Skip to content
Post Views: 8,469
அத்தியாயம் 33:
ஹேரி நிதானமாக அவன் சட்டையின் சுருக்கங்களை சரி செய்து கொண்டிருந்தான். இவ்வளவு நேரமாக ஹேரி சொல்வதை பார்த்திதான் மீனாட்சி அப்பத்தாவிற்கு மொழி பெயர்த்து கொண்டிருந்தான். பிரமித்து ஹேரியை பார்த்து கொண்டிருந்த அப்பத்தா “பாத்தியா மீனாட்சி. இந்த ஹரி பையன் வீரத்துல உங்க மாமனார் போலவே இருக்கான்” என்றார்.
வீட்டில் கொல்லை பக்கம் மாடு தலையை சிலுப்பினாலே பயந்து போய் நான்கு அடி தள்ளி செல்லும் மாமனார் நியாபகத்தில் ஞான சரஸ்வதியை பார்த்து பல்லை கடித்த மீனாட்சி,
“வருண பத்தி அவர் சொல்றதெல்லாம் உண்மையா அத்த”
Advertisement
“எனக்கும் முழுசா ஒன்னும் தெரியாது மீனாட்சி. ஆனா அரசல் புரசலா அவன் நடவடிக்கை சரியில்லைன்னு தெரியும்”
“தெரிஞ்சும் அவன மதுக்கு கல்யாணம் பேசும்போது ஏன் சும்மா இருந்திங்க”
“ஏண்டி பொண்ண பெத்த நீங்களே ஒன்னும் விசாரிக்காம அவனுக்கு பொண்ணு குடுக்க முடிவெடுத்திட்டிங்க. இந்த வீட்டு பெரிய மனுசின்னு ஒரு வார்த்த என்னட்ட கேட்டீங்களா. இந்த ஹரி பிள்ளைய வேண்டாம்ன்னு தீவிரமா சொல்ல தெரிஞ்ச உங்களுக்கு, தேர்ந்தெடுக்கற மாப்பிள்ளைய அலசி ஆராயணும்ன்னு தெரிய வேண்டாமா”
Advertisement
“ஓ இது தெரிய வரலைன்னா கல்யாணம் நடக்கற வரை கம்முன்னு இருப்பிங்களா அத்தை” என்று மீனாட்சி ஆதங்கமாக கேட்டார்.
Advertisement
“அது எப்படி சும்மா இருப்பேன். அவ என் பேத்தி டி. அதனாலதான் நாங்க வரும் போது இங்க இருக்க வேண்டாம்ன்னு அவளை ஆஸ்திரேலியாக்கே போக சொன்னேன்” என்று கூலாக சொன்னவரை வெட்டவா குத்தவா என்று பார்த்தார் மீனாட்சி. செல்லத்துரை வருணின் சுயரூபம் தெரிந்து இடிந்து போய் அமர்ந்திருந்தார்.
இவ்வளவு நேரம் பார்த்தியின் மூலமாக அவர்கள் உரையாடலை அறிந்த ஹேரி, “பாட்டியை ஏன் முறைக்கிறீங்க ஆன்ட்டி. உங்களுக்கு தெரியாததா. உங்க மக ஒரு ஏஞ்சல். அவள எவ்வளவு அருமையா வளத்திருக்கிங்க ஆன்ட்டி நீங்க. அவ்ளோ தூரத்துல அவ இருந்தாலும் ஒரு சின்ன விசயத்துல கூட உங்க பேச்ச மீறி நடக்க மாட்டா. வெள்ளிக்கிழமை நான் வெஜ் சாப்பிட மாட்டா. சனிக்கிழமை தவறாம கோயில் போவா. ஏன் உங்களுக்கு பிடிக்கும்ன்னுதான அவ ஹேர கட் பண்ணாம கஷ்ட்டப்பட்டு மெயின்டெய்ன் பண்ணிட்டுருக்கா. நீங்க பக்கத்தில இல்லேன்னாலும் உங்களுக்கு பிடிச்சது பிடிக்காதது பாத்து செய்வா” என்று பேசியவனை மீனாட்சி ஆச்சரியமாக பார்த்தார். நம் மகளை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறானே என்று.
“போன வாரம் வரைக்கும் என்னை பிடிச்சிருந்தாலும் உங்களுக்காக என்ன வேண்டாம்ன்னுதான் சொல்லிட்டு இருந்தா. எல்லாருக்கும் உதவி செய்றவ, யாரையுமே கஷ்ட்ட படுத்தி பாக்கணும்ன்னு நினைக்க மாட்டா. அப்படி இருக்கவ உங்கள கஷ்ட்ட படுத்தணும்ன்னு நினைப்பாளா. அப்படி உள்ள பொண்ணு சைட்லேர்ந்து நீங்க யோசிச்சு பாக்கவே இல்லையே. நான்தான் காரணம் அவ என்ன லவ் பண்றதுக்கு. அவள பாத்த முதல் நாள்ல இருந்து அவள என்னால விட முடியல. அவ என்ன பிடிச்சிருக்குன்னு சொன்னவுடனே நீங்க என்ன பத்தி விசாரிச்சிருக்கலாம். இப்பவும் ஒன்னும் பிரச்சினையில்ல. உங்களோட பயம் என்ன. வைட் பீப்பிள்னாலே நிறைய கேர்ள் பிரண்ட். டைவர்ஸ் பண்ணிட்டே இருப்பாங்க.எப்ப பாத்தாலும் குடிச்சிட்டே இருப்பாங்க. அப்டிங்கறதுதான. ஆனா அது முழுக்க உண்மையில்ல. எங்களுக்கும் லைஃப்ல கொள்கைகள் கோட்பாடுகள் இருக்கு. என் உடம்ப கெடுத்துக்கிற அளவு நா ஆல்கஹால் என்னைக்கும் எடுத்துக்கிட்டது இல்ல. அதும் மதுவ எனக்கு தெரிஞ்ச பிறகு சுத்தமா ஆல்கஹால் தொடுறதில்ல. அப்புறம் எனக்கு பிடிச்ச முதல் பொண்ணு மதுதான். இதுக்கு முன்னாடி எனக்கு எந்த கேர்ள் பிரண்டும் இருந்ததில்ல. எனக்கு ஒரே வைப் மதுவாத்தான் இருப்பா நா சாகிற வரைக்கும். நீங்க நம்புனாலும் நம்பாட்டினாலும் இதுதான் உண்மை. அத எப்படி நிரூபிக்கணும்ன்னு நீங்க சொன்னிங்கன்னா அத செய்றதுக்கு நா ரெடியா இருக்கேன். ஆனா எனக்கு தெரிஞ்ச முறையில நா ஒரு விஷயம் செஞ்சிருக்கேன்” என்றவன் பார்த்தியை நோக்கி கையை நீட்டினான்.
Advertisement
பார்த்தி அவன் வைத்திருந்த பேகிலிருந்து சில பேப்பர்களை எடுத்து கொடுத்தான். அதை வாங்கி சரி பார்த்து செல்ல துரையின் கையில் கொண்டு போய் கொடுத்தான் ஹேரி. அனைத்தும் பத்திரங்கள்.
“இதெல்லாம் என்னோட அஸெட் டாக்குமெண்ட்ஸ்”
பிறகு இன்னொரு பேப்பரை எடுத்து கொடுத்தவன் “என்னோட அத்தன சொத்தையும் மது பேர்ல மாத்தி எழுதியிருக்கேன். என்னோட அசையும் அசையா சொத்துக்கள், கம்பெனிஸ், ஃபேக்டரி, என்னோட கார்ஸ் முதற்கொண்டு என்னட்ட உள்ள எல்லாத்தையும் இன்க்ளூட் பண்ணிருக்கேன். ஏன் நானுமே என் பேபியோட சொத்துதான். இதை பார்த்து என்னோட மது பேபிக்கு விலை பேசிருக்கேன்னு நினைக்காதீங்க. என் பேபிக்கு விலையே கிடையாது. முன்ன பின்ன தெரியாத நா வந்து உங்க பொண்ண கேக்கறேன். உங்களுக்கு ஒரு நம்பிக்கை வரணும்ல என் பேர்ல, அதனாலதான் இத உங்ககிட்ட கொடுக்கறேன். நீங்க இத உங்கட்டையே வச்சுக்கலாம். என்னைக்கு என் மேல உங்களுக்கு நம்பிக்கையில்லாம போகுதோ அப்ப இத நீங்க யூஸ் பண்ணிக்கலாம்” என்றான்.
கையில் வைத்திருந்த பத்திரங்களை அவசரமாக டீபாயில் போட்டார் செல்லதுரை. அதிர்ந்து போய் அமர்ந்திருந்தனர் அனைவரும்.
ஹேரி தொடர்ந்தான் “எனக்கு தெரிஞ்ச முறையில நா உங்களுக்கு நிரூபிக்க பாக்கிறேன். ஆனா என் மது பேபிக்கு ஈடா இந்த சொத்தெல்லாம் வச்சு பாக்கிறதே எனக்கு அசிங்கமா இருக்கு. இந்த பணம் , சொத்துக்கெல்லாம் அப்பாற்பட்டவ என் பேபி. ஆனா என்னட்ட இதுதான் இருக்கு கொடுக்கறதுக்கு. வேற என்ன பண்றதுன்னும் தெரியல எனக்கு . என் பேபி அழுதுட்டே இருக்கா. அவ அழுகையை நிறுத்த என்னாலான முயற்சியதான் செய்றேன்” என்று சிறிது நேரம் மௌனமானவன் “இதுக்கு மேல நீங்கதான் முடிவெடுக்கணும்” என்று விட்டு பார்த்தியை பார்த்தான் கிளம்புவதற்க்காக.
பார்த்தியும் கிளம்பினான். சுய நினைவுக்கு வந்த மீனாட்சிதான் அவசரமாக “இருங்க தம்பி. ஏதாவது சாப்டுட்டு போங்க” என்று கூறினார். அவர் சொல்வது புரிந்து அவனாகவே “ஓகே ஆன்ட்டி” என்று புன்சிரிப்போடு இருக்கையில் அமர்ந்தான்.
“தமிழ் தெரியுமா அவருக்கு” என்று மீனாட்சி பார்த்தியை பார்த்து கேட்டார்.
“பேசறத ஓரளவு புரிஞ்சுக்குவார். பேசறதுக்கு கத்துக்கிட்டிருக்கார்” என்றான். வியப்போடு கேட்டுக்கொண்டே உள்ளே சென்றவர் மாலை சிற்றுண்டிக்காக செய்த கருப்பட்டி பணியாரத்தையும், வடையையும் எடுத்து வந்து பார்த்திக்கும் ஹேரிக்கும் கொடுத்து விட்டு காஃபி எடுக்க சென்றார். பணியாரத்தை பற்றி பார்த்தியிடம் விளக்கம் கேட்டு கொண்டான்.
பில்டர் காஃபியை குடித்தவன் “சூப்பர் ஆன்ட்டி உங்க டிஃபன். அதும் இந்த மாதிரி காஃபி எந்த கன்ட்ரிலயும் நா குடிச்சதில்ல” எனவும் மீனாட்சியை கையால் பிடிக்க முடியவில்லை.
இது அனைத்தையும் எதுவும் செய்ய முடியாமல் பார்த்து கொண்டிருந்தார் செல்லத்துரை.
ஹேரி கிளம்பியதும் வருணும் பெட்டியோடு கிளம்பிவிட்டான். அவனை யாரும் தடுக்கவும் இல்லை. சிறிது நேரத்தில் அவன் பெற்றோர்கள் வந்தவர்கள் நடந்ததை அப்பத்தா மூலமாக அறிந்துகொண்டு இறுக்கமாக அமர்ந்திருந்த செல்லத்துரையிடம் மன்னிப்பு கேட்டனர். அவர் அக்காதான் “தம்பி. என்ன மன்னிச்சிருடா. இவன் சரியில்லேன்னுதான் நான் மதுவை பொண்ணு கேக்கல. அவன்தான் அழுது மதுவை கல்யாணம் பண்ணி வச்சேன்னா திருந்திருவேன்னு சொன்னான்”
“உன் பையன திருத்தத்தான் நா பொண்ணு பெத்து வச்சிருக்கேனாக்கா” என்று செல்லத்துரை கேட்டதற்கு அவளின் அக்கா கணவர் “நீங்க மட்டும் என்ன மச்சான். மது லவ் பண்ணிட்டான்னுதான வருணுக்கு பொண்ணு கொடுக்க சம்மதிச்சிங்க” என்று அவர் கேட்டதும் சுருக்கென்று குத்தியது செல்லத்துரைக்கு.
வேறு யாரையும் மதுவிற்கு மாப்பிள்ளையாக பார்த்தாலும் இன்னொருத்தவனை காதலித்தவள் என்ற பெயர் மறையுமா என்று பெருமூச்சு விட்டார்.
பாபு திரும்பவும் “உங்கள குத்தி காட்றதுக்காக சொல்லல மச்சான். காதல் அவ்வளவு தப்பான விஷயமில்லன்னுதான் சொல்ல வரேன். என் பையன பாத்திங்கல்ல. ஒரே பையன்னு செல்லம் குடுத்ததுக்கு எப்படி தறுதலையா போய்ட்டான். ஆனா மது. எப்பேர்ப்பட்ட பொண்ணு. அவளுக்கு புடிச்ச வாழ்க்கையை அமைச்சு தர வேண்டாமா நீங்க. அந்த பையன் பேசிட்டு போனத அத்த சொன்னாங்க. இப்பவும் வரதட்சிணை வாங்கித்தான் நீங்க மேலா நினைக்கிற நம்ம ஊர்காரனுங்க கல்யாணம் பண்றானுங்க. ஆனா இந்த பையன் என்ன காரியம் பண்ணிருக்கான் பாருங்க. அவனை பத்தியும் விசாரிச்சுட்டேன். ஆஸ்திரேலியால என் பிரெண்ட்ஸ் மூலமா. அவன் சொன்னதெல்லாம் உண்மைதான். அவன் பொண்ணுங்கட்ட பழகி யாரும் பாத்ததில்லையாம். பயங்கர மூளைக்காரனாம். இந்த சின்ன வயசுலேயே அவ்ளோ கம்பெனி ரன் பண்றான். நம்ம நம்பி நம்ம பொண்ண கொடுக்கலாம். இல்ல ஜாதி, மதம், மொழி, இனம் பெருசுன்னு நினைக்கிறீங்களா. இல்ல காதல்ன்ன உடனே நிறைய பேரன்ட்ஸ் மாதிரி எதுக்கணும்னு நினைக்கிறீங்களா”
அமைதியாக இருந்தார் செல்லதுரை. அப்பத்தாவும் “என்ன துரை. நீ காதலிச்ச பொண்ணு நம்ம ஜாதியில் இருந்ததுனால பிரச்சனையில்லாம போயிடுச்சி. உன் பொண்ணு வேத்து ஜாதி, வெளிநாட்டு காரன்னு யோசிக்கிறியா”
அவரை அதிர்ச்சியாக பார்த்தார் மீனாட்சி. அவர் அளவு அதிர்ச்சியில்லை என்றாலும் ஆச்சரியமாக பார்த்தார் செல்லத்துரை.
“என்னடா பாக்கிறிங்க. நீ என்ன கோக்கு மாக்கு பண்ணி இவ ஜாதகத்தை ப்ரோக்கர் மூலமா கொண்டுவர வச்சு கல்யாணம் முடிச்சாலும் நானும் உங்க அப்பாவும் அந்த அளவு கூறு இல்லாமையா இருக்கோம். அப்பவே தெரியும் எங்களுக்கு. ஒரே பையன் மனசுக்கு பிடிச்சவளோட வாழட்டும்னு விட்டுட்டோம். அதிலையும் இப்ப அமெரிக்கா போய் இருந்து பாத்ததுல, உலகம் எவ்வளவு பறந்து விரிஞ்சிருக்கு. மனுசங்க மனசுதான் சுருங்கி போய் கிடக்குன்னு புரியுது. தோல் கலர் பெருசில்லப்பா. மனசுதான் பெருசு. காலம் முழுக்க நல்லா பாத்துக்குவான்னு நம்பிக்கை இருக்க போய்தான என் பேத்தி அவனை விரும்பிருக்கா. நாமளும் நம்புவோம்”
என்றவருடன் முதல் முறையாக ஒத்து பேசினார் மீனாட்சி “ஆமாங்க. எனக்கு வருண் மேல வராத நம்பிக்கை, இவர பாத்தா வருது. முன்னாடி காலம் மாதிரியா, கல்யாண வாழ்க்கை சரியில்லைன்னா வாழ்க்கையே முடிஞ்சு போனதா நினைக்க. நம்ம மது படிச்சுருக்கா. தனியா போய் பாரின்ல வேல பாக்கிற அளவு தைரியமாத்தான் வளத்துருக்கோம். முற்காலம் மாதிரி கணவன மட்டும் நம்பியா நம்ம பொண்ணு இருக்க போறா. அவனோட அவ வாழ்க்கையை ஷேர் பண்ண போறா. அத அவ மனசுக்கு பிடிச்சவனோட வாழட்டுமே” என்றார்.
அப்புறமென்ன குடும்பம் முழுதும் ஒரே முடிவெடுத்த பிறகு செல்லதுரைக்கு வேறு வழியிருக்கவில்லை. அவர் ஜாதி மதம் காதல் இதையெல்லாம் எதிர்க்கவில்லை. வெளிநாட்டுகாரனின் பழக்க வழக்கங்களை கேட்டுத்தான் பயந்திருந்தார். பார்த்தியும் அவள் அக்கா கணவரும் அவனுக்கு கியாரண்டி கொடுத்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக ஹேரியின் அணுகுமுறை. அதில் பொய்யிருப்பதாக தெரியவில்லை அவருக்கு. அதிலும் அவரும் மகளின் அழுகையை பார்த்து நொந்து போய்தானே இருந்தார். சின்ன வயதில் இருந்து மீனாட்சி கண்டித்து மகள் முகம் சுருங்கினாலும் பொறுத்து கொள்ள முடியாதவர். இப்பொழுதும் மதுவின் சந்தோசத்தை பார்ப்பதற்காக மகளிற்க்கு போனை போட்டார்.
மெல்பர்னில் இரவு ஒரு மணி. மது தூங்காமல் விழித்துதான் கிடந்தாள். ஹேரி காலை இரவு போன் செய்து நலம் விசாரிப்பதோடு சரி. அவன் மேல் கோபமாக பொருமி கொண்டிருந்தவளுக்கு செல்லத்துரையிடமிருந்து போன் என்றதும் அவசரமாக போனை எடுத்தாள்.
“பாப்பா” என்று ஒரு வாரம் கழித்து செல்லதுரை கூப்பிட்டதும் மனம் முழுவதும் பரவசம்.
“அப்பா”
“சாரிடா பாப்பா. அப்பா உன்ன கஷ்ட்ட படுத்திட்டேன். இன்னைக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திருந்தார். எங்க எல்லாருக்கும் அவரை ரொம்ப பிடிச்சுருக்கு. எனக்கும்தான்” என்று கூறியதும் மதுவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“அவருதாண்டா ஹேரி மாப்பிள்ளை” என்றதும் மதுவிற்கு ஆச்சரியம் பிளஸ் ஆனந்த கண்ணீர் . பிறகு குடும்பம் முழுவதுமே அவளிடம் பேசினர்.
விடியற்காலையில் திரும்பவும் பிளைட் ஏறி அன்று இரவு தஞ்சாவூருக்கு வந்துவிட்டாள். அடுத்த நாள் காலை ஹேரியை பாபநாசத்தில் உள்ள மதுவின் வீட்டுக்கு அழைத்திருந்தனர். அதுவரை அவனிடம் சம்மதம் சொல்லவில்லை. மதுவின் கட்டளை. பார்த்தியிடமும் செய்தியை கூறி அவனிடம் சொல்ல கூடாது என்று சொல்லியிருந்தாள்.
காலையில் பரபரப்பாக என்ன சொல்வார்களோ என்று மதுவின் வீட்டுக்கு வந்த ஹேரி பார்த்தது வாசலில் நின்றிருந்த அவனின் தேவதையைத்தான். வேகமாக வந்து பிரேக் அடித்தது போல் அவள் எதிரில் நின்றவன் முகத்தில் மந்தகாச புன்னகை.
லாவண்டர் கலரில் பாவாடை தாவணி ஜாக்கெட், சில்வரில் பார்டர் வைத்து அணிந்திருந்தாள். காதில் கழுத்தில் சின்னதாக வைரங்கள். தலைக்கு குளித்து கிளிப் குத்தி முடியை விரித்து விட்டிருந்தாள். தலை முழுவதும் நிறைய மல்லிகை சரங்கள். வாசலில் உள்ள தூணில் சாய்ந்து கொண்டு, முந்தானையை கையில் பிடித்து சுற்றி கொண்டே “யார் நீங்க. என்ன வேணும்” என்று கேட்டாள்.
அதற்கு ஹேரி சிரித்து கொண்டே “எனக்கு டேட்டிங் போறத்துக்கு உதட்டோர மச்சமும், நீள முடியும் உள்ள ஒரு தமிழ் பொண்ணு வேணும்”
அவன் கிட்டே படியில் இறங்கி வந்து சிரிக்கும் அவன் நீல கண்களை நிமிர்ந்து பார்த்து “அந்த பொண்ணுக்கும் அவ அம்மா அப்பாவுக்கும் டேட்டிங் பிடிக்காதாம். அதனால அவள கல்யாணம் பண்ணி கொடுத்து வாழ்க்கை முழுக்க உன் கூடவே இருக்க சொல்லிட்டாங்களாம்” என்று கண்ணீருடன் சொன்னவள், அதற்கு மேல் பொறுக்காமல் தாவி அவன் கழுத்தை சுற்றி அணைத்து கொண்டாள். திரும்ப அவளை அணைத்து, அவன் உயரத்திற்கு தூக்கி கொண்டவன் அவள் மச்சத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தான். திருப்பி அவன் முகம் முழுவதும் முத்தத்தை பதித்துவிட்டு இறங்கியவள் அவனை வீட்டின் உள்ளே அழைத்து சென்றாள்.
(வருவாள்…)
error: Content is protected !!