Skip to content
Post Views: 761
தவமணி அவசரமாகக் கங்காதரன் மற்றும் அவரது குடும்பத்தைச் சரணுடன் சாப்பிட அனுப்பி வைத்தவர் மகிழுந்தில் சாய்ந்து கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த உருவத்தை நோக்கி வேகமாகச் சென்றார். அவர் அந்த உருவத்தின் அருகில் வரவும் நேராக நின்றது அந்த உருவம்.
“உனக்கு இங்க என்ன வேலை?” கோபத்துடன் அந்த உருவத்தைப் பார்த்துக் கேட்டார் தவமணி.
Advertisement
“நான் ஏன் வந்தேன்னு உங்களுக்குத் தெரியாதா?” நக்கலுடன் கேட்டது அந்த உருவம்.
“இங்கே பார் நீ எதுக்கு வந்த ஏன் வந்தனு எனக்கு ஆராய்ச்சி பண்ண எல்லாம் நேரமில்லை. ஒழுங்கா இங்கிருந்து போயிடு.”
Advertisement
Advertisement
“ப்ச் நான் இங்கே நின்னா உங்களுக்கு என்ன பிரச்சனை சார்? இது என்ன நீங்கக் கட்டின ரோடா?” மீண்டும் நக்கலாகக் கேட்க, தவமணிக்கு இரத்தம் அழுத்தம் அதிகமாகியது.
Advertisement
“ஏய் நான் அமைதியா இருக்கிறதால நீ எது வேணாலும் செய்யலாம்னு கனவுக் காணாத. என் பொண்ணுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். என்னை மீறி தான் நீ என் பொண்ணை நெருங்க முடியும். ஆனால் உனக்கு அந்த மாதிரி ஒரு நிலைமை வரவே வராது. அதனால பகல் கனவுக் காணாம இங்கிருந்து முதல்ல போ.” கோபத்துடன் அடிக் குரலில் அவனை மிரட்டினார் தவமணி.
அவரது மிரட்டலைக் கேட்டு சத்தமாகச் சிரித்தவன் அடுத்த நொடியே கோபமாக முகத்தை மாற்றியவன்,”நீங்க நிவாஷினியோட அப்பா அப்படிங்கிற ஒரே காரணத்துக்காகத் தான் நானும் பொறுமையா போயிட்டு இருக்கேன். இதுவே வேற யாராவதா இருந்தால் இங்கே நடக்கிறதே வேற! என்னை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது. அப்புறம் என்ன சொன்னீங்க உங்களை மீறி உங்க பொண்ணை நான் நெருங்க நினைச்சு இருந்திருந்த இன்னைக்கு அவள் என்னோட மனைவியா என் பக்கத்தில் இருந்திருப்பா. அதை ஞாபகத்தில் வைச்சுக்கோங்க. என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.” என்று அவனும் அவரது கோபத்திற்கு மேல் கோபம் கொண்டு சீற்றத்துடன் கூறினான்.
“ஏய் அதைத் தான் நானும் சொல்றேன். என் பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு. நான் சும்மா இருக்கிறதைப் பார்த்து எதுவும் பண்ண மாட்டேன்னு நினைச்சுறாதா!! நம்பி க்ரூப்ஸ் பையனா நான் பயந்துடுவேன்னா? உன்னால என் பொண்ணுக்கு எதுவும் வர நான் விடமாட்டேன். நீ எவ்ளோ பெரிய பணக்காரனா இருந்தாலும் அது எனக்குத் தேவையே இல்லாத விஷயம். இன்னொரு முறை இப்படி என் பொண்ணு முன்னாடி வரப் பார்த்த நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” என்று அவர் கோபத்துடன் கூறினார்.
“அதையும் பார்த்திடலாம்.” என்று அவன் அவரிடம் கூறிக் கொண்டிருக்கும் போது அவனது கைப்பேசியில் செய்தி வந்த ஒலி வர அதை எடுத்துப் பார்த்தவன் முகத்தில் சன்னச் சிரிப்பு வந்தது. ஆனால் அதை தவமணி முன்னால் காட்டாமல் உடனே முகத்தை மாற்றிக் கொண்டவன் அவரிடம்,”உங்க கண்ணு முன்னாடியே உங்க பொண்ணை நான் தூக்குறேன். அப்புறம் இன்னொரு விஷயம் இந்த ஜென்மத்தில் உங்க வீட்டுக்கு நான் ஒருத்தன் தான் உங்களுடைய மருமகன். அதை யார் நினைச்சாலும் மாத்த முடியாது. முக்கியமா நீங்க நினைச்சாலும் மாத்த முடியாது.” என்று அவனும் கோபமாகக் கூற, அதே நேரம் அப்பா என்ற கூப்பிட்டுக் கொண்டே அவர்கள் அருகில் வந்தாள் நிவாஷினி.
அவளைப் பார்த்ததும் இருவரின் முகமுமே அப்படியே நிர்மலமாக மாறியது. தவமணி திரும்பி அவனை அங்கிருந்து கிளம்பச் சொல்ல அவனோ அவரைக் கண்டுகொள்ளாமல் நிவாஷினியைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தான். அதில் தவமணியின் இரத்தம் அழுத்தம் ஏறியது தான் மிச்சம்.
“நீ போ நிவி நான் வரேன்.” என்றார் தவமணி.
ஆனால் அவளோ அவனைப் பார்த்து,”இவர் யார் பா? நம்ம கடைக்கு இன்வைட் பண்ணீங்களா?” என்று கேட்டாள்.
எங்கு அவன் எதுவும் கூறிவிடுவானோ என்று முந்திக் கொண்டு,”இல்லை மா, ஏதோ தெரிஞ்சவங்க மாதிரி இருந்ததுனு பார்த்தேன். ஆனால் யாருனு தெரியலை.” என்று கூறினார் தவமணி. அதற்கு அவனோ அவரை முறைக்க அதைப் பார்த்துவிட்டாள் நிவாஷினி.
“ஹலோ இப்போ எதுக்கு எங்க அப்பாவை முறைக்கிறீங்க?” என்று அவனிடம் நேரடியாகக் கேட்டு விட்டாள்.
தவமணிக்கு இது என்ன டா புது தலைவலி என்று தான் அவனைப் பார்த்தார். ஆனால் அவனோ சிரித்துக் கொண்டே,”நான் ஹலோ இல்லை ஐ ஆம் ரேவந்த்.” என்று சற்று மிடுக்காகக் கூறினான்.
“ஸோ வாட்? நீங்க என்னவா வேணாலும் இருந்துக்கோங்க ஐ டோண்ட் கேர். ஆனால் எங்க அப்பாவை முறைக்க நீங்க யார்?” என்று அவனிடம் கேள்வி கேட்டவள் தன் அப்பாவிடம்,”அப்பா நீங்க இவர் யாருனு தெரியலைனு சொல்றீங்க, ஆனால் நான் வரதுக்கு முன்னாடி நீங்க இவர்கிட்ட கோபமா பேசிய மாதிரி இருந்ததே. இதோ இப்ப கூட அவர் உங்களை முறைச்சார். என்கிட்ட எதுவும் மறைக்கிறீங்களா? இவர் எதுவும் பிரச்சனை பண்றாரா?” என்று அவசரமாகக் கேட்டாள். எங்கே தன் தந்தைக்கு எதுவும் பிரச்சனையோ என்று பயம் அவள் மனதைப் பிசைந்தது.
“ச ச அதெல்லாம் எதுவுமில்லை நிவாஷினி. எந்தப் பிரச்சனையும் இல்லை. இவர் யாருனே எனக்குத் தெரியாது. நான் சாதாரணமா பேசினது உனக்குக் கோபமா பேசினது போல தெரிஞ்சுடுச்சு. அவரும் சாதாரணமாகத் தான் பார்த்துருப்பாங்க. இதை விடு நாம போகலாம் வா. நாம கூப்பிட்டவங்க எல்லாரும் வந்து நமக்காக காத்திருப்பாங்க நிவி. அவங்களை நீ தான் முதலாளியா இருந்து ரிசீவ் பண்ணனும். அதனால வா நாம போகலாம்.” என்று கூறி அவளை மேலும் யோசிக்க விடாமல் அவளை இழுத்துக் கொண்டு நடந்தார் தவமணி.
நிவாஷினிக்கு நன்றாகப் புரிந்தது தந்தை தன்னிடம் எதையோ மறைக்கிறார் என்று. இப்போதைக்கு எதுவும் கேட்க வேண்டாம் பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து தந்தையின் இழுப்பிற்கு ஏற்றவாறு அங்கிருந்து சென்றாள்.
அவர்கள் போவதை அப்படியே பார்த்துக் கொண்டே நின்றான் ரேவந்த். அவன் தவமணி மேல் துவேஷம் கொண்டு அவரைப் பார்க்க, அந்தப் பார்வையை எதார்த்தமாக அவனைத் திரும்பிப் பார்த்த நிவாஷினியின் கண்களில் விழுந்துவிட்டது. ஒரு நிமிடம் அவள் உடம்பே தூக்கிவாரி போட மீண்டும் திரும்பிக் கொண்டாள்.
அவளது மாற்றத்தைப் பார்த்த ரேவந்த் உடனே அவனது பார்வையை மாற்றிக் கொண்டான். ஆனால் அவன் செய்த முட்டாள்தனத்தை நினைத்து நெற்றியில் அடித்துக் கொண்ட ரேவந்த் எப்படி நிவாஷினியை தன் பக்கம் கொண்டு வருவது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
இங்கு தவமணியோடு கடையின் உள்ளே வந்த நிவாஷினி பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவை ரேவந்த்தின் துவேஷப் பார்வை அப்போதே விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்து தன் அப்பாவிடம்,”அப்பா உண்மையைச் சொல்லுங்க. யார் அவன்? உங்களை எப்படி முறைச்சான் தெரியுமா? யாராவது தெரியாதவங்களை இவ்ளோ கோபத்தோடு பார்க்க முடியுமா? என்கிட்ட எதை மறைக்குறீங்க?” என்று கேள்விகளால் துளைத்து எடுத்தாள் நிவாஷினி.
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் ஒரு நிமிடம் மவுனமாக நின்றவர் பின்னர் அந்த அமைதியும் வேறு அர்த்தமாகக் கொடுத்துவிடும் என்று உணர்ந்து,”உன்கிட்ட மறைக்க என்ன இருக்கு சொல்லு? அவன் யாருனே தெரியாது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது யாரோ தெரிஞ்ச மாதிரி இருந்ததுனு பக்கத்துல போய் பார்த்தேன். அப்போ தெரியாம அந்தப் பையன் மேல மோதிட்டேன். அதுக்கு அந்தப் பையன் கொஞ்சம் கோபமா பேசிட்டான். நானும் பதிலுக்குப் பேசினேன் அவளோ தான் வேற எதுவுமில்லை. இன்னைக்கு உனக்கு ரொம்ப முக்கியமான நாள். அதனால வேற எதைப் பத்தியும் யோசிக்காமல் இந்த நாள்ல சந்தோஷமா இரு சரியா.” என்று ஏதோ வாய்க்கு வந்ததை அவர் கூற, நிவாஷினியால் அதை நம்பவே முடியவில்லை. சாதாரணமாகத் தடுக்கி அவன் மேல் மோதியதற்காகவா அவன் அப்படிப் பார்த்தான் என்ற எண்ணம் அவள் மனதை விட்டுச் செல்ல மறுத்தது. ஆனால் தந்தையிடம் தோண்டித் துருவிக் கேட்க முடியவில்லை அவளால். அப்படிக் கேட்டாலும் அவர் உண்மையைக் கூறப் போறது இல்லை. இதை வேறு விதமாகத் தான் கையாள வேண்டுமென்று யோசித்து அந்தப் பேச்சை அத்துடன் விட்டுவிட்டாள்.
“சரி அப்பா நீங்க சொல்றதும் சரி தான். அப்புறம் ஹரிதா வந்தா, அதான் உங்களைக் கூப்பிட வந்தேன்.” என்று கூறினாள்.
ஹரிதா என்ற பெயரைக் கேட்டதும் சட்டென்று முகம் மாறியவர் மகள் முன் காட்டாமல்,”ஓ அப்படியா சரி மா.” என்றதோடு அவர் நிறுத்தி விட, நிவாஷினிக்குத் தான் அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை.
இன்று நேற்றல்ல கிட்டத்தட்டத் தான் படிப்பு முடித்து வெளிநாட்டிலிருந்து வந்ததிலிருந்து ஹரிதாவுடன் தன் தந்தை முன்பு போல் பேசுவது இல்லை. இதை இப்படியே விடக் கூடாது என்று முடிவு செய்து ஹரிதாவை தேடி வந்தாள் நிவாஷினி.
ஹரிதா கடையின் வெளியே நின்று யாரிடமோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்க, நிவாஷினி அவளின் முன் வந்து நின்றாள். நிவாஷினியைப் பார்த்ததும் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தவரிடம் பிறகுப் பேசுகிறேன் என்று கூறிவிட்டு கைப்பேசியை வைத்தவள்,”என்ன நிவா?” என்று கேட்டாள்.
“உனக்கும் அப்பாவுக்கும் எதுவும் பிரச்சனையா?” என்று நேரடியாக அவளிடம் கேட்டாள்.
நிவாஷினியின் கேள்வி ஹரிதாவை திடுக்கிடச் செய்ய, ஆனால் அதைக் காட்டாமல்,”அதெல்லாம் எதுவுமில்லையே நிவா!! ஏன் இப்படி எல்லாம் கேட்கிற நீ?” என்று சாதாரணமாகக் கேட்டாள்.
“பின்ன நானும் கொஞ்ச நாளா பார்த்துட்டு தான் இருக்கேன். நீயும் அப்பாவும் சரியாகவே பேசிக்கிறது இல்லை.”
“ஹேய் லூசு அப்படி எல்லாம் எதுவுமில்லை. நீயா ஏதாவது கற்பனை பண்ணிட்டு இருக்காத சரியா! நாங்க நார்மலா தான் பேசுறோம். உனக்கு ஏன் அப்படித் தெரிஞ்சதுனு எனக்குப் புரியலை.” என்று ஹரிதா சாதாரணமாகக் கூற, ஒரு வேளை தான் தான் அதிகமாகக் கற்பனை செய்கிறோமோ என்று யோசிக்க ஆரம்பித்தாள் நிவாஷினி.
அவளை யோசிக்கவிடக் கூடாது என்று உடனே பேச்சை மாற்றி,”சரி நிவா, நான் கிளம்புறேன்.” என்றாள்.
அவள் கிளம்புகிறேன் என்று கூறியதில் நிவாஷினியும் உடனே யோசிப்பதை நிறுத்தி,”ஹேய் சாப்பிட்டுப் போ.” என்றாள்.
“இல்லை நிவா இன்னைக்கு மாமா வராங்க. அவங்க வரதுக்குள்ள இங்கே வந்துட்டு போகலாம்னு தான் சீக்கிரம் கிளம்பி வந்தேன். வீட்டுல விருந்து தயாராகிட்டு இருக்கு.” என்றாள் ஹரிதா சிறிது வெட்கத்துடன்.
“அடடா நீ கல்யாண பொண்ணுல நான் மறந்தே போயிட்டேன் பார். சரி சரி போய் உன் மாமா கூட டூயட் பாடு கிளம்புக் கிளம்பு.” என்று நிவாஷினி கிண்டல் செய்ய, ஹரிதா பொய்யாகக் கோபம் கொண்டு அவள் கண்ணத்தில் லேசாக அடித்து விட்டு அவளது பெற்றோரிடம் விடைபெற மீண்டும் கடைக்குள் சென்றாள்.
சங்கரி வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்க, அங்கு வந்த ஹரிதா,”ஆண்டி நான் கிளம்புறேன்.” என்று கூறினாள்.
“என்னமா இது யாரோ மாதிரி அதுக்குள்ள கிளம்பிட்ட?” என்று உரிமையாகச் சிறிது கோபத்துடன் கேட்டார் சங்கரி.
“அம்மா அவள் ஆத்துக்காரர் வராராம். அதனால் தான் மேடம் கிளம்புறாங்க.” என்று அவள் ஹரிதாவை கேலிச் செய்ய, சங்கரியும் புரிந்து சிரித்துக் கொண்டே,”சரி மா சாப்பிட்டுத் தான் போகனும் நீ.” என்றார்.
“அம்மா அவளுக்கு வீட்டுல விருந்து தயாராகுதாம். அதுவுமில்லாம அவள் அவளுடைய மாமா கூடத் தான் சாப்பிடுவாளாம்.” என்று ஹரிதாவை மீண்டும் கேலி செய்யச் சங்கரி சிரித்துக் கொண்டே ஹரிதாவை அனுப்பி வைத்தார்.
ஹரிதா பின்னாலே செல்லப் போன மகளைத் தடுத்து நிறுத்திய சங்கரி, அவர் பேசிக் கொண்டிருந்தவரை அறிமுகம் செய்து வைக்க, ஹரிதா மட்டும் மீண்டுமொரு முறை அவர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
தவமணி, மகள் பேசிச் சென்றதிலும் ரேவந்த் பேசிச் சென்றதிலுமே அவர் சிந்தனை இருந்தது. எப்படி ரேவந்த்தை சமாளிப்பது என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருக்க, அவரிடம் சொல்லிக் கொண்டு செல்ல வந்தாள் ஹரிதா.
“அங்கிள் நான் கிளம்புறேன்.” என்றாள்.
“ம்.” என்று மட்டுமே அவர் கூறினார்.
“அங்கிள் நீங்க முன்ன மாதிரி சாதாரணமாகப் பேசுங்க. இப்படி இருந்தீங்கனா நிவாக்கு சந்தேகம் வரும். வரும் என்ன வரும் ஏற்கனவே வந்துருச்சு. என் கிட்ட வந்து உங்களுக்கும் எனக்கும் நடுவில் என்ன பிரச்சனைனு கேட்கிறா.” என்று அவள் கூறவும் திடுக்கிட்டு அவளைப் பார்த்தார் தவமணி.
“நீ என்ன சொன்ன?”
“நான் அப்படியெல்லாம் எதுவுமில்லைனு சொல்லிட்டேன் அங்கிள். அதனால் திரும்ப அவளுக்குச் சந்தேகம் வர மாதிரி நடந்துக்காதீங்க.”
“போதும். நான் எப்படி நடக்கனும்னு எனக்குத் தெரியும். அதை நீ சொல்லாத. ஆனால் ஒன்னு மட்டும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ நீ செஞ்ச காரியத்தை என்னால இந்த ஜென்மத்தில் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது. அதே போல உன் மேல் வைச்ச நம்பிக்கையையும் நீ கெடுத்துக்கிட்ட.” என்று சற்றுக் கோபமாகக் கூறினார் தவமணி.
“அங்கிள் உங்க கோபம் எனக்குப் புரியுது. ஆனால், சரி அதை விடுங்க. நிவாவுக்குச் சந்தேகம் வரக் கூடாதுனு தான் நான் அப்படிச் சொன்னேன்.” அவரிடம் எதுக் கூறினாலும் புரிந்து கொள்ள மாட்டார் என்று தோன்ற அவரிடம் விளக்கம் கூற வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.
“என் பொண்ணு மேல ரொம்ப தான் உனக்கு அக்கறை.” என்று நக்கலாகச் சொன்னார் தவமணி.
“அங்கிள் நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் எனக்கு நிவா மேல நிறைய அக்கறை இருக்கு.”
“ம் போதும். ஒன்னு மட்டும் ஞாபகம் வைச்சுக்கோ நீ எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடுத்துருக்கு. அதை மறக்காமலிருந்தால் போதும். வேற எந்தப் பேச்சும் வேண்டாம்.” என்று கத்தரித்தார் போல் பேச, ஹரிதாவிற்குத் தான் கஷ்டமாக இருந்தது.
“எனக்கு அது நல்லா ஞாபகம் இருக்கு அங்கிள். எப்போயும் நான் உங்களுக்குப் பண்ணச் சத்தியத்தை மீற மாட்டேன். வரேன் அங்கிள்.” என்று கூறி கனத்த மனதுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றாள் ஹரிதா.
##########
கங்காதரன், கோகிலா மற்றும் விஷாகன் மூவரும் சாப்பிட்டு முடித்து வீட்டிற்கு வந்து ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. விஷாகன் வந்ததும் அவனது அறைக்குச் சென்றவன் தான் இன்னும் கீழே இறங்கி வரவில்லை.
“என்ன இன்னும் விஷாகன் கிளம்பாமல் இருக்கான்?” என்று கோகிலாவிடம் கேட்டார் கங்காதரன்.
“அவன் வந்தவுடனே ரூம்கு போனவன் தான். இன்னும் வெளில வரலை. நான் போய் பார்த்துட்டு வரேன்.” என்று கூறி நகர்ந்தார் கோகிலா.
“நீ ஏன் மாடிக்குப் போய் கஷ்டப்படுற! இரு நான் அவனைக் கூப்பிடுறேன்.” என்று கூறி அவரது கைப்பேசியை எடுத்து அவனிற்கு அழைத்து கீழே வரச் சொன்னார்.
அறைக்கு வந்த விஷாகன், உடை கூட மாற்ற விரும்பாமல் நிவாஷினியின் நினைப்பில் அப்படியே படுக்கையில் படுத்து விட்டான். தந்தை அழைத்த பின்பு தான் நினைவுலகிற்கு வந்தவன் வேகமாக எழுந்து முடியைச் சரி செய்து கீழே வந்தான்.
ஐந்து நிமிடத்தில் கீழே வந்த விஷாகன் தந்தையின் முன்பு போடப்பட்டிருந்த சாய்விருக்கையில் அமர்ந்தான்.
“என்ன அப்பா எதுக்கு கூப்பிட்டீங்க?”
“எதுக்கு கூப்பிட்டேனா? கார்மென்ட்ஸ்கு போகலையா நீ? தவமணியும் இல்லை. நீயும் இன்னும் போகலைனா என்ன அர்த்தம்?” என்று அவர் கோபமாகக் கேட்கவும் தான் நேரத்தைப் பார்த்தான்.
“ப்ச் ஏதோ ஞாபகத்தில் அப்படியே உட்கார்ந்துட்டேன் பா. இதோ கிளம்புறேன்.”
“ம் டெல்லிக்கு அனுப்ப வேண்டிய பேக்கேஜ் எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணிடு. போன தடவை பேக்கிங் சரியா இல்லை, பீஸ் டேமேஜ் ஆகிடுச்சு லொட்டு லொசக்குனு நிறையக் காரணம் சொல்லி பணத்தைக் கம்மியா தான் தந்தாங்க. அதனால இந்த முறை எல்லாத்தையும் சரியா செக் பண்ணி அனுப்பு. டிரைவர்கிட்டயும் பார்த்துப் போகச் சொல்லு சரியா.”
“சரி பா நான் பார்த்துக்கிறேன்.”
“ம் சரி நான் அப்புறமா வரேன். தவமணி இன்னைக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டார். அதனால நீ தான் எல்லாத்தையும் பார்த்துக்கனும். நான் கார்மென்ட்ஸ் வந்ததும் நீ ஸ்டோர்கு போய் பார்த்துட்டு வந்துடு சரியா.”
“ம் சரி பா. இதெல்லாம் நீங்க சொல்லனுமா என்ன? நான் பார்த்துக்கிறேன்.” என்று கூறிவிட்டு கார்மென்ட்ஸ் கிளம்பத் தயாராக அங்கிருந்து அவனது அறைக்குச் சென்றான் விஷாகன்.
கங்காதரன் ஈரோடிலே GD கார்மென்ட்ஸ் என்று பெரிய கார்மென்ட்ஸ் வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட அறுநூறு பேருக்கு மேல் அங்கு வேலைச் செய்கிறார்கள். ஆண்கள் அணியும் டீ-ஷர்ட், ஷர்ட், ட்ராக் ஸூட், பேண்ட், பெண்கள் அணியும் குர்தா, டீ-ஷர்ட், லெக்கிங்கின்ஸ், அப்புறம் தலையணை உறை, போர்வை, படுக்கை விரிப்பு, கம்பளி என்று அனைத்தையும் தயாரிக்கின்றனர். அது போக GD Apparels என்ற பெயரில் கடை ஒன்றும் நடத்துகிறார். அந்தக் கடையில் அவர்கள் கார்மென்ட்ஸில் தயாரான துணிகளை விற்பனையும் செய்து வருகிறார். மற்ற கடைகளை விட இங்கு விலை கம்மி என்பதாலும் துணியின் தரமும் நன்றாக இருப்பதால் மக்கள் பலர் இங்கு தான் வருவார்கள் உடை எடுக்க. அதே போல் அவர்கள் தைத்த துணியைப் பல மாவட்டங்களிற்கு, மாநிலங்களுக்கு அப்புறம் வெளிநாட்டிற்குமே ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
கங்காதரனின் ஒற்றைப் புதல்வன் தான் விஷாகன். வெளிநாட்டில் முதுநிலை வணிக நிர்வாகம் படித்து விட்டு அவனது அப்பாவோடு தொழில் செய்ய ஆரம்பித்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறது.
G.D. கார்மென்ட்ஸில் தான் மேனேஜராக வேலைச் செய்கிறார் தவமணி. பெயர் தான் மேனேஜர் ஆனால் கங்காதரன் விஷாகனிற்கு அடுத்து அந்த கார்மென்ட்ஸில் முக்கியமான நபர் என்றால் அது தவமணி தான். விஷாகன் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு கங்காதரனிற்குப் பின்பு தவமணி தான். விஷாகன் பொறுப்பேற்ற பின்பு அவனிற்குத் தொழிலின் நெளிவு சுளிவைச் சொல்லிக் கொடுத்ததும் தவமணி தான். கங்காதரனிற்கு தவமணி வலது கை. அவர் இல்லை என்றால் கங்காதரனிற்கு கை ஒடிந்த நிலை தான். அத்தனை முக்கியமானவர் தவமணி அவர்களுக்கு.
விஷாகன், ஐந்து அடி பத்து அங்குலம் உயரத்தில் இருப்பான். ஆனால் அவனது நிறமோ பாலை ஒட்டிய வெளிர் நிறத்தில் பார்த்ததும் அவனை சைட் அடிக்க தூண்டும் வகையில் அத்தனை அழகாக இருப்பான். அதிலும் உடற்பயிற்சி செய்வான் என்பதற்குத் தோதாக அவனது உயரத்திற்கு ஏற்ப எடையுடனும் புஜங்கள் எல்லாம் கட்டுமஸ்தாகவும் இருக்க அவனை ஆணழகனாகத் தான் பார்ப்பவரை யோசிக்க வைக்கும்.
அந்த ஆணழகனுக்கு இப்போது நிவாஷினி மேல் ஒரு கண் வந்துள்ளது. அவளது தெத்துப் பல் சிரிப்பிலே விஷாகன் விழுந்துவிட்டான்.
கார்மென்ட்ஸ் கிளம்ப அறைக்கு வந்த விஷாகனுக்கோ நிவாஷினியின் தெத்துப் பல் தெரியச் சிரித்த முகமே அவன் கண் முன்னால் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. இந்த உணர்வு அவனிற்கு மிகவும் புதியது. பல பெண்களைப் பார்த்திருக்கிறான், அவர்களோடு பழகியும் இருக்கிறான். ஆனால் யாரிடமும் இப்படி ஒரு உணர்வு அவனிற்கு வந்ததே இல்லை. யாராவது காதல் என்று வந்தாலே எட்ட நிறுத்தி வைக்கும் அவனிற்கு இப்போது நிவாஷினி மேல் காதல் வந்துள்ளது.
இதை யோசிக்கும் போது அவனிற்கே ஆச்சரியமாக இருந்தது. கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்து,”டேய் விஷா நீயா காதலா? இதெல்லாம் சரி வருமா? அதுவும் பார்த்த ஒரே பார்வையில்? நோ டா இது ஜஸ்ட் ஒரு ஈர்ப்பு அவ்ளோ தான். அழகா இருந்தா, அழகா சிரிச்சா நாம ரசிச்சோம் அவ்ளோ தான். அதுக்கு மேல எதுவுமில்லை அதனால மறந்துடு. நம்ம வேலையை மட்டும் பார்ப்போம். சரியா வேலையை மட்டும் தான் பார்க்கனும் நோ நிவாஷினி.” என்று தனக்குத் தானே அறிவுரைக் கூறிவிட்டு வேகமாகத் தயாராகி அவர்களது கார்மென்ட்ஸ்கு சென்றான்.
error: Content is protected !!