Skip to content
Post Views: 710
தவமணி நாட்களைக் கடத்தாமல் சங்கரியிடம் கூறியது போல் இரண்டு நாட்களிலே அவரையும் அழைத்துக் கொண்டு அவர்களது குடும்ப ஜோசியரைச் சந்திக்கக் கிளம்பி வந்து விட்டார்.
நடராஜன், அறுபது வயதைக் கடந்தவர். அவர் ஜாதகத்தைப் பார்த்துக் கணித்துக் கூறினால் அப்படியே நடந்து விடும். எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு முன்பு கண்டிப்பாக இவரை அணுகாமல் எதையும் செய்ய மாட்டார் தவமணி. நடராஜன் தவமணிக்கு மட்டும் ஜோசியர் இல்லை. கங்காதரனிற்கும் இவர் தான் குடும்ப ஜோசியர்.
Advertisement
தவமணியும் சங்கரியும் அவரின் அறைக்கு வெளியே காத்திருக்க, நடராஜனின் உதவியாளர் வந்து,”ஐயா உங்களைக் கூப்பிடுறார். நீங்க உள்ள போங்க.” என்று கூற, தவமணியும் சங்கரியும் எழுந்து உள்ளே சென்றனர்.
Advertisement
Advertisement
நடராஜன் கீழே தான் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னால் ஒரு குட்டி மர பெஞ்ச் இருந்தது. அவருக்குப் பின்னால் அனைத்து கடவுள் படங்களும் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. தவமணியும் சங்கரியும் உள்ளே வர, நடராஜன் அவர்களைப் பார்த்துச் சிரித்தார்.
Advertisement
“வாங்க தவமணி. வந்து உட்காருங்க. இப்போ தான் பொண்ணு கடை திறக்க நல்ல நாள் பார்த்துச் சொல்லச் சொன்னீங்க. இப்போ என்ன விஷயமா வந்துருக்கீங்க?” என்று கேட்டார் அவர்.
“எல்லாம் நல்ல விஷயம் தான் ஐயா. பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு முடிவெடுத்துட்டேன். அதான் பொண்ணுக்கு குரு பார்வை வந்துருச்சானு பார்த்துச் சொல்லுங்க.” என்று கூறிய தவமணி, சங்கரியைப் பார்க்க, அவர் நிவாஷினியின் ஜாதகத்தை எடுத்து நடராஜனிடம் தந்தார்.
அதை வாங்கிய நடராஜன் ஒரு காகிதத்தில் நிவாஷினியின் ஜாதகத்திற்கு ஏற்ப கட்டங்களைப் போட்டுக் கணக்கிட ஆரம்பித்தார். பின்னர் தவமணியையும் சங்கரியையும் பார்த்தவர்,”குரு பார்வை எல்லாம் வந்துருச்சு உங்க பொண்ணுக்கு. ஆனால் கல்யாணம் இப்போதைக்குச் செய்ய வேண்டாம். கட்டம் கொஞ்சச் சரியில்லை. அதுவுமில்லாம ராகு கேது தோஷம் வேற இருக்கு.” என்றார்.
“என்ன ஐயா இப்படிச் சொல்றீங்க?” சற்றுப் பயத்துடன் கேட்டார் சங்கரி.
“இதுல பயப்பட எதுவுமில்லை. ஏனா இப்போ நூத்துல தொண்ணூறு பேருக்கு இந்த தோஷம் இருக்கு. உங்க பொண்ணை வாரா வாராம் செவ்வாய் கிழமை ராகு நேரத்துல துர்க்கைக்கு விளக்குப் போடச் சொல்லுங்க. அதுவுமில்லாம வெள்ளிக் கிழமை உங்களோட குலதெய்வத்துக்கு நல்ல நேரத்துல விளக்குப் போடச் சொல்லுங்க. கண்டிப்பா நல்லது நடக்கும்.”
“அப்போ கல்யாணம் இப்போ பண்ண முடியாதா?” என்று கேட்டார் தவமணி.
“ஆமா கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம். பொண்ணு ஜாதகமும் அதைத் தான் சொல்லுது.”
“இப்போ மாப்பிள்ளை மட்டும் பார்க்கட்டுமா? அப்படி ஏதாவது முடியற மாதிரி இருந்தா கல்யாணத்தை ஆறு மாசம் கழிச்சு நீங்க சொல்ற மாதிரி செய்யலாமா?” என்று கேட்டார்.
“நான் ஜாதக கட்டத்துல என்ன இருக்கோ அதைச் சொல்லிட்டேன். அப்படி உங்களுக்கு அதையும் மீறி பார்க்கனும்னா பாருங்க. உங்களுக்குத் தோது படுற மாதிரி ஏதாவது வரன் வந்தால் கொண்டு வாங்க. பொண்ணு ஜாதகத்தோட வைச்சு பார்ப்போம். பையனோட ஜாதகம் உங்க பொண்ணு ஜாதகத்துல இருக்கிற தோஷத்தைச் சரி பண்ற மாதிரி இருந்தால் தாராளமாக நீங்கக் கல்யாணத்தை நடத்தலாம்.” என்று அவர் கூறவும் தான் தவமணிக்குச் சற்று நிம்மதியாக இருந்தது.
“ரொம்ப நன்றிங்க ஐயா. நான் உடனே மாப்பிள்ளையைப் பார்க்க ஆரம்பிக்கிறேன். அதுல ஏதாவது சரினு பட்டா உடனே உங்ககிட்ட கொண்டு வரேன்.” என்று சிரித்த முகமாகக் கூறியவர் அவரிடம் விடைபெற்று சங்கரியுடன் வெளியே வந்தார்.
“எனக்கு ஒன்னு புரியலை.” என்று ஆரம்பித்தார் சங்கரி.
நடந்து கொண்டிருந்த தவமணி நின்று சங்கரியைப் பார்த்து,”உனக்கு என்ன புரியலை?” என்று கேட்டார்.
“பின்ன எதுக்கு இவ்ளோ அவசரமாக நிவிக்கு கல்யாணம் பண்ணனும்? அவள் இப்போ தான் தொழில்னு ஒன்னு ஆரம்பிச்சு இருக்கா. அதுக்குள்ள கல்யாணம்னு சொன்னால் அவள் ஒத்துப்பாளா?”
“அது என்னோட வேலை. நிவியை எப்படி ஒத்துக்க வைக்கனு எனக்குத் தெரியும் சங்கரி. உனக்குச் சில விஷயங்கள் தெரியாது. நான் உன்கிட்ட சொன்னது இல்லை. அதனால என்னோட அவசரம் உனக்குப் புரியலை. இப்போ கேட்டுக்கோ நம்ம நிவிக்கு நல்லது பண்ணனும் அவள் வாழ்க்கையில சந்தோஷமா இருக்கனும்னா அவளுக்குச் சீக்கிரம் கல்யாணம் நடந்தால் மட்டும் தான் அது நடக்கும். இல்லாட்டி நம்ம நிவியை நீ மறந்திரு.” என்று கூறிவிட்டு அவர் வேகமாக முன்னால் சென்று விட ஒன்றும் புரியாமல் அப்படியே நின்றுவிட்டார் சங்கரி.
சங்கரி தன் பின்னால் வரவில்லை என்று தெரிந்தும் அவர் முன்னால் சென்று அவர்களது மகிழுந்தில் ஏறி அமர, ஒரு நிமிடம் திடுக்கிட்டு நின்ற சங்கரி சுய உணர்வுப் பெற்று அவரும் தவமணிக்குப் பக்கத்தில் ஏறி அமர்ந்தார்.
“எனக்கு என்ன தெரியாது? நிவிக்கு நீங்க அப்பானா நான் அம்மா. என்னன்னு என்கிட்ட சொல்லுங்க.” என்று கேட்டார் சங்கரி. ஆனால் தவமணியோ வாயைத் திறக்கவே இல்லை.
“ப்ச் இப்படி அமைதியா இருந்தால் என்ன அர்த்தம்?”
“சங்கரி நீ வீட்டுல இருக்கிறதுனால உனக்கு எதுவும் தெரியாதுனு நான் சொல்ல மாட்டேன். ஏனா நியூஸ்லாம் நீ பார்த்து பேப்பர் படித்து என்ன நடக்குதுனு என்னை விட நீ தெரிஞ்சு வைச்சுருக்கு. அப்படி இருந்தும் ஒரு வயசு பொண்ணை நம்ம அப்படியே எந்தப் பயமும் இல்லாம வீட்டுல வைச்சுருக்க முடியுமா?” என்று நிதானமாகக் கேட்டார்.
“உலகத்துல ஆயிரம் நடக்குது. எங்கேயும் பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதை நான் ஒத்துக்கிறேன். ஆனால் நீங்க இதைக் காரணமா சொல்லலையே. ஏதோ எனக்குச் சில விஷயங்கள் தெரியாதுனு தான பேசுனீங்க நீங்க. அப்போ ஏதோ இருக்கனு தான அர்த்தம்? நீங்க எதை மறைக்குறீங்க என்கிட்ட?” என்று சங்கரி கேட்கவும் தவமணி சற்று நிதானித்தார்.
“நான் உன்கிட்ட எதையும் மறைக்கல. நான் அப்படிச் சொன்னதுக்கு நீ நினைக்கிற அர்த்தம் கிடையாது. நம்ம பொண்ணு வீட்டுல இருக்கும் போது எந்தக் கவலையும் இல்லை. ஆனால் இப்போ தொழில்னு ஒரு விஷயத்துக்குள்ள அவள் உள்ள போயிட்டா. அப்போ ஆயிரக்கணக்கான பேரை அவள் பார்ப்பா. அதுல எங்கேயும் நம்ம பொண்ணு தடம் மாறிடக் கூடாது. அந்த ஒரு கவலை மட்டும் தான் எனக்கு. இதை உன்கிட்ட சொன்னால் நம்ம பொண்ணை நீங்க நம்பளையானு கேட்பா. அதுக்கு என்னோட ஒரே பதில் நம்ம பொண்ணோட வயசு மேல எனக்கு நம்பிக்கை இல்லை.” என்று கூறிவிடச் சங்கரிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
அவரால் தவமணி போல் நிவாஷினியை நினைக்க முடியவில்லை. இருபத்தி மூன்று வயது வரை தடம் மாறாத பெண் இதற்கு மேல் தடம் மாறுவாளா? என்ற கேள்வி அவரை யோசிக்க வைத்தது. ஏனோ நிவாஷினி மேல் அவருக்கு அதீத நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் தந்தையாக தவமணியின் பயத்தையும் தப்பென்று கூற முடியாது. இப்போது என்ன பெண்ணிற்குத் திருமணம் தானே செய்ய ஆசைப்படுகிறார். அதில் என்ன தவறு? நல்ல விஷயம் தானே என்று அவரை அவரே தேற்றிக் கொண்டு,”நீங்க சொல்றதுல எனக்கு உடன்பாடு இருக்கானு கேட்டால் இல்லைனு தான் சொல்லுவேன். ஏனா எனக்கு நிவி மேல நம்பிக்கை இருக்கு. அதே மாதிரி உங்களோட பயத்தையும் நான் கண்சிடர் பண்றேன். அதையும் தப்புனு சொல்ல முடியாது. நீங்க முடிவுப் பண்ண மாதிரியே பண்ணலாம். எனக்கு இதுல முழு சம்மதம்.” என்று சங்கரி கூறவும் தான் தவமணிக்குச் சற்று நிம்மதியாக இருந்தது.
தவமணியும் சங்கரியும் சென்று விட்டனரா என்று தனது உதவியாளரிடம் கேட்டர் நடராஜன். அவர்கள் சென்று விட்டனர் என்று தெரிந்த பின்பு அவரது அலைப்பேசியை எடுத்தவர் வேகமாக ஒரு எண்ணிற்கு அழைத்தார். மூன்று நான்கு ரிங் போனதும் அந்தப் பக்கம் எடுக்கப்பட,”தம்பி தவமணியும் அவரது சம்சாரமும் இப்போ தான் வந்து அவங்க பொண்ணு ஜாதகம் கொடுத்து எப்போ கல்யாணம் பண்றதுனு கேட்டுட்டு போனாங்க…..” என்று கூறி அங்குச் சற்று முன் நடந்தது அனைத்தையும் அப்படியே ஒப்பித்தார்.
மறுமுனை என்ன பதில் கூறியதோ அவர்,”சரிங்க தம்பி. அவர்கிட்ட உங்களுக்கு தோதான ஜாதகம் கிடைச்சா எடுத்துட்டு வரச் சொல்லிருக்கேன். அப்படி வந்தால் அது யார் என்னனு எல்லாம் விவரத்தையும் மறக்காமல் உங்ககிட்ட சொல்லிடுறேன்.” என்று கூறி அலைப்பேசியை அணைத்தார் நடராஜன்.
##########
ஒரு மாதம் ஓடி விட்டது. நிவாஷினி தனக்கு வீட்டில் மாப்பிள்ளைப் பார்க்கிறார்கள் என்று எதுவும் தெரியாமல் அவளது தொழிலை எப்படி அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வது என்பதிலே கவனமாக இருக்க. அவளிற்கு வீட்டில் நடக்கும் எதிலும் கவனமில்லை.
அன்றும் அப்படித் தான் சங்கரியும் தவமணியும் ஒரு வரன் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த ஒரு மாதத்தில் இரண்டு வரன் வந்து விட்டது. ஆனால் முதலில் நன்றாகப் பேசுபவர்கள் பெண் பார்க்கும் வைபவத்திற்கு முன்பாகச் சொல்லி வைத்தது போல் இந்தச் சம்பந்தம் வேண்டாம் என்று நிராகரித்து விடுவார்கள். இதில் தவமணிக்கும் சங்கரிக்கும் மிகவும் வருத்தமாகிப் போனது.
“இந்த வரனாவது ஒத்து வருமாங்க?” கவலையுடன் கேட்டார் சங்கரி.
“நீ ஏன் கவலைப்படற? எல்லாம் சரியா வரும்.”
“இல்லை சொல்லி வைச்ச மாதிரி இதுக்கு முன்னாடி வந்த இரண்டு வரனும் பொண்ணு பிடிச்சுருக்கு. நாங்க உங்க பொண்ணை பார்க்க வரோம்னு சொல்றாங்க. ஆனால் சரியா அதுக்கு இரண்டு நாள் முன்னாடி இல்லை நீங்க வேற இடம் பார்த்துக்கோங்கனு சொல்றாங்க. அது எப்படி இரண்டு வரனும் அப்படிச் சொல்லுவாங்க?” என்று சங்கரி தவமணியிடம் கேட்க, அவருக்குப் பல யோசனைகள் வந்தது.
“நம்ம நிவிக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறது யாருக்காவது தெரியுமா?”
“இல்லையே!! நம்ம தான் நிவிகிட்டயே சொல்லலையே!! அப்புறம் வேற யாருக்குத் தெரிய போகுது?”
“ம். சரி நீ எதுவும் யோசிக்காத. இந்த வரன் கண்டிப்பா முடிஞ்சுடும்னு தோணுது. நான் எல்லாம் விசாரிச்சுட்டேன். மாப்பிள்ளையும் சரி அவரது குடும்பமும் சரி ரொம்ப நல்லவங்க தான் சொல்றாங்க. மாப்பிள்ளை இதே ஊர்ல பேங்க்ல தான் வேலைப் பார்க்கிறார். அவரோட அப்பாவும் பேங்க்ல தான் வேலைப் பார்க்கிறார். ஆனால் அவர் சம்சாரத்தோட திருச்சில இருக்கார். மாப்பிள்ளைக்குக் கூடப் பிறந்த அக்கா இருக்காம். அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சு மதுரைல இருக்காம். மாப்பிள்ளை மட்டும் தனியா தான் இருக்கார். ஒன்னும் பிரச்சனை வராது.” என்று கூறினார்.
“அப்போ சரிங்க. நம்ம நிவிகிட்ட சொல்லனுமே!”
“அவசரப்பட வேண்டாம் சங்கரி. இன்னும் அவங்க சைட்ல இருந்து எந்தப் பதிலும் வரலை. முதல்ல அவங்க பதிலை சொல்லட்டும். அதுக்கு அப்புறம் நம்ம நிவிகிட்ட பேசிடலாம்.” என்றார்.
“ம் அதுவும் சரிதான்.” என்று கூறி அவர் எழ, சரியாக வீட்டினுள் வந்தாள் ஹரிதா.
அவளைப் பார்த்துச் சிரித்த சங்கரி,”அடடா கல்யாணம் பொண்ணு இங்கே என்ன பண்ற?” என்று கேட்டார்.
“ஆண்டி நிவாக்கு என் கல்யாணத்துக்கு ட்ரெஸ் எடுத்துக் குடுக்க அவளைக் கூட்டிட்டு போக வந்தேன்.”
“அடடா அதெல்லாம் எதுக்கு மா?”
“என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? நாளைக்கு நிவாக்கு கல்யாணம் அப்படினா எனக்கு ட்ரெஸ் எடுத்துக் குடுக்காமல் இருப்பீங்களா என்ன?”
“அதெப்படி நீயும் இந்த வீட்டுல ஒருத்தி தான். கண்டிப்பா உனக்கு எடுக்காமல் இருக்க முடியுமா?”
“கரெக்ட் ஆண்டி. அதே மாதிரி தான் நிவாவும்.” என்று கூறி கண் அடித்தாள் ஹரிதா.
“நல்லா என்னையே பேச வைச்சு உன் வழிக்குக் கொண்டு வந்துட்ட. நல்ல பொண்ணு போ. சரி நீ உட்கார். நிவி வரதுக்குள்ள உனக்கு ஏதாவது குடிக்கக் கொண்டு வரேன்.” என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
சங்கரி சென்றவுடன் தவமணி,”எங்கே ட்ரெஸ் எடுக்கப் போறீங்க?” என்று கேட்டார்.
“முதல்ல சென்னை சில்க்ஸ் போறோம் அங்கிள். அங்க செட் ஆகிட்டா அங்கேயே எடுத்துருவோம். இல்லாட்டி போதீஸ் ஆர் நம்பி ஜவுளி மாளிகைக்குப் போகலாம்னு இருக்கோம்.” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். சென்னை சில்க்ஸ்லயே எடுக்கப் பாருங்க. வேற எந்தக் கடைக்கும் போக வேண்டாம்.” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே நிவாஷினி அங்கு வந்து விட்டாள்.
“எந்தக் கடைக்குப் போக வேண்டாம்னு சொல்றீங்க பா?”
“இல்ல மா வெயில் எப்படி அடிக்குது பார். அது தான் ஒரே கடைல எடுக்கப் பாருங்கனு சொன்னேன்.”
“ஓ சரி பா. பார்க்கலாம் சென்னை சில்க்ஸ்ல ஒர்க் அவுட் ஆகிடுச்சுனா கண்டிப்பா அங்கயே எடுத்துருவோம் பா.” என்றாள்.
“ம் சரி மா. முடிஞ்சதும் வேற எங்கேயும் போகமா நேரா வீட்டுக்கு வாங்க.” என்றார்.
“ஏன் பா? மதியம் லன்ச் வெளில சாப்பிடலாம்னு ப்ளான் பண்ணோம்.” என்று சற்று வருத்தத்துடன் நிவாஷினி கூற, அவளது முகத்தைப் பார்த்த தவமணி,”சரி லன்ச் சாப்பிட்டே வாங்க. எங்கே போகப் போறீங்கனு எனக்கு லோக்கேஷன் மட்டும் அனுப்பிடு மா.” என்றார்.
“ம் சரி பா.” என்றாள் நிவாஷினி.
வெளியில் எதுவும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், மனதிற்குள் ஆயிரம் கேள்வி உதித்தது நிவாஷினிக்கு. இத்தனை நாட்கள் இந்த மாதிரி கூறாதவர் இன்றைக்கு அத்தனைக் கேள்விகள் கேட்கவும் நிவாஷினிக்கு ஒரு மாதிரியாகி விட்டது. தந்தை தன்னை நம்பவில்லையா என்று தோன்ற ஆரம்பித்து விட்டது அவளிற்கு. ஆனால் அதை நேரடியாக அவளிற்குக் கேட்க விருப்பமில்லை. அப்படி அவள் கேட்டு அவர் ஆமாம் என்று கூறிவிட்டாள் கண்டிப்பாக அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அதனாலே எதையும் காட்டாமல் அமைதியாகி விட்டாள்.
சங்கரி பழச்சாறு கொண்டு வர, அதை அருந்தி விட்டு ஹரிதாவும் நிவாஷினியும் அவளது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து கிளம்பினார்கள். ஹரிதா கூறியது போலவே முதலில் சென்னை சில்க்ஸ் தான் சென்றார்கள்.
முதல் நாள் வரவேற்பிற்கும் சேர்த்தே எடுப்பதாகத் தான் பேசியது. ஆனால் நிவாஷினி தான் அதெல்லாம் வேண்டாம் கல்யாண தினத்திற்கு மட்டும் புடவை போதும் என்று கூறிவிட்டாள். ஹரிதா முடியாது என்று கூற, ஒரு புடவை போதும் இல்லையென்றால் எதுவும் எனக்கு வேண்டாம் என்று திட்டவட்டமாக நிவாஷினி கூறிவிட, ஹரிதாவால் ஒத்துக் கொள்வதற்குப் பதில் வேற முகாந்திரம் இல்லை. அதனால் திருமணத் தினத்தன்று புடவைக் கட்டுவது தான் நன்றாக இருக்கும் என்று நேராக அவர்கள் சென்றது புடவைப் பிரிவிற்குத் தான்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேர அலசலில் நிவாஷினிக்குப் பிடித்த மாதிரி புடவைக் கிடைத்து விட, சந்தோஷமாக அதை வாங்கிக் கொண்டு கடையை விட்டுக் கிளம்பினார்கள்.
“ஹரி இப்போ அடுத்து எங்கே போறது?”
“வேற எங்கே சாப்பிடத் தான் போகனும். அதான் உன் அப்பா போகும் போதே கண்டிஷனா சொல்லிட்டாரே.” என்றாள் ஹரிதா.
“ஏய் என்ன இப்படிச் சொல்ற? எப்பவும் அப்பா இப்படி எல்லாம் பண்ணதே இல்லை. என்னமோ புதுசா இன்னைக்கு தான் அப்பா இப்படிப் பேசுறார். எனக்கே ஒரு மாதிரியாகிடுச்சு. இதுல நீ வேற அதைச் சொல்லிக் காமிக்கிற பார்த்தியா?” என்று வருத்தத்துடன் கூறினாள் நிவாஷினி.
“அட நான் சும்மா விளையாட்டுக்குத் தான் அப்படிப் பேசினேன் நிவா. நீ கவலையை விடு அங்கிள் ஏதாவது ஞாபகத்துல அப்படிப் பேசிருப்பார். நாம இப்போ நல்ல ஹோட்டல்லுக்குப் போவோம். பயங்கர பசியா இருக்கு.”என்று பேச்சை மாற்றினாள் ஹரிதா.
“ம் சரி எனக்கும் தான் பசிக்குது. எங்கே போறது?”
“இன்னைக்கு புதன் கிழமை தான? அப்போ நான் வெஜ் சாப்பிடுறதுல எந்தப் பிரச்சனையும் இல்லை. நாம ஜே.ஏ. நான் வெஜ் ரெஸ்டாரண்ட் இருக்குல அங்க போகலாம். லாஸ்ட் டைம் மாமா கூட அங்கே போனேன். பிரியாணி செமயா இருந்துச்சு. அதையும் விடக் கோலா உருண்டையும் நண்டு ஆம்ப்லெட்டும் செமயா இருந்துச்சு. கண்டிப்பா நம்ம அங்க தான் போகனும்.” என்று நாக்கில் எச்சில் ஊற ஹரிதா கூற, நிவாஷினி அவளைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்தாள்.
“ஏய் சிரிக்காத. நான் தான் சாப்பாட்டு ராமினு உனக்குத் தெரியாதா என்ன?”
“அதெல்லாம் நல்லாவே தெரியும். ஆனால் பாவம் அண்ணா தான். உனக்குச் சாப்பாட்டு வாங்கி தந்தே அவரோட காசெல்லாம் செலவாகப் போகுது.”
“அப்படியாவது அவர் செலவு பண்ணட்டும். சாப்பிடத் தான வேலைப் பார்க்கிறோம்?” என்று கேட்டாள்.
“அடிப்பாவி.”
“நீ முதல்ல வண்டிச் சாவியை குடு. நான் ஓட்டுறேன். விட்டால் பேசியே டைம் ஆக்கிடுவ போல.” என்று கூறி நிவாஷினி கையிலிருந்த சாவியை வாங்கி வண்டியை எடுத்தாள் ஹரிதா. நிவாஷினியும் சிரித்துக் கொண்டே அவளின் பின்னால் அமர்ந்தாள்.
ஜே.ஏ. ரெஸ்டாரண்ட் முன்னால் ஹரிதா வண்டியை நிப்பாட்டியதும் இருவரும் உள்ளே சென்றார்கள். காலியாக இருந்த இடத்தில் அவர்கள் அமர, பேரர் வந்து ஆர்டர் எடுத்தார்.
“ஒரு சிக்கன் பிரியாணி, ஒரு மட்டன் பிரியாணி, நாலு கோலா உருண்டை, ஒரு ஆம்ப்லெட், ஒரு நண்டு ஆம்ப்லெட். இதெல்லாம் கொண்டு வரதுக்கு முன்னாடி இரண்டு சிக்கன் சூப் கொண்டு வாங்க.” என்று ஆர்டர் கொடுத்தாள் ஹரிதா.
இது எப்போதும் நடக்கும் ஒன்று தான். ஹரிதாவும் நிவாஷினியும் வெளியே சாப்பிடச் சென்றாள் என்ன சாப்பிட வேண்டுமென்று ஹரிதா தான் கூறுவாள். ஏனென்றாள் ஈரோட்டில் இருக்கும் அனைத்து உணவகத்திற்கும் அவள் சென்று சாப்பிட்டு இருப்பதால் எது நன்றாக இருக்கும் என்று அவளிற்கு நன்றாகத் தெரியும். அதனால் அவளையே ஆர்டர் கொடுக்கச் சொல்லிவிடுவாள் நிவாஷினி.
இருவரும் சூப் குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்க, மைக்கேல் அதாவது விஷாகனின் நண்பன், அவனது அறையிலிருந்து வெளியே வந்தான். ஆம் அந்த உணவகம் அவனது உணவகம் தான். எப்போதும் போலச் சாப்பிடுபவர்களையும் அவர்களுக்குச் சாப்பாடு கொண்டு வந்து தரும் பேரர்களையும் ஒரு பார்வைப் பார்க்க அவனது பார்வை வட்டத்தில் விழுந்தாள் நிவாஷினி. அவளைப் பார்த்ததும் சும்மா விடுவானா என்ன உடனே அவனது கைப்பேசியை எடுத்து விஷாகனிற்கு விஷயத்தைக் கூற, அடுத்த பத்தாவது நிமிடத்தில் அங்கிருந்தான் விஷாகன்.
error: Content is protected !!