Skip to content
Post Views: 5,631
அத்தியாயம் 8
இரண்டு நாட்கள் ஹாஸ்பிட்டல் வாசம் முடிந்து பானுவை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்திருந்தார்கள். அதற்குள்ளாகவே சோர்ந்துவிட்டார் சரசு.
அவரால் கடினமான வேலையெல்லாம் உடலை வருத்தி செய்ய முடியாது. சாதாரணமாக இரவு கண் விழித்தாலோ, நீண்ட தூரம் பயணம் செய்தாலோ அவரது உடல்நிலைக்கு ஆகாது. உடம்பு அலண்டு அவர் படுக்கும் படி ஆகிவிடும். ஆகையால் எந்த கடினமான வேலையும் அவரை செய்ய விடாமல் ராகவன், அவரை மென்மையாக பார்த்துக் கொள்வார்.
Advertisement
இந்த இரண்டு நாள் மருத்துவமனையில் கண் விழித்திருந்ததற்கே அவர் சோர்ந்து போய்விட்டார். சரசு ஜமுனாவிடம் பானுவின் உடல்நிலையைப் பற்றி சொல்லலாம் என்றதற்கு பானு வேண்டாம் என மறுத்து விட்டாள்.
இந்த இரண்டு நாட்களாக பானு ஜமுனாவிடம் சரியாக போனில் பேசாததற்கே, அத்தனை கேள்விகள் கேட்டு போனில் சரசுவை குடைந்து எடுத்துவிட்டார்.
பாவம் சரசுக்குதான் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. ‘’ஒரே ஒரு பையனைப் பெத்துட்டு நான் படற பாடு இருக்கே………. ப்பாஹ்…… ஊர் உலகத்துல எல்லாம் எத்தனை பிள்ளைகளை பெத்து அசால்ட்டா வளர்க்குறாங்க. இவன் என் கண்ணுல விரல விட்டு ஆட்டறான்…… என புலம்பிக்கொண்டிருதார.”
Advertisement
இரண்டு நாட்களில் ஊருக்கு செல்வதாக இருந்தவர் மேலும் நான்கு நாட்கள் தங்கியிருந்து, பானுவின் உடல் தேறியதும் தான் முட்லூருக்குப் புறப்பட்டார்.
Advertisement
போகும் பொழுது மகனிடம் அத்தனை புத்திமதி சொல்லிவிட்டு சென்றிருந்தார். ‘’சும்மா அரைவேக்காடு மாதிரி டைவர்ஸ் பண்றேன்….. அப்படி இப்படின்னு எதையாவது பேசிட்டு திரியக் கூடாது. நல்லதோ கெட்டதோ கல்யாணம் முடிஞ்சிடுச்சு. பானுதான் உன் பொண்டாட்டி. ஒழுங்கா அனுசரிச்சு குடும்பம் பண்ணி பொழைக்கற வழியப் பாரு.’’
இல்ல, ‘’நான்….., நீ சொல்லறத எல்லாம் கேட்க மாட்டேன், என் இஷ்டத்துக்கு தான் நடப்பேன்னா, முன்னாடியே சொல்லிடு. நீ என்ன எங்கயாவது கண்காணாத போயிடுவேன்னு மிரட்டுறது, நான் சொல்லிட்டே என் ஆத்தா வீட்டுக்கு பொட்டிய கட்டிட்டு போயிடறேன். அதுக்கப்புறம் நீயாச்சு……. உன் அப்பனாச்சு……. என்னை ஆள விடு சாமி. அப்புறம் எதுக்கும் அம்மா வேணும்னு என்னை தேடி நீயும் உன் அப்பனும் வரக் கூடாது, பார்த்துக்கோ….. என ஒரு போடு போட்டுவிட்டு சென்றிருந்தார்.
அவர் பேசிய பாவத்தில் அவன் ”ஆங்” என வாய் பிளந்து நின்றான். அவனுக்கே குழப்பம் வந்தது. வர வர இந்த அம்மாகூட நல்லா பேச கத்துகிட்டாங்க. ”எல்லாம் சீரியல் பாரக்கற எபெக்ட்போல” என நொந்துகொண்டான்.
Advertisement
நாம இந்த அம்மாவ மிரட்டுனா, இவங்க திருப்பி எனக்கே ”செக் வைச்சிட்டு போறதப் பாரு”…. என விழி பிதுங்கி நின்றான். ”மாமியாரும் மருமகளும் சேர்ந்து என் உசிர வாங்கறாங்க.”
அவனுக்கு உள்ளூர கடுப்பு. பிடிக்காதவளை கட்டி வைத்து, அவளைக் கொண்டுவந்து இங்கே தன்னுடன் குடும்பம் என்ற பேரில் விட்டுவிட்டு சென்றதைக் குறித்து.
பானுவிடம் பேசலாம் என்ற முடிவிலிருந்தவன் அன்னையின் அச்சுறுத்தலில் கொஞ்ச காலம் சென்று பேசலாம் என தன் எண்ணத்தை தள்ளிப் போட்டான்.
பானுவும் உடல்நிலை தேறி எழுந்தவள், வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்திருந்தாள். காலையில் எழுந்து டிபன், சாப்பாடு என செய்பவள் எல்லாவற்றையும் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு அறைக்குள் அடைந்துவிடுவாள்.
அவன் அலுவலகத்துக்கு செல்லும் வரை அறையை விட்டு வெளியவே வர மாட்டாள். இரவுக்கும் அவன் வருவதற்கு முன் டிஃபன் ஏதாவது செய்து வைத்து விட்டு ரூமில் புகுந்து கொள்வாள். இப்படியே ஒரு மாதம் சென்றது.
அன்று சரசு போன் செய்திருந்தார் பானுவுக்கு. தினமும் அவளிடம் போனில் பேசி அவள் நலனை விசாரித்து தெரிந்து கொள்வார்.
பானு, அத்தை ”நான் மேற்கொண்டு படிக்கலாம்னு இருக்கேன், படிக்கவா……?” என்று அவரிடம் பர்மிஷன் கேட்டாள். இன்னும் சரசைத் தவிர அவரது வீட்டில் யாரிடமும் அவள் பேசியது இல்லை. ஊரில் இருக்கும் போது ராகவனிடம் இரண்டு மூனு வார்த்தை பேசியது.
சரசு, எனக்கு படிப்ப பத்தியெல்லாம் அவ்வளவா எதுவும் தெரியாதுடா……… சங்கர் கிட்ட பேசவேண்டியது தான என்றார்.
பானு, அதற்கு ஏதும் பதில் சொல்லாமல் நீங்களே கேட்டு சொல்லுங்க த்தை. வீட்ல சும்மா உட்கார்ந்திருக்க போர் அடிக்குது என்றாள்.
சரசு, சரிடா நான் பேசறேன் அவன்கிட்ட என்றிருந்தார்.
அதேபோல் மதுசூதனனிடமும் போன் செய்து அவள் படிப்பைப் பத்தி பேசியிருந்தாள். அவனும் ”படிப்பை பத்தி எல்லாம் எனக்கு என்னடா……. தெரியும்? நீ உன் வீட்டுக்காரர் கிட்ட பேசேன்டா….. என்றான்.”
மாற்றி மாற்றி இருவரும் அதேபோல் சொல்லவே அவளுக்கு கோவம் வந்தது. நான் ஏன்? அவன்கிட்ட போய் கேட்கனும் அதெல்லாம் கேட்க மாட்டேன் எனப் பிடிவாதமாக முறுக்கிக் கொண்டாள்.
சென்னையிலிருந்து வந்து சிதம்பரத்தில் தங்கிப் படித்த அவளது தோழி ஜனனியின் நினைவு வந்து அவளுக்கு போன் செய்து பேசினாள். அவள் பேங்க் எக்ஸாம்கு பிரிப்பேர் செய்து கொண்டிருப்பதாக சொல்லவும் இவளுக்கும் ஆசை வந்தது.
அண்ணா நகரில் அதற்கான் கோச்சிங் சென்டர் இருப்பதாகவும் அதில் சேர்ந்து ஜனனி படித்துக் கொண்டிருப்பதாக கூறினாள். ஆனால் ஃபீஸ் தொகைதான் இலட்சங்களில் இருந்தது. அவளுக்குத் தெரியும் மதுவின் நிலைமை. அவனிடம் அவ்வளவு பணம் எல்லாம் இருக்காது. எங்காவது கடன்தான் வாங்க வேண்டும்.
அதற்கும் இப்பொழுது வழியில்லை. ஏனென்றால் அவனே வெளியில் இருந்து கடன் வாங்கி ஓட்டல் பிஸ்னஸ் ஸ்டார்ட் செய்வதற்காக அலைந்து கொண்டிருக்கிறான் என ஜமுனா சொல்லியிருந்தார் பேச்சுவாக்கில்.
ஐனனியிடம் இதுபற்றி பேசும் போது நான் வேணா நோட்ஸ் எல்லாம் தரேன். அதான் உன்னால முடியும்னா படி. டவுட் இருந்தா கேளு ஹெல்ப் பண்றேன் என்றாள்.
இன்னும் டைம் நிறைய இருக்கு எக்ஸாமுக்கு ட்ரை பண்ணி பாரு என்று ஊக்குவித்தாள் பானுவை. பானுவுக்கும் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பதைக் காட்டிலும் ஏதாவது முயன்று பார்க்கலாமே என ஜனனியை நோட்ஸ் அனுப்ப சொல்லி படிக்க ஆரம்பித்தாள்.
முதலில் கடினமாகத்தான் இருந்தது. இவளே ஒவ்வொன்றிற்கும் நெட்டில் தேடி தேடி கண்டுபிடுத்து படிக்க ஆரம்பித்தாள். முடியாததை ஜனனியிடம் கேட்டு தெரிந்து கொண்டாள்.
இப்படி அவளையே அவள் ஊக்குவித்துக் கொண்டு படிப்பில் தன்னை முழுமையாக புகுத்திக் கொண்டாள். ஆனால் அதற்கும் விடுவேனா என விதி அவளை சதி செய்தது.
அன்று ஞாயிறு. பானு எப்பொழுதும் போல் காலையில் எழுந்து சமைத்துக் கொண்டிருந்தாள். கிட்சன் வாசலில் சங்கர் வந்து நிற்கும் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்பது மணிக்கு மேல் தான் எப்பொழுதும் எழுவான். இன்று என்ன இவ்வளவு சீக்கிரம் என யோசனையாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
கையில் ஏதோ பேப்பர் வைத்திருந்தான். இதுதான் முதன்முறையாக அவனை நேருக்கு நேர் அருகில் பார்ப்பது. அவளுக்கு பயமும் படபடப்பும் சேர்ந்து வந்தது. வேலையில் கவனம் செலுத்துவதுபோல் திரும்பி நின்று தனது உணர்வுகளை அவனுக்கு காட்டாமல் மறைக்க முயன்றாள்.
என்ன முயன்றும் முடியவில்லை. அவளின் ஹார்ட் பீட் சத்தம் அவளுக்கே கேட்கும் போல் தடதடத்தது நெஞ்சம்.
”என்ன…..? வசதியான வாழ்க்கைய பார்த்ததும் இங்கேயே ஒட்டிக்கலாம்னு பார்க்கிறியா………? இன்னும் கொஞ்ச நாள்தான்….. அட்வகேட்கிட்ட கன்செல் பண்ணிட்டு இருக்கேன். எப்படியும் டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிடுவேன்”.
”உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு கிளம்ப தயாரா இருந்துக்கோ”……
அவன் வார்த்தைகளை கேட்டு ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். அன்று பிடிக்கவில்லை என அவன் அன்னையிடம் முறையிட்டான். இன்று டைவர்ஸ் வரை வந்துவிட்டான் என அவளுக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது. அவன் முன்னால் அழுவது பிடிக்காமல் கண்களிலிருந்து வெளி வரத் துடித்த கண்ணீரை விழுங்க முயன்றாள்.
அவளது முயற்சிகளை எல்லாம் முறியடித்து, ”வில்லென பாய்ந்து வெளியே வந்திருந்தது கண்ணீர்”. என்ன பிரயத்தனப்பட்டும் கண்ணீர் நிற்கவில்லை. ‘’நா…ன் ஏ..ன் போகனு…..ம்’’ என்றாள் திக்கித் தடுமாறி குனிந்து கொண்டே.
”இரண்டு பேரும் சேர்ந்து மியூச்சுவலா அப்ளை பண்ணோம்னா,,,, ஈசியா டைவர்ஸ் கிடைச்சிடும். நான் லாயர்கிட்ட எல்லாம் பேசிட்டேன். நீ ஓகே சொன்னா போதும். நான் மத்ததைப் பார்த்துக்கறேன்”.
”நான் எப்போ உங்ககிட்ட டைவர்ஸ் கேட்டேன்………..?”, என்றாள் அவனை நிமிர்ந்து பார்த்து.
‘நீயே புரிஞ்சுகிட்டிருப்பேன்னு பார்த்தேன், நானே என் வாயால சொல்லனும்னாலும் சொல்றேன்’, நோ அப்ஜெக்ஷன் என ஸ்டைலாக தோளைக் குலுக்கினான். கிட்சன் வாயிலில் உள்ள சுவற்றில் சாய்ந்து தன் கைகளை மார்பின் குறுக்காக கட்டிக் கொண்டு, அவளைப் பார்த்து பேச ஆரம்பித்தான்.
”எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. ஏதோ அப்ப இருந்த குழப்பத்துல, எங்க அம்மா சொன்னதுக்காக உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன். எனக்கு இதுல சுத்தமா கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. என் எதிர்பார்ப்புகள், ஆசைகள், எண்ணங்கள், கனவுகள் எல்லாமே வேற.”
”நான் எனக்குள்ள என் மனைவி இப்படிதான் இருக்கனும்னு சில எதிர்பார்ப்புகளை வளர்த்து வச்சிருக்கேன். அதுக்கு நீ எந்த விதத்திலும் சூட் ஆக மாட்டே. எனக்குன்னு சில ட்ரீம் இருக்கு”.
லைப் என்ஜாய் பண்ணி வாழனும்னு நினைக்கறவன் நான். எனக்குள்ள நிறைய ஆசை இருக்கு, என் லைப்ப பத்தி.
”யாருக்காகவும் என் லைப்பை அழிச்சிக்க நான் விரும்பல. இன்னும் எவ்வளவு நாள் இப்படியே வாழ்க்கைய ஓட்ட முடியும். அதான் நாம டைவர்ஸ் அப்ளை பண்ணி பிரிஞ்சிட்டோம்னா, நம்மோட வாழ்க்கைய நம்ம இஷ்டப்படி வாழலாம்”, இல்ல. ”நீயும் உனக்கு பிடிச்ச மாதிரியான லைப்பை அமைச்சுக்கலாம்”.
”ஓஹ்……. இப்பதான் உங்களுக்கு இந்த ஞானோதயம் எல்லாம் வந்துதா…….? என் கழுத்துல தாலி கட்டும் போது அம்னீசியால இருந்தீங்களா…….?” உங்க விருப்பத்துக்கு வேணும்னா கட்டிகறதுக்கும் வேணாம்னா வெட்டி விடறதுக்கும் இது ஒன்னும் சினிமாயில்ல….. நிஜம். வாழ்க்கை.
உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால ஓகே சொல்ல முடியாது. ”கல்யாணம்றது என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு தடவைதான். அது என் லைஃப்ல முடிஞ்சிடுச்சி. நீங்க தான் என் புருஷன். நான்தான் உங்க பொண்டாட்டி, இதுல எந்த மாற்றமும் இல்ல”.
”என்ன சினிமா டையலாக் பேசறியா……? இதுக்கெல்லாம் நான் அசரமாட்டேன்”. நீ சைன் பண்ணா மியூச்சுவலா எந்த பிரச்சினையும் இல்லாம பிரியலாம்……..
இல்லனா…………
கோர்ட் கேஸ்னு அலைய வேண்டியதுதான்.
ஒஹ்……… என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது என அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.
”ராட்சஷி பார்க்கறதுக்கு ஊமச்சி மாதிரி இருந்துட்டு என்ன பேச்சு பேசறா பாரு”……. என கறுவிக் கொண்டான் ஏதோ இவன் கேட்டதும் பானு சிரித்து கொண்டே தலையாட்டி விடுவாள் என அசட்டையாக இருந்தவனுக்கு அவள் முடியாது என மறுத்துவிட்டு சென்றது ஆத்திரத்தையும் ஒருங்கே ஏமாற்றத்தையும் கொடுத்தது. அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கினான், சரி கொஞ்சம் ஆறப் போடுவோம் என தள்ளிபோட நினைத்தான்.
ஏற்கனவே அவன் அவனது தோழன் மூலமாக அட்வகேட்டிடம் இதைப்பற்றி ஆலோசனை கேட்டிருந்தான். அவர் திருமணமாகி ஒரு வருடமாவது ஆகியிருக்கவேண்டும் என கூறியிருந்தார்.
ஆகையால், இப்பதான முதல் தடவையா அவள்கிட்ட பேசியிருக்கோம். கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் பேசி புரிய வைப்போம் என அவனே தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தான்.
அறைக்குச் சென்ற பானு ”அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்திருந்தாள்”. நெடுநேரம் சிந்தித்தவள், தன் வீட்டில் சொல்வோமா, இல்லை அண்ணனிடம் மட்டும் சொல்வோமா என யோசித்தாள். அண்ணனே இவ்வளவு வருஷம் கஷ்டப்பட்டு இப்பதான் புதுசா தொழில் ஆரம்பிக்க போராடிட்டு இருக்கான். இப்பப் போய் சொன்னா அவனையும் பாதிக்கும்.
மதுவிடம் சொன்னால் நிச்சயம் அடிதடி பிரச்சனை ஆகும் என பயந்தவள், வேண்டுமென்றால் சங்கரே சொல்லட்டும் ”நானா டைவர்ஸ் கேட்டேன்? அவனுக்கு வேணும்னா அவனே பேசட்டும். எல்லார்கிட்டயும் அவனே சொல்லட்டும்”.
‘’நான் என்ன விளையாட்டு பொம்மையா இவனுக்கு. வேணும்னா கல்யாணம் பண்றதுக்கும், வேணாம்னா தூக்கி எறியறதுக்கும் என கோவம் வந்தது. அன்று முழுதும் சமைக்காமல் சாப்பிடாமல் அப்படியே இருந்தாள்.’’
மறுநாளும் அவன் அலுவலகம் செல்லும் வரை எழுந்து வெளியே செல்லவில்லை, படுத்தே இருந்தாள். அவன் வெளியில் சென்ற அரவம் கேட்ட பின்புதான் கிட்சனிற்கு சென்று டீ போட்டு குடித்தாள்.
சங்கர் சொன்னதையே நினைத்திருந்தவளுக்கு யோசித்து யோசித்து தலைவலிதான் மிஞ்சியது. எழுந்து சென்று குளித்து வந்தவள் தோசையை ஊற்றி சாப்பிட்டு விட்டு, மறுபடியும் போய் படுத்துக் கொண்டாள்.
சங்கர் நேற்று பேசியதிலிருந்து ஜமுனாவின் மீதும் கோவமாக இருந்தாள். நேற்று ஜமுனா போன் செய்தபோதும் எடுத்து பேசவில்லை. அன்னையின் மீது கோவமாக வந்தது. நான் வேணாம்னு சொல்லியும் கேட்காம, இவங்கதான என்னை இவனுக்கு கட்டி வச்சாங்க என அவரது போனை எடுக்காது தவிர்த்தாள்.
இன்று மதுசூதனன் போன் செய்திருந்தான் அவளுக்கு. அன்னையின் மீது கோவம் காட்டியது போல அண்ணனிடம் காட்ட முடியவில்லை.
அண்ணனிடம் சிறிது நேரம் பேசினவளுக்கு தெளிவு கிடைத்தது. எழுந்து சென்று முகம் கைகால் அலம்பி வந்தவள், நேராக பூஜை மாடத்திற்கு சென்று விளக்கேற்றி சாமி முன் அமர்ந்து பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.
கண் மூடி இறைவனை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்தவளுக்கு மனதில் தெளிவு பிறந்தது. தன் பிரச்சனைகளை இறைவன் பாதத்தில் இறக்கி வைத்தவளுக்கு, புது தெம்பு வந்திருந்தது. பழைய மாதிரி எழுந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தாள்.
மதுசூதனன் தங்கைக்கு போன் செய்து அவளை கடை திறப்பு விழாவிற்கு அழைத்திருந்தான். சங்கரையும் போன் செய்து அழைத்திருந்தான். தன்னால் நேரில் வந்து அழைக்க முடியவில்லை எனவும், கடை திறப்பதற்கான வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருப்பதால் நேரில் வந்து அழைக்க முடியவில்லை, கோவிக்க வேண்டாம் என்று கூறி சங்கரையும், பானுவையும் போனில் அழைத்திருந்தான்.
கலியமூர்த்திக்கு டீக்கடையை பார்த்துக் கொள்ள வேண்டியிருந்ததால் ஜமுனாவும் நேரில் வரமுடியாமல் போனது. அவருக்கு தனியாக எங்கும் வந்து பழக்கமில்லை.
பானுக்கு மதுசூதனனின் கடை திறப்பு விழாவிற்கு செல்ல உள்ளூர ஆசை. ஆனால் தனியாக செல்ல முடியாதே. நிச்சயம் சங்கர் வரமாட்டான் என்று அவளுக்கு தெரியும்.
ஆதலால் மதுசூதனனிடம் ”ண்ணா…… கோச்சுக்காத, இப்ப வர முடியாது. அங்க வரும் போது உன் கடையை வந்து பார்க்கறேன்”…… என்றாள் தயங்கிக் கொண்டே.
மது, ”பானு நான் நேர்ல வந்து சொல்லலன்னு கோவமாடா”…….. ?
”ச்ச ச்ச அப்படியில்லண்ணா……. உனக்கு என் பொசிஷன் தெரியாதா”……..? இப்பதான் ஒரளவு பேசி பழக ஆரம்பிச்சிருக்கோம். அவள் ”மைன்ட் வாய்ஸ்ல… ம்க்கும் இவன்கிட்ட பழகிட்டாலும்”…….. இவனால என் அண்ணன்கிட்ட என்னல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கு……..
தங்கை போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே அமைதியாகிவிட்டதை பார்த்து ஹலோ….. ஹலோ…… பானு….. நான் பேசறது கேட்குதுதாடா… என கத்த ஆரம்பித்தான் மதுசூதனன்.
மதுவின் குரலில் தன்னிலிருந்து மீண்டவள், ‘’அச்சோ’’ என சத்தமில்லாமல் தலையில் தட்டிக்கொண்டவள் ”அண்ணா”……. என்றாள்.
என்னடா……?, ” சிக்னல் வீக்காயிருக்கா…… திடீர்னு உன் குரலே கேட்கல…… நான் பேசறது கேட்குதா…..மா?”
ஹ்ம்ம் கேட்குது ண்ணா. ”தப்பா நினைச்சுக்காத ……ண்ணா. இப்ப என்னால அவர்கிட்ட போய் அங்க கூட்டிட்டு வர கேட்க முடியாது ண்ணா…… அதான்”……… என இழுத்தாள்.
அவனுக்கும் அவள் சூழ்நிலை புரிந்ததால், அவளை வற்புறுத்தவில்லை. ”சரிடா”. இங்க உங்க மாமியார் வீட்டுக்கு நேர்ல போய், நானும் அம்மாவும் அழைச்சட்டு வந்தோம் மா………..
ஹ்ம்ம்……. தெரியும் ண்ணே…… அம்மா சொன்னாங்க. என அவனிடம் சில நிமிடங்கள் பேசி போனை வைத்துவிட்டாள்.
மதுசூதனன் கடை திறப்பு விழாவிற்கு சரசுவும் ராகவனும் வந்திருந்தனர் நேரில். ராகவனது கண்கள் கடையை சுற்றி ஆராய்ந்தது. ”ஹ்ம்ம்…. பரவாயில்லை பையன் மெயினான இடத்துலதான் கடையை பிடிச்சிருக்கான் என மதுசூதனனை மனதில் மெச்சிக் கொண்டார்”.
மது நிற்கவே நேரமில்லாமல் சுழன்று கொண்டிருந்தான். குறைந்தது இருபது பேராவது அமர்ந்து சாப்பிடும் படி இருந்தது அந்த ஓட்டல். கேஷ் கௌன்டரில் கலியமூர்த்தியை அமர வைத்திருந்தான். முதல் நாள் கடை திறப்பிற்காக ஆப்பர் போட்டு விளம்பரம் செய்திருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஜமுனா கிட்சனில் நின்று ஆட்கள் சமைப்பதை பார்த்துக் கொண்டிருந்தார். மது வரும் கஸ்டமர்களை அட்டென்ட் செய்து கொண்டிருந்தான். மொத்தம் பதினொரு பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தான். பரிமாறுவதற்கு மூன்று பேர், சமைப்பதற்கு மாஸ்டர் ஒருத்தர், அவருக்குக் கீ்ழ் மூன்று பேர், பாத்திரம் கழுவ, பெருக்கி துடைக்க, காய்கறி நறுக்க, பர்சேஸ்க்கு சென்று வர, பெரிய ஆர்டர்களாக இருந்தால் டெலிவரி கொடுக்க என வேலைகளை பிரித்து ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருந்தான்.
இதில் மாஸ்டருக்கு தான் சம்பளம் அதிகம். அவர் இருபது வருட அனுபவம் நிறைந்தவராக இருந்ததால் சம்பளம் அதிகமாக இருந்தது. இது இல்லாமல் அங்கு வேலை செய்பவர்களில் ஒன்றிரண்டு பேர் தான் உள்ளூர்வாசிகள். மற்ற அனைவரும் வெளியூரிலிருந்து வந்தவர்கள் என்பதால், அவர்கள் எல்லோரும் தங்குவதற்கு வீடும் எடுத்து கொடுத்திருந்தான்.
இப்படி அவன் எதிர்பார்த்த பட்ஜெட்டை விட செலவு அதிகமாகியிருந்தது. ஜமுனாக்கு மகன் புதிதாக தொழில் ஆரம்பித்திருந்தது சந்தோஷத்தைக் கொடுத்திருந்தாலும், அகலக்கால் வைக்கிறானே என பயமாகவும் இருந்தது.
அவருக்கும் இன்னும் எத்தனை காலம்தான் இப்படியே முன்னேறாமல் டீக்கடையை நம்பியே வாழ்க்கையை ஓட்டுவது என்ற ஆதங்கமிருந்தது மனதில். ஆதலால் அவன் முயற்சி வெற்றியடைய மனதில் அந்த நடராஜரையும் சிவகாமியையும் நினைத்து பிரார்த்தித்துக் கொண்டிருந்தார், இருந்த இடத்தில் இருந்தே.
கலியமூர்த்திக்கு மனதில் அத்தனை பூரிப்பாக இருந்தது. முதலாளி என கல்லாவில் மகன் தன்னை அமர வைத்ததை நினைத்து சந்தோஷம் பூரித்தது மனதில்.
மது தந்தையை கல்லாவில் அமர சொன்னதும் முதமுத நீ உட்காருப்பா….. என்றார் கலியமூர்த்தி. மனதில் ஆசை இருந்தாலும் மகனது உழைப்பு அல்லவா….? ஆதலால் தயங்கினார்.
அதனால் அவனை உட்கார சொன்னார். ஜமுனா கணவரை ஒரு முறை முறைத்ததும் பதில் பேசாமல் சென்று கேஷ் வாங்கும் இடத்தில் அமர்ந்து கொண்டார். அமர்ந்திருந்தாரே தவிர பில் போடுவது எல்லாம், இன்னும் அந்த மெஷினில் பழகவில்லை.
மதுவே வந்து பில் போட்டு காசும் வாங்கி அவரிடம் கொடுத்துக் கொண்டிருந்தான். சரசும் ராகவனும் கொஞ்ச நேரம் இருந்தவர்கள் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.
நாட்களும் வாரங்களாக மாறி, மாதங்களாகவும் கடந்து கொண்டிருந்தது. பூர்ணிமா என்ட்ரன்ஸ் எக்ஸாமில் பாஸ் செய்து, எம்.பில் படிக்க ஆரம்பித்திருந்தாள்.
மதுசூதனுக்கு ஹோட்டல் ஆரம்பித்ததிலிருந்து…….. ஓய்வென்பதே இல்லாமல் இருந்தது. ஒரு நாளைக்கு முன்று மணிநேரம்தான் அவனது தூக்கமே. தொழிலை எப்படியாவது முன்னுக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்பதே அவனது சிந்தனையாக இருந்தது.
தினமும் மதுசூதனன் கடையை அடைத்து வர இரவு பனிரெண்டு மணியாகி விடும். காலையில் நான்கு மணிக்கே கடைக்கு சென்றுவிடுவான். ஜமுனாவுக்கே அவனது உழைப்பை பார்த்து வருத்தமாக இருந்தது.
”இப்படி ஓய்வில்லாம தூங்காம வேலை பார்த்து உடம்பை கெடுத்துக்காதடா”…….
”மத்த தொழில் மாதிரி இல்லமா……. ஒட்டல் பிஸ்னஸ் நம்மோட நேரடி கண்பார்வையில நடந்தாதான் சரியாயிருக்கும் ம்மா…… தொழிலுக்கு நானே புதுசு. இப்பதான் நானே ஒன்னு ஒன்னா….. அனுபவப்பட்டு கத்துக்கறேன்”.
வேலை செய்றவங்களை மேய்க்கவே ஒருத்தருக்கு சரியா இருக்கும் போல. நாம இருந்தாதான் ஒழுங்கா வேலை செய்றாங்க. இல்லேனா ஏமாத்தவும் வாய்ப்பிருக்கு, ”பொருட்களை தரம் பார்த்து வாங்கறதுல இருந்து, கடைக்கு வர கஸ்டமரோட முகம் பார்த்து பரிமாற வரைக்கும்” நாம முன்னாடி நின்னு பார்க்க வேண்டியதாயிருக்கு மா……..
மூலதனம் மொத்த பணமும் கடன் வாங்கிதான் போட்டிருக்கேன். தொழிலில் இருந்து சம்பாதிச்சு எடுத்து தான் கடனை திருப்பனும். அதுவரைக்கும் இதெல்லாம் பார்க்க முடியாதும்மா………
”அப்பாவையாவது உன்னோட வச்சுக்கோயேன்டா”……. அவர் இங்க டீக்கடைய பார்க்கிறாரு. நீ அங்க ”தனியா இருந்து கஷ்டப்படற”……..
ஓட்டல் நல்லா பிக்கப் ஆகற வரைக்கும் அப்பா இங்கயே இருக்கட்டும் ம்மா…… அதுக்கப்புறம் வேணா பார்க்கலாம். ”புதுச நம்பி பழச கோட்டை விட்டுடக் கூடாது” இல்ல. ” அப்புறம் புவ்வாக்கு என்ன பண்றது?” என்றான் சிரித்துக் கொண்டே. வீட்டில் ஜமுனாவிடமும் கலியமூர்த்தியிடமும் தெளிவாக கூறியிருந்தான்.
ஓட்டல் தொழிலுக்காக வாங்கின கடனை அடைக்கும் வரை அதிலிருந்து வீட்டுக்கு என்று, பணம் எதுவும் எடுக்க முடியாது என தெளிவாக கூறியிருந்தான். அதை அவர்களும் ஆமோதித்து இருந்தனர். கலியமூர்த்தி, வீட்டு செலவு எல்லாம் நான் பார்த்துக்கறேன் பா…… நீ நல்லபடியா முதல்ல கடனை அடைச்சுடு என்று அவனுக்கு தைரியம் சொல்லியிருந்தார். ஆதலால் இருவரும் அவரவர் தொழிலில் பிஸியாக இருந்தனர்.
தொடரும்.
error: Content is protected !!