Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இ.பி.கோ. 55

இ.பி.கோ. 55 – அத்தியாயம் 9

அத்தியாயம் – 9

அந்த அரசு மருத்துவமனையின் பொது சிகிச்சைப் பிரிவு நடைபாதையில் துணைக்கு வந்திருந்த காவலரோடு நின்றிருந்தான் அகிலன். உள்ளே அதிராவை பரிசோதித்து அறைக்கு மாற்றியிருந்தனர். செவிலியர் ஊசி போட வேண்டும் என்றதால் இருவரும் வெளியே வந்திருந்தனர்.

“பரபரப்பா ஹெட்லைன்ல வரணும்னு நம்ம தாவை வாங்கிட்டாங்க. பாவம் மேடம் நாலு நாளா நின்னு வேலை பாத்தாங்க, கடைசியில அவங்களுக்கே இப்படி ஆகிடுச்சு. அமைச்சருங்க முன்னாடி நம்மளாம் வெத்துவேட்டு, நம்மளை எல்லாம் ஒரு ஆளா கூட மதிக்க மாட்டாங்க.” என்று தன்பாட்டிற்கு புலம்பிக் கொண்டிருந்தார் மனிதர்.

அகிலன் எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லை. மனம் நிலைகொள்ளாமல் பதட்டமாக இருந்தது. அதிராவுக்கு என்னவென்று மருத்துவர்கள் இன்னும் இவர்களிடம் சொல்லவில்லை. அவசரப் பிரிவில் பரிசோதித்துவிட்டு பொது பிரிவுக்கு மாற்றிவிட்டார்கள். கல் வேகமாக தோள்பட்டையை உரசிச் சென்றமையால் தற்காலிகமாக வீக்கம் கண்டிருக்கும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாலும் அகிலனுக்கு தவிப்பாய் இருந்தது.



Advertisement

“நேரம் ஆகிடுச்சு. போய் என்னனு பாத்துட்டு கிளம்பலாம்.” என்று கைக்கடிகாரத்தை பார்த்தபடி சொன்னார்.

அகிலனும் உடனே மணியைப் பார்க்க இரவு ஏழை நெருங்கிக்கொண்டிருந்தது. இரவு பத்து மணிக்கு திருச்சி செல்லும் பேருந்தில் ஊருக்கு செல்ல முன்பதிவு செய்திருந்தான். அதிராவை பார்த்து விசாரித்து, வீட்டில் விட்டுவிட்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அவனும் அவருடன் நடந்தான். 

பத்து கட்டில்கள் போடப்பட்டிருந்த அந்த பெரிய அறையின் நடுவே இருந்த கட்டிலில் மருத்துவமனை உடைக்கு மாறி கழுத்தில் பெல்ட்டுடன் சாய்ந்து அமர்ந்திருந்தாள் அதிரா. இவர்களை பார்த்ததும் தலையசைக்க முடியாது இமை மூடித் திறந்தாள்.

Advertisement

“எப்படி இருக்கு மேடம்? என்ன சொல்றாங்க?” என்று துணைக்கு வந்த காவலர் விசாரிக்க, 

Advertisement

“மைல்ட் பராலைசிஸ். வலது கையை தோள்பட்டைக்கு மேல தூக்கவோ மடிக்கவோ முடியாது.” என்று செவிலியர் சொன்ன நொடி, என்ன என்று அகிலனின் கண்கள் அதிர்வில் விரிந்தது.

துணைக்கு வந்திருந்த காவலரும் அதிர்வுடன் அதிராவை பார்க்க, “ஐ கேன் மேனேஜ். நீங்க கிளம்புங்க.” என்றாள் மிக மெல்லிய குரலில். பெல்ட் இருப்பதால் சத்தமாக பேச அசவுகரியமாக இருந்தது.

அந்த காவலர் தயக்கமாக பார்க்க, “நான் பாத்துக்குறேன்.” என்றாள் மீண்டும்.

Advertisement

“எப்போ டிச்சார்ஜ்?” என்று செவிலியரைப் பார்த்துக் கேட்க, “நாளைக்கே போலாம். டேப்லெட் கொடுத்திருக்காங்க, பிஸியோதெரபி செய்யணும்.” என்று செவிலியர் சொல்லவும் அந்த காவலர் கிளம்பத் தயாராகிவிட்டார். 

“நாளைக்கு வரேன் மேடம். என்ன வேணும்னாலும் என்னை கூப்பிடுங்க.” என்று அவர் நம்பரை பகிர்ந்துச் சென்றார்.

செவிலியரும் அடுத்த கட்டிலுக்கு சென்றுவிட, “ஏன் இன்னும் இங்க நிக்குற? நாளைக்கு ஊருக்கு கிளம்புறதானே?” என்று அதிரா அகிலனைப் பார்த்துக் கேட்க, அதுவரை அமைதியாய் எதையோ யோசித்தபடி இருந்தவன் தலையை உலுக்கி,

“என்ன… என்ன கேட்டீங்க?”

“அடிபட்டது எனக்கு, ஷாக் உனக்கா… தங்கச்சிக்கு விஷேஷம்னு ரெண்டு நாள் லீவ் கேட்டிருந்தியே… நாளைக்கும் நாள்ளான்னைக்கும் தானே லீவ்?” என்று லேசாக புருவம் சுருக்கினாள்.

“எப்படி இப்படி எதுவுமே நடக்காத மாதிரி பேசுறீங்க?”

லேசாக இதழ் வளைத்தவள், “என்னாச்சு இப்போ? ஜஸ்ட் ஒரு ஆக்சிடென்ட்…”

“என்னது ஜஸ்ட்டா? ஒரு கையே வேலை செய்யாதுன்னு சொல்றாங்க.”

“பிரேக்கியல் பெக்சல்ஸ். C4,C5,C6,C7,T1 இந்த நரம்பெல்லாம் நம்ம முதுகுத் தண்டுவடத்தோட கழுத்துப்பகுதில இருக்கு. அதுல ஒரு சிலது இஞ்ச்யூர் ஆகியிருக்கு. ஏற்கனவே ஒரு ஆக்சிடென்ட்ல கொஞ்சம் டேமேஜ் ஆகி சரி பண்ணி வச்சிருந்தேன், திரும்ப அதே இடங்குறதால இப்படி ஆகிடுச்சு. பிசியோ பண்ணா நார்மல் ஆகிடும். கொஞ்சம் டைம் எடுக்கும்.” என்று தலை சரித்து அவள் பேச, இவனுக்கு தலை சுற்றியது.

ஏற்கனவே விபத்தில் சிக்கி அடிபட்டு மீண்டிருக்கிறாளா. ஆனால் எதையும் காட்டிக்கொள்ளாது எப்படி இயல்பாய் இருக்க முடிகிறது. ஒரு கையே வேலை செய்யவில்லை என்கிறார்கள் அலட்டாமல் இருக்கிறாளே என்று அவனுக்குத்தான் பயந்து வந்தது.

“நீங்க எவ்ளோ சொன்னாலும் உங்களை கம்பீரமா பாத்துட்டு இப்படி பாக்க கஷ்டமா இருக்கு.” என்று உளமார வருந்தினான். உண்மைக்கும் அவளை இப்படி மருத்துவமனை நீல உடையில், முகம் சோர்ந்து கழுத்து நிறைத்த பெல்ட்டுடன் பார்க்கவே ஒருமாதிரி இருந்தது. அதை தயங்காது சொல்லவும் செய்தான். எப்போதும் மனதில் படுவதை தயங்காது அவளிடம் அப்படியே அவன் கடத்தியிருக்க, இருவருக்குமே அந்த உரையாடல் இயல்பாய் நீண்டது. 

“நம்ம வேலை அப்படி. எப்போ என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. இதெல்லாம் எனக்கு பழகிடுச்சு.” என்று அவள் மெதுவாய் சொன்னாலும் அவன் முகம் கலக்கத்துடன் இருந்தது. 

“இந்த வேலையில இருந்துகிட்டு அசம்பாவிதம்லாம் நடக்காம இருக்கணும்னா உன்னை மாதிரி வேலை பாத்தா தான் உண்டு.” நமட்டுச் சிரிப்புடன் அவள் சொல்ல, 

“இதுதான் கிடைச்சிது சாக்குனு என் காலை வாருறீங்க.” என்று சலிப்பாக சொன்னான் அகிலன். 

“கிளம்பு.”

“துணைக்கு யாராவது வரட்டும் கிளம்புறேன் மேடம்.” என்று கைகட்டி அழுத்தமாக நின்றான்.

“உடனே வர மாதிரி யாரும் இங்கில்லை. நான் பாத்துப்பேன், நீ ஊருக்கு போய்ட்டு வந்து சேரு.” என்று கண்களை மூடிக்கொள்ள, நகரமாட்டேன் என்பது போல் அழுத்தமாய் நின்றான் அகிலன்.

அவள் குடும்பம் எங்கிருக்கிறார்கள். குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்று முதல்முறையாய் அவளைத் தாண்டி அவள் சம்மந்தப்பட்ட விசயங்களில் யோசனை போனது.

பத்து நிமிடம் நின்றிருப்பான் அவள் கண்களை திறக்கவே இல்லை. பரபரப்பாய் பரிதி வந்து அழைக்கவும்தான் கண்களைத் திறந்தாள்.

“இப்போதான் கேள்விப்பட்டேன். எப்படி ஆச்சு மேம்?”

அதிரா நடந்ததை பகிரவும் வருத்தப்பட்ட பரிதி, “கேஸ் எல்லாம் நான் பாத்துக்குறேன் மேம். நீங்க சீக்கிரம் சரியாகி வாங்க.”

“ஒரு ரெண்டு நாள்ல வந்துருவேன். மான்சி கேஸ் என்னாச்சு?” என்று மெதுவாய்க் கேட்க,

“இப்போ இது முக்கியமா மேம்? ஊசி போட்டிருக்காங்க. தூங்கி ரெஸ்ட் எடுங்க.” என்று அகிலன் இடைபுகுந்து சொல்ல, ‘நீ இன்னும் போகவில்லையா?’ என்று பார்த்தாள் அதிரா.

“ஆமா மேம், இப்போ ரிலாக்ஸ் ஆகுங்க. எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.” என்றான் பரிதியும்.

“அமைச்சர் வீட்ல எப்படி கலவரம் வெடிச்சிச்சு. யார் அதுக்கு பின்னாடி இருக்கான்னு விசாரிக்க சொல்லுங்க.” எனும்போதே அதிரா முகம் சுருங்கியது.

“வலிக்குதா மேடம்?” பரிதி பணிந்து வேண்ட, அகிலன் முறைப்புடன் நின்றான்.

‘கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’ என்ற கடுப்பு அவனுக்கு.

அதிராவின் முகம் போன போக்கை வைத்தே யோசித்த பரிதி தயக்கத்துடன், “நைட் என் அம்மாவை வரசொல்றேன். உங்களுக்கு ஏதாவது வேணும்னா எடுத்துட்டு வர சொல்றேன்.” என்று பார்க்க, மறுப்பாய் அசைந்தது அவள் தலை.

“எல்லாத்தையும் அவங்களே பாத்துப்பாங்களாம்.” எரிச்சலில் முகம் சுழித்தான் அகிலன்.

அப்படியா என்று பரிதி அதிரா முகம் பார்க்க, இப்போது ஆமாம் என்று மெல்ல அசைந்தது அவள் தலை.

“இந்த நேரத்துல உங்களுக்கு ஒரு லேடி துணை அவசியம் மேடம். மறுக்காதீங்க.” என்று பரிதி தணிந்து அக்கறையில் சொல்ல, வளையாது விறைப்பாய் நீண்டிருந்த வலக்கையை லேசாக இடவலமாக அசைத்த அதிரா, “பாருங்க எனக்கு ஒன்னுமில்லை, நான் சமாளிச்சிக்குவேன்.” 

சட்டென தன் சட்டை பையிலிருந்து போனை எடுத்த அகிலன் அவளது வலக்கரம் அருகே வைத்து, “எங்க இதை எடுங்க பாப்போம்.” என்று சவாலாகவே சொன்னான்.

லேசாக விரல்களை அசைத்துப் பார்த்த அதிரா விரல்களை நகர்த்தி போனை பிடிக்க முயற்சிக்க, பிடிக்கும் அளவுக்கு பிடிமானம் வரவில்லை. விரல்கள் மடங்கியது ஆனால் பிடிக்க முடியவில்லை. சில நொடிகள் வலக்கையால் அதை எடுக்க முயன்று தோற்றவள் உடனே இடக்கை கொண்டு அலைபேசியை கையிலெடுத்து அகிலன் எதிரே ஆட்டி, “எடுத்துட்டேன். ஒன்னு போனாலும் ஒன்னு இருக்கு.” என்று நயனமாய் வலக்கரத்தை விழிகளால் சுட்டிக்காட்டி பின் இடக்கரத்தை காட்டினாள். 

“பிடிவாதம் பிடிவாதம்… நீங்க அழைச்சிட்டு வாங்க சார். மேடம் ட்யூட்டில இல்லை அவங்க ஆடரை பாலோ பண்ணனும்னு அவசியம் இல்லை.” என்ற அகிலனை, ‘டேய், நீயேண்டா இவ்ளோ ஓவரா போற’ என்றுதான் பார்த்தான் பரிதி. ஆனால் அதிரா சொல்வது போல் அவளை தனியே விட மனம் இடம்கொடுக்கவில்லை. அவள் விருப்பத்தை மீறி, 

“நான் அம்மாவை அழைச்சிட்டு வரேன்.” என்று கிளம்பிவிட்டான் பரிதி.

பரிதி நகர்ந்ததும் அகிலனை முறைத்தாள் அதிரா. முறைத்தால் முறைத்துக்கொள் இது என்ன எனக்கு புதிதா என்று தெனாவெட்டாய் நின்றான் அகிலன். 

“என் விசயத்துல நீ எதுக்கு தலையிடுற? உன் வேலையை பாத்துட்டு கிளம்பு.”

“எனக்கும் கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கு மேடம். சாரோட அம்மா வரட்டும் அப்புறம் கிளம்புறேன். உங்களை தனியா எல்லாம் விட்டு போக முடியாது.” என்று அழுத்தமாய் நின்றான்.

“இப்படி நின்னு என் மானத்தை வாங்காத. உக்காந்து தொல…” சலிப்பாய் உணர்ந்தவள் கண்மூடிக்கொண்டாள்.

அவளுக்கான முடிவெடுத்து அவளை ஆட்டிவைப்பது சுகமாய் இருக்க, லேசாக மலர்ந்த இதழ்களை அடக்கிக்கொண்டு நாற்காலி இழுத்துப்போட்டு அவள் கட்டிலுக்கு அருகே அமர்ந்துகொண்டான் அகிலன்.

பொது அறை என்பதால் சலசலப்பு இருந்துகொண்டே இருந்தது. அதிராவால் உறங்க முடியவில்லை. உச்சுக்கொட்டியவள் மெல்ல நிமிர்ந்து அமர்ந்து, கண்களை மூடி சீராய் மூச்சுக்களை உள்ளிழுத்து வெளியே விட, என்ன செய்கிறாள் என்று ஆர்வமாய் பார்த்தான் அகிலன்.

தம்கட்டி ஐந்து நிமிடம் அமர்ந்தவளாள் அதற்கு மேல் முடியவில்லை. உறங்கும் முன் வீட்டில் தினம் பத்து நிமிடம் தியானம் செய்துவிடுவாள் இன்று அதை செய்ய முடியாமல் போக, மருத்துவமனையில் இருக்கத்தான் வேண்டுமா என்று சோர்வு வந்தது. மனம் ஒருநிலையில் இல்லாது சமன்பட மறுத்தது. எதுவும் தன் கட்டுப்பாட்டில் இல்லை என்ற ஒரு பிம்பம். அது அவளை இயல்பாய், நிம்மதியாய் இருக்க விடவில்லை. 

“என்ன பண்ணுது? டாக்டரை கூப்பிடவா?” அவள் முகத்தில் தெரிந்த சோர்வைக் கண்டு உடலுக்கு என்னவோ என்று அருகே சென்றான் அகிலன்.

“செத்த நேரம் மூடிட்டு இரு.” இயலாமையின் வெளிப்பாடு அவனிடம் இறங்கியது. 

இவனும் கோவத்தில் முகம் திருப்பினான். சற்று நேரம் கழித்து, “இன்னைக்கே டிஸ்சார்ஜ் ஆகலாமான்னு கேட்டுட்டு வா.”

மருத்துவமனை உடை வேறு அசௌகரியமாய் இருக்க, இலகுவாய் இருக்கவே சங்கடமாய் இருந்தது. இதில் பரிதி வேறு அவன் அம்மாவை வீணாக அழைத்து வந்து எதற்கு சிரமம் என்று நினைத்தவள் இங்கிருந்து கிளம்பினால் தேவலாம் என்றே அகிலனை அனுப்பப் பார்த்தாள்.

அசைவேனா என்றிருந்த அகிலன், “அங்க போய் தனியா எப்படி இருப்பீங்க. ஏதாவது அவசரம்னா கூட துணைக்கு யாரும் இல்லை.” 

“உன்னை சொன்னேன் பாரு…” சடைத்துக்கொண்டவள் செவிலியர் வரும் வரை காத்திருந்து அவர் வந்ததும் வீட்டிற்கு கிளம்புகிறேன் என்றாள்.

“இன்னைக்கு நைட் மட்டும் அப்சர்வேஷன்ல வச்சிருந்து காலையில அனுப்பலாம்னு டாக்டர் சொன்னாரு. நீங்க விருப்பப்படுறீங்க, கேட்டுப்பாக்குறேன்.” என்று நகர்ந்தார் அவர்.

செவிலியர் நகர்ந்ததும் அவளை முறைத்தான் அகிலன். அவன் பார்வையை அலட்சியம் செய்தவள் அலைபேசி எடுத்து விஷுவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். வலது கையை எவ்வளவு தூரம் அசைக்க முடிகிறது என்று நகர்த்திப் பார்த்தாள். முன்னே பின்னே என்று கொஞ்சமே கொஞ்சம் அசைக்க முடிந்தது. லேசாக தூக்கவும் முடிந்தது. அதற்கு மேல் தூக்கினால் தோள்பட்டை பொறுக்கமுடியாத அளவுக்கு வலித்தது. வலியில் முகம் சுருங்கி இயல்பாக, தனியாக சமாளித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது. 

ஆனால் வலியில் அவள் முகம் சுருங்கிய போது அகிலனுள் தவிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.

உன்னைதான் அவள் மதிக்கவில்லையே அமைதியா இரு, என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு தவிப்பை அடக்கி அமைதியாக அவள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தான். 

மருத்துவரிடம் கேட்டு வந்த செவிலியர் கைகளுக்கு சில அசைவுகளை தினமும் செய்யும்படி சொல்லிக்கொடுத்து பின் உடற்பயிற்சி சிகிச்சையும் தொடரும்படி விளித்துவிட்டு கிளம்பலாம் என்றார். அதிரா முகம் மலர தன் காவல் உடையை வாங்கிக்கொண்டு உடைமாற்ற எழ, அகிலன் முகம் திருப்பி இறுக நின்றான்.

அவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அங்கிருக்கும் குளியலறையில் ஒருவாறு உடை மாற்றி வந்தவள், சிரமத்தில் முகம் சுருங்க இடக்கையால் போன் எடுத்து பாக்கெட்டுக்குள் போட்டு தொப்பியை எடுத்துக்கொண்டு அகிலனைப் பார்க்க, அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் செவிலியரை அழைத்து அவரிடம் எதுவோ முணுமுணுத்துவிட்டு வெளியே சென்றான்.

அவனை ஊடுருவும் பார்வை பார்த்த வண்ணம் அவனை பின்தொடர இரண்டடி தான் எடுத்து வைத்திருப்பாள் மேடம் என்று அவளை நிறுத்தியிருந்தார் செவிலியர். கேள்வியோடு அதிரா ஏறிட, சங்கடத்துடன் அவளை நெருங்கியவர், “உங்க சேர்ட் பட்டன் ஒழுங்கா போடல.” என்று கைகாட்டி சொல்ல, வேகமாக தன்னை குனிந்து பார்த்தாள் அதிரா.

கழுத்து பெல்ட் இருப்பதால் அதிகம் குனியமுடியவில்லை. ஆனால் கண் உணரும் முன் விரல் சென்று பரிசோதித்தது. அவளது காக்கி உடையின் நடு பொத்தான் கழண்டிருந்தது. நொடியில் இதைத்தான் செவிலியரிடம் அவன் சொல்லிச் சென்றிருக்கிறான் என்று புரிய, அசெளகரியமாக அசட்டுச் சிரிப்பை உதிர்த்தது இதழ்கள். தொப்பியை கீழே வைத்துவிட்டு இடக்கை கொண்டு விடுபட்ட பொத்தானை அவசரமாக அதன் ஓட்டைக்குள் அடைக்க முயன்றாள். நிதானமாக உடை மாற்றும் போதே சட்டென இடக்கை பொறுப்பெடுத்துக்கொண்டு அனைத்தையும் நிறைவேற்ற தடுமாறியது. இப்போது லேசாக பதட்டம் துளிர்விட, சட்டென பொத்தானை போட முடியவில்லை. நான் உதவவா என்றுக் கேட்ட செவிலியரை மறுத்து ஒருவாறு பொத்தானை அடைத்துக் கிளம்பினாள்.

வேகமாக வெளியே வர, “மேடம் டேப்லெட்ஸ் மறந்துட்டீங்க.” என்று பின்னேயே ஓடிவந்து செவிலியர் மாத்திரைகளை நீட்ட, அதிராவின் வலக்கை சட்டென மேலெழ முயன்று வலி கொடுத்தது.

‘ஸ்…’ என்று அவள் நொடி கண் மூடித் திறக்க, மாத்திரை கவரை வாங்க நீண்டது அகிலன் கரம்.

அவன் வாங்கவும் எதுவும் சொல்லாது அதிரா முன்னே நடக்க, 

“கார் இந்த பக்கம் இருக்கு. நீங்க இங்கேயே இருங்க, நான் கார் எடுத்துட்டு வரேன்.” என்று ஒருபக்கம் கை காட்டிவிட்டு அவன் நடக்க, இவளும் பின்தொடர்ந்தாள்.

இவள் தொடர்கிறாள் என்று தெரிந்ததும் சலிப்பாய் இதழ் வளைத்து தலையசைத்தவன் அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு முன்னேற, இவளும் அமைதியாய் நடந்தாள். 

பின் ஒரு அமைதியான பயணம் வீடு வரும் வரை. எப்போதும் முன் இருக்கையில் அமர்பவள் இன்று பின்னே அமர்ந்துகொண்டு இருக்கையில் தலைசாய்த்து கண்மூடிக்கொண்டாள். கார் கண்ணாடியினூடே அவளை கவனித்த வண்ணம் கார் ஓட்டினான் அகிலன்.

கார் நிற்கவும் கண்களைத் திறந்தவள் தொப்பியை எடுத்துக்கொண்டு இறங்க, பின்னோடே அவளது பைகள் மற்றும் மாத்திரையை எடுத்துவந்தான் அகிலன்.

“சாவி.” என்று அவன் கையில் இருந்த பையைக் காட்டிக் கேட்க, அவள் பையை துழாவினான் அகிலன்.

“குடு, நான் எடுத்துக்குறேன்.” என்று கேட்டவளை கண்டுகொள்ளாதவனாய் சாவியை தேடி எடுத்து அவனே கதவை திறந்தான்.

“நீ கிளம்பு.” 

எதற்கும் எதிர்வினை ஆற்றாது அவளது பைகளை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். முதல் முறை வீட்டிற்குள் வருவதால் அவனது கண்கள் நாலாபக்கமும் சுழன்றது. சிறிய ஹாலில் ஒரு எல் வடிவ சோபாவும் நடுவே சிறிய டேபிலும் இருக்க, அதில் அவளது பைகளை வைத்து நிமிர்ந்தான். 

கடுப்பில் ஏற்கனவே பற்களை கடித்தபடி வேகமாக உள்ளே வந்த அதிரா, “உன் சேவை போதும். கிளம்பு.” என்றாள் அதிகாரமாய்.

“கிட்சன் எங்க இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே வீட்டினுள் அவன் முன்னேற, வெளியே குரல்கள் கேட்டது.

புருவ முடிச்சுடன் அதிரா எட்டிப்பார்க்க, தலை நரைத்து ஐம்பதுகளில் இருக்கும் ஒருவரை அழைத்து வந்தான் பரிதி.

“அம்மா,” என்று அறிமுகமும் படுத்த, சங்கடமாக பார்த்த அதிரா, “ஏன் அலைய வைக்குறீங்க பரிதி. நான் மேனேஜ் பண்ணிக்குவேன்.” என்றவள் பார்வையை பரிதியின் அம்மாவிடம் பதித்து, “உக்காருங்க ஆன்ட்டி. நான் வேண்டாம்ணுதான் சொன்னேன் கேக்காம அழைச்சிட்டு வந்தாச்சு உங்க பையன்.” 

“இதுல என்னமா இருக்கு. உனக்கு ஒத்தாசையா இருக்குறதுல என்ன குறைஞ்சிடப் போகுது.” என்று பெருந்தன்மையாய் சொன்ன பரிதியின் அம்மா ஜானகி புறம் அவள் மனம் இளகியது.

பரிதியையும் உட்காரச் சொன்னவள் கிட்சனுக்கு செல்ல அடியெடுத்து வைக்க, ஒரு கையில் பழம் மறு கையில் ஒரு டம்ளர் தண்ணீருடன் வந்தான் அகிலன்.

“பரிதி சார் வந்தாச்சா? ஹாஸ்பிடல்ல டிஸ்சார்ஜ் பண்ணதும் நாந்தான் வீட்டுக்கு வர சொன்னேன்.” என்றபடியே அவளிடம் தண்ணீர் டம்ளரை நீட்டினான்.

‘இது என் வீடு, என் லைப். நீ யாருடா முடிவெடுக்க?’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது அதிராவுக்கு. பரிதியும் அவன் அம்மாவும் இருப்பதால் இறுகிய முகத்துடன் டம்ளரை வாங்கி ஜானகியிடம் நீட்டினாள்.

“என்னை இன்னொரு நாள் கவனிக்கலாம், நீ டிரெஸ் மாத்திட்டு வாமா நான் பழம் நறுக்கி வைக்குறேன்.” என்று ஜானகி அகிலனிடமிருந்து பழத்தை வாங்கிக்கொள்ள,

“நைட் சாப்புடுற நேரமாச்சே?” என்றான் அகிலன். பரிதி அவன் அம்மாவை அழைத்துக்கொண்டு உடனே வந்துவிடுவான் என்று தெரியாததால் அதுவரை பழம் உண்ணட்டும் என்று குளிரூட்டியிலிருந்து பழம் எடுத்து வந்திருந்தான். இப்போது ஜானகி வந்துவிட்டதால் உணவு புறம் அவன் கவனம் சென்றுவிட்டது.

“அப்போ டிபன் பண்ணிடவா? சாப்புட்டு தூங்குறியாமா?” என்று அதிராவிடம் கேட்டார் ஜானகி.

“மேடம் ரொம்ப டயட் பாப்பாங்க. எப்படி வேணும்னு கேட்டு செஞ்சுக்குடுமா.” என்றான் பரிதி தன் பங்கிற்கு. 

“ஊசி மாத்திரை எல்லாம் கொடுத்திருக்காங்க, இப்போ போய் டயட் எல்லாம் பாலோ பண்ணா சரியா வருமா… சத்தானதா நீங்களே பாத்து செஞ்சு குடுங்கமா.” என்றான் அகிலன் உட்புகுந்து.

ஆளாளுக்கு பேசுறீங்களே என்னடா நடக்குது இங்க என்பது போல் விழி விரித்து பார்த்து நின்றாள் அதிரா. சட்டென தன் வீட்டிலேயே அந்நியப்பட்டது போல் இருந்தது. விஷு குடும்பம் தவிர்த்து வேறு எவரையும் அருகில் சேர்த்தது இல்லை. எப்போதும் தனிக்காட்டு ராணி அவள். இன்று அவள் கேட்காமலேயே சேர்க்காமலேயே உதவி செய்ய வந்திருக்கிறார்களே என்று மனம் நெகிழ்ந்து, தவித்து தடுமாறியது. அவர்களின் உரிமையான பேச்சும் அகிலனின் அதட்டலாக கவனிப்பும் கருத்தில் பதிந்து மனதை அலைப்புறச் செய்தது. ஏற்றுக்கொள்ள தடுமாறினாள். 

“குடிங்க மேடம்.” அகிலன் அவள் கையில் இருக்கும் டம்ளரை கைகாட்டிட, அப்போதைக்கு அது தேவையாய் இருந்தது.

தண்ணீர் குடித்துவிட்டு இதோ வந்துவிடுகிறேன் என்று அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டாள் அதிரா.

“ஏதாவது வேணும்னா சொல்லுமா வாங்கிட்டு வரேன்.” என்று பரிதி அம்மாவிடம் சொல்ல,

“நாம வந்தது உன் மேடமுக்கு புடிக்கல போலடா… முகமே சரியில்லை, ஒழுங்கா பேசவுமில்லை.” ஜானகி யோசித்து குறைபட,

“அவங்க ஆளே அப்படித்தான். தூங்கி எழுந்தா நாளைக்கு சரியாகிடுவாங்க.” என்ற அகிலனை யோசனையாக பார்த்தான் பரிதி. 

ஜானகி தலையை நாலாபுறமும் உருட்டிவிட்டு கிட்சன் இருக்குமிடம் தேடிக்கொண்டு சென்று பிரிட்ஜை ஆராய்ந்தார். திரும்பி உடனே மகனிடம் விரைந்தவர், “பிரிட்ஜுல இந்த மாவு, சட்னி, சாம்பார் எதுவும் இல்லைடா… வெறும் பழம் காய்கறியா இருக்கு.” என்று சொல்ல, லேசாக முறுவலித்தான் பரிதி.

“சொன்னேனே, மேடம் ஸ்ட்ரிக்ட்டா டயட் பாலோ பண்ணுவாங்க. அதனாலேயே இன்னமும் அவங்களுக்கு ஹெல்பர் கிடைக்கல. தனியாத்தான் எல்லாம் பாத்துக்குறாங்க.” என்றான் பரிதி. 

“அப்போ அந்த பொண்ணு வரட்டும் என்ன வேணும்னு கேட்டே செஞ்சிடுறேன்.” என்ற ஜானகி சோபாவில் அமர்ந்துகொண்டார். 

அவள் தனியாக இருக்கிறாள் என்ற அளவிற்கு தெரியும் ஆனால் உதவ ஆள் இருப்பார்கள் என்று நினைத்திருந்தான் அகிலன். தான் வரும்முன் வேலை முடித்து அவர்கள் கிளம்பி இருப்பார்கள் என்ற எண்ணம்தான் இதுவரை. இப்போது வீட்டை தனியாக பார்த்துக் கொள்கிறாள் என்றதும் அகிலன் கண்கள் வீட்டை ஒருமுறை சுற்றி வந்து அதன் நேர்த்தியை கண்டு மெச்சிக்கொண்டது. 

‘மேடம் எல்லாத்துலயும் நீட்டா இருக்காங்க அதான் நம்மள பாத்தாலே காண்டாகுறாங்க.’ என்றுவேறு அவன் மனசாட்சி சொல்லிக்கொண்டது.

நேரம் சென்றதே ஒழிய அதிரா கதவை திறக்கக்காணோம் என்றதும் மூவரின் பார்வையும் அவள் அறைக் கதவில் யோசனையுடன் பதிந்தது. 

“அம்மா என்னனு பாக்குறீங்களா?” என்று பரிதி அம்மா கையை சுரண்ட,

“ம்ம்… கை தூக்க முடியாதுனு சொன்னதானே. அதான் ட்ரெஸ் மாத்தி பிரெஷ் ஆக கஷ்டப்படுதோ என்னவோ…” என்றவாறே எழுந்து சென்று கதவை தட்டினார் ஜானகி.

இரண்டொரு நொடி சென்று கதவு திறக்கப்பட்ட, தயக்கத்துடன் உள்ளே நுழைந்தார் ஜானகி. சரியாக பொறுத்தப்படாத பொத்தான்கள் கொண்ட இரவு உடை அணிந்திருந்தாள்.

“பட்டன் இல்லாத டிரெஸ் போட முடியல, இந்த டிரெஸ்ல பட்டன் பிஞ்சி விழுந்துடுச்சு.” அவர் பார்வை உணர்ந்து சங்கடத்துடன் சொன்னாள் அதிரா.

அதிகம் டீ-சர்ட் வகைகளே அவளிடம் இருக்க, மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இலகுவாக போடக்கூடிய பொத்தான்கள் கொண்ட இரவு உடைகள் இருந்தது. அதைத் தேடி எடுத்து ஒருவாறு போட்டால் ஒரு பொத்தான் நேரம் பார்த்து பிய்ந்து விழ, எரிச்சல் கண்ணை மறைக்கும் நேரம் ஹாலில் மூவர் காத்திருப்பது நினைவு வர, சோர்வு வந்து அமர்ந்துகொண்டது. சரியாக ஜானகியும் கதவைத் தட்ட, சங்கடத்துடன் அவள் உணரும் அசெளகரியத்தை பகிர்ந்துவிட்டாள்.

“ஊசி நூல் இருக்கா? ஒரு பட்டன்தானே உடனே தச்சிடலாம்.” என்று ஜானகி இயல்பாய் கேட்டிட, வார்டோபிலிருந்து ஒரு டப்பியை எடுத்துவந்து கொடுத்தாள்.

ஜானகி சரசரவென ஊசியில் நூலைக் கோர்த்து அவளிடம் பட்டன் கேட்டு கைநீட்ட, அவரது உதவியை ஏற்கவே சங்கடமாய் இருந்தது அதிராவுக்கு. வேறு வழியில்லையே. அவர் பொத்தானை தைக்கும் வரை அமைதியாக இருந்தாள். பின் இருவரும் வெளியே வர, அகிலன் முகம் ஆராய்ச்சியாய் அவளைப் பார்த்தது. 

காவல் உடை தவிர்த்து முதல்முறை அவளை இலகுவான உடையில் பார்க்கிறான். எப்போதும் கொண்டைக்குள் அடைந்திருக்கும் அவள் சிகை எவ்வளவு அடர்த்தி, நீளம் என்று இன்று அது விரித்து விடப்பட்டிருக்கவும் கண்டுகொண்டான். முகம் கூட இறுக்கம் விடுத்து இளக்கம் பூசியிருந்தது. ஆனால் அதுவும் அகிலன் பார்வையை கண்டுகொள்ளும் வரைதான். என்றுமில்லாமல் அவன் பார்வையில் இன்று வித்தியாசம் தெரிய, அதை விரும்பவில்லை அவள்.

“அகிலன் நீங்க கிளம்புங்க.” வேலைக்கே உரித்தான மிடுக்கும் அழுத்தமும் மீண்டும் வந்து அமர்ந்துகொண்டது.

அவள் குரல் பேதத்தை அவனும் கண்டுகொண்டான். 

‘உடம்பு முடியலையேன்னு இறங்கிப் போனா ரொம்பத்தான்… எனக்கென்ன ஏதோ பண்ணட்டும், எப்படியோ போகட்டும்.’ இவன் ஈகோவும் விழித்துக்கொண்டது.

சட்டென எழுந்துகொண்டான், “நான் கிளம்புறேன் சார்.” என்று பரிதியிடம் சொல்லிவிட்டு ஜானகியிடம் சிறிய தலையசைப்புடன் கிளம்பிவிட்டான். 

அவன் செல்வதையே பார்த்த அதிரா அமைதியாய் சோபாவில் அமர்ந்துகொண்டாள். ஜானகி அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்க, இவள் சொல்லிய சேலட் எல்லாம் அவர் ஏற்கவே இல்லை. காய்கறிகள் போட்டு சம்பா ரவை வாங்கி வரச்சொல்லி உப்புமா செய்து கொடுத்தார். மூவரும் சேர்ந்துதான் உண்டனர்.

உண்டுமுடித்து, “மான்சி கேஸ் என்னாச்சு?” என்று ஆரம்பித்தாள் அதிரா.

“ஆட்டோல குறிப்பிட்டு சொல்றமாதிரி எந்த அடையாளமும் இல்லை. சோ கொஞ்சம் டைட்டா தான் இருக்கு மேம். இதுவரைக்கும் சொல்லிக்குற மாதிரி எதுவும் இல்லை. அந்த ஆட்டோ எந்த கேமராவிலும் பதிவான மாதிரி காட்டல.”

“மர்மமா இருக்கே.” என்றவள் கண்மூடி இருக்கையில் தலைசாய்த்து கண்மூடினாள். 

ஜானகி கண்காட்ட, சிறிது நேரம் இருந்துவிட்டு பரிதி கிளம்பிவிட்டான். ஜானகி அவளுடன் தங்கிக்கொண்டார். வீடு வந்த திருப்தியோடு அம்மா கைபக்குவதில் உண்ட உப்புமா அவளை நெகிழ்த்தியிருக்க, அதை வெளிகாட்டிக்கொள்ளாது அமைதியாக மாத்திரை போட்டு படுத்துவிட்டாள். படுத்த வேகத்தில் உறங்கியும் போனாள். 

மாறாக பேருந்தில் சென்றுக்கொண்டிருந்த அகிலனின் உறக்கம்தான் பறிபோனது. உடல்நிலை தளர்ந்திருக்கும் நேரத்திலும் அவளது மிரட்டல் உடல்மொழியும் இறுக்கமும் அவனை வெறுப்பேற்றி இம்சித்தது. அந்த இம்சையானது ஊர் சென்று தங்கை விஷேசம் முடித்து திரும்பி வந்ததும் இரட்டிப்பானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!