Skip to content
Post Views: 10,921
“தெய்வா… ஏய் தெய்வான” என்ற கணவனின் குரலில் தங்கள் அறையிலிருந்து அடித்துபிடித்து ஓடிவந்தார் தெய்வானை.
“என்னங்க?” என்றவரை பார்த்த ராஜேந்திரன் “எங்கடி அவன்” என்க.
திருத்திரு என்று விழித்தார் தெய்வானை, யாரை கேட்க்கிறார் என்று பதறியது அவருக்குப் பின்னே ஆண்பிள்ளைகள் இல்லாத வீட்டில் வேலை விஷயமாக வெளியில் சென்றிருந்த கணவன் இரவு பத்துமணிக்கு வந்து ‘எங்க அவன்’ என்று கேட்டால் வயதுவந்த இரண்டு பெண்பிள்ளைகளை வைத்திருக்கும் தாயின் மனம் எதை எல்லாம் யோசனை செய்யும்.
“யாரங்க கேக்குறீங்க!” என்றார் மெல்ல.
Advertisement
“ஹ்ம்ம்… உன் அண்ணன் மவன் உன்னோட அருமை மறுமவன் சேனாபதி” என்க, அப்பொழுதுதான் அவருக்கு மூச்சே சீரானது.
“இங்க வரலையேங்க”.
“வந்துட்டாலும் அவன் எங்கயாவது என்னை மதிக்குறானாடி, அந்த வீட்டு மாப்பிளை நான் உன் அண்ணன்களே என் முன்னாடி பேசத் தயங்குறாங்க நேத்து பொறந்த பய மாமான்னு கூட மரியாதையா கூப்பிட மாட்றான்” என்றவர் குரலில் அத்தனை ஆத்திரம்.
Advertisement
‘அந்த உறவுக்கான மரியாதையோடு நீங்க நடந்திருந்தா கூப்பிட்டுருப்பான்’ என்று எப்பொழுதும் போல மனதிற்குள் கவுண்டர் கொடுத்துவிட்டு அப்பாவியாக நின்றிருந்தார் தெய்வானை.
Advertisement
“இவர் பெரிய மஹாராஜா கூப்பிட்டு அனுப்பினா வந்து பாக்குறதில்ல, நாலு தடவ போனை போட்டுட்டேன் எடுக்கவும் இல்ல திரும்பக் கூப்பிடவும் இல்ல, இதுக்குலாம் என்ன அர்த்தம்”.
“உங்கள அவன் மருந்துக்குக்கூட மதிக்கலனு அர்த்தம்’ என்று மீண்டும் மனதில் நினைத்தவர்.
“போனை ஏங்க போட்டீங்க! விழுந்து ஒடஞ்சிடுச்சா” என்று பாவமாகக் கேட்டவரை பார்த்த ராஜேந்திரன் “அடியே நீ யாருனு எனக்குத் தெரியும்டி” என்க.
Advertisement
“அதில்லைங்க வேலையா இருந்திருப்பான் பாவம் ஒத்த ஆளா கிடந்து ஓடிச் சலிச்சு போவுதுல பிள்ளைக்கு” என்றார் தெய்வானை.
“ஓங்கி ஒன்னு வெச்சேன்னா செவுலு திரும்பிடும் என்ன உன் அண்ணன் மவனுக்கு வக்காலத்தா, உன் ஆத்தாளுக்கு போனை போடு அவன் எங்க இருக்கான்னு எனக்குத் தெரியணும், வெளியூர் எதுவும் போயிருக்கான எனக்குத் தெரியாம? என்று கேட்டவரின் முகம் பயங்கரமாக மாறத் தொடங்கியதும் அவசரமாகக் கோசாலைக்கு அழைத்தார் தெய்வானை.
‘இந்த ஆளைக் கட்டுன பாவத்துக்கு நான் படுறது போதாதுன்னு என் குடும்பமும் சேர்ந்து இல்ல சீரழியுது’ என்று நொந்துகொண்டே காத்திருக்க அந்தப் பக்கம் அழைப்பை ஏற்றார் கோசலை.
“ஏத்தா தெய்வான, என்னத்தா இந்த நேரம் கூப்டருக்க” என்றார் பதட்டமாக.
“மா… உனக்கு எத்தனை தடவ சொல்றது மொள்ளமா பேசு இப்படி கத்தாதன்னு” என்றார் தெய்வானை.
கோசாலைக்கு புரிந்துவிட்டது மருமகன் அருகில் நிற்கிறார் போன் ஸ்பீக்கரில் உள்ளது என்று, இது அவர்களின் சங்கேத பாஷை தெய்வானை கோசாலைக்கு அழைத்தால் முதலில் கேட்கும் கேள்வியே “மா என்ன பண்ற” என்பதுதான்.
அதைவிடுத்து ‘ஏன்மா கத்துற, அந்த நாயைத் துரத்தி விடு, மாடு ஏன் கத்துது இப்படி ஏதாவது ஒன்றை கேட்டால் தாய் புரிந்துகொள்வார் மாப்பிள்ளை அருகில் நின்று பேசுவதை கேட்டகிறார் என்று, அதனால் தன்னை தயார் படுத்திக்கொண்டார்.
“மா சேனா அங்க இருக்கானா”.
“இல்லயெத்தா கார்த்திகா புருஷன் வந்து ஒரு பஞ்சாயத்தை முடிஞ்சிட்டு போனான், அந்தக் கோபத்துல வெளில போச்சு என் ராசா இன்னும் வரல” என்றவரின் பேச்சைக் கேட்டதும் பல்லைக் கடித்தார் ராஜேந்திரன்.
“ராசாவாம் ராசா… அவன் இப்படி யாரையுமே மதிக்காம திரியறதுக்கு காரணமே இந்தப் பொம்பளத்தான்” என்று முணுமுணுத்து விட்டுக் கோபமாகத் திரும்பிச் சென்றார்.
“அப்பாடா” என்று பெருமூச்சு விட்ட தெய்வானை “மா அவர் போய்ட்டார் நான் நாளைக்கு பேசுறேன்” என்று வைத்துவிட்டார்.
“என்னமா பிரச்சனை” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் பூஜா விழிகள் ஒருமுறை சுற்றிலும் சுழன்றது தந்தை இருக்கிறாரா என்று.
“உங்க அப்பாருக்கு இதை விட்டா என்ன வேலை, சேனா இவர் போன் செஞ்சு எடுக்கலையாம் அதுக்கு சலங்கை கட்டி ஆடிட்டு போறாரு, உங்க அப்பா ஒருபக்கம் கார்த்திகா புருஷன் ஒருபக்கம்னு எங்க வீட்டு ஆளுங்கள வறுத்து எடுக்குறாங்க” என்றார் ஆற்றாமையோடு.
“ஏன் என் அப்பா என்ன செஞ்சாரு உன் அண்ணன் மகனுக்கு என்ன அவ்ளோ ஈகோ, அப்பாவைப் பாக்க அத்தனை பேரு வாசல்ல காத்திருக்காங்க இவர் என்னனா அப்பாவை மதிக்கக்கூட மாட்றார், அப்படி என்ன பெரிய இவரா உன் மருமகன்” என்று கேட்டுக்கொண்டே வந்து நின்றாள் பூர்விகா.
“எல்லாம் அந்தக் கிழவியைச் சொல்லணும் என்னமோ பெரிய ராஜ்யத்தை கட்டி ஆள்ற மாதிரி ராசா ராசான்னு உசுப்பேத்தி விடுது, அன்னைக்கு காலேஜ் நேரமாச்சுனு கொண்டுபோய் விடுன்னு சொல்றேன் நான் ஒன்னும் உனக்கும் உன் அப்பனுக்கும் டிரைவர் இல்ல பஸ்ல போ இல்லனா நடந்துபோடின்னு சொல்லுச்சு உன் அண்ணன் மகன்”.
“கடைல நல்ல வருமானமாமே அந்தத் திமிர்… அந்தக் கடையை அப்பாகிட்ட சொல்லி மூட வெச்சுட்டா திமிர் தன்னால அடங்கிரும்” என்றவள் முடிக்கத் தெய்வானையின் விரல்தடம் அழுத்தமாகப் பூர்விகாவின் கன்னத்தில் பதிந்தது.
அவள் பொறிகலங்கி நிற்க “கம்பியைப் பழுக்கக் காய்ச்சி நாக்குல இழுத்துப்புடுவேன், உன் அப்பா உனக்கு ஒசத்தினா என் பொறந்த வீடு எனக்கு ஒசத்திடி, கல்யாணம் கட்டிட்டு வந்த நாளா உன் அப்பாரு பக்கம் யாரையும் பாக்கல நல்லது கெட்டது எதுக்கும்”.
“காரியம் ஆகவும் காசு பணத்துக்கும் மட்டும்தான் வருவாங்க ஒறவுன்னு சொல்லிக்கிட்டு, உங்க ரெண்டு பேரையும் சுமந்தப்பவும் சரி பெத்துவந்தபோவும் சரி என் பொறந்த வீடுதான் பாத்துச்சு, இன்னைக்கும் வருஷம் தவறாம தாய் மாமன் சீறு சபை நெறைச்சு செய்யுறாங்களே யாருக்காக எனக்காகடி”.
“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அவன் ராசாதாண்டி, உன் அப்பா அவனுக்குப் பண்ண அநியாயத்துக்கு வேற யாராவதா இருந்திருந்தா எனக்குப் பொறந்தவீட்டு சொந்தமே இல்லாம போயிருக்கும்”.
“அவனோட கோபத்துக்கு நாம எல்லாரும் மொத்தமா எரிஞ்சு சாம்பலா போயிருப்போம், ஆனா அவன் அத்தனை கோபத்தையும் உள்ளேயே அடக்கிவெச்சுட்டு எல்லாரையும் தாங்கி நிக்குறான், உனக்குப் பிடிச்ச ஒரு துணி கிடைக்கலான எவ்ளோ டென்சன் ஆகுற எப்படி கத்துற உங்க அப்பா அழிச்சது அவனோட வாழ்நாள் கனவை”.
“இன்னும் ஒரு தடவ அவங்கள மரியாதை இல்லாம பேசின பெத்தபுள்ளைன்னு பாக்கமாட்டேன்” என்றவரை கோபமாகப் பார்த்திருந்தாள் பூர்விகா.
‘தறுதல அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்கு பாரு’ என்று மனதில் நினைத்துக்கொண்டு மகளை அவரும் முறைத்து நிற்க.
“பூர்வி உள்ள போ” என்றாள் பூஜா.
“நான் அப்பாகிட்ட சொல்லுவேன் என்னை அடிச்சுடீங்கள்ல அதும் உங்க அண்ணன் மகனுக்காக” என்றவள் அதே கோபத்தோடு அப்பாவைத் தேடி சென்றாள்.
“மா அவ அப்பாகிட்ட சொல்லப்போறா” என்றாள் பூஜா.
“சொல்லட்டும் நானும் எவ்ளோதான் பொறுமையா இருக்குறது, மிஞ்சிப்போனா உங்க அப்பா ரெண்டு அடி குடுப்பாரு அவ்ளோதானே பாத்துக்கலாம்” என்றவர் “நீ போய்த் தூங்கு” என்றுவிட்டு அவர் அறைக்குச் சென்றார்.
“மாமாவைப் பார்த்தே எவ்ளோ நாள் ஆச்சு, இங்க வரமாட்டாரு பேசாம இந்த வாரம் நாமளே அம்மாச்சி வீட்டுக்குப் போய்டணும், இப்போ எங்க இருப்பாரு!” என்ற யோசனையோடு தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள் பூஜா.
மாமன் வீட்டில் நடந்த இத்தனை களோபரங்களுக்கும் காரணமானவனோ ‘கம்சன்’ என்ற பெயர் தாங்கி வந்த அழைப்புகளைப் பார்த்தாலும் அசையாமல் நின்றிருந்தான்.
குன்னூர் ரயில்வே ஸ்டேஷனில் தன்னை கண்டதும் விழிகள் விரித்து நின்றிருந்தவளை ஒரு நொடி பார்த்தவன் எப்பொழுதும் போல அந்த விழிகளின் ஈர்ப்பில் தன்னை தொலைத்தான்.
‘சேனா ஸ்டடி… ஸ்டடி… இப்போ அவ பழைய மயூரி இல்ல லண்டன் போய்ப் படிச்சுட்டு வந்துருக்கா நம்மளையெல்லாம் ஞாபகம் இருக்கான்னே தெரியாது” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன்.
“எப்படி இருக்க” என்றான் அவள் பெட்டிகளைக் கையில் எடுத்துக்கொண்டு “ஹ்ம்ம்” என்று தலையை ஆட்டினாள் அவள்.
தன்னுடைய வரவைப் பற்றி யாருக்கு தெரிந்தாலும் அவனுக்குத் தெரியக் கூடாது என்று விரும்பினாள் மயூரி, அவன் முன்னில் அவன் எதிர்பாரா நேரம் சென்று நிற்க வேண்டும், தன்னை காணும் நொடி அவன் முகத்தில் வந்து போகும் உணர்வுகளைக் காண வேண்டும் என்று அத்தனை ஆசை அவளுக்கு.
அனைத்தும் பாழாகிவிட்டது… தான் வருவது அவனுக்கு முன்பே தெரிந்துவிட்டது அந்த முகத்தில் அவள் எதிர்பார்த்த எந்தப் பாவங்களும் இல்லை.
‘அதுக்குள்ளே மறந்திருப்பாரா? இருக்கும் இருக்கும் நாம போகும்போது அவருக்கு ஜஸ்ட் டுவெண்ட்டி, நொவ் லுக் அட் ஹிம் ஹொவ் மேன்லி ஹி இஸ், மெச்சூர்ட் ஹான்ட்ஸும்’ என்று எண்ணியவளின் மனது கொஞ்சம் சிணுங்கியது பழைய நாட்கள் எல்லாம் மீண்டும் வராதா என்று ஏக்கம் கொண்டது.
ஏனோ தன்னை விட்டு அவன் வெகுதூரம் சென்றதைப் போல ஒரு தோற்றம், சட்டென்று மனம் பாரமானது விழிகள் நிறையும் போலத் தோன்ற முகத்தை அழுந்தித் துடைத்தாள்.
ஜீப்பில் அவள் ஏறி அமர்ந்ததும் “போலாமா” என்றான்.
“ஹ்ம்ம்” என்றாள் அதற்கும்.
“பேசுறதை மறந்துட்டாளா இல்ல தமிழை மறந்துட்டாளா” என்ற யோசனையோடு வண்டியைச் செலுத்தினான்.
“லண்டன் எப்படி இருந்தது” என்றான் அவளிடம்.
“லண்டன் அழகாயிருந்தது… ஆனா எனக்குப் பிடிக்கல” என்றாள் மெல்ல.
“ஏன்!” என்றான் ஆச்சர்யமாக, வெளிநாடு போக வேண்டும் என்ற கனவோடு பலரும் சுற்றிக்கொண்டிருக்க இவள் பிடிக்கவில்லை என்கிறாளே.
‘எனக்கு இந்தக் குன்னூர் தான் பிடிச்சுருக்கு எனக்குப் பிடிச்ச எல்லாமே இங்கதான் இருக்கு பிடிச்சவங்களும் இங்கதான் இருக்காங்க, நீங்க இங்கதானே இருக்கீங்க அப்பறம் எனக்கு லண்டன் எப்படி பிடிக்கும்’ என்று மனதிற்குள் அவனோடு சண்டையிட்டாள்.
அந்தப் பால் முகத்தில் மூக்கு மட்டும் மிளகாய் பழமாகச் சிவந்துவிட்டது, பெரிதாக அழுகை வந்தது அவள் அறியாமல் ஒரு தேம்பல் வெடித்துவிட சட்டென்று அவன் கால்கள் பிரேக்கை அமர்த்தியது.
முன்னில் சென்று அவள் இடித்துக்கொள்ளும் முன் அவள் நெற்றியில் தன் கரத்தை வைத்துத் தடுத்துவிட்டான், சேனாவின் கரங்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள் மயூரி.
“சாரி” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் விழிகள் தளும்பக் காத்திருந்தது, ஆனால் உள்ளுக்குள் மனது குன்னூரை போலக் குளிர்ந்துகிடந்தது ‘போதும் தனக்காக யோசிப்பதை அவன் இன்னும் மறக்கவில்லை அது போதும்’ நன்றாகச் சாய்தமர்ந்தவள் இருளில் மூழ்கிக் கிடக்கும் தேயிலை தோட்டத்தில் பார்வை பதித்தாள்.
‘என்னவாயிற்று இவளுக்கு ஏன் இந்த அமைதி’ என்ற யோசனையோடு அவளைப் பார்த்தவன் மீண்டும் வாகனத்தை இயக்கினான், அமைதியான இருளை கிழித்துக்கொண்டு சென்றது ஜீப், என்ன பேசுவது என்று தெரியாத அமைதி இருவரிடமும்.
தேயிலையின் மனம் மெல்ல மெல்ல குறைந்து குப்பென்று நாசியை அடைத்தது யூகலிப்டஸ் வாசம், வீட்டை நெருங்குகிறோம் என்று புரிந்தது அவளுக்கு.
நீல ஜகரண்டா மரம் இலைகளே தெரியாவண்ணம் ஊதா நிற பூக்களால் மூடிக்கிடந்தது, மெல்லிய காற்றில் அசைந்தாடி தன்னை கடந்து செல்வோர் மீது பூ மழையாய் பெய்திறங்கியது, தன் மடியில் விழுந்த மலர்களை எடுத்து வாசத்தை நுகர்ந்தாள் மயூரி.
அவள் கார்க்கூந்தலில் சிக்கிக்கொண்ட மலர்களை எடுக்க உயர்த்திய கையை அப்படியே மடக்கிக்கொண்டான் சேனாபதி, அது தவறு என்று தோன்றியதால் மட்டுமல்ல அந்தச் சுருண்ட கருங்கூத்தலில் ஊதா நிற பூக்கள் அலங்கார முத்துக்களை போல அழகாகத் தோன்றியது.
மெய்ன் சாலையிலிருந்து கொஞ்சம் மேடேற இருபக்கமும் பெரிய எரிய இரும்பு கம்பிகள் அதன் மேலே கிளிக்கூடு போல அழகிய வெள்ளைநிற பெட்டிகள் அதன் உள்ளே மஞ்சள் வெளிச்சம் பரப்பி நின்றது குண்டுபல்புகள்.
இது பங்களா வீட்டிற்கு செல்லும் அவர்களுக்கான பிரத்யேக வழி எஸ்டேட்டின் நடுவே கம்பீரமாக நின்றிருந்தது அந்தச் சிறிய மாளிகை, பழைய ஆங்கிலேயர் கட்டட பாணியில் கட்டப்பட்டது வாயில் நின்றிருந்த காவலாளி குரல் கொடுத்தான் “சின்னம்மா வந்துட்டாங்க தொரையையா” என்று.
ககனமான கம்பிளியையும் கடந்து குளிரில் நடுங்கும் உடலைத் தாங்கி வேகநடையில் வெளியில் வந்தார் ஓஸ்கர் “கிராண்டப்பா…” என்ற கூவலோடு ஜீப்பிலிருந்து குத்தித்திறங்கி ஓடி அவரைக் கட்டிக்கொண்டாள் மயூரி.
“ஓஹ் மைச்சைல்ட் மை லிட்டில் ப்ரேஸியஸ் பேபி” என்ற ஓஸ்கரின் குரல் நடுங்கியது, அந்த முதியவரின் விழிகள் நீரில் நனைந்து பார்வையை மறைக்கப் பேத்தியின் முகத்தை ஆசையாய் வருடியவர் “மிராண்டா” என்றழைத்தார் அத்தனை நேசத்தையும் குரலில் தேக்கி.
பேத்தியிடம் மகளைக் காண்கிறார் “வாடா வா” என்று அவள் கைபிடித்து உள்ளே அழைத்துச் செல்லத் திரும்பியவர் “கமான் மை பாய், கெட் இன்” என்க.
“இல்ல கிராண்டப்பா லேட் ஆச்சு அப்புறம் வரேன் நீங்க உங்க பேத்தியைப் பாருங்க” என்றவன் பெட்டிகளை எடுத்துவைக்க அவர்களின் வேலையாள் வந்து எடுத்துச் சென்றான்.
அவன் அப்படி கூறியதுமே அந்த முல்லைப்பூ முகம் வாடிவிட்டது ‘என்கிட்டே பேசமாட்டா ஆனா நான் போறேன் சொன்னா மட்டும் மூஞ்சிய சுருக்கிப்பா’ என்று அவளை மனதிற்குள் திட்டியவன் நடக்கத்தொடங்கினான்.
‘போய்டுவியா’ என்று அவள் விழிகள் அவனைப் பின்னிலிருந்து இழுத்து கட்டியது “சேனா ப்ளீஸ் நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் இன்னைக்கு என்கூட நீ சாப்பிட்டுத்தான் போகணும் வா” என்று மீண்டும் அவனை அழைத்தார் ஓஸ்கர்.
அவரை மீறிச் செல்ல மனம்வரவில்லை அவளையும் தான்… நெற்றியை கீறிக்கொண்டே திரும்பி நடந்து வந்தான், உள்ளே துள்ளிக்குதித்த இதயத்தை அடக்கி வைத்தவள் அவனை முன்னில் விட்டு அவன் சுவடுகளைப் பின்பற்றித் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தாள்.
அப்படித்தானே அன்றும் சென்றாள் எட்டு வருடங்களுக்கு முன்பு… அவளுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு அவன் முன்னே நடக்க நிறைந்து தளும்பிய விழிகளைத் துடைக்கக்கூட தோன்றாமல் அவன் பாதம் போகும் வழியைப் பார்த்தே இந்த வீட்டிலிருந்து வெளியில் நடந்தாள்”.
உள்ளே நுழைந்ததும் பேத்தியை அழைத்துக்கொண்டு அந்த ஹாலின் இடப்பக்கம் நடந்தார் ஓஸ்கர், அருகருகே இரண்டு ஆளுயர புகைப்படங்கள்.
முதலில் அவள் பாட்டி அகதா இரண்டாவது அவளின் தாய் மிராண்டா இருவரையும் வணங்கிச் சிலுவையிட்டுக்கொண்டாள் மயூரி.
“மிரா டார்லிங் உன் பொண்ணு பாத்தியா பெரிய பொண்ணா வளந்துட்டா, நீயும் அம்மாவும் அவ கூடவே இருந்து அவளைப் பாத்துக்கணும் சரியா… என்ன ரெஜி சரியா…” என்றார் இருவரின் புகைப்படத்தைப் பார்த்து, மயூரி தாத்தாவைத் தோளோடு அணைத்துக்கொண்டாள்.
தன்னை மீட்டுக்கொண்டவர் “கோ கோ ரெப்பிரேஷ் ஆயிட்டு வாடா டின்னர் சாப்பிடலாம்” என்றார் மனிதரைக் கையில் பிடிக்க முடியவில்லை எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவருடன் ஒன்றாக அமர்ந்து உன்ன அவரின் உயிர் வந்திருக்கிறது, பாவம் அவருக்குக் கொடுமையான தனிமைதான் இத்தனை வருடங்களும்.
உண்மையில் வெகுமாதங்களுக்குப் பிறகு சேனாபதியை பார்க்கிறார் அவர், இடையில் வந்து அவரைப் பார்த்துச் செல்வான் இப்பொழுது சில மாதங்களாக அவனுக்கு நேரமே இல்லை அவனோடு அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது மிகவும் பிடித்தமான விஷயம் ஓஸ்கருக்கு, அவர்களுக்குப் பேச ஆயிரம் விஷயங்கள் இருந்தது.
“சாரி லேட் பண்ணிட்டேனா” என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தவனுக்கு மூச்சடைத்தது.
க்ரீப் துணியில் தைக்கப்பட்ட முழங்கால் வரை நீண்டு கிடந்த எலுமிச்சை மஞ்சள் நிற பிராக்கில் செர்ரி பூக்கள் சிதறி கிடந்தது, உடலை உறைய வைக்கும் குளிரில் தலைக்கு குளித்து நின்றிருந்தாள் தண்ணீர் மினுமினுப்போடு அவள் இடைவரை சுருண்டு விரிந்து கிடந்தது கூந்தல்.
அவன் மூச்சை மொத்தமாக நிறுத்த போதுமானதாக இருந்தது இதழ்களோடு சேர்ந்து சிரித்த அந்த விழிகள் சட்டென்று திரும்பிக் கொண்டான்.
இறங்கிவந்தவள் தாத்தாவின் அருகில் அமர்ந்துகொண்டாள், முதலில் கொஞ்சமாகச் சூடான சிக்கன் சூப் குடித்தவர்கள் பட்டர் நானும் நாவாபி பன்னீர் க்ரேவியும் வைத்துச் சாப்பிட்டனர்.
இப்பொழுதே நேரம் நள்ளிரவை தொட்டிருக்க ‘பிறகு வருவதாக’ ஓஸ்கரிடம் கூறியவன் அவளைப் பார்க்காமலே வீட்டிலிருந்து வெளியேறினான்.
அவனை வழியனுப்ப வாசல்வரை வந்து நின்றாள் மயூரி, திரும்பாமலே செல்பவனிடம் ஊடல் கொண்டது அந்தப் பேதை மனது.
‘குட்நைட் சொல்லிட்டு போ’ என்று பிடித்துவைத்து வம்பு செய்த காலங்கள் கனவுபோலத் தோன்றியது, அவனிடம் தனக்கு மட்டுமே முழு உரிமை உண்டென்று அனைவரிடமும் சண்டைக்கு நின்றிருக்கிறாள்.
இப்பொழுதும் அப்படியே அவனிடம் தனக்கு மட்டுமே முழு உரிமை ஆனால் அதை வெளிப்படுத்த விடாமல் ஏனோ இப்பொழுது ஒரு தயக்கம் சூழ்ந்துகொண்டது, இந்த உணர்வு பிடித்தும் பிடிக்காமலும் அவளை இம்சை செய்கிறது.
வண்டியில் அமர்ந்து ரியர் வியூ மிரரில் அவளைப் பார்த்தவன் இதழ்கள் மெல்ல மொழிந்தது “ரொம்ப வளந்துட்ட குட்டிமா” என்று.
தன்னையே பார்த்து நின்றிருந்தவளை ஒருமுறை திரும்பி பார்த்தவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருட்டில் மறைந்தான்.
error: Content is protected !!