Skip to content
Post Views: 12,794
அத்தியாயம் 6
ஒரு மாதம் முடிந்திருக்க, வழக்கம்போல் விஷ்ணுவோடு நடைபயிற்சிக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் கோபாலன். விஷ்ணு அதிகாலையிலேயே தனது ஜாகிங், உடற்பயிற்சிகளை முடித்து, தற்போது தந்தைக்காக மெதுவாக ஒரு நடைப்பயிற்சி செய்வான். இதயத்தில் அடைப்பு உள்ளதால் தனியே விட மனமின்றி தானும் உடன் செல்ல ஆரம்பித்திருந்தான்.
நடைப்பயிற்சிக்கு மட்டுமல்ல, பணிக்கு செல்லும்போதும் தந்தையோடே சென்றான் விஷ்ணு. மகனின் எதிர்காலம் பாதிக்கும் என, வேலைப் பளு தெரியாம இருக்க என் வயசு ஆளுங்களோட கொஞ்சம் அப்படியிப்படி பேசுவோம். நீ இருந்தா சங்கடமாயிருக்கும்டா என்று மகனின் வரவை மறுக்க முயற்சித்தார் கோபாலன்.
எனக்கும் படிக்கனும், நான் கட்டடத்துல தனியா எங்கையாவது உக்கார்ந்துக்கிறேன் என்றவன், சொன்னது போலவே பெயிண்ட்டிங் வேலை நடக்காத இடத்தில் போய் அமர்ந்து புத்தகத்தை எடுத்துக்கொள்வான்.
Advertisement
ஆனால் படிக்கும் அளவிற்கு மனது இன்னும் தேறவில்லை. காவ்யா செய்த துரோகத்தை மறக்க வேண்டும் என்ற நினைப்பில் அவளையே நினைத்துக்கொண்டிருந்தான். தந்தைக்கு முடியாமல் போனது விஷ்ணுவை பெரிதாய் பாதித்தது.
திடீரென காவ்யா வந்தால் தன்னால் அவளை மன்னிக்க முடியவில்லை என்றாலும் தாய் தந்தைக்காக சகிக்க வேண்டிய சூழல் வருமோ என்பன போன்ற சிந்தனைகள் அவனை படிக்க விடவில்லை. தங்கை நியாபகம் மனதை அழுத்தும்போதெல்லாம் பெயிண்ட்டிங் செய்பவர்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்து மனஅழுத்தத்தை போக்க முயற்சிப்பான். கடந்த ஒரு மாதமும் இப்படித்தான் சென்றது.
காவ்யாவை தேட விஷ்ணு அனுமதிக்காததால் கோபாலனுக்கும் பிரபாவதிக்கும் மகள் எங்கிருக்கிறாள்? என்ற எண்ணம் ஆட்டிப்படைத்தது. பிரபாவதிக்கு மகள் தவறானவன் கையில் சிக்கிக்கொண்டாளா? என்றும், கோபாலனுக்கு எப்படி இப்படி பாசமற்றுப் போனாள்? தன் துரோகத்தை தந்தை எப்படி சகித்தார் என்று கூட அறிய விழையவில்லையா என்ற எண்ணத்தில் மனதளவில் இன்னும்தான் நொடிந்துபோனார்.
Advertisement
ஆனால் மகனிடம் காட்டிக்கொள்ளாமல் அன்றாடப் பணிகளில் தன்னை திணித்துக்கொண்டார். இவர்களாவது வேலையை காரணம் வைத்து வெளியே வந்துவிடுகிறார்கள்.
Advertisement
பிரபாவதியின் நிலைதான் மோசமாகிக்கொண்டே சென்றது. விஷாலினியின் தந்தை மேகலையை ஏமாற்றியதைப் போல தன் மகளையும் யாராவது ஏமாற்றியிருப்பார்களா என்று அனுதினமும் மகளின் நினைவு வாட்டியது.
காவ்யா வீட்டைவிட்டு போன பின்னே, இப்படி பண்ணிட்டாளா? என்ற உறவுகளின் விசாரிப்பு… தற்போது எங்கிருக்கிறாள்? பையன் நம்ம ஜனமா? இன்னும் கண்டுபிடிக்கவில்லையா? அவதான் தெரியாம செய்துட்டா, நீங்களும் இப்படி இருந்தா எப்படி? என்று வாரத்திற்கு இரண்டு முறையாவது அழைப்பில் விசாரிப்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தார் பிரபாவதி.
மாலை ஏழு மணிபோல் கோபாலனும் விஷ்ணுவும் வீட்டிற்கு வர, கோபாலனை எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஷாலினி, அவருக்கு(விஷ்ணு) தெரியாம அத்த எப்படி மாமாகிட்ட பேசுவாங்க? விசயம் தெரிஞ்சதும் ரொம்ப கோபப்படுவாங்களோ? மாமாக்கு திரும்பவும் நெஞ்சு வலியேது வந்திடுமோ என பயத்தோடு பலமாய் யோசித்திருந்தாள் விஷாலினி.
Advertisement
வீட்டினுள் நுழையும்போதே விஷாலினியின் பரிதவிப்பான பார்வை பார்த்தபடி தான் உள்ளே சென்றான் விஷ்ணு.
கணவன் குளித்து வந்து, உண்டு, மகனோடு பத்து நிமிட நடைப்பயிற்சி சென்று வந்து மாத்திரை குடித்து உறங்க செல்லும்வரை பொறுமையை இழுத்துப்பிடித்து காத்திருந்து, மகனறைக்கு சென்று, “இன்னைக்கென்னவோ ரொம்ப அசதியா இருக்கு விஷ்ணு, பழமேது வேணும்னா டேபிள்ல இருக்கு எடுத்துக்கோ” என்று தனதறைக்கு சென்றார் பிரபாவதி.
தான் உறங்க செல்லும் முன்னே அன்னை அறைக்கு சென்றதேயில்லை ஆதலால், உடம்புக்கேது முடியலையா என பெற்றோர் அறையருகே வந்தவன், “ம்மா” என்றான்.
“என்ன விஷ்ணு?”
“கதவைத் திற”
பிரபாவதி கதவைத் திறந்ததும், “உடம்புக்கென்னம்மா? ஏன் டல்லா இருக்க? வா ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்திடுவோம்” என்றான் அக்கறையாக.
“ஒன்னுமில்லடா, நீ போய் படு”
தந்தையைப் பார்க்க, “அம்மா நல்லா இருக்கா விஷ்ணு, போய் படு” என்றார் கோபாலன்.
“நீ ஏன் சாப்பிடலம்மா?”
“ஆமாம்ல?” என முணுமுணுத்து, “பசியில்ல விஷ்ணு” என்றார்.
அன்னை தடுமாற்றம் உணர்ந்து, “என்ன பிரச்சனைம்மா உனக்கு?” என்றான் விசாரணையாக.
“ப்ச் ஒன்னுமில்லடா, எனக்கு படுக்கனும்”
“இரு வரேன்” விலகி சென்றவன், சில நிமிடங்களில் வந்து “பழமாவது சாப்பிட்டு படும்மா” என நீட்டினான்.
பிரபாவதி வாங்கிக்கொள்ள, “சரி நான் போய் படுக்கறேன்” என்று தனதறைக்கு வந்தான். அன்னைக்கு மகளின் நினைவுதான் வாட்டுகிறது எனப்புரியத்தான் செய்தது. ஆனாலும் என்ன செய்வது? என்று பெற்றோரை நினைத்து வேதனையாகவும், காவ்யா மீது கோபமாகவும் படுத்தான்.
அதிகாலை வழக்கம்போல் ஜாகிங் செல்ல வெளியே வர, காபியோடு ஹாலில் அமர்ந்திருந்தார் பிரபாவதி. அன்னையருகே வந்தவன், “ம்மா என்ன கண்ணு இப்படி சிவந்திருக்கு? காய்ச்சலா? நைட்டெல்லாம் தூங்கலயா?” என்றான்.
“தூக்கம் வரல விஷ்ணு” என்றார் வேதனையாக.
“என்னம்மா பிரச்சனை? சொன்னாத்தான தெரியும்?” என்றான் பதட்டமாக.
“காவ்யா போன் செய்திருந்தாடா” என்றார் பயத்தோடே. மகள் பேச்செடுத்தால் மகன் தன்னையே நிந்தித்துக் கொள்வானோ என்ற பயம் இருக்கவே, பதட்டத்தோடு மகனைப் பார்த்திருந்தார்.
கோபம் வந்தபோதும் இயன்றவரை மறைத்து, “நீ பேசுனியா?” என்றான்.
ஆமாம் என்பதாய் தலையசைக்க, “என்னவாம்?” என்றான் இறுகிய முகத்தோடு.
“அவ நல்லா இல்லைடா, நம்ம வீட்டுக்கு வர ஆசைப்படுறாளாம். செய்த தப்பை புரிஞ்சிக்கிட்டாளாம். ஆனா நமக்கு பயந்துட்டு வராம இருக்காளாம்”
அன்னையை தீர்க்கமாய் பார்த்தவன், “விஷாலினி சொன்னாளா?” என்றான்.
எப்படி கண்டுபிடித்தான் என அதிர்ந்து பார்க்க, “ஆசைப்படுறாளாம், புரிஞ்சிக்கிட்டாளாம்னு நீ சொல்றதுலயே தெரியுதும்மா. உண்மையை சொல்லு” என்றான் அதட்டலாக.
“மேகலை நம்பருக்குத்தான் பண்ணியிருக்கா” என ஒப்புக்கொண்டு, “நம்மளை விசாரிச்சிருக்கா. அப்பாக்கு இப்படின்னவும் ரொம்ப அழுதாளாம்” என்றார் தவிப்பாக.
“அப்பாகிட்ட சொன்னியா?”
“நைட் சொல்லலாம்னுதான் இருந்தேன், ஆனா திரும்ப நெஞ்சுவலியேது வந்திடுமோனு பயமாகிடுச்சு. அதனால சொல்லலை” என்றார் தவிப்பாக.
அன்னையின் தவிப்போடு, மகள் போனதிலிருந்து தந்தையின் சிரிப்பிழந்த முகத்தை அன்றாடம் பார்ப்பவன் ஆதலால், காவ்யா மீதான தன் கோபத்தை உள்ளடக்கி, “வேற என்ன சொன்னாளாம்?” என்றான் விசாரணையாக.
மகனின் கோபமற்ற விசாரணை பயத்தை உண்டாக்க, “விஷ்ணு… எனக்கு அவளை விட நீ முக்கியம். உன் அப்பா முக்கியம்” என்றார் கமறிய குரலில்.
அன்னையை புரிந்தவனாய் தலையசைக்க, “காவ்யா மேல கோபமாத்தான் இருக்கு. ஆனாலும் என்ன சூழல்ல இருக்காளோனு மனசு தவிக்குதுடா. நாம கோபத்தை காட்டப்போய் எதாவது செய்துக்கிட்டாள்னா?” என்றார் வேதனையாக.
கோபாலன் வெளியே வர, “போய் எனக்கு டீ வைம்மா” என்றான்.
பிரபாவதி கிச்சன் செல்ல, “உன் அம்மாவால இன்னும் மகளை மறக்க முடியாலையாமா?” என மகனிடம் கேட்டார் ஆதங்கமாக.
“நீங்க மறந்துட்டிங்களாப்பா?” என்றான் விஷ்ணு.
முகம் வேதனையை காட்டினாலும், “நாம வேணாம்னுட்டு போனவளை நாமும் மறந்துதான ஆகனும்?” என்றார் வரவழைத்த திடத்தோடு.
“அது அப்போ… இப்போ காவ்யாக்கு பெத்தவங்க வேணுமாம்” என்றான் ஆராய்ச்சிப் பார்வையோடு.
கோபாலன் முகம் அதிர்வை காட்ட, அன்னை சொன்னதை விளக்கினான் தன்மையாகவே. வேதனை, இறுக்கம், கோபம் என கோபாலன் முகம் பல பாவனைகளை காட்ட, “ஏங்க நீங்க டென்ஷன் ஆகாதிங்க” என தவித்தார் பிரபாவதி.
பொறுமையாய் எடுத்துரைத்து மகன் தன்னை ஆழம் பார்க்கிறானோ என்ற யோசனையோடே, “டென்ஷன் ஆகாம எப்படி இருக்கிறது?” என வேதனையாய் சொல்லி, “ஒருமாசத்துக்குள்ள அப்பாம்மாவை தேடுதாமா? எவனை நம்பி போனாளோ அவனையே நம்பிட்டிருக்கட்டும்” என்றார் கோபமாக.
பிரபாவதி அதிர்ந்தாலும், மகன் மேலுள்ள பயத்தில் கணவன் கூற்றை மறுக்க பயந்து வேதனையோடு அமைதிகாத்தார்.
விஷ்ணு அன்னையைப் பார்க்க, “உன் விருப்பமும் அப்பா விருப்பமும்தான் விஷ்ணு” என்றார் பரிதாபமாக.
விஷ்ணு தந்தையைப் பார்க்க, “இனி வந்தா மட்டும் பட்ட அவமானமும் வேதனையும் போய்டுமா?” என புலம்பி, “ஸ்டேஷன்ல இனி அவளுக்கும் நமக்கும் எந்த உறவும் இல்லைனு எழுதி கொடுத்துட்டோம்னு சொல்லிடு பிரபா” என்ற கோபாலனுக்கு கண்கள் கலங்கியது.
“ஸ்டேஷன்ல அப்படி எழுதி கொடுக்கலப்பா, காவ்யா நம்ம வீட்டுல இல்லைனுதான் எழுதி கொடுத்திருக்கோம். அதைப்பத்திலாம் கவலைப்படாதிங்க, நாகநாதன் அங்கிள்கிட்ட சொல்லி கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்கிடலாம். உங்க மனசுக்கு என்ன தோணுதோ அதை மட்டும் சொல்லுங்க. எனக்கு உங்க நிம்மதிதான் முக்கியம்” என்றான் பொறுமையாகவே.
மகன் சம்மதித்ததில் பெரும் நிம்மதிகொண்ட பிரபாவதி, “விஷ்ணு… நீ சொல்றது உண்மையா? இப்போ இப்படி சொல்லிட்டு அப்புறம் உன்னை நீயே தண்டிச்சிக்க மாட்டியே” என்றார் கவலையாக.
“இல்லைம்மா, அப்போ கோபத்துல செய்துட்டேன். இனி அப்படி பண்ணமாட்டேன். எனக்கு உங்க ரெண்டு பேரோட ஹெல்த்தும் நிம்மதியும்தான் முக்கியம்” என்றான்.
மகனின் பிடிவாத குணம் தெரிந்த கோபாலனுக்கு தற்போதும் கூட விஷ்ணு காவ்யா மீதுள்ள கோபத்தை விட்டுவிட்டான் என்ற நம்பிக்கையில்லை ஆதலால், “காவ்யா வந்தா பழைய மாதிரி நீ இருப்பியா விஷ்ணு” என்றார்.
“நிச்சயம் இருக்கமாட்டேன்ப்பா. ஆனா உங்க விருப்பத்துக்கு தடையாவும் இருக்கமாட்டேன்” என்றான் தீர்க்கமாக.
மகனின் கோபம் நாள்பட குறையும் என்ற நம்பிக்கையோடு, தற்போது மகள் என்ன நிலையில் இருக்கிறாளோ என, “ஏங்க… போன் செய்ய சொல்லி மேகலைகிட்ட சொல்லட்டுமா?” என்றார் ஆவலாக.
“வேணாம் பிரபா. போனவ போனவளாவே இருக்கட்டும். திரும்ப எதாவது பிரச்சனைன்னா என் மகன் அவன் வாழ்க்கையை மொத்தமா வீணாக்கிடுவான்” என்றார்.
“அப்பா… காவ்யா மேல நம்பிக்கை வைக்கிறது உங்க விருப்பம். ஆனா என்னை நீங்க நம்பித்தான் ஆகனும். என் வாழ்க்கை வீணாகிடுச்சினா உங்க நிம்மதி போய்டும்னு எனக்கு தெரியாதாப்பா. அவ்வளோ பொறுப்பில்லாதவன் இல்லை நான்” என்றான் சிறு முறைப்போடு.
“பொறுப்பா இருக்கிறவன் இன்டர்வியு அட்டன் பண்ணியிருக்கனும். இரண்டு வருசமா இஷ்டப்பட்டுதான கஷ்டப்பட்ட. காவ்யா செய்ததுக்கு இரண்டு வருஷத்து உழைப்பை உதறினவன், திரும்ப பண்ணமாட்டனு என்ன நிச்சயம்? உன் எதிர்காலத்தை நினைச்சா எனக்கு பயமா இருக்கு விஷ்ணு” என்றார் ஆற்றாமையோடு.
“ப்பா என்னவோ கிடைச்ச வேலையை நான் உதறிட்ட மாதிரி பேசுறிங்க. இன்டர்வியுல செலக்ட் ஆகறதும் அவ்வளோ சுலபம் இல்லை. காவ்யா செய்த துரோகத்தை என்னால ஏத்துக்க முடியல. அண்ணன் மாதிரியா அவளோட பழகினேன்? அவளை விட க்ளோஸ் ஃப்ரண்ட் எனக்கு யாருமில்லப்பா. அவளும் அப்படித்தான் என்னோட இருக்கானு நம்பினேன். ஆனா அவ அப்படியில்ல. துரோகி” என்றான் மிகுந்த வேதனையோடு.
“விஷ்ணு” என்று கோபாலன் கலங்க, “ஐ.பி.எஸ் தான் வேணாம்னு முடிவெடுத்திருக்கேன். அதுவும் அதர் ஸ்டேட்லதான் மோஸ்டா ஜாப் இருக்கும்ன்றதால அப்படி முடிவெடுத்தேன். குரூப் ஒன் எக்ஸாம் ரொம்ப நல்லா பண்ணியிருக்கேன். இன்னும் அஞ்சாறு மாசத்துல வேலை கிடைச்சிடும். என்மேல நம்பிக்கை இருந்தா இப்படிலாம் கவலைப்படமாட்டிங்க” என்றான் உரிமைக்கோபமாக.
“டிகிரி முடிச்சி நாலு வருஷமாகுது. உன் பையன் ஏன் வேலைக்கு போகலனு எல்லாரும் கேவலமா கேக்குறாங்கடா. எனக்கு கஷ்டமா இருக்கு”
“சொல்றவங்க எதைத்தான் விட்டு வச்சிருக்காங்க? மத்தவங்களைப் பத்தி யோசிக்காதிங்க. வேலை கிடைச்சதும் இப்படி பேசுறவங்க அப்படியே மாத்தி பேசுவாங்க” என கடிந்து, “இப்போ பிரச்சனை என் வேலை இல்லை. காவ்யா போன் செய்திருக்கா. அதுக்கொரு முடிவெடுங்க. நான் கிரௌண்டுக்கு போய்ட்டு வரேன், இன்னைக்கு வாக்கிங் மாடிலயே போங்க” என்று கிளம்பினான்.
error: Content is protected !!