Skip to content
Post Views: 8,725
தெய்வானைக்கு ஆத்திரம் அடங்கவில்லை ‘என்ன வார்த்தை எப்படிப்பட்ட வஞ்சம்’ ராஜேந்திரன் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் செவியில் ஒலித்தது.
“அம்மா” என்று அருகில் வந்த மூத்த மகளைப் பார்க்காமல் திரும்பிக்கொண்டவர் “போயிடு என் கண்முன்னால வராத” என்றார் பல்லைக் கடித்துக்கொண்டு.
“எனக்கு மாமாவைப் பிடிச்சது எப்படிமா தப்பாகும்” என்றாள் பூஜா கண்ணீரோடு, உண்மைதானே அவளுக்குப் பிடித்ததில் தவறில்லையே… அவளைப் பிடித்து அருகில் அமர்த்திய தெய்வானை “உனக்குப் பிடிச்சதுல தப்பில்லை ஆனா இந்த மனுஷனுக்கு பொண்ணா பொறந்துட்டு ஆசைப்பட்டியே அதுதான் தப்பு”.
“உங்க அப்பாக்கு என்னைக் கட்டிக்குடுத்து என் குடும்பம் படுற பாடு போதாதா உன்னை அந்த வீட்டுக்கு வாழ அனுப்பினா அங்க இருக்குறவங்க ஒரு நாள் கூட நிம்மதியா வாழ முடியாது, பொழுதுக்கும் ஒரு ஏழரைய கூட்டி பிரச்சனை பண்ணுவாரு உங்க அப்பா, இப்போ பேசினதை கேட்டில என்ன மாதிரி மனுஷன் இந்த ஆளு உன்னோட வாழ்க்கையை பத்திலாம் அந்த மனுஷனுக்கு கவலை கிடையாது அவரை மதிக்காம திரியற இவர் பாஷயில சொல்லனும்னா திமிர் பிடிச்ச என் அண்ணன் மகனை அவர் முன்னாடி மண்டிபோட வைக்க என்ன வேணா பண்ணுவாரு”.
Advertisement
“இது நடக்காது பூஜா இப்படியொரு எண்ணம் வரக்கூடாதுன்னு தான் மொறை பையன் கட்டிக்குற மொறை இப்படி எதுவுமே நாங்க பேசினதில்ல, எனக்கு ஆசை இல்லனு நீ நெனைக்குறியா என் பிறந்த வீட்டுக்கு நீ வாழப்போனா அதைவிட பெரிய சந்தோசம் என்னடி இருக்கு எனக்கு, அதும் சேனாவை மாதிரி மாப்பிளைனா யாருக்குடி கசக்கும் அப்படி இருந்தும் என் சொந்த அண்ணன் மகனுக்கு நானே வெளில பொண்ணு தேடுறேன் ஏன்? அவன் வாழ்க்கைல எங்கேயுமே உன் அப்பா இருக்க கூடாது”.
“எல்லாத்தயும் தொடச்சு தூக்கி போட்டுட்டு ஞாயித்துக்கிழமை பொண்ணு பார்க்க வர மாப்பிளைக்கு கழுத்த நீட்டத் தயாரா இரு, உன் அப்பா எல்லாத்தயும் முடிவு பண்ணிட்டாரு அன்னைக்கு வரவன்தான் உனக்கு… நாம நெனச்சா இத மாத்த முடியாது போ உன் ரூம்க்கு போ” என்றவர் தளர்வான நடையோடு எழுந்து சென்றார்.
பூஜாவுக்கு என்ன செய்ய என்றே தெரியவில்லை அப்பா சொல்வது எந்தக் காலத்திலும் நடக்காது நன்றாகவே தெரியும் என்றாலும் முயற்சி செய்யாமல் விட்டுவிட தோன்றவில்லை ஒரு முறை மாமாவிடம் பேசிப் பார்க்கலாமா அப்பா இப்படி சொல்கிறார் என்று அவரிடம் கூறிவிடலாம், இருவருக்கும் எப்போதும் முட்டிக்கொள்ளும் இவர் இப்படி பேசியது தெரிந்து கோபத்தில் ரோஷத்தில் அப்பாவைப் பழிவாங்க என் கழுத்தில் தாலி கட்டிவிட்டால் முயன்று பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.
Advertisement
வெளியில் சென்றிருந்தவன் மாலையே வீட்டிற்கு திரும்பியிருந்தான், சென்ற இடத்தில் தாமதம் ஆனதால் ஓஸ்கருக்கு அழைத்து மயூரியை அழைத்துச் செல்லக் கூறியிருந்தான், அதோடு வீட்டிலும் அழைத்து அவளுடைய தாத்தா வருவார் என்று கூறியிருந்தான்.
Advertisement
அவளும் தயாராகி நின்றிருந்தாள் ஆனால் மயூரி வீட்டின் ட்ரைவர் அன்று வேறுவிஷயமாகச் சீக்கிரம் சென்றுவிட அவனே அழைத்துவருவதாகக் கூறி வந்துவிட்டான்.
“என்ன சேனா தாத்தா வருவார் சொன்ன” என்றார் கானகம்.
“இல்ல சித்தி அவரால வரமுடியல நானே விட்டுட்டுவரேன்” என்று அழைத்துச்சென்றான், அனைவரிடமும் கூறிக்கொண்டு விடைபெற்றாள்.
Advertisement
காலை வீட்டிற்கு வந்தபோது கூந்தல் கட்டப்படாமல் விரிந்து கிடந்தது, இப்பொழுது அழகாகப் பின்னலிட்டு மல்லிச்சரம் தவழ்ந்தது நெருக்கக் கட்டிய குண்டுமல்லியின் இடையில் மரிக்கொழுந்தும் இடம் பிடித்திருந்தது, அவனிடம் முகம் திருப்பி அமர்ந்திருந்தாள் அந்தச் செய்கையில் அவன் இதழ்கள் புன்னகைத்தது.
வளைந்து நெளிந்து
போகும்பாதை மங்கை மோக
கூந்தலோ மயங்கி மயங்கி
செல்லும் வெள்ளம் பருவ
நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே
கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது காடுகள்
மலைகள் தேவன் கலைகள்
என்று யேசுதாஸ் உருகி பாடிக்கொண்டிருக்க இதழ்களைக் கடித்து அமர்ந்திருந்தாள் மயூரி.
காற்று ஈரப்பதத்தோடு வீசிக்கொண்டிருக்க முதலில் தெரியாத குளிர் இப்பொழுது மெல்ல மெல்ல மேனியை சிலிர்க்க வைத்தது, காற்றில் எங்கும் பனிமழையின் வாசம்… அவள் மெல்ல உடலைச் சுருங்குவதை கண்டவன் கண்ணாடியை ஏற்றிவிட்டான், இப்பொழுது அந்த ஜீப் முழுவதும் மல்லி மரிக்கொழுந்தின் வாசம்.
அமைதியான பயணத்தின் இடையில் சட்டென்று ஓரிடத்தில் வண்டியை நிறுத்தினான், அவள் திரும்பிப்பார்க்க “டூ மினிட்ஸ்” என்று குதித்திறங்கியவன் ஜீப்பின் பின்னில் சென்று கீழே குனிந்தான் நிமிர்கையில் அவன் கையில் அலைபேசி ஒன்று இருந்தது, இதுஎப்படி! என்ற ஆச்சர்யத்தில் அவனையும் சென்டர் கன்சோலில் கிடக்கும் அவன் அலைபேசியையும் மாறி மாறிப் பார்த்தாள்.
மயூரி அவனையே பார்த்திருந்தாள் ‘அப்படி யார் கூப்பிட்டுருப்பா இவ்ளோ ரகசியமா பேசுறாரு லவ்ரா இருக்குமோ’ என்ற மனசாட்சியின் மண்டையில் கொட்டியவள் ‘அப்படிலாம் இருக்காது இது வேற என்னமோ’ என்ற எண்ணத்தோடு ரியர் வியூ மிரரில் அவன் முகத்தை ஊன்றிக் கவனித்தாள்.
‘லவ்வர்கிட்ட இப்படியா அட்டென்ஷென்ல பேசுவாங்க என்னவா இருக்கும்’ என்ற யோசனையோடு நகம் நடிக்க அழைப்பை ஏற்றவன் “சர்” என்றான் விறைப்பாக.
“இன்விடேஷன் டீடைல்ஸ் பக்காத்தானே மாற்றம் இருக்கா” என்றார் அவர்.
“நோ சர் பக்கா”.
“ஒகே சோ என்னைக்கு அடிக்க ஆரம்பிக்கறது”.
“லீவு நாள்ல அடிக்கலாம் நல்ல நேரம் பார்த்து… அப்போதான் இன்னும் நெறய ஆர்டர் வரும்” என்றான் அவன்.
“சரி நல்ல நேரம் பாத்துட்டிங்களா”.
“ஹ்ம்ம் உதயத்துக்கு நாலு மணி நேரம் முன்ன வெச்சுக்கலாம்”
“அப்போ சரியான நேரத்துக்கு வந்துடுங்க” என்றவர் அலைபேசியை அணைத்துவிட, ஒரு நொடி நின்று விழிகள் மூடி ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவன் குனிந்து தன்னுடைய வலது காலின் முட்டிக்கு கீழே கட்டியிருந்த லெக் கால்ப்பில் (போன் வைக்கும் சிறிய பெல்ட்) மீண்டும் அதைப் பத்திரப்படுத்தினான்.
இருளில் அவன் விழிகள் சுற்றத்தை ஆராய்ந்தது மனதிற்குள் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கத் திரும்பி மயூரியை பார்த்தான் அவள் அமைதியாக வெளியில் பார்த்து அமர்ந்திருந்தாள், வேகநடையில் சென்று வண்டியை இயக்கியவன் விழிகள் மிரரில் அழுத்தமாகப் பதிந்தது.
‘நிச்சயம் யாரோ பின்தொடர்ந்து வருகிறார்கள்’ வீட்டிலிருந்து புறப்பட்டபிறகு இடைவெளி விட்டு வந்துகொண்டிருந்த வாகனம் ஒன்று அவன் வண்டியை நிறுத்தியதும் காணாமல் போயிருந்தது, இப்பொழுது மெய்ன் வழியிலிருந்து எஸ்டேட் செல்லும் பிரதான சாலையில் ஏறியிருந்தான், மேலேயும் மரங்கள் கீழே சரிவிலும் மரங்கள் பழமையான மரங்களினூடே சூரிய வெளிச்சம் கூடக் குறைவாகவே விழும்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக உயிரைக் கையில் பிடித்து எரிந்துகொண்டிருந்தது சில ஒளிவிளக்குகள் சிறிது நேரத்தில் தூரே இரண்டு வெளிச்ச புள்ளிகள் தெரிந்தது, வழி விட்டுப் பார்ப்போம் கடந்து செல்வதானால் செல்லட்டும் இல்லையேல் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தவன் வண்டியை வலப்புறமாகக் கொஞ்சம் ஒதுக்கி ஓட்டினான்.
அவர்களை முந்திச்செல்ல முயன்ற அந்த வாகனம் அருகில் வருகையில் வேகம் குறைக்க நொடி பொழுதில் மயூரியை தன்னை நோக்கி இழுத்திருந்தான், வாள் ஒன்று ஜீப்பின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு அவன் கையைப் பதம் பார்த்தது, அவனை இறுக்கமாக அனைத்திருந்த மயூரியிடமிருந்து “தேவா” என்ற அலறல் கேட்க அவள் தலையில் சூடியிருந்த பூவோடு முன்பக்க கண்ணாடியையும் உடைத்துக்கொண்டு ரோடில் சென்று விழுந்தது வீச்சருவாள்.
அவள் உடல் நடுக்கம் குறையவில்லை இதே நிகழ்வுதான் எட்டு வருடங்களுக்கு முன்பு அவளை அவசரமாக இங்கிருந்து அனுப்ப காரணமாகியது, வந்து மூன்று நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் மீண்டும் அதே நிகழ்வு.
“மயூ… மயூ இங்கபாரு” என்றான் அவள் முகத்தை நிமிர்த்தி “பயமாயிருக்கு தேவா” என்றவள் விழிகள் நிறைய மீண்டும் அவளைத் தன்னுள் இறுக்கிக்கொண்டான், அன்றும் இப்படித்தானே தன மார்பில் புதைந்துகொண்டு பயத்தில் உடல் நடுங்க அழுதாள் “எனக்குச் சாகப் பயமாயிருக்கு தேவா என்னை விட்டுட்டு போகாதே” என்று.
கையில் வலி அதிகமானது அவசரமாகச் சட்டையின் மடிப்பை இறக்கிவிட்டு காயத்தை மறைத்தவன் “மயூ இங்கபாரு ஒண்ணுமில்ல தேவா இருக்கேன் உன் தேவா இருக்கேன், அங்க கிராண்ட்பா உன்னைக் காணும்னு பயந்திருப்பார் வீட்டுக்குப் போலாம், அவர்கிட்ட ஒன்னும் சொல்லாத சரியா” என்க.
பயம் போகவில்லை முகம் தெளியவில்லை என்றாலும் அவனிடம் சம்மதமாகத் தலை அசைத்தாள், தன்னை நிதானப்படுத்திக்கொண்டு அவள் வீடு நோக்கிச் சென்றான் ஜீப்பை உள்ளே கொண்டுசெல்லாமல் கொஞ்சம் தள்ளியே நிறுத்திக்கொண்டான், அவளை இறக்கிவிட்டவன் “போ எதுவும் காமிச்சுக்காத” என்க அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தாள்.
ஒஸ்கருக்கு அங்கிருந்தே கையசைத்தவன் அப்படியே கிளம்பிவிட்டான் “வாட் ஹப்பெண்ட் ஐரிஸ் ஏன் டல்லா இருக்க” என்றார் பேத்தியைப் பார்த்து “நத்திங் கிராண்ட்பா டயர்ட்… தலைவலி நான் ரூமுக்கு போறேன்” என்று மாடிக்குச் செல்ல அவரும் பெரிதாக எடுக்கவில்லை.
திரும்பி வந்துகொண்டிருந்தவன் மூளைக்குள் கேள்விகள் குடைந்துகொண்டிருந்தது ‘யார்? என்ன காரணம் எங்குச் செல்கிறாள் எப்பொழுது செல்கிறாள் இது எல்லாம் யார் தகவல் கொடுப்பது, கடைசியாக அவள்மீது தாக்குதல் நடந்த போதே அவனுக்கு ஒருவர் மீது சந்தேகம் வந்திருந்தது இப்பொழுது அது இன்னும் வலுப்பட்டது, இத்தனை ஆண்டுகள் லண்டனில் இருந்தபோது இந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை… அப்படியானால் அவள் இங்கிருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை’ என்ற யோசனையில் இருந்தவனுக்கு தெரியவில்லை அவள் அவனுடன் இருப்பதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று.
கையின் காயம் கொஞ்சம் ஆழமாகவே இருக்க நேரே பக்கத்தில் இருக்கும் சிறிய மருத்துவமனை சென்றுவிட்டான் வீட்டிற்கு வந்தும் யாரிடமும் ஒன்றும் கூறவில்லை குளித்துப் படுக்கைக்கு வர, மீண்டும் மயூரியின் நினைவே நிச்சயம் தூங்கியிருக்க மாட்டாள் அலைபேசியை எடுத்தவன் அவள் அலைபேசி எண்ணைப் பார்த்தே அமர்ந்திருந்தான்.
இருவரிடமும் மற்றவரின் எண் உள்ளது, இத்தனை வருடத்தில் ஒருமுறை கூட அழைத்ததில்லை இருவருமே… அனைவரிடமும் பேசுவாள் ஆனால் அவனை அழைக்கமாட்டாள்.
மயூரியும் அலைபேசியை கையில் வைத்தே அமர்ந்திருந்தாள் ‘வீட்டிற்கு சென்றிருப்பானா’ அழைக்கச் சொல்லி மனம் முண்டியது இருவருமே நெஞ்சடைக்கும் வலியோடு தவித்திருக்க அழைத்துவிட்டாள் அவளே… இருவரிடமும் பேரமைதி என்ன பேச வார்த்தைகளுக்குப் பஞ்சமாகிப்போனது.
“மயூ” என்று அவனும் “தேவா” என்றவளும் ஒன்றாக அழைத்து நிறுத்தினர் “ஒன்னும் பிரச்சினையில்ல போய்த் தூங்கு” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
‘யார் நீங்கள் என்ன வேண்டும் உங்களுக்கு என்னிடம் எதைத்தான் எதிர்பார்க்கிறீர்கள்’ என்று தன்னை கொல்ல துடிப்பது யார் என்று தெரியாமல் மனதோடு போராடினாள் மயூரி “என்னடா வேணும் உங்களுக்கு இந்தச் சொத்து வேணுமா தரேன் விட்டுடுங்க, எனக்கு வாழனும் என் தேவா கூட வாழனும் எனக்குச் சாக வேண்டாம்” என்றவள் கண்ணீரை காண அங்கு யாரும் இல்லை.
error: Content is protected !!