Skip to content
Post Views: 5,061
அத்தியாயம் – 6
உடற்கூறாய்வு அறிக்கையை படிக்கப் படிக்க அவள் முகம் குழப்பம், சந்தேகம், அதிர்ச்சி போன்ற உணர்வுகளை கலந்துகட்டி பிரதிபலித்தது. இந்த வயதில் இப்படியா? என்ற குழப்பத்துடன் அந்த அறிக்கையை இருமுறை படித்தாள். படிக்கப் படிக்க குழப்பங்கள் அதிகரித்ததே தவிர எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
ஒன்று மட்டும் உறுதியாய் தெரிந்தது, அது மான்சி இறந்த நேரம் அந்த அறிக்கையில் தெளிவாய் குறிப்பிடப்பட்டிருந்தது. ஃபார்மிலிருந்து அவள் கிளம்பிய இரண்டு மணி நேரத்திலிருந்து நான்கு மணி நேரத்திற்குள் அவள் இறந்திருக்க கூடுமென்றது அந்த அறிக்கை.
பரிதியை அழைத்தவள் அவனிடம் அறிக்கையை நீட்டி படிக்கச் சொல்ல, புருவ முடிச்சுடன் படித்து முடித்தவன் அவளைப் போலவே குழப்பத்தை தத்தெடுத்த வண்ணம் அமர்ந்திருந்தான்.
Advertisement
“இருபத்தஞ்சு வயசு தானே மான்சிக்கு? அவங்க உடம்புல கேன்சர் இருக்க வாய்ப்பிருக்குனு போட்டிருக்கு. இதை பத்தி அவங்க வீட்ல ஏதாவது சொன்னாங்களா பரிதி?”
“இல்லையே மேம். அவங்க உடல்நிலை பத்தியெல்லாம் நாம இதுவரை டீப்பா விசாரிக்கல.”
“இனி விசாரிக்கணும். இது சீரியசா தெரியுது. நானே இதை புல்லா ஹேண்டில் பண்ணிக்குறேன். இன்ஸ்பெக்டரை இந்த கேஸ்ல பட்டும்படாம இருந்துக்க சொல்லுங்க.” என்ற அதிராவின் கட்டளையை ஏற்றவன் மீண்டும் அறிக்கையில் பார்வை பதித்துவிட்டு அவளை ஏறிட்டான்.
Advertisement
“ரிப்போர்ட் ரெடி பண்ண டாக்டரை ஒருமுறை பாத்துட்டு வரவா மேம்? இதுல போட்டிருக்கத்துக்கும் மான்சியோட வாழ்க்கை முறைக்கும் சம்மந்தம் இருக்குற மாதிரி தெரியல.”
Advertisement
“நானும் அதான் நினைச்சேன். டாக்டர் எப்போ அவைலபில்னு கேட்டு மீட்டிங் பிக்ஸ் பண்ணுங்க. போய்ட்டு வந்துரலாம்.” என்றவள் யோசனையாய் இருக்கையில் சாய்ந்தமர, சல்யூட்டு அடித்து வெளியேறினான் பரிதி.
இரண்டொரு நிமிடங்களில் ஏதோ நினைவு வந்தவளாய் மணியைப் பார்க்க, முற்பகல் வேளை முடியும் தருவாயில் இருந்தது. அலைபேசியில் அகிலனை அழைத்தவள்,
“கார்ல என் பேக் மறந்து வச்சிட்டேன் எடுத்துட்டு வா.” என்று சொல்ல, பொறுப்பானவன் போல் கார் கதவை திறந்து பார்த்தான் அகிலன். பின் சீட்டில் தூக்குப் பை ஒன்று இருந்தது.
Advertisement
ஜிப் போட்டு மூடப்பட்டிருந்த பையை பிரிக்க இரண்டு தண்ணீர் பாட்டிகளும் சதுர வடிவில் ஒரு கண்ணாடி டப்பாவும் இருக்க, ஒவ்வொன்றாய் திறந்து பார்த்தான். கண்ணாடி டப்பாவில் வண்ணமயமான காய்கறிகள் கொஞ்சம், கடலை கொஞ்சம், லெட்யூஸ் கொஞ்சம் என்றிருக்க,
‘ஐய்யய்ய… இந்தம்மா என்ன இலை தலையெல்லாம் சாப்பிடுது.’ என்று முகத்தை அஷ்டகோணலாக்கி மூடிவைத்தான்.
பின் பாட்டிலை பார்க்க, ஒரு பாட்டிலில் தண்ணீரும் ஒரு பாட்டிலில் சிகப்பு நிறத்தில் ஏதோ பழச்சாறும் இருக்க, ’என்ன ஜூஸா இருக்கும்?’ என்று கொஞ்சம் குடித்துப் பார்த்தான்.
மாதுளை பழச்சாறு இனிப்பு போடாது விதையோடு சேர்ந்து கெட்டியாக இருந்தது. கொஞ்சம் புதினா வாசமும் வீசியது.
‘என்ன ஜூஸை கூட இப்படி வச்சிருக்காங்க. த்தூ… ச்சீ…’ விதை தொண்டையில் சிக்கி உள்ளே செல்ல, வாயிலிருந்ததை அப்படியே கீழே துப்பியவன் பாட்டிலை மூடி திரும்ப பைக்குள்ளேயே வைத்தான்.
‘இது நமக்குத் தேறாது.’ என்று முடிவு கட்டியவன் நல்ல பிள்ளையாய் அதை எடுத்துச் சென்று அதிராவிடம் கொடுக்க,
தான் சொன்னதும் எந்தவித எதிர்ப்பும் காட்டாது எடுத்து வந்து கொடுத்தவனை சந்தேகமாய் பார்த்தாள். அவன் நல்ல பிள்ளையாய்,
“வேற எதுவும் வேணுமா மேடம்?” என்று வேறு கேட்க, கண்டிப்பாக ஏதோ திருகுதாளம் செய்திருக்கிறான் என்பதை உறுதியாக நம்பியவள் சந்தேகப் பார்வையினூடே பையை பிரித்து ஆராய்ந்தாள். மேலோட்டமாய் பார்க்க எதுவும் வித்தியாசமாய் தெரியவில்லையென்றாலும் அனைத்தையும் கீழே எடுத்து வைக்கும் போது பழச்சாறு இருந்த பாட்டிலில் சாறின் அளவு குறைந்திருப்பதை கண்டுகொண்டாள்.
அந்த பாட்டிலை அவன் எதிரே வைத்து, “என்ன இது?”
“உங்களோட பேக்ல என்ன இருக்குனு உங்களுக்குத்தான் தெரியும். எனக்கெப்படி மேடம் தெரியும்?” என்று சிரித்த முகமாய் சொல்ல, ஆத்திரம் வந்தது அதிராவுக்கு.
“விவரமா பேசுறதா நினைச்சுகிட்டு பேசாத. விளிம்பு வரைக்கும் ஜுஸ் எடுத்துட்டு வந்தேன். இப்போ இவ்ளோ தான் இருக்கு.” என்று குறைந்திருந்த அளவீட்டை காண்பிக்க, உற்றுப் பார்த்தான் அகிலன். ஆனால் எதுவும் சொல்லவில்லை.
அவன் அழுத்தத்தில் தாடை இறுக, கருவிழியை மட்டும் பாட்டிலில் நிலைக்க விட்டு பின் அவனை நேராய் பார்த்தவள், “குடிச்சியா?” என்று கேட்க,
“அதான் ரெண்டு நாளும் போட்டு உடைச்சிட்டீங்களே!” என்று உதடு பிதுக்கினான் அகிலன்.
அவன் பதிலில் கோபம் வரப்பெற்றவளாய் மேசையில் கை கொண்டு பலமாய் தட்டிய அதிரா, “உன் நான்சென்ஸ்ஸ கேக்க எனக்கு நேரமில்லை. பொறுப்புதான் இல்லைனு நினைச்சேன். உனக்கு மேனர்சும் இல்லை. அடுத்தவங்க பொருளை அவங்க அனுமதி இல்லாம எடுக்கிறது எல்லாம் என்ன பழக்கம்?”
“தேவையில்லாம என் மேல குற்றம் சுமத்துறீங்க. ஆரம்பத்திலேந்து உங்களுக்கு என்னை புடிக்கல. அதான் நான் நின்னா குத்தம் நடந்தா குத்தம்னு சொல்றீங்க…” என்று நீளமாய் பேசினான் அகிலன்.
அவ்வளவு நல்லவனாடா நீயி என்று பார்த்தவள் வேகமாய் அங்கிருந்த மானிட்டரை உயிர்ப்பித்து ஏதோ தேட, யோசனையாய் நின்றான் அகிலன்.
சிக்குனடா நீ என்று மனதில் நினைத்துக்கொண்டே எள்ளலாய் அவன் புறம் மானிட்டரை லேசாக திருப்பியவள் காணொளியை ஓடவிட, அதில் அகிலன் அந்த பழச்சாறை குடித்துவிட்டு துப்புவது பதிவாகியிருந்தது.
‘மண்டையில இருக்குற கொண்டையை மறந்துட்டியே அகிலா.’ என்று மனதிற்குள் நினைத்தவனாய் வெளியே விறைப்பாய் நின்றான்.
“இப்போ என்ன சொல்ற?” என்று அவள் தீர்க்கமாய் கேட்க, செறுமியவன், “என்ன பண்ணனும்னு சொல்லுங்க.”
“அந்த ஜூசை வேஸ்ட் பண்ணாம குடி.” என்று அவன் எடுக்க வசதியாய் பாட்டிலை நகர்த்தினாள்.
“ஜூசா அது?” என்று அகிலன் முகம் மீண்டும் கசப்பை தத்தெடுக்க,
“குடிச்சி தான் ஆகணும்.” அழுத்தம் கொடுத்தாள் அதிரா.
“வேற ஏதாவது சொல்லுங்க செய்றேன்.”
“நீ செஞ்சதுக்கு இதைத்தான் சொல்ல முடியும். நீ குடிச்சிட்டு வச்சத நானா குடிக்க முடியும்? எனக்கு வேஸ்ட் பண்றது புடிக்காது. ஒழுங்கா குடிச்சிடு.”
“உங்க ஜுஸ்ன்னதும் வேஸ்ட் ஆகக்கூடாதுன்னு சொல்றீங்க. ஆனா மனசாட்சியே இல்லாம என்னோட ரெண்டு பாட்டிலை உடைச்சிருக்கீங்க.”
“ரெண்டில்லை ஒன்னு.” என்றவள் அவன் முறைக்கவும் லேசாக சிரித்து, “இன்னொன்னு நீ உடைச்சபா.”
அவள் சிரிக்கவும் முகத்தை திருப்பிக்கொண்டான். எதிர்த்து பேச தோன்றவில்லை. எது செய்தாலும் அதன் எதிர்வினையை தான் அனுபவிக்கும்படி செய்துவிடுகிறாள் என்பதை புரிந்துகொண்டவன் அவளை சீண்டாது இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான்.
“வெளில போற மாதிரி இருக்கும், குடிச்சிட்டு கழுவி வச்சிடு.” என்று மீண்டும் சொல்ல, பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியேறினான் அகிலன்.
‘இவனை கொஞ்சம் பாத்து ஹாண்டில் பண்ணனும்.’ என்று சுதாரிப்பாய் எண்ணியவள் உதவியாளரை அழைத்து பழச்சாறு வாங்கி வரச் சொல்லிவிட்டு மற்ற வேலைகளில் மூழ்கிவிட்டாள்.
மாலை போல டாக்டரை சந்திக்க பரிதியுடன் சென்றாள். அறிக்கை தயார் செய்த மருத்துவர் மீண்டுமொரு முறை அறிக்கையை படித்துவிட்டு தன் எதிரே அமர்ந்திருக்கும் காவல் அதிகாரிகளை பார்த்தார்.
“சொல்லுங்க, என்ன சந்தேகம்?”
“மான்சிக்கு கேன்சர் இருக்குனு சொல்லி இருக்கீங்க. இருபத்தஞ்சி வயசு தான் ஆகுது அந்த பொண்ணுக்கு.”
“ரிப்போட்லேயே தெளிவா கொடுத்திருக்கேனே, கேன்சர் இருக்க 50-50 சான்ஸ் இருக்கு மேடம். அடோப்சில இதை உறுதியா சொல்ல முடியாது. சொல்லப்போனா அவங்க உயிரோட இருக்கும் போது இதை கண்டுபிடிச்சிருக்க முடியுமாங்குறதும் சந்தேகம்தான். அவங்க வயசும் அப்படி.
ஒரு சில நேரம் இதுமாதிரி நாங்க கண்டுபிடிக்கிறது உண்டு. கேன்சர் செல்கள் புத்தா வளர்ந்தும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். இது மாதிரி அட்டோப்சில அதிகமா லங் கேன்சர் தான் பைன்ட் பண்றோம். இந்த பொண்ணுக்கும் நுரையீரல் கேன்சர் இருந்திருக்க வாய்ப்பிருக்கு.”
“செக்ஸுவல் அசால்ட்?” விடை தெரிந்திருந்தாலும் மீண்டுமொருமுறை தெளிவுப்படுத்த வேண்டி கேட்க,
“நோ. வெளிநபர் மூலமா எந்த இடத்துலயும் அவங்க தாக்கப்பட்டு போராடுனதுக்கான தடயம், அடையாளம் இல்லை.” என்ற மருத்துவர், “அவங்களோட மரணம் சுவாச பிரச்சனைனால ஏற்பட்டதுதான்.”
“நீங்களே பாத்திருப்பீங்க, அவங்க பாடி பாதி எரிஞ்ச நிலைமையிலதான் கிடைச்சுது, குப்பை மேட்டுலேந்து எடுத்தோம். ஒரு வேலை சுவாச பிரச்சனை அந்த தீ விபத்தால இருக்கலாமா? தீவிபத்து இடத்துல நிறைய கேஸ்(gas) இருந்துச்சுனு பையர் சர்வீஸ் டிபார்ட்மெண்ட்லேந்து ரிப்போர்ட் வந்திருக்கு. மான்சி மரணம் அந்த தீ விபத்தால நடந்திருக்க வாய்ப்பிருக்கா?”
“இருக்கலாம். பட், அவங்க இறந்ததுக்கு அப்புறம்தான் தீயில உடல் கருகியிருக்கு. சோ சுத்தி இருந்த தீயில வந்த டாக்சினால மூச்சி திணறி இறப்பு நடந்திருக்கலாம். இறந்ததுக்கு அப்புறம் அவங்க உடலும் தீ புடிச்சி கருகியிருக்கலாம். அப்படி கருகினதுனால ஒரு சில பைண்டிங்கோட உறுதித்தன்மைக்கு என்னால சென்ட் பெர்ஸன்ட் கொடுக்க முடியாது லைக் அவங்க பாடில மைல்டு டாக்சின் இருக்கு, அது என்னனு டீடைலா கண்டுபிடிக்க லேபுக்கு அனுப்பி இருக்கோம்.
பட் ஐ திங்க், அவங்களுக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருத்திருக்கலாம்னு தோணுது. அவங்க குடும்பத்தை கேட்டுப் பாருங்க.” என்றார்.
“தேங்க்ஸ் பார் யுவர் க்ளாரிஃபிகேஷேன்.” என்று எழுந்து கைகுலுக்கினாள் அதிரா.
“எந்த சந்தேகம்னாலும் கூப்பிடுங்க.” என்று தன் கார்டை கொடுத்தார் மருத்துவர். தலையசைப்புடன் வாங்கிக்கொண்டு கிளம்பியவள் யோசனையுடன் காரை நோக்கி நடக்க,
“மான்சி வீட்டுக்கு போய் விசாரிக்கலாம் மேம்.”
“ம்ம், இன்னைக்கு வேணாம் நாளைக்கு போலாம். மான்சி ஃபார்ம்லேந்து கலெக்ட் பண்ண சிசிடிவில ஏதாவது கிடைச்சிதா பரிதி.”
“மான்சி கடைசியா ஏறுன ஆட்டோவை விசாரிக்க சொல்லி இருக்கேன் மேம். அதோட மான்சி கடைசியா பேசுனது அவங்க பிரெண்ட்கிட்ட தான். விசாரிச்சதுல மான்சி நார்மலா பேசுனதா தான் சொல்றாங்க. சந்தேகப்படுற மாதிரி எதுவுமே சிக்கல மேம்.” என்றான் பரிதி யோசனையாக.
“இப்போ நமக்கு இருக்கிறது ரெண்டே வழிதான். ஒன்னு நைட் மான்சி வேலை முடிச்சிட்டு ஃபார்ம்ல ஏறுன ஆட்டோ, அந்த ஆட்டோக்காரனை புடிச்சி விசாரிச்சா லீட் கிடைக்கலாம். ரெண்டு காலையில மான்சி கிட்ட சண்டை போட்ட அந்த ரெண்டு ஜென்ட்ஸ். இது ரெண்டுல கண்டிப்பா நமக்கு ஏதாவது கிடைக்கும்.” என்றாள் அதிரா நம்பிக்கையாய்.
“டீட்டையில் கலெக்ட் பண்ணிட்டு சொல்றேன் மேம்.” என்று பரிதி பதில் சொல்லும் போதே காரை நெருங்கியிருந்தனர்.
இவர்களை கண்டதும் அகிலன் காரில் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்ய, இருவரும் பின்னே ஏறிக்கொண்டனர்.
“எங்க போகணும் மேடம்?”
அகிலன் இயல்புக்கு மாறாய் பணிவாய் வேண்டவும்தான் யோசனை விட்டு வெளிவந்தவள் அலுவலகத்திற்கு வண்டியை விடச்சொல்ல, சீரான வேகத்தில் எந்த தொல்லையும் தராமல் அவர்களை இறங்க வேண்டிய இடத்தில் இறக்கி விட, அதிராவுக்கு அதிசயமாய் போயிற்று.
பரிதி இறங்கி முன்னே சென்றுவிட, தேங்கிய அதிரா காரின் கதவில் சாய்ந்து ஜன்னலூடே அகிலனைப் பார்த்தவள்,
“ஒரே நாள்ல திருந்திட்டியா?” என்று புருவம் உயர்த்திக் கேட்க, அவன் ஈகோ சீண்டப்பட்டுவிட்டது.
எள்ளலாய் நகைத்தவன், “உங்களுக்கே ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. அதோட ஆயிரத்தி ஒன்பதாவது வேலையா நான் அடுத்து என்ன பண்ணுவேன் அதுக்கு நீங்க என்ன பனிஷ்மென்ட் கொடுக்கலாம்னு யோசிக்க வைக்க வேணாம்னு பாத்தேன்.”
“என் வேலையை பத்தி கவலைப்படுற இடத்துல நீ இல்லை. இப்போ மாதிரி உன் வேலை என்னவோ அதை மட்டும் பாத்தீன்னா எனக்கும் நல்லது உனக்கும் நல்லது. மைண்ட் இட்.” என்றுவிட்டு செல்ல, ஆயாசமாய் பார்த்தான் அகிலன்.
இன்னும் எத்தனை நாளுக்கு இவளை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று மனம் சோர்வுற, காரை விட்டு இறங்கியவன் வேகமாய் சிகரெட்டை பற்ற வைத்தான்.
பேசாம ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு இவங்ககிட்ட இருந்து தப்பிச்சிடலாமா? நாமளும்தான் நாலு வருசமா இதே ஊருல இருக்கோம் என்று தோன்றிய நொடி சந்துருவுக்கு அழைத்தவன் விசயத்தை பகிர,
“பனிஷ்மண்ட் ட்ரான்ஸ்பர் வேணும்னா குடுப்பாங்களே ஒழிய பனிஷ்மண்ட்ல இருக்குறவங்களுக்கு ட்ரான்ஸ்பர் கொடுக்க மாட்டாங்க.” என்றான் அவன்.
“ம்ச். கடுப்பா இருக்குடா. அவங்க சொல்ற எல்லாத்துக்கும் ஏட்டிக்கு போட்டியா என்ன செய்யுறதுனு யோசிக்கவே எக்ஸ்ட்ரா சாப்பிடும் போலிருக்கு.” என்று அகிலன் குறைபட, வாய்விட்டு நகைத்தான் சந்துரு.
“ஒரே நாள்ல உன்னை பெண்ட் நிமித்திட்டாங்களா என்ன? காலையில அந்த முறுக்கு முறுக்குன?” என்று மீண்டும் நகைத்தான் சந்துரு.
“டிரைவரா இருந்து பாரு அப்போ தெரியும். கார் கழுவனுமாம், அவங்க எப்போ கூப்பிட்டாலும் கிளம்ப தயாரா இருக்கணுமாம், அவங்க சொல்ற எடுபிடி வேலை எல்லாம் செய்யணுமாம்… எரிச்சலா இருக்கு.”
“உனக்கு எரிச்சலா இல்லைன்னாதான அதிசயம்.” என்ற சந்துரு, “இங்கேயும் விசாரிச்சேன். அதிரா மேடம் பத்தி எல்லாம் நல்லதாதான் சொல்றாங்க. இந்தியா புல்லா வேலை பாத்திருக்காங்களாம், இப்போ இங்க வந்திருக்காங்க. நேர்மையா கண்டிப்போட இருப்பாங்களாம் அதே சமயம் அக்கறையாவும் இருப்பாங்களாம்.”
“அவங்களுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க சொன்னேனா உன்னை? வைடா போனை.” என்று அதட்டி அழைப்பை துண்டித்துவிட்டு திரும்ப, அதிரா கைகட்டி நின்றிருந்தாள்.
நொடி திகைத்து பின் மீண்டவன், “எங்கேயாவது போணுமா?” என்று கேட்க, அமைதியாய் காரின் மறுபக்கம் சென்று ஏறி உள்ளே வரும்படி சைகை செய்தாள் அதிரா.
அகிலனும் அமைதியாய் ஏறி எங்கு செல்ல வேண்டும் என்பது போல் பார்க்க, விலாசம் சொன்னவள், “இந்த ஏரியா தெரியுமா இல்லை மேப் போடவா?”
“தெரியும் மேடம். அந்த தெரு போனதுக்கு அப்புறம் மேப் போட்டுக்கலாம்.” என்றான் நல்லபிள்ளையாய்.
இரவு நேர வாகன நெரிசலுக்கு நடுவே குளுமை காற்றை அனுபவித்தபடி முக்கால்மணி நேர பயணம். முன்பகல், பிற்பகல் என்று பாராது சுட்டெரித்த ஆதவன் தணிந்து மேகங்களுக்கு வழி விட்டு மறைந்துகொள்ள, லேசான தூறலும் தேகம் தீண்டும் தென்றலும் மனதை இலகுவாக்கியது. மான்சி வழக்கு குறித்த யூகங்கள், சந்தேகங்கள் பின்சென்றுவிட, அழுத்தமின்றி இதமாக உணர்ந்தவள், அகிலன் புறம் கவனத்தை திருப்பினாள்.
“ஆமா, நீ எப்படி இந்த வேலைக்கு வந்த? உன்னை பாத்தா போலீஸ் வேலையில ஆர்வம் இருக்குற மாதிரி தெரியலையே.”
அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தவன் சாலையில் கவனம் பதித்து, “அப்பா ஹெட் கான்ஸ்டபில். வேலையில இருக்கும்போது தவறிட்டார். அந்த வேலையை எனக்கு கொடுத்துட்டாங்க.”
“ஈஸியா உள்ள நுழைஞ்சிட்ட அதான் இந்த வேலையோட மகத்துவம் புரியல.” என்று அவள் பேச்சுவாக்கில் சொல்ல, சுறுசுறுவென கோபம் தலைக்கேறியது அகிலனுக்கு.
“உங்களுக்கும் என்னை பாத்தா இளக்காரமா இருக்குல்ல. நானா கேட்டேன் என் அப்பா வேலையை எனக்கு கொடுங்கன்னு… நீ இதை பாத்துதான் ஆகணுங்குற நிலைமையில என்னை நிறுத்திட்டு ஆவூன்னா உனக்கென்னப்பா சுலபமா கவர்மென்ட் வேலை வாங்கிட்டேன்னு சொல்ல வேண்டியது…” எங்கோ உள்ள கோபத்தை இங்கு வந்து கொட்ட, அவனை முறைத்தாள் அதிரா.
“கொஞ்சமும் நான் உன்னோட ஹையர் அபீஷியல்னு உன் மைண்ட்ல இல்லைல. எல்லாம் நான் கொடுக்கிற இடம்டா. ஏதோ புரியாம இருக்கேனு பாத்தா என்கிட்டேயே எகிறிட்டு வர. உனக்கெல்லாம் பாவமே பாக்க கூடாது. பீல்டு ஒர்க்ல போட்டு வாட்டியிருக்கணும்.”
“எனக்கு அதெல்லாம் புதுசு இல்லை. இதுதான் புதுசு.” என்றான் உள்ளே சென்ற குரலில் காரை காட்டி.
“ஓ… உன்னோடே வீர தீரத்தை எனக்கு முன்னாடியே நிறைய பேர்கிட்ட காட்டி அவார்ட் எல்லாம் வாங்கி இருக்க போல… அப்படியும் திருந்தல.”
“நான் என்ன தப்பு பண்ணேன் திருந்துறதுக்கு?” குரல் லேசாய் உயர்ந்தது.
“இதுதான்… கால் மீ மேடம். நான் உன் பிரெண்ட் மாதிரி மொட்டையா பேசிட்டு வர. என்கிட்ட வேலை பாக்குற வரைக்கும் ஒழுக்கமும் மரியாதையும் ரொம்ப முக்கியம். முதல் நாள்னு உன்னை பிரீயா விட்டிருக்கேன். உன் இடம் தெரிஞ்சு நடந்தீன்னா மேல மேல போகலாம், இல்லை இப்படியே தான் இருப்பேன்னா கடைசி வரைக்கும் எடுபிடி வேலை பாத்துட்டு இருக்க வேண்டியதுதான்.” என்று கண்டிப்பாய் சொன்னவள் பார்வையை சாலையில் பதிக்க, அகிலன் இறுக்கத்துடன் காரை இயக்கினான்.
அடுத்த பத்து நிமிட பயணமும் மெளனத்தில் கழிய, அவள் சொன்ன விலாசத்தில் அவளை இறக்கிவிட்டான். அது ஆளுங்கட்சி அமைச்சரின் வீடு. அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு கூட்டணி பேரம் இப்போதே துவங்கிவிட்டது. பல்வேறு கட்சி ஆட்கள் தினம் வந்து செல்வது வாடிக்கையாகி இருக்க, இன்னும் ஒரு வாரத்தில் அவர் வீட்டிலேயே பெரிய கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடக்கவிருக்கிறது. அதற்கு பாதுகாப்பு கொடுக்கும்படி மேலிடத்திலிருந்து அவளுக்கு கட்டளை வந்திருக்க, அதை கவனிக்கவே வந்திருந்தாள்.
ஏற்கனவே அந்த ஏரியா எஸ்.ஐ அங்கு வந்து காத்திருக்க, அவருடன் சேர்ந்து அமைச்சரை சந்தித்து வந்தாள்.
“நாளைக்கு அமைச்சர் பி.ஏ. டீட்டையில்ஸ் கொடுத்ததும் எப்படி பாதுகாப்பு ஏற்பாடு பண்ணலாம், நம்ம ஆளுங்க எவ்ளோ பேர் தேவைப்படும்னு எல்லாம் ரஃப்பா கால்குலேட் பண்ணி என் ஆபீஸ்க்கு எடுத்துட்டு வாங்க. பாக்கலாம்.” என்றுவிட்டு காரில் ஏறிக்கொள்ள,
அகிலன், “வீட்டுக்கா மேடம்?” என்று கேட்டு அமைதியாய் காரை இயக்கினான்.
அதிராவும் அவள் பதவிக்கு இனி கீழே இறங்கி இவனிடம் பேசுவது சரியாய் இருக்காது என்று எதுவும் பேசாது இறுக்கமாகவே இருந்தாள்.
இருவரின் இறுக்கத்தையும் கலைக்கும் வண்ணம் அவன் அலைபேசி அலறியது. வேகமாக எடுத்துப் பார்க்க, வேணி என்று பெயர் மிளிர்ந்தது. உடனே சைலென்டில் போட்டு வண்டியை ஓட்ட,
“முக்கியமான கால்ன்னா ஓரமா நிறுத்தி பேசிட்டு வண்டி எடு.” என்றாள் அதிரா.
“என் தங்கச்சி.” என்றவன் குரலில் கனிவு இருந்ததோ. கண்டுபிடிக்க முடியவில்லை அதிராவால்.
“மாசமா இருக்கா.” என்றான் அவனாகவே.
“பேசுறதுனா பேசிட்டு வா. வீட்டுக்குதானே போறோம், என் வேலை முடிஞ்சிடுச்சு.” என்றாள் அதிராவும் இறங்கி வந்து.
“இல்லை… உங்களை விட்டுட்டு பேசிக்குறேன்.” என்ற பின் அவள் வற்புறுத்தவில்லை. வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
அதிராவை இறக்கிவிட்டபின் காரை அதன் இடத்தில் நிறுத்தி சாவியை ஒப்படைத்துவிட்டு முதலில் சந்துருவுக்கு அழைத்தான்.
“வேலை முடிஞ்சிடுச்சு. வந்து பிக் பண்ணிக்கோ.” என்றவன் அப்படியே கால் போன போக்கில் நடந்தவன் வேணிக்கு அழைத்தான்.
“சாப்பிட்டியா?” என்ற கேள்விதான் தங்கையிடமிருந்து முதலில் வந்தது.
“இனிமே தான். நீ இன்னும் தூங்கல?”
“உன்கிட்ட பேசிட்டு தூங்க வேண்டியதுதான்.” என்றதும் அகிலன் கண்மூடி திறந்தான்.
“அம்மா உன்னைவிட்டு பேச சொல்லுச்சா?”
“நான் உனக்கு பாரமா இருக்கேன்ல?” கரகரப்பான குரலில் கேட்டாள் வேணி. தன்னை காட்டித்தான் அண்ணனை அவனுக்கு ஒவ்வாத உத்தியோகத்தில் சேர்த்துவிட்டது என்ற குற்றவுணர்வு எப்போதாவது மேலெழும்பும். இன்று அவள் அம்மா அழைத்து ஐந்தாம் மாதம் மருந்து பிழியும் சடங்கை பற்றி மழுப்பலாக பேசவுமே அண்ணன் கத்தியிருப்பான் என்று புரிந்துகொண்டவள் எப்போது அவன் வேலை முடியும் என்று காத்திருந்து அழைத்திருந்தாள். அவனுக்கும் அது புரிந்துதான் இருந்தது.
“அம்மாகிட்ட நான் பேசிக்குறேன். தேதி குறிச்சாச்சா?” என்று பேச்சை திசை மாற்றினான் அகிலன்.
“இன்னும் பத்து நாள்ல. ம்ம், தேதி… ஆகஸ்ட் 14.”
“ம்ச்… ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் இருக்கு. அங்க வந்துட்டு உடனே நான் இங்க திரும்பணும். வேற நாள் கிடைக்கலையா?”
“என் மாமியார் இதுதான் நல்ல நாள்னு சொல்லிட்டாங்க. மீற முடியல.” என்றாள் வேணி சின்னக் குரலில்.
“சரி விடு. நான் வரப்பாக்குறேன்.”
“என்ன வர பாக்குறியா? கண்டிப்பா வரணும். நீ இல்லாம எப்படி?” விட்டால் அழுதுவிடுபவள் போல் வேணி பேச, அகிலன் மனம் வாடி மீண்டது.
தங்கையின் அழுகுரல் மனதை என்னவோ செய்ய, நெஞ்சை நீவிவிட்டுக்கொண்டவன், “எனக்கு டியூட்டி மாறியிருக்கு. பாத்துட்டு சொல்றேன். நீ தூங்கு.” என்று அலைபேசியை வைத்துவிட்டான். அலட்சியமாய் இருந்த மனம் இலகுகிறதோ. இதற்காகத்தானே யாரிடமும் அவன் நெருக்கம் வைத்துக்கொள்வதில்லை.
error: Content is protected !!