Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஊர் பேசும் ஓவிய சிலையே

ஊர் பேசும் ஓவிய சிலையே – 4

வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தவன் பாதி வழியிலே நின்றுவிட்டான் ‘என்ன பண்ற சேனா… அவ மேல விழுற உன்னுடைய  பார்வை  தவறானது அவ உன்னோட குட்டி மயூரி,  ஆளுதான் வளந்திருக்கா மத்தபடி இன்னும் அந்தப் பதிமூணு வயசு குழந்தைதான் அவ’.

 

 தன்னிடம்  முகம் திருப்பும், பேசாமல் இருக்கும், என்னோட தேவா என்று அனைவரிடமும் சண்டைக்கு நிற்கும், தன்மீது கோபம் கொண்டால் தேயிலை தோட்டத்தில் போய் ஒளிந்துகொள்ளும் அதே குட்டி மயூரி.

 



Advertisement

‘அவளைக் கட்டாயப்படுத்தி லண்டன் அனுப்பிய கோபம் உன்மீது அதனால் பேசாமல் இருக்கிறாள் அவள் மாறவில்லை, உன் மனதில் எப்படி இப்படியொரு எண்ணம் வரலாம்’ என்று தன்னையே நொந்துகொண்டான்.

 

‘இந்த ஊரில் யாரையும் நம்பாமல் உன் ஒருவனை மட்டும் நம்புகிறார் ஓஸ்கர், இந்த உலகத்திலேயே அவர் அதிகம் நேசிக்கும் அவர் பேத்தியை அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி உன்னை மட்டும் நம்பி உன்னுடன் அனுப்புகிறார் அவர் நம்பிக்கையை உடைத்து துரோகி ஆகிவிடாதே’ என்றது மனசாட்சி.

Advertisement

 

Advertisement

‘ஏன் இப்படி தோன்றியது!! அந்த விழிகள்… அது எப்பொழுதும் அவனைத் தடுமாற வைக்கும் ஆனால் இன்று மிக உரிமையாய் அல்லவா அவளைப் பார்த்தான்?.

 

தன் மீதே பழி சுமத்திக்கொண்டவன் ஒரு நொடி கூடச் சிந்திக்கவில்லை, வேறு யார் மீதும் தோன்றாத இந்த உணர்வு அவளிடம் மட்டும் ஏன் தோன்றுகிறது என்று.

Advertisement

 

கொட்டும் பணியில் வெகுநேரம் நின்றிருந்தான், உள்ளுக்குள் ஆர்ப்பரிக்கும் இதயம் வேறு செய்தி சொல்லியது அதை மறுத்தவன் ‘இல்லை இனி கவனமாக இருக்க வேண்டும் அவள் முன் தன்னுடைய எந்தச் செய்கையும் அவள் மனதை சலனப்படுத்தக் கூடாது’ என்ற முடிவோடு வீட்டிற்கு சென்றான்.

 

எப்படியெல்லாமோ புரண்டு பார்த்தும் உறக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை மயூரியை, ஜெட்லாக் ஒருதுளி அளவே அதையும் கடந்து அவளை மொத்தமாகச் சுருட்டிக்கொண்டிருந்தது தேவசேனாபதி.  

 

தாய் தந்தையின் அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் பருவத்தில், தூர தேசத்தில் தூரத்து உறவான சித்தியின் வீட்டில்… பிறந்து வளர்ந்த இடத்தையும் பிடித்த மனிதர்களையும் விட்டு ஏக்கத்தில் கழித்த எட்டு வருடங்கள்.

 

மொட்டாக இருந்த அந்த மலர் விரிந்து உடலாலும் உள்ளத்தாலும் பல மாற்றங்களைக் கண்டது, வீதிகளில் சாதாரணமாக ஆணும் பெண்ணும் கட்டிப்பிடிப்பதும்  முத்தமிடுவதும் அரங்கேறும் அங்கே.

 

உடன் படித்த தோழிகளும் சித்தியின் பிள்ளைகளும் விரும்பியவரோடு கூடிக்களித்து சுற்றுகையில் அவளைக் கேலி செய்திருக்கிறார்கள்  “பாய் பிரென்ட் இல்லாம என்ன லைப், இது ஒன்னும் தப்பான விஷயம் இல்ல ஜஸ்ட் என்ஜோய் யூர் லைப்” என்று.

 

அபோழுதேல்லாம் தன்னுடைய வலக்கையை இறுக்கமாக மூடிக்கொண்டு விழிகளை மெல்ல அடைத்தால் போதும்,

அவளுடைய  தேவாவின் விரல்களின்  ஸ்பரிசத்தை அவளால் உணர முடியும், கன்னக்குழி தெரிய அழகான அவனின் சிரிப்பும் “மயூரி” என்ற அவனின் அழைப்பும் அவளுக்குக் கேட்க்கும், அந்த உணர்வில் சிலிர்த்து அவள் அறியாமல் இருதுளி நீர் கன்னத்தைத் தழுகி செல்லும்.

 

இந்த உணர்வில் மாற்றம் வருமா என்பது அவளுக்குத் தெரியவில்லை வரக் கூடாது என்பதுதான் அவளின் வேண்டுதல், அவன் தனக்கானவன் தன்னுடையன் என்ற எண்ணம் அவளுள் எப்பொழுதோ நிறைந்துவிட்டது.

 

தேவசேனாபதி அறியவில்லையே மயூரி அவனை மணாளனாக வரித்து மனதால் அவனோடு வாழ்ந்துகொண்டிருப்பதை.

 

“ஆத்தி யாரு இது… என் ராசாத்தி பாத்து எம்புட்டு வருஷமாச்சு எப்படித்தா இருக்க” என்று அவள் பாட்டுக்கன்னத்தை தழுகி முத்தம் வைத்தார் கோசலை.

 

ஊரிலிருந்து வந்தபிறகான இரண்டு தினங்கள் தாத்தாவுடன் அப்படியே கழிந்தது, அன்று இரவு வீட்டில் விட்டுச் சென்றவனை அதன் பிறகு பார்க்கவில்லை, வேலை விஷயமாக வெளியில் சென்ற தாத்தாவுடன் கிளம்பிவிட்டாள் சேனாவின் வீட்டிற்கு.

 

“நல்லாயிருக்கேன் பாட்டி நீங்க எப்படி இருக்கீங்க” என்றவள் கையைப் பிடித்துக்கொண்ட கோசாலைக்கு சந்தோஷத்தில் வார்த்தைகளே வரவில்லை, தங்களின் கைக்குள்ளே வளர்ந்த பிள்ளையல்லவா காலத்தின் கட்டாயம் சில ஆண்டுகள் பிரிவு வந்துவிட்டது.

 

“என் ராசா இருக்கையிலே எனக்கென்ன நல்லா இருக்கேன்” என்றவரின் கன்னத்தைக் கிள்ளியவள் “இன்னும் மாறல நீங்க  இப்போவும் உங்க ராசதான் பெருசா” என்றாள் முகத்தைச் சுருக்கி.

 

“வந்ததும் ஆரம்பிச்சுட்டியா என் ராசா கூடச் சண்டையை” என்றவர்  “உள்ள வாங்க தொரையய்யா” என்றார் ஓஸ்கரிடம்.

 

“இல்லம்மா வேலை இருக்கு பாத்துக்கோங்க” என்றவர் “ஐரிஸ்” என்றழைத்தார் வீட்டிற்குள் நுழையத்துடங்கிய பேத்தியை.

 

“எஸ் கிராண்ட்ப்பா” என்று அவரை நெருங்கியவளின் கையைப் பிடித்துக்கொண்டவர் “தனியா வரக் கூடாது சேனாகூட வா, இல்லனா நானே வரேன்” என்றவரின் முகத்தில் பயமும் வார்த்தைகளில் சிறிய நடுக்கமும் வெளிப்பட எதிர்ப்பு சொல்லாமல் சரி என்றுவிட்டாள் அவள்.

 

மாமியாரின் ஆர்ப்பாட்டமான சத்தத்தில் வெளியில் வந்து பார்த்த பவுனும் கனகாவும் மயூரியை பார்த்ததும் வேகநடையில் அவள் அருகில் நெருங்கினர் “மயூ குட்டி… என்னமா வளந்துட்ட எப்போடா வந்த எப்படி இருக்க” என்று அவளைச் சூழுந்துகொண்டனர்.

 

அவர்களோடு வீட்டின் ஆண்களும் சேர்த்துக்கொண்டனர் “மயூக்கா!” என்ற கூச்சலோடு பின்கட்டிலிருந்து ஓடி வந்து கட்டிக்கொண்டாள் வேல்விழி.

 

அனைவரின் அன்பிலும் நெகிழ்ந்து நின்றாள் ஐரிஸ் மயூரி, வீட்டின் கூடத்தைப் பரிசுகளால் நிறைத்துவிட்டாள் கம்பிளிகள் வின்டர் ஜாக்கெட்ஸ், பெர்ப்பியூம் உல்லன் ஸ்டோல்ஸ் பட்டுபுடவைகள் கைக்கடிகாரம் லெதர் பேக் என்று அவள் பரப்பிவைத்த பொருட்களைப் பார்த்து வாயடைத்து போயினர் சேனாவின் வீட்டினர்.

 

“என்னத்தா இது! அந்த ஊரையே சுருட்டி பெட்டில கொண்டுவந்துட்டியா” என்றார் கோசலை, அனைவரையும் பார்த்துச் சிரித்தவள் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

 

வருவதற்கு ஒருவாரம் முன்பு தொட்டே தேடி அலைந்து பார்த்துப் பார்த்து வாங்கிவந்திருந்தாள், அதில் ஒன்று கூடச் சேனாவிற்கு அவள் வாங்கிவரவில்லை எத்தனை தேடியும் அவன்மீது தனக்கிருக்கும் நேசத்தை பிரதிபலிக்கும் பரிசுப்பொருளை கண்டெடுக்க முடியவில்லை அவளால்.

 

சிறு சிறு துளிகளாகச் சேர்த்துவைத்திருந்த அவன்மீதான நேசம்  இன்று பெரும் காதலாக  ஆழம் காணமுடியா ஆழியாக அவளுள் ஆர்ப்பார்த்திக்கொண்டிருந்தது, அந்தக் காதலை அப்படியே அவனுக்குக் கொடுத்துவிட துடித்தாள் மயூரி.

 

சின்ன பூவொன்று பாறையை தாங்குமா…
உன்னை சேராமல் என் விழி தூங்குமா…
தனிமை உயிரை வதைக்கின்றது…

 

தூண்டிலினை தேடும் ஒரு மீன் போலே ஆனேன்…
துயரங்கள் கூட அட சுவையாகுது…
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ரொம்ப ருசிக்கின்றது…
காதல் சுகமானது…

 

சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…
காதல் சுகமானது…

 

 

“மயூ குட்டி இதுல நாலு பட்டுப் புடவை இருக்கே” என்றார் கனகம்.

 

“ஒன்னு தெய்வா ஆண்ட்டிக்கு” என்றபோது குரல் கொஞ்சம் இடறியது, அவளின் தாய் மிராண்டாவின் உயிர் தோழி தெய்வானை, மயூரிக்கு அவள் அன்னையை பற்றிய அணைத்து நினைவுகளும் தெய்வாவின் வழி வந்த செய்திகளே.

 

ஒருவரும் ஒன்று பேசவில்லை “விழி இது உனக்கு” என்று அவள் கைகளில் இரண்டு நீளமான பிராக் மற்றும் ஒரு ஐ பேடை வைத்தவள் “காலேஜ் போகப்போறல்ல வெச்சுக்கோ” என்றாள்.

 

“ரெண்டு பெரும் அப்படியே நிக்குறீங்களே வந்த புள்ளைக்கு குடிக்க ஏதாவது குடுங்க” என்ற கோசலை “பவுனு பிள்ளைக்குப் பிடிச்ச ஏதாவது சமைச்சு வைத்தா” என்றார்.

 

“தங்கக்குட்டி…” என்ற சந்தோஷ ஆர்பரிப்போடு உள்ளே வந்து மயூரியை கட்டிக்கொண்டார் தெய்வானை “எப்படா வந்த யாருமே சொல்லல, போனதடவ போன் பேசினப்பவும் சொல்லல” என்றார்.

 

“எங்ககிட்டயும் சொல்லல பேசி ஒரு ரெண்டு மாசம் இருக்குமா, வரேன்னு ஒத்த வார்த்த சொல்லல, வந்து ரெண்டு நாள் ஆகுதாம் அதும் நமக்குத் தெரியல” என்றார் கனகம்.

 

சேனாபதி தன் வீட்டில் யாரிடமும் சொல்லியிருக்கவில்லை என்று புரிந்தது அவளுக்கு, அவள் யாருக்கும் சொல்லாமல் வந்ததே அவனை ஆச்சர்யப்படுத்த இறுதியில் கண்முன்னே வந்து நின்று அவன் அவளை அதிர்ச்சியடைய வைத்துவிட்டான்.

 

பொதுவாகவே அவனுக்கு வெளியில் நடக்கும் விஷயங்களைப் பெரிதாக வீட்டில் சொல்லும் பழக்கம் இல்லை அதோடு மயூரியை பற்றிய குழப்பத்தில் இருந்தவன் அவள் வந்ததை சொல்ல மறந்துவிட்டான்.

 

“ஐ ஆம் சோ குட்” என்றவள் தெய்வானையை தானும் கட்டிக்கொண்டாள் “அப்படியே மிராவ பாக்குற மாதிரி இருக்கு இல்லம்மா” என்றார் தெய்வானை.

 

“ஹ்ம்ம்” என்ற கோசலையின் மனது இன்றும் அந்த ஒரு கேள்வியிலே நின்றது ‘யார் அந்தக் கயவன் இந்தப் பிள்ளையின் பிறப்புக்கு காரணமானவன் எங்கு இருக்கிறான்’ என்று.

 

“நீ என்னடி சொல்லாம வந்து நிக்குற” என்றார் கோசலை மகளைப் பார்த்து.

 

“உன் மறுமவன் கோயம்பத்தூர் போயிருக்கார் அந்தக் கேப்ல நானும் அவளும் வந்துட்டோம்” என்க “அம்மாச்சி” என்று அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள் பூஜா.

 

“வாடா ராசாத்தி அம்மாச்சியை பாக்க வர இப்போதான் நேரம் கிடைச்சுதா” என்றார் அவளை அருகில் அமர்த்திக்கொண்டு “நாங்க என்ன பண்ண அப்பா விட்டாத்தானே” என்றாள் அவளும்.

 

“வாங்க அண்ணி… அடடே வா பூஜா” என்ற பவுனு “அத்த  இன்னைக்கு நம்ம  வீடு விஷேஷ வீடுமாதிரி ஆயிடுச்சு” என்றார் சந்தோஷத்தோடு.

 

“சட்டுபுட்டுனு எல்லாத்தயும் எடுத்துவை ஆளுக்கு ஒரு வேலையா செஞ்சா சாப்பாடு தயார் ஆயிடும்” என்று கோசலை எழுந்துகொள்ள.

 

“அம்மா இரு” என்ற தெய்வானை “அண்ணி மீன் குழம்பும் வறுவலும் நான் கொண்டு வந்திருக்கேன் சாதம் மட்டும் வடிங்க வத்தல் பொறிச்சுக்கலாம்” என்றார் தூக்குவாளியை பவுனு கையில் கொடுத்து.

 

“சரி அப்போ சாதம் வடிச்சு ரசம் வெச்சுக்கலாம்” என்ற  பெண்கள் அனைவருக்கும் டீயோடு சாப்பிட நொறுக்கு தீனியும் கொடுத்துவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தனர்.

 

வேல்விழி மற்றும் பூஜாவுடன் வீட்டின் பின்னால் தோட்டத்திற்கு சென்றாள் மயூரி, பெரிதான மாற்றங்கள் ஒன்றும் இல்லை அங்கே,  பதினான்கு வயதுவரை இவர்களுடன் ஓடி விளையாடிய இடம் அதே அழகோடு இருந்தது.

 

பூஜாவுடன் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தாள், மயூரியை இங்கே பார்த்த நொடிமுதல் பூஜாவுக்கு பதட்டமானது, ஆப்பிள் கிறீன் நிறத்தில் முழுநீள பிராக் அணிந்திருந்தாள் அதன் கழுத்துப்பகுதி நிறைய இளம் மஞ்சள் நிற முத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தது.

 

மஞ்சள் பூக்களை ஒன்றாகக் கட்டி வைத்ததை  போன்ற பெரிய கம்மலும் அணிந்திருந்தாள் போதுமே ஒருமுறை நின்று பார்க்காமல் எவராலும் கடக்க முடியாதே என்று எண்ணிய பூஜாவுக்கு பெருமூச்சு எழுந்தது, அதிலும் பச்சை நிற உடை என்றதும் அவள் சிந்தனை மீண்டும் சேனாபதியிடம் சென்றது அவனுக்கு மிகவும் பிடித்த நிறம் அந்தப் பிடித்ததிற்கான காரணம் என்ன என்பது அவனுக்கே வெளிச்சம்.

 

‘சும்மாவே மாமாவை விட்டுப் போகமாட்டா மாமாவும் இவளைத்தான் எப்போவும் தாங்குவாரு, இப்போ இன்னும் சூப்பரா இருக்காளே… எதுக்காக இப்போ வந்துருப்பா என்ன விஷயமா இருக்கும்? இங்க இவ இருக்கக்கூடாதுன்னு தானே மாமாவை வெச்சு பேசி இவளை லண்டன் அனுப்பினாங்க’.

 

‘இனிமே வரமாட்டான்னு நெனச்சா வந்து நிக்குறா அதும் லண்டன்ல பாதியை தூக்கி பைலை போட்டுட்டு வந்துருக்கா’ என்று யோசனனையிலே இருந்தவள் “திரும்ப எப்போ போற” என்றாள் சட்டென்று.

 

வேல்விழியும் மயூரியும் அவளைக் கேள்வியாய் பார்த்தனர் “திரும்பிப் போறதா எங்க போகணும்” என்றாள் விழி.

 

“இல்ல திரும்ப லண்டன் எப்போ போறான்னு கேட்டேன்” என்க.

 

“நான் இனிமே போகல பூஜா, எனக்கு அங்க பிடிக்கல நான் இங்கதான் இருப்பேன் என்ன ஆனாலும் சரி உயிரே போனாலும்…” என்றவள் முடிக்கும் முன் “மயூரி” என்று அந்த மலைமுகட்டில் கர்ஜனையாக ஒலித்தது அவன் குரல்.

 

அதில் பதறித் திரும்பினார் மூவரும் “நாம பேசுற வார்த்தைகளுக்கு அதை நடத்துற சக்தி இருக்கு பேசும்போது யோசிச்சு பேசணும்” என்று அருகில் வந்தான்,  அந்தப் பச்சை நிற விழிகள் அதிர்ச்சியில் விரிந்து ஒளிவீச அவன் உள்ளம் ஆட்டம் கண்டது.

 

பார்வையை அவளிடமிருந்து மாற்றியவன் “தனியாவா வந்த” என்றான் இப்பொழுது மென்மையாக.

 

“இல்ல கிராண்ட்ப்பா கூட வந்தேன் அவர் பேங்க் போயிருக்கார்” என்றாள்.

 

“ஹ்ம்ம்” என்றவன் பூஜாவை பார்த்து ஒரு தலையசைப்போடு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தான்.

 

பூஜாவின் விழிகள் அவனையே பின்தொடர்ந்தது, உரிமையாய் அவளை அதட்டுகிறார் எப்படி வந்தாய் என்று கேட்க்கிறார் சொந்த அத்தை மகள் என்னிடம் ஒருவார்த்தை கூடப் பேசவில்லையே  என்று காயம்கொண்டது அவள் மனது, அங்கு நிற்க முடியாமல் உள்ளே சென்றுவிட்டாள் பூஜா.

 

“விழி உன் அண்ணா வேஷ்டி கட்டுவாரா” என்றாள் மயூரி ஆச்சர்யமாக.

 

“ஹ்ம்ம் கட்டுமே ஏன்?” என்றாள் விழி.

 

“ஒன்றுமில்லை” என்று அவளிடம் தலை அசைத்தவள் இதழ்களும் விழிகளும் ரசனையில் விரிந்தது “செமயா இருக்கார்” என்று, வஞ்சனை இல்லாமல் சைட் அடித்தது அவள் மனது.

 

 

“வா அத்த… என்ன அணுகுண்டு தூரமா எங்கேயாவது போயிருக்கா, சீனி பட்டாசையும் காணும்” என்றான் அன்னை தந்த தேநீரை அருந்திக்கொண்டே.

 

“அணுகுண்டு கோயம்பத்தூர் போயிருக்கு கட்சி ஆபிசுக்கு, சீனிவெடி அது பிரெண்ட்ஸ்கூட சினிமாக்கு போயிருக்கு” என்றார் கணவரையும் மகளையும் பற்றி.

 

“அவங்கள பத்தி நமக்கு எதுக்கு நீ சொல்லு நீலகிரில பெரிய ஹோட்டல் வெச்சுருக்காரே நம்ம சுருளிராஜன் அவர் பொண்ணு படிச்சுட்டு நிக்குது, பாக்க நல்லா லச்சணமா இருக்கும் ஒரே பொண்ணு அவருக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் பேசிப்பாக்க சொல்லி எனக்குப் போன் போட்டாரு நீ என்ன சொல்ற” என்க.

 

வீட்டிற்குள் நுழைந்த மயூரியின் செவிகளில் அந்தச் செய்தி  விழுந்தது அவள் அவசரமாகச் சேனாபதியை திரும்பிப் பார்த்தாள் ‘என்ன சொல்லப் போகிறான்’ என்று.

 

‘இந்த அம்மாக்கு வேற வேலை இல்லையா என்கிட்டே கூடச் சொல்லல, ஏன்மா இப்படி பண்ற’ என்று நொந்துகொண்டிருந்தாள் பூஜா.

 

வீட்டினர் அவனை ஆர்வமாகப் பார்த்திருந்தனர், மயூரி தன்னை பார்ப்பதை அவளைப் பார்க்காமலே உணர்ந்தான் சேனாபதி “யோசிக்கலாம்த்த” என்றதுமே அவன் வீட்டினருக்கு சந்தோஷமாகிவிட்டது.

 

அவன் பதிலைக் கேட்ட பூஜாவின் விழிகள் உடனே மயூரியில் பதிந்தது அவள் முகத்தில் அதிர்ச்சி தெரிகிறதா என்பதை பார்க்க, ஆனால்  அவளுக்கு ஏமாற்றமே… மயூரி சாதாரணமாக நின்றிருந்தாள்.

 

பூஜாவுக்கு குழப்பமானது தனக்கு தான் அப்படி தோன்றுகிறதோ இவர்களுக்கிடையில் வெறும் நட்புத்தானோ என்று, அந்தக் குழப்பத்தில் தன்னுடைய அதிர்ச்சியை அவள் மறந்துபோனாள்.

 

சேனாபதியின் பதில் மயூரியை காயப்படுத்தியது என்றாலும் தன்னுடைய உணர்வுகளை அவள் காண்பிக்கவில்லை,

குன்னூர் விசேஷங்களும் லண்டன் விசேஷங்களுமாக உணவுவேளை களைகட்டியது, உணவு முடிந்ததும் தெய்வானை புறப்பட்டுவிட்டார்.

 

“மயூ குட்டி அடுத்த தடவ வரும்போது நான் போன் பண்றேன் நீயும் வந்துடு சரியா” என்றவர் “அப்போ சரி நான் கிளம்புறேன் அந்தச் சீனி பட்டாசு வரதுக்குள்ள வீட்டுக்குப் போகணும் இல்லனா அப்பன் வந்தவுடனே பத்தி வெச்சுருவா” என்றவர் அனைவரிடமும் விடைபெற்றர்.

 

பூஜாவிற்கு கார் ஓட்டத் தெரியும் என்பதால் அவர்களுடைய காரிலே வந்திருந்தனர், அவர்கள் கிளம்பியவுடன் சேனாவும் வெளியில் செல்லத் தயாரானான்.

 

“நானும் கிளம்பவா” என்று அவள் எழுந்துகொள்ள “வீட்ல இப்போ யாரும் இல்ல கிராண்ட்ப்பா போன் பண்ணினார் அவர் வர நைட் ஆயிடும் அவர் வந்த  அப்புறம் போலாம்” என்றவன் அவளுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் வேக நடையில் வெளியில் சென்றான்.

 

இரவு வீட்டிற்கு வந்த ராஜேந்திரன் மனைவியையும் மூத்த மகளையும் அழைத்தார், டயனிங் டேபிளில் மூவரும் அமரத் தெய்வானையின் கையில் ஒரு புகைப்படத்தைக் கொடுத்தார்.

 

“யாருங்க” என்று வாங்கி பார்த்தார் அவர் ஒரு இளைஞனின் புகைப்படம் நன்றாகவே இருந்தான்.

 

“பூஜாவுக்கு பாத்துருக்க மாப்பிளை, ஞாயித்துக்கிழமை பொண்ணு பாக்க வராங்க பையன் டாக்டர், அவரோட அப்பா அம்மாவும் டாக்ட்டர்ஸ்  கோயம்புத்தூர்ல பெரிய ஹாஸ்பிடல் வெச்சிருக்காங்க” என்க.

 

“என்னங்க என்கிட்டே ஒரு வார்த்தை கூடச் சொல்லல பொண்ணு பாக்குற வரைக்கும் வந்துடீங்க” என்றார் தெய்வானை.

 

“உனக்கு எதுக்குடி சொல்லணும் வரவங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடுறதுதான் உன் வேலை, இவர்தான் மாப்பிளை நான் முடிவுபண்ணிட்டேன் இன்னைக்கு அதுவிஷயமாவும் பேசத்தான் கோயம்பத்தூர் போனேன்” என்றவர் அலைபேசியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றார்.

 

பூஜா மெல்ல தாயை நெருங்கினாள் “அம்மா எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம் நீ ஏன்மா மாமாக்கு என்னைப் பேசல, எனக்கு மாமாவைத் தான் பிடிச்சுருக்கு அப்பாகிட்ட சொல்லுமா” என்க, நெஞ்சில் கைவைத்துவிட்டார் தெய்வானை.

 

“ஆத்தாடி… எங்க எல்லாரையும் மொத்தமா சாவடிக்க பாக்குறியா அறிவிருக்கா உனக்கு உங்க அப்பாவைப் பத்தி தெரிஞ்சும் எப்படிடி இப்படி யோசிக்கிற” என்றார் பயத்தோடு.

 

“என்ன தப்பா சொல்லிட்டா கட்டிக்குற மொறை தானே” என்ற ராஜேந்திரன் குரலில் இருவரும் பத்தர் எழ “ஒன்னும் பிரச்சனை  இல்ல அவனையே உனக்குக் கட்டிவெக்கிறேன்… ஆனா அவன் இங்க வரணும், என் முன்னாடி கைகட்டி கும்பிட்டு நின்னு மன்னிச்சுடுங்க மாமான்னு என் காலைப் பிடிக்கணும்”.

 

“நான் சொல்றதை கேட்டு நடக்கணும் அப்படி நீ செய்ய வெச்சுடீன்னா அவன் தான் உனக்குப் புருஷன்” என்றார் விழிகளில் வன்மத்தோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!