Skip to content
Post Views: 1,890

அகம் 9
அன்று பார்ட்டி முடிந்து அடுத்து நிச்சயதார்த்தம், தாலிக்கு பொன் உருக்கும் சடங்கு என்று அடுத்தடுத்த நாள் நடந்த நிகழ்வுகளில் எல்லாம் நயந்தினி ராகவியுடன் சுற்றிக் கொண்டிருந்தவள், நிகர்வேலனை வேண்டுமென்றே தவிர்த்தாள். இதில் அவினாஷ் வேறு அவ்வப்போது அவளிடம் பேச வர முடிந்தவரை அவனையும் தவிர்த்தாள்.
Advertisement
அன்று வலிக்க வலிக்க அவளது கையைப் பிடித்து, “நான்தான் உனக்கு முக்கியமானவனாக இருக்கணும்,” என்று நிகர் சொல்லவும், அவன் பேசுவது புரியாமல் வலுக்கட்டாயமாக அவனது கைகளிலிருந்து தன் கைகளை பிரித்துக் கொண்டவள்,
Advertisement
“அப்படி என்ன நீங்க முக்கியம்? நீங்க என்ன எனக்கு உறவா?” என்று கோபமாக கேட்டாள்.
Advertisement
“உறவை ஏற்படுத்திக்கணும்னா அதுக்கும் தயார் தான், ஆனா அதிரடியா இல்லாம பொறுமையா நிறுத்தி நிதானமா உறவை ஏற்படுத்திக்கணும்னு நினைக்கிறேன்.” என்று அவன் கூற,
Advertisement
அவன் சொல்ல வருவது புரியாமலோ, “என்ன சம்பந்தமே இல்லாம உளரிக்கிட்டு இருக்கீங்க, நீங்க எப்போதும் இப்படித்தான், ஆனா இன்னைக்கு மதியத்திலிருந்து வேற மாதிரி என்னிடம் நடந்துக்கவும், நான்தான் உங்களை தப்பா நினைச்சுட்டு இருந்தேன் போலன்னு நினைச்சேன். ஆனா அது தப்புன்னு புரிய வச்சிட்டீங்க,” என்று நயந்தினி கோபமாக சொல்லிவிட்டு சென்றவள், பின் ராகவியின் அருகில் சென்று நின்று கொண்டாள்.
அப்போது தான் அவளை கவனித்த ராகவியோ, “இப்போ தானா பார்ட்டிக்கு தயாராகி வர நயனி.” என்று கேட்க,
“உங்க ஆளு கூட இருந்தா உங்களுக்கு என்னை கண்ணுக்கு தெரியாதே, என்னோடவே இருக்கணும்னு சொல்லிட்டு நான் வந்ததிலிருந்து என்னை நீங்க கண்டுக்கவே இல்லை தெரியுமா?” என்று நயந்தினி அவளிடம் குறைப் படிக்கவும்,
“அய்யோ சாரி செல்லம், மாதேஷ் வீட்டு ஆளுங்க கூட இருந்தாங்களா? அதான் அவங்களோட பேசிட்டு இருந்தேன். நான் இல்லன்னா என்ன? என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்களே, அவங்களை தான் உனக்கு நல்லா தெரியுமே, அவங்களோட இருக்க வேண்டியது தானே,” என்று ராகவி கேட்டாள்.
“நீங்க கூட இருந்தா பரவாயில்லை. நீங்க இல்லாம அவங்களோட இருக்க ஒருமாதிரி இருக்கும், அதான் அங்க போகல,” என்று அவள் பதில் கூற,
“சரி, சரி, இனி இந்த கல்யாணம் முடியும்வரை உன்னை எப்போதும் என் கூடவே வச்சிக்கிறேன் சரியா?” என்று ராகவி கூறியவள், அதேபோல் அவளை அந்த பார்ட்டி முடியும் நேரம் வரை கையைப் பிடித்தப்படி தன்னருகிலேயே வைத்துக் கொண்டாள்.
நயந்தினி கோபம் கொண்டு சென்றதும் தான், அவளிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டோம் என்பதே நிகர்வேலனுக்கு புரிந்தது. அவினாஷும் அவனும் ஒன்று என்று பேசியது தான் அவனை மீறி அப்படி நடந்து கொண்டான்.
அதிலும் அவள் அவினாஷோடு பேசிக் கொண்டிருந்ததையும் அவன் விரும்பவில்லை. அவினாஷ் பெண்கள் விஷயத்தில் அவ்வளவு நல்லவன் கிடையாது. அது நிகர்வேலனுக்கு நன்றாகவே தெரியும், கார்மேகனுக்கு தங்கை மகன் என்பதால் அடையாறில் உள்ள அவர்களது ஷோரூமை அவினாஷ் பொறுப்பில் விட்டிருந்தனர். ஆனால் அங்கு வேலை செய்யும் பெண்களிடம் அவன் நல்லமுறையில் நடந்து கொள்ளவில்லை. சிலர் இவனிடம் வந்து அவினாஷ் பற்றி குற்றச்சாட்டு வைத்தனர்.
உறவினனாக இருந்தாலும் வேறு ஏதாவதென்றால் பரவாயில்லை. பெண்கள் விஷயம் என்பதால் நிகர்வேலன் அமைதியாக இருக்கவில்லை. நேரடியாகவே அவினாஷை கூப்பிட்டு கண்டித்தவன், உடனே அந்த பொறுப்பிலிருந்தும் தூக்கிவிட்டான். விஷயம் அறிந்து கார்மேகன் கேட்டதும் அவன் விஷயத்தை கூற, அவரும் அவினாஷை திட்டினார்.
ஆனால் அவினாஷின் அன்னை நீலவேணியோ அதுகுறித்து கொஞ்சம் பிரச்சனை செய்துவிட்டார். கார்மேகன் வசதியான வீட்டில் திருமணம் செய்து கொண்டதால் மாறிவிட்டதாக கூறி அழுது புலம்பல். கார்மேகன் அதை கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் இதுகுறித்து தங்கைக்கு ஏதாவது பிரச்சனை வரலாம் என்று சேகரன் தான் மீண்டும் அவினாஷை வேலையில் சேர்க்க சொன்னார்.
நிகர்வேலனுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை..”என்னப்பா நீங்க, பொண்ணுங்களிடம் தப்பா நடந்துக்கிறான். அவனிடம் எப்படி பொறுப்பை கொடுக்க முடியும்?” என்று தந்தையிடம் கோபப்பட,
“அத்தைக்காக பாரு நிகர், ஷோரூம்ல வேண்டாம், வேற ஏதாவது பொறுப்பு கொடு,” என்று அவர் சொல்லவும், வேறு வழியில்லாமல், அவனை ஏற்றுமதி இறக்குமதி நடக்கும் இடத்தில் பொறுப்பில் வைத்தான்.
இதில் நீலவேணி வேறு அவினாஷ்க்கு ராகவியை பெண் கேட்க, கார்மேகனுக்கே இதில் விருப்பமில்லை தான், இருந்தாலும், “நாத்தனார் பிரச்சனை செய்றாங்க, எமோஷனா பேசறாங்கன்னு ராகவியை அவினாஷ்க்கு கொடுக்க ஒத்துக்கப் போறீங்க அத்தை. எங்களுக்கு சொந்தத்தில் கொடுக்க விருப்பமில்லைன்னு கறாரா சொல்லிடுங்க,” என்று சாகரியிடம் வேறு திட்டவட்டமாக சொல்லியிருந்தான்.
அதேபோல சாகரியும் கார்மேகனும் திட்டவட்டமாக மறுக்கவே தான், நீலவேணியும் அமைதியாகிவிட்டார். அப்படிப்பட்ட அவினாஷுடன் தன்னை ஒப்பிட்டு பேசியதால் தான் நிகர்வேலனுக்கு கோபம் வந்தது. அதில்லாமல் அவளோடு பேசும்போது அவினாஷ் பார்வையே சரியில்லை. அவளை விழுங்குவது போல் பார்ப்பதும், அவளின் முகத்தை நேருக்கு நேராக பார்க்காமல், அவளது மற்ற இடங்களில் அவன் பார்வை போனதும், இவனுக்கே நன்றாக தெரிய, அதைப்பற்றி கவலைக் கொள்ளாமல் அவினாஷுடன் பேசிக் கொண்டிருக்கிறாளே என்ற கோபத்தில் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டான். ஆனாலும் அவளிடம் அவனைப்பற்றி பொறுமையாக எடுத்து கூறியிருக்கலாம் என்று இப்போது நினைத்தான்.
ஆனால் மீண்டும் அவளிடம் பேசும் சந்தர்ப்பம் நிகர்வேலனுக்கு கிடைக்கவேயில்லை. எப்போதும் ராகவியுடனே இருப்பதால், அவளிடம் அந்த சம்பவத்திற்கு மன்னிப்பும் கேட்க முடியவில்லை. அவினாஷ் பற்றியும் பேச முடியவில்லை.
“என்ன நீ இவளை எப்போ பார்த்தாலும் கூடவே வச்சிட்டு சுத்திட்டு இருக்க, மாதேஷ் கடுப்பாகி கல்யாணம் வேண்டாம்னு ஓடப் போறார் பாரு,” என்று நயந்தினி அருகில் இருக்கும்போதே ராகவியை சீண்டவும் செய்தான்.
அதையும் உண்மை என நினைத்துக் கொண்டு, “அப்படியா க்கா, நான் கூட இருந்தா மாதேஷ் மாமாவுக்கு பிடிக்காதா?” என்று நயந்தினி கேட்டாள். ராகவி தான் மாதேஷை மாமா என்று அழைக்க வேண்டுமென்று சொல்லியிருந்தாள்.
“நயந்தினி கேட்டதற்கு ராகவியோ, “ அதெல்லாம் இல்லை நயனி, இவனுக்கு வேற வேலை என்ன? சும்மா கேலி செய்றான்.” என்று சமாதானம் கூறவும், நயந்தினி நிகரை முடிந்தமட்டும் நன்றாக முறைத்தாள்.
அதைப்பார்த்த ராகவியோ, அவர்கள் ஏற்கனவே நல்லப்படியாக பேசிக் கொண்டது தெரியாமல், “இன்னுமா நீங்க சமாதானம் ஆகல,” என்று கேட்க,
“ஆகத்தான் நினைக்கிறேன். முடியலையே,” என்று நிகர் பதில் கூறவும்,
“சமாதானம் ஆகற அளவுக்கு இவங்க என்ன எனக்கு முக்கியமான ஆளா?” என்று நயந்தினி வேண்டுமென்றே கேட்டாள்.
அதில் நிகர்வேலனுக்கு கோபம் வந்தாலும், அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அமைதியாக இருக்க, “அப்படி சொல்லக் கூடாது நயனி, எல்லாம் ஒரு இடத்தில் சேர்ந்திருக்கோம், ஜாலியா இல்லாம இப்படி கோபப்பட்டுட்டு இருந்தா நல்லாவா இருக்கும் சொல்லு,” என்று ராகவி கூறியவள்,
“ரெண்டுப்பேரும் ஃப்ரண்ட்ஸ்னு சொல்லி கையை கொடுத்துக்கோங்க,” என்றாள்.
கைகுலுக்க சொன்னதும், நிகர் கோபமாக அவளது கையைப் பிடித்தது தான் நயந்தினிக்கு ஞாபகத்திற்கு வர, “எனக்கும் ஒன்னும் இவங்களோட ஃப்ரண்டா இருக்க வேண்டாம்,” என்று அங்கிருந்து கோபமாக சென்றுவிட்டாள்.
அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் நிகர்வேலன் அவள் சென்ற திசையைப் பார்த்தப்படி இருக்க, “போறதுக்குள்ள உன்னோட சமாதானம் ஆகிடுவா நிகர்,” என்று நடந்தது தெரியாமல் ராகவி கூறினாள்.
ஆனாலும் அவளை எப்படியாவது சமாதானப்படுத்திவிட வேண்டுமென்ற உறுதியோடு அவன் காத்திருக்க ஆரம்பித்தான். அப்போது அன்று மதியம் அவனுக்கு வந்த ஒரு அலைபேசி அழைப்பு அதற்கான வாய்ப்பை கொடுத்தது.
அடுத்து அவன் ராகவியை பார்க்க அவளது அறைக்கு செல்ல, ராகவி அங்கு இல்லை. ராகவி மட்டுமல்ல, ஒரு பெரிய கூட்டமே ரெசார்ட்டில் ஏதாவது விழா நடப்பதற்காக கட்டியிருந்த ஒரு பெரிய அறையில் இருந்தனர். நாளை மறுநாள் நடக்கவிருக்கும் சங்கீத் விழாவில் நடனமாடுவதற்காக அங்கே பயிற்சி செய்துக் கொண்டிருந்தனர்.
அதை தெரிந்து கொண்டவனோ, நேராக அங்கு போக, அவன் சென்ற நேரம் நயந்தினி நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். ராகவி நடன வகுப்பிற்கு சென்ற போது அவளும் செல்லப் போவதாக அடம்பிடித்து சில மாதங்கள் நடனம் கத்துக் கொண்டதில் நளினங்களோடு அவள் ஆடியதை கொஞ்சம் தூரத்தில் நின்று நிகர்வேலன் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் ஆடி முடித்ததும், அங்கிருந்தவர்கள் கைத்தட்டியும் நிகர் இன்னும் அவளை இமைக்காமல் பார்த்திருக்க, “எங்க அக்கா சூப்பரா ஆட்றாங்கல்ல,” என்று மொழியும் மதியும் அவன் அருகில் வந்து கேட்கவும்,
“சூப்பராவா, அந்த தேவலோக தேவதையே மண்ணில் வந்து ஆடின மாதிரி இருந்தது.” என்று கூறியவன், அதன்பின் தன்னை மறந்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து நிகழ்விற்கு வந்தவன்,
“அது அது உங்க அக்கா அந்த அளவுக்கு ஆடினான்னு சொல்ல வந்தேன்.” என்று சமாளித்தான்.
“ம்ம் ஆனாலும் தேவலோக தேவதை கொஞ்சம் அதிகம் தான்,” என்று சொல்லி இருவரும் சிரித்தனர்.
அவர்களின் கேலியை உணர்ந்தவன் அந்த பேச்சை மாற்றும் பொருட்டு, “ஆமாம், நீங்க டேன்ஸ் பிராக்டிஸ் செய்யலையா?” என்று அவர்களிடம் கேட்க,
“இல்லை, இப்போதைய ட்ரண்டிங் சாங்ஸ் ஆளாளுக்கு செலக்ட் செய்துட்டாங்க, எங்களுக்கு எந்த பாட்டுக்கு ஆடன்னு தெரியல,” என்று இருவரும் வருத்தமாக கூற,
“நீங்க பழைய பாட்டு ஏதாவது செலக்ட் செய்து ஆடுங்க, சிலசமயம் பழைய பாட்டு தானே திரும்ப ட்ரெண்ட் ஆகுது. வயசானவங்களுக்கும் அப்படி பாட்டுக்கு டேன்ஸ் ஆடினா விரும்பி பார்ப்பாங்கல்ல, எல்லாம் இப்போ லேட்டஸ்ட் பாட்டுக்கு ஆடும்போது, நீங்க மட்டும் பழைய பாட்டுக்கு ஆடினா, தனித்து தெரியும் தானே,” என்று நிகர் யோசனை கூறியதும்,
“சூப்பர் ஐடியா, உடனே பாட்டு தேட்றோம், தேங்க்ஸ்,” என்றவர்கள்,
“ஆமாம், நாங்க உங்களை எப்படி கூப்பிட, அண்ணான்னு கூப்பிடட்டுமா?” என்று கேட்டனர்.
“ம்ம் கூப்பிடுங்களேன்.” என்று அவன் சொல்லும்போதே,
“நிகர் மாம்ஸ், எனக்கொரு ஹெல்ப் செய்றீங்களா? என் ஃப்ரண்ட்ஸ் வந்துட்டு இருக்காங்க, அவங்களை பிக்கப் செய்ய கார் அனுப்பறீங்களா?” என்று ரோஹன் வந்து கேட்க,
“சரி எப்போ எங்க அனுப்பணும்னு நம்ம ரெசார்ட் மேனேஜரிடம் சொல்லிடு, அவர் அனுப்பி விட்ருவாரு,” என்று நிகர் சொன்னதும்,
“தேங்க்ஸ் மாம்ஸ்,” என்று சொல்லிவிட்டு ரோஹன் சென்றுவிட,
“நாங்களும் ரோஹன் அண்ணா மாதிரி உங்களை மாம்ஸ்னு கூப்பிடட்டுமா?” என்று மொழி கேட்க,
“நாங்க உங்களை அப்படி கூப்பிட்டாத்தானே உங்களுக்கு பிடிக்கும்,” என்று கேட்டு மதி கண்ணடித்தாள்.
“உங்களிடம் கொஞ்சம் இல்லை. ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும் போல,” என்றவன்,
“உங்களுக்கு எப்படி பிடிக்குதோ அப்படியே கூப்பிடுங்க,” என்று சொல்ல,
“ஓகே நிகர் மாம்ஸ்,” என்று சொல்லிவிட்டு இருவரும் ஓடிவிட்டனர்.
‘தங்கைங்க ரெண்டுப்பேரும் செம ஷார்ப். ஆனா அக்கா அந்த அளவு ஷார்ப் இல்லையே, நான் கோபமா சொன்னாலும் உரிமையா சொன்னதை, என் மனசை புரிஞ்சிக்காம இருக்காளே, இதில் மேடம்க்கு கோபம் வேற, இதில் அவளை எப்போ சமாதானப்படுத்தி, எப்போ என் காதலை புரிய வச்சு, எப்போ கல்யாணம் செய்துக்கப் போறேனோ,” என்று நினைத்ததில் அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.
அந்த புன்னகையுடனே ராகவியின் அருகில் அவன் வரவும், அருகில் நின்றிருந்த நயந்தினியோ அவனை பார்த்ததும் கோபமாக முறைக்க, ‘இவ வேற சும்மாவே முறைச்சிட்டு இருக்கா, ஆனா அப்போதும் அழகா இருக்கா,’ என்று நினைத்துக் கொண்டவன், அவளைப் பார்த்து வேண்டுமென்றே கண்ணடித்தான். அதை எதிர்பார்க்காதவள், உடனே தலையை தாழ்த்திக் கொண்டாள்.
பின் ராகவியிடம், “உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும், கொஞ்சம் வா.” என்று நிகர்வேலன் அவளை அழைக்கவும்,
அவளும் அவனுடன் தனியாக சென்றவள், “என்ன விஷயம் நிகர்?” என்று கேட்க,
“நீ ஃபாரின்ல போய் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் செய்யணும்னு ஆசைபட்டல்ல,” என்ற அவனது பேச்சைக் கேட்டவள்,
“அதான், தாத்தாக்கும் பாட்டிக்கும் பிடிக்காதுன்னு அம்மா வேண்டாம்னு சொல்லிட்டாங்களே,” என்று ராகவி பதில் கூறினாள்.
“நான் அப்பவே உனக்கு விருப்பம்னா சொல்லு எல்லோரையும் நான் கன்வின்ஸ் செய்றேன்னு தானே சொன்னேன். நீதான் வேண்டாம்னு சொல்லிட்ட,” என்று நிகர் கூற,
“முடிஞ்சு போன கதையை எதுக்கு பேசிக்கிட்டு விடு,” என்றாள் ராகவி.
“அதுதான் முடியல, இங்க நம்ம ரெசார்ட்ல செய்தா தாத்தா பாட்டிக்கு தெரியும்னு இங்க பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஃபார்ம் ஹவுஸ்ல போட்டோ ஷூட் எடுக்க பர்மிஷன் கேட்டிருந்தேன். அவங்களும் ஓகேன்னு சொல்லி இப்போ தான் போன் செய்தாங்க, அதுக்கு கூப்பிட தான் வந்தேன்.” என்று நிகர் சொல்லவும்,
“என்ன சொல்ற நிகர், அம்மா கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க, கூட தாத்தா, பாட்டி வேற இப்போ இங்க தான் இருக்காங்க, அவங்களுக்கு தெரிஞ்சா என்னாகறது?” என்று ராகவி பயப்பட,
“கல்யாணம் தான் இன்னும் 5 நாளில் நடக்கப் போகுதே, அப்புறம் என்ன? கல்யாணத்துக்குப் பிறகு செய்ற போட்டோ ஷூட் வேற, அதில் என்ன திரில்லிங் இருக்கும், எல்லாம் டீசன்ட் போட்டோ ஷூட் தான், இப்போதைக்கு யாருக்கும் சொல்ல வேண்டாம், கல்யாணம் முடிஞ்சதும் சொல்லிக்கலாம், அப்போ இதுக்கு பெருசா ரியாக்ட் செய்ய மாட்டாங்க,
இப்போதைக்கும் ஏதாவது ரீஸன் சொல்லிட்டு போகலாம், கூட ஃப்ரண்ட்ஸ் நிறையப் பேர் வேண்டாம், உன் பின்னாடி வால் பிடிச்சிட்டு சுத்திட்டு இருக்காளே யாரது?” என்று நயந்தினியின் பெயர் தெரியாதது போல் அவன் கேட்க,
“நயனியா?” என்று ராகவி கேட்டாள்.
“ம்ம் அவ தான், அவளை மட்டும் கூப்பிட்டுக்க, எல்லாம் டேன்ஸ் பிராக்டிஸ்ல பிஸியா இருக்கறதால பெருசா கண்டுக்க மாட்டாங்க, நான் மாதேஷ்க்கு போன் செய்து கூப்பிட்றேன். அவரிடமும் இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம்னு சொல்லிடலாம்,” என்றாள்.
“சரி வீட்டில் உள்ளவங்களிடம் என்ன ரீஸன் சொல்றது?” என்று ராகவி கேட்க,
“பெங்களூரில் திறக்கப் போறன்புது ஷோரூம் உங்களுக்கான கிஃப்ட் தானே, அது சம்பந்தமா ஒருத்தரை பார்க்கணும்னு நானே அத்தையிடம் சொல்றேன்.” என்றதும்,
“சர அப்போ நயனியோட ரூம்க்கு போய் தேவையானதை எடுத்துக்கிட்டு வரேன். நீ மாதேஷிடம் சொல்லிட்டு அம்மாவிடம் விஷயத்தை சொல்லிடு,” என்று ராகவி சென்றதும்,
‘இந்த போட்டோ ஷூட் நடக்கும் கேப்பில் எப்படியாவது நயாவை சாமாதானம் செய்திடணும்,’ என்று மனதில் நினைத்துக் கொண்டு நிகர்வேலனும் தன் வீட்டில் உள்ளவர்களிடம் விஷயத்தை கூற சென்றான்.
அகம் சேர்வான்…
error: Content is protected !!