Skip to content
Post Views: 4,355
அத்தியாயம் – 11
அவள் இடக்கையை தன் பிடியினுள் வைத்துக்கொண்டு வாயில் ஒரு ஸ்பூன் மாதுளை முத்துக்களை திணிக்க, “விடு விஷூ…” என்று பாதி முத்துக்களை கடித்து மென்றுக்கொண்டே முனகினாள் அதிரா.
கிட்டத்தட்ட ஏழு வருட நட்பின் உரிமையில் விஸ்வநாதன் இயல்பாய் அதிராவை நெருங்கி அவளை கவனிக்க, அந்நேரம் உள்ளே நுழைந்த அகிலனுக்கு அவர்களின் நெருக்கம் உவப்பாய் இல்லை. ஏனோ கண்ட காட்சியை மனம் ஏற்க மறுத்தது. முகம் அதிருப்தி பூசிக்கொண்டது. வந்த வழியே திரும்பிப் போகச் சொல்லி சிந்தை உந்த, உடல் கேட்காது வேரூன்றி அப்படியே நின்றது.
“போகாதேனு சொன்னா ஒரு சுதந்திர தின பரேட் கூட மிஸ் பண்ணது இல்லைனு சொல்லி காலையிலேயே கிளம்பி போயிட்ட… சாப்டியான்னு கேட்டா மண்டையை நல்லா ஆட்டுற, ஆனா மூஞ்சு ரியாக்ஷன் இல்லைனு சொல்லுது. ஒழுங்கா இந்த பழத்தை சாப்புடு அதி, நான் ப்ரஞ்ச்சா ரெடி பண்ணிடுறேன்.” என்று அவன் இன்னொரு ஸ்பூன் மாதுளையை ஊட்டிவிட்டான்.
Advertisement
“மார்னிங் கஞ்சி காய்ச்சி என்னை குடிக்க வச்சிதானே அனுப்புன. அதுவே டம்முனு இருக்கு விஷு.” முகத்தை சுருக்கி கெஞ்சலாக அவள் சொல்ல, மறுப்பாய் அசைந்தது அவன் தலை.
“நான் இருக்குற வரை இப்படிதான். ஒழுங்கா ஹெல்தியா சாப்புடு.”
“நீ இல்லைனாலும் நான் ஹெல்தியா சாப்புட்டுட்டு தான் இருக்கேன்.” என்றவள் இடக்கை கொண்டு வலக்கையில் மாட்டியிருந்த பெல்ட்டை விலக்கியவள் அதை அருகே இருந்த மேசையில் வைத்துவிட்டு, அவன் கையிலிருந்து பழ பவுலை வாங்கிக்கொண்டாள்.
Advertisement
“நானே சாப்டுக்குறேன். நீ போய் ப்ரஞ்ச் ரெடி பண்ணு விஷு.”
Advertisement
“ஒழுங்கா சாப்பிடுடனும்.”
“ஐ’ம் நாட் எ கிட் விஷு.” என்றாள் முகத்தை உர்ரென்று வைத்து.
லேசாக அவன் அதரங்கள் விரிய, கைகளை மேலே உயர்த்தி, “ஓகே ஓகே…” என்று சரண்டர் ஆவது போல் பாவனை செய்தவன் சமையலறை நோக்கி அடி எடுத்து வைக்க, அங்கு நின்றிருந்த அகிலனை யோசனையாய் ஏறிட்டான்.
Advertisement
“அதி, உங்க டிபார்ட்மென்ட்லேந்து யாரோ வந்திருக்காங்க.” அதிராவுக்கு குரல் கொடுத்த விஷூ, அகிலனை உள்ளே வரும்படி அழைத்தான்.
யாரென்று அதிராவும் எட்டிப்பார்க்க, அகிலன் வேகமாக உள்ளே வந்தான்.
நீயா என்று பார்த்த அதிரா, “என்ன?”
“…” ஏதோ உந்துதலில் உள்ளே வந்துவிட்டவனுக்கு அவளின் கேள்வியான பார்வைக்கு பதில் கொடுக்க முடியவில்லை.
“அகிலன், உன்னை கிளம்ப சொன்னேனே?” அதிரா அழுத்தமாய் கேட்க, தலையை உலுக்கிக்கொண்டவன்,
“ஹான்… அது… பரிதி சார் அம்மா?” காரணம் கண்டுபிடித்து சட்டென சமாளிப்பில் இறங்கினான் அகிலன்.
“அவங்களுக்கு என்ன?” ஆராயும் பார்வை பாவையிடம். என்றுமில்லாது திணறும் அவன் உடல்மொழி அவளை சிந்திக்க உந்தியது.
“அவங்களை பாத்துட்டு போலாம்னு வந்தேன். அன்னைக்கு நல்லா பேசுனாங்க.”
“ஓஹோ,” புருவம் உயர்த்தியவள், “பரிதி வீட்ல போய் பாரு. அவங்க இங்க இல்லை.”
“ஏன் ஏன் இங்கில்லை… உங்களுக்கு ஹெல்ப்பா இருக்கத்தானே வந்தாங்க?”
“பிகாஸ் நான் வந்துட்டேனே…” என்று சின்ன சிரிப்புடன் அகிலன் முன் ஒரு கப்பை நீட்டினான் விஸ்வநாதன்.
“நீங்க?” அதிராவிடம் விஷயம் கறக்க முடியாது என்பதை புரிந்துகொண்டு புன்னகை முகமாய் வரவேற்கும் விஷுவை பிடித்துக்கொண்டான் அகிலன்.
“விஷூ, அவன் என் டிரைவர்.” விஷூ வாய் திறக்கும் முன் அவனை எச்சரிக்கும் விதமாய் அதிரா குறுக்கிட்டாள்.
ஓ என்று உதட்டை குவித்து விஷூ அகிலனைப் பார்க்க,
“நான் கான்ஸ்டபில், மேடம் தான் இப்படி டிரைவரா போட்டுட்டாங்க.” என்று வருந்துவது போல் பேச்சை வளர்த்தான் அகிலன்.
“ஆமால்ல உனக்குத்தான் இந்த வேலை கஷ்டமா இருக்கே. நீ இனிமே இங்க வரவேண்டாம். உன் பழைய ஸ்டேஷன்லயே டியூட்டி பாரு. நான் ரீப்ளேஸ் பண்ணிக்குறேன்.” அவன் எதிர்பார்த்தது நிகழும் போது மகிழ முடியாது அவள் போட்ட குண்டில் அதிர்ந்து நின்றான் அகிலன்.
“அப்போ இன்னைக்கு லாஸ்ட் டே’வா. எனிவே நைஸ் டு மீட் யூ அகிலன், நான் அதி பிரெண்ட் விஸ்வநாதன்.” புன்னகை மாறாது அகிலனிடம் விஷூ கைநீட்ட, அவன் கையையும் அவனையும் மாறி மாறி பார்த்தவன் அப்படியே திரும்பி சென்றுவிடலாம் என்றுதான் நினைத்தான். ஆனால் அதிராவின் முகம் காட்டும் அதிருப்தி அவனை நிலையில்லாமல் செய்ய, தன் இயல்பை மீறி விஷுவிற்கு கைகொடுத்து தலையசைத்து விடைபெற்றான்.
“அவன்கிட்ட ஏன் இப்படி முகத்தை காட்டுற அதி? இது நீயில்லையே?” அகிலன் நகர்ந்ததும் அதிராவை கேள்வியாய் பார்த்தான் விஷூ.
“அவனை பத்தி உனக்குத் தெரியாது. சரியான திமிர், மண்டைக்கணம் உள்ளவன். ஆளை பாத்தீல்ல இந்த வேலைக்கு பிட்டாவா இருக்கான்? நான் எப்படியெல்லாம் இருக்கேனா அதுக்கு அப்படியே ஆப்போசிட். என்னை இரிடேட் செய்யணும்னே எல்லாம் பண்ணுவான்.
ப்பா, சரியான தலைவலி. இவனுக்கு பனிஷ்மென்ட் கொடுக்குறேனு நினைச்சி எனக்கு நானே இத்தனை நாள் பனிஷ்மென்ட் கொடுத்துகிட்டேனோன்னு தோணுது.” என்று படபடவென பொரிந்தாள் அதிரா.
அவளை ஆச்சர்யமாய் பார்த்த விஷு, “உன்னை ரொம்ப சோதிச்சிட்டானோ? இப்படி புலம்புற. ஆனா பார்த்தா ஆள் ஒன்னும் மோசம் மாதிரி தெரியல. கொஞ்சம் ஹெட்வெயிட் இருக்க வாய்ப்பிருக்கு.”
“நீ வேற, அந்த வெய்ட்டுல தான் ஹெட்டே இருக்கு. என்கிட்ட நடந்துக்கிட்ட மாதிரி வேற கிட்டயாவது நடந்திருந்தா இந்நேரம் தண்ணி இல்லாத காட்டுல தவிச்சிட்டு இருந்திருப்பான். போனாப்போகுது பனிஷ்மென்ட் குடுத்தா ஆள் மாறிடுவான்னு நான்தான் அவன டிரைவரா போட்டேன். ஆனா ஓவரா உரிமை எடுத்துக்குறான். டேஞ்சர் லைனை கிராஸ் பண்றான்.” என்றாள் யோசனையாகவே.
அதிரா இறுதியில் சொன்னதை கேட்டதும் விஷுவின் முகமும் மாறியது, “பர்சனலா உனக்கு தொந்தரவு குடுக்குறானா?”
“அப்படிலாம் விட்டுருவேனா. உன்னையே விடல.” என்று மறைமுகமாக சொல்லிவிட்டு அறைக்குச் சென்றாள் அதிரா.
செல்லும் அவளையே ஏக்கப் பெருமூச்சோடு பார்த்து நின்றான் விஷு. இப்படி ஆகிவிட்டது என்று விபத்து நடந்த அன்று இரவு அதிரா சொல்லவும், நேற்றே கிளம்பி வந்திருந்தான் விஷு. இவன் வந்த பின்தான் இவளுக்கு துணைக்கு இருந்த ஜானகி கிளம்பியிருந்தார். ஆயிரம் நன்றி உரைத்து அவரை வழியனுப்பி வைத்திருந்தான் விஷு. அந்த செயலையே கண்டித்தாள் அதிரா.
நீ உதவுவது போல் அவர்களும் உதவினார்கள். நண்பன் என்ற கோட்டை விட்டு தாண்டி வராதே என்று அவ்வப்போது எச்சரிக்கையும் செய்துகொண்டிருக்கிறாள் தான். ஆனால் அவனால் முடியவில்லை. மனதிற்கு பிடித்த பெண், யாருமின்றி தனியாய் தவிக்கும் போது உள்ளம் பதறுவது இயல்புதானே. புரிந்துகொள்ள மறுக்கிறாளே என்று அவள் மீது வருத்தம் மிஞ்சியது.
ஊருக்கு கிளம்பும் முன் இதற்கு ஏதாவது தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே வாசலில் நிழலாட, எட்டிப்பார்த்தான் விஷூ. உள்ளே வந்தவரை மலர்ச்சியுடன் வரவேற்றவன் அவரை அமர வைக்க, உடை மாற்றி வந்த அதிரா ஹாலில் இருப்பவரைக் கண்டு முகம் சுறுக்கினாள்.
“என்ன இந்த பக்கம்?”
எந்த மாற்றமும் காட்டாது எப்படி இவளால் இப்படி பேச முடிகிறது என்று அதிருப்தியாய் பார்த்தவர், “நீ இங்க வந்துட்டேனு தெரிஞ்சுக்குற அளவுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா?” என்றவரை பெருமூச்சோடு பார்த்த அதிரா,
“உரிமை இருக்குங்குற காரணத்துக்காக மட்டும் என்னோட எல்லா விஷயத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது.”
“அடிபட்டதை கூட விஷு வந்துதான் சொல்லணும்ல… அப்போகூட இந்த அப்பா நியாபகம் வரலைல?”
“வரலையே என்ன பண்ண சொல்றீங்க? எல்லாத்தையும் தனியாவே சமாளிச்சு பழகிட்டேன். இவன்தான் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திகிட்டு வந்துட்டான்.” என்று விஷுவை கைகாட்டி முறைத்தாள்.
“உனக்கு வேணும்னா யாரும் வேணாமா இருக்கும். எங்களுக்கு நீ முக்கியம் அதி.” என்றான் விஷு அதே முறைப்புடன்.
“எனக்கு யாரும் வேணாம்னா உனக்கும் கூட சொல்லாம இருந்திருப்பேன் விஷு. இவருக்கும் இன்னைக்கு சொல்லலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீ பத்த வச்சிட்ட…” என்றாள் அதிரா.
“என்னைத்தான் தள்ளி வச்சிட்ட. அட்லீஸ்ட் இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டீன்னா நிம்மதியா இருக்கும் அதிரா.” என்றார் அவள் அப்பா.
“உங்க நிம்மதிக்காக என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. இதுக்குத்தான் வந்தீங்கன்னா நீங்க கிளம்புங்க…” என்று கண்டிப்பாய் சொன்னவள் விஷு புறம் பார்வை திருப்பி, “இந்த நினைப்புலதான் நீயும் வந்திருந்தீன்னா இவரோடவே கிளம்பிடு.” என்றவள் எழுந்து சென்று அறைக்குள் அடைந்துகொண்டாள்.
விஷுவும் அவள் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டனர்.
“அவ கோவத்துல பேசுறா, நீங்க இருந்துட்டு போங்க அங்கிள்.”
“நீ எவ்ளோ நாள் இங்க இருப்ப? டாக்டர் என்ன சொல்றாங்க?”
“நான் இன்னும் ரெண்டு நாள் இருப்பேன், அதுக்கு மேல லீவ் கிடைக்கல அங்கிள். இவளை டெல்லி வர சொன்னா முடியாதுனு சொல்றா…” என்ற விஷு அதிராவின் உடல்நிலையையும் பகிர்ந்து கொண்டான்.
அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டவர், “இன்னைக்கு சாயங்காலம் கிளம்பனும்.” என்று சொல்ல, அதிருப்தியாய் பார்த்தான் விஷு. இவரையும் மாத்த முடியாது அவளையும் மாத்த முடியாது. வீம்பு புடிச்சதுங்க அப்பாவும் பொண்ணும், மனதில் பொருமிக்கொண்டே சமைக்கச் சென்றான் விஷு.
அன்றிரவு அறை நிறைக்க மிக்ஸரும் கடலையுமாய் இறைந்து கிடக்க, வேலை முடித்து உள்ளே நுழைந்த சந்துரு முகம் சுழித்தான்.
“என்னடா இது?”
“டேய் டேய் சந்துரு, அவ… அவ என்னை வர வேணாம்னு சொல்லிட்டா…” என்று குழறலாய் சொன்னான் அகிலன்.
“என்ன கன்றாவிடா பண்ணி வச்சிருக்க…” அதட்டலுடன் இறைந்திருந்த கடலையை பொறுக்கி அங்கிருந்த தட்டில் போட்டான் சந்துரு.
“அது எப்படி அப்படி சொல்லலாம்?”
“யார் என்ன சொன்னா?”
“அவதான்… அ.. தி… ஹான் அந்த நெட்ட மூக்கன் அவளை சுருக்கி சுருக்கி கூப்புடுறான்.” என்று அகிலன் புலம்ப, சந்துருவுக்கு எதுவும் புரியவில்லை.
“நான் மேடம்னு கூப்பிடணுமாம், அவன் ஊட்டி… ஊட்டி எல்லாம் விடுவானாம்…” கோபத்தில் சந்துரு பொறுக்கிப் போட்டிருந்த அனைத்தையும் கீழே கவிழ்த்துக் கொட்டினான்.
“டேய்…” பற்களை கடித்த சந்துரு அவன் சட்டை பிடித்து தூக்க முயல,
“விடுடா என்னை.” பதிலுக்கு தள்ளாட்டத்துடன் சந்துருவை பிடித்து தள்ளி விட்டான்.
சட்டையை உதறிய சந்துரு, “எக்கேடு கெட்டு போ.” என்று கத்திவிட்டு குளியலறை சென்றுவிட்டான்.
அகிலன் அப்படியே தரையில் விழுந்தவன் போதையில் சற்று நேரம் பிதற்றிவிட்டு உறங்கிவிட்டான். சந்துருவும் கடுப்புடன் அவன் இடத்தில் படுத்துக்கொண்டான். மறுநாள் காலை சந்துரு எழுந்து கிளம்பும் வரையும் அகிலன் எழவில்லை. அப்படியே சென்றுவிடலாம் என்று நினைத்தாலும் மனம் கேளாமல் அகிலனை எழுப்பிவிட, கண்களை சுருக்கிக்கொண்டு எழுந்து அமர்ந்தான் அவன்.
“வேலைக்கு கிளம்புற எண்ணம் இல்லையா? என்ன நினைப்புல இப்படி மூக்கு முட்ட குடிச்சிட்டு புலம்பிட்டு கிடந்த?”
“ம்ச்,” அவனது தொடர் கேள்வியில் முகத்தை தேய்த்துக்கொண்ட அகிலன் அலைபேசி எடுத்து நேரத்தைப் பார்த்தான். மணி ஏழாகியிருந்தது. எழுந்து வேலைக்கு கிளம்ப வேண்டும் என்ற நினைப்பே நேற்றைய நினைவுகளை அழைத்து வந்தது. சலிப்பும் சோம்பலும் அழையா விருந்தாளியாய் உடன் வந்து ஒட்டிக்கொண்டது.
“இன்னும் என்ன யோசிட்டு இருக்க? கிளம்பு மேடம் வீட்ல உன்னை விட்டுட்டு நான் ஸ்டேஷன் போகணும்.” என்றவனை நிமிர்ந்து பார்த்த அகிலன்,
“இனி அங்க வர வேண்டாமாம்… ஸ்டேஷன்லேயே வேலையை பாருன்னு சொல்லிட்டாங்க.”
“ஹப்பா, ஒரு வழியா பனிஷ்மென்ட் முடிஞ்சிதா… இனிமேலாவது வாயை வச்சிக்கிட்டு ஒழுங்கா இருடா.”
“ப்ச், நீ வேற ஏன்டா…” சலித்துக்கொண்ட அகிலனை யோசனையாய் பார்த்த சந்துரு,
“நியாயமா இதுக்கு நீ சந்தோசம்தானே படணும்? எதுக்கு மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்க?” என்று சந்தேகமாய் கேட்க, உதடு சுழித்த அகிலன், “சந்தோஷம் வரலையே. திரும்ப அங்க போகணும்னு தோணுது.”
“என்ன?” நண்பனின் எண்ணம் புரியாது சந்துரு கேட்க,
“என்ன என்ன?” எரிந்து விழுந்தான் அகிலன்.
“அப்போ இன்னைக்கு என்னோட ஸ்டேஷன் வரியா?”
“வந்துதானே ஆகணும்.” என்று கடுப்புடன் எழுந்தவன் வேறெதுவும் பேசாது குளித்து கிளம்பி ஸ்டேஷன் சென்றான்.
“என்னயா பனிஷ்மென்ட் எல்லாம் முடிஞ்சிடுச்சு போல. இனிமேலாவது ஹயர் அபீஷியல் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு புரிஞ்சி நடந்துக்கோ. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. போய் அந்த குப்பை கிடங்கு கிளியர் பண்ற வேலை எப்படி நடக்குதுன்னு பாத்து போட்டோ எடுத்துட்டு வா. ஏ.எஸ்.பிக்கும் எ.ஸ்பிக்கும் அனுப்பனும்.” என்று அவன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சொல்ல, எப்போதும் வெளி வேலைக்கே அனுப்புகிறார் என்று அல்லல் படுபவன் இன்று லேசாக எட்டிப்பார்த்த புன்னகையோடு சல்யூட் வைத்து செல்ல, விசித்திரமாய் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.
“என்னடா எப்போவும் உர்ருனு வந்து சாவிக்கு கையை நீட்டுவ, இன்னைக்கு லேசா பல் தெரியுற மாதிரி இருக்கே…” சந்தேகத்துடன் வண்டி சாவியை எடுத்து நீட்டினான் சந்துரு.
ஒன்றுமில்லை என்று தலையாட்டி சென்றவன் நேரே துப்புரவு நடக்கும் குப்பை கிடங்கிற்கு சென்று அலைபேசியில் புகைப்படங்கள் எடுத்தான். அதை அப்படியே இன்ஸ்பெக்டருக்கு அனுப்பியவன் அங்கிருந்து கிளம்பி நேரே சென்றது அதிரா வீட்டுக்குத்தான்.
“இப்போ என்ன?” வீட்டு வாசலில் நிற்பவனைக் கண்ட அதிராவின் எண்ணம் இதுதான்.
‘என்னையே வரக்கூடாதுன்னு சொன்னீங்கல்ல இப்போ என்ன பண்ணுவீங்க,’ என்று வீம்பாய் நினைத்தது அகிலனின் மனது.
அலைபேசியில் எடுத்த புகைப்படங்களை அவளுக்கு காட்டியவன், “இன்ஸ்பெக்டர் அப்டேட் பண்ண சொன்னாரு.” என்றான் மொட்டையாய்.
சந்தேகமாய் அவனது அலைபேசி வாங்கிப் பார்த்தவள், “இதுக்காகவா வீட்டுக்கு வந்த?”
“போன்ல தான் அனுப்ப சொன்னாங்க. ஆனா உங்களுக்கு அனுப்புனா சென்ட் ஆக மாட்டேங்குது. நீங்கதான் எல்லாம் கரெக்ட்டா இருக்கணும்னு சொல்வீங்களே, அதான் நானே நேர்ல வந்தேன்.” என்றவனை நம்ப முடியாது பார்த்தாள் அதிரா.
“வேலையில் இவ்ளோ சின்சியரா நீ?”
“நீங்க சின்சியரேனு தான் வந்தேன்.” வெடுக்கென அவளிடமிருந்து தன் போனை பிடுங்கிக்கொண்டான் அகிலன்.
“உன் திமிர் குறையாதுல்ல.”
“எதுக்கு குறையணும்?”
“கிளம்பு.” என்றிருந்தாள் ஒரே வார்த்தையில்.
என்னை துரத்துரத்திலேயே குறியா இருக்காங்க. ஏதோ உடம்பு முடியலையேன்னு அக்கறைப்பட்டா… ச்ச, இவங்களுக்கு எல்லாம் நம்ம கொஞ்சம் கீழ இறங்கி வந்தாலும் மேல ஏறிடுவாங்க. இனி இவங்களை பாக்கவே கூடாது, மனதிற்குள் சபதம் ஏற்றுக்கொண்டவன் திரும்பியும் பாராது விறுவிறுவென அங்கிருந்து கிளம்பினான்.
“அவனை ரொம்பத்தான் விரட்டுறீயோ?” என்று கேட்டபடியே அவள் பின் வந்து நின்றான் விஷு.
“என்னவோ சரியா இல்லை விஷூ. இதில்லை இவன். எனக்கு அடிபட்டதுலேந்து வித்தியாசமா நடந்துக்குறான்.”
“இப்படி அவனை விரட்டிட்டே இருந்தா என்ன தப்புனு எப்படி கண்டுபிடிப்ப?”
“எனக்கு கண்டுபிடிக்குற எண்ணமெல்லாம் இல்லை. ஹீ இஸ் ஜஸ்ட் அ சபார்டினேட்(subordinate)” என்ற அதிரா அடுத்த வேலையை பார்க்கச் சென்றுவிட, அகிலனும் பிறகு அவளை கண்டுகொள்ளவில்லை.
ஆனால் அவன் எண்ணம் நிறைத்திருந்தாள் அதிரா.
‘தொனதொனனு அவங்ககிட்ட பதிலுக்கு பதில் பேசிட்டு இருந்துட்டு இப்போ சும்மா இருக்கிறதாலதான் இப்படி தோணுது.’
‘அவங்ககிட்ட ஏட்டிக்கு போட்டியா செய்யறதுக்குனே யோசிச்சு யோசிச்சு இப்போ அவங்க நினைப்பு அதிகம் வருது.’
‘நான் என்ன பண்ணாலும் எனக்கு ஈடுகொடுத்து எதுத்துக்கிட்டு வந்ததுனால தான் அவங்களை எதிர்பாக்குறேன் போல.’
‘அவ்ளோ மிடுக்கா பாத்துட்டு இப்போ ஒரு கையே செயல்படாதுனு சொல்லும் போது, நமக்குள்ளையும் மனிதாபிமானம் சுரக்குதா இருக்கும்.’
இப்படி தனக்குத்தானே காரணங்கள் கூறிக்கொண்டான்.
‘அப்புறம் ஏன் அவங்க ஃபிரெண்ட பாத்தா மட்டும் எனக்கு புடிக்க மாட்டேங்குது? மேடமை தானே எனக்கு புடிக்காம போகணும்?’ என்ற சிந்தனையும் அவ்வப்போது வராது இல்லை. பதில் தேடி ஓய்ந்து வேலையில் மூழ்கடித்துக்கொண்டான்.
“என்னடா இப்போல்லாம் சின்சியரா வேலை பாக்குற?” சந்துரு கூட விளையாட்டாய் கேட்டிருந்தான்.
பதிலுக்கு முறைப்பையே கொடுத்தான் அகிலன்.
“என்னமோ இப்போல்லாம் நீ மாறிட்ட.” என்றான் அவன்.
“என்ன மாறிட்டேன்?” புருவச் சுழிப்பு அகிலனிடம்.
“இப்படி சொல்ற எல்லா வேலையையும் அலுத்துக்காம செய்யுறீயே?”
“ம்ச்… சும்மா இருந்தா ஏதேதோ யோசிக்க தோணுது.” என்றவனை விசித்திரமாக பார்த்தான் சந்துரு.
“என்னடா?”
“நீதான் சொல்லணும். என்னாச்சு உனக்கு? புத்தி வந்துடுச்சா?” என்று கேலி பேசியவனை பாய்ந்து சென்று அடித்தான் அகிலன்.
“டேய்… டேய்… உண்மையை சொல்லுடா…”என்று சந்துரு கேட்க, என்ன சொல்வதென்று தெரியாமல்,
“வா ஒரு கட்டிங் போடலாம்.” என்று இழுத்துச் சென்றான் மதுபான கடைக்கு.
வழக்கம் போல் கடை விட்டு வெளியே வரவும் அதிராவிடம் சரியாக சிக்கிக்கொண்டான்.
‘இவன் திருந்தாத கேஸ்.’ என்று நினைத்து அவள் விலகி செல்லப்பார்க்க, இவளைக் கண்டதும் வேகமாக வந்த அகிலன் அவள் கார் கதவின் கண்ணாடியில் கை ஊன்றி தலையை லேசாக உள்ளே விட்டு, “கை எப்படி இருக்கு மேடம்?” மொழி அவள் செவி தீண்டினாலும் அவன் பார்வை அவள் கையை ஆராய்ந்தது.
அவளைப் பார்த்து ஒரு வாரம் ஓடியிருந்தது. அவள் நினைப்பு மட்டுமே அவ்வப்போது அவனை நிறைத்தாலும் நேரில் சென்று பார்க்க நினைக்கவில்லை என்பதைவிட சென்று பார்க்க சரியான காரணம் அமையாது அமைதியாய் இருந்தான். இப்போது அவளே நேரில் மாட்டவும் வலிய சென்று பேச்சு கொடுத்தான்.
அதிரா பதில் சொல்லாது அவனையே ஊடுருவும் பார்வை பார்க்க, முதன்முதலாய் அவனுள் ஒரு தடுமாற்றம். உடல் தளர்ந்து லேசாக பின் வாங்கியவன், “என்ன, என்ன மேடம்?”
“வேலையெல்லாம் ஒழுங்கா செய்றியா?”
“நான் கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்டீங்கள்ல. அப்போ நானும் சொல்ல மாட்டேன்.” என்று பின்வாங்கியவன் கைகட்டி வேறெங்கோ பார்த்து நிற்க, ஆச்சர்யமாய் பார்த்தாள் அதிரா. எதிர்த்து எதிர்த்து பேசுபவனுடன் பழகியவளுக்கு இவன் புதிதாய் தெரிந்தான். எடுத்தெறிந்து பேசாது அமைதியாய் இருப்பவனைக் கண்டு இவனுக்குள்ளும் அக்கறை இருக்கிறதோ என்று தோன்ற, மனம் இறங்கியவள்,
“இப்போ கொஞ்சம் பரவாயில்லை. ஃப்ரியா இருக்கும் போது வீட்டுக்கு வா.” என்றதும் அவன் மனம் அடைந்த நிம்மதியின் அளவை உணர்ந்து அவனே அதிர்ந்து நின்றான்.
“இப்போவே ஃப்ரீ தான்.” என்று அகிலன் முந்திக்கொள்ளவும் அடுத்த அதிர்வு சந்துருவுக்கு. அகிலன் அதிராவை விசாரிக்கவும் தானும் மரியாதையாய் இரண்டு வார்த்தையாவது பேசாமல் போனால் நன்றாக இருக்காது என்று அருகில் சென்றவனைக் கண்டு அதிராவாவது தலையசைத்தாள் ஆனால் அகிலன் அவன் இருப்பை உணரக்கூட இல்லை. என்ன செய்துகொண்டிருக்கிறேன் இவன் என்று சந்துரு வேடிக்கை பார்க்க,
“நான் ஃப்ரீ இல்லை.” என்றாள் அதிரா.
அகிலன் முகம் சட்டென கூம்பிவிட்டது. உதட்டை கடித்தவன், “எப்போன்னு நீங்களே சொல்லுங்க.” என்று பார்க்க,
“சொல்றேன்.” என்று பிடிகொடுக்காது சொன்னவள் லேசாக தலையசைத்துவிட்டு, டிரைவரிடம் வண்டி எடுக்க சொல்ல, கார் நகர்ந்தது.
அகிலன் அதிருப்தியாய் வருத்தம் தாங்கி நின்றான்.
“என்னடா பண்ற? நீ செய்யுற எதுவும் சரியாபடல.” அகிலன் தோள் தட்டி சந்துரு அவனை நிஜ உலகுக்கு கொண்டுவர, தலையை சிலுப்பிக்கொண்டவன் அமைதியாய் அவர்கள் அறை நோக்கி நடை போட்டான்.
“டேய்… டேய்… நில்லுடா. என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ?” ஓடிச்சென்று அவனை நிறுத்திக் கேட்க, சலிப்பாய் பார்த்த அகிலன்,
“அவங்க கூட வார்த்தைக்கு வார்த்தை வாயாடி, ஏட்டிக்கு போட்டி செஞ்சு பழகிட்டேன். இப்போ சும்மா இருக்க முடியல.” என்றுவிட்டு முன்னே சென்றவனை என்ன செய்தால் தகும் என்று முறைத்தான் சந்துரு.
அவனை துரத்திக்கொண்டு சென்றவன் மேலும் துருவ, “அவங்ககிட்ட அப்படி பேசிட்டு இப்போ பேசாம இருக்குறது ஒரு மாதிரி இருக்கு.” என்றவன் அவன் கேட்கும் அனைத்திற்கும் இதையே திரும்பத் திரும்ப சொல்ல கடுப்பாகி விட்டுவிட்டான் சந்துரு.
மறுபுறம் காரில் சென்றுகொண்டிருந்த அதிரா பரிதிக்கு அழைத்து ஒரு இடத்திற்கு வர சொன்னாள். அது மான்சி மலேரியாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவமனை. இரவு நேரம் என்பதால் கசகசவென இல்லாமல் இருந்தது.
“கைக்கு இங்க காமிக்குறீங்களா மேம்? இந்த ஏரியால இருக்குற நல்ல ஹாஸ்பிடல்ல இதுவும் ஒன்னு. நல்லா பாப்பாங்க.” என்ற பரிதிக்கு மறுப்பாய் தலையசைத்த அதிரா,
“எனக்காக இங்க வரல. மான்சி கேஸ் விஷயமா வந்திருக்கேன். இங்கதான் மான்சி ட்ரீட்மெண்ட் எடுத்திருக்காங்க. சோ ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு பாக்கலாம்.” என்றபடியே வரவேற்பறை சென்ற அதிரா அச்சமயம் தலைமை பொறுப்பில் இருக்கும் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று கேட்டாள்.
காவல் உடையில் வந்ததால் வரவேற்பு பலமாய் கிடைத்தது. அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அன்று ஒரு நோயாளியின் அறுவை சிகிச்சை என்பதால் அந்நேரம் வரையிலும் இருந்தார். அவரே நேரே வந்து இவர்களை அழைத்து உபசரித்தார்.
“எங்க ஹாஸ்பிடல்ல பாரபட்சம் இல்லாம எல்லாருக்கும் ஒரே மாதிரி டிரீட்மென்ட் கொடுக்கிறோம். எல்லாருக்கும் ஸ்பெஷல் கேர் எடுத்து பாத்துக்குறோம்.”
“உங்க ஹாஸ்பிடல்ல மூணு மாசம் முன்னாடி மலேரியான்னு அட்மிட் ஆன பொண்ணு மூச்சு திணறல்ல இறந்து போயிருக்காங்க. அடோப்சில சுவாச பிரச்சனை முன்னாடியே இருந்திருக்கலாம்னு சொல்றாங்க. அப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்கணுமே. எப்படி கேர்லெசா விட்டீங்க…” அதிரா விசாரணை தொனியில் கேட்க,
“எங்க பக்கம் கேர்லெசா இருக்க வாய்ப்பே இல்லை மேடம். மலேரியா அப்படிங்கும் போது எல்லா டெஸ்டும் எடுத்திருப்போம். நீங்க பேஷண்ட் டீடெயில்ஸ் சொல்லுங்க மேடம். நானே பர்சனலா செக் பண்ணி சொல்றேன்.” மருத்துவர் தணிந்து வரவும் அந்த மருத்துவமனையில் மான்சி எடுத்த சிகிச்சை குறித்த அறிக்கைகளை கொடுத்தாள்.
அதை ஒருமுறை புரட்டிப்பார்த்த மருத்துவர், “ரிப்போட்ஸ் படி அந்த டைம்ல இந்த பேஷன்டுக்கு ரெஸ்பிரெடரி இஸ்யூஸ் இல்லை.” என்றார்.
சந்தேகமாய் பார்த்த அதிரா, “ஆர் யூ ஸ்யூர்?”
“எஸ் மேம். என்னால உறுதியா சொல்ல முடியும். இந்த பேஷன்டை ட்ரீட் பண்ணது அந்த டிப்பார்ட்மெண்ட்டோட சீனியர் டாக்டர். சிட்டியில பெஸ்ட். முன்னாடியே இவங்களுக்கு பிரச்சனை இருந்தா அவர் டைகனைஸ்ல மிஸ் ஆக வாய்ப்பே இல்லை.” என்று அடித்துக் கூறினார் மருத்துவர்.
சரியென்று அங்கிருந்து கிளம்பிவிட்டாள் அதிரா.
வெளியே வந்ததும் பரிதி, “அடோப்சி ரிப்போர்ட் கொடுத்து செக் பண்ண சொல்லி இருக்கலாமே மேம்.”
“என்ன பேசுறீங்க நீங்க… கேஸ்ல இன்னும் எந்த க்ளூவும் கிடைக்கல, எதை நம்பி பிரைவேட் டாக்டர்கிட்ட கொடுக்க சொல்றீங்க? இட்ஸ் கான்பிடென்ஷியல்.”
“எனக்கென்னமோ நாம தப்பான ஆங்கில்ல கேஸை எடுத்துட்டு போய்ட்டு இருக்கோமோனு தோணுது.” என்ற பரிதியை அழுத்தமாய் பார்த்தவள்,
“ஏன் உங்களுக்கு அப்படி தோணுது?”
“நேத்திதான் மான்சிகிட்ட பிரச்சனை பண்ண அந்த ரெண்டு பேரை விசாரிச்சோம். கடைசியில அவனுங்களும் எதுவும் பண்ணி இருக்க வாய்ப்பில்லைங்குற மாதிரிதான் இருக்கு. நம்மகிட்ட இப்போ எந்த க்ளூவும் இல்லை மேம். ஆட்டோவையும் கண்டுபிடிக்க முடியல, பாசிட்டிவா எந்த லீடும் கிடைக்கல. வேற என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க.”
அவன் கூற்றை ஏற்கும் விதமாய் உடல்மொழி வெளிப்படுத்தியவள் திரும்பி அந்த மருத்துவமனையை பார்த்தாள்.
“இது சுகாதாரத்துறை அமைச்சரோட ஹாஸ்பிடல். மான்சி அப்பா அமைச்சரோட கூட்டணி கட்சிக்கு வேண்டியபட்ட ஆள். இது ஏன் தனிப்பட்ட கொலையா இல்லாம அரசியல் ஆதாயத்துக்காகவோ இல்லை பழிவாங்கலுக்காகவோ பக்கவா ஸ்கெட்ச் போட்டு பண்ணினதா இருக்கக்கூடாது?” என்று சொல்ல, அப்படியும் இருக்குமோ என்று பார்த்தான் பரிதி.
error: Content is protected !!