Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய்

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 11

அத்தியாயம்           11



Advertisement

மதுசூதனன் பூர்ணிமாவை கோயிலில் பார்த்த சந்தோஷத்தில் யோசிக்காமல் சட்டென்று வந்து அவள் பக்கத்தில் நின்றாலும், என்ன பேசுவது என தெரியாமல் யோசித்து நின்றான்.  ‘அவளிடம் பேச தயங்கி திரும்ப நினைத்தவனை, அவளது வாடிய முகம் தேக்கி நிறுத்தியது’.

அவன் யோசித்து  முடிப்பதற்குள், அவள் கண் திறந்து மது நின்றிருப்பதைப் பார்த்திருந்தாள்.  அவளது கலங்கிய முகத்தைப் பார்த்தவனுக்கு, ‘அவளது பிரச்சினை என்ன என்று கேட்டு களைய துடித்த மனதை அடக்கவே பெரும் பாடானது’.

Advertisement

‘’என்னை நினைவிருக்கா……? நல்லாயிருக்கியா…….?’’ என கேட்டான் புன்னகையுடன்.

Advertisement

‘’யார் நீங்க?  என்ன வேணும் உங்களுக்கு……? உங்களை எனக்குத் தெரியாது’’, என முகத்தில் அடித்தார் போல சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள் நிற்காமல்.

‘பூர்ணி அப்படி பேசியதும் திகைத்து நின்று விட்டான்’, அங்கேயே.  அவனது மனதில் இருந்த அவளது பிம்பத்திற்கும், இப்பொழுது அவள் நடந்து கொண்டதிற்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லை.

இவன்தான் அன்னைக்கு என்னை வேணாம்னு சொல்லி, அவங்க அம்மா அப்பாவ இழுத்துட்டு போனான்.  இன்னைக்கு என்ன பெருசா பேச வந்துட்டான் என கடுப்பாக வந்தது.  மனதில் இருந்த கடுப்பில், அவனை தெரியாது என்று கூறி வந்துவிட்டாள்.  கொஞ்சம் பார்க்க சாதுவா இருந்தா ஏறி தலையில மிதிச்சுட்டு போயிடுவானுங்க என ஆத்திரம் வந்தது மனதில்.

Advertisement

உணர்வுகளின் கொந்தளிப்பில் மூழ்கித் தத்தளித்தவள், தனது இயல்புக்கு மாறாக நடந்து கொண்டாள் மதுசூதனனைப் பார்த்து.

மதுசூதனனைப் பார்த்ததுமே, அன்று பெண் பார்க்க வந்து, காரணமே இல்லாமல் அவளை வேண்டாம் என மறுத்திருந்தது தான் நினைவில் எழுந்தது.  அது அவளுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது மனதில்.  அதன் தாக்கமே இன்று அவளை அவனிடம் கோவப்பட வைத்திருந்தது.

அன்று மட்டும் இவன் வேண்டாம் என சொல்லியிராமல் இருந்திருந்தாள், தனக்கும் இவனுக்கும் இந்நேரம் திருமணம் நடந்திருக்கும் அல்லவா….?  இப்படி வந்து செந்தில் தன்னை பேசியிருக்க வாய்ப்பிருந்திருக்காது இல்லையா? என அவளது மனம் பலதையும் நினைத்து குழம்பி தவித்தது.

அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்த நாட்களில் இருந்து ஏற்பட்ட தடங்கல்கள், சச்சரவுகள் எல்லாம் சேர்ந்து அவளை வசமிழக்க செய்திருந்தது.

பூர்ணிமாவின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டேயிருந்தது.  அழுது கொண்டே நடந்தவள், அதற்கு மேல் நடக்க முடியாமல், ஒரமாக நின்றுவிட்டாள்.

‘தேவையில்லாம இவன் மேல கோவப்படறேனோ………..’  என்ற சிந்தனை  ஓடியது மனதில்.

சில நொடிகளில் திடமாகி, கண்களை அழுந்த துடைத்து நிமிர்ந்தவள் அருகில் மதுசூதனன் இருப்பதைப் பார்த்து திடுக்கிட்டாள்.

ம்ப்ச்… இப்ப இவனுக்கு என்ன வேணும்…?  ஏன் என் பின்னாடியே  வரான்…., என அவளது மனம் சலித்து கொண்டது.

‘’தனியா வந்தியா கோவிலுக்கு…? யாரும் கூட வரலையா……..?’’  அவனுக்கு அன்று போல இன்றும் யாராவது இவளை கோவிலில் பெண் பார்க்க வந்திருப்பார்களோ……..? என சந்தேகமாக இருந்தது.

அவள் எடுத்தெரிந்து அத்தனை கோவமாக பேசியும், அவன் சாதாரணமாக வந்து பேசியது, அவளுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது.

தவறை உணர்ந்தவள், நிமிர்ந்து பார்த்து ‘’ஸாரி……. ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன்.   ஸாரி….’’ என்றாள்.

அவளையே கூர்ந்து பார்த்தவன்,  ஒன்றும் சொல்லாமல்……   தலையசைத்து,  மறுபடியும் ‘தனியா வந்தியா கோவிலுக்கு?’ என்றான்.  அவனுக்கு இவளுடன் யாராவது வந்திருக்கிறார்களா….  என தெரிந்து கொள்வதற்காக கேட்டான்.

ஆமாம் என தலையசைத்தாள்.

ஓஹ்……  ‘’ஏன் அழுத…… ?  ஏதாவது பிராப்ளமா….?’’

ஏற்கனவே ஆத்திரத்தையும் அழுகையையும் அடக்கியிருந்தவள்,  யாராவது ஆறுதலாக கேட்க மாட்டார்களா……?  தான் அவர்களது தோள் சாயமாட்டோமா என காத்திருந்தவள் அவனது வார்த்தையில் உடைந்திருந்தாள்.

மறுபடியும் அவள் அழ ஆரம்பித்ததும் அவனுக்கு சங்கோஜமானது.  ஏன் இவள் இப்படி தனியா நின்னு அழுதிட்டே இருக்கா? என அவனது மண்டையை குடைந்தது.

தங்களை சுற்றி பார்வையை ஓட்டியவன், ‘’பூர்ணி என்னாச்சு….. ?   பார்.. எல்லாரும் நம்மளதான் பார்க்கிறாங்க.   அழாத…மா….., கன்ட்ரோல் பண்ணு…..,’’ என பதறினான்.

அவன் சொல்லியதும் தான்,  அவர்கள் இருக்கும் இடத்தை உணர்ந்தவள், கண்களை அழுந்த துடைத்து, ஸாரி..  என அவனைப் பார்த்து சிரிக்க முயன்றாள்.

‘’ஏதாவது பிரச்சினையா……..?’’

ம்ப்ச்…….. ‘என்னன்னு சொன்னா மட்டும் தீர்ந்திடவா போகுது’ என நினைத்தவள், ஒன்றும் இல்லை………… என தலையசைத்தாள்.

‘’வீட்ல ஏதாவது பிராப்ளமா…….?’’

”ம்கூம்…., அதெல்லாம் ஒன்னுமில்ல….”

‘’ஒன்னுமில்லாததுக்கா… இப்படி அழுவாங்க?  என்னன்னு சொல்லு’’, என அதட்டலாக வெளிவந்தது அவனது வார்த்தை.

திரும்ப திரும்ப அவன் கேட்டதில் எரிச்சல் அடைந்தவள், ‘’உங்ககிட்ட ஏன் சொல்லனும்…?  உங்ககிட்ட சொன்னா சரியாகிடப் போகுதா…..?’’ என்றாள் எரிச்சலான குரலில்.

‘’பர்ஸ்ட் என்னன்னு சொல்லு?  அப்புறம் அது சரியாகுதா இல்லையான்னு பார்க்கலாம்.  இப்படி பொது இடத்துல அழுதுகிட்டேயிருக்கறதுக்கு, என்கிட்ட சொல்றதுல தப்பில்ல’’, என்றான் விடாப்பிடியாக.

அப்படின்னா ‘என் கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்க?’  நீங்க ஏன் அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்துட்டு, எதுவுமே சொல்லாம போயிட்டீங்க?

‘அம்மா போன் பண்ணி சொல்லியிருப்பாங்களே’, உங்க வீட்டுக்கு.

…………………………..

மது, படிச்சிருக்க.  வேலையில இருக்க.  உனக்குன்னு மனசுல ஆசை இருக்கும்ல, படிச்ச புருஷனா வரனும்னு.  நான் என்ன படிச்சிருக்கேன்னு உனக்கு தெரியுமில்ல…?

ஆமாம், என தலையசைத்தாள்.

கல்யாணத்துக்கு பின்னால படிப்பால நமக்குள்ள ஏற்றத் தாழ்வு வந்து, அதனால குடும்பத்துல சண்டை சச்சரவுன்னு வந்ததுன்னா என்ன பண்றது?  அப்புறம் வாழ்க்கையே கஷ்டமாயிடும்.  அதனால தான் படிச்ச பொண்ணே வேணாம்னு இருக்கேன்.

எங்கம்மா என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா நான் பெண் பார்க்கவே வந்திருக்க மாட்டேன்.  அவங்க பெண் பார்த்ததுக்கு அப்புறம் என்கிட்ட சொல்லி, என்னை கன்வின்ஸ் பண்ணிடலாம்னு நினைச்சி சொல்லாம இருந்துட்டாங்க. அன்னைக்கு இங்க வந்ததுக்கு அப்புறம் நீ சொல்லி தான் தெரியும்.  ஸாரி…….. முன்னமே தெரிஞ்சிருந்தா வந்திருக்க மாட்டேன்.

ஆனால் எனக்கு, எங்க அக்கா முன்னமே நீங்க படிக்காத விஷயத்தை என்கிட்ட சொல்லி, என் சம்மதத்தோட தான் அரேன்ஜ் பண்ணாங்க.

அவளது வார்த்தைகள் அவனை குளிர்வித்தாலும், அவனது கொள்கை அவனைத் தடுத்தது.

‘’இப்ப சரின்னு தோன்றது எல்லாம் பின்னாடி மாறலாம் இல்லையா…….?’’

ம்ப்ச்…. ‘’இதுல அப்ஜெக்‌ஷன் சொல்ல வேண்டிய நானே சரின்னு சொல்லும்போது, உங்களுக்கு என்ன பிரச்சினை………?’’

‘’அப்புறம் ஏன் பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு அவ்வளவு பயத்தோட இருந்தே……..?’’

என்னோட சுபாவமே அதுதான், அதுவுமில்லாம ‘பர்ஸ்ட் டைம் உங்களை பார்த்து பேசின நெர்வஸ்ல இருந்தேன்.  எங்கக்கா வேற கல்யாணத்துக்கு பின்னால மாப்பிள்ளை வேலைக்கு போக வேணாம்னு சொன்னா நீ வேலைய விட்டுடுன்னு சொல்லியிருந்தாங்க. அதான் கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க வேலைக்கு அனுப்புவீங்களா…….ன்னு டென்ஷன்ல வேற இருந்தேன்…’, அன்னைக்கு.

அப்பொழுதுதான் அவனுக்கும் நினைவு வந்தது.  அவள் அன்று அவனிடம் திருமணத்திற்கு பிறகு அவளை வேலைக்கு அனுப்ப சம்மதமா, எனக் கேட்டிருந்தது பற்றி நினைவு வந்தது.

அவளையே விடாது ஆழமாக பார்த்தவன், ‘’கல்யாணத்துக்கு பிறகு நமக்குள்ள பிரச்சினை எதுவும் வந்ததுன்னா……?’’

‘’வராது……..’’

பெருமூச்செடுத்து தன்னை சமன்படுத்தியவன், ‘’நல்லா யோசிச்சு பொறுமையா சொல்லு, இன்னைக்கே சொல்லனும்னு அவசரம் இல்ல.  ஏன்னா…., இது நம்ம இரண்டு பேரோட வாழ்க்கை’’.

கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போறதுல எனக்கு அந்த ஆட்சேபனையும் இல்ல.  ஆனால் குழந்தையெல்லாம் பிறந்த பிறகு போக முடியாத சூழ்நிலையும் வரலாம்.  அப்ப நான் வேலைக்கு போய்த்தான் தீருவேன்னு பிடிவாதமா இருக்கக் கூடாது.  அதையும் யோசிக்கோ…….

…………………

இரண்டு கைகளையும் அவனது மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவளையே பார்த்திருந்தான்.  ‘’இப்ப சொல்லு என்ன பிரச்சினை…..? ஏன் அழுத……..?’’ என்றான் விடாப்பிடியாக.

அ..து… எனத் தயங்கியவள், ஆரம்பத்திலிருந்து அவளைப் பற்றி சுருக்கமாக கூறி, செந்திலைப் பற்றியும் சொல்லியிருந்தாள்.  அவன் இன்று வந்து பள்ளியில் தன்னை பார்த்து பேசிச் சென்றதையும் கூறியிருந்தாள்.

அவள் சொல்ல சொல்ல தாடை இறுக கேட்டுக் கொண்டிருந்தவன், ‘’அவன் பேச பேச நீ கேட்டுட்டு வந்தியா……..?  அங்கேயே அவனை இழுத்து இரண்டு வச்சிருக்கனும், இல்லையா உங்க வீட்டுக்கு கூப்பிட்டு சொல்லியிருக்கனும்.  அதை விட்டுட்டு இப்படி தனியா வந்து உட்கார்ந்து அழுதுட்டு இருப்பியா…?’’ என்றான் கோவத்துடன்.

‘’சொல்றது ஈசி.  நடைமுறைல கஷ்டம்.  அவனை அறைஞ்சா……? சும்மா போயிடுவானா……? திருப்பி இன்னும் பெருசா ஏதாவது வம்பு பண்ணுவான். அது எதுக்குன்னு..? தான் ஒதுங்கி போறது.  வீட்ல சொல்லலாம் தான், எவ்வளவு பிரச்சினைய தான் என்னால அவங்க சமாளிப்பாங்க.  எனக்கே தர்மசங்கடமாயிருந்தது வீட்ல சொல்ல.

‘’நம்ம கல்யாணம் நடக்குதோ, இல்லையோ………? இனி அவன் வந்தான்னா, எனக்கு போன் பண்ணு’’. என அவனது போன் நம்பரை அவளிடம் கொடுத்தவன், அவளது போன் நம்பரையும் வாங்கிக் கொண்டான்.

‘’சரி வா….. வீட்ல ட்ராப் பண்றேன்’’.

இல்ல, ‘’நான் போய்க்கறேன்………………. நீங்க கிளம்புங்க’’.

ம்ப்ச், ‘’எப்படி?  இங்கயே தனியா உட்கார்ந்து இன்னும் அழுதிட்டு இருக்கப் போறியா………..?’’  அவன் வேற இன்னைக்கு வந்தான்னு சொல்றே.  எங்கயாவது போற வழில பார்த்து, ‘உன்கிட்ட மறுபடியும் ஏதாவது வம்பு பண்ணா, என்ன பண்ணுவ?  வா…. தனியா போக வேணாம், இன்னைக்கு நான் உன்னை வீட்டுல ட்ராப் பண்றேன்’ என அவளை அழைத்தான்

‘’எத்தனை நாள் என்னை ட்ராப் பண்ணுவீங்க…………..?  நான் தனியா தான வந்து போகனும், நானே போய்க்கறேன்’’.

அவளது கண்களை ஆழ்ந்து பார்த்தவன், ‘’நீ சரின்னு சொன்னா காலம் முழுக்க ட்ராப் பண்ண தயாராயிருக்கேன்’’.

அதுவரை வாதாடிவள், அதற்கு மேல் அவனைப் பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள்.

அவளது செய்கையில் புன்னகை வரப் பெற்றவன், ‘’போலாமா……….?’’ என்றான்.

‘’நான் இன்னும் சாமி கும்பிடல, கும்பிட்டு போலாமா…….?’’ என்றாள் தயக்கமாக.  சரி எனத் தலையசைத்தவன், ”அவளுடன் சேர்ந்து நடராஜரையும், சிவகாமியையும் சென்று தரிசித்துவிட்டு”,  அவளது வீட்டிற்கு புறப்பட்டனர்.

காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்தது அவனது பஜாஜ் பல்சர்.  இயற்கையே இசைந்து அவர்களை வாழ்த்துவதுபோல, பூந்தூரலாக மழைச்சாரல் தூவிக்கொண்டிருந்தது.

பைக்கில் செல்லும்போது எதிர்காற்று வேகமாக வீசியதில், அவளது படவையும், முடியும் அங்கும் இங்கும் காற்றில் அலைபாய்ந்தது.   முந்தானையை இழுத்து சொருகுவதற்குள், காற்றின் வேகத்தில், கைநழுவி முன்பக்கமாக பறந்து, மதுவின் கன்னத்தை உரசியது.

‘அச்சோ’ என பதட்டமாகி பார்த்தாள் மதுவை.  ஏதாவது தவறாக நினைத்துகொள்வானோ என பதட்டம் வந்தது அவளுக்கு.

அவளது அவஸ்த்தையை கண்ணாடியில் பார்த்து, குறுநகை புரிந்தவன்,  வண்டி ஓட்டிக்கொண்டே, ஒரு கையால் அவளது முந்தியை எடுத்து பின்பக்கமாக அவளிடம் கொடுத்தான்.

அவனிடம் இருந்து முந்தியை வாங்கி இடுப்பில் சொருகியவள்,  புடவையையும் பேகையும் ஒரு கையால் இறுக்கி பிடித்தாள்.

மறு கையால் காற்றில் அலைமோதிய முன் நெற்றி முடியை காதோரத்தில் எடுத்து விட்டு கொண்டே உட்கார்ந்திருந்தாள், மதுசூதனனின் பைக்கில்.

இவளையே கண்ணாடியில் பார்த்திருந்தவன் சிரித்துகொண்டே, சாலையில் கவனமானான்.

மனதில் இருந்த சஞ்சலங்கள் எல்லாம் மறைந்து, முகத்தில் தெளிவு வந்திருந்தது பூர்ணிமாவுக்கு.

நேயா சொன்னதை நினைத்து முகத்தில் புன்னகை அரும்பியது.  ‘’ உனக்கான ராஜகுமாரன் சீக்கிரமா வந்து, உன்னை அவன்கிட்ட இருந்து தூக்கிட்டு போயிடுவான்,’’ என சொன்னமாதிரி எனக்கான ராஜகுமாரன் இவன்தானோ…..  ஆனால் என்ன…, குதிரைக்கு பதிலா மோட்டார் சைக்கிள்ல கூட்டிட்டு போறான்…. என சிரித்துக் கொண்டாள்.

இவளது சிரிப்பை கவனித்த மதுசூதனன் என்ன…..? எனக் கேட்டான்.

ஒன்னும் இல்லை என தலையசைத்தாள்.  ‘’அடங்குடி…..’’,  ‘ இவனே இப்பதான் படிப்பு, வேலை, கொள்கைன்னு கொடி பிடிச்சுட்டு இருந்தவன், ஒருவழியா மலையிறங்கியிருக்கான்’’.  மறுபடியும் மலையேறிடப் போறான், என உற்சாக அருவியை கன்ரோல் செய்தாள்.

வெளி ஆடவனுடன் அமர்ந்து பயணிப்பது இதுவே முதன் முறை.  அவன் மேல் உரசாமல் உட்கார முயன்றாலும் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் போது அவனின் முதுகில் அவளுடல், அவன் மேல் படதான் செய்தது.

அதைப் பார்த்து அவளுக்கே சிரிப்பு வந்தது.  ஹம்ம் இதுவும் வித்தியாசமாதான் இருக்கு.  அவன் தன்னை திருமணம் செய்ய சம்மதித்ததற்கான உற்சாகமான மனநிலையில் பயணித்தவளின் மனம் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தது.

அவளை, சைட் மிர்ரரில் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தவன், அவளது ஒவ்வொரு முகமாற்றத்தையும்  பார்த்து உள்ளுக்குள் சிரித்து ரசித்துக் கொண்டே வந்தான்.

இதுவரை அந்நிய பெண் யாருடனும் பைக்கில் சென்றதில்லை.  அவனுக்கும் இது புது அனுபவமாகவே இருந்தது.  மனதில் இத்தனை நாள் போட்டு தன்னை அலைகழித்தவளுடனான,  நெருக்கமான பயணம் பரவசத்துடன் கூடிய சிலிர்ப்பை தந்திருந்தது மனதிற்கு.

அவளது வீட்டில் அவளை இறக்கிவிட்டவன், அவளிடம் தலையசைத்து விடைபெற்று கிளம்பி விட்டான். பூர்ணிமா வீட்டின் உள்ளே அழைத்ததற்கு கூட, அம்மா ‘அப்பாவ அழைச்சிட்டு முறையா…….. வரேன்’, என்று சொல்லிவிட்டு, புன்னகையுடன் சென்றிருந்தான்.

வீட்டிற்கு சென்றவள் மாதவியிடம் நடந்ததனைத்தையும் மறைக்காமல் சொல்லிவிட்டாள்.  மாதவிக்கு செந்திலின் மீது ஆத்திரமாக வந்தது.  நீ ஏன்? அப்பவே போன் பண்ணி சொல்லல….., என கோவப்பட்டாள் பூர்ணியிடம்.

அவன் சொன்னா நீ அநாதையாகிடுவியா……….?  உன்னை அப்படிதான் நாங்க பார்த்துகிட்டோமா……….? என பூர்ணிமாவிடமும் பாய்ந்தாள்.  இருக்கட்டும் உங்க மாமாகிட்ட சொல்லி, அவனுக்கு ஒரு வழி பண்றேன்.

பொறுத்து போனா அந்த நாய் என்ன வேணா செய்வானா……..?  இது எல்லாம் அவனுக்கு யார் குடுக்கற தைரியம்….? என தம்பி மனைவிக்கு போன் போட்டு காச்சி எடுத்துவிட்டாள்.

இனி செந்தில் இங்கு வந்தாலோ…..? பூர்ணியை ஏதாவது தொந்தரவு கொடுத்தாலோ…..?  யோசிக்காமல் போலீஸில் கம்ப்ளைன்ட் செய்து பிடித்து கொடுத்துவிடுவேன் என மிரட்டியிருந்தாள் மாதவி.

ஏதோ தம்பி பொண்டாட்டியாச்சேன்னு, ‘’உன் முகத்துக்காக பார்த்தா ரொம்ப குடைச்சல் குடுக்கறான்.  அவன்கிட்ட சொல்லிவை……., எங்க வந்து…., என்ன பேசிட்டு போறான்?  எங்களுக்கு இங்க ஆளுங்க இல்லையா……..?”

எங்க ஆளுங்களுக்கு ”இவன் இப்படி தொந்தரவு குடுக்கறான்னு சொன்னாலே, முதல்ல கை கால முறிச்சு விட்டுருவாங்க.  உங்களை மாதிரி வாய் வார்த்தையா பேசிட்டு திரியமாட்டாங்க……..’’ என பொரிந்து தள்ளியிருந்தாள்.

தேவகிக்கே மாதவியின் கோவத்தில் வெடவெடத்து வேர்த்திருந்தது.  தம்பி சிதம்பரத்திற்கு சென்று வந்தது எதுவும் தெரியாது அவளுக்கு.  ‘’இவனுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா……..?  ஏன்? அவள் பின்னாடியே அலைஞ்சு…, என உயிரை வாங்கறான்’’ என மனதில் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

இதை முதல்ல அப்பாகிட்ட சொல்லனும் என்று உடனே அவளது தந்தைக்கு போன் செய்து மாதவி பேசியதை ஒன்று விடாமல் சொல்லியிருந்தாள்.  ‘’அவனை அடக்கி வைங்கப்பா…… இங்க எனக்கு பிரச்சினையாயிடும்’’ என்றாள் பயத்துடன்.  இது எல்லாம் தெரிந்தால் அவளது கணவன் பாண்டியன் நிச்சயம் கோவப்படுவான் என தெரியும்.

பூர்ணி இங்கிருக்கும் போதே செந்திலை கண்டித்திருக்கிறான் பாண்டியன்.  அவளுக்கு விருப்பம் இல்லைனா கம்பெல் பண்ணாத என்று.  இப்பொழுது செந்தில் சிதம்பரம் வரை சென்று பூர்ணியிடம் வம்பு செய்து வந்திருப்பது தெரிந்தால் எங்கே தன்னிடமும் கோவித்துக் கொள்வானோ என பயந்திருந்தாள் தேவகி.

சங்கர் எப்பொழுதும் வருவதைவிட ,அன்று சற்று முன்னதாகவே வீட்டிற்கு வந்திருந்தான்.  வீடு பூட்டியிருந்தது.  ”எங்கே போயிட்டாள் இவள்?”  ஏதாவது கடைக்கு போயிருக்காளோ என யோசனையுடன் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

இப்பொழுது எல்லாம் பக்கத்தில் காய்கனி கடைக்கு பானுவே நேரில் சென்று காய்கறி மற்றும் பழங்கள், கீரைகள் என வாங்கி வரும் அளவுக்கு முன்னேறியிருந்தாள்.  சங்கரும் அவள் கேளாமலே வீட்டு செலவுக்கு என பணம் கொடுக்க ஆரம்பித்திருந்தான்.

கடைக்குதான் சென்றிருக்கிறாள் போல என எண்ணியிருந்தவனுக்கு மாலை ஏழு மணி ஆகியும் அவள் வராமல் போனதால் எங்க போயிருப்பா….. என மண்டைக் காய்ந்தது.

மேலும் அரைமணி நேரம் சென்று காலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தான்.  வெளியில் பானு கையில் தேங்காய் பழம் அடங்கிய கவருடன், நெற்றியில் திருநீறு, குங்குமம், தலையில் பூ என மங்களகரமாக நின்று இருந்தாள் சேலையில்.

”ஓஹ்……… அம்மணி கோவிலுக்கு போயிட்டு வராங்களா……….?” என ஊகித்தவன் அவள் உள்ளே வர வழிவிட்டு ஒதுங்கி நின்றான்.  பூஜை அலமாரியில் கொண்டு வந்து தான் அர்ச்சனை செய்த தேங்காய் பழங்களை வைத்தவள், உள்ளே சென்று விட்டாள்.

அவளையே பார்த்திருந்தவன், தன்னிடம் விபூதி, குங்குமப் பிரசாதம் கொண்டு வந்து கொடுப்பாள் என பார்த்திருந்தான்.  அவள் கண்டு கொள்ளாமல் சென்றதும், ஏமாற்றமாக இருந்தது.

‘’திமிரு பிடிச்சவ.  பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தா என்ன?’’ என கறுவிக் கொண்டான் மனதில்.  இவன் உடல்நிலை சரியில்லாத போது எல்லாம் கோவிலுக்கு சென்று வந்தால், அவனிடம் பிரசாதம் கொண்டு வந்து நீட்டுவாள்.  அது போலவே இப்பொழுதும் எதிர்பார்த்தான்.

‘’ராச்சஷி மதிக்கறாளா பாரு?’’ என முனகிக் கொண்டே தானே சென்று பிரசாதத்தை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு வந்து அமர்ந்தான்.

சேலையை மாற்றி கொண்டு வந்தவள், கிட்சனுக்கு சென்று சப்பாத்திக்கு மாவு எடுத்து பிசைய ஆரம்பித்தாள்.  கிட்சனிற்கு எழுந்து சென்றவன் காப்பி வேணும் என நின்றான்.  இவனை நிமிர்ந்து பார்த்து சரி என்றவள், அடுப்பில் பாலைக் காச்ச ஆரம்பித்தாள்.  அவள் பால் காச்சி, டிகாஷன், சர்க்கரை சேர்த்து காப்பியை கொடுக்கும் வரை அங்கேயே நின்றிருந்தான் அவளையே பார்வையிட்டுக் கொண்டு.

‘’மனுஷன் ஒருத்தன் இங்க நின்னுட்டு இருக்கானேன்னு திரும்பி பார்க்கறாளா……….? ராச்சஷி’’ என கடிந்து கொண்டான் மனதிலேயே.  இத்தனை நாள், தான் அவளை கண்டு கொள்ளாமல் இருந்தது எல்லாம் அவன் கணக்கில் எடுக்கவேயில்லை.

காப்பியை வாங்கிக் கொண்டு ஹாலுக்கு வந்தவன் டீவியில் மியூஸிக் சேனலை வைத்துப் பார்த்து கொண்டிருந்தான்.  சரசு அவனைக் கூப்பிட்டு இருந்தார்.

போனை எடுத்தவன். ‘’சொல்லுங்க ம்மா…… எப்படியிருக்கீங்க……?’’

‘’நல்லாயிருக்கேன்டா………, பானு இருக்காளா……?”

”ஹ்ம்ம்…….. கிட்சன்ல இருக்கா……..’’

‘’பேங்க் எக்ஸாம்ல என் மருமவள் பாஸாகிட்டாளாம் டா………… என்றார் பெருமையாக’’.

‘’ஓஹ்……. என சுருதி குறைந்தது அவன் குரலில்.  அதான் கோவிலுக்கு போயிட்டு வந்தாளா……..?  என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா என்னவாம்? என அவன் மனது சுணங்கியது’’.

அவனை வெறுப்பேத்துவது போல பானுவை பற்றி பெருமையாக கொஞ்ச நேரம் பேசியிருந்து விட்டு போனை வைத்தார்.  சமைத்ததை எல்லாம் பானு எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.  அவளையே பார்த்திருந்தவனுக்கு அவள் தன்னிடம் பேசாதது, தன்னை மதிக்காதது போல கோவத்தைக் கொடுத்தது.

அவனாக பேச முயன்றாலும் அவளிடம் இருந்து எந்த பதிலும் வருவதில்லை.  சொல்வதை செய்வாள்.  அத்துடன் சரி.  இவனிருக்கும் இடத்தில் இருப்பதைக் கூட தவிர்த்திருந்தாள்.

அவன் அடிப்பட்ட அன்று பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளது மனதை கீறி, கிழித்து, பதம் பார்த்திருந்தது.  அவன் குணமாகும் வரை அவனுக்கு பணிவிடை செய்தவள், அத்துடன் ஒதுங்கியிருந்தாள்.

பானு சங்கரிடமிருந்து ஒதுங்க ஒதுங்க அவனுக்கு ஆவேசம் தான் எழுந்தது.  அதுவும் இன்று அவள் பேங்க் எக்ஸாமில் பாஸாகியிருப்பதை தன்னிடம் சொல்லாமல் இருந்ததை நினைத்து கோவம் அதிமாக வந்தது.

அம்மா போன் பண்ணி எனக்கு சொல்றாங்க.  ‘அங்க இருக்கவங்களுக்கு போன்ல சொன்னவ, பக்கத்துல இருக்க எனக்கு சொல்ல முடியல’, என ஆவேசம் வந்தது.  அதில் சாப்பிடப் போகாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.

ஒரு மணி நேரம் சென்று வந்தவள், அவன் சாப்பிடாமல் டேபிளில் தான் வைத்தது எல்லாம் அப்படியே இருப்பதைப் பார்த்து அவனைத் திரும்பி பார்த்தாள்.  அவளைக் கண்டு கொள்ளாமல் டீவியிலேயே பார்வையைப் பதித்திருந்தான்.

அவளும் சாப்பிடாமல் திரும்ப சென்றுவிட்டாள் அறைக்கு.  மறுநாள் காலையிலும் அவள் செய்து வைத்ததை தொடாமல் அலுவலகத்துக்கு சென்றுவிட்டான் கோவத்தில்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!