Skip to content
Post Views: 2,034
கனமழையானது வெளியே கொட்டிக்கொண்டு இருந்தது. ஐப்பசி மாதத்தில் இதுவே முதல் மழை. இரவிலிருந்து விடாது பொழிந்த மழையானது ஏற்படுத்திய தாக்கம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்குமளவு கோவை மாநகரத்தையே குளுமையாகியிருந்தது அந்த மாரி.
இன்னும் செல்ல மாட்டேன் என அடம் செய்த மழையானதை வெளியே எட்டி எட்டி பார்த்தபடி இருந்தாள் ஆரபி.
“எத்தனை தடவை பாத்தாலும் அதுக்கு எப்ப தோணுதோ அப்போ தான் ஆராம்மா நிக்கும்”
குளித்து வந்த பார்த்திபன் எந்த உடையை எடுக்கலாம் என யோசிக்க அதற்கு முன்பே அவனுக்கு உடையை எத்தாள்.
Advertisement
கண் உறுத்தாத எலுமிச்சை மஞ்சள் நிறத்தை விட நிறம் கம்மியான மஞ்சள் நிற சட்டை அது. அதற்கு பொருத்தமாக வெள்ளை நிற காற்சட்டை எடுத்து வைத்திருக்குந்தாள்.
மனைவியை கழுத்தை வளைத்து திரும்பி பார்த்தான், இன்னும் திரை சீலையை விளக்கி மழையின் அளவை தான் கண்காணித்துக் கொண்டிருந்தாள்.
“ஆராம்மா, ஆதார் எடுத்து தாயேன்” அவள் கவனத்தை ஈர்க்க முயன்று வேலை கொடுத்தான்.
Advertisement
இன்று பார்த்திபன், விஷ்ணு பெயரில் அந்த குடவுன் மாற்றும் நாள். மனைவிக்காக அவள் விருப்பத்தின்படி அவள் தந்தை குறித்துக்கொடுத்த நாளில் தான் பத்திரப்பதிவினை வைத்துள்ளனர்.
Advertisement
“இங்க இல்லையே ன்னா, உங்க ஆபீஸ்ல எதுவும் வச்சிட்டேளா?” அலமாரியில் தேடிக்கொண்டிருந்த மனைவியின் பின்னிருந்து அணைத்தவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து ஆழ்ந்த மூச்சை இழுத்தான்.
அவன் நிம்மதி அவள் வாசனை. அவன் அமைதி அவள்.
“நல்லா பாரு மாமி. இங்க தான் வச்சிருப்பேன்” அவள் இடை வழியே கை விட்டு அவளுக்கு உதவுகிறேன் என அல்சாட்டியம் செய்தவனை திரும்பி பார்த்தவளுக்கு இதழில் சிரிப்பு தான்.
Advertisement
அவனும் தேடுவதை நிறுத்தி மனைவியை பார்த்தான், “ஏன் மாமி டென்ஷன்?”
“மழை விடாம தூறிண்டே இருக்கே ன்னா”
“நம்ம என்ன டூ வீலர்லயா போக போறோம், கார் தானே”
அவள் உடையை பார்த்தான் பார்த்திபன், “நீ கெளம்பலையா?” புருவம் சுருங்கியது அவளது உடையின் எளிமையில்.
தன் இடை வளைந்திருந்த அவன் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள் கணவனை சமாளிக்கும்பொருட்டு, “நீங்க போய்ட்டு வாங்களேன் ன்னா” கண்களை சுருக்கி கெஞ்சினாள்.
“ஏன்?” கேள்வியோடு அவன் பார்வையும் மனைவியை துளைத்தது.
“கோவிலுக்கு போகணும் ன்னா”
“டைம் இருக்குல வா கோவில் போய்ட்டு ரெஜிஸ்டர் ஆபீஸ் போகலாம்”
“இல்ல நேரமாகிடும்” அவளை விட்டு விளங்கியவன், “கெளம்பு ஆரபி. பாப்பாவை நான் கெளப்புறேன்” குழந்தையும் அந்நேரம் எழுந்து நேராக அவள் தகப்பனிடம் வந்தாள்.
“பூர்வி அப்பா சட்டை கசங்குத்துடா. நீ வா இங்க” குழ்நதை முகம் உடனே சுருங்கி போனது.
“வேணாம்” என்றவன் சட்டையை அவிழ்த்து மகளை தூக்கி கிளப்ப தயாரானான்.
அவனை பாத்திருந்த ஆரபி பார்வை மீண்டும் மழையை வெறித்தது. என்றோ ஒரு நாள் அவள் தந்தை கூறியது, “நல்ல காரியத்துக்கு பொறப்படுற நேரம் மழை பெய்யிறது நல்லது இல்ல” என்று.
அதுவே மனதினை பிடித்து வாட்ட கோவில் செல்லலாம் என நினைத்தவள் எண்ணத்தை தன் பிடிவாதத்தால் மாற்றியிருந்தான் பார்த்திபன்.
மூவரும் கிளம்பி கீழே வந்த சமயம் பார்த்திபனின் பெற்றோரும் கிளம்பியிருக்க அனைவரும் கோவில் சென்று பிறகு சார்பதிவாளர் அலுவலம் சென்றனர்.
இவர்களை போலவே விஷ்ணுவும் அவன் அன்னை தந்தையோடு அங்கு வந்திருந்தான். பெரியவர்கள் ஆரபி என அவர்களுள் பேச அவ்விடத்தை சுற்றி கண்களை சுழற்றிய பார்த்திபன் விஷ்ணுவிடம் கண் அசைக்க இருவரும் தனியே வந்தனர்.
“எங்கடா லேண்ட் ஓனர்?”
“அதாண்டா நானும் பாக்கறேன், இன்னும் வரல கால் பண்ணாலும் எடுக்க மாட்டிக்கிறார்”
“சரி விடு டிரைவ் பண்ணிட்டு இருப்பார். அரை மணி நேரம் இருக்குல்ல பாக்கலாம்” இருவரும் இயல்பாக பேச்சுக்களை வளர்த்த வண்ணம் இருந்தாலும் இடத்திற்கு உரிமையானவரை அடிக்கடி தேட தான் செய்தனர்.
“நான் போய் என்னனு பாத்துட்டு வரவா?”
“நேரமாகிடும் விஷ்ணு”
விஷ்ணு, ” ஆகிட்டு போகுது. வீட்டுல கேட்டா போட்டோ எடுக்க போயிருக்கேன்னு சொல்லு” பார்த்திபனுக்கு அதுவே சரியென பட தலை அசைத்து அனுப்பி வைத்தான்.
விஷ்ணு தன்னுடைய வாகனத்தை எடுத்து வெளியே செல்லவிருந்த நேரம் சரியாக அந்த இடத்தின் உரிமையாளர் வாகனம் அங்கு உள்ளே நுழைந்தது. இருவரும் நிம்மதி பெருமூச்சோடு அவரை வரவேற்று பத்திர பதிவிற்கு செல்ல வேலைகள் மடமடவென நடந்தது.
“பணம் உங்களுக்கு செட்டில் பண்ணிட்டாங்களா?” சார்பதிவாளர் நிலத்தின் உரிமையாளரிடம் கேட்க,
அதற்குள் விஷ்ணு, “இல்ல சார் மிச்சம் குடுக்க வேண்டி இருக்கு”
ஒரு பையை அவரிடம் நீட்டினான், “அம்பது லட்சம் இருக்கு சார்” என்று. “மிச்ச பணம் தம்பி?” அவர் பார்த்திபன் விஷ்ணுவை பார்த்து கேட்க இருவரும் குழம்பி போயினர் சில நிமிடம்.
“சார் ரெண்டரை சி தானே பேசுனோம்”
“ஆமா ப்பா”
“ஏற்கனவே ரெண்டு சி கொடுத்தாச்சு. மிச்சம் அம்பது லட்சம் இதுல இருக்கு” என்றான் பார்த்திபன்.
அவரோ இல்லை என தலை அசைத்து, “தம்பி நீங்க என்கிட்ட ஒரு சி தான் வீட்டுக்கு வந்து குடுத்தீங்க. இப்போ ஒன்றை கோடி கொடுத்திருக்க வேண்டியது அம்பது லட்சம் தான் தர்றிங்க”
“சார் ரெண்டு கோடி வந்து நாங்க தானே குடுத்தோம், இப்ப மாத்தி பேசுறீங்க” விஷ்ணு அவரிடம் பொறுமையாக கேட்க அவர் அசைந்துகொடுக்கவே இல்லை.
“என்ன தம்பி இது. தெரிஞ்சவங்கனு நம்பி தானே நீங்க குடுத்த பணத்தை எழுதி வாங்காம அனுப்புனேன்”
அவரது போலியான ஆதங்கம் விஷ்ணுவை சூடேற்றியது. எகிறிக்கொண்டு வந்தான், “அதே நம்பிக்கைல தாங்க நாங்களும் குடுத்துட்டு வந்து ஏமாந்து நிக்கிறோம்”
“என்னையா ஏமாத்துறேன் அது இதுனு பேசிட்டு இருக்க, யார் யாரை ஏமாத்துறது. மூணு கோடி, ரெண்டே முக்கால் கோடினு எத்தனையோ பேர் கேட்டும் உங்களுக்கு குடுக்க சரினு சொன்னதுக்கு ஏமாத்துக்காரன்னு பட்டம் வேற தருவியா நீ” அந்த மனிதர் சற்றே குரல் உயர்த்தி கோவத்தில் பேச நண்பனை பிடித்து நிறுத்தினான் பார்த்திபன்.
“சார், அவன் அந்த அர்த்தத்துல சொல்லல. நீங்க எங்க மேல எவ்ளோ நம்பிக்கை வச்சு எழுதி வாங்காம விட்டிங்களோ, அதே நம்பிக்கைல தான நாங்களும் வந்தோம், இப்போ திடீர்னு மாத்தி பேசுனா என்ன அர்த்தம்?”
“என்னது மாத்தி பேசுறேனா, கைல ஒரு கோடிய குடுத்துட்டு மிச்சம் பாத்திரம் முடிகிறபோ குடுக்குறேனு நீ தானே தம்பி சொன்ன. இப்ப என்ன மாத்தி பேசுறேன்னு சொல்ற”
சார்பதிவாளர் என்ன என இடையிட்டு கேட்க, “ஏமாத்துற பழக்கம் எங்களுக்கு இல்ல சார். அவர் வீடு படியேறி அவர் மேல இருக்க மரியாதைல காசு குடுத்துட்டு வந்தா எப்படி பேசுறார்” அவருக்கு விஷ்ணு பதில் கொடுத்தான்.
“நான் என்ன ஏமாத்துறதையே பொழப்பா வச்சா பண்றேன், அப்டியே ஏமாத்தணும்னா காசே குடுக்கலனு சொல்ல எனக்கு எவ்ளோ நேரமாகும்?”
“எங்க சொல்லி தான் பாரேன் அதையும்” விஷ்ணு அவரை அடிக்கவே நெருங்கிவிட்டான்.
“விஷ்ணு, என்னமோ சரியில்லடா” பார்த்திபன் அவன் காதில் கடிக்க நிதானமாக பார்த்திபனை பார்த்த விஷ்ணுவின் ஆத்திரம் இன்னும் கண்ணில் கூடியது.
“அமைதியா இரு, நான் பேசுறேன்” பற்களை கடித்து விஷ்ணு அவரை முறைத்து நிற்க, “சாரி சார். நாம வெளிய நின்னு பேசலாமா?” அவரிடம் கேட்டான் பார்த்திபன்.
“சார், ஏதோ பிரச்சனை வந்த மாதிரி இருக்கு. வெளிய போகாம இங்கையே பேசி இன்னைக்கு பாத்திரம் பதியிறதா என்னனு அஞ்சு நிமிசத்துல முடிவு பண்ணிடுங்க” என்றார் சார்பதிவாளர் தன்னுடைய நாற்காலியில் சாய்வாக அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பொருட்டு.
இது சரி வரும் போல் தெரியவில்லை பார்த்திபனுக்கும். தூரத்தில் நின்று தன்னிடம் வர துடிக்கும் மனைவியை பார்த்தான். பொது இடத்தினில் கண்ணீரை காட்ட முடியாமல் துக்கம் நிறைந்த விழிகளோடு அவனை கெஞ்சும் கருமணிகள் வேண்டுதலை கை கட்டி ஓரம் நிறுத்தினான்.
“சார், அமௌன்ட் ஏதாவது அதிகமா எதிர் பாக்குறீங்களா?”
“என்ன பார்த்திபன், நேரத்துக்கு ஒரு மாதிரி பேசுற ஆளா தெரியுறேனா நான்?”
விஷ்ணு, “ஓ அதை நாங்க வாய திறந்து வேற சொல்லனுமா?”
பார்த்திபன், “விஷ்ணு…”
விஷ்ணு, “பின்ன என்னடா. உயிரை குடுத்து இந்த பணத்தை ரெடி பண்ணி சேர்த்துருக்கோம். இப்டி ஒரே வார்த்தைல குடுக்கலனு சொன்னா எங்க போறது?” பொறுமை இழந்தவன் வார்த்தை வேதனையில் வந்தது.
“அவன் சொல்றது சரி தான். கைல இருக்க மொத்த பணத்தையும் இதுல தான் போட்டுட்டோம். வெளிய வட்டிக்கு வாங்கி, கொழந்தை நகை கூட வச்சு சேர்த்த பணம். ஒன்னு ரெண்டு லட்சமா இன்னைக்கு நாளைக்குன்னு புரட்டி குடுக்க, ஒரு கோடி. அந்த பணத்துக்காக நாங்க பல வருஷம் பாடுபடனும் சார்”
ஆதங்கத்தோடு கேட்டான் பார்த்திபனும். அந்த மனிதரோ தன்னிடம் இத்தனை எடுத்து பேசும் இருவரையும் பொருட்படுத்தவே இல்லை. விடாப்பிடியாக நின்றார், ஏன் ஒரு வார்த்தை கூட அசைந்து கொடுக்கவில்லை.
“அதெல்லாம் எனக்கு தெரியாது பார்த்திபன். எனக்கென்னமோ இது சரி பட்டு வரும்னு தோணல பணத்தை வந்து வாங்கிக்கோங்க. நான் வேற யாருக்காவது இடத்தை பேசுகிறேன்”
“என்னையா பெரிய மனுஷன்னு பொறுமையா பேசிட்டு இருந்தா ரொம்ப தான் பண்ற, குடுத்த காசை இல்லனு வாய் கூச்சமா பேசுற உன்கிட்ட இனிமே பேச்சுக்கே இடம் இல்ல. எப்படி எங்க காசை வாங்கனு எனக்கு தெரியும். டேய் பார்த்திபா போலீஸ் போகலாம்டா” ஆவேசமாய் முறுக்கிக்கொண்டு வந்தான் விஷ்ணு.
error: Content is protected !!