Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 1.1

ஆசை அச்சம் நாணம்

                        அத்தியாயம் 1

கோபாலனை தவிர்த்து அனைவருக்கும் இந்த அழகான காலை இனித்தது. “அப்பா ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க?” என தந்தையின் சோர்வறிந்தே குறைபட்டான் விஷ்ணுவர்தன்.

“ப்ச் ஒன்னுமில்ல” என தலையசைத்து மறுத்து, “சாப்பிட என்ன இருக்கு?” என மனைவியிடம் கேட்டார்.



Advertisement

“இட்லி, சப்பாத்தி, காரசட்னி, காளான்கிரேவி.  அவசரத்துக்கு இவ்வளோதான் செய்ய முடிஞ்சது. இட்லி வைக்கவா?” என பையை அவிழ்க்க ஆயத்தமானார் பிரபாவதி.

                                                                                                                                                                                                        “ம்” என சம்மதித்தவர் இரண்டு இட்லியோடு போதும் என்க,  பிரபாவதி “இதுக்கு வராமலே இருந்திருக்கலாம்” என பிணங்கினார் ஆதங்கமாக.

“ஏய்… நேரம் என்ன இப்போ? எட்டு மணிக்கு எவ்வளோ சாப்பிட முடியும்? அதுவும் வர வழியில இரண்டு காபி குடிச்சாச்சு” என சமாதானம் செய்தார் மனைவியை.

Advertisement

விஷ்ணுவர்தன் முகமும் அதிருப்தியை காட்ட, “விஷாலினியையும் அழைச்சிட்டு வந்திருக்கலாம்” என சன்னக்குரலில் முணுமுணுத்தாள் காவ்யா.

Advertisement

தங்கையை முறைத்தவன், “ம்மா கிளம்பலாம்” என்றான் அன்னையிடம்.

“எதுக்குடா இவ்வளோ கோபம்?” என மகனை முறைத்தார் கோபாலன்.

“ஒரு வருசத்துக்கப்புறம் வெளில வந்திருக்கோம், உங்க நினைப்பு இங்க இல்லைனா எதுக்கு இங்க இருக்கனும்?” என்றான் இறுக்கமாக.

Advertisement

“விஷாலினி நினைப்பு வந்ததுதான், இல்லைனு சொல்லமாட்டேன், ஆனா நீ நினைக்கிற மாதிரி அவளை இங்க கூட்டிட்டு வரலைன்ற எண்ணத்துல இல்ல, நேத்து நைட் அந்த பொண்ணு எதோ என்கிட்ட சொல்ல நினைச்சது. ஆனா சொல்ல தயக்கம் இருக்கும் போல. என்னவா இருக்கும்னுதான் யோசிச்சிட்டிருந்தேன்” என்றார் கோபாலன்.

தந்தை பேச்சில் ஒரு நொடி அதிர்ந்தாலும், விஷாலினியை தவிர தன் விசயம் யாருக்கும் தெரியாது, அவளிடமும் யாரிடமும் சொல்லக்கூடாதென சத்தியம் வாங்கியிருக்கிறோம், நிச்சயம் தன்னை காட்டிக்கொடுக்கமாட்டாள்.

அதோடு சொல்லியிருந்தால் இந்நேரம் தந்தையும், அண்ணனும் தன்னை உண்டு இல்லை என்று செய்திருப்பார்கள். இது எதோ வேறு விசயம் என நிம்மதியாகி, “என்னவா இருக்கும்ப்பா? அவங்கப்பா ஏது பார்க்க வந்திருப்பாரா?” என்றாள் அக்கறையாக.

“அப்படியிருந்தா என்கிட்ட தயங்காம சொல்லிடும் காவ்யாம்மா, இது றே ஏதோ போல” என்றார் யோசனையாக.

“இன்னைக்கெல்லாம் நம்மளை பார்க்க முடியாதுனு பார்த்திருப்பாப்பா” என காவ்யா தந்தையை தேற்ற, ம்… என்ன விசயமாக இருந்தாலும் இங்கிருந்துகொண்டு என்ன செய்ய முடியும்? தற்போதுதான் பனிரண்டாம் வகுப்பை முடித்திருக்கும் விஷாலினியிடம் தனியாக கைப்பேசியும் இல்லை. படிப்பிற்கு கூட அவளின் அன்னையின் மொபைலைத்தான் உபயோகப்படுத்துவாள்.

பெரிதாய் என்னவாக இருந்திடும்? இன்றொருநாள்தானே? மாலை வீட்டிற்கு சென்று என்னவென விசாரித்துக்கொள்ளலாம் என நினைத்த கோபாலன், குடும்பத்தோடு வந்துவிட்டு தான் மட்டும் சோர்வாக இருந்தால் மனைவி மகனுக்கு கஷ்டம்தானே என, “சரி விடுடா, நீங்க சாப்பிடுங்க, சாப்பிட்டதும் என்ஜாய் பண்ணுவோம்” என்றார் உற்சாகமாக.

தற்போதுதான் நிம்மதியானது விஷ்ணுவிற்கு. முகமும் பொலிவை காட்ட, “சரி வாங்க சாப்பிடுவோம்” என்றான்.

“எனக்கு நிஜமாவே போதும்ப்பா, வாங்க, இன்னைக்கு நான் பரிமாறுறேன்” என்று மகன் மகளை அழைத்துச்சென்றார் மனைவியிடம்.

பிரபாவதி அனைவருக்கும் தட்டில் போட்டு வைத்திருக்க, “நீ சாப்பிடு பிரபா” என்று மனைவிக்கு தட்டை எடுத்து கொடுத்தார்.

அனைவரும் உண்டதும், காவ்யா “ப்பா ஃபர்ஸ்ட் எங்க பிக் எடுக்கலாம்?” என்றாள் ஆவலாக.

“உன் விருப்பம்டா” என்றார்.

அனைவரும் மகாபலிபுரத்தில் இருந்தனர். காவ்யா, விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்த இடம் ஆதலால் கோபாலனுக்கு நேரம் இருக்கும் போதெல்லாம் இங்கு வந்திடுவார்கள்.

வெண்ணை உருண்டை கல்லை வழக்கம்போல் நகர்த்த முயற்சித்து, “நிஜமா நகர்ந்துச்சு விஷ்ணுண்ணா” என உள்ளடக்கிய சிரிப்போடு காவ்யா சொல்ல, வழக்கத்திலில்லாமல் “ஆமா காவ்யா நான் கூட பார்த்தேன், ரொம்ப இல்ல, ஆனா கொஞ்சமா நகர்ந்துச்சு” என சிரிப்போடு பொய்யுரைத்தான் விஷ்ணுவர்தன்.

நீயா ஒத்துக்கிட்ட? என்பதாய் காவ்யா அதிசயமாய் வாயை பிளக்க, “வா, குடரை கோவில் பார்ப்போம்” என்று தங்கையை அழைத்துப்போனான். பின்னே கொற்றவை சிற்பம், யானை சிற்பம், வராக மண்டபம், சிம்ம விஷ்ணு, மகேந்திரவர்ம பல்லவன் மற்றும் அவரது மனைவிகள், துர்காதேவி, கங்காதரர், மகாபலிசக்ரவர்தி சிற்பம் என அனைத்தையும் புதிதாய் பார்ப்பதுபோல் பார்த்து மகிழ்ந்தனர் அண்ணனும் தங்கையும்.

மூன்று மணிநேரத்திற்கு பிறகு, “ஏங்க போங்க… இதுக்குமேல என்னால நடக்க முடியாது” என்று தளர்வாய் அமர்ந்தார் பிரபாவதி.

“அரை பர்லாங்கு கூட இருக்காது, அதுக்குள்ள கால் வலிக்குதா? என்னோட வாக்கிங் வான்னா வரியா? அப்புறம் இப்படித்தான் வலிக்கும்” என கடுகடுத்தார் அக்கறையாக.

“தினமும் கணக்கில்லாம கிச்சனுக்கும் டைனிங் டேபிளுக்கும் நடக்குற வாக்கிங்கே போதும்”

“இதை ஒன்னை சொல்லிடு, காவ்யாக்கு வேலை சொல்லி பழகுனு சொன்னா கேக்குறதில்ல, இருபது வயசு பிறந்து ஒரு வாரமாகிடுச்சு, ஆனா இன்னும் ஒரு காபி கூட போட தெரியாது” என குறைபட்டார் மனைவியை.

“நைட்டெல்லாம் படிக்கிற பிள்ளையை வேலை வாங்க மனசு வரமாட்டேங்குது. போன வாரம் ஃபைனல் செம் முடிஞ்சதில்ல? இனி கொஞ்சம் கொஞ்சமா பழகிக்குவா” என்றார் சமாதானமாக.

கோபாலன் சரி என்பதாய் தலையசைக்க, “இப்போல்லாம் பாப்பாவை திட்டிட்டே இருக்கிங்க” என்றார் குறையாக.

“ம் நம்ம பொண்ணை திட்டனும்னு எனக்கு வேண்டுதல் பாரு” என கடிந்து, “விஷ்ணு வீட்டுலயிருந்தான்னா உனக்கு அத்தனை வேலை செய்யிறான், அந்த பொறுப்பு ஏன் பாப்பாக்கு வரமாட்டேங்குது?

அம்மாக்கு அம்பது வயசாகிடுச்சே, இன்னும் பம்பரமா சுத்தமுடியுமானு யோசிக்கனும்ல? பெத்த அம்மாக்கே யோசிக்கலனா, நாளைக்கு கல்யாணமான பின்ன புகுந்த வீட்டு ஆளுங்களை எப்படி புரிஞ்சிக்கும்?” என்றார் கோபமாக.

“ஏங்க எதுக்கு இவ்வளோ கோபம்? இப்போ என்ன அடுத்த வருசமேவா மாப்பிள்ளை பார்க்க போறோம்? இப்போதான் யு.ஜி முடிச்சிருக்கா, இன்னும் எம்.எஸ்சி இருக்கு, அதுக்கப்புறம் பி.ஹெச்.டி வேற பண்ணனும்னு நீங்கதான சொல்லுவிங்க? இப்போ என்ன புகுந்த வீட்டைப் பத்திலாம் பேசுறிங்க?” என்றார் பதட்டமாக.

“ம்… நான்தான் பி.ஹெச்.டி பண்ணனும்னு சொல்லிட்டிருக்கேன், ஆனா காவ்யாக்கு அப்படி நினைப்பில்லையோனு தோணுது. எப்போ பாரு வாட்ஸாப் சாட்டிங்தான்” என்றார் வருத்தமாக.

“இப்போலாம் பாடம் சம்மதப்பட்டதையே வாட்ஸாப்லதான் அனுப்பறாங்க, அப்புறம் பிள்ளைகளை குறை சொல்லி என்ன பிரியோஜனம்?” என்றார்.

ஆமோதிப்பாய் தலையசைத்து, பார்வையை மகள் மகனிடம் செலுத்த, வாங்க என்பதாய் செய்கை செய்தான் விஷ்ணுவர்தன்.

மகனின் மொபைலுக்கு அழைத்து, “உங்கம்மாவாலே நடக்க முடியாது, நான் இவளோட இருக்கேன், நீங்க பார்த்துட்டு சீக்கிரம் வாங்க, லன்ச் முடிச்சிட்டு மீதியை பார்ப்பிங்களாம்” என்றார்.

“சரிப்பா” என்று இணைப்பை துண்டித்து தங்கையை அழைத்துக்கொண்டு பெற்றோரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

“நீ ஏன் விஷாலினி மேல எப்போ பார்த்தாலும் கோபமாவே இருக்க? இப்போலாம் அவ நம்ம ஜன்னலை கூட பார்க்குறதில்ல” என்றாள் காவ்யா.

“இப்போ எதுக்கு அவ பேச்சு?” என்றான் முறைப்பாக.

“இல்ல எனக்கு நீ பதில் சொல்லியே தீரனும், அப்படி என்ன பண்ணிட்டா அவ?” என்றாள் பிடிவாதமாக.

“என் கோபத்துக்கு தகுதியான ஆளா அந்த குட்டிசாத்தான்?” என முறைத்து “கோபம்லாம் ஒன்னுமில்ல, சரியான எரிச்சல்” என்றான் கடுப்பாக.

“ப்ச் பாவம்ண்ணா அவ. நாம இத்தனை பேர் இருந்தும் சில நேரம் போரடிக்கும், விஷாலினி அவ அம்மாவோட தனியா இருக்கா, இப்படி சூழல்ல பக்கத்து வீட்டை பார்க்குறது இயல்புதானே?” என்றாள் பரிவாக.

“எதோ சின்ன வயசு வரைக்கும் பரவால்ல, பனெண்டாவதே முடிச்சிட்டா, இப்போவும் இப்படினா கடுப்பாகுதில்ல? வீட்டுக்கு உரிமையானவங்க அவங்கன்னாலும், நாம குடியிருக்கும்வரை அது நம்ம வீடு. நம்ம வீட்டுல கூட சுதந்திரமா இருக்க முடியறதில்ல, ஹாலுக்கு வந்தாலே பார்க்குறாளோனே தோணுது” என்றான் எரிச்சலாக.

“இப்போ கொஞ்ச நாளா பார்க்குறதில்லதானே?” என்றாள் பாவமாக.

“ம் உண்மைதான், முதல்ல எக்ஸாம்க்கு படிப்பாளா இருக்கும்னு நினைச்சேன், ஆனா எக்ஸாம் முடிஞ்சு ஒன்றரை மாசம் ஆகியும் பார்க்குறதில்ல, இப்போதான் வீட்டுல கொஞ்சம் ஃபீரீயா நடமாட முடியுது. இதை இப்படியே மெயின்டைன் பண்ண சொல்லு” என்றான் நிம்மதியோடு.

விஷாலினிக்கு மூன்று வயதிருக்கும்போது கோபாலன் குடும்பம் இவர்கள் வீட்டிற்கு வாடகைக்கு குடியிருக்க வந்தனர். அன்னை மற்றும் பாட்டியோடு மட்டுமே வளர்ந்த குழந்தைக்கு ஆறு வயது காவ்யா, மற்றும் எட்டு வயது விஷ்ணுவர்தன் வரவு பெரு மகிழ்ச்சியை கொடுக்க, பாட்டியை ஏமாற்றிவிட்டு இவர்களின் வீட்டிற்குள் வந்திடுவாள்.

குழந்தை பருவத்தில் குண்டு கன்னங்கள், சிறிதாகவும் இல்லாமல், முட்டைக் கண்போலும் அல்லாமல் அகன்ற விழிகளால் பார்ப்பவர்களை மயக்கும் பாவனையில் அத்தனை அழகாய் இருப்பாள் விஷாலினி.

விஷாலினியின் ஆறு வயதுவரை கோபாலன் குடும்பமும் நன்றாக ஆதரித்தனர். ஒருமுறை கோபாலன் குடும்பம் சொந்த ஊர் திருவிழாவிற்கு சென்றிட, நான்கு நாள்கள் இவர்களை காணாமல் காய்ச்சல் வந்திருந்தது விஷாலினிக்கு.

குழந்தை இந்தளவிற்கு அவர்கள் மேல் பித்தாக இருக்கிறாளா என  பயந்தனர் விஷாலினியின் அன்னையும் பாட்டியும். “குடியிருக்கிறவங்க காலி பண்ணிட்டு போய்ட்டா இன்னும் குழந்தை ஏமாந்திடுவாம்மா, இனி அவங்க வீட்டுல விடுறதை குறைச்சிக்கனும்” என்றார் மேகலை.

மகள் சொல்வதும் சரிதான். இனி பேத்தியை அதிகம் அவர்களிடம் விடக்கூடாது, குழந்தையின் கவனத்தை வேறுபுறம் திருப்ப வேண்டுமென முடிவெடித்தார் விஷாலினியின் பாட்டி.

அடுத்து வந்த வாரத்திலேயே நல்ல நாள் பார்த்து விஷாலினியை ப்ரீகேஜில் சேர்த்தார்கள். விஷ்ணு அண்ணாவும், காவ்யாக்காவும் படிக்கனும், தொல்லை பண்ணக்கூடாது என்று குழந்தைக்கு எடுத்துரைத்து, ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டல்ல? இனி அவங்க வீட்டுக்கெல்லாம் போகக்கூடாது, மிஸ் திட்டுவாங்க என்பன போன்ற காரணங்களை சொல்லி கோபாலன் வீட்டிற்குள் செல்வதை படிப்படியாக குறைத்தார்கள்.

விஷாலினி இங்கே வரவில்லை என்றாலும், பள்ளி விடுமுறை நாள்களில் காவ்யாவும், விஷ்ணுவும் இவள் வீட்டிற்கு வந்து விளையாடுவார்கள். விஷ்ணுவர்தன் ஆறாம் வகுப்பு சேர்ந்ததும் கராத்தே, நீச்சல் பயிற்சி என சேர்த்துவிட, காவ்யா தனக்கு பிடிக்கவில்லை என்றுவிட்டாள்.

ஆனால் அண்ணன் இல்லாத நேரத்தில் தனிமை பிடிக்காமல் போக, அன்னையை தொல்லை செய்ய ஆரம்பித்தாள். பிரபாவதிக்கு சிரமம் குறைக்க வேண்டி காவ்யாவை நடனப்பள்ளியில் சேர்த்துவிட்டார் கோபாலன்.

மகளை நடனப்பள்ளிக்கு அழைத்துச்செல்லும் போது விஷாலினியின் முகம் வாடுவதைக் கண்டு அவளையும் அழைத்துச்செல்வதாக பிரபாவதி கூற, ஐந்து வயதுதானே ஆகிறது என மேகலையும், அவளின் அம்மாவும் மறுத்தனர்.

ஐந்தில் வளைத்தால்தானே என சொல்லிப்பார்த்தார் பிரபாவதி. ஆனாலும் மேகலை திடமாய் மறுத்தார். அதில் பிரபாவதிக்கு சுணக்கம்தான் என்றாலும் அவர்களின் குழந்தை அவர்கள் விருப்பம் என நினைத்துக்கொண்டார். ஆனால் காவ்யா தினமும் தான் நடனப்பள்ளியில் கற்றுக்கொண்டதை ஐந்து வயது விஷாலினிக்கு ஆடிக்காண்பித்து, அவளையும் ஆட வைப்பாள்.

இப்படியாக காவ்யாவும் விஷாலினியும் தோழிகளாயினர். நடனப்பள்ளியில் சேர்ந்த பின்னே காவ்யாவின் கவனம் படிப்பில் குறைய ஆரம்பிக்கவே கோபாலன் டியூசன் சேர்த்துவிட்டார். காலை நடனப்பள்ளி, மாலை படிப்பு என்பது வழக்கமாகிட, விஷாலினியோடு பழகும் நேரம் குறைந்து போனது.

காவ்யாவை காணாமல் முகம் வாடும் விஷாலினியிடம்… காவ்யா, விஷ்ணுவை தொல்லை செய்யக்கூடாது, அவங்க நல்லா படிச்சு பெரிய ஆளா வரப்போறாங்க. நீயும் படிப்பில் கவனம் செலுத்து என்று பாட்டியும், அன்னையும் எடுத்துரைத்தனர்.

 முன்புபோல் விஷ்ணுவர்தன் மற்றும் காவ்யாவையும் அதிகம் பார்க்க முடியாமல் போக, பள்ளி விட்டால் வீடு என்று முடங்கிப்போனாள் விஷாலினி.

ஒன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் விஷாலினிக்கு தனது வீட்டு ஜன்னலிலிருந்து பக்கத்து வீட்டை பார்ப்பது தவறென்றெல்லாம் தெரியவில்லை. காவ்யா, விஷ்ணுவோடு பழக முடியாத ஏக்கத்தை ஜன்னல் வழியாக பார்த்து தீர்த்துக்கொண்டிருந்தாள்.

விஷ்ணுவும் காவ்யாயும் காலை உணவுண்ணும்போது விஷாலினி பார்ப்பது பிரபாவதிக்கு சங்கடமாகிட, ‘உள்ள வா, சாப்பிடலாம்’ என அழைப்பார். வேணாம் என்ற தலையசைப்போடு மறுத்திடுவாள்.

தான் உண்பதை விஷாலினி பார்ப்பதை ஆரம்பத்தில் சகித்துக்கொண்ட விஷ்ணுவால் சில வருடம் கழித்து சகிக்க முடியாமல் போனது. அவனும் பதினொன்றாம் வகுப்பிற்கு வந்திருக்க, நீச்சல், தடகளம் என ஓடுபவனுக்கு நிறைய சாப்பிட வேண்டியிருக்க, விஷாலினி பார்ப்பது பிடிக்காமல் போனதோடு எரிச்சலை உண்டாக்கியது. அதன் விளைவாக விஷாலினியை பார்ப்பதை இவன் தவிர்க்க ஆரம்பித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!