Skip to content
Post Views: 14,276
மேகலை வீட்டிற்கு சென்று மகள் போன் செய்த எண்ணை வாங்க பரபரத்தது பிரபாவதியின் மனம். ஆனால் கணவன் இன்னும் ஏதும் குடிக்கலையே என, “டீ வச்சிட்டு வரேன்” என்று கிச்சன் சென்றார்.
விஷ்ணு கிளம்பியது தெரிந்ததால் “அண்ணா” என அழைத்தார் மேகலை.
கோபாலன் தனது வீட்டிலிருந்து எட்டிப்பார்க்க, “அண்ணி சொன்னாங்களா?” என்றார்.
ஆமாம் என்பதாய் தலையசைக்க, “திரும்ப போன் செய்தா என்னண்ணா சொல்றது?” என்றார் பதட்டமாக.
Advertisement
“அட்டன் பண்ணாதம்மா” என்றார் இறுகிய முகத்தோடு.
மேகலை தவிப்பாக பார்க்க… “இன்னும் அவர் டீ கூட குடிக்கல மேகலை, டீ குடிச்சதும் மாடிக்கு வரோம். பேசலாம்” என்றபடி கணவனுக்கு டீ கொடுத்தார் பிரபாவதி.
டீயை வாங்கிப் பருக, “ஸ்…” என்றவருக்கு டீ சுட்டதில் கையிலிருந்த டம்ளரை தவற விடப்பார்க்க, “ஏங்க பார்த்து” என டம்ளரை அவசரமாய் வாங்கிய பிரபாவதி, “எப்போவும் குடிக்கிற சூட்டுலதான் கொடுத்தேன், சுட்டுடுச்சிங்களா?” என்றார் அக்கறையாக.
Advertisement
இல்லை என்பதாய் தலையசைத்து டீயை வாங்கி பருகினார் ஆழ்ந்த யோசனையோடு.
Advertisement
டீ குடித்ததும், “வாங்க மாடிக்கு போய் நடக்கலாம்” என்றார் பிரபாவதி.
“இரண்டு படி கூட ஏற முடியாதுனு சொல்வ… இன்னைக்கென்ன?” என முறைக்க, “விஷ்ணு உங்களை இங்கையே நடக்க சொல்லிட்டு போனான்தான?” என்றார் கணவன் உடல்நலத்தில் அக்கறை கொண்டராய்.
“உனக்கு என்மேல எப்போவும் அக்கறைதான். ஆனா இன்னைக்கு எனக்கு நடக்குற மூடு இல்ல” என்றதும் முகம் வாடினார் பிரபாவதி.
Advertisement
மனைவியைப் புரிந்தவராய், “மேகலை என்கிட்ட பேச காத்திட்டிருக்கு. மக மேல உள்ள கோபத்தை அதுகிட்ட காட்டி என்ன பிரியோஜனம்? நீ போய் காவ்யா போன் செய்தா எடுக்க வேணாம்னு சொல்லு. வேற நம்பர்லயிருந்து கூப்பிட்டா அப்பா பேச விருப்பமில்லனு சொல்லிட்டாருனு சொல்ல சொல்லிடு” என்றார்.
“ஏங்க… அவ அங்க என்ன நிலைமைல இருக்காளோ?” என்றார் தவிப்பாக.
“அதுக்கென்ன பண்ண முடியும்? அவளா தேடிக்கிட்டது”
“ஏங்க… இப்படி சொன்னா எப்படிங்க? நாளைக்கு அவளுக்கெதாவதுனா நம்மளால தாங்கிக்க முடியுமா?” என்றார் கெஞ்சலாக.
“ஓடிப்போனப்போ எல்லாரும் எப்படி விசாரிச்சாங்களோ, அதே மாதிரி காவ்யா வந்துட்டாளானு விசாரிப்பாங்க. அதோட நிறுத்தமாட்டாங்க, நம்பி போனவன் என்னானான்? கல்யாணம் ஆகிடுச்சா? ஆகாமலே குடும்பம் நடத்துனிங்களா? அவங்க குடும்பத்துல சம்மதிக்கலயா? ஏன் வந்துட்டானு ஆயிரம் கேள்வி வரும். இப்படி கேள்விக்கெல்லாம் என்ன பதில் சொல்றது?” என்றார் அவமான உணர்வோடு.
தற்போது மகளின் நிலை என்னவோ என்று நினைத்தாரே அன்றி பிரபாவதி இப்படியெல்லாம் யோசிக்கவில்லை. பின்விளைவுகளை எண்ணி வேதனை கொண்டபோதும், “அதுக்காக அப்படியே விட்டுட முடியுங்களா? நம்மளை விட்டா யார் இருக்கா அவளுக்கு? முதல்ல என்ன பிரச்சனைனு கேட்போம். அப்புறம் என்ன செய்யனு யோசிக்கலாம்ங்க” என்றார் தவிப்போடு.
கோபாலன் அமைதியாகவே இருக்க, “ஏங்க… மேகலைக்கு மாதிரி ஏமாத்துகாரனா இருந்தா என்னங்க பண்றது? எப்படின்னாலும் அப்பாம்மா நம்மளை கை விடமாட்டாங்கனு நம்பித்தான போன் செய்திருக்கா, நாம கண்டுக்காம விட்டு எதாவது விபரீதம் ஆகிடுச்சினா நம்மளால தாங்க முடியுமா?” என்றார் மீண்டும்.
“தாங்கித்தான் ஆகனும் பிரபா. இப்படி செய்வானு கண்டமா? ஆனா இத்தனை நடந்தும் மூனு வேளையும் திண்ணுட்டு உசிரோடத்தான இருக்கோம்? எதாவது மாறுச்சா? அதேபோல விபரீதம் ஆனாலும் அதை கடக்கவும் எதாவது வழியிருக்கும்” என்றார் இறுகிய முகத்தோடு.
“என்னங்க இப்படி பேசுறிங்க? உசிரையே வச்சிருந்திங்களே” என்றார் பேரதிர்ச்சியோடு.
விரக்தி சிரிப்பை உதிர்த்து அமைதியையே கையிலெடுத்தார் கோபாலன்.
“நாம உயிரோட இருக்கும்போது எப்படியோ போனு விடலாமாங்க. விஷாலினி விஷேசத்துக்கு அவங்க பாட்டி வீட்டுல வரலைனு வருத்தப்பட்டிங்கதான? காவ்யா பெரிய தப்பு பண்ணிட்டாதான். ஆனா இப்போ நம்மளை தேடுறா. என்ன பிரச்சனையோ தெரியல. தேவைப்படுற நேரத்துல உதவாம பின்னாடி வருந்தி பிரியோஜனம் இல்லைங்க” என்றார் மன்றாடலாக.
ஜன்னல் புறமிருந்து அழைத்த மேகலை, “முன்ன வந்த நம்பர்லயிருந்து போன் வந்துட்டே இருக்குது அண்ணி. எதாவது அவசரத் தேவையா இருக்கப்போகுது, பேசுங்க” என்றார் கவலையாக.
அந்த நேரம் வீட்டிற்கு வந்த விஷ்ணு, “இங்க கொடுங்க ஆன்ட்டி” என கை நீட்டினான். மறுக்க முடியாமல் விஷ்ணுவிடம் மொபைலை கொடுக்க, அதற்குள் அழைப்பு நின்றிருந்தது.
அழைப்பு வந்த எண்ணை தனது மொபைலில் குறித்துக்கொண்டு, “நான் பேசுறேன் ஆன்ட்டி” என்று அவரின் மொபைலை கொடுத்துவிட்டு வீட்டிற்குள் வந்தவன், “வாக்கிங் போகலயாப்பா?” என்றான்.
“நானும் மனுஷன்தான விஷ்ணு, எல்லா நேரமும் திடமாவே இருக்க முடியுமா?” என்றார் வேதனையாக.
“இவ்வளோ வேதனை தேவையில்லாததுப்பா. காவ்யா வேணும்னா அழைச்சிக்கலாம். ஃப்ரீயா விடுங்க” என்று இலகுவாய் விஷ்ணு சொல்ல, என்ன முயன்றும் கோபாலன் முகம் தெளிவடையவில்லை.
“ரொம்ப படுத்திக்காதிங்கப்பா. காவ்யா இப்படி செய்வானு நினைக்கவேயில்ல. ஆனா நடந்துடுச்சு. இப்போ அவளே பேச நினைக்கிறா. அவாய்ட் பண்ணிட்டு உங்களால நிம்மதியா இருக்க முடியுமா? அப்படி செய்தா இப்போ விட இன்னும் பலவீனமாகிடுவிங்க. மத்தவங்களைப் பத்தி யோசிக்காதிங்க. உங்க மனசுக்கு என்ன தோணுதோ அதை செய்ங்க” என்றான் தன்மையாகவே.
வெளியில் நின்றிருந்த விஷாலினி விஷ்ணுவின் பேச்சில் பெருமகிழ்ச்சி அடைந்தாள். உள்ளே வந்தவள், “ம்மா நான் குளிக்க போறேன். நீயும் சீக்கிரம் பூவை கட்டி முடிச்சிட்டு ரெடியாகு” என்றாள் ஆர்வத்தோடு.
“உனக்கு புது மொபைலை வாங்குறதால உன் மாமா கவலைலாம் மறந்துட்டியா?” என கடிந்தார் செல்லமாக.
“அப்படிலாம் இல்லைம்மா. காவ்யாக்கா வந்தா சேர்த்துக்கலாம்னு மாமாகிட்ட அவங்க சொன்னாங்க. காவ்யாக்கா மேல கோபம் குறைஞ்சிடுச்சு போலம்மா” என்றாள் மகிழ்வோடு.
தாய் தந்தை வேதனையறிந்து மனதை மாற்றிக்கொண்டான் என நினைத்து, “என்கிட்டயும் கோபமில்லாம நம்பர் வாங்கினான். காவ்யாகிட்ட பேசுவானு தோணுது” என மகிழ்ந்து, “அவங்க பேச்சை ஒட்டு கேட்குறதை என்னைக்குத்தான் நிறுத்தப்போறியோ?” என்றார் முறைப்பாக.
அன்னையின் முறைப்பை புறம் தள்ளி, “சரி நான் குளிக்கப்போறேன்” என்று குளியலறை புகுந்தாள்.
பின்னே ஒரு மணி நேரத்தில் குளித்து, உண்டு தயாராகி கிளம்பியவர்கள், பிற்பகல் மூன்று மணிக்குத்தான் வீடு வந்து சேர்ந்தனர். ஆட்டோவில் இருந்து இறங்கியதும் கோபாலன் கண்ணில் பட, “மாமா” என அழைத்தாள் உற்சாகமாக.
“ஏய் வந்து பையை எடுடீ, மாமாகிட்ட அப்புறம் காட்டலாம்” என்று ஆட்டோகாரரிடம் பணம் கொடுத்து பைகளை எடுத்து வாசலில் வைத்தார் மேகலை.
விஷாலினியின் குரலுக்கு வெளியே வந்த கோபாலன், “என்னடா குஷியா இருக்க? வெளில போனிங்களா?” என்றார் இன்முகத்தோடு.
“ஆமாம் மாமா, நீங்க இந்த நேரத்துக்கு வீட்டுல இருப்பிங்கனு நினைக்கல. நைட்தான் காட்ட முடியும்னு நினைச்சேன்” என சந்தோசித்து, “இருங்க மாமா பேக்லாம் எடுத்து வச்சிட்டு வரேன்” என்று இரு கைகளிலும் பையை எடுத்தபடி வந்தவள், கோபாலன் வீட்டு வாசலிலேயே வைத்து, ஹேண்ட்பேகிலிருந்து தனது மொபைலை எடுத்துக்காட்டினாள் புன்னகையோடு.
“உனக்காடா?” என்று மகிழ்வோடு வாங்கி ஆராய்ந்து, “என்கிட்ட சொல்லியிருந்தா விஷ்ணுவை வாங்கி வர சொல்லியிருப்பேன்ல?” என்றார் மேகலையிடம்.
“பரவால்லண்ணா, தம்பியை ஏன் தொல்லை பண்ணிகிட்டு?” என்றவர், “ப்பா… கையில வாங்கினதும் மாமாகிட்ட காட்டனும்னு சின்ன பிள்ளையாட்டம் ஆர்பாட்டம் பண்ணிட்டா” என்றார் சிரிப்போடு.
“சின்ன பிள்ளைதான்ம்மா” என்றவர், “சிம் வாங்கியாச்சா?” என்றார்.
“வாங்கியாச்சு மாமா, வீட்டுக்கு போய் போட்டுக்கலாம்னு அம்மா சொல்லிட்டாங்க, ஆக்டிவேட் ஆனதும் போன் பண்றேன்” என்றாள்.
“சரிடா, சரிடா, போய் ரெஸ்ட் எடுங்க, காலைல போனவங்க. டையர்டா இருக்கும்” என்றார்.
“மாமா அம்மா நிறைய டிரெஸ் எடுத்தாங்க. உனக்கும் எடுத்துக்கோனு சொன்னா அம்மா கேக்கல, நானா காலேஜ் போகப்போறேனு எல்லாமும் எனக்கே எடுத்துட்டாங்க. அத்தையும் நீங்களும் வீட்டுக்கு வாங்கமாமா காட்டறேன்” என்று கத்தியவாறு தனது வீட்டிற்கு சென்றாள்.
அரைமணி நேரம் பொறுத்து புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது கோபாலனுக்கு. கோபாலன் வீட்டில் இருப்பதால் விஷ்ணுவும் வீட்டில்தான் இருந்தான்.
பெயர் தெரியாத எண் ஆதலால் கோபாலன் முகம் பதட்டத்தை காண்பிக்க, தந்தையை பார்த்தவன், “யார்ப்பா?” என்றபடி மொபைலை வாங்கி அட்டன் செய்து, “ஹலோ” என்றான்.
“அச்சோ இவங்களா?” என விஷாலினி முணுமுணுப்பது விஷ்ணுவிற்கு கேட்டிட, இவளின் குரலை மொபைலில் கேட்டிராத விஷ்ணுவிற்கும் விஷாலினியாக இருக்கும் என்று தோன்றவில்லை.
காவ்யாவாக இருக்குமோ என “ஹலோ” என்றான் சற்று உயர்த்திய குரலில்.
“நான் விஷாலினி பேசுறேன். இது என் நம்பர். மாமாக்கு சொல்ல போன் செய்தேன்” என ஒப்பித்தாள் கடகடவென.
சற்றுமுன் புது மொபைல் பற்றி பேசியதை கேட்டது நினைத்தவன், “ஹம் அப்பாகிட்ட கொடுக்கறேன்” என்று தந்தையிடம் நீட்டினான்.
கோபாலன் வாங்கவே, “மாமா” என்றாள்.
“சொல்லுடா, இதான் உன் நம்பரா?”
“ஆமாம் மாமா. சேவ் பண்ணிக்கோங்க. முதல் ஃபோன் உங்களுக்குத்தான் பண்ணனும்னு பண்ணினேன்” என்றாள் உற்சாகமாக.
“சரிடா, சேவ் பண்ணிக்கிறேன்” என்று இணைப்பை துண்டித்து விஷாலினியின் சந்தோசத்திற்காக அவளின் புது உடைகளை காண மனைவியோடு சென்றார் கோபாலன். மகளுக்கு வழக்கமாக பண்டிகை, பிறந்தநாளுக்கு உடையெடுப்பார் மேகலை.
ஒன்று அல்லது இரண்டு ஜோடி உடைகள்தான் எடுப்பார். வீட்டில் உடுத்தவென இரவு உடைபோன்று பேண்ட் சர்ட் வாங்கி கொடுப்பார். அதுவும் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று ஜோடிதான்.
இதுவரை விஷாலினியும் நிறைய வேண்டும் என்று கேட்டதில்லை. மேகலையும் தேவைக்கு அதிகமாக செலவு செய்யமாட்டார். சொந்தங்கள் நல்லது கெட்டதென இதுவரை எங்கும் சென்றதில்லை ஆதலால் உடை, அணிகலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை மேகலை.
பணத்திற்காக பேத்தி யாரிடமும் கையேந்த கூடாதென்றுதான் மேகலையின் தாத்தா வீட்டை கட்டினார். வாழ்வாதாரத்திற்கு வீட்டு வாடகை வந்தபோதும் வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் வேலைக்கு செல்ல மேகலை நினைக்க, வெளியே வேலைக்கு வேண்டாம், வீட்டிலிருந்தபடி எதாவது செய் என்றார் மேகலையின் அன்னை.
தையல் வேலை தெரிந்த போதும், தனது தாத்தாவின் தொழிலான பூ கட்டும் தெழிலையே தேர்ந்தெடுத்தார் மேகலை. ஆரம்பத்தில் சிறு வருமானம்தான் என்றாலும் அன்றைய செலவை அடக்கிவிடவே பூ கட்டி கொடுப்பதை நிரந்தரமாக்கிக்கொண்டார்.
தற்போது நாளொன்றுக்கு இருநூறிலிருந்து முன்னூறு வரை கிடைக்கவே வீட்டு செலவிற்கு போக அதிலும் சேமிப்பார் மேகலை. வீட்டு வாடகையையும் பத்து வருடங்களாக சேமிப்பில்தான் வைத்திருக்கிறார்.
அனைத்தும் கோபாலனுக்கு தெரிந்தவைதான். முதல் முறையாக நிறைய உடை வாங்கியதால் மகிழ்வில் இருக்கும் விஷாலினியை மேலும் உற்சாகப்படுத்த மேகலை வீட்டிற்கு வந்தார்.
“மாமா… வாங்க வாங்க, அத்த வாங்க. அம்மா இங்க வா, அத்த மாமா வந்திருக்காங்க” என்று பின்கட்டில் பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்த மேகலையை அழைத்தாள் உற்சாகத்தோடு.
செய்த வேலையை அப்படியே விடுத்து கை கழுவி, முந்தானையில் துடைத்தபடி வந்த மேகலை, “வாங்கண்ணா, வாங்கண்ணி” என தண்ணீர் கொடுத்தார்.
வாங்கியவர் “நாங்க என்ன ஒரம்பரையா மேகலை?” என்றபடி பருக, “ஒரம்பரை இல்லனாலும் நீங்க இங்க வந்து ஒரு வருசம் பக்கம் ஆச்சேண்ணா. கடைசியா தாத்தாக்கு சாமி கும்பிடும்போது வந்தது” என்றார்.
விஷாலினி தனது புது உடைகளை காண்பிக்க, வழக்கத்தில் இல்லாமல் நல்லவிலை போட்டு உயர்ந்த ரகங்களில் வாங்கியிருந்தார். ஆச்சர்யத்தோடு பார்த்த பிரபாவதி “காலேஜ்க்காவது நல்லதா வாங்குனியே மேகல, எல்லாம் நல்லா இருக்கு” என பாராட்டினார்.
உடைகளை பார்த்த பின்னே கோபாலன் கிளம்பப் பார்க்க, “மாமா அடுத்த வாரத்துலயிருந்து உங்களை தினமும் பார்க்க முடியாது” என்றாள் வாடிய முகத்தோடு.
“ஏண்டா?”
“நான் ஹாஸ்டலுக்கு போய்டுவேன்” என்க, அதிர்ந்த கோபாலன் மேகலையை பார்க்க, “ஆமாம்ண்ணா. வேற வழியில்ல” என்று மகளை பின்தொடரும் நபர் பற்றி சொல்லி, “இன்னைக்கும் பார்த்தேண்ணா” என்றார்.
அன்னைக்கு அவனை அடையாளம் தெரியாதே… எப்படி பார்த்தேன் என்கிறார்கள் என்று வியந்தாள் விஷாலினி.
“அவன் யாருனு கூட கெஸ் பண்ணிட்டேண்ணா” என்று தனது அபிமானத்தை சொன்னதும் இம்முறை கோபாலன், பிரபாவதி, விஷாலினி என மூவரும் பெரிதாய் அதிர்ந்தார்கள்.
error: Content is protected !!