Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஊர் பேசும் ஓவிய சிலையே

ஊர் பேசும் ஓவிய சிலையே -7

மிராண்டா… ஒஸ்கர் மற்றும் அகதா தம்பதிகளின் செல்வ புதல்வி தெய்வானையும் மிராண்டாவும் சிறுவயது முதலே நெருங்கிய தோழிகள், அத்தை மகனோடு தெய்வானைக்கு திருமணம் முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது ஆகையால் ராஜேந்திரனையும் மிராண்டாவுக்கு நன்றாகத் தெரியும்.

 

ஒஸ்கருடன் சேர்ந்து மிராண்டாவும் எஸ்டேட் மற்றும் கணக்குவழக்குகளை பார்த்துக்கொள்வாள் காரோட்டவும் தெரியும் ஆகையால் தெய்வானையை அவளே தினமும் கல்லூரிக்கு அழைத்துச்செல்வாள் பழக மிகவும் இனிமையான பெண், பால் வண்ணம் சாக்லேட் நிறத்தில் முடி சராசரி உயரம் என்று நல்ல அழகி.

 



Advertisement

வருடத்தின் கோடை விடுமுறையை கழிக்க மிராண்டாவின் குடும்பம்  லண்டன் அல்லது ஜெர்மன் செல்வார்கள் அங்கெல்லாம் அவர்களுக்குச் சொந்தங்கள் உண்டு இங்கும் சில உறவுகள் உண்டு, லண்டனில் வசிக்கும் தோழரின் மகன் ஜெஸ்டினோடு மிராண்டாவின் திருமணத்தை முடிவு செய்திருந்தனர், ஜஸ்டின் மிராண்டா இருவருக்கும் அதில் சம்மதமும் கூட.

  

படிப்பு முடிந்த அடுத்த மாதமே தெய்வானை ராஜேந்திரன் திருமணம் நடந்து முடிந்தது,  மகளின் திருமணத்தையும் நடத்திவிட விரும்பினார் ஒஸ்கர்  அதற்காக ஜெஸ்டின் குடும்பம் குன்னூர் வருவதாக இருந்தது எப்பொழுதும் போல ஞாயிறு காலைச் சர்ச் சென்றிருந்த மிராண்டா திரும்பி வரவில்லை, அன்று இரவுக்குள் குன்னூரையே சல்லடையாகச் சலித்துவிட்டார்கள் எங்கும் இல்லை.

Advertisement

 

Advertisement

மலை அடிவாரம் தேயிலை தோட்டம் பள்ளத்தாக்கு என்று ஒரு வாரம் விடாமல் தேடினார்கள் தேடலை நிறுத்தி அனைவரும் சென்றுவிட ஒஸ்கர்  மட்டும் அந்த மலை பிரதேசத்தில் மகளைத் தேடி அலைந்துகொண்டிருந்தார், அங்கு இருக்கலாம் இங்கு இருக்கலாம் என்று எங்கிருந்து தகவல் வந்தாலும் தம்பதிகள் உயிரைக் கையில் பிடித்து ஓடினர் உயிரோடு கிடைத்தால் போதும் அவளை ஒரு முறை பார்த்தால் போதும் என்று தவம் கிடந்தனர்.

 

யாருடனாவது ஓடிப்போயிருப்பாள் என்ற பேச்சும் சுழன்றது,  மிராண்டாவின் வீட்டினரும் நம்பவில்லை ஜெஸ்டினும் நம்பவில்லை, அவளின் காதலை அதன் ஆழத்தை அறிந்தவன் அதைக் கொஞ்சம்கூட நம்பவில்லை, ஆயிற்று தெய்வானை பூஜாவை கருவில் தாங்கி அவளைப் பெற்றெடுத்துவிட்டாள் மிராண்டா உயிரோடு இருக்கிறாளா என்றுகூட தெரியவில்லை இரண்டு வருடங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.

Advertisement

 

பல  வருடங்களாகச் சிகிச்சையிலிருந்து அதன் பிறகு பிறந்தவன் சேனாபதி அவன் பிறந்தபிறகு பவுனுக்கு அடிக்கடி உடல்நிலை சரி இல்லாமல் போகத்தொடங்கியது, அளவுக்கதிகமான மருந்து மாத்திரைகள் அவர் உடலைத் தளர்த்தியிருந்தது  தமிழ்நாடு ஆந்திர பார்டரில் இருந்த குருவினையப்பள்ளி கிராமத்தில் ஆயிர்வேத சிகிச்சை மையம் ஒன்று உள்ளதாகவும் அங்குச் சிறப்பாகச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கோசலையின் உறவினர்மூலம் தகவல் தெரிந்து மனைவியையும் மகனையும் தாயையும் அழைத்துக்கொண்டு அங்குச் சென்றிருந்தார் கந்தசாமி.

 

சேர்ந்து பத்து நாட்களிலே மனதிலும் உடலிலும் நல்ல மாற்றம் இருந்தது அவருக்கு, ஒருநாள் மாலை அவர்கள் அறையில் அனைவரும் அமர்ந்திருக்க சலங்கை கொலுசின் சத்தம் சங்கீதம் போல நெருங்கி வந்தது, அப்பத்தாவின் மடியில் தலை வைத்துக் கதை கேட்டிருந்த சேனாபதி எழுந்து பார்க்க வாயிலில் நின்றிருந்தது அந்தப் பூஞ்சிட்டு.

 

பால் நிறத்தில் கருக் கரு என்ற முடிக்கற்றைகள் தோளில் சுருண்டு கிடக்க பச்சை நிற விழிகளை உருட்டி ஒரு கையில் மரப்பாச்சி பொம்மையும் மறுகையால் முடியைச் சுற்றிக்கொண்டும் நின்றிருந்தது, மெல்ல எழுந்தவன் குழந்தையின் அருகில் நெருங்கி “குட்டிமா” என்க, அவனை நோக்கிக் கையை உயர்த்தியது தூக்கு என்று எட்டு வயதான சேனாபதி  தன்னை பெரியமனிதனாக உணர்ந்தான் அத்தனை அன்போடு அவளைக் கைகளில் அள்ளிக்கொண்டான்.

 

அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தது குழந்தை “ஆத்தீ! எம்புட்டு அழகா இருக்கு யாரு கொழந்தைனு தெரியலையே” என்றார் பவுனு.

 

“யாரோ வெளிநாட்டுகாரங்க பிள்ளைபோல அசையாம நின்னா பொம்மைன்னு நெஞ்சுப்பாங்க எல்லாரும்” என்றார் கோசலை.

 

“மயூரி” என்ற சத்தத்தில் கிலுங்கி சிரித்தது அந்தக் குட்டி வாண்டு.

 

“ஏய் வாலு இங்க இருக்கியா எங்கேல்லாம் தேடுறேன் உன்னை” என்று வந்து நின்றார் அங்குப் பணிபுரியும் பெண்மணி ஒருவர்.

சாப்பிட வேணாமா? வாங்க வாங்க சாப்பிடலாம்” என்க ‘மாட்டேன்’ என்பதாகத் தலை அசைத்தது “இப்போ வந்து  சாப்டீங்கன்னா உங்களுக்குச் சாக்லேட் தருவேன்” என்றார் அவர்.

 

அவனிடம் இறக்கிவிட சொல்லி அவரை நோக்கி ஓடினாள் குழந்தை, அவர் பின்னையே சென்று குழந்தை உண்டுமுடித்து கதை கேட்டு உறங்குவதை வேடிக்கை பார்த்து நின்றிருந்தான் சேனாபதி.   

 

கிட்டத்தட்ட ஒரு வாரமாக மயூரியுடனே கழிந்தது சேனாவின் நாட்கள் விளையாடவைப்பது கதை சொல்வது தூக்கிக்கொண்டு சுற்றுவது என்று என்றாலும் மயூரியின் பெற்றோரை மற்றும் அதுவரை சந்திக்கவில்லை, ஒருநாள் மாலை வேலை அங்குச் சிகிச்சையில் இருந்த அனைவரும் ஒன்றாகக் கூடியிருந்தனர், மாதத்தில் ஒருமுறை இப்படி  அனைவரையும் ஒன்றாக அமரவைத்து பேசுவார் அந்த ஆயிர்வேத சாலையின் தலைமை மருத்துவர்.

 

அங்குதான் கோசலை அவளைக் கண்டார் “பவுனு அது நம்ம துரையையா பொண்ணுதானே” என்க.

 

கணவனும் மனைவியும் அவர் காட்டிய திசையில் நோக்கினர், அவசரமாக எழுந்த பவுனு வேகநடையில் அவளை நெருங்கினார் “மிராண்டா அம்மாடி இங்க எப்படி வந்த” என்று அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பிக் கேள்வி கேட்க அவளிடம் எந்த மாற்றமும் இல்லை, அவர்களை நெருங்கிய பயிற்சி மருத்துவர் “என்னம்மா உங்களுக்கு இவங்கள தெரியுமா” என்க.

 

“தெரியும்ங்க எங்க ஊர் பொண்ணு… காணும்னு ரெண்டு வருஷமா தேடுறோம்” என்க அவர்களை முதன்மை மருத்துவர் அறைக்கு அனுப்பி வைத்தார், மிராண்டாவை பற்றிய விவரங்களைக் கூறிய கந்தசாமி “பொண்ணு எப்படிங்க இங்க வந்து சேர்ந்துச்சு”  என்று கேட்க.

 

“ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி ஒரு அம்மா கொண்டு வந்து சேர்த்தாங்க எங்கேயோ வழில அடிபட்டுக் கிடந்ததை பார்த்துக் கொண்டுவந்ததா சொன்னாங்க, அப்போவே இவங்க கர்பபமா இருந்தாங்க, அளவுக்கதிகமான மயக்கு மருந்து குடுத்துருக்காங்க அது மூளையை பாதிச்சுருக்கு சரியாக நாள் எடுக்கும், குழந்தை பிறந்த அப்புறம் கொஞ்சம் மாற்றம் இருக்கு  இங்கவெச்சு தான் ட்ரீட்மெண்ட் கொடுக்குறோம்”.

 

“பேப்பர்ல விளம்பரம் குடுக்கலாம்னு நினைச்சோம் ஆனா அவங்களுக்கு என்ன மாதிரி ஆபத்துன்னு தெரியல வெளில தெரிஞ்சு வேற ஏதும் ஆபத்து வருமோனு கொடுக்கல” என்றார் அவர்.

 

“கொழந்த எங்க” என்றார் பவுனு, அவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது மயூரியாக இருக்குமோ என்று, அப்பொழுது சேனாபதியின் கையில் இருந்த குழந்தையைக் கைக்காண்பித்தார்  மருத்துவர்.

 

உடனடியாக ஒஸ்கருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது மகளை அந்தக் கோலத்தில் பார்த்துப் பாதி உயிர் பொய் விட்டது அவர்களுக்கு, பேத்தியை அள்ளி அணைத்துக்கொண்டார் ஒஸ்கர் ஒருவாரம் அங்கேயே தங்கியிருந்து கந்தசாமி குடும்பத்தோடு குன்னூர் வந்து சேர்ந்தனர்.

 

மிராண்டாவை பார்த்துக்கொள்ளவே நேரம் சரியாக இருந்தது அகதாவிற்கு, மயூரியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அகதாவால் மகளின் நிலைக்குக் காரணமானவன் குழந்தை என்ற எண்ணமே அவளை அவரிடமிருந்து தள்ளிவைத்தது, மயூரியை முழுதாகப் பார்த்துக்கொண்டது கோசலை குடும்பமே அதிலும் சேனா வேண்டும் அந்த வாலு பிள்ளைக்கு.

 

“தேனா… தேனா…”  என்று அவனைக் கட்டிக்கொண்டே சுற்றுவாள் ஒஸ்கர் அகதாவின் சொந்தங்களுக்கு மிகுந்த ஏமாற்றமாகிவிட்டது மிராண்டாவின் வருகை, மிராண்டாவை காணவில்லை இனி வரப்போவதில்லை கணக்கில்லா சொத்துக்களின் ஒரே வாரிசு போய்விட்டது நாமே பங்கிட்டுக் கொள்ளலாம் என்ற ஆசை எல்லாம் மண்ணாகப் போய்விட்டது.

 

மயூரியை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று பிரச்சனை செய்தனர் யாருக்கு பிறந்தது என்றே தெரியவில்லை எங்காவது விட்டுவிடுங்கள் என்றும் சொன்னார்கள், ஒஸ்கர் அனைவரையும் விரட்டிவிட்டார், ஞானஸ்நானம் விழாவில் ‘என்ன பெயர்’ என்று கேட்ட பாதிரியாரிடம் “ஐரிஸ் மயூரி” என்றார் ஒஸ்கர்(ஐரிஸ் என்றால் வானவில் என்று அர்த்தம்).

 

பள்ளிசெல்லும் வயது வந்ததும் மயூரியை குன்னூரில் கான்வென்டில் சேர்த்துவிட்டனர், ஜெஸ்டினின் அத்தை ஒருவர் அங்கே மதராக இருக்க அவர் பொறுப்பில் இருந்தாள் மயூரி சனி ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் மட்டுமே அவளுக்கு வீடு, அந்த நாட்களிலும் சேனாவின் வீட்டிலே இருப்பாள்.

 

“என்னோட ராசா” என்று கோசலையும் “என்னோட சேனா” என்று அவளும் முட்டிக்கொள்வார்கள், அடம் கொஞ்சம்  அதிகம் இருந்தது மயூரிக்கு தாய் தந்தை அன்பு கிட்டவில்லை தாத்தா பாட்டியின் அரவணைப்பும் கிட்டவில்லை தனிமையை வெகுவாக வெறுத்தாள்,  ‘சேனா’ என்ற ஒருவனை சுற்றியே அவள் நாட்கள் நகர்ந்தது, அந்த அன்பும் அருகாமையும் அது மட்டுமே அவளைக் கட்டுப்படுத்தும் அவன் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்வாள்.

 

ஜெஸ்டின் இரண்டுமுறை வந்து பார்த்துச் சென்றான் மிராண்டாவை,  அவளிடம் பெரிதாக முன்னேற்றம் ஒன்றும் இல்லை அப்படி இருக்கையில்தான் மிராண்டாவை சிகிச்சைக்காக லண்டன் கொண்டு சென்றனர் அவளின் பெற்றோர், ஒஸ்கர் மட்டும் திரும்பி வந்துவிட்டார் அகதா மகளுடன் அங்கேயே தாங்கிக்கொண்டார், எட்டு மாதங்களுக்குப் பிறகு மிராண்டா இறந்துவிட்டதாக ஒஸ்கர் மட்டும் லண்டன் சென்றுவந்தார்.

 

ஜெஸ்டினின் மனைவி என்ற அடையாளத்தோடு அங்கேயே இறுதி சடங்குகள் செய்துவிட்டனர், பத்து வயதில் தாய் என்ற உறவை  இழந்துவிட்டாள், மிராண்டாவின் மரணத்திற்கு பிறகே மயூரியின் மேல் கொலைமுயற்சி நடந்தது… முதல் இரண்டு முறை தெரியவில்லை மூன்றாம் முறை அவள் சென்ற  சைக்கிளை இடித்துச் சரிவில் உருண்டுவிழுந்தவளை கொல்ல அருவாளோடு தேடியபோதுதான் புரிந்தது கொலைமுயற்சி என்று,  அன்று காட்டிற்குள் பாறை  இடுக்கில் அவளைத் தன் அரவணைப்பில் இரவு முழுதும் பாதுகாத்து வைத்திருந்தான் சேனாபதி அதன் பிறகே அவனின் கட்டாயத்தின் பேரில் லண்டன் சென்றாள்.

 

“ஏய் வாலு எப்போ வந்த இங்க” என்றான் அவளைத் தன்னிலிருந்து பிரித்து “மூணு” என்று விரல்களை நீட்டிக் காண்பித்தாள்.

 

“தனியா எங்கேயும் போகக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல” என்க.

 

“ரௌடீஸ் எல்லாம் டைர்ட் ஆகி தூங்கியிருப்பாங்க காலைல தான் வருவாங்க பயப்படாதீங்க” என்றாள் அவனிடம்.

 

“யாரு? நான் பயப்படுறேன்… எல்லாம் என் நேரம் பாரின் போய்ப் படிச்சுட்டு வந்திருக்கியே கொஞ்சம் அறிவும் வளைந்திருக்கும் வாலும் குறைஞ்சிருக்கும்னு நினச்சேன் உனக்குக் கொழுப்புதான் கூடியிருக்கு” என்றவனை பார்த்து முகத்தைச் சுருக்கியவள் “தூக்கம் வருது” என்றாள் மெல்ல.

 

“உன்ன என்ன பண்றது” என்று முறைத்து பார்த்தவனிடம்  “இதையே யோசிச்சிட்டு இருந்து தூக்கமே வரல இப்போ போய் நிம்மதியா தூங்குவேன்” என்றவள் “குட் நைட்” என்று சைக்கிள் நோக்கி சென்றாள்.

 

“சைக்கிள்ல கை வைச்ச தொலைச்சிருவேன் வா” என்றவன் வண்டியின் அருகில் சென்றான் “ஐ… புல்லட்” என்று ஓடிவந்து ஏறிக்கொண்டவள் அவன் இடையோடு கைகொடுத்து இறுக்கமாக அணைத்துக்கொண்டு அவன் முதுகில் முகம் புதைத்தாள்.

 

“மயூ… என்ன பண்ற யாரவது பார்க்க போறாங்க” என்க.

 

“நம்மள புதுசா இந்த குன்னூர்ல யார் பாக்க போறாங்க அப்படி பாக்க அவங்களுக்கு கஷ்டமா இருந்தா அவங்கள கண்ணை மூடிக்க சொல்லிடுங்க” என்றவள் இன்னும் நெருங்கி அமர ‘மயூரி இஸ் பேக்’ என்று எண்ணிக்கொண்டான்.

 

அவள் திரும்பி வந்தபிறகு ஒவ்வொரு நொடியும் அவன் மனம் அவனின் பழைய மயூரியை எதிர்பார்த்தது, அவளின் ஒதுக்கம் மனதில் ஒரு வலியை தந்துகொண்டிருந்தது உண்மையே, இதுதான் அவனுடைய  மயூரி தேவசேனாபதியிடம் மட்டும் தன் சுயத்தை தொலைக்காமல் இருக்கும் அவனின் ஐரிஸ் மயூரி.

 

அவள் கூறிய வார்த்தைகள் அவன் செவிகளில் ஒலித்துக்கொண்டிருந்தது “என்னை தனியா அனுப்பிடீங்க தேவா… உண்மைய சொல்லவா நான் உங்களை ரொம்ப தேடினேன், கணக்கு கேக்காம காசு குடுத்தாங்க எங்க போற  ஏன் போறான்னு கேக்காம சுதந்திரம் குடுத்தாங்க, தனி ரூம் ஆடம்பர பொருட்கள் எல்லாம் குடுத்தாங்க ஆனா யாருமே எனக்கான அன்பை கொடுக்கல, அம்மான்னு பேருக்காவது ஒருத்தங்க இருந்தாங்க அவங்களும் போயாச்சு, அப்பா யாருன்னே தெரியாது க்ராண்ட்மாக்கு என்னை ஏத்துக்கறதா வேண்டாமான்னு தெரியாத குழப்பம்”.

 

“என்னை முழுசா ஏத்துக்கிட்டவர் கிராண்ட்ப்பா  மட்டும்தான் ஆனா அவரும் அவரோட மகளை பாத்துக்கறதுல என்னை மடத்துல விட்டுட்டாருதானே, எனக்கே எனக்காக இருந்தது நீங்க மட்டும்தான் அதையும் என்கிட்டே இருந்து யாரும் பிடுங்க கூடாதுன்னு தான் எல்லார்கூடவும் உரிமை போராட்டம் நடத்தினேன், அப்போ இருந்த பதிமூணு வயசு மக்கு பொண்ணுக்கு அவ்ளோதான் தெரிஞ்சது”.

 

“அன்பு எங்கேயிருந்தாலும் எவ்ளோ தூரமா இருந்தாலும் மாறாதுன்னு புரிய நிறைய நாள் ஆயிடுச்சு, உங்கள நினைக்காம என்னோட ஒரு நாள் கூட போனதில்லை உங்க அதட்டல் கோபம் இது எல்லாம் வேணும்னு ஆசையா இருந்தது, என்னை போகசொல்லிடீங்கன்னு கோபமா இருந்த உணர்வு ஏக்கமா மாறிடுச்சு”.

 

“தேவா மேல காதல் வந்திருச்சுனு எப்போ புரிஞ்சுது தெரியுமா… ஐரிஸ்… ஐம் இன் லவ் வித் யுன்னு ஒருத்தன் சொன்னப்போ அந்த நொடி என் முன்னாடி நீங்க நின்னீங்க மயூரின்னு உங்க குரலும், எதுக்குன்னே தெரியாம அன்னைக்கு புல்லா அழுதேன் உங்கள பொறுத்தவரைக்கும் நீங்க எனக்கு நல்ல ஒரு பிரென்ட் நலம்விரும்பி அப்படித்தானே ஆனா அதை எல்லாம் நான் தாண்டிட்டேன் தேவா, இனிமே என்னை எங்கயும் போக  சொல்லாதீங்க எனக்கு உங்ககூடத்தான் இருக்கணும்” என்றவளை இழுத்து அனைத்திருந்தான்.

 

இருள் பிரியா அதிகாலை… பனிச்சாரலோடு ஆதவனை எதிர்பார்த்து காத்திருந்தது குன்னூர், புல்லட்டை ஸ்டார்ட் செய்தவனின் இடது கை தன்னை அனைத்திருந்தவளின் கரங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டது.

 

நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு
நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று
உன்னோடு நானும் போன தூரம்
யாவும் நெஞ்சிலே
ரீங்கார நினைவுகளாக அலையை
இங்கே மிஞ்சுதே
நூலறுந்த பட்டம் போலே
உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன
கேக்க வேண்டும் உன்னை
காலம் கை கூடினால்

 கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா
ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா
நீ பேச பேச காயம் ஆறுமே

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!