Skip to content
Post Views: 1,044
மைவிழி – 7(b)
“சுஜி மாப்ள வீட்லருந்து வந்துட்டாங்க” என்றபடி உள்ளே நுழைந்த சங்கரி, வேதவியைப் பார்த்து விட்டு
Advertisement
“அழகா இருக்கடா வேதா!” என கன்னம் வழிக்க,புன்னகைத்தாள் அவள்.
“என்னத்தை பூ வைக்கிறதுக்கே இத்தனை பேர் வந்திருக்காங்க?” என வெளியே எட்டி பார்த்து விட்டு வந்த ரதி கேட்டாள்.
Advertisement
Advertisement
“அதான் மா தெரியல. அத்தனை பேரை பார்த்ததுல சரஸு வேற டென்ஷன்ல சுத்துறா!”என்றவர்,
“நீங்க வேதவிட்ட இருங்க. கூப்பிடும் போது அங்க வந்தா சரி” என்று வெளி நடப்பு செய்து விட,
Advertisement
“என்னண்ணி, ரொம்ப ஆட்களா?” என கேட்ட வேதவியிடம் சற்று பதட்டம் தெரிந்தது.
“அதெல்லாம் இல்ல. நீ டென்ஷன் ஆகாதே. உங்க வீட்ல மொதல் கல்யாணம்னதால சின்னத்தை கொஞ்சம் டென்ஷனாகிருப்பாங்க” என்றாள் ரதி ஆறுதலாய்.
வெளியில் இருந்த ஆட்களின் சத்தம் இவள் அறை வரை கேட்க, சரியாய் அந்த நேரம் அழைப்பில் வந்தான்,கீர்த்தி வாசன்.
வேதவியின் ரிங்டோனில் பெண்கள் இருவரும் அவளைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்க, பதட்டத்தில் கட் செய்து விட்டாள் வேதவி.
மீண்டும் மீண்டும் அவன் அழைத்துக் கொண்டே இருக்கே, சங்கடமாய் நெளிந்தாள் இவள்.
“ஐயோ வேதா, நீ எடுத்து பேசுப்பா! மாப்ளக்கி அங்க என்ன அவரசமோ தெரியல. நாங்க ஒன்னும் டிஸ்டர்ப் செய்யல”என சுஜித்ரா சொல்லி, ரதியிடம் கன்னடிக்க,
“ஐயோ,அண்ணி!” என்றபடி அட்டென்ட் செய்தாள் வேதவி.
“ஹலோ, வேதவி” – கீர்த்தி வாசன்
‘சும்மாவே கலாய்க்கறாங்க மிஸ்டர் வாசன்.! உனக்கு இப்ப தான் ஃபோன் செய்யனுமாடா!’
“டே, வேதா! லைன்ல இருக்கியா?”
“ம்ம்”
“பக்கத்துல ஆட்களா..?”ஹஸ்கி வாய்ஸில் அவன்.
‘அடேய்!!’
“ஹ்ம்ம்”
“ரெடியாகிட்டியா?” என்றவனின் குரலில் சிரிப்புத் தெரிந்தது.
‘சிரிக்கற நீ!’ பல்லைக் கடித்தாள் வேதவி.
“வீட்லருந்து வந்துட்டாங்க போல? இன்னும் கொஞ்ச நேரத்துல எங்கக்கா உன் ரூம் வருவாங்க” என இவன் சொல்ல,
“உங்களுக்கு எப்டி தெரியும்?” எனக் கேட்டிருந்தாள் படபடப்பாய்.
“ப்பாஹ், பேச வைக்கிறதுக்கு என்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு” என சிரித்தான், வாசன்.
“….”
“மறுபடியும் சைலண்டா?” என்றவன்,
“அக்கா லைவ் இன்போர்மேசன் தரா!”என்றான், அதே குரலில்.
“எதே!!”
“ஆமா”
“கேடி வாசா!”மனதுக்குள் சொல்வதாய் நினைத்து இவள் முணுமுணுத்து விட,
“வேதா ஜி. மைண்ட் வாய்ஸ்னு நினைச்சி சத்தமா சொல்டீங்க” என்றான், சிறு சிரிப்பும் கேலியும் கலந்த குரலில்.
“அச்சோ!ஸாரி” இப்போது ஹஸ்கி வாய்ஸில் வேதவி.
“அதெல்லாம் கிடையாது சொன்னது சொன்னது தான்!”
“…”
“ஏதாவது பேசேன் வேதா!என் பொண்ணு இவ்ளோ சைலன்டுன்னு சொல்லிட போறாங்க”என்றவன் பேச்சில், வேதவிக்கு ‘போதும்டா மிஸ்டர் வாசன்’ என்றிருந்தது.
“அப்போ பேசமாட்டா?”
“ம்ம், அப்பறமா பேசுறேன். வைக்கட்டா?”
“டே!வெச்சிடுவியா நீ?”என அதட்டல் போல் கேட்டவன்,
“ஒரு செல்ஃபீ அனுப்பேன்”என்றான்.
“ம்ஹூம் மாட்டேன்! அண்ணியெல்லாம் இருக்காங்க.” என்றாள் சின்ன குரலில்.
“…”
“வெச்சிடவா?ம்ஹூம் நீங்க வைங்க”
“முடியாது!”
“…” போனை முறைத்தாள் வேதவி.
மீண்டும் காதில் வைக்க,
“முறைச்சு முடிச்சாச்சா..? போட்டோ அனுப்பறேன்னு சொல்லு. அப்போ தான் கட் பண்ணுவேன் ” பிடிவாதாமாய் அவன்.
“நான் வைக்கறேன்!” வேதவி சொல்ல,
“முடிஞ்சா வைங்க வேதாஜி” என்றான் வாசன் சிரிப்புடன்.
“ப்ச், ப்ளீஸ்”
“நோ ப்ளீஸ்”
“போன் கட் பண்ணுங்க!”
“நீங்க கட் பண்றது”
“ப்ச், சரிரிஇஇஇஇஇ அனுப்பறேன் ”
“அப்படி வாங்க வழிக்கு. வெயிட்டிங் வேதாஜி” என்றவன் சிரிப்புடன் வைத்து விட, அப்போது தான் ஆசுவாசமானது, வேதவிக்கு .
‘ப்பூஹ்! என்னா அலப்பறை பண்றாரு’என நினைத்தவள், ஆசுவாச மூச்சுடன் நிமிர, இவளைப் பார்த்தபடி கீர்த்தி வாசனின் சகோதரிகள்.
‘இவங்க எப்போ வந்தாங்க?’ என இவள் நினைக்க, ‘டிங்’ என வாட்ஸாப்பில் வாசன்.
‘நான் சொல்லும் போதே விஜிக்கா வந்துட்டாங்க’என குறுஞ்செய்தி அனுப்பிருந்தான்.கொசுராக நாலைந்து நமட்டு சிரிப்பு ஸ்மைலிகளுடன்.
“கிராதகா, கேவி” என பல்லைக் கடித்தாள் வேதவி.
விஜயா இவள் அருகில் நெருங்கவும்,
“வா..வாங்க!ஸாரி வந்ததை கவனிக்கல”என எழுந்தாள்.
“பரவால்ல வேதவி. உக்காரு. உங்கண்ணி கூட பேசிட்டு இருந்தேன்” என்ற விஜி புன்னகையுடன் அவளைப் பார்த்திருக்க,
“இல்.. ல இருக்கட்டும்”என எழுந்தே நின்றவளிடம் சற்று தடுமாற்றம்.
“வாங்க!”என கௌசல்யாவிடவும் சொன்னாள்.
சிறு தலையசைப்பைக் கொடுத்தாள் கௌசல்யா.
கையைப் பிசைந்தபடி நின்றவளுக்கு அவர்களிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. சங்கடமாய் சிரிப்பதும், தலை குனிவதுமாக இருக்க, இது அத்தனையும் பார்த்தபடி நின்றிருந்த சுஜியும், ரதியும் வாய்ப் பிளக்காத குறை தான்.
“சுஜிக்கா நம்ம வேதவியா இது?” ரதி கேட்க,
“பாரேன் ரதி. இவ இப்படின்னு யாராவது நம்புவாங்களா? நானே ஆடிப் போயிருக்கேன்” என்றாள் வாயில் கை வைத்தபடி.
சிறிது நேரத்தில் விஜயாவும், கௌசல்யாவும் வேதவியிடம் சொல்லி விட்டு வெளியில் சென்று விட, மகளை அழைக்க வந்தார் சரஸ்வதி.
“நம்ம வேதா பொண்ணாட்டம் இருக்கால்ல?” என்றார் மருமகள் இருவரிடமும்.
“சரஸு!” – கடுப்பாய் வேதவி.
“பொண்ணு வேஷம் நல்லாருக்குடி”
“ம்ம்மா!!”
சிரித்தவர்,
“வெளில அழைச்சிட்டு வாங்க. நான் முன்ன போறேன்” என்று விட்டு செல்ல,வேதவியை ஒரு முறை சரி பார்த்தாள் ரதி.
“போலாம் ரதி” என சுஜி முன்னே செல்ல, தயங்கினாள் வேதவி.
இவர்கள் என்னவென்று பார்க்க,
“அது.. வந்தண்ணி போட்டோ..” என அவஸ்தையாய் நெளிந்தவள், சற்று தள்ளி வந்து முகத்தை முறைத்த வண்ணம் வைத்தபடி சுயமி எடுத்துக் கொண்டாள்.
“ஓஹோ..!!” என்றனர் கோரசாய் இருவரும்.
அழுது விடுபவள் போல பார்த்து வைக்க,
“சரிடி நாங்க ஒன்னும் சொல்லல. எடுத்த போட்டோவை அனுப்பி வெச்சிட்டு வா” எனவும் தான், கீர்த்தி வாசனுக்கு அனுப்பி விட்டு, கூடம் நுழைந்தாள் வேதவி.
அதன் பின் நடந்தேறியது எல்லாம் கடகடவென தான்!
வந்தவளை நிறுத்தி,கூடத்தில் இருப்பவர்களை பார்த்து வணங்கச் செய்தவர்கள், மேகலைக்கு அருகில் இருந்த இருக்கையில் அமரச் செய்தனர்.
அவஸ்தை, தயக்கம், பயம் என பல உணர்வுகளில் ஆட்கொள்ளப்பட்டவளாய் அமர்ந்திருந்தாள் வேதவி. கைகளிரண்டும் வியர்வையில் குளித்தது.
“ஸ்கூல் இன்னைக்கு லீவா இருந்ததும் நல்லதா போச்சுல்லமா” என பேச்சுக் கொடுத்தார் மேகலை.
“ஆமா, ஆன்.. அத்தை!” என்றவளுக்கு சற்றே தடுமாற்றம்.
“மேல படிக்கறியாம். கீர்த்தி சொன்னான்”
“ம்ம், அத்த!”
“சென்னைக்கு போயிருக்கான். இல்லன்னா இந்த பூ முடிக்கு அவனும் தான் வந்திருக்கணும்”என்றவர்,
“எங்க கீர்த்திக்கு உன் போட்டோ பார்த்ததுமே புடிச்சு போச்சு தெரியுமா?” என கேட்க,
“ஹா!!!” என்று பதில் சொல்லத் தெரியாது தலையாட்டி வைத்தவளின் கன்னங்கள் சூடாகியது.
அவள் அவஸ்தை,தயக்கம், வெட்கம், தடுமாற்றம் என அனைத்தையும் பார்த்தபடி கீர்த்தி வாசன். விஜயா போனை பிடித்திருக்க, வீடியோ காலில் இருந்தவனிடம் முகம் கொள்ளாப் புன்னகை. அவளை, அவள் உணர்வுகளை தனக்குள் உள் வாங்கிக் கொண்டிருந்தான்.
பின் வழக்கப்படி பெண்கள் ஒவ்வொருவராக வந்து வேதவி தலையில் பூச்சூடினர்.
அப்போது தான் வந்திருந்த ஆட்களின் எண்ணிக்கை புரிய, மிரண்டு தான் போனாள் இவள்.
தனக்கே இப்படியென்றால், தாய் எப்படி சமாளித்தார் என சரஸ்வதியை பார்க்க, பதட்டமாய் இருப்பவரை நாதன் சமாதானம் செய்வது தெரிந்தது.
கிட்டத்தட்ட 30 பேரளவில் வந்திருந்தனர். விழா காலை 10 மணிக்கு மேல் என்பதால் மதிய விருந்தும் ஏற்பாடு செய்திருந்தனர்.
சங்கரியும், அவர் ஆண் மக்களும் ஒரு பக்கம் வேலையைப் பார்க்க, வந்தவர்களை கவனித்தபடி சுற்றிக் கொண்டிருந்தான் கனியன்.
இவளுள்ளும் பரபரப்பு தான். ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ள முடியாத நிலை.
கீர்த்தி வாசனின் மூத்த அண்ணி இவள் கைகளைப் பற்றிக் கொண்டு பேச்சுக் கொடுக்க கடனே என கேட்டுக் கொண்டிருந்தாள் வேதவி.
வாசனுக்காக, வேதவியை ஏற்றுக் கொண்டாளாக இருந்தாலும் அத்தனை மகிழ்ச்சி இல்ல சௌந்தர்யாவிடத்தில்.
வேதவியின் நிறம் அவளை உறுத்திக் கொண்டிருந்தது. அது வேதவிக்கும் புரிந்திருந்ததோ? அலட்சியமாக தான் இருந்தாள் பெண்.
சௌந்தர்யா மறைத்த படி இருக்க, வாணி தன் பிடித்தமின்மையை வெளிப்படையாக முகத்தில் காட்டினாள்.
சரஸ்வதிக்கு அது வேறு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆனால் மேகலையும், அமரேசனும் நல்ல விதமாக பேசியதில் சிறு நிம்மதி அவரிடம்.
ஒரு வழியாய் விழா நிறைவாக முடிய மதியத்தை கடந்திருந்தது.
ஆட்கள் சென்றதும் அணிந்திருந்த நகை புடவை எல்லாம் களைந்து விட்டு, சுகமாக தலைக்கு குளித்து விட்டு நைட்டியை அணிந்து கொண்டாள் வேதவி.
சரியாக அந்நேரம் சென்றவர்களில் சிலர் மீண்டும் இங்கு வந்தனர். சௌந்தர்யாவும், வாணியும் அவர்களோடு கௌசல்யாவும்.
இவர்களை எதிர் பார்த்திராத சரஸ்வதி ஒன்றும் புரியாத நிலையில் வரவேற்றார்.
“எங்க பர்ஸை இங்க தான் எங்கயோ வெச்சிட்டு போயிட்டோம்”என வாணியாகவே சொல்ல,
“ஹா, இங்க தான் இருக்கும் பார்க்கலாம்”என்றவர், மகள் அறை பார்க்க,
“ம்மா” என வேதவியும் வர சரியாக இருந்தது.
கூடத்தில் இருந்தவர்களை பார்த்து,
“வா.. வாங்க”என வரவேற்றாள், சாடையாக சரஸ்வதியையும் பார்த்து வைக்க, தெரியாது என தலையசைத்தார் அவர்.
இடையில் வாணிக்கு அழைப்பு வந்தது. பேசியவர்,
“அத்தை தான் பர்ஸை கொண்டு போயிருக்காங்க. எனக்கு தெரியல பாருங்களேன்”என்றார் பொதுவாய்.
வேதவி அமைதியாகப் பார்க்க,
“நம்ம வேதவியை புடவைல பார்க்கும் போது வேற மாதிரி இருந்தா இப்போ வித்தியாசமா இருக்கா” என்றார் கௌசல்யா. சமாளித்தலாய் சிரிப்பு வேறு.
பேச்சுக் கொடுத்த படியே வேதவியை நைட்டி போட்ட கோலத்தில் கிளிக்கிக் கொண்டாள் வாணி.
அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறியதில் வெற்றிச் சிரிப்புடனே விடை பெற்றனர்.
அதே போட்டோவை வாசனுக்கும் அனுப்பி வைத்து விட, அடுத்த நாள் இரவு வேதவி வீட்டின் பால்கனியில் நின்றிருந்தான் கீர்த்தி வாசன்.
error: Content is protected !!