Skip to content
Post Views: 5,379
அத்தியாயம் – 5
சாவுகாசமாய் சட்டை பொத்தான்களை மாட்டிக்கொண்டிருக்கும் அகிலனை கடுப்புடன் பார்த்தபடி நின்றான் சந்துரு, “உன்னால எனக்கும் லேட் ஆகுதுடா.”
“இருடா போலாம். அந்த மேடமுக்கு ஷார்ப் எயிட்டுக்கு அவங்க வீட்ல நான் இருக்கணுமாம். இப்போவே மணி ஏழரை. இங்கிருந்து அங்க போக எப்படியும் எட்டு ஆகிடுமே. கரெக்ட்டா போனா நம்ம கெத்து என்ன ஆகுறது?” என்று கேட்டவனை வெட்டவா குத்தவா என்று பார்த்த சந்துரு,
“அவங்க பொஷிசன், பவர் தெரியாம விளையாடிட்டு இருக்கடா.”
Advertisement
“அந்த பவர் கொடுக்குற திமிருதானே அவங்களை இப்படி ஆட வைக்குது.” என்று கருவியவனை கண்டிப்புடன் ஏறிட்டான் சந்துரு.
“சும்மா போன உன்னை கூப்பிட்டு ஒன்னும் அவங்க ஆக்சன் எடுக்கல. நீ பண்ணதை முதல்ல ஒத்துக்கோ.”
“என்ன… என்ன பண்ணேன் நானு?” என்று எகிறிக்கொண்டு வந்தவன் நெஞ்சில் கைவைத்து தள்ளிய சந்துரு,
Advertisement
“இதோ இந்த திமிரும் அலட்சியமும் உன் லட்சணத்தை காட்டி கொடுத்திருக்கும். அதான் வச்சி செய்ய முடிவெடுத்திருக்காங்க போல.” என்றான் சற்றும் குறையாத அலட்சியத்துடன்.
Advertisement
“நீ ஒருத்தன் போதும் என்னை டேமேஜ் பண்ண. பிரெண்டுனு சொல்லிட்டு என்கூட சுத்துற நீ எனக்குத்தான் சப்போர்ட் பண்ணனும்.”
“நியாயமா எங்க சப்போர்ட் பண்ணணுமோ அங்க பண்ணுவோம். அதே மாதிரி நீ தப்பு பண்ணா சொல்லவும் செய்வேன் அதுதான் பிரெண்ட். சும்மா நீ சொல்ற எல்லாத்துக்கும் ஜால்ரா அடிக்க என்னால முடியாது. ஒழுங்கா கிளம்பு இப்போ.” என்று விரட்ட, உச்சு கொட்டிக்கொண்டே கிளம்பினான் அகிலன்.
சந்துருவிடம் காய்ந்தாலும் அவன் இழுப்புக்கு எப்போதும் சென்றுவிடுவான் அகிலன். இன்றும் அவன் தொல்லை தாங்க முடியாது கிளம்பியவனை நேரமே அதிரா வீட்டினில் இறக்கிவிட்டான் சந்துரு.
Advertisement
வண்டியிலிருந்து இறங்கியவன் மணிக்கட்டை பார்க்க, எட்டாக இன்னும் மூன்று நிமிடங்கள் இருந்தது. நண்பனை முடிந்தமட்டும் முறைத்தான் அகிலன்.
“உன்னை கேட்டாங்களா சீக்கிரம் டிராப் பண்ண சொல்லி?”
“உனக்கென்ன நீ இப்போ முறுக்குவ அப்புறம் புலம்புவ. உன் புலம்பல யார் கேக்குறது. வாயை வச்சிக்கிட்டு ஒழுங்கா இருந்துட்டு வா.” என்றுவிட்டு சென்றான் சந்துரு.
செல்லும் அவனையே முறைத்துவிட்டு அன்னநடையிட்டு உள்ளே சென்றவன் வாசலில் நின்று அழைப்பு மணி அடித்துவிட்டு பின்னே கைகட்டி நிற்க, காக்கி உடையில் ஆயத்தமாகி வீட்டை பூட்டி வந்தாள் அதிரா. முந்தைய தின எரிச்சல் எல்லாம் முன்தினத்தோடு மறைந்திருக்க, அந்த புதிய நாளை உற்சாகமாக வரவேற்றவள் அப்புன்னகையோடே,
“குட் மார்னிங் அகிலன். சாப்டீங்களா?” என்று கேட்க, ஒரு நொடி அவன் மனம் இளகி பின் நிதர்சனம் உணர்ந்து விறைத்தது.
“சாவி?” என்று கை நீட்டினான்.
பதில் சொல்லாது முகம் இறுகி விறைப்பாய் கை நீட்டி நிற்பவனை பார்த்ததும் அவளது உற்சாகம் சற்று வடிய, அதை இழுத்துப்பிடித்தவள் சாவியை அவனிடம் நீட்டிவிட்டு இயல்பாய் காரில் ஏறி அமர்ந்துகொண்டாள்.
உர்ரென்ற முகத்துடன் காரை கிளப்பியவன் வீட்டு மதில் சுவரை விட்டு வெளியேறும் முன் மான்சியுடைய ஃபார்ம் விலாசத்தை சொல்லி வண்டியை அங்கு செலுத்தச் சொன்னாள். அமைதியாய் அகிலன் கார் ஓட்ட, அதிரா மான்சி அலுவலகத்தில் எடுத்து வந்த கோப்புகளை மீண்டும் ஒருமுறை மேலோட்டமாக பார்த்தவண்ணம் வந்தாள்.
காலையில் புன்னகை முகமாய் வரவேற்ற அதிரா அவன் முசுட்டை என்னவோ செய்துவிட, அவளிடம் எரிச்சலை காட்டிவிட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் பின்சென்று அமைதியாய் வந்தான் அகிலன். அதிராவின் கவனம் வழக்கில் இருக்க, இறங்க வேண்டிய இடம் வந்ததும் தேவையானதை எடுத்துக்கொண்டு இறங்கினாள். அகிலன் ஓரமாய் காரை நிறுத்தி இறங்கி நின்றுகொள்ள, அவனை திரும்பியும் பார்க்காது அதிரா உள்ளே செல்லவும் இறங்கியிருந்த அவன் கிரீடம் மீண்டும் வந்து ஏறிக்கொண்டது. முறுக்கிக்கொண்டு முகம் திருப்பினான். ஆனால் பாவம், கேட்பார் யாருமில்லை.
சுற்றிலும் இரும்பு வேலி போடப்பட்டு பாதுகாப்பாய் இருந்த அவ்விடம் மிக நேர்த்தியாய் பராமரிக்கப்பட்டிருந்தது. வெளியே பெரிய பலகையில் வண்ணமயமாக ‘மான் ஃபார்ம்ஸ்’ என்று பெயர் பலகையில் பொறிக்கப்பட்டிருக்க, அனைத்தையும் கவனித்தபடி நடந்தாள் அதிரா. நடுவே, நடக்கவும் வண்டிகள் போக ஏதுவாகவும் பாதை ஒதுக்கப்பட்டு இருபக்கமும் செடிகள் இருந்தது.
காரிலேயே உள்ளே செல்லலாம் என்று அவளைக் கண்டதும் ஓடி வந்து சொன்னார் காவலாளி. மறுத்தவள் சுற்றத்தை நோட்டமிட்டபடியே மெல்ல உள்நோக்கி நடந்தாள். சிறிது தூரத்திற்கு வெறும் செடிகள் ஆக்கிரமித்திருக்க, அதை தாண்டிச் சென்றதும் இடப்பக்கம் கோழிகள் சுதந்திரமாய் நடமாடிக்கொண்டிருந்தன. சற்று தொலைவில் மாட்டுக் கொட்டகையில் தூய்மை பணி நடப்பது தெரிந்தது. மாடுகள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடப்பட்டிருந்தன. எங்கும் செயற்கையின்றி அனைத்தும் இயற்கையோடு இசைந்திருந்தது. இன்னும் கொஞ்ச நடக்கையிலேயே வேகமாக ஒருவர் அவளிடம் ஓடி வந்தார்.
“நான் இந்த ஃபார்மோட மேனேஜர். சார் நீங்க வருவீங்கன்னு சொன்னாங்க. கார்லையே உள்ள போலாம் மேடம்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் அவர்.
தலையசைத்தவள், மறுத்து நடையை வேகப்படுத்த, அவள் நடைக்கு ஈடுகொடுத்து வந்த மேனேஜர், “மான்சி மேடம் வந்ததுக்கு அப்புறம்தான் இந்த இடம் முழுக்க முழுக்க செயற்கை உரமில்லாம இயற்கை விவசாய முறையை கையிலெடுத்து இயற்கை விளைச்சல் நிலமா மாறுச்சு. அதுவரைக்கும் மத்தவங்க மாறி நார்மலாதான் மான்சி மேடம் வீட்ல பண்ணிட்டு இருந்தாங்க.”
“இங்கிருந்து இயற்கை முறையில காய்கறிங்க, பால், முட்டை எல்லாமே சப்ளை பண்றோம். ஸ்கூல், காலேஜ் ஸ்டூடென்ட்ஸ்க்கு இந்த இயற்கை முறை பத்தி ஒர்க்ஷாப் நடத்துற ஐடியா எல்லாம் மேடமுக்கு இருந்துச்சு. அதுக்குள்ள இப்படி ஆகும்னு நாங்கெல்லாம் நினைக்கவே இல்லை.” என்று வருத்தம் கொண்டார் நடுத்தர வயதில் இருந்த மேனேஜர்.
அவரை ஆராய்ச்சியாய் பார்த்தவள், “மான்சி இங்க தினம் வருவாங்களா?”
“தினம் காலையில இங்க வந்துட்டுதான் ஆபீஸ் போவாங்க. சிலநாள் சாயங்காலம் கூட வந்துட்டு நைட் பூட்டுற வரைக்கும் இருப்பாங்க. இங்க வேலை செய்றவங்களோட சேர்ந்து வேலையும் செய்வாங்க.”
“ஓ! கடைசியா எப்போ வந்தாங்க?”
“மூனு நாள் முன்னாடி.”
மூன்று நாள் என்றதும் மின்னல் வேகத்தில் கணக்கிட்டவள் அது மான்சியின் சடலம் கிடைப்பதற்கு முந்திய தினம் என்றதில் பரபரப்பானாள்.
“அன்னைக்கு காலைலயா இல்லை சாயங்காலமா?”
“அன்னைக்கு நான் லீவ் மேடம். மறுநாள் இங்க வந்தப்போ செக்கியூரிட்டி சொல்லித்தான் தெரியும்.” என்றவர் தானே காவலுக்கு இருப்பவரை அலைபேசியில் அழைத்தார்.
அவரும் வேகமாய் அவர்களை நெருங்கி பவ்யமாய் அதிராவை பார்த்து நிற்க,
“கடைசியா மான்சி இங்க எப்போ வந்தாங்க?” விசாரணை தொனி அவள் உடல்மொழியை நிறைத்தது.
“மூனு நாள் முன்னாடி மதியத்துக்கு மேல வந்துட்டு ராத்திரி ஒரு ஏழு மணி போல கிளம்புனாங்க.”
“அதை ஏன் முன்னாடியே எங்ககிட்ட சொல்லல?”
“யாரும் கேக்கல மேடம்.”
‘புல்ஷிட்!’ மனதிற்குள் கடுப்பானவள் வெளியே காட்டிக்கொள்ளாது, “எப்படி வந்தாங்க?”
“ஆட்டோல வந்தாங்க மேடம்.”
“ஆட்டோலையா?” குழப்பமாய் நெற்றி சுருக்கினாள் அதிரா.
பிரச்சனை என்று ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கி வேறு ஆட்டோவில் ஏறி அதிலும் பழுது என்று பாதியில் இறங்கிவிட்டாள் என்று பரிதி சொன்னதாய் நியாபகம். இப்போதோ இங்கு ஆட்டோவில் வந்து இறங்கியதாய் சொல்கிறாரே மீண்டும் ஒரு ஆட்டோ பிடித்து இங்கு வந்திருப்பாளோ? இங்கிருந்து திரும்ப எப்படி சென்றாள்? என்று யூகங்களுக்கு விடை கண்டுகொள்ளும் விதமாய் அடுத்தடுத்த கேள்விகள் இருந்தது.
“எப்போதும் போல இருந்தாங்களா இல்லை இயல்புக்கு மாறா பதட்டமா இருந்த மாதிரி இருந்துச்சா? அன்னைக்கு இங்க என்ன பண்ணாங்க? யாராவது மான்சியை பாக்க வந்தாங்களா? எப்படி திரும்பி போனாங்க?”
சற்று யோசித்த காவலாளி, “அன்னைக்கு எப்போதும் போலதான் இருந்தாங்க மேடம். அன்னைக்கு செடிங்களுக்கு பூச்சு மருந்து அடிச்சாங்க, அது என்ன ஏதுன்னு பார்த்துட்டு இருந்தாங்க. திரும்பி போன்ல ஆட்டோ புக் பண்ணி போனாங்க.”
“இங்க பக்கத்துல சிசிடிவி இருக்கா?”
“நம்ம ஃபார்ம் வாசல்லேயே இருக்கு? ஆபீசில போய் பாக்கலாம்.” என்ற மேனேஜர் அவளை அங்கிருந்த சிறிய அறைக்கு அழைத்துச் சென்று அன்றைய கேமரா பதிவை ஓடவிட்டார்.
அதில் மான்சி ஆட்டோவில் வந்து இறங்குவதும் பின் பல மணி நேரங்கள் ஃபார்மில் இருந்துவிட்டு காவலாளி சொன்னது போல் வேறொரு ஆட்டோவில் ஏறி செல்வதும் தெரிந்தது. மேனேஜரிடம் கேட்டு அந்த பதிவுகளை வாங்கிக்கொண்டவள் அங்கு என்னென்ன பயிரிடுகிறார்கள் என்று மேலோட்டமாய் கேட்டுக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
ஃபார்மிலிருந்து வெளியே வந்து கிளம்பலாம் எனும் விதமாய் அகிலனைக் கண்டு தலையசைக்க, ‘மகாராணி நடந்து வந்து கார்ல ஏறமாட்டாங்களா… நாமதான் அவங்க நிக்குற இடத்துக்கு காரை கொண்டு போகணுமா?’ என்ற புகைச்சலுடன் காரை திருப்பிக்கொண்டு வந்து அவள் எதிரே நிறுத்தினான்.
பின்னோடே வந்த மேனேஜரிடம், “எப்போ கூப்பிட்டாலும் ஸ்டேஷன் வரணும். சந்தேகப்படுற மாதிரி யார் வந்தாலும் எங்களுக்கு தகவல் சொல்லணும்.” என்று கட்டளையிட்டவள் தன் விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு காரில் ஏறினாள்.
அவள் ஏறவும் காரை விருட்டென எடுத்தான்.
“மெதுவா எடுக்கத் தெரியாதா? எப்போதும் பேக்ல யாரோ தீ வச்ச மாதிரி துள்ளுறது.” காரை அவன் கையாளும் விதத்தில் கோபம் கொண்டு அவள் பேச, அவள் பேச்சை சகிக்கமுடியவில்லை அவனால். விளைவு காரின் வேகத்தை கூட்டினான்.
கண்களை இறுக மூடித்திறந்தவள், பற்களினூடே, “பொறுமையா போ.” என்க,
“எனக்கு இப்படித்தான் வரும்.” என்றிருந்தான் அகிலனும் வீம்பாய்.
“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் அண்ட் திஸ் டேம் கார்.” என்று அவள் கத்த, சட்டென பிரேக் போட்டு காரை நிறுத்தினான் அகிலன்.
“ஸ்டுபிட்.” என்றவள் தண்ணீர் பாட்டில் எடுத்து மளமளவென அதை காலி செய்ய, அவளையே வெறுப்பாய் பார்த்திருந்தான் அகிலன்.
“டோன்ட் பீ சில்லி. பிஹேவ் யுவர்செல்ஃப்.” என்றாள் அதிரா இறுக்கமாய்.
“என்னது சில்லியா?”
“பின்ன நீ செய்யறதுக்கு பேர் என்ன?” பதிலுக்கு எகிறினாள் அதிரா.
தண்டனை கொடுத்தால் அடங்கி வேலையில் ஒழுங்காய் கவனம் செலுத்துவான் என்று அவள் நினைத்திருக்க, கொஞ்சமும் பயமில்லாமல் அவளது அதிகாரத்திற்கு முன்னே தயங்காது எதிர்ப்பை காட்டுகிறான் என்று எரிச்சல் வந்தது. அவனிடம் சரிக்கு சரி வாதிடுவது ஏதோ சிறுபிள்ளை விளையாட்டாய் ஒவ்வாமை கொடுத்தது.
அவனோ சில்லி என்று அவள் திட்டவும் பொறுமலுடன் வேறு திட்டம் தீட்டினான். அமைதியாய் நிதானத்துடன் வண்டியை கிளப்பினான். அதிரா ஆராய்ச்சியாய் பார்க்க,
“காரை இப்படியே கொண்டு போய் எங்கேயாவது இடிச்சிட்டா என்ன பண்ணுவீங்க?” என்று ஓரக்கண்ணால் அவளை பார்த்துக்கொண்டே கேட்க,
எள்ளலாய் சிரித்தவள், “நான் கீழ குதிச்சிடுவேன் மேன். நீதான் கை, கால்ல கட்டு போட்டுட்டு கிடக்கணும்.”
பற்களை நறநறவென கடித்தபடி ஸ்டியரிங்கை அழுந்தப் பற்றினான். அவனை கண்டுகொள்ளாது பரிதிக்கு அழைத்தவள் பத்து நிமிடத்தில் தன் அறைக்குள் இருக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துவிட்டு, “சீக்கிரம் ஆபீஸ் போ.” என்று அகிலனை உசுப்பினாள்.
வன்மப்புன்னகையை இதழுக்குள் மறைத்தவன் சீராக சென்றுகொண்டிருந்த வாகனத்தின் வேகத்தை மெல்லக் குறைத்தான். அதிரா அலைபேசியில் கவனம் பதித்திருந்ததால் வண்டியின் வேகத்தை கவனிக்கவில்லை. பத்து நிமிடங்கள் கழித்தே நடப்புக்கு வந்தவள் சுற்றம் பார்க்க, வாகன நெரிசலில் அவள் கார் சிக்கி நின்றது. நிற்கும் இடமும் வந்த வழி போல் தெரியவில்லை எனவும் முகத்தை சுருக்கியவள் போனில் மேப் போட, அவள் அலுவலகத்திற்கு செல்ல இன்னும் ஒரு மணி நேரம் என்று காட்டியது.
அதிர்ந்தவள் அகிலனை ஏறிட்டு, “ஆபீஸ்லேந்து வரும் போது அரை மணி நேரத்துல வந்த. இப்போ ஒன் ஹவர் காட்டுது?”
“இப்போ அந்த வழியா போனா கூட்டமா இருக்கும் மேடம்.” என்றான் ஏதும் அறியாதவன் போல.
சந்தேகமாய் பார்த்தவள், “இங்க மட்டும் என்ன வாழுது இப்போ? வேணும்னு மாத்தி வந்தியா?” என்று கண்டுகொண்டு அழுத்தமாய் கேட்க,
“இல்லையே…” ராகமாய் இழுத்தான்.
அவன் குரலே அவனை காட்டிக்கொடுத்துவிட, பார்க்கும் வேலைக்கு இவன் சற்றும் பொருத்தமில்லாதவன் என்ற பிம்பம் அழுத்தமாகியது.
வரிசைகட்டி நிற்கும் வேலைகளை மனதிற்குள் ஓட்டிப்பார்த்தவள் பொங்கும் எரிச்சலை அடக்கி, மேப்பில் வேறு வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தாள். சற்று தூரம் சென்ற பின் குறுக்கு சந்து ஒன்றில் புகுந்தால் பத்து நிமிடம் முன்னரே சென்றுவிடலாம் என்று மேப் காட்ட,
“இந்த வழில போ.” என்றாள் சிடுசிடுப்பாய்.
‘நீங்க சொன்னா நான் கேட்கணுமா?’ என்ற மனநிலையே அகிலனுக்கு இருந்தாலும் இதற்கு மேல் அவளை கடுப்பேற்றினால் கரும்புள்ளி குத்தி சம்பள விசயத்தில் கைவைத்துவிட்டால் என்ன செய்வது என்று அமைதி காக்க முடிவெடுத்தான்.
‘இன்றைக்கு இது போதும்.’ என்ற பெருந்தன்மை வேறு. அவள் சொன்ன வழியில் காரை செலுத்தி பத்து நிமிடம் முன்னதாகவே அலுவலகத்தில் விட்டான்.
காரை விட்டு இறங்கியதும் அவனை கண்டுகொள்ளாமல் விறுவிறுவென அவள் உள்ளே சென்றுவிட, ‘டிரைவர் மாதிரி இப்போ நான் இங்கேயே நின்னு காரை காவல் காக்கனுமா?’ என்று கடுப்பில் கைமுஷ்டியை காற்றில் குத்தினான்.
இவனைப் போலவே மற்றொரு ஓட்டுனரும் சற்று தொலைவில் காரில் சாய்ந்தவண்ணம் போனை நோண்டிக்கொண்டிருக்க, அவரிடம் சென்று பேச்சு கொடுப்போமா என்று யோசித்த அகிலன், ‘அவங்க ட்ரைவர் போஸ்டுக்குனு அந்த கோட்டால வந்தவங்க, அவங்களும் நானும் ஒன்னா.’ என்று ஈகோ தலைதூக்க உடனே முடிவை மாற்றிக்கொண்டான்.
சிகரெட்டை பற்ற வைத்த வண்ணம் அலுவலகத்திற்கு பக்கவாட்டில் இருந்த சிறிய சந்தில் நின்று நன்றாக புகைத்து ஊதினான். பின் வயிறு சத்தம் எழுப்பவும் அருகில் ஹோட்டல் இருக்கிறதா என்று தேடிச் சென்றுவிட்டான்.
உள்ளே தன்னறைக்கு வந்த அதிரா, அவளுக்காக காத்திருந்த பரிதியை காய்ச்சி எடுத்துவிட்டாள்.
“என்ன இன்வெஸ்டிகேட் பண்றீங்க நீங்கெல்லாம்? மான்சி கடைசியா அவங்க ஃபார்முக்கு தான் போயிருக்காங்க. அங்க போயி விசாரிக்கணும்னு பேசிக் சென்ஸ் கூட இல்லாம என்ன பண்றீங்க?”
“மேடம், முதல்கட்டமா அவங்க குடும்பத்துல மட்டும்தான் விசாரணை முடிஞ்சிருக்கு.” என்றான் பரிதி.
“புல்ஷிட். பாடி ஐடென்டிபை பண்ணி எவ்ளோ நேரம் ஆகுது. முக்கியமா விசாரிக்க வேண்டிய அவங்க வேலை சம்மந்தப்பட்ட இடத்தில இன்னும் விசாரணை ஆரம்பிக்கவே இல்லை. இந்த வேகத்துல விசாரிச்சா எப்படி குற்றவாளிய புடிக்கிறது. இந்த மாதிரியான அலட்சியத்தை என்னால பொறுத்துக்க முடியாது பரிதி.
ஃபார்மில் வாங்கிய சிசிடிவி பூட்டேஜ் அடங்கிய பென்டிரைவை அவனிடம் நீட்டியவள், “இது மான்சி ஃபார்மோட கேமரா பூட்டேஜ். மான்சி ஆட்டோல தான் போய்ட்டு ரிட்டர்ன் ஆகியிருக்காங்க. இதை செக் பண்ணி அந்த ஆட்டோக்காரங்களை புடிங்க.”
பரிதி அதை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டவன், “சாரி மேம். இன்ஸ்பெக்டர் விசாரிச்சிடுவேன்னு சொல்லவும் அவர் பாத்துப்பாருனு மெத்தனமா இருந்துட்டேன். இனி இப்படி நடக்காது.” என்று மன்னிப்பு வேண்ட, தலையசைத்த அதிரா சற்று ஆசுவாசமானாள்.
“மான்சி போனோட கடைசி சிக்னல் எங்க இருந்துச்சு?”
“அந்த குப்பை மேடு இருக்குற ஏரியா பக்க டவர்ல தான் கட் ஆகியிருக்கு மேடம்.”
இருக்கையிலிருந்து லேசாக சாய்ந்து எதிரே இருந்த மேசையில் கைகோர்த்து ஊன்றியவள், “மான்சி கூட சண்டை போட்டுட்டு இருந்த அந்த ரெண்டு ஜென்ட்ஸ் யாரு என்னனு தெரிஞ்சிதா?”
“விசாரிச்சிட்டு இருக்கோம் மேம். அந்த ஏரியா புல்லா ஐ.டி. காரிடர். தினம் ஆயிரக்கணக்கானவங்க அந்த ஏரியாவுல போய்ட்டு வந்துட்டு இருக்காங்க. அதுல ஷேர் ஆட்டோல போறவங்க தோராயமா **பெர்ஸண்டேஜ். அதுவும் இப்போ எல்லாரும் எல்லா நாளும் ஆபீஸ் போறதில்லை. ஹைப்ரிட்னு வாரத்துல ரெண்டு மூணு நாள் மட்டும் போறாங்க. ஒரு சிலர் அந்த ரெண்டு மூணு நாள் மட்டும் இங்க இருந்துட்டு மத்த நாள் சொந்த ஊர்லேந்து வேலை பாக்குறாங்க. அதான் டைம் எடுக்குது மேம்.” என்று இவன் நீண்ட விளக்கம் கொடுக்க,
“ஆபீஸ்ல நம்ம டெப்பார்ட்மெண்ட் பெர்மிசன் லெட்டர் வாங்கிட்டு ஐ.டி. எம்ப்ளாயி டேட்டாபேஸ்ல செக் பண்ணுங்க. சீக்கிரம் புடிச்சிடலாம்.” என்று யோசனை சொன்னவள்,
“போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துடுச்சா?”
“ரெடி மேம். போய் கலெக்ட் பண்ணிட்டு வரவேண்டியதுதான்.”
“வெளில என் கார்கிட்ட அகிலன் இருப்பாரு. அவரை வாங்கிட்டு வரசொல்லுங்க.”
“அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கலெக்ட் பண்ணி உங்ககிட்ட ரிப்போர்ட் பண்றேன்னு சொன்னாரு.”
“அவர் எப்போ போய் வாங்கிட்டு வந்து நான் எப்போ பார்க்க? டிரெக்ட்டா நானே வாங்கிக்குறேனு சொல்லிட்டு அகிலனை அனுப்புங்க.”
சரியென்று தலையசைத்தவன் வெளியே வந்து அகிலனைத் தேட, அவன் அங்கில்லை. அதை அப்படியே அதிராவிடம் பகிர,
“அவர் நம்பர் வாங்கி எங்க இருக்காருன்னு பார்த்து அனுப்பிவிடுங்க. எனக்கு சீக்கிரம் ரிப்போர்ட் கைக்கு வரணும்.” என்றாள் அதிரா.
அவளின் கட்டளைக்கு இணங்க அவன் அலைபேசி எண்ணை தேடிப்பிடித்து அவனை வரவைத்து மான்சியுடைய இறுதி அறிக்கை வாங்கி வரசொல்ல, அவனிடமே குதித்தான் அகிலன்.
“டிரைவரா டிமோட் பண்ணிட்டு இப்போ வந்து அதை வாங்கிட்டு வா இதை வாங்கிட்டு வான்னு சொல்றீங்க சார். இதெல்லாம் சரியில்லை.”
“மேடமோட ஆடர். சொன்னதை செஞ்சிட்டு வந்து அப்புறம் தம்கட்டி பேசு.” என்றான் பரிதியும் அழுத்தமாய்.
‘இவரை சொல்லி ஒன்னுமில்லை, அவங்ககிட்ட பேசிக்கிறேன்.’ என்று மனதிற்குள் கருவியவன், அழுத்தமாய் பரிதியிடம் தலையசைத்து அதிராவை சந்தித்து சண்டை போட உள்ளே செல்லலாம் என்று பார்க்க, குறுக்கே வழி மறித்து நின்ற பரிதி காரை கைகாட்டி போகச்சொன்னான். இறுகிய முகத்துடன் அங்கிருந்து நகர்ந்தவன் காரை எடுத்துக்கொண்டு பாதி வழியில் அப்படியே நிறுத்திப்போட்டு இருக்கையில் சாய்ந்து கண்மூடி விட்டான்.
உறக்கம் கண்களை ஆக்கிரமிக்க, இவன் இப்படி செய்வான் என்று கணித்தது போல் அலைபேசி ஒலித்தது. பெயரின்றி புது இலக்கத்திலிருந்து அழைப்பு வர யோசனையுடன் பச்சை ஐகானை இழுத்துவிட்டு காதில் வைத்தான்.
“இன்னும் ரிப்போர்ட் வாங்க வரலைன்னு சொல்றாங்க. வண்டியை பாதில நிறுத்தி போட்டு தம் அடிக்குறியா?” என்ற அலட்சிய குரலை வைத்தே அது அதிரா என்று கண்டுகொண்டான்.
‘வேவு பார்க்கிறாளா?’ என்று கடுப்பானவன், இதழ்களை இறுக மூடி பதில் சொல்லாது அமைதியாய் இருக்க,
“டூ வாட் ஐ செட்(said). எவ்ளோ டிஸிப்லினா நடக்குறீங்களோ அவ்ளோ சீக்கிரம் பழைய ஸ்டேஷனுக்கே போயிடலாம்.” என்று சொல்ல, இதற்கு மேல் முறுக்குவானா?
வேகமாய் சென்று அறிக்கை வாங்கி வந்து அவளிடம் சமர்ப்பிக்க, அது என்று பார்த்தவள்,
“வேடிக்கை பாத்துட்டு எங்கேயும் போயிடாத. எப்போ வேணும்னாலும் வெளில போற வேலை வரும்.” என்க, முகம் இறுக தலையசைத்த அகிலன்,
“டிரைவர்ன்னு சொல்லிட்டு இந்த எடுபிடி வேலை வாங்குறதெல்லாம் ஓவர் மேடம். இது என் வேலை இல்லை.”
இப்போது வன்மப்புன்னகை வீசுவது இவள் முறை.
“சொல்ல மறந்துட்டேன், தினம் கார் வாஷ் பண்ணிடு. இன்னைக்கு முதல் நாள்னு காலையிலேயே சொல்லல. நாளையிலிருந்து செஞ்சிடு.” என்றதும் அவன் முகம் போன போக்கை பார்த்து திருப்தி கொண்டாள் அதிரா.
இதை இரவு சொல்வதாய்தான் முதலில் நினைத்திருந்தாள். முதல் நாளே அதிகம் வேலை வாங்க வேண்டாம் என்றும் எண்ணியிருந்தாள். எங்கே இவன் விட்டால்தானே. அவன் கடுப்பேற்றவும் பதிலுக்கு அவளும் வைத்து செய்ய முடிவெடுத்துவிட்டாள்.
காலை முன்னரே வந்து கார் துடைத்து கழுவ வேண்டும் என்று மீண்டும் அழுத்திச் சொல்ல,
“கார் ஓட்டத் தெரியாதுன்னு சொல்லியிருக்கணும்.” என்று இதழுக்குள் அவன் முணுமுணுப்பது அவளுக்குத் தெளிவாய் விழ,
“டூ லேட்.” என்றிருந்தாள் அவள்.
error: Content is protected !!