Skip to content
Post Views: 13,897
“வந்து சொல்றேன் விஷ்ணு” என்றவர் டேக்ஸி டிரைவரிடம் டேக்ஸி வேண்டாம்” என்றார்.
இதற்கு மேல் எப்படி மறுப்பதென தவித்த மேகலை, “சாரிங்க, அண்ணனே அழைச்சிட்டு போறேனுட்டார். அவருக்கு வேலையிருக்கும்னுதான் உங்களை கூப்பிட்டேன்” என்று ஐம்பது ரூபாயை கொடுத்து, “மாமாவோட போலாம் விஷாலினி” என்றார் மகளிடம்.
யார் அவன்? என்ற யோசனையில் விஷ்ணு இருக்க, “விஷ்ணு குளிச்சிட்டு சீக்கிரமே கட்டடத்துக்கு போய்டுப்பா, இல்லைனா பெயிண்ட்டை திருடினுவானுங்க. நான் மதியம் வந்துடறேன்” என்று மகனிடம் சொல்லி விஷாலினி, மேகலையை அழைத்துச்சென்றார் கோபாலன்.
விஷாலினியை கல்லூரியில் விட்டு, பதினொரு மணிபோல் வீட்டிற்கு வந்த கோபாலன், “விஷ்ணு கட்டடத்துக்கு சீக்கிரம் கிளம்பிட்டான்தான?” என்றார்.
Advertisement
“ம் எட்டரைக்கெல்லாம் கிளம்பிட்டான்” என்றதும் “சரி நான் கிளம்பறேன்” என்று பைக் கீயை எடுத்து கிளம்பினார்.
“ஏங்க… விஷ்ணு கோபப்பட்டான்” என்றதும், “சாப்பிடாம கிளம்பினதுக்கா இருக்கும். மேகலை அதுக்கு எடுத்து வந்த இட்லியை எனக்கு கொடுத்துட்டு, மேகலை கேண்டீன்ல வாங்கி சாப்பிட்டுகிடுச்சு. மதியம் சாப்பாட்டுக்கு வந்திடுவோம், இங்க பக்கத்துலதான் கட்டடம்” என்று கிளம்பினார்.
கோபாலன் கட்டடத்திற்கு வர, விஷ்ணு இறுகிய முகத்தோடு பட்டி பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டு மாதமாக தந்தையோடு வந்ததில் பெயிண்ட்டிங் வேலையை கற்றிருந்தான்.
Advertisement
ஒரே ஓர்நாள் தந்தை முன்னே வேலை செய்தான். எங்கே இதையே தொழிலாக்கிடுவானோ… இவனின் திறமை, கனவு, ஆசை அனைத்தும் வீணாகிடுமோ என்ற அச்சத்தில் வேலை செய்ய விடமாட்டார் கோபாலன்.
Advertisement
சென்ற மாதம் நான்கு கட்டிடங்களில் வேலை என்பதால் தந்தை வேறு கட்டிடத்தில் இருக்கும்போது வேலை செய்வான். தற்போது தந்தையை பார்த்த பின்னும் தன் வேலையை நிறுத்தாமல் செய்து கொண்டிருந்தான்.
“விஷ்ணு” என்றார் கோபமாக.
“சொல்லுங்கப்பா” என்றான் திரும்பாமல் வேலையில் கவனம் வைத்து.
Advertisement
“இதுக்குத்தான் கிரிமினாலஜி படிச்சியா?”
“இங்கையே பதில் சொல்லட்டுமா? இல்லை வீட்டுக்கு போய் பேசலாமாப்பா?” என்றான் அர்த்தமாய் பார்த்து.
தற்போதுதான் வேறு எதோ கோபத்திலிருக்கிறான் எனப்புரிய, “வீட்டுக்கு போயே பேசலாம். கிளம்பலாம் வா” என்றார்.
“சாப்பாடு டைம்க்கு இன்னும் நேரமிருக்கு, அப்படி உக்காருங்க, இந்த சைட் முடிச்சிட்டு வரேன்” என்றவன் ஒரு பக்க சுவற்றிற்கு பட்டி பார்த்து முடித்த பின்னேதான் முகம் கை கழுவி கிளம்பினான்.
வீட்டிற்கு வந்ததும் பிரபாவதி உணவை எடுத்து வைக்க, கோபாலன் “என்ன பிரச்சனை விஷ்ணு உனக்கு? எனக்கு பிடிக்காதுனு தெரிஞ்சே கட்டடத்துல வேலை பார்க்குற?” என்றார் ஆதங்கமாக.
“உங்களை கஷ்ட்டபடுத்துறது எனக்கும் கஷ்டமாதான்ப்பா இருக்கு. ஆனா என் கோபத்தை எப்படி குறைக்கிறதுனு எனக்கு தெரியலை, கவனத்தை திருப்பினாலாவது என்னோட ஒன்னுத்துக்கும் ஆகாத கோபம் குறையுமா பார்க்கத்தான் பட்டி பார்த்தேன்”
“ஒன்னுத்துக்கும் ஆகாத கோபமா?” என கோபாலன் புரியாமல் கேட்க, “ஆமாம்ப்பா… ஒன்னுத்துக்கும் உதவாத கோபம்தான்” என்றான்.
“என்ன பிரச்சனை விஷ்ணு? சொன்னாத்தான தெரியும்?”
“அந்த பிள்ளையை சுத்தி அத்தனை நடந்திருக்கு, இப்போவும் உங்ககிட்ட உதவி கேட்க தோணல அவங்களுக்கு. நீங்களா இழுத்து பிடிச்சிட்டிருக்கிங்க, இதுக்குத்தான் வேற வீடு பார்க்கலாம்னு பாடா பட்டேன்” என்றான்.
மனைவி சொல்லியிருப்பாள் என்றுணர்ந்தவர் “ஓ… இதான் பிரச்சனையா?” என்று நிம்மதியாகி, “மேகலை நீ நினைக்கிற மாதிரி இல்லைடா, எனக்கு எதுக்கு சிரமம்னு நினைக்குது” என்றார் பொறுமையாக.
“ப்ளஸ்டூ முடிச்ச அடுத்தவாரமே அந்த பையன் விஷாலினிகிட்ட பேசியிருக்கான், ஆனா ஆன்ட்டி உங்ககிட்ட சொன்னது போனவாரம்தான். நம்பளைலாம் பார்த்தா ஆம்பிளையா தெரியலையா அவங்களுக்கு. அவங்களுக்கு பாதுகாப்பா நீங்க இருக்கிங்கனு தெரிஞ்சிருந்தா அவனுக்கு இவளை நெருங்கும் தைரியம் வந்திருக்குமா?
ஆன்ட்டியோட கெஸ்ஸிங் சரின்னா, விஷாலினியோட அப்பன் சொல்லித்தான் இவன் விஷாலினியை தேடி வந்திருப்பான். இவளைத்தான் கல்யாணம் செய்யனும்ன்ற முடிவோட இருக்கிறவன் ஹாஸ்டல்ல சேர்த்துட்டா மட்டும் பார்க்காம விட்டுடுவானா?”
இப்போவும் நம்மகிட்ட ஹெல்ப் கேக்கல. ஆனா உங்களுக்கு உடம்பு சரியில்லனா விசாரிக்க ஹாஸ்பிட்டல் வரைக்கும் வருவாங்க. காவ்யாமேல அக்கறை வைப்பாங்க. வீட்டு வாடகை ஏத்தமாட்டாங்க. நாமளா பார்த்து கொடுக்குற வாடகையை வாங்கிக்குவாங்க.
வெளில நிலம் வாங்கும்போது இந்த வீட்டையே விலைக்கு வாங்கிக்கோங்க, மார்கட் ரேட் பார்த்து நாம சொல்ற ரேட்டுக்கு வீட்டை கொடுக்கறேம்பாங்க.
ஆனா அவங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா நம்மகிட்ட சொல்லமாட்டாங்க. மாமா மாமானு இனிக்க இனிக்க கூப்பிடறவளுக்கும் இவ்வளோ பெரிய பிரச்சனையை உங்ககிட்ட சொல்லனும்னு தோணல. ஆனா காலைல கிளம்புறப்போ காவ்யாக்காக உங்ககிட்ட பேசிட்டு போயிருக்கா. இதை எப்படிப்பா எடுத்துக்கிறது?” என்றான் கோபத்தோடு.
விஷ்ணு பேசியது மேகலைக்கு கேட்டிடுமோ என “டேய் மெல்ல பேசுடா” எனப்பதறி, “விஷாலினி அப்பாவோட தங்கை மகன்தான் அந்த பையன்னு மேகலை உறுதியா சொல்லுது. மேகலை கல்யாண விசயம் தெரிஞ்சு அந்தாளோட மொத்த குடும்பமும் சண்டை போட வந்தப்போ அந்த பையனை பார்த்திருக்காம். அப்போ ஒரு ஆறு இல்ல ஏழு வயசிருக்குமாம்.
அந்தாள் குற்றவுணர்வை போக்க தங்கை மகனை ஏவிவிட்டுருக்கார். இன்னும் என்னெல்லாம் நடக்குமோனு மேகலை ரொம்ப பயத்துல இருக்கு. எல்லாத்தையும் தப்பான கோணத்துல பார்க்காத விஷ்ணு” என்றார் மன்றாடலாக.
தன் குடும்பத்தின் மீதான மேகலை விஷாலினியின் அன்பு உண்மையானதென்று விஷ்ணுவிற்கே தெரியும். தந்தையை பாராவிட்டால் காய்ச்சல் வரும் அளவிற்கு அன்பு வைத்திருந்த குழந்தையை தன் வீட்டிற்கு வரவிடாமல் செய்தது…
எப்பொழுதாவது காவ்யாவைத் தேடி வந்தாலும் உண்ணக்கூடாது என கட்டுப்பாடு விதித்தது, விஷாலினியும் பெரியவர்கள் பேச்சு கேட்டு கட்டுப்பாடாக இருந்தது என இவையனைத்தும்… அவர்கள் தன் குடும்பத்தோடு பழக எந்த எல்லையும் இல்லாதது போன்றும், நாம் அவர்கள் குடும்பத்தோடு பழக எல்லை வைத்திருப்பது போன்றும் தோன்ற மேகலையையும் விஷாலினியையும் பிடிக்காமல் போனது விஷ்ணுவிற்கு.
சில வருடங்கள் கழித்து விஷாலினியின் விஷேசத்திற்கு தன் தந்தையை தாய்மாமனாக முன்னிருத்தியதில் சற்று சமாதானம் ஆனான் விஷ்ணு. அதன் பின் கோபாலன் நிலம் வாங்கவே, இந்த வீட்டையே வாங்கிக்கோங்க என்று மேகலை சொல்லவும், தனது குடுமப விசயங்களில் தலையிடுவதாக தோன்ற மேகலையிடம் பேசுவதையும் நிறுத்தியிருந்தான்.
இவை அனைத்திற்கும் மேலாக, காவ்யா குறித்து தந்தையிடம் விஷாலினி பேச்சு இன்னும் கோபத்தை வரவைத்திருந்தது. காவ்யா விசயத்துல இவ என் அப்பாக்கு புத்தி சொல்வா… ஆனா என்னை ஒருத்தன் பாலோ பண்றானு சொல்லமாட்டா. மாமா மாமானு பேச்சுக்கொன்னும் குறைச்சல் இல்ல என்று கோபத்தில் இருந்தான் விஷ்ணு.
“அண்ணா” என குரல் கொடுத்தார் மேகலை.
மேகலை குரல் கேட்டதும் விஷ்ணு அறைக்குள் சென்றிட, “உள்ள வாம்மா” என்றார் கோபாலன்.
விஷ்ணு பேசியதனைத்தும் கேட்டுக்கொண்டிருந்த மேகலைக்கு, இன்றே தன்நிலையை தெளிவுபடுத்தவில்லை என்றால் இன்னும் தப்பாகிடும் என்றுதான் வந்தார். இது வாசலில் வைத்து பேசும் விசயம் இல்லை ஆதலால் கோபாலன் அழைக்கவும் உள்ளே சென்றார்.
விஷ்ணுவை காணாததால் “தம்பிகிட்ட கொஞ்சம் பேசனும்ண்ணா” என்றார்.
மேகலை சொன்னது கேட்டபோதும், தான் பேசியதை கேட்டு விளக்கம் கொடுக்க வந்திருக்கிறார் என உள்ளேயே அமர்ந்திருந்தான் விஷ்ணு.
“விஷ்ணு” என கோபாலன் குரல் கொடுக்க, “முதல்ல உக்காரு மேகலை” என்றார் பிரபாவதி.
“பரவால்ல இருக்கட்டும் அண்ணி” என்றவர், “விஷாலினி எப்படி காலேஜ்ல இருப்பாளோன்னு மனசே சரியில்லண்ணா, காலைல அங்க போய் வந்த அலுப்பும் சேர்ந்து உடம்பும் படுத்தவும் ஹால்ல அப்படியே படுத்துக்கிட்டேன், விஷ்ணு பேசினது கேட்டுச்சு. மனசுக்கு ரொம்ப சங்கடமாகிடுச்சுண்ணா, தம்பி நினைக்கிற மாதிரி நான் நினைக்கவேயில்ல” என்றார் வருத்தமாக.
“உன்னை தெரியாதாம்மா. விஷ்ணுவும் சின்னபையன். இருபத்திநாலு வயசுதான ஆகுது? இளரத்தம்… யோசிக்காம பேசிட்டான். கொஞ்சநாள் போனதும் புரிஞ்சிப்பான்” என்றார் ஆறுதலாக.
தனக்கு புரியவில்லை என்று தந்தை சொன்னதில் கோபம் வர, எல்லாம் புரிந்துதான் பேசினேன் என்ற தோரணையில் வெளியே வந்தான்.
விஷ்ணுவை கண்டதும் மனம் நெகிழ்ந்திட, “என்னை நீ இப்படி நினைக்கிறது வருத்தம்ன்னாலும், எங்க பிரச்சனையை உங்ககிட்ட சொல்லலைனு உரிமையா கோபப்பட்டிங்க பாருங்க. சந்தோசமா இருக்கு தம்பி” என்றார் கனிவாக.
விஷ்ணு அமைதியாகவே நின்றிருக்க, “இந்த வீட்டை கட்டி ஒன்றரை வருசத்துல நீங்க குடி வந்திங்க. நீங்க வரும்முன்ன இரண்டுபேர் குடித்தனம் இருந்தாங்க. இரண்டு பேரையும் என் அம்மா காலிபண்ண சொல்லிடுச்சு.
காரணம்… முதல்முறையா குடியிருக்க வந்தவங்க குடும்பத்துல புருசன் பொண்டாட்டி குழந்தைகள்னு நாலு பேரோட சேர்த்து அந்தண்ணனோட அப்பாவும் இருந்தார். அவருக்கு இருக்கும் அறுபது வயசுக்கு மேல.
உன் புருசன் எப்படி உன்னை ஏமாத்தினான்? எப்படி இந்தளவுக்கு வெகுளியா இருந்திங்கனு ஆரம்பத்துல அக்கறையா கேட்டவர்… இரண்டு மாசம் கழிச்சு வேறமாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டார். ரொம்ப வேதனையோட அம்மாகிட்ட சொன்னேன். காலி பண்ண வச்சிடுச்சு என் அம்மா.
இரண்டாவதா குடித்தனம் பண்ண வந்தவங்க நல்லவங்கதான். ஆனா அவங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி ஒருத்தர் என்னை இரண்டாந்தாரமா கேட்டார். முடியாதுனு சொல்லியும் அடிக்கடி வர ஆரம்பிச்சான். அதனால அவங்களையும் காலி பண்ணிட்டோம்.
மூணாவதா நீங்க வந்திங்க. ஆரம்பத்துல ரொம்ப பயந்தேன். ஆனா கோபாலண்ணாவோட கண்ணியமான பேச்சும், பார்வையும், அண்ணியோட அனுசரனையும் என் பயத்தை போக்கி நிம்மதியை வரவச்சது. நிம்மதியோட வேல்யூ நிம்மதியை பறிகொடுத்தவங்களுக்குத்தான் தெரியும்” என்றார் பெருமூச்சோடு.
“விஷாலினி உங்களோட ரொம்ப ஒட்டிக்கிட்டா. நீங்க ஒருநாள் இல்லைனாலும் அழுது அழுது காய்ச்சலே வந்திடும். என்னைக்காவது காலி பண்ணிக்கிட்டிங்கனா குழந்தைக்கு ரொம்ப கஷ்டமாகிடுமேனுதான் கன்ட்ரோல் பண்ணினோம்.
யார் வீட்டுக்கும் போகக்கூடாது, யார் எது கொடுத்தாலும் வாங்க கூடாதுனு குழந்தைகளுக்கு வழக்கமா சொல்லிக் கொடுக்கிறதைதான் சொன்னோம். எல்லாம் கேட்டுக்கிட்டாலும் உங்களை பார்க்க ஜன்னல்கிட்ட வந்து நின்னுப்பா. இப்போ வரைக்கும் அதை விடறதில்ல” என சிரிப்போடு சொல்லி,
“என் அம்மா எங்க வீட்டுக்கு போனதுக்கப்புறம் எனக்கிருக்க ஒரு துணை, ஆறுதல் எல்லாமும் உங்க குடும்பம்தான். பணத்தை கொடுத்தா உங்களுக்கு ஆயிரம் வீடு கிடைக்கும். ஆனா எனக்கு உங்களை மாதிரி நல்லவங்க கிடைக்கமாட்டாங்க. இப்படிபட்டவங்களை என்னோடவே வச்சிக்கனும்ன்ற ஆசையிலதான் உங்களை காலி பண்ண விடல” என்றவர், சிறு இடைவெளி விட்டு,
“எனக்கப்புறம் என் பொண்ணுக்கும் உங்களோட அரவணைப்பு வேணும்னு ஆசை. அதுக்காகத்தான் இந்த வீட்டை உங்களையே வச்சிக்க சொன்னேன்” என்றார்.
மேகலையின் பேச்சு தோரணை, அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று புரிய மனம் லேசானது விஷ்ணுவிற்கு. சில நொடி கழித்து மீண்டும் இறுகினான்.
அவனின் முகமாற்றம் மேகலைக்கு புரிய, “விஷாலினி பிரச்சனையை உங்ககிட்ட சொல்லக்கூடாதுனு இல்லை தம்பி. இங்கையும் காவ்யா பிரச்சனை, அப்பாக்கு ஹார்ட்ல பிரச்சனை. அண்ணியும் மன உளைச்சல்ல இருந்தாங்க. நாமளும் தொல்லை பண்ணக்கூடாதுனுதான் சொல்லல. உண்மையா இதுதான் காரணம்” என்றார்.
விஷ்ணு அமைதியாகவே நின்றிருக்க, “நான் சொல்லலைனு உங்களுக்கு கோபம்னு இப்போதான தெரியுது. இனி அவனால பிரச்சனைன்னா உங்களுக்குத்தான் முதல்ல சொல்லுவேன்” என உரிமையாக சொல்லி, “உங்களையும் அண்ணனையும் விட்டா எனக்கு வேற யார் இருக்கா தம்பி?” என்றார் ஏக்கமான குரலில்.
மேகலை விசயத்தில் இதுவரை இருந்த சுணக்கம்போய் விஷ்ணுவின் மனம் தெளிந்தது. விஷ்ணுவின் முகம் மேகலைக்கு புதுத்தெம்பை கொடுக்க, இன்முகத்தோடு தன் வீடு சென்றார்.
இருபது நாள்கள் கடந்த நிலையில் விஷ்ணுவும், கோபாலனும் கட்டிடத்திற்கு கிளம்பி வெளியே வர, அங்கே ஆட்டோவிலிருந்து காவ்யா இறங்கினாள்.
error: Content is protected !!