அன்னை மற்றும் தங்கைகளுடன் சேர்ந்தே நயந்தினி பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வந்தாள். வெளிர் மஞ்சள் நிற லெஹங்காவும் வாடாமல்லி நிற தாவணியும், புது வகையான ஒரு பின்னலில் அழகு பதுமை போல தயாராகி வந்தவளை நிகர்வேலன் தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டான். ஆனாலும் அவன் இருக்கும் சூழ்நிலையை உணர்ந்து அவளிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டாலும், அது அவனுக்கு மிகவுமே கடினமாக தான் இருந்தது.
Advertisement
அவர்கள் அங்கு வந்ததும் சாகரி நளினியை தன் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தவென அழைத்து சென்றுவிட, மொழியும் மதியும் அவர்களின் நண்பர்களை பார்த்ததும் அவர்களோடு சென்று இணைந்து கொண்டனர்.
Advertisement
தனித்து விடப்பட்ட நயந்தினி ராகவியை தேட, அவளோ அவளின் வருங்கால கணவன் மாதேஷோடு நின்றிருந்தாள். அவர்களோடு மாதேஷின் உறவினர்கள் சிலரும் நின்று கொண்டிருக்க, அங்கே செல்ல விரும்பாமல் அந்த இடத்தை சுற்றி பார்வையிட்டவள், ரோஹனும் நிகர்வேலனும் ஒன்றாக நிற்கவே, நின்றிருந்த இடத்திலிருந்து அவர்களை பார்த்து கையசைத்தவள், உடனே அவர்களிடம் சென்றாள்.
Advertisement
அவள் தன்னை தேடி வருகிறாள் என்பதே நிகர்வேலனுக்கு எங்கோ வானத்தில் பறக்கும் உணர்வு. அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவளைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தான்.
Advertisement
நயந்தினி அருகில் வந்ததும், “ஹே நயனி நீயா இது? தூரத்தில் பார்த்து என்னடா என்ட்ரன்ஸ்ல வணக்கம் சொல்ற பொம்மையை கொண்டு வந்து பார்ட்டிக்கு நடுவில் நிறுத்தியிருக்காங்கன்னு நினைச்சேன். அப்புறம் என்னடா அது வேற நடக்குதுன்னு பயந்தே போயிட்டேன் தெரியுமா?” என்று ரோஹன் அவளை கேலி செய்யவும்,
“உன் கண்ணில் ஏதோ கோளாரு இருக்கு, முதலில் ஏதாவது கண் டாக்டரை போய் பாரு டா லூஸு,” என்று நயந்தினி அவனிடம் கோபப்பட, நிகர்வேலன் அதை புன்னகையுடன் பார்த்தப்படி நின்றிருந்தான்.
நயந்தினி பேசியதற்கு, “வந்த இத்தனைநாளில் இன்னைக்கு தான் நீ பழைய நயனியா தெரியற, என்னிடம் இப்படித்தான் பேசுவ, ஆனா இந்த ரெண்டுநாளா புதுசா பார்க்கிற ஆளிடம் பேசறது போல இருந்தது உன்னோட பேச்சு,” என்று ரோஹன் சொல்லவும்,
“நான் எப்போதும் போலத்தான் இருக்கேன் டா, உனக்கு தான் வித்தியாசமா தெரிஞ்சிருக்கு,” என்று நண்பனிடம் கூறினாலும், அவள் முன்போல் இல்லை என்பது அவளுக்கே கொஞ்சம் புரிய ஆரம்பித்திருந்தது.
பின், “நான் என்ட்ரன்ஸ்ல வைக்கிற பொம்மை மாதிரியா இருக்கேன். நீங்களே சொல்லுங்க,” என்று அவள் நிகர்வேலனிடம் கேட்க,
அதற்கு அவனோ, “நீ சொன்னமாதிரி ரோஹன் கண்ணில் கொஞ்சம் கோளாரு தான், இந்த கல்யாணம் முடிஞ்சதுமே அவனை நானே ஹாஸ்பிட்டலில் கூட்டிட்டுப் போய் காட்றேன். ரோஹன் சொன்னமாதிரி நீ என்ட்ரன்ஸ்ல வைக்கும் பொம்மை மாதிரி இல்லை. பார்பி டால் மாதிரி இருக்க,” என்று சொல்ல,
ரோஹன் அதற்கு சிரித்து வைத்தவன், “ஆக நீ பொம்மை என்பது கன்ஃபார்ம் ஆகிடுச்சா,” என்றான்.
“என்ன நீங்க, இவனோட சேர்ந்து நீங்களும் என்னை கேலி செய்றீங்க,” என்று நயந்தினி சிணுங்கவும்,
“இவன் தான் உன்னை கேலி செய்றான் நயனி. நான் உண்மையை தான் சொல்றேன். அந்த அளவுக்கு நீ அழகா இருக்க, இந்த ட்ரஸ் உனக்காகவே டிஸைன் செய்தது போல இருக்கு,” என்று நிகர்வேலன் கூற,
“நீங்க கேலி செய்ய மாட்டீங்கன்னு கொஞ்சமா நம்பறேன்.” என்றவள்,
“இது உங்க ஷோரூம்ல எடுத்தது தான், அம்மா எப்போதும் ஷாப்பிங்க்கு எங்களை அங்க தான் கூட்டிட்டுப் போவாங்க, ஆனா நான் மட்டும் எப்போதும் அங்க எடுக்க மாட்டேன். ஆனா இந்தமுறை கலெக்ஷன்ஸ் சூப்பரா இருக்கவும் எடுத்தேன்.” என்று அவள் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே போனவள், பின் உண்மையை உளரிக் கொண்டிருக்கிறோம் என்று நாக்கை கடித்துக் கொண்டாள்.
அவள் சொன்னதை கேட்டு, “ஏன் எங்க ஷோரூம்ல ஏன் நீ ஷாப்பிங் செய்ய மாட்ட?” என்று ரோஹன் கேட்க,
“அது, அது,” என்று அவள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருதிருவென விழிக்கவும்,
“அது ஏன் தெரியுமா? ஏன்னா அந்த ஷோரூம் என்னோட பேரில் இருக்கே அதனால் தான்,” என்று சொன்ன நிகர்வேலன்.
“அப்படித்தானே நயனி,” என்று அவளிடம் கேட்க,
“ஏன் நிகர் மாம்ஸ், ஷோரூம் உங்க பேரில் இருக்கறதுக்கும் நயனி அங்க ஷாப்பிங் செய்யாததுக்கும் என்ன சம்பந்தம்?” என்று ரோஹன் கேட்டான்.
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல ரோஹன், நான் அடிக்கடி ஷாப்பிங் செய்ய மாட்டேன்னு சொல்ல வந்தேன். இவங்க அதை வச்சு விளையாட்றாங்க,” என்று ஏதோ சமாளித்தாள்.
அதற்குள் ரோஹனை யாரோ அழைக்க, அவன் அங்கிருந்து சென்றுவிடவும், “என் பேர் இருக்கறதால அந்த ஷோரூம்ல டிரஸ் கூட எடுக்கமாட்டேன்னு சொல்ற அளவுக்கு என்மேல கோபமா?” என்று நிகர் கேட்க,
“அப்படியெல்லாம் இல்லையே, நான் இப்போ ரோஹனிடம் சொன்னது தான் ரீஸன். நீங்க ஏதாவது நினைச்சுக்காதீங்க,” என்றாள் நயந்தினி.
“ரோஹன்க்கு நடந்தது தெரியாது. ஆனா எனக்கு தெரியுமே, உன்னை அந்த அளவுக்கு அப்போ பேசியிருக்கேன். சாரி.” என்று அவன் மீண்டும் மன்னிப்பு கேட்க,
“எத்தனைமுறை மன்னிப்பு கேட்பீங்க, முன்ன உங்கமேல கோபம் இருந்தது தான், ஆனா இப்போ உங்க மேல எந்த கோபமும் இல்லை. இங்க உங்களைப் பார்த்ததும் கைக்காட்டிட்டு நானா தானே கிட்ட வந்தேன். ஆனா என்னைப் பார்த்தும் நீங்க தான் கண்டுக்கவே இல்லை.” என்று அவள் குறைபடிக்க,
இங்கே அவர்களின் உறவும் நட்பும் அதிகம் இருக்கிறார்கள். அதில் யாராவது இவன் நயந்தினியை கூர்ந்து கவனிப்பதை பார்த்தால் கூட அதை ஏதாவது கதைக்கட்டி விட்டுவிடுவர் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும், அதனால் தான் அவளை கண்டுக் கொள்ளாதது போல் இருந்தான். இப்போது ஒன்றாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாலும் அதே கதை தான், அதைப்பற்றி சொன்னால் அதனால் அவள் விலகிப் போகவும் கூட வாய்ப்பிருக்கிறது என்பதால் அதை வெளிப்படையாக சொல்ல முடியாமல்,
“அப்படியெல்லாம் இல்லை. சில பொண்ணுங்க தனியா இருக்கும்போது நல்லா பேசுவாங்க, ஆனா நிறையப் பேர் இருக்கும்போது கண்டுக்காத மாதிரி இருப்பாங்க, அப்படியிருக்கும்போது நானா உன்னை கூப்பிட்டா எப்படி எடுத்திப்பீயோன்னு தான்,” என்று அவன் ஒரு காரணத்தை சொல்ல,
“நீங்க சொல்றதும் சரிதான், அம்மா என்ன சொல்வாங்களோன்னு கொஞ்சம் பயமா தான் இருக்கும், ஆனா அம்மா உங்களோட பேசிட்டு இருந்ததை பார்த்து ஒன்னுமே சொல்லல, அதுவும் இல்லாம உங்களை புகழ்ந்து எல்லாம் பேசினாங்க, அதான் தைரியமா உங்களிடம் பேச வந்தேன். அதில்லாம நாம தப்பு செய்யலன்னா பயப்படக் கூடாதுன்னு நீங்க தானே சொன்னீங்க,” என்று அவள் சொல்லவும்,
அவன் சொன்னதை வைத்தே அவனை மடக்கிவிட்டதில் ‘பார்றா,’ என்று மனதில் நினைத்துக் கொண்டவன், ஆனாலும் இவளோடு அதிக நேரம் தனியாக பேசக் கூடாது என்று நினைத்தான்.
அவன் நினைத்ததை போலத்தான், நிகர்வேலன் யாரோ ஒரு பெண்ணோடு பேசிக் கொண்டிருக்கிறானே யாரவள்? என்று அங்குள்ள சிலர் கவனிக்க ஆரம்பித்தனர். நிகர் குழுமத்தின் சொத்துக்கள், பங்குகள் சேகரன், சாகரிக்கு என்று இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தாலும், அதில் சேகரனின் பங்குகளுக்கு ஒரே வாரிசு நிகர்வேலன் அல்லவா? அதிலும் திருமண வயதில் இருப்பவனுக்கு பெண் தர நீ நான் என்று இப்போதே போட்டிகள் ஆரம்பித்துவிட்டது.
இன்னும் சேகரனே மகனது திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. அதற்குள் எப்போது மகனுக்கு கல்யாணம்? என்று அவரிடம் கேட்க ஆரம்பித்திருந்தனர். ராகவி அவனுக்கு முறைப் பெண். அவனைவிட இரண்டு வயது சிறியவள், அவளை அவனுக்கு பேசி முடிக்கலாம், சொத்தும் வெளியே போகாதே, அப்படித்தான் செய்வார்கள் என்று இதுவரைக்கும் அத்தனைப்பேரும் அமைதியாக இருந்தனர்.
சேகரனின் அன்னை பேச்சியம்மாளும் இதையே தான் கூறினார். அதற்கு நிகர்வேலனோ, “ராகவி என்னோட அத்தை பொண்ணா இருந்தாலும் நாங்க ஒருநாள் கூட அப்படி நினைச்சு பழகினதில்ல பாட்டி. அதில்லாம சொந்தத்தில் கல்யாணம் செய்றதும் நல்லதில்ல,” என்று மறுத்துவிட்டான்.
அவன் மனதில் அதற்கு முன்னரே நயந்தினியை நினைக்க ஆரம்பித்து விட்டிருந்தான். அப்படியில்லையென்றாலும் அவன் ராகவியை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டு இருக்கமாட்டான். ராகவிக்கும் அதே எண்ணம் தான், அவளும் அதை வெளிப்படையாக கூறியதால் தான் அவளுக்கு வரன் தேட ஆரம்பித்தனர்.
அவளுக்கு வேறு இடத்தில் வரன் தேடுவது தெரிந்ததும் ஒரு சிலர் நிகர்வேலனுக்கு பெண் கொடுக்க விரும்புவதாக வெளிப்படையாகவே சேகரனிடம் பேச ஆரம்பிக்க, “என் மகனோட கல்யாணத்தைப் பத்தி இன்னும் நான் யோசிக்கல, அவனும் இப்போ தான் தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்கான். அதனால அதைப்பத்தி யோசிக்கும்போது உங்க பொண்ணை மனசுல வச்சுக்கறேன்.” என்று கேட்பவர்களுக்கெல்லாம் சேகரன் இந்த பதிலை தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.
அப்படியிருக்க, இப்போது அவன் ஒரு பெண்ணிடம் பேசினால் ‘யாரிந்த பெண், யார் வீட்டுப் பெண்? கோடீஸ்வரியா? இல்லை இலட்சாதிபதியா என்று நயந்தினியை அளவெடுக்கவே ஆரம்பித்துவிட்டனர். அவள் சாதாரண அரசு வேலையில் இருக்கும் நளினியின் மகள் என்பது தெரிய வந்தால் அதற்கும் என்ன பேசுவார்களோ?
நளினியும் சாகரியோடு பேசிக் கொண்டிருந்தாலும், உடன் வந்த மகள்கள் எங்கே என்று பார்த்தவர், நயந்தினி நிகர்வேலனுடன் பேசிக் கொண்டிருப்பதை கொஞ்சம் வியப்பாகவே பார்த்தார். பின் மற்ற மகள்களும் அங்கேயே இருப்பதால் மீண்டும் உடன் நின்றிருந்தவர்களின் பேச்சில் கவனம் வைக்க ஆரம்பித்துவிட்டார்.
இங்கே நயந்தினியும் தன்னுடன் இருக்க வேண்டும், ஆனால் தனியாகவும் நிற்கக் கூடாது அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த நிகர்வேலன், “ஆமாம் உன்னோட ட்வின் சிஸ்டர்ஸ் எங்க? நீங்க எல்லாம் ஒன்னா தானே வந்தீங்க, அதுக்குள்ள எங்க காணோம், அவங்களை எனக்கு அறிமுகப்படுத்த மாட்டீயா?” என்று அவன் நயந்தினியிடம் கேட்கவும்,
“அவங்களோட் ஃப்ரண்ட்ஸை பார்த்ததும் அங்க ஓடிட்டாங்க,” என்றவள், கண்களாலேயே தங்கைகளை தேடியவள், அவர்கள் இருக்குமிடத்தை பார்த்த்ததும் அவர்களை அழைத்தாள்.
அக்கா கூப்பிட்டதும் இருவரும் அங்கே வந்தவர்கள், தன் தமைக்கையுடன் நின்றிருந்த புதியவனை கேள்வியோடு பார்க்க, “இவங்க தான் என்னோட ட்வின் சிஸ்டர்ஸ், இவ நன்மதி, இவ நன்மொழி.” என்று இருவரையும் நயந்தினி அறிமுகப்படுத்தவும்,
“ஹாய் கேர்ள்ஸ்,” என்று இருவரையும் பார்த்து நிகர் பொதுவாக கையசைத்தான்.
அப்போதும் அவன் யாரென்பது தெரியாமல் இருவரும் அவனையே பார்த்திருக்க, “இவங்க நிகர்வேலன். நம்ம ராகவி அக்கா, ரோஹனோட கஸின். நம்ம வந்த முதல்நாள் ரோஹன் அப்பாவோட இன்னொருத்தர் இருந்தாரே, அவர் தான் இவங்களோட அப்பா.” என்று தங்கைகளுக்கு நிகர்வேலனை அறிமுகப்படுத்த,
“ஓ உங்க ஷோரூம்ஸ்க்கு உங்கப் பேரை தான் வச்சிருக்காங்களா?” என்று நன்மொழி அவனிடம் கேட்க,
“அதேதான் என் பேர் தான் எங்க ஷோரூம்க்கு இருக்கு,” என்றவன்,
“உங்க ரெண்டுப்பேரோட பேரும் ரொம்ப அழகா இருக்கு,” என்று நிகர் இருவரிடமும் கூறினான்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த நயந்தினியோ, “அப்போ என்னோட பேர் நல்லா இல்லையா?” என்று அவனிடம் கேட்க,
“உன்னோட பேரும் தான் நயா, உங்க 3 பேருக்கும் உங்க பேரண்ட்ஸ் அழகா பேர் வச்சிருக்காங்க,” என்று அவன் கூறினான்.
அவன் தன் தமக்கையை நயா என்று அழைத்ததை கூர்ந்து கவனித்த நன்மொழியோ, “மதி, பார்த்தீயா? அக்காவை நயான்னு கூப்பிட்றாங்க,” என்று நன்மதியின் காதில் கிசுகிசுக்க,
அவர்கள் ஏதோ ரகசியமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன், “என்ன பேசிக்கிறீங்க,” என்று அவளிடம் கேட்டான்.
“ஆமாம், நீங்க எங்க அக்காவை ஏன் நயான்னு கூப்பிட்றீங்க?” என்று மொழி கேட்க,
‘அய்யோ இவங்க ஷார்ப்னு தெரிஞ்சும், இவங்க இருக்கும்போது நயான்னு கூப்பிட்டேனே,” என்று நினைத்தவன்,
“அது உங்க அக்கா பேர் நயந்தினி தானே, அதை சுருக்கி தான் கூப்பிட்டேன்.” என்று சமாளித்தான்.
“ஆனா அக்காவை பொதுவா எல்லாம் நயனின்னு தான் கூப்பிடுவோம்,” என்று மதி கூற,
“அப்படியா அது எனக்கு தெரியாதே, உங்க அக்காவை எனக்கு இப்போ தான் தெரியும், அதுவும் உங்க அக்காவின் முழுப் பேர் தான் தெரியும்,” என்று நிகர்வேலன் சமாளிப்பாக பதில் கூறினான்.
“அப்படியா நம்பிட்டோம், எங்க அக்கா எங்களோடவே ரொம்ப குளோசா பேச மாட்டாங்க, ஆனா இப்போ தான் முதலில் பார்க்கும் உங்களிடம் நல்லா பேசறாங்களா?” என்று கேட்டு சிரிக்க,
“இப்போ இதெல்லாம் உங்களை சொல்ல சொன்னாங்களா?” என்று நயந்தினி தங்கைகளை பார்த்து கோபமாக கேட்டாள்.
அதற்குள் அவர்களின் நண்பர்கள் அவர்களை கூப்பிடவும், “இருந்தாலும் உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,” என்று சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
அவர்கள் போனதும், “மத்தவங்க இருக்கும்போது அப்படி கூப்பிட மாட்டேன்னு தானே சொன்னீங்க, இப்போ ஏன் அப்படி கூப்பிட்டீங்க, அவங்க கற்பனை இப்போ தாறுமாறா ஓடும்,” என்று நயந்தினி கேட்க,
“அப்படி என்ன கற்பனை ஒடும்?” என்று அவன் கேள்வியாக கேட்டான்.
“தெரியாத மாதிரி கேட்கறீங்க, மதியம் சொன்னதை மறந்துட்டீங்களா?” என்று அவள் கேட்க,
“ஓ அதுவா, விடு பார்த்துக்கலாம்,” என்று அவன் சாதாரணமாக கூறினான். அவனே அப்படி சொல்லும்போது அவளுக்கு என்ன அவளும் அதன்பின் அதை சாதாரணமாக நினைத்து அமைதியாகி விட்டாள்.
மீண்டும் இப்போது அவர்கள் இருவர் மட்டுமே இருக்க, அப்போது நிகர்வேலனுக்கு அலைபேசி அழைப்பு வரவும், “ஒருநிமிஷம், என்று சொல்லி அவன் தனியாக போய்விட, நயந்தினி மட்டும் இப்போது தனியாக நின்றிருந்தாள். போன் பேசிவிட்டு நிகர்வேலன் மீண்டும் வருவான் என்று அவள் எதிர்பார்த்து காத்திருக்க,
அப்போது, “ஹாய்,” என்று சொல்லியப்படி ஒருவன் வந்து அவளருகில் வந்து நின்றான்.
அவனை எங்கோ பார்த்தது போல் இருந்தாலும், அவன் யாரென்று தெரியாததால், “சாரி, நீங்க யாருன்னு தெரியல,” என்று நயந்தினி கூற,
“நான்தான், ராகவியோட கஸின் அவினாஷ். அவங்க வீட்டுக்கு கூட முன்னல்லாம் வருவேன். அப்போ உன்னை பார்த்திருக்கேன்.” என்று அவன் கூறினான்.
‘நிகர்வேலன் தானே ராகவி அக்கா கஸின். இவன் என்ன கஸின்னு சொல்றான்.’ என்று அவள் யோசித்திருக்க,
“நான், ராகவி அப்பாவோட தங்கை மகன். அதாவது ராகவிக்கு அத்தை மகன்.” என்று அவன் பதில் கூறவும்,
இப்போது அவனை கொஞ்சமாக ஞாபகத்திற்கு வந்ததால், “ம்ம் ஆமாம் ஆமாம், உங்களை பார்த்த மாதிரி ஞாபகம் இருக்கு,” என்றாள்.
“இந்த ட்ரஸ்ல நீ தேவதை மாதிரி இருக்க நயனி,” என்று எடுத்த உடனே சொன்னாலும், ஏனோ அது அவளுக்கு மகிழ்ச்சியை தரவில்லை.
ரோஹன் பொம்மை என்று கேலியாக சொன்னபோது அவனிடம் கோபம் கொண்டாலும், உள்ளுக்குள் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. நிகர்வேலன் பார்பி டால் என்று சொன்னபோது அதைக்கேட்டு மகிழ்ந்தாள். ஆனால் எதிரில் நிற்பவன் அப்படி பேசும்போது ஏனோ எரிச்சல் தான் வந்தது.
ரோஹனும் சரி, நிகர்வேலனும் சரி அவளது கண்ணை பார்த்து பேசினர். ஆனால் இவன் பேசும்போது அவனது பார்வை அவள் உடல் பாகங்களை தொட்டு செல்வதை நன்றாகவே உணர முடிந்தது. இருந்தாலும் ராகவியின் உறவினன் என்பதால் அமைதியாக நின்றிருந்தவளோ, “நிகர்க்கு போன் பேசிட்டு வர இவ்வளவு நேரமா? ரோஹன் வந்தா கூட பரவாயில்லை.’ என்று அவள் மனதில் புலம்பிக் கொண்டிருந்த நேரம்,
“அக்கா, உங்களை அங்க கூப்பிட்றாங்க,” என்று பள்ளி வயது சிறுமி ஒருத்தி வந்து சொல்லவும், அது யாராக இருக்கும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. இவனிடமிருந்து தப்பித்தால் போதுமென்று நினைத்தவள், “என்னன்னு பார்த்துட்டு வந்துட்றேன்.” என்று அங்கிருந்து நழுவி வந்தவள்,
அந்த சிறுமி சொன்ன திசையில் நீச்ச்ல குளம் இருக்கவே, அங்கு சென்று பார்த்தவள், யார் தன்னை கூப்பிட்டது என்று தெரியாமல் சுற்றி முற்றி பார்க்க, அப்போது ஒரு கை அவளைப் பிடித்து வேகமாக இழுக்கவும், முதலில் பயந்து போனவள், பின் அது யாரென்று பார்க்க அங்கு நிகர்வேலன் தான் இருந்தான்.
“நீங்க தானா?” என்று அவள் பேசி முடிப்பதற்குள்,
“எதுக்கு அவனோட பேசிட்டு இருக்க,” என்று அவன் அதிகாரமாக கேட்டான்.
அந்த தோரணை அவளுக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே இதை செய்யாதே, அதை செய்யாதா, இவர்களோடு பேசாதே, அவர்களோடு பேசாதே, என்று விக்கி அதிகாரம் செய்வது போதாதா? இதில் இவனும் இப்படி பேசவும், அவளுக்கு கோபம் வந்துவிட்டது. விக்கியாவது இவளுக்கு நெருக்கமான நபர். இவனை ஏற்கனவே பார்த்திருந்தாலும், இன்று தான் பேச ஆரம்பித்ததே, அதற்குள் இப்படி நடந்து கொள்கிறான்? என்று நினைத்துக் கோபம் கொண்டவள்,
“நான் யாரோட வேணும்னாலும் பேசுவேன். அதனால உங்களுக்கு என்ன வந்தது. நீங்க யார் இதெல்லாம் கேட்கறதுக்கு, நீங்களும் ராகவி அக்கா கஸின். அவங்களும் ராகவி அக்கா கஸின். அவ்வளவு தான்,” என்று பதில் கூறினாள்.
அவளது பதிலில் நிகர்வேலன் கோபம் கொண்டவன், ஏற்கனவே பிடித்திருந்த அவளது கையை இன்னும் அழுத்தி பிடித்தவன், “நானும் அவனும் ஒன்னா உனக்கு?” என்று கேட்க,
“அய்யோ கை வலிக்குது விடுங்க,” என்றாள்.
ஆனால் அப்போதும் அவள் கைகளை விடாமல் இருக்கவே, “ஆமாம் பின்ன நீங்க எனக்கு முக்கியமான ஆளா?” என்று அவள் திமிராக கேட்க,
“ஆமாம் நான் உனக்கு முக்கியமானவனாக தான் இருக்கணும், புரியுதா?” என்று பதில் கூறியவனை புரியாமல் பார்த்திருந்தாள் நயந்தினி.