Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 5.2

அதுக்கப்புறம் ஊருக்குள்ள என்னால தலைகாட்டவே முடியல. எனக்கே அப்படின்னா அப்பாம்மா, அண்ணன் நிலை அதுக்கு மேல. இனி அவங்களோட இருந்தா காலம் வரைக்கும் பொண்ணை கூட்டி கொடுத்தவன்னு அவ பேசின பேச்சுதான் நிலைக்கும்னு, ரொம்ப யோசிச்சு தனியா இருக்க முடிவெடுத்தேன்.

அது தெரிஞ்ச என் அண்ணனுக்கு இன்னும் ஆத்திரம் ஆகிடுச்சு போல. தனியா போய் இன்னும் என்னத்தை இழுத்துட்டு வரப்போற? எனக்கு மட்டும் பொண்டாட்டி பிள்ளை இல்லைன்னா நீ செய்த காரியத்துக்கு நாண்டுட்டு செத்திருப்பேன். என்ன செய்ய? நம்பி வந்தவளையும், பெத்த பையனையும் அநாதையாக்க முடியலயேனு தலையை சுவத்துல முட்டிக்கிட்டாங்க என் அண்ணன்.

எனக்கும் என்ன செய்யனு தெரியல. வயித்துல நீ இல்லைனா நானும் அந்த முடிவைத்தான் எடுத்திருப்பேன். அவன் ஏமாத்திட்டான்றதை விட, என் அப்பாம்மா, அண்ணனுக்கு என்னால இந்த நிலை ஆகிடுச்சேன்றதைத்தான் என்னால தாங்க முடியல.” என கண்ணீர் விட்டார் மேகலை.

“ம்மா” என அன்னையை தேற்ற முயன்றாள் விஷாலினி. கண்களை துடைத்துக்கொண்டு, கண்மூடித்தனமா அவனை காதலிச்சு, நம்பி ஏமாந்து, குடும்பத்துக்கும் கெட்ட பேர் வாங்கி தந்துனு நடந்த அத்தனைக்கும் நான்தான் காரணம்னாலும், தனியா போய் இன்னும் என்ன இழுத்துட்டு வரப்போறனு என் அண்ணன் கேட்டது மனசை இன்னும் ரணமாக்கிடுச்சு.



Advertisement

மரண வலியோட காலம் பூரா என்னை எதுக்கு அவங்க பாதுகாக்கனும்னு தோணுச்சு. தனியா போனா என்ன செய்வான்ற கவலை போய், வேற பிரச்சனையை இழுத்துட்டு வருவாளோன்ற அவங்களோட எண்ணம் என்னை அங்க இருக்க விடல. பிறந்த வீட்டுக்கு நானே சுமைன்னும்போது, என்னோட குழந்தையும் அவங்க சுமைக்கு துணையாகிடக்கூடாதுனு கிளம்புறதுல பிடிவாதமா இருந்தேன்.

“எங்க போவனு எங்கண்ணன் கோபமா கேட்டுச்சு, அப்பா ஏதும் பேசாம அமைதியா இருந்தார். எங்க போவேன்றதுதான் பிரச்சனையே தவிர, தனியா போய் எப்படி இருப்பேனு யாரும் யோசிக்கலன்றதை இன்னொரு முறை உறுதியாகிடுச்சு.

ஆனா யார்மேலயும் எனக்கு வருத்தம் இல்ல. ஏன்னா என்னால அவ்வளோ அவமானத்தை சந்திச்சிட்டாங்க. தனியா போறேனு சொல்லிட்டேன், ஆனா எங்க போறது, வயித்துல உன்னை வச்சிகிட்டு யார் துணையும் இல்லாம எப்படி வாழ்றதுனு தெரியல. இரண்டு நாள் யோச்சிச்சு ஃப்ரண்டுகிட்ட பேசினேன்.

Advertisement

என் அக்கா குழந்தையை பார்த்துக்க நம்பிக்கையான ஆள் கேட்டுட்டு இருக்கா, கோவைல வீடு, நீ போனா அங்கையே மேல ரூம்ல தங்கிக்கலாம், பாதுக்காப்புக்கு குறையிருக்காதுனு சொன்னா. அடுத்த நாள் கோயமுத்தூர்க்கு கிளம்பிட்டு பிரண்டோட அக்கா வீட்டுக்கு போய்ட்டு அம்மாக்கு போன் பண்ணி விபரம் சொல்லி என்னை தேட வேண்டாம்னு சொன்னேன்.

Advertisement

ஏற்கனவே முன்னபின்ன தெரியாத ஒருத்தனை நம்பி மோசம் போனது பத்தாதா? யாரை கேட்டு போன? ஒழுங்கா கிளம்பி வா, இங்க உள்ளூர்லயே தனியா வீடு பார்த்து வைக்கிறேன், நானும் வந்து பார்த்துக்க வசதியா இருக்கும்னு சொன்னாங்க.

உங்ககிட்ட கேட்டா விடமாட்டிங்கனு தெரியும்மா, உள்ளூர்ல இருந்தா என்னை பார்க்கும்போதெல்லாம் வேதனைதான் மிஞ்சும். விதி எப்படியோ அப்படி நடக்கட்டும். இனி என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேனு முடிவா சொல்லிட்டேன்.

அப்போல்லாம் பட்டன் போன்தான். செலவுக்கு பணம் அனுப்ப அட்ரஸ் சொல்லுனு கேட்டாங்க. இங்கயே சாப்பாடு போட்டு, தங்க இடமும் கொடுத்து, மாசம் மூனாயிரம் சம்பளம் தரனு சொல்லியிருக்காங்க. எனக்கு பணம் வேணாம்னு சொன்னேன்.

Advertisement

சாப்பாடு போட்டு தங்க இடம் தருவாங்க, பிரசவமும் அவங்களே பார்ப்பாங்களானு திட்டி, கட்டினவன் பாதியில விட்டுட்டு போலாம். பெத்தவ அப்படி இருக்க முடியாதுடீ, உன்னை எங்கையோ விட்டுட்டு எனக்கு இங்க ஆகாரம் இறங்குமானு அழுதுட்டே அட்ரஸ் கேட்டாங்க. அதுக்கு மேல என்னால மறுக்க முடியாம அட்ரஸை சொன்னேன்.

ஒரு வாரம் கழிச்சு அம்மாவும் அண்ணியும் கோயமுத்தூர் வந்தாங்க. வயித்துல இருக்கிறதை சுத்தம் செய்திடலாம். துரோகம் செய்தவனோட குழந்தைக்காக உன் வாழ்கையை பாழாக்கிக்க வேணாம், கொஞ்ச நாள் கழிச்சு, நடந்த உண்மையை சொல்லி மறுகல்யாணம் செய்து வைக்கிறேனு உங்கண்ணன் சொல்ல சொன்னார்னு எங்கண்ணி சொன்னுச்சு.

அவன் துரோகம் செய்துட்டான்றதுக்காக என் குழந்தையை என்னால கொல்ல முடியாதுனு சொன்னேன். குழந்தையை பெத்துக்கிட்டா உங்கண்ணன் உறவை இழந்திடுவனு அண்ணி அக்கறையோட எச்சரிச்சாங்க.

என் குழந்தையை கொன்னாதான் கூடப்பிறந்தவன் உறவு கிடைக்கும்னா அது வேணாம்னு சொல்லிட்டேன். சொல்லும்போதே என்னால கண்ணீரை கட்டுப்படுத்த முடியல. கவலைப்படாத, இப்போ சூட்டோட பேசினா பிரச்சனை வளரத்தான் செய்யும்.

எப்படி நல்லா படிக்கிற புள்ள… எப்படி இப்படி ஏமாந்து, வீட்டுக்கும் தீராத அவமானத்தை தேடித்தந்துட்டியேனு எனக்கே உன்மேல ஆத்திரமாத்தான் இருந்துச்சு. யாருக்கும் தொல்லை வேணாம்னு நீ வீட்டை விட்டு கிளம்பினதும் மனசு பதறிப்போச்சுடீ, எனக்கே அப்படினும்போது கூடப்பிறந்தவங்களுக்கு கோபமில்லாம இருக்குமா?

உன் அண்ணன் சொன்னதை உன்கிட்ட சொல்ல வேண்டியது என் கடமை. இரண்டு பிள்ளை பெத்த எனக்கு குழந்தையை அழிக்க மனசு வருமா? குழந்தை பிறக்கட்டும், உன் அண்ணன் மனசு மாறும்னு ஆறுதல் சொன்னுச்சு அண்ணி.

இனி இங்க இருக்க வேணாம், சென்னையில என் அம்மா வீட்டுல தங்கிக்கலாம்னு அம்மா சொன்னாங்க.

அம்மாக்கு சென்னைதான் பிறந்த வீடு. யாருக்கும் தொல்லையா இருக்க விரும்பலேனு சொன்னேன். என் அம்மா செத்து இருபது வருசமாச்சு, பொண்ணு கொடுத்த வீட்டுக்கு வரமாட்டேனு எங்கப்பா பிடிவாதம் செய்ததால அவர் துணைக்கு சம்பளத்துக்கு ஆள் போட்டு உங்கப்பாத்தான் இதுவரை பார்த்துக்கிறார்.

இங்க யாரோ ஒருத்தர் குழந்தையை பார்த்துக்கிறதை விட, அங்க வந்து எங்கப்பாவை பார்த்துக்கோ, பேத்தி நம்மளை பார்க்க வந்துடுச்சுனு அவரும் சந்தோசப்படுவார், ஊருக்குள்ள உன்னை கேட்டாலும் எங்கப்பா வீட்டுல இருக்கானு கௌரவமா சொல்லிக்கலாம்னு கேட்டாங்க. அம்மா சொன்னது மனசுக்கு சரினு பட்டுச்சு. அப்புறம்தான் இங்க வந்தோம்.

இந்த வீட்டுக்கு வரும்போது இப்போ நாம இருக்கிற வீடு மட்டும்தான் இருந்துச்சு. நம்ம காலத்துக்கப்புறம் ஒரே பேத்தியை சோத்துக்கு அடுத்தவன்கிட்ட கையேந்த வைக்கக்கூடாதுனு இப்போ கோபால் அண்ணா குடியிருக்க வீட்டை கட்டினார்.

என் அப்பா பூ, மாலை வியாபாரம் செய்வார். கண் பார்வை குறைஞ்சதுக்கப்புறமும் கடைக்கு போறதை நிறுத்தினாலும், வீட்டுலயே மாலை கட்டி கொடுப்பார். உங்கப்பாவை கட்டினதுக்கப்புறம் பணத்துக்கு குறைவில்லன்றதால என் அப்பா சம்பாத்தியம் சேமிப்பானது. பல வருச சேமிப்பு பணத்துலதான் வீட்டை கட்டினார்.

வீடு கட்டுற வேலை, என்னோட மசக்கைனு அம்மா வாரத்துக்கு ஒருமுறை ஊருக்கு போய் வரும். வயித்து பிள்ளத்தாச்சியை பார்த்துக்க ஆள் வேணும்னு என் அப்பாவும் என் அம்மாவை இங்கையே விட்டுட்டார்.

உனக்கு இரண்டு வயசு இருக்கும்போது உன் தாத்தா போய் சேர்ந்துட்டார். குழந்தையை வச்சிக்கிட்டு என்னால தனியாளா சமாளிக்க முடியாதுனு அம்மா இங்கையே இருந்துடுச்சு. அதுக்கப்புறம் நடந்ததுதான் உனக்கு தெரியுமே” என முடித்து மகளை ஆழ்ந்து பார்த்தார் மேகலை.

‘என்னை பார்க்க யாருமே வரலையாம்மா?’ என ஏமாற்றமாய் நினைத்தாள் விஷாலினி. ஆனால் அன்னையிடம் ஏதும் கேட்கவில்லை.

“இதெல்லாம் எதுக்கு உன்கிட்ட சொல்லிட்டிருக்கேனு புரியுதா?” என கேட்க, “நல்லா புரியுதும்மா, பொண்ணுங்களை அடைய ஆம்பிளைங்க எந்த எல்லைக்குனாலும் போவாங்க. நல்லவன் வேஷம் போடுவாங்க. பிரச்சனைனு வந்துட்டா பாதிக்கப்படுறது பொண்ணுங்கதான்.

இப்போ என்னை ஃபாலோ பண்ணிட்டிருக்க பையனால எனக்கு பிரச்சனை வரும்னு பயந்துக்கிறிங்க. ஓபனா சொல்லனும்னா காலப்போக்குல நான் அவனை விரும்ப ஆரம்பிச்சிடுவேன்னு பயந்துக்கிறிங்க.

பயப்படாதிங்கம்மா… என்னாலதான உங்களுக்கும் யாருமில்லாம ஆகிட்டாங்க? உங்களுக்கு நல்ல மகளா நான் இருப்பேன். என் அம்மா என்னை நல்லா வளர்த்துருக்காங்கனு எல்லாருக்கும் புரிய வைப்பேன்” என அன்னைக்கு தைரியம் அளித்தாள்.

எந்த கஷ்டமும் இல்லாம வளர்ந்ததால உங்களுக்கு மனுஷங்களை புரியல. அதனால ஈஸியா ஏமாந்துட்டிங்க. நான் அப்படியில்ல, எனக்கு தாத்தா, தாய்மாமா, மாமா பிள்ளைங்கனு எல்லாரும் இருந்தும் என்னை யாரும் யோசிக்கலன்ற வருத்தத்துல வளர்ந்தவ…

வாழ்க்கையில நாம எடுக்கிற முடிவு சரியில்லனா குடும்பத்துல எத்தனை வேதனை வரும்னு உங்களை வச்சே தெரிஞ்சுக்கிட்டேன். என்னை யாரும் ஒன்னும் செய்ய முடியாது” என்று அன்னைக்கு தைரியம் சொல்லி, தன்னையும் திடப்படுத்திக்கொண்டு, என்னையும் என் அம்மாவையும் அவமானம்னு நினைச்சவங்க யாரும் எனக்கும் வேணாம் என மனதோடு நினைத்துக்கொண்டாள் விஷாலினி.

மகளின் முகவாட்டம் கண்டும், அவளின் வார்த்தைகளை யோசித்தும் பதறிய மேகலை, அண்ணன் கருவை கலைக்க சொன்னதெல்லாம் மகளிடம் சொல்லியிருக்கக்கூடாது என தன்னைத்தானே கடிந்து, “அப்போ கோபத்துல சொன்னாங்க விஷாலினி, யாராவது குழந்தையை கொல்ல சொல்வாங்களா? என் வாழ்க்கை வீணாகிடுச்சேன்ற வேதனையிலும், என்னால அவங்க சந்திச்ச அவமானத்தை பொறுக்க முடியாமலும் பேசிட்டாங்க.

உண்மையா உன்னை கொல்ல நினைச்சிருந்தா அம்மாவை இங்க அனுப்பி நம்மளை பார்த்துக்க சொல்லி இத்தனை வருசம் விட்டுருப்பாங்களா? நீ எட்டாவது படிக்கும்போது ஆயாக்கு முடியாம போகவும்தான அழைச்சிட்டு போய்ட்டாங்க” என தேற்றினார் மகளை.

தான் பெரிய பொண்ணான போது, அன்னையிடம் உன் அண்ணனுக்கு சொல்லு, அவன் வரானோ இல்லையோ… ஆனா தாய்மாமனை அழைக்க வேண்டியது உன் கடமை என்று பாட்டி வலியுறுத்தினார்.

என் மகளுக்கு பதிமூனு வயசாகுது. இதுவரை வந்து பார்த்ததில்ல. அண்ணன் மக பெரிய பெண்ணானதுக்கும் தன்னை அழைக்கவில்லை. இதுக்கு மட்டும் எந்த உரிமையில கூப்பிடுவேன்? நீ வேணா விசயத்தை சொல்லு. நான் சொல்லி அண்ணன் வரும்னா போன் பண்றேன். இல்லைனா வேணாம் என்று அன்னை பாட்டியிடம் சொன்னதும் இன்றும் நினைவிருக்கிறது விஷாலினிக்கு.

பிறகு பாட்டி மகனிடம் சொன்னார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனால் தனது ருது விழாவிற்கு அவர்கள் யாரும் வரவில்லை. சொந்தம் என்று பாட்டி மட்டுமே உடன் இருந்தது.

நானிருக்கேன் என்று தாய்மாமன் முறையை கோபால் மாமாதானே செய்தார்கள் என்று கோபாலனை பெருமையாய் நினைத்த விஷாலினி, அன்னையையும், தன்னையும் இத்தனை உதாசினப்படுத்தியும் தாய் வழி சொந்தங்களுக்காக தன்னிடம் வாதாடும் அன்னையை மன வலியோடு பார்த்தாள்.

பாட்டியிடமிருந்து தற்போதும் வாரம் இருமுறையாவது அழைப்பு வந்துவிடும். பாட்டியிடம் தனியாக போன் இல்லை. அவருக்கு போன செய்யவும் தெரியாது. அன்னையின் அண்ணியின் எண்ணிலிருந்துதான அழைப்பு வரும்.

அன்னையின் அண்ணிதான் அழைப்பு விடுத்து பாட்டியிடம் கொடுக்கிறார் என்றும் தெரியும். அவரும் ஒருநாளும் பேசியதில்லை. விஷாலினி பாட்டியோடு பேசும்போது நிறைய குரல்கள் இடைபுகும். ஆனால் பாட்டியை தவிர்த்து விஷாலினியிடமோ மேகலையிடமோ யாரும் இதுவரை பேசியதில்லை.

தனது தாய்மாமன், அத்தை அவர்கள் பிள்ளைகள் என அன்னை வீட்டில் உள்ள அனைவரின் குரலும், பெயரும் விஷாலினிக்கு அத்துபடி. ஆனால் அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அடையாளம் தெரியாது.

எல்லாம் அன்னையால் ஏற்பட்ட வேதனை, அந்த நேரம் பெற்றவர்களுக்கும், உடன் பிறந்தோர்களுக்கும் எத்தனை அவமானமாக இருந்திருக்கும் எனப்புரிகிறது.

பெரும் தவறு அன்னை மேல் என்றாலும், திருமணம் முடிந்து தாய் வீட்டிற்குதானே சென்றார்கள்? திருமணம் ஆகிவிட்டதென்று பெற்றோரிடம் சொன்னார்கள்தானே? தீர விசாரித்த பிறகு ஊரறிய திருமணத்தை நடத்தியிருக்கலாமே…

அப்படி விசாரித்திருந்தால் தன் பிறப்பிற்கு காரணமானவருக்கு ஏற்கனவே திருமணமானது தெரிய வந்திருக்குமே, அன்னையும் தன் தவறுணர்ந்து படிப்பில் கவனம் செலுத்தியிருப்பார்களே என வருந்தினாள் அன்னைக்காக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!