Skip to content
Post Views: 15,028
விஷ்ணுவிற்கு தான் பார்ப்பது பிடிக்கவில்லை என்றெல்லாம் விஷாலினிக்கு புரியவில்லை. ஆனால் காவ்யாவைப் போல் இவனுக்கு தன்னை பிடிப்பதில்லை என்று உணர்ந்திருந்தாள். எனவே காவ்யாவிடம் சிநேகப்புன்னகை சிந்துபவள் விஷ்ணுவை நேர்கொண்டு பார்க்க மாட்டாள்.
ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது படிப்பு, பிடித்தம் பற்றி விசாரிக்கும் கோபாலனையும் காவ்யாவையும் மிகவும் பிடிக்கும் விஷாலினிக்கு. விஷாலினி எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவளின் பாட்டி அவரது மகன் வீட்டிற்கு செல்லும் நிலை வரவே, அதன் பின்னே விஷாலினி மீது கூடுதல் கவனம் செலுத்தினார் கோபாலன்.
பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்ததற்கு கோபாலனின் பாராட்டை இன்று வரை மறக்கவில்லை விஷாலினி. தனது பனிரெண்டாம் வகுப்பு தேர்வையும், நீட் தேர்வையும் கூட சிறப்பாகவே செய்து முடித்து, கோபாலனின் பாராட்டுதலை பெறவும் ஆவலாக காத்திருந்தாள்.
ஆனால் விஷாலினியின் ஆவலான காத்திருப்பெல்லாம் தேர்வு முடிந்த ஒரு வாரத்திலேயே காணாமல் போனது. யாரென்றே அறியாதவன் வலுக்கட்டாயமாக தோழமை பாராட்ட வற்புறுத்துகிறான்.
Advertisement
பனிரெண்டாம் வகுப்பு முடித்ததும் கணினி பயில செல்ல ஆரம்பித்தவள் அந்த முன்பின் அறியாதவனுக்கு பயந்து கணினி மைய்யத்திற்கு செல்வதை நிறுத்தியிருந்தாள்.
இப்படியாக ஒரு வாரம் கடந்த நிலையில் உலர்ந்த துணிகளை எடுக்க மாடிக்கு சென்றவள், யாருடனோ காவ்யா பேசுவதை கேட்டு அதிர்வின் உச்சத்திற்கு சென்றிருந்தாள். முன்பின் அறியாதவன் மீதிருந்த பயம் கூட மறந்தே போனது விஷாலினிக்கு.
காவ்யாக்கா லவ் பண்றாங்களா? என்று அதிர்ந்தவள், இவ்விசயத்தை முதலில் மாமாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஒரு வாரமாக முயற்சித்தாள் விஷாலினி.
Advertisement
ஆனால் விஷ்ணுவர்தன் வீட்டிலேயே இருக்கவே, கோபாலிடம் தனியே பேசும் வாய்ப்பு கிட்டவில்லை. இவங்க வேலைக்கு போகாம ஏன் வீட்டுலயே இருக்காங்க? என யோசித்தவள், தன் அன்னையிடம் சொல்லலாமா என்றும் யோசித்தாள்.
Advertisement
ஆனால் அன்னையிடம் அப்படி சுலபமாக பேசிவிட முடியாது. மற்றவர்கள் சொந்த விசயத்தில் தலையிடக்கூடாதென கண்டிப்பார்கள். அது உண்மையும் கூடத்தான். ஆனால் கோபால் மாமாக்கு துரோகம் செய்வது தப்பில்லையா என்றே மனம் ஓய்வின்றி அலைகழித்தது.
இந்நிலையில் மகள் மீது சந்தேகம் உண்டாகவே, “ஏன் ஒரு மாதிரி இருக்க?” என விசாரித்தார் மேகலை. அன்னை கேட்ட பின்னே மறைக்க முடியாமல் போகவே, காவ்யா விசயத்தை சொன்னாள் பதட்டத்தோடு.
அதிர்ந்த மேகலை, “நீ சின்ன பொண்ணு, ஏதும் பேசாத, கோபால்ண்ணாகிட்ட நான் பேசிக்கறேன்” என்றிருந்தார் மேகலை. இந்நிலையில் அன்று மாலை மொபைலோடு காவ்யா மாடிக்கு சென்றதை பார்த்த விஷாலினிக்கு மனம் பதைக்கவே அவளிற்கு எடுத்துரைக்க தன் வீட்டு படியில் ஏறினாள்.
Advertisement
விஷாலினி வீட்டு மாடிக்கும் கோபாலன் வீட்டு மாடிக்கும் நான்கடி இடைவெளிதான். விஷாலினி மேல வந்திருக்க, “என்னடா சொல்ற? இன்னும் இரண்டு நாள்லயா?” என பதட்டத்தோடு வினவினாள் காவ்யா.
அந்த பக்கம் என்ன சொன்னார்களோ, “என் அப்பாவை நினைச்சாதான்டா கவலையா இருக்கு, இன்னும் என்னை குழந்தையாவே நினைக்கிறார். ஒரு வருசமாவது ஆகட்டுமே” என இவள் கெஞ்ச, காவ்யாவின் உரையாடலை கேட்டிருந்த விஷாலினிக்கு திருமணம் செய்ய கேட்பார்கள் போல எனப்புரிந்தது.
சில நிமிட வாக்கு வாதத்திற்கு பிறகு வேறு வழியின்றி, “சரி நான் வரேன், நீ சொன்ன மாதிரியே செய்துக்கலாம்” என்று இணைப்பை துண்டித்திருந்தாள் காவ்யா.
“காவ்யாக்கா” என்ற அழைப்பில் பதறி எழுந்தவள், “என்ன விஷாலினி?” என்றாள் இயல்பை வரவழைத்து.
“நீங்க பண்றது தப்புக்கா. மாமாக்கு தெரிஞ்சா என்னாகும்?” என்றாள் கவலையாக.
“என்ன தப்பு? நானொன்னும் பண்ணல விஷாலினி”
“பத்து நாளுக்கு முன்னமே நீங்க பேசினதை கேட்டேன். நீங்க லவ் பண்றிங்க, யாருக்கும் தெரியாம கல்யாணம் செய்துக்க ப்ளான் பண்றிங்க” என்றாள் தீர்க்கமாக.
“விஷாலினி” என எச்சிலை முழுங்கியவள், “லவ் பண்றேன்தான். ஆனா கல்யாணம்லாம் பண்ணிக்க நினைக்கலடீ, நான் பி.ஜி பண்ணப்போறேன்”
“அப்போ இப்போ போன்ல நாளைக்கு வரேனு சொன்னது?”
“அது சும்மா அவுட்டிங்” என்றாள் சமாளிப்பாக.
விஷாலினி அதிருப்தியாய் பார்க்க, அவளின் கையை எடுத்து தன் தலைமீது வைத்து, “என் மேல சத்தியம். இதை யார்கிட்டயும் நீ சொல்லக்கூடாது” என்றாள் கெஞ்சலாக.
“லவ் பண்றவங்கள்லாம் நல்லவங்களா இருக்கமாட்டாங்கக்கா” என்றாள் மன்றாடலாக.
“காவ்யா… எங்கடி இருக்க?” என்ற பிரபாவதியின் குரலுக்கு, “அம்மா கூப்பிடுறாங்க விஷாலினி, நாம நாளைக்கு பேசுவோம். ப்ளீஸ் யார்க்கிட்டயும் சொல்லிடாத” என்று கெஞ்சி கீழே சென்றிருந்தாள் காவ்யா.
அடுத்தநாள் கோபாலனை பார்ப்பதும், விஷ்ணுவர்தன் அருகில் இருப்பதால் தவிப்பதுமாக இருந்தவள், நாளைக்கு வாக்கிங் போகும்போது இவங்க பக்கத்துல இருக்கமாட்டாங்க, எப்படியாவது மாமாவிடம் சொல்லிவிட வேண்டும்.’ என நினைத்திருக்க, அடுத்தநாள் அதிகாலை அனைவரும் கிளம்பி மகாபலிபுரம் சென்றிருந்தனர்.
இரவு ஒன்பது மணிவரை கோபாலனுக்காக காத்திருந்தாள் விஷாலினி. கோபாலன் குடும்பம் வராமல் போகவே, “ஒன்பது மணிக்கெல்லாம் உக்கார்ந்த இடத்திலேயே தூங்கறவளுக்கு இன்னைக்கு என்னாச்சு?” என மேகலை கடிய, உள்ளே சென்றிருந்தாள் விஷாலினி.
படுத்தும் உறக்கம் வரவில்லை விஷாலினிக்கு. கோபாலனுக்கு அழைக்கலாம் என்றால் மொபைல் அன்னையிடம் உள்ளது. அன்னைக்கு தெரியாமல் கோபாலனுக்கு அழைக்கலாமா என யோசித்தாள். ஆனால் கோபாலன் இவ்விசயத்தை அன்னையிடம் சொல்வார்.
நான்தான் பேசுறேனு சொன்னேனே? நீ எதுக்கு பேசின? என்று அன்னை திட்டுவார் என பல யோசனையோடு படுத்திருந்தவள், கோபாலனின் கார் சத்தத்திற்கு காத்திருந்து வெகு நேரம் கழித்துதான் உறங்கினாள்.
*** *** *** ***
காலை எட்டு மணியாகியும் பிரபாவதியை தவிர்த்து யாரும் எழாமல் போகவே, “ஏய் காவ்யா, எழுந்திருடீ… வீட்டு வேலைகளை பழக்குலனு உன்னால உங்கப்பாகிட்ட நான் திட்டு வாங்குறது பத்தாதா? அவர் எழும் முன்ன எழுந்துக்கலனா அதுக்கு வேற எத்தனை நாள் திட்டுவாரோ?” என கடிந்தபடி காவ்யா அறைக்குள் செல்ல, அங்கே மகள் இல்லை.
குளியலறை கதவு திறந்திருக்க, எட்டிப்பார்த்தவர், “இந்நேரத்துக்கு எழுந்து எங்க போய்ட்டா?” என்று வெளியே தேடி, பின்னே மாடிக்கு சென்று வர, “ம்மா டீ” என்றபடி வந்தான் விஷ்ணுவர்தன்.
“காவ்யா காணோம் விஷ்ணு, சொல்லாம எங்கேயும் போகமாட்டா, டீ கூட குடிக்காம எங்க போயிருப்பா?” என்றார்.
“நேத்து விஷாலினியை அழைச்சிட்டு வந்திருக்கலாம்னு புலம்பினாள்ல? அங்கதான் போயிருப்பா, போய் பாரு” என்றவன், “எனக்கு டீ கொடுத்துட்டு போம்மா” என்றான்.
இப்படி சொல்லாமல் காவ்யா எங்கும் சென்றதில்லை ஆகையால் பிரபாவதியின் மனம் ஏனோ அதீத பதட்டத்திற்குள்ளானது. மேகலை வீட்டிற்கு சென்றவரின் பதட்டம் மேலும் அதிகமாக, “விஷ்ணு, காவ்யா அங்க இல்ல” என்றார் கலக்கமாக.
“ப்ச் ம்மா, அவ என்ன குழந்தையா? அவசர தேவைக்கு மெடிக்கல் ஏது போயிருப்பாளா இருக்கும். இரு கால் பண்றேன்” என்று காவ்யா எண்ணுக்கு அழைக்க, அவளின் அறையிலிருந்து சத்தம் வந்தது.
“விஷ்ணு” என்ற பிரபாவதியின் கண்கள் கண்ணீரை வெளியனுப்ப, “ப்ச் இரும்மா” என்று தங்கையறைக்கு சென்று மொபைலை ஆராய்ந்தான். காவ்யா மொபைலிலிருந்து அன்னை எண்ணிற்கு குரல்வழி செய்தி அனுப்பியிருப்பதும், அதை இன்னும் அன்னை கேட்காதிருப்பது அறிந்ததும் தற்போதுதான் சற்று பதட்டம் வந்தது விஷ்ணுவிற்கு.
ஏதும் அபத்தம் இருக்காது என மனதை திடப்படுத்தி செய்தியை ஒலிக்கச் செய்ய, “ம்மா என்னை மன்னிச்சுடும்மா, பி.ஜி முடிச்சபின்ன உங்ககிட்ட சொல்லி, அப்பா, அண்ணா சம்மதத்தோடத்தான் கல்யாணம் செய்ய நினைச்சிருந்தேன்.ஆனா எதிர்பாராத விதமா இப்போவே செய்தாகும் நிர்பந்தம் ஆகிடுச்சு. என்னோட செயலை நிச்சயம் அப்பாவால தாங்க முடியாது. அப்பாவை பத்திரமா பார்த்துக்கோம்மா” என்று முடித்திருந்தாள் காவ்யா.
செய்தி பதிந்த நேரத்தை பார்க்க, பதினொன்று என காட்டியது. ‘மகாபலிபுரம் போய்ட்டு வந்த அரை மணிநேரத்துல கிளம்பியிருக்கா… இல்லயில்ல வீட்டைவிட்டு ஓடிப்போயிருக்கா. இந்த நேரத்திற்கு திருமணம் முடித்திருப்பாள், இனி தேடிப்பிடித்து லாபமில்லை’ எனப்புரிந்தவனுக்கு தந்தை அன்னை இதை எப்படி தாங்குவார்கள் என்ற வேதனை மனதை அழுத்தியது.
அங்கிருந்த கட்டிலில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தான் விஷ்ணுவர்தன். அங்கே வந்த பிரபாவதி, “போன் இங்க அடிக்குது, பக்கத்துலதான் எங்கையாவது போயிருப்பாளாயிருக்கும், பாத்ரூம்கூட ஈரமில்லாம இருக்கு விஷ்ணு, குளிக்காம கொள்ளாம எங்க போயிருக்கப்போறா?” என படபடத்தார் இனம்புரியாத கவலையோடு.
“இல்லம்மா, நம்மளைவிட்டு போய்ட்டா, நம்ம வேணாம்னுட்டு போய்ட்டா, காதலிச்சவன்தான் முக்கியம்னுட்டு போய்ட்டா, இங்க யாருக்கு என்ன ஆனா நமக்கென்னனு யாரைப்பத்தியும் யோசிக்காம போய்ட்டா, நாமளும் அவளைப்பத்தி இனி யோசிக்கக்கூடாது” என்று திடமாய் சொல்வதாய் நினைத்து புலம்பியவன், “வா… அப்பாகிட்ட சொல்வோம்” என்று எழ, அறைவாயிலில் உறைந்த நிலையில் நின்றிருந்தார் கோபாலன்.
“ப்பா” என கமறிய குரலோடு தந்தையிடம் வர, “இல்ல அப்படி இருக்காது விஷ்ணு, இங்கதான் எங்கையாவது போயிருப்பா, நீங்க பதறாதிங்க” என பயத்தோடு கணவனை தேற்றினார் பிரபாவதி.
“உயிரையே வச்சிருந்த தங்கை மேல விஷ்ணு எதுக்கு பழி போடப்போறான்?” என புலம்பியபடி தரையிலேயே அமர்ந்தார் கோபலன்.
பிரபாவதியால் இன்னுமே நம்ப முடியாமல் போக, அன்னையின் மொபைலை எடுத்து, காவ்யா பேசியதை ஒலிக்கவிட்டான் விஷ்ணுவர்தன்.
“அச்சோ” என தலைமீது அடித்துக்கொள்ள, அன்னை கைபிடித்து தடுத்தவன், “ம்மா, இனி அவளைப்பத்தி நினைக்கவேகூடாது” என அதட்டினான் அதீத கோபத்தோடு.
“எப்படிடா அவளுக்கு மனசு வந்துச்சு? கடுகளவு கூட எனக்கு தெரிய வரலையே, உங்கப்பா சொன்ன மாதிரி அவளை நான் சரியா வளர்க்கலயா?” என்றார் வேதனையோடு.
“இல்லம்மா, நாம சரியாத்தான் இருந்தோம், சரியாத்தான் வளர்த்தோம் நம்ம நம்பிக்கையை அவ காப்பாத்தல” என்றவன் கண்ணில் தென்பட்டனர் விஷாலினியும் அவளின் அன்னை மேகலையும்.
மேகலை, மற்றும் விஷாலியின் முகத்தில் வேதனையை கண்டவன், தங்களுக்கே இப்பொழுதுதான் தெரிந்திருக்கிறது, ஆனால் இவர்களுக்கு முன்னமே ஏதோ தெரிந்த பாவனை இருக்கிறதே, அதிலும் விஷாலினி அதீத தவிப்போடு தன் தந்தையையே பார்த்திருந்தாள்.
விஷாலினி தன்னிடம் எதோ சொல்ல நினைக்கிறாள் என்று தந்தை மகாபலிபுரத்தில் சொன்னதையும், காவ்யாவோடு இவளின் தோழமையையும் நினைத்து விஷாலினியை ஊன்றிப் பார்க்க, விஷ்ணுவின் பார்வைக்கே பயந்துபோனாள் விஷாலினி.
error: Content is protected !!