங்களா……?

Advertisement

இவங்களும் சாப்பிடுவாங்க, அதையே வச்சிடறேன் என பயத்தம் பருப்பை எடுத்து வறுக்க ஆரம்பித்தார்.  நீங்க கொஞ்ச நேரம் உட்காருங்க அண்ணி, நான் பாயாசம் வச்சி வடை தட்டறேன் என ஜமுனாவை பிடித்து நகர்த்தினார்.

இருக்கட்டும் ……..ண்ணி, அதுமட்டும்தான முடிச்சிடறேன், என ஜமுனாவே சரசை விடாமல் பாயாசம் வைத்து, உளுந்து மாவையும்  கிரைண்டரிலிருந்து வழித்து, வடை போட ஆரம்பித்தார்.

வடைக்கு தேவையான  வெங்காயம், பச்சமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, பச்ச கொத்தமல்லி எல்லாவற்றையும் தண்ணீரில் அலசி கழுவி எடுத்து பொடியாக நறுக்கிக் கொடுத்தார் சரசு.

Advertisement

”என்னதான் நான் செஞ்சாலும்  ‘’நீங்க வடை போடற மாதிரி எனக்கு வர மாட்டுது ……..ண்ணி.  உங்க அண்ணனுக்குகூட நீங்க செய்ற வடைன்னா இஷ்டமா கூட இரண்டு சாப்பிடுவாங்க.   உங்க கைமணமே தனிதான்.’’

உளுந்து மாவை, ரொம்ப தண்ணி விடாம கொட கொடன்னு ஆட்டி எடுத்தா…  வடை நல்லா வரப் போகுது, இதுல என்ன அதிசயம் இருக்கு?  மாவை பொறுமையா ஆட்டி எடுக்கறதுல தான் அதோட பக்குவமே இருக்கு என்றார்,  கைகளால் வடையைத் தட்டி எண்ணெயில் போட்டுக் கொண்டே.

ம்கூம்.  என்ன சொல்லுங்க.  நீங்க சுடற வடையோட ருசியே தனிதான்……. என, சரசு ஒரு பக்கம் நின்று ஜல்லிக் கரண்டியால் வடையை திருப்பிவிட்டுக் கொண்டே ஜமுனாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

சரசு, நான் இங்க ஒரு வாரம் தங்கிட்டு வரலாம்னு இருக்கேன்   …..ண்ணி.  சின்னஞ் சிறுசுக இல்ல, புதுசு தான அவங்களுக்கு எல்லாம் பழக்கி கொடுத்துட்டு வரலாம்னு………. என இழுத்தார்.    அவரால் வெளிப்படையாக சொல்லவா முடியும்.  மகனின் ஒட்டாத பேச்சையும், நடத்தையையும்.    பானுவை அவனை நம்பி அப்படியே விட்டு செல்ல அவருக்கு மனதில்லை.

இருவருக்குள் என்ன நடக்குமோ என பயந்துதான், மகனுக்கு பொறுமையாக எடுத்து சொல்லி புரிய வைத்துவிட எண்ணி தங்கி வர முடிவெடுத்திருந்தார்.  இன்றாவது உறவினர் முன்னிலையில் வீட்டில் இருப்பான் எனப் பார்த்தால், இப்படி ஒட்டாதவன் மாதிரி கிளம்பி போனது அவருக்கு வருத்தமாக இருந்தது.

தன்னை நம்பி அல்லவா…., யோசிக்காமல் பெண் கொடுத்திருக்கிறார்கள்.  சூழ்நிலையைப் புரிந்து இதுவரை எந்த கேள்வியும் கேளாமல் இருப்பவர்களை…. மேலும் மேலும் நோகச் செய்ய முடியாது இல்லையா……?

சந்தோஷமா இருந்துட்டு வாங்க ….ண்ணி.  நீங்க இவங்க கூட இருந்தீங்கன்னா…….. எனக்கு இன்னும் மனசுக்குத் தெம்பாயிருக்கும்.  பானுக்கும் இன்னும் அவ்வளவா ஒன்னும் சரியா தெரியாது.  படிக்கிற பிள்ளைதானேன்னு, நானும் கண்டுக்காம இருந்துட்டேன்.

சரசு, அதனால என்ன ……..ண்ணி?  அவள் எனக்கும் பொண்ணு மாதிரிதான்.  நான் பார்த்துக்கறேன்.

இந்த வார்த்தையைக் கேட்டதும் ஜமுனாவுக்கு அத்தனை நிம்மதி மனதில்.   சரசுவை நன்றாக அறிந்திருந்ததால் தானே, அவர் பானுவை சங்கருக்கு கட்டித் தர சம்மதித்திருந்தார்.

வடை முழுவதையும் தட்டி முடித்தவர்கள் எல்லாவற்றையும் எடுத்து வந்து ஹாலில் வைத்தனர். பந்திப்பாய் விரித்து கீழேயே உட்கார வைத்து, இலைப் போட்டு பரிமாற ஆரம்பித்திருந்தனர்.

சரசுக்கு ஆச்சர்யம்….,  ‘’ஒன்னு விடாம எல்லாத்தையும் செட்டா கொண்டு வந்திட்டீங்க…..’’ அண்ணி நீங்க.  நான் எல்லாம் இங்க வந்து வாங்கிக்கலாம்னு வந்தேன்.  என் பிள்ளையை நம்பியிருந்தா……. நாம தான் எல்லாத்துக்கும் கடையைத் தேடி அலைஞ்சிருக்கனும்….. என அங்கலாய்த்தார் சங்கரை மனதில் நிறுத்தி.

இது எல்லாம் எனக்கு பழக்கம் தானே …ண்ணி, ‘’கடைக்கு தினமும் செய்யறதால பழக்கம்’’.

இட்லி மாவு கூட அரைச்சு எடுத்துட்டு வந்திருக்கீங்க, இதுல பாலைக் காச்சி தயிருக்கும் உறைய வச்சி கொண்டு வந்திருக்கீங்க….., சாப்பிடற இலையில இருந்து ஒன்னு விடாம எல்லாத்தையும் கச்சிதமா கட்டு செட்டா எடுத்து வந்திருக்கீங்க, சூப்பர் அண்ணி….!

அச்சோ என்ன …ண்ணி, இதைப் போய் பெருசா பேசிக்கிட்டு என கூச்சப்பட்டார் ஜமுனா.

மாடு வீட்ல கறக்குறதால தயிர் எடுத்துட்டு வந்தேன்.  அதுவும் நம்ம செவலையோட பாலுக்கு தனி ருசி இருக்கும்.  அதுல தயிர் உறைய வச்சாதான்……  பிள்ளைங்க இரண்டும் தயிரே சாப்பிடுங்க.   அதுங்க சின்னபிள்ளைங்களா இருக்கும் போதிருந்தே இது பழக்கம்.   அதான் அந்த பழக்கத்தில எடுத்து வந்தேன்.

பேசிக் கொண்டே ஆண்களை எல்லாம் முதலில் அமர வைத்து பரிமாற ஆரம்பித்தனர்.  பானுவும் அவர்களுடன் சேர்ந்து கவனித்து பரிமாறினாள்.  ஆண்கள் உண்டு முடித்ததும் பெண்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்தனர் சாப்பிடுவதற்காக.  அவர்களே எடுத்துப் போட்டு உண்டு கொள்வதாக சொல்லியும், மதுசூதனன் வந்து நின்று பரிமாறினான்.

அன்று இரவே எல்லோரும் புறப்பட்டனர் முட்லூருக்கு.  சங்கர் வேலையில் இருந்து வந்ததும் அவனிடம் சொல்லிக் கொண்டு புறப்படுவதற்காக காத்திருந்தனர்.  அவன் வந்ததும், அவனிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டனர்.

ஜமுனாவுக்கு மகளை விட்டு பிரியவே மனமில்லை.  கைக்குள்ளேயே வைத்து பார்த்து பார்த்து வளர்த்தவருக்கு, சட்டென்று திருமணம் முடிந்திருந்ததையே ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறினார்.  இங்கு வரும் வரை தைரியமாக இருந்தவருக்கு இங்கு வந்த பிறகு மனநிலையே மாறியிருந்தது.  மகள் இதுவரை தனது கண்காணிப்பிலேயே இருந்து விட்டாள்.  இனிமேல் எப்படி தனியாக இருப்பாளோ…..? என மனம் சஞ்சலம் கொண்டது.  சரசுடன் என்றால் கூட அவர் பார்த்துக் கொள்வார் என நிம்மதியாக இருந்திருப்பார்.

தனிக்குடுத்தனத்தை நினைத்து அவருக்கு அச்சமே.  இன்னும் சங்கரின் முகத்தைக் கூட மகள் ஏறெடுத்து பார்க்காத நிலையில் அவளின் வாழ்வைக் குறித்த அச்சம் அவரை மிரளச் செய்தது.  பலவற்றையும் மனதில் போட்டு உழப்பிக் கொண்டு, கலங்கிப் போயிருந்தார்.  அது எல்லாம் சேர்ந்து போகும் போது மகளைக் கட்டிக் கொண்டு அழுகையாக வெடித்தது.

ஜமுனாவின் அழுகையை யாரும் எதிர்பார்க்கவில்லை.  கிளம்பும் வரை தைரியமாக எல்லோருக்கும் வேண்டும் என்பதையெல்லாம் பார்த்து பார்த்து கவனித்தவர் வெளியே புறப்படும் சமயத்தில்…. வெடித்திருந்தார் அழுகையால்.

பானுக்கும் அதே நிலைமை.  புது இடம்.    சங்கரிடம் இதுவரை பேசி பழகியிராத கலக்கம், அச்சம், பயம் என பலவகை உணர்வுகளால் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அன்னை கட்டிக் கொண்டு அழுததும் அவளாலும் கட்டுப் படுத்த முடியவில்லை.

மதுவுக்கும் தங்கையை பிரிவது எண்ணி வருத்தம் இருந்தது.   வெளிக்காட்டாமல் கலங்கிய கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு, தங்கையை சமாதானப் படுத்தினான்.  அன்னையை தோள் மீது கை கோட்டு ஆறுதலாக அணைத்தபடி கூட்டிச் சென்றான்.

இங்கிருந்து கிளம்பும் போது பானுவிடம் அத்தனை பத்திரம் சொல்லி கிளம்பியிருந்தான்.  தங்கைக்கு ஆறுதல் வார்த்தைகளை உரைத்தவன், ”சங்கரின் கைகைளைப் பிடித்துக் கொண்டு பார்த்துக்குங்க மாப்பிள்ளை, சின்னக் குழந்தை மாதிரி அவள்.  இதுவரைக்கும் எங்கேயும் தனியா விட்டதில்ல.  எல்லாத்துக்கும் என்னையும் அம்மாவையும் தான் தேடுவா”…..

”தனியா படுக்கக்கூட பயப்படுவா…….., எதுன்னாலும் சொல்லுங்க கேட்டுப்பா…. என அவனை ஆரத்தழுவி விடைபெற்றான். ”

மதுவுக்கே தனது உணர்வுகளை எண்ணி வியப்பாக இருந்தது.  எதற்கும் கலங்காது கல்லு மாதிரி இருந்தவன், கிளம்பும் போதிருந்த தங்கையின் தோற்றம், பார்வை எல்லாம் பார்த்து மனம் கலங்கச் செய்திருந்தது அவனை.  ஏதோ தன் தங்கையை தெரியாத… புரியாத இடத்தில் தவிக்கவிட்டுச் செல்வது போல மனது முழுக்க பிசைந்தது.

சரசு ஜமுனாவிடம் ஆறுதலாக பேசி……, அவரை தேற்றி அனுப்பியிருந்தார்.  பானுக்கு தன் வீட்டார் கிளம்பியதும் அழுகை பீறிட்டு எழுந்தது.  சரசுதான் அவளை சமாதானப் படுத்தி படுக்க வைத்தார்.

கிளம்புவதற்கு முன் எல்லோரும் இங்கேயே இரவுக்கான சாப்பாட்டையும் முடித்துவிட்டே கிளம்பியிருந்தனர்.  அவர்கள் சாப்பிடும் போதே சரசு, பானு, சங்கர் என எல்லோரும் உண்டு இருந்ததால், அவர்கள் சென்றதும் சங்கர் சென்று அவன் அறையில் படுத்துக் கொண்டான்.

பானுவும் சரசுவும் இன்னொரு அறையில் படுத்துக் கொண்டனர்.  வீட்டினரை நினைத்து உருகியவள் வெகு நேரம் கழித்து தான் உறங்கியிருந்தாள்.  காலையில் பாத்திரம் புழங்கும் சத்தம் கேட்டு முழித்தவள் நேரத்தைப் பார்த்து அச்சோ……. இவ்வளவுநேரம் தூங்கட்டேனா….? எனப் பதறி எழுந்து உட்கார்ந்தாள்.

எழுந்து பாத்ரூம் சென்றவள் குளித்து முடித்து புடவையைக் கட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.  டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சங்கரைப் பார்த்து அங்கேயே தேங்கி நின்றாள்.

இவள் வந்த அரவத்தைக் கேட்டு பானுவை நிமிர்ந்து பார்த்தவன்….., அவளது தோற்றத்தை ஆராய்ந்தான் கீழிருந்து மேல் வரை.

பானுவின் தோற்றம் அவனுக்கு உவப்பானதாக இல்லை, என்ன முயன்றும் அவனது முகம் பிடித்தமின்மையை காட்டியிருந்தது வெளியே.  அவனை உணர்ந்தவள் தன்னையே குனிந்து ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.  அவளுக்கும் புரியவில்லை, சரியாகத்தானே உடுத்தியிருக்கிறோம் என மனதில் சஞ்சலம்.

ஜமுனா போகும் போது அவளிடம் சொல்லியே சென்றிருந்தார்.  புதுசா கல்யாணமாகி இருக்கறதால யாராவது பார்க்க வருவாங்கடா……. அதனால கொஞ்ச நாளைக்கு புடவை கட்டிக்கோடா என சொல்லியிருந்தார்.  அதன்படியே குளித்து வந்து சில்க் காட்டன் புடவையை கட்டி வந்திருந்தாள்.

என்ன….. லேட்டாக எழுந்ததால், தலையை சீவாமல் கொண்டை போட்டிருந்தாள்.  முகத்தில் எந்த அலங்காரமும் இல்லை, ஒரு மெரூன் நிற பொட்டு அவ்வளவே.  பார்ப்பதற்கு மிக எளிமையாக இருந்தாள்.  அது சங்கருக்கு நாட்டுப்புறம் மாதிரியான தோற்றத்தைக் கொடுத்திருந்தது.  அதனால் தான் பார்த்ததும் முகம் சுளித்திருந்தான்.

முதல் பார்வையிலேயே தனது பிடித்தமின்மையை வெளிப்படையாக காட்டி அவளை அச்சப்பட வைத்திருந்தான்.

பானு, ஓஹ்….. இவங்களுக்கு பிடிக்கலையோ…… என யோசித்து, அவனையே கண் எடுக்காது பார்த்து நின்றாள்.  பார்வை மட்டும் தான் அவன் மேல் இருந்தது.  புத்தி எல்லாம் அவனின் செயலை பற்றின சிந்தனையாக இருந்தது.

முதல் பார்வையிலேயே தனது பிடித்தமின்மையைக் காட்டி அவளை அவனிடம் இருந்து தள்ளி நிறுத்திவிட்டான்.  கிட்சனிலிருந்து வெளியே வந்த சரசு இவள் நிற்பதைக் கண்டு ”வாடா பானு…., ஏன் அங்கேயே நின்னுட்ட….? அன அழைத்தார்.”

அவரது குரலில் ஸ்மரணை வரப் பெற்றவள், கிட்சனிற்குள் நுழைந்து கொண்டாள்.  அதிலிருந்து அவன் செல்லும் வரை கிட்சனை விட்டு வரவேயில்லை.

அவன் அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்ற பின்புதான் வெளியவே வந்தாள்.  சரசு அவளுக்கு குடிப்பதற்கு காப்பி சேர்த்து கொடுத்தார்.

பானு, ”அத்தை எனக்கு காப்பி பிடிக்காது நான் டீ போட்டுக்கட்டுமா…….?”

சரசு, போட்டுக்கோடா…….., நாங்க எல்லாரும் காப்பி தான் விரும்பி குடிப்போம், டீயும் எப்பவாது சமயத்துல குடிக்கறது தான்.  இது உன் வீடு, நீ எந்த தயக்கமும் இல்லாம ஃபிரியா இருக்கனும் என்றார் அவளிடம்.

அவளுக்கான டீயைச் சேர்த்து குடித்தவள் தனது போனை எடுத்து  யாராவது அழைத்திருக்கிறார்களா……? என பார்த்தாள்.

சரசு அவளிடம் உங்க அம்மா காலையிலேயே கூப்பிட்டிருந்தாங்கடா….. நீ தூங்கறேன்னு சொல்லிட்டேன்.  போன் பண்ணி பேசு.

சரி எனத் தலையசைத்தவள் அவளது போனை எடுத்துக் கொண்டு ஹாலில் இருந்த பால்கனியில் சென்று நின்று கொண்டு அன்னையிடமும், அண்ணனிடமும் பேசினாள்.

காலையிலேயே ஜமுனாவும், மதுசூதனனும் அவளுடைய போனுக்கு அழைத்திருந்தனர்.  அவள் போன் எடுத்துப் பார்க்கும் போது அவர்கள் அழைத்ததற்கான மிஸ்டு கால் இருந்தது.

பேசி முடித்தவள் சரசை தேடி வந்தாள்.  அவர் அவளை போய் சாப்பிடச் சொன்னார்.

பானு, ”நீங்க சாப்பிடலையா அத்தை?”

சரசு, ”நான் அவனோடவே சேர்ந்து சாப்டாச்சு மா…., சுகர் மாத்திரை காலையில போடனும் இல்ல, நீ போய் சாப்பிடு.”

பானு சென்று டைனிங் டைனிங் டேபிளில் இருந்த ஹாட்பாக்ஸை திறந்து பார்த்தாள். தோசையும் தேங்காய் சட்னியும் இருந்தது.  அதிலிருந்து இரண்டு தோசையை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

தோசை அழுத்தமாக காய்ந்து வறண்டு போயிருந்தது.  அதை வாயில் வைக்கும் போதே ஜமுனாவின நினைவு வந்திருந்தது.  யார் எப்போது வந்தாலும் சுடச்சுட தோசை சுட்டு தருவார்.  அதுமட்டுமில்லை, அவரவருக்கு பிடிக்கும் விதத்தில் செய்து தருவார்.

மகளுக்கு பிடிக்கும் என்று வெங்காயத்தை பொடியாக நறுக்கி தோசையில் தூவி…… அதன் மேல் இட்லி பொடியையும் பரவலாக தூவி, நெய் போட்டு அவர் சுட்டு கொடுக்கும் தோசைக்காகவே கூட இரண்டு இறங்கும்.  சட்னியும் உப்பும் உரைப்பாக இருக்கவேண்டும் அவளுக்கு.  வறண்டு போயிருந்த தோசையை சப்பென்று இருந்த தேங்காய் சட்னியில் தொட்டு சாப்பிடவே உமட்டியது அவளுக்கு.  தண்ணீரைக் குடித்து ஒரு வழியாக இரண்டு தோசையையும் விழுங்கி எழுந்தாள்.

சரசு அவளிடம் சொல்லிவிட்டு சென்று படுத்துவிட்டார். கிட்சனுக்கு சென்று சிங்கில் சாப்பிட்ட தட்டைக் கழுவி வைத்தவள், வேறு என்ன சமைத்திருக்கிறார்கள் எனப் பார்த்தாள்.

அங்கு வேறு எதுவும் செய்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை.  தானே ஏதாவது செய்யலாமா என சரசைக் கேட்க சென்றவள், அவர் உறங்குவதைப் பார்த்து ஏதும் கேளாமல் கதவை சாற்றிவிட்டு வந்து ஹாலில் உட்கார்ந்து டீவியை ஆன் செய்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

மணி பதினொன்றிற்கு மேல் ஆகியும் சரசு எழுந்து வரவில்லை என்பதால் தானாகவே ஏதாவது செய்யலாம் என முடிவு செய்து இருக்கிற காய்கறிகளை வைத்து சிம்பிளாக சமைக்க ஆரம்பித்தாள்.

ஜமுனா அவளை வேலை வாங்குவது இல்லையென்றாலும் சமையல் எல்லாம் ஒரளவு பழக்கியிருந்தார்.  அது இப்பொழுது அவளுக்கு கைக் கொடுத்தது.

அங்கு முட்லூரில் ஜமுனா மகளை நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.  மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்த மதுசூதனன் அன்னையைப் பார்த்து சில நொடிகள் நின்றவன், பிறகு ‘’ம்மா….. சாப்பாடு எடுத்து வை கை கழுவிட்டு வரேன் என சென்றிருந்தான்.

அவனது குரலைக் கேட்டு நிகழ்வுக்கு வந்தவர், அவனுக்கான சாப்பாட்டை எடுத்து வந்து வைத்தார்.

ம்மா…… இராத்திரி நான் வர லேட்டாகும், அப்பாவ கடையை அடைச்சிட்டு வரச் சொல்லியிருக்கேன்.  நீயும் எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிட்டு படுத்துக்கோ.  நான் வெளியவே சாப்பிட்டு வந்திடுவேன்.

அவனை நிமிர்ந்து பார்த்தார்.  எங்க போறன்னு கேட்டா அவனுக்கு பிடிக்காது.  ஏதாவது முக்கியமான விஷயமாதான் இருக்கும், இல்லேனா அவனே சொல்லியிருப்பானே என எண்ணினார்.

ஜமுனாவின் மனதைப் புரிந்தவன் போல அவனே, ஒரு இடத்தில பணம் கேட்டிருந்தேன் ம்மா….. அதான் அது விஷயமா வெளிய போறேன். வரதுக்கு லேட்டாகும்…… என்றான்.

சரி எனத் தலையசைத்தவர் அவனுடனேயே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.

மது, நீ இன்னும் சாப்பிடலையா…….?  இவ்வளவு நேரம் சாப்பிடாம என்ன பண்ணிட்டிருந்த ம்மா……? உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் லேட்டா சாப்பிடாத, சீக்கிரமே சாப்பிடுன்னு என முறைத்தான்.

பானு ஞாபகத்துல அப்படியே உட்கார்ந்துட்டேன் டா….., பிள்ளை என்ன பண்றாளோ?  சாப்பிட்டாளான்னு ஒரே யோசனையா இருந்தது.

மது, ஏன் அதை ஒரு போன் போட்டு கேட்க வேண்டியது தான?  அதுக்கு அப்படியே உட்கார்ந்துருப்பியா…..?

ஜமுனா, காலையில இருந்து இரண்டு தடவை பேசிட்டேன்.  இதுக்கு மேல பேசினா சரசு அண்ணி அங்க தான இருக்காங்க, ஏதாவது நினைச்சிப்பாங்களோன்னு சங்கோஜமாயிருக்கு என்றார்.

பாக்கெட்டிலிருந்து தனது போனை எடுத்தவன் தங்கையை அழைத்தான்.

டேய்…. ஏன்டா……..?  நானே இன்னும் சத்த நேரம் பொறுத்து கூப்பிட்டு இருப்பேன், அதுக்குள்ள ஏன்டா…. போன் போட்ட?  அவங்க ஏதாவது நினைச்சிக்கப் போறாங்கடா….

அதற்குள் எதிர்முனையில் பானு எடுத்திருந்தாள்.  ஹலோ, சொல்லுண்ணே……………

மது, சாப்பிட்டியா ம்மா…….., என்று கேட்டு சில நிமிடங்கள் பேசியவன், அன்னையிடம் போனைக் கொடுத்தான்.

வாய்தான் மறுப்பு சொல்லியதே தவிர, மது போனைக் கொடுத்ததும் முகமெல்லாம் மலர்ச்சியுடன் போனை வாங்கி காதில் வைத்து பேசினார் பானுவிடம்.

ஜமுனாவும் சில நிமிடங்கள் பேசிவிட்டு போனை கட் செய்து அவனிடம் கொடுத்தார்.  ‘’ஹ்ம்ம்…….. இப்ப சந்தோஷமா….? இதை ஒரு போன் போட்டு கேட்கறத விட்டுட்டு, சாப்பிடாம மோட்டுவளையை பார்த்துட்டு உட்கார்ந்திருப்பியா…..? என கடிந்தான்.

மகளிடம் பேசிய மகிழ்ச்சியில் மதுசூதனன் கடிந்தது எல்லாம் அவருக்கு மனதில் பதியவேயில்லை.

நேயா, என்ன பூர்ணி இப்பல்லாம் எப்பப் பாரு ஒரே யோசனை மயமா இருக்க.  ட்ரீம்சா…., யாரோட டூயட்……… என பூர்ணிமாவைப் பார்த்து கண் சிமிட்டினாள் சிரித்துக் கொண்டே.

நேயாவைப் பார்த்து சிரித்த பூர்ணிமா……, உனக்கு எப்பவும் கனவு, டூயட் இதுதானா….. என முறைத்தாள்.

அப்கோர்ஸ் அதை விட வேற என்ன பெருசா இருக்கு லைஃப்ல என பூர்ணிமாவைப் பார்த்து சிரித்தாள்.  உன்னை மாதிரி எப்பவும் என்னால சீரியஸ் மோட்ல இருக்க முடியாதுப்பா……….

நமக்கெல்லாம் ஜாலியா லைப்பை என்ஜாய் பண்ணனும்.  படிப்பு, வேலை சாப்பாடு தூக்கம் இதைத்தான்டி என்னைக்காவது உன் பேச்சு இருந்திருக்கா……. என்றாள் கிண்டலாக.

உனக்கு அமைஞ்ச மாதிரியான லைப் எனக்கும் அமைஞ்சிருந்தா ஒருவேளை நானும் அப்படி இருந்திருப்பேனோ என்னமோ…………?

இருக்கலாம், பட் நீயும் கொஞ்சம் உன் சீரியஸ் மோட்ல இருந்து வெளில வர ட்ரைப் பண்ணனும்……..

”சரிங்க வாத்தியாரம்மா………., உங்களுக்கு இன்னைக்கு நான்தான் கிடைச்சேனா………? கிளாஸ் இல்லையா…….?”

மேக்ஸ் மிஸ்சுக்கு போர்ஷன் முடிக்க வேண்டியது இருக்காம்,  என் பீரியட் கேட்டு சேர்த்து எடுத்துக்கிட்டாங்க…………….

”ஓஹ்…………., நேத்து உன்னை பொண்ணு பார்க்க வந்தாங்களே என்ன ஆச்சு?  மாப்பிள்ளைய உனக்கு பிடிச்சிருந்துதா………?”

”ம்ப்ச்……… ஊத்திகிச்சு………..”

”ஏன்…….? என்னாச்சு……….?  மாப்பிள்ளைய பிடிக்கலையா…….?  போட்டோலாம் பார்த்துட்டு ஓகேன்னு தான வந்தாங்க……….”

”ஹ்ம்ம்……… மாப்பிள்ளை எல்லாம் நல்லாதான் இருக்காரு, ஆனால் அவர் போட்டிருக்கற சட்டைதான் என்னுது இல்லை…………. என்றாள் கேலியாக சிரித்துக் கொண்டே.”

பூர்ணிமா, ”எல்லாத்துலயும் உனக்கு கேலிதான்……… என அவள் தோளில் தட்டியவள், வேறென்ன……? என்றாள்.”

டௌரி அதிகமா கேட்கிறாங்க பூர்ணி, எங்களால முடியாது.  அம்மா எப்படியாவது இந்த சம்மந்தத்தை முடிச்சுடனும்னு நினைக்கிறாங்க.  மாப்பிள்ளை வீட்டில கேட்கறதை கடன் வாங்கியாவது செஞ்சுடலாம்னு சொல்றாங்க.  அப்பாக்கு யோசனையா இருக்கு.  நான் மட்டுமா……? எனக்கு அடுத்து ஒருத்தி இருக்கா இல்ல…..?  இன்னும் அவள் படிப்பு முடிக்கனும், வேலைக்கு போகனும்…….

வீட்டுக்கு வாங்குன லோனையே அப்பா இப்பதான் முடிச்சாங்க………    இன்னும் இரண்டு வருஷம் தான் அப்பாக்கு சர்வீஸ் இருக்கு.  அதுக்குள்ள என் கல்யாணத்தையாவது முடிச்சிடனும்னு ட்ரை பண்றாங்க……..

‘’நான் இந்த சம்மந்தம் வேணாம்னு சொல்லிட்டேன்.  என் கல்யாணத்துக்காக கடனை வாங்கிட்டு, அப்புறம் யார் அடைப்பா……….?  நான் பாட்டுக்கு என் புருஷன் வீட்டுக்கு டாட்டா காமிச்சுட்டு போயிடுவேன்.. என் அப்பாக்கு தான சுமை………. எங்களால என்ன முடியுமோ அதை மட்டும்தான் போட முடியும்னு தெளிவா சொல்ல சொல்லிட்டேன்………’’

‘’ஹ்ம்ம்……. மாப்பிள்ளை பார்க்க நல்லாயிருக்கார் ரொம்ப பிடிச்சிருக்குன்னு நீ சொன்னதும், இந்த சம்மந்தம் முடிஞ்சுடும்னு நினைச்சேன்.’’

நேயா, நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை, நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி எங்குமில்லை…..  என ராகமாக பாடி காட்டினாள்.

உன்னால மட்டும் தான்டி இப்படி கலாய்ச்சுக்க முடியும்……. என சிரித்துக் கொண்டாள் பூர்ணிமா.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!