Skip to content
Post Views: 4,818
கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள பல மாவட்டங்களில் ஒன்று தான் ஈரோடு மாவட்டம். காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தின் ஒரு சாலையில் மனித நடமாட்டமே இல்லாத சூரியன் கூட உதிக்காத அந்த அதிகாலை வேளையில் அங்கு இருந்த ஒரு கடையில் ஐயர் ஹோம குண்டம் வைத்து மந்திரம் ஓதி பூஜை செய்து கொண்டிருக்க, அவருக்கு எதிரில் பக்தி மயமாக இருக் கைகளையும் கூப்பி நேராக அமர்ந்திருந்தாள் நிவாஷினி.
நிவாஷினிக்கு இடது பக்கமாகவும் ஐயருக்கு வலது பக்கமாகவும் அவளது அப்பா தவமணியும் அம்மா சங்கரியும் அமர்ந்திருக்க அவர்களுக்குப் பின்னால் அவளின் தம்பி சரண் அமர்ந்திருந்தான். இன்றைய நாள் அவள் வாழ்நாளின் முக்கியமான நாளாகும். ஏனென்றால் அன்று தான் நிவாஷினி தன் பெற்றோரை எதிர்பார்க்காமல் அவளது சொந்த முயற்சியில் வங்கிக் கடன் வாங்கி நினி சில்வர்ஸ் என்ற வெள்ளிக் கடையைத் தொடங்குகிறாள். அதற்காக அவள் பாடுபட்டது கொஞ்சம் நஞ்சமல்ல. தன் தந்தையிடம் கேட்டிருந்தால் கண்டிப்பாக உதவி இருப்பார். ஆனால் யாருடைய தலையிடும் இல்லாமல் தன் சொந்த முயற்சியால் ஆரம்பிக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் அவள் ஏறாத வங்கி இல்லை. எங்கும் அவள் கேட்ட கடன் தொகையை அவளை மட்டும் நம்பித் தர இயலாது என்று கைவிட்டனர். ஒரு கட்டத்தில் தளர்ந்து போய் எங்குத் தன் தந்தையின் உதவியை நாடி விடுவோமோ என்று அஞ்சிய போது அவளது பயத்தைப் போக்குவது போல் ஒரு வங்கியிலிருந்து அவளது எண்ணிற்கு அழைப்பு வர, அந்த அழைப்பு சாதாரண அழைப்பாக இல்லாமல் அவள் கேட்ட கடன் தொகையை வழங்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படத் தாமதிக்காமல் அவர்களைப் பார்க்கச் சென்றதின் விளைவு இன்று சொந்தமாகத் தொழில் தொடங்க வைத்துள்ளது.
Advertisement
எந்த நல்லக் காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும் முதற் கடவுளான கணபதியை வணங்கி விட்டு அவருக்குப் பூஜை, ஹோமம் செய்தால் அந்தக் காரியம் எந்தத் தடங்கலும் இன்றி சுபிட்சமாக நடக்கும் என்ற ஐதீகம் படி நிவாஷினி தொழில் தொடங்குவதற்கு முன்பு அவளது தொழில் நல்லபடியாக ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற வேண்டுமென்று முதற் கடவுளான கணபதிக்கு ஹோமம் நடத்துகிறாள்.
Advertisement
Advertisement
அன்று அதிகாலை ஹோமத்திற்கு அவர்கள் யாரையும் அழைக்கவில்லை. ஏழு மணி போல் நிவாஷினியின் பெற்றோர் கையால் ரிப்பன் வெட்டும் நிகழ்விற்குத் தான் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஹோம பூஜை முடித்து ஐயர் செல்ல, சரண் வேகமாக,”நான் வீட்டுக்குப் போயிட்டு செவன்கு அப்பாவும் அம்மாவும் ரிப்பன் வெட்டும் போது வரேனே! இப்போ தான் ஃபை தர்ட்டியே ஆகுது. ரிப்பன் வெட்டி கடை திறக்க இன்னும் ஒன்றரை மணிநேரத்துக்கு மேல ஆகும். அதனால வீட்டுக்குப் போய் ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு வந்துடுறேன். செமயா தூக்கம் வருது எனக்கு. இங்குச் சும்மா தான உட்கார்ந்திருக்கப் போறேன்.” என்று சோம்பலாகச் சொல்ல, சங்கரி அவனை முறைத்தார்.
Advertisement
அவர் பேசும் முன்பு முந்திக் கொண்ட தவமணி,”சரி சரண் நீ போ, இங்கே எந்த வேலையும் இல்லை. ஜூவல்ஸ் எல்லாம் நானும் நிவியும் எடுத்து வைச்சுக்கிறோம். வேலைக்கு வைச்ச பொண்ணுங்களும் வந்துருவாங்க. அதனால நீ வீட்டுக்குப் போய். நான் உனக்குக் கால் பண்றேன் அப்போ வந்துடு சரியா. சங்கரி நீ கூடப் போயிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாயேன். காய்ச்சல் வைச்ச உடம்பு. காலைல வேற சீக்கிரம் எழுந்து சொல்லச் சொல்லக் கேட்காமல் தலைக்கு வேற குளிச்ச!” என்று கூறிக் கொண்டே சங்கரியின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தார். மிதமான சூடாக இருக்க இப்போது முறைப்பது தவமணி முறையாகியது.
“அதெப்படி உங்களையும் நிவியை மட்டும் தனியா விட்டுவிட்டு போறது? சரண் போகட்டும் நான் இங்கேயே இருக்கேன்.”
“அம்மா நாங்க என்ன அத்துவான காட்டுலயா இருக்கோம் நீங்க எங்களைத் தனியா விட்டுட்டு போக இவ்ளோ யோசிக்க? முதல்ல உங்க ஹெல்த் தான் மா முக்கியம். அதனால அப்பா சொன்ன மாதிரி நீங்க வீட்டுக்குப் போங்க. இங்கே நாங்க பார்த்துக்கிறோம்.”
“நல்லா சொல்லு டா. அப்படியே இவ பெரிய சூராதி சூரி! இவள் தான் நம்மளை காப்பாற்ற போறா பார். சும்மா ஏதாவது டைலாக் பேசாமல் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடு.” என்று தவமணி கூறவும் சங்கரி கோபத்துடன் ஏதோ கூற வந்தார். ஆனால் அவர் கூறும் முன்பு வேகமாகச் சரண் அவர் கையைப் பற்றி அங்கிருந்து இழுத்து நடந்து கொண்டே,”நீங்க பேசுனா பேசிட்டே இருப்பீங்க. அப்புறம் எல்லாரும் வந்துருவாங்க. என்னால தூங்க முடியாது. ஸோ மம்மி நவ் ஸ்டாப் யுவர் டாக் அண்ட் ஸ்டார்ட் யுவர் வாக்.” என்று கூறிக் கொண்டே மற்றவர்களைப் பேச விடாமல் அம்மாவுடன் அங்கிருந்து அவனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று விட்டான்.
அவர்கள் இருவரும் சென்றவுடன் தவமணியும் நிவாஷினியும் அடுத்தடுத்த வேலையைச் செய்ய ஆரம்பித்தனர். அதாவது அவர்களிடம் இருக்கும் வெள்ளி நகைகளைக் கடைகளில் இருக்கும் ஷோக்கேசில் அதன் அதன் இடத்தில் அடுக்க ஆரம்பித்தார்கள்.
“நிவிமா எல்லா டிசைன்ஸூம் சூப்பரா இருக்கு. கண்டிப்பா நீ பெரிய ஆளா வருவ. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு டா.” என்று வாஞ்சையாக அவளது தலையைத் தடவிக் கூறினார் தவமணி.
“தாங்க்ஸ் பா. எங்க நான் வரைஞ்சு கொடுத்த மாதிரி செய்யாம ஏதாவது சொதப்பிருவாங்களோனு ஒரு பயம் இருந்துட்டே இருந்துச்சு. ஆனால் அப்படி இல்லாமல் நான் நினைச்ச மாதிரியே அவங்க செஞ்சு கொடுத்துட்டாங்க.” என்று சந்தோஷமாகக் கூறினாள் நிவாஷினி.
ஆம் அங்கிருக்கும் ஒவ்வொரு வெள்ளி நகையும் அவளே டிசைன் செய்து வரைந்து கொடுத்ததாகும்.
“எப்படியோ நான் உனக்குக் காசு கட்டி ஜூவல்லரி டிசைன் படிக்க வைச்சது நல்லதா போச்சு. நான் கூட நீ ஏதோ ஹாபியா(hobby) தான் அதைப் படிச்சேன்னு நினைச்சேன். அதுவும் நீ டிசைனிங்க் படிச்சு முடிச்சு கிட்டத்தட்ட இரண்டரை வருஷமாகுது. உனக்கு மறந்து போயிருக்கும்னு நினைச்சேன். ஆனால் அதை வைச்சு சொந்தமா பிஸினஸ் பண்ணுவனு நான் நினைச்சு கூடப் பார்க்கலை.”
“எனக்குமே முதல்ல அந்த தாட் இல்லை பா. ஆனால் நான் ஃபாரின்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் என் கண்ணுல என்னோட டிசைனிங் நோட் பட்டுச்சு. அதைப் பார்த்த அப்போ யாரோ என்கிட்ட எப்போவோ நீ ஏன் உன்னோட டிசைன்ஸ்ல சொந்தமா ஜூவல் டிசைன் பண்ணக் கூடாதுனு கேட்டது ஞாபகம் வந்துச்சு. எனக்கும் படிச்சது எல்லாம் ஏதோ நேத்து படிச்ச மாதிரி ஞாபகம் இருந்தது. சரி நாம ஏன் ட்ரை பண்ணக் கூடாதுனு தோனுச்சு பா. அதன் விளைவு தான் இப்போ இந்தக் கடை.” என்று நிவாஷினி கூறி முடிக்க, தவமணி முகத்தில் ஏதோ மாற்றம் நன்றாகவே தெரிந்தது.
அதைப் பார்த்த நிவாஷினி,”அப்பா என்னாச்சு? ஏன் திடீரென ஒரு மாதிரி ஆகிட்டீங்க?” என்று கேட்டாள்.
உடனே தெளிந்த தவமணி,”அதெல்லாம் ஒன்னுமில்ல நிவி. ஆமா யாரோ சொன்னாங்கனு சொன்னியே அது யார் நிவி?” என்று பேச்சை மாற்றி விட்டார்.
“அது ஞாபகமில்லை பா. ஆனால் கண்டிப்பா அந்த நபர் எனக்கு நல்ல யோசனை தான் கொடுத்துருக்காங்க.”
“ம் அதுவும் சரி தான் மா.” என்று வாய் வார்த்தையாக அவர் கூறினாலும் மனதில் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் மகள் முன்பு அதைக் காட்டாமல் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தார்.
முதலில் தங்கம், பிளாட்டினம், டைமண்ட் இப்படித் தான் நகை டிசைன் செய்ய யோசித்தாள் நிவாஷினி. ஆனால் அதைத் தயாரிக்க அதிகமான பணம் தேவைப்படும். அது சாத்தியப்படாத ஒன்று. அதே போல் இப்போது தங்கம் ஏறும் விலைக்கு அவள் அதை விற்றால் லாபம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே. அவளிற்கும் கையைக் கடிக்காமல் அதே போல் பலதரப்பட்ட மக்களும் அவளிடம் வாங்க வேண்டுமானால் வெள்ளி தான் சிறந்தது என்று முடிவிற்கு வந்து அதைச் செயல்படுத்தவும் செய்துவிட்டாள்.
அவர்கள் ஓரளவிற்கு எடுத்து வைத்து முடிக்கவும் நிவாஷினி வேலைக்கு என்று வைத்த பெண்கள் இருவரும் வருவதற்குச் சரியாக இருந்தது.
“அக்கா நாங்க வந்து எடுத்து வைக்க ஹெல்ப் பண்ணிருப்போமே! அதுக்குள்ள நீங்களே எடுத்துட்டு வைச்சீட்டீங்களா?”
“ஆமா மதி நானும் அப்பாவும் சும்மா தான இருக்கோம்னு எடுத்து வைச்சுட்டோம்.”
“சரிங்க அக்கா. அப்போ நாங்க என்ன பண்றது இப்போ?” என்று இன்னொரு பெண் சுதா கேட்டாள்.
“இதோ மிச்சம் இருக்கு பார். அதை எடுத்து வைங்க.” என்று அவர்களிடம் கூறிவிட்டு தன் அப்பாவிடம்,”அப்பா நீங்க வந்து உட்காருங்க. நான் பார்த்துக்கிறேன்.” என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு நாற்காலியில் அமர வைத்தாள்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த டீ கேன்னில் நாலு பேருக்கும் கப்பில் டீ பிடித்துக் கொண்டு வந்து கொடுக்க அனைவரும் அமர்ந்து தேநீர் பருகினார்கள்.
தேநீர் குடித்து முடித்தவுடன் சுதாவும்,மதுவும் வேலையைப் பார்க்கச் சென்று விட, நிவாஷினி தந்தையின் அருகில் அமர்ந்து அவளது கைப்பேசியை எடுத்து ஏதோ பார்க்க ஆரம்பிக்க, தவமணி அவளிடம்,”என்ன அவ்ளோ மும்முரமாகப் பார்த்துட்டு இருக்க நிவி?” என்று கேட்டார்.
“நம்ம சீசிடீவி செட் பண்ணோம்ல பா அதெல்லாம் வேலைச் செய்தானு பார்த்துட்டு இருக்கேன் பா.” என்று கூறி அவளது கைப்பேசியை அவரிடம் காட்ட அவரும் அதை வாங்கிப் பார்த்தவர் திருப்தியுடன் அவளிடம் கைப்பேசியைத் தந்தார்.
“நல்லா எல்லாத்தையும் யோசிச்சு பண்ணிருக்க நிவிமா. எனக்கே ஆச்சரியமாக இருக்கு என்னோட பொண்ணா இவ்ளோ பொறுப்பா இருக்குனு ஆச்சரியமாக இருக்கு.” என்று சிலாகித்துக் கூறினார் தவமணி.
“அப்பா அதெல்லாம் கடமைனு வந்துட்டா நாங்க எல்லாம் வெள்ளைக்காரன் பா.” என்று கூறிச் சிரிக்க அவரும் அவளுடன் சேர்ந்து சிரித்தார்.
இறுதியாக ஒருமுறை அனைத்தையும் சரிபார்த்து முடித்த நிவாஷினி நிறைவாக உணர்ந்தாள். அதே சமயம் சரணும் சங்கரியும் தவமணி அழைப்பதற்கு முன்பே வந்துவிட்டனர். இருட்டில் பார்த்ததை விட வெளிச்சத்தில் அலங்காரத்துடனும் நகைகளை எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் சங்கரிக்கும் நிறைவாக இருந்தது.
நிவாஷினியிடம் வந்த சங்கரி அவளின் கையைப் பற்றிக் கொண்டு,”ரொம்ப அழகா இருக்கு நிவி. என் பொண்ணுக்கும் பொறுப்பு வந்துருச்சுனு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.” என்றார் மகிழ்ச்சியாக.
“அம்மா என்னது இது அப்பாவும் அதைத் தான் சொன்னார். நீயும் இதையே சொல்ற! என்னைப் பார்த்தா பொறுப்பில்லாத பொண்ணு மாதிரியா தெரியுது?” என்று பொய் கோபத்துடன் கேட்க, சங்கரி பதில் பேசும் முன் வேகமாக வந்த சரண்,”அது உனக்கு இப்போ தான் தெரியுதா நிவி!! எங்களுக்கு எல்லாம் எப்போவோ தெரியும்.” என்று அவன் கூற, நிவாஷினி கோபத்துடன் அவனை அடிக்கத் துரத்தச் சரணோ அவளிற்குப் போக்கு காண்பித்து ஆட்டம் காட்ட, வேகமாக வந்த நிவாஷினி தன் எதிரே வந்த ஆடவனைப் பார்க்காமல் அவன் மேல் மோதி நின்றாள்.
ஒரு நிமிடம் திடுக்கிட்ட நிவாஷினி அந்த ஆடவனின் பின்னால் சற்றுத் தள்ளி நின்றிருந்த சரணை முறைத்து விட்டு அந்த ஆடவனிடம்,”சாரி தம்பியை மட்டும் கவனிச்சு உங்களைக் கவனிக்காமல் விட்டுட்டேன். வெரி சாரி.” என்று அவனை நேருக்கு நேர் அவன் கண்களைப் பார்த்துக் கூறினாள்.
“ஹே கூல் கூல். நோ இஸ்யூஸ்.” என்று அந்த ஆடவன் கூற, வெளியில் ஏதோ சத்தம் கேட்டு வேகமாக வந்த தவமணி அந்த ஆடவன் தன் பெண்ணிடம் பேசுவதைப் பார்த்ததும் அவனிடம் வேகமாக வந்தார்.
“வாங்க தம்பி, ஐயாவும் அம்மாவும் வரலையா தம்பி?” என்று சற்றுப் பவ்வியமாகக் கேட்டார் தவமணி.
“மூணு பேரும் சேர்ந்து தான் வந்தோம் தவமணி சார். அப்பாவைப் பத்தி தான் உங்களுக்குத் தெரியுமே அவரோட வண்டியை யாரையும் ஓட்ட விடமாட்டார். அதான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்னு என்னை மட்டும் இறக்கி விட்டுட்டு போயிருக்கார்.” என்று அவன் கூறவும் தலையசைத்தார் தவமணி.
இருவரையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த நிவாஷினியைப் பார்த்து,”தம்பி தான் நம்ம கங்காதரன் ஐயா மகன்.” என்று கூறவும் அவனைப் பார்த்து”ஹாய்” என்றாள் நிவாஷினி.
“ஹாய் ஐ ஆம் விஷாகன்.” என்று கூறி கை நீட்டினான்.
அவளும் மரியாதைக்காக அவனிடம் கை நீட்டி,”ஐ ஆம் நிவாஷினி.” என்று கூறினாள்.
விஷாகன் அடுத்துப் பேசுவதற்கு முன்பு வேகமாக தவமணி,”உள்ள வாங்க தம்பி.” என்று அவனை அழைக்க, சரியாகக் கங்காதரனும் அவரது துணைவி கோகிலாவும் வர”வாங்க ஐயா, வாங்க அம்மா.” என்று வரவேற்றார் தவமணி.
“வாங்க அங்கிள், வாங்க ஆண்டி.” என்று நிவாஷினியும் வரவேற்றாள்.
“சின்ன பொண்ணா பார்த்தது உன்னை. நல்லா வளர்ந்துட்ட.” என்று கூறினார் கங்காதரன். அதற்கு அழகாக அவளது தெத்துப் பல் தெரியச் சிரிக்க அதை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் விஷாகன்.
“ஆமாங்க ஐயா, படிக்கவும் வெளிநாடு அனுப்பிட்டேன். அதான் நீங்க பார்த்து ரொம்ப வருஷம் ஆன மாதிரி இருக்கு.” என்றார் தவமணி.
அதே நேரம் சங்கரியும் அங்கே வர கோகிலா அவரோடு பேசிக் கொண்டே உள்ளே சென்றார். கங்காதரனும் தவமணியிடம் கடையைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்க விஷாகனும் நிவாஷினியும் அமைதியாக இருந்தார்கள்.
“அப்பா நிற்க வைச்சே பேசப் போறீங்களா?.” என்று அவள் கேட்கவும் தான் தன் நெற்றியில் அடித்துக் கொண்ட தவமணி கங்காதரனையும் விஷாகனையும் அழைத்துக் கொண்டு சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த நாற்காலி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். விஷாகன் நிவாஷினியிடம் தலையசைத்து விடைபெற்று அவர்களின் பின்னே சென்றான்.
விருந்தாளிகள் எல்லோரும் வர ஆரம்பிக்க, நேரமாவதை உணர்ந்து வேகமாகச் சரண் கடையின் முன்னே உள்ள கேட்டின் பிடியில் இரு பக்கமும் ரிப்பனை கட்டினான். நிவாஷினி தன் தந்தையையும் தாயையும் கைப்பிடித்து அழைத்து வந்து ரிப்பன் முன்னால் நிப்பாட்டினாள். பின்னர் அவர்களிடம் கத்திரிக்கோலை தர, இருவரும் சேர்ந்து ரிப்பனை வெட்ட, வந்திருந்த விருந்தாளிகள் அனைவரும் கைதட்டினர்.
கடைக்குள் சென்றதும் நிவாஷினி தன் தந்தையையும் தாயையும் கல்லாவின் முன்பு உட்காரக் கூற உடனே மறுத்த தவமணி,”இது உன்னோட கடை நிவி. அதனால நீ தான் உட்காரனும்.” என்றார்.
“ஆமா நிவிமா நீ முதல்ல உட்கார். வேற எதுவும் சொல்லாத. இன்னைக்கு நாள் முழுக்க இருக்கு. அப்புறம் நாங்க உட்கார்ந்துக்கிறோம்.” என்று சங்கரி நிவாஷினி மறுக்க முடியாத படிக் கூற, நிவாஷினியும் கல்லாவின் முன் சென்று அமர்ந்தாள்.
தவமணியும் சங்கரியும் அவர்களின் உறவுகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. சங்கரியின் அண்ணன் மகனிற்கு நிவாஷினியை பெண் கேட்க, தவமணி அவள் படிக்கும் காரணத்தைக் கூறி முடியாது என்று விட்டார். அதனால் அவர்களுக்குக் கோபம். இப்பொழுது அவர்கள் மகனிற்கு வேறு இடத்தில் பெண் பார்த்துக் கல்யாணம் முடிந்திருந்தாலும் அந்தக் கோபம் அவர்கள் மனதில் இருக்கத் தான் செய்தது. அதே போல் தவமணிக்கும் அவரது அக்காவின் கணவருக்கும் முன்பிருந்தே ஆகாது. அவர் சற்று கெத்து காண்பிக்கும் ரகம். அதனால் வேண்டுமென்றே தாமதமாகத் தான் வருவார் ஏதாவது விஷேசம் தவமணி வீட்டில் நடந்தால்.
கங்காதரனும் கோகிலாவும் எதை வாங்க என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த விஷாகன்,”அம்மா அந்த ப்ரேஸ்லெட் நல்லா இருக்கு. எனக்கு அதை வாங்கப் போறேன்.” என்றான்.
கோகிலா அவனை விசித்திரமாகப் பார்த்தவர்,”உனக்கு நகைனா அலர்ஜினு சொல்லுவ. இப்போ என்னடா புதுசா ப்ரேஸ்லெட் எல்லாம் வாங்குற?” என்று ஆச்சரியமாகக் கேட்டார்.
“அம்மா கடை திறப்பு விழாவுக்கு வந்துட்டு எதுவும் வாங்காமல் போனா நல்லவா இருக்கும். அதான் வாங்குகிறேன்.” என்று தோலைக் குலுக்கி அலட்சியமாகப் பதில் கூற, கோகிலாவும் அப்படித் தான் இருக்கும் என்று நம்பி அவன் கூறிய ப்ரேஸ்லெட்டையே வாங்கினார். அதோடு அவருக்கு இரு கைகளிலும் போட்டுக் கொள்ளுவதற்கு ஏற்ப வளையல் இரண்டும் வாங்கினார்.
நகையிலே அதன் எடை மற்றும் விலையைப் போட்டு டேக் செய்திருந்ததால் பணிப் பெண்களுக்கும் வேலைப் பளு குறைந்தது. அவர்கள் பில் போட்டுக் கொண்டு நிவாஷினியிடம் தர, அவளோ தான் அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பின்னால் இருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த சாமி படத்தைப் பார்த்துக் கும்பிட்டு விட்டு அவர்கள் வாங்கிய நகையோடு சேர்த்து நினி சில்வர்ஸ் என்று அச்சிடப்பட்டிருந்த ஒரு சிறிய பேக்கையும் சேர்த்துக் கொடுத்தாள்.
“ரொம்ப சந்தோஷம் மா. சாமி கும்பிட்டு உன் கையால எங்கிட்ட கொடுத்திருக்க. கண்டிப்பா இதை நான் ரொம்ப நாள் உபயோகப்படுத்துவேன்.” என்று சந்தோஷமாகக் கூறினார் கோகிலா.
“இது ஆரம்பம் தான் மா. நீ சாதிக்க இன்னும் நிறையத் இருக்கு. என்னோட வாழ்த்துக்கள் உனக்கு எப்போவும் இருக்கும் மா.” என்று கங்காதரனும் கூறிவிட்டு நகைக்கான பணத்தைத் தந்தார்.
“டிசைன்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. நீங்களே டிசைன் பண்ணதுனு தவமணி சார் சொன்னார். உங்களுக்குள்ள நிறைய திறமை இருக்கு நிவாஷினி. நான் கண்டிப்பா என்னோட ப்ரண்ட் சர்க்கிள்ள உங்க கடையைப் பற்றி சொல்றேன்.” என்று விஷாகன் கூற, நிவாஷினிக்கு பயங்கர சந்தோஷம்.
“ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார்.” என்று மனமார அவளது நன்றியைக் கூறினாள் நிவாஷினி.
“இந்த சார் எல்லாம் வேண்டாம். கால் மீ விஷாகன்.”என்று அவன் கூறவும் அவளும் தலையசைத்து சரியென்றாள்.
அவளிடம் சொல்லிக் கொண்டு அவர்கள் கிளம்ப எத்தனிக்கும் போது தவமணி வேகமாக அவர்களிடம் வந்து,”ஐயா பக்கத்து ஹோட்டல்ல காலை டிஃபன் சொல்லிருக்கேன். நீங்க மூணு பேரும் சாப்பிட்டுத் தான் போகனும்.” என்று விடாப்பிடியாகக் கூற, மூவரும் சரியென்று தலையசைக்க, தவமணி அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவர் கண்ணில் சற்றுத் தள்ளி ஒரு கடையின் முன்பு தனது வாகனத்தில் சாய்ந்து கையைக் கட்டி நின்று கொண்டிருந்த உருவம் பட, தவமணியின் நெற்றியில் முடிச்சுக்கள் விழ ஆரம்பித்தன. உடனே அவரது உடலில் ஒருவித மாற்றம் வர, திரும்பிக் கடையைப் பார்த்தவர் தனது குடும்பத்தில் உள்ள யாரும் அந்த உருவத்தைப் பார்த்து விடக் கூடாதென்ற பதட்டம் அவரது விழிகளில் நன்றாகத் தெரிந்தது.
தவமணியின் மாற்றத்தைப் பார்த்த கங்காதரன் அவரிடம்,”என்னாச்சு தவமணி? ஏன் ஒரு மாதிரி இருக்க? உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று கேட்டார்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை ஐயா. காலைல பூஜைக்குச் சீக்கிரம் எழுந்தது தலைச் சுத்துதுனு நினைக்கிறேன். இருங்க உங்களுக்குத் துணையா சரணை அனுப்புறேன்.” என்று கூறி கங்காதரனைப் பேசவிடாமல் சரணை அழைத்து அவனுடன் அனுப்பி வைத்தவர் வேகமாக அவரை மிரட்சி அடையச் செய்த உருவத்தை நோக்கிச் சென்றார் தவமணி.
error: Content is protected !!