கரைந்தேன் மெல்ல தொலைந்தேனே அத்தியாயம் -7
கரைந்தேன் மெல்ல தொலைந்தேனே அத்தியாயம் -7
வாணியின் கணவன் தினகரன் தன் அம்மாவோடு இல்லாமல் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தான்.அவனுக்கு இன்னும் ஒரு சகோதரன் இருந்ததால் அவனோடு அவன் அம்மா இருந்தார்.
Advertisement
பாவை சேர்ந்திருந்த நிறுவனத்தில் மூன்று மாதங்கள் சென்று இருந்தது.பாவைக்கும் அவளுடன் வேலை பார்க்கும் மற்றவர்களுக்கும் சேர்த்து ஒரு அணியாக உருவாக்கி அவர்களுக்காக அந்த நிறுவனம் தலைமை இடமான தென் கொரியாவிலிருந்து ஒரு நபரை அனுப்பி அவர்களுக்கு பயிற்சி அளிக்க இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது.
அதைப் பார்த்து பாவையுடன் வேலை செய்யும் விமலா “ஹேய் பாவை மெஸேஜ் பார்த்தியா?”
Advertisement
Advertisement
“ம்ம்… பார்த்தேன்”
விமலா “எனக்கு ரொம்ப எக்ஸ்சைன்ட்மெண்ட்டா இருக்கு ஆளு பார்க்க எப்படி இருப்பாங்கன்னு நினைக்கிறே?”
Advertisement
“இதுல என்ன இருக்கு? இப்போ நம்ம வயசான கொரியன் தாத்தாவை பார்க்கிறோம் அடுத்து அதை விட கொஞ்சம் வயசு குறைந்த கொரியனை பார்க்க போறோம் இல்லை அதே தாத்தாவாகவும் இருக்கலாம் அதானே” என்றாள் அசால்ட்டாக…
அதைக் கேட்டு அதிர்ச்சியான விமலா “ஹேய் என்ன இப்படி சொல்லிட்டே? என்னோட ரொம்ப நாள் கனவு நிறைவேறினால் நல்லா இருக்கும் தெரியுமா?”
இவளோ ஆர்வமாய் “என்ன கனவு?”
“எனக்கு ஒரு கொரியன் பையனைப் பார்த்து பேசி லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும் ஆசையா இருக்கு” என்றாள் சிலாகித்துக் கொண்டே…
அதைத் கேட்ட பாவையோ முகத்தை கேள்விக் குறியாக வைத்துக் கொண்டு “என்ன? நம்ம ஊர்ல பசங்களுக்கா பஞ்சம் அங்கேப் பார் கண்ணுல கண்ணாடி கன்னத்துல தாடி மீசைன்னு இருக்கிற நம்ம பசங்களுக்கு என்னடி குறை?”
அவளோ “ம்ஹீம் நீ சொல்றது எல்லாம் சரி தான் ஆனால் கே – டிராமா ,கே – பாப் பாடல்கள் பார்த்து நான் அப்படியே விழுந்துட்டேன் தெரியுமா?”கனவுலகில் மிதந்தபடி சொன்னாள்.
“என்னது கே-டிராமா பாப் ?” புரியாமல் கேட்க…
விமலா அதிர்ச்சியாகி “என்னது கே டிராமா பாப் பாடல்கள் ன்னா என்னன்னு தெரியாதா? பாவை எந்த உலகத்துல இருக்கிற இப்போ என்ன டிரெண்ட்டிங்ன்னு தெரியாதா?” என்றாள்.
பாவையோ “அட ஏதோ பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி பேசுற? எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் கிடையாது நமக்கு எப்பவும் தமிழ் பாடல்கள் தான்” என்றாள்.
விமலா விடாப்பிடியாக “எனக்காக கே டிராமா உலகத்துக்குள்ள போயிட்டு வாயேன் மிஸ் பண்ணிட்டோம்னு நினைப்பே பாவை அதுல வர்ற ஹீரோஸ்லாம் ஹீரோயினை அப்படி பார்த்துக்குவாங்க தெரியுமா? அந்த கைன்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.
பாவை “எப்படியோ உனக்கு சப்பை மூக்கன்ஸ்ஸா பிடிச்சிருக்கு என்ஜாய் பார்க்கலாம் நாளைக்கு யார் வர்றாங்கன்னு”என்று அவர்களுடைய பேச்சுவார்த்தை முடிந்து இருந்தது.
விமலா அதோடு விடாமல் சில முக்கியமான நாடகங்களின் பெயர்களை அனுப்பி இருந்தாள்.
சிறிதுநேரம் பார்க்கலாம் என்று நினைத்து இருந்தவள் அவள் சொன்ன நாடகங்களை பார்க்க ஆரம்பித்த இருபது நிமிடங்களிலேயே தூங்கிப் போனாள்.
இரவு நேரம் மணி பன்னிரெண்டை தாண்டி இருக்க அவள் அசதியால் தூங்கிப் போனாள்.மறுநாள் காலையில் புது பயிற்சியாளருக்காக அலுவலகத்திற்கு சீக்கிரமே செல்ல வேண்டி இருந்தது.
ஆனால் அன்று காலையில் வாணி தன் கணவனோடு வீட்டிற்கு வந்தாள்.அங்குள்ள
மருத்துவமனையில் தன்னை மருத்துவரிடம் காட்ட வந்திருந்தாள்.அதனால் பாவை வாணியிடமும் அவளின் கணவன் தினகரனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய அத்தான் தினகரன் எப்போதும் கலகலப்பாக பேசுவார்.அவளை வம்பிழுக்க அவருக்கு பிடிக்கும்.வாணியின் அமைதியான குணத்திற்கு அப்படியே நேர்மாறான குணமுடையவர்.பெற்றவர்கள் இருவருக்கும் அவர்களுக்கு நல்ல ஒரு மருமகன் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.
இரண்டு பெண்பிள்ளைகள் இருந்த இடத்தில் தினகரனை ரமணா தன் மூத்த பிள்ளையாக நினைத்தார்.
அலுவலகத்திற்கு தாமதமாக வந்த பாவை தன் இருப்பிடத்தில் போய் அமர்ந்தாள்.விமலாவிடம் கிண்டலாக “விமலா வந்திருக்கிற புது சப்பை மூக்கனை பார்த்துட்டியா? எப்படி ஆளு நீ நினைச்ச மாதிரி இருந்தாங்களா எப்படி? என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
பாவைக்கு அடுத்து அமர்ந்திருந்த விமலா பாவையை அதிர்ச்சியாகப் பார்க்க அவளோ விமலாவிடம் “என்ன அப்படியே விழுந்திட்டே போல இப்பவே முகத்தில் வேற லெவல் ரியாக்ஷனோடு இருக்க?” என்று சிரித்தாள்.
விமலா “சார்” என்று எழுந்துக் கொண்டாள்.பாவை திரும்பி பார்க்க அங்கே உயரமாக ஒல்லியான தேகத்தோடு பார்மல் சட்டையோடு அங்கே நின்றிருந்தான் அவன்.
பாவை பதறியபடி எழுந்து நிற்க அவனோ எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் ஆங்கிலத்தில் “நீங்க தான் பாவையா?”
அவள் ஆமாம் என்று தலையசைத்ததும் “அன்னியாங்சேயோ – வணக்கம்” என்று தலையை தாழ்த்திச் சொன்னவன் “நான் கிம் சியோ ஜீன்” என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்தவன் தன் அறைக்கு வரச் சொன்னான்.
அவன் அங்கிருந்து சென்றதும் பாவையோ விமலாவை ஒருவித கலக்கத்தோடு பார்க்க அவளும் அந்த நிலைமையில் தான் இருந்தாள்.பாவை இம்முறை கதவைத் தட்டிக் கொண்டு உள்ளேச் சென்றாள்.
அவனது இருக்கையில் அமர்ந்திருந்தவன் அவளை முறைத்துப் பார்த்தப்படி ஆங்கிலத்தில் பேசினான்.
“கம்பெனில ஒரு இன்டர்னா இருக்கீங்க கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் இல்லை இன்றைக்கு சீக்கிரமா வரச் சொல்லி இருந்தும் பர்ஸ்னல் வொர்க் இருக்குன்னு கவலை இல்லாமல் மெஸேஜ் பண்ணுறீங்க அதோட லேட்டா வந்தும் என்னை சந்திக்காமல் வொர்க்கை பார்க்காமல் அரட்டை அடிச்சு டைம் வேஸ்ட் செய்துட்டு இருக்கீங்க” என்று வெளியில் நடந்துக் கொண்ட முறைக்கு அப்படியே மாற்றமாக அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
பாவை என்னச் சொல்வதென்று தெரியாமல் அப்படியே நின்றாள்.அவன் பேசி முடிக்கவும் இவளோ வேறு வழியில்லாமல் “சாரி சார்” என்றாள்.
அவனோ அதை எல்லாம் கவனித்தில் கொள்ளாமல் காருக்கான பாகங்களின் இறக்குமதியான விவரங்களையும் இதுவரை உபயோகித்த விவரங்கள் மேலும் தேவையுள்ள பாகங்கள் என அனைத்து விவரங்களையும் கொண்டு வரச் சொன்னான்.
“சார் எப்போ ரிப்போர்ட் தரனும்?”
“இன்றைக்கு”
“சார் இன்னைக்கு எப்படி தர முடியும் நிறைய வொர்க் இருக்கு”
“தெரியுதுல்ல எவ்வளவு சீக்கிரம் தர முடியுமோ அவ்வளவு வேகமாக தாங்க” என்றான்.
பாவையால் எதுவும் பேச முடியவில்லை.அமைதியாக வெளியே வந்தாள்.தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
அவளுடன் பணிபுரியும் மற்றவர்களும் அந்த நிலைமையில் தான் இருந்தனர்.உணவு இடைவேளைக்காக எல்லோரும் வெளியில் சென்று இருக்க பாவையால் எங்கும் செல்ல முடியவில்லை.விமலாத் தான் அவளுக்கு மாதுளைச் சாறும் பிரெட் சாலட் ஒன்றும் வாங்கிக் கொடுத்தாள்.
அதை சாப்பிட்டப்படியே தன் வேலையைத் தொடர்ந்தாள் பாவை.தன் இருப்பிடத்தில் இருந்தபடி கண்காணிப்பு கேமராவில் எல்லாவற்றையும் பார்த்தபடி தன் வேலையைத் தொடர்ந்தான்.
மாலை நேரம் ஆறு மணியைத் தாண்டி இருந்தது.எல்லோரும் வேலை முடிந்து செல்ல பாவை அவள் எடுத்திருந்த இரண்டு மணிநேர விடுப்பிற்கும் சேர்ந்து வேலை இருந்தது.
விமலா பாவையிடம் “பாவை நான் உனக்காக வெயிட் பண்ணட்டுமா?”
“வேண்டாம் விமலா அந்த சப்பை மூக்கன் உன்னை இங்கே பார்த்து எதாவது வொர்க் கொடுத்தால் என்னச் செய்ய? அதனால நீ கிளம்பு அப்பாக்கு நான் மெஸேஜ் பண்ணிட்டேன் அவரு வந்து என்னை அழைச்சுட்டு போவாங்க” என்றாள்.
விமலா “ஓகே பாவை பார்த்து இருந்துக்கோ நான் கிளம்புறேன் கிம் சார் இங்கே தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன்” என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.
பாவையோ “சார் இருந்தாலும் ஓகே இல்லைன்னாலும் பரவாயில்லை என்னோட வேலையை நான் சரியா செய்யனும் அதோட கொரியன்ஸ்னா ரொம்ப கைன்ட்டா இருப்பாங்கன்னு சொன்னே விமலா இப்போ பாரு வந்த முதல் நாளே எல்லோருடைய பெண்ட்டை நிமித்துட்டாரு எந்த நாட்டுக்காரங்களாக இருந்தால் என்ன? மனசுல அன்பும் கருணையும் இருந்தால் எல்லா மக்களும் அழகுதான் இதை நான் சொன்னால் ஏத்துக்க மாட்டே இப்போ நீயே புரிஞ்சுப்பேன்னு நினைக்கிற” என்று அவள் உதடுகள் பேசினாலும் கைககள் தன் வேலையை சரியாகச் செய்துக் கொண்டிருந்தன.
இதை எல்லாம் வெளியிலிருந்து உள்ளே வந்த கிம் சியோ ஜீன் எல்லாவற்றையும் கேட்டான்.அவனுக்கு தமிழ் பேசுவது ஓரளவு புரியும்.ஆனால் பேசுவதற்கு அந்த வார்த்தைகளின் உச்சரிப்பு சரியாக வராமல் இருக்க அவன் பேசுவதில்லை.
சிறுவயதில் அவன் அப்பாவோடு அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதால் அவனுக்கு தெரியும்.இவை எதைப்பற்றியும் தெரியாமல் தோழிகள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
அவன் உள்ளே வேகமாக வர இருவரும் ஒருநொடி அப்படியே பயந்து போயினர்.எங்கே அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டிருப்பானோ? என்று விமலா பயந்து பாவையிடம் கேட்க அவளோ “ஹேய் எனக்கு தெரிஞ்சு அவருக்கு தமிழ் தெரிய வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன் அதனால கவலைப்படாதே! விமலா அந்த சப்பை மூக்கனுக்கு எதுவும் தெரியாது” என்றாள் கிண்டலாக…
விமலாவோ “ஏய் கிம் சாருக்கு மூக்கு நல்ல நீளமாகத் தான் இருக்கு அப்புறம் ஏன் சப்பை மூக்குன்னு சொல்றே” என்று தன் சந்தேகத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் கேட்ட கேள்விக்கு தன் தலையின் மேல் கைவைத்தவள் “முதல்ல நீ கிளம்பும்மா துணைக்கு இருக்கேன்னு நாளைக்கு மார்னிங் பிரேக் பாஸ்ட் இங்கேயே சாப்பிட வைச்சுடாதே” என்று தன் வேலையில் கவனம் செலுத்தினாள்.
கிம் அலுவலகத்தை விட்டுச் செல்லாமல் கோப்புகளை எடுத்து சரிபார்த்துக் கொண்டிருந்தான்.ஒரு மணி நேரம் கடந்து இருக்க இருக்கையில் இருந்து எழுந்தவள் கைகளை முறுக்கி விட்டு சுற்றிப் பார்க்க கிம் அவளுக்கு எதிரே இருந்த அலமாரியில் ஏதோ தேடிக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்து அவனிடம் ‘என்ன வேண்டுமென்று கேட்கலாமா?’ என்று நினைத்தவள் ‘’வேண்டாம்’ என்று முடிவெடுத்து விட்டு தன் வேலையை பார்க்கச் சென்றாள்.இருந்தாலும் அந்த அலமாரியின் கோப்புகளை பற்றிய விவரங்கள் இவளுக்கு தெரியும் என்பதால் வேறு வழியில்லாமல் அவனிடம் சென்று ஆங்கிலத்தில் “சார் எதாவது ஹெல்ப் வேணுமா?”
அவளை பார்த்தவன் “இங்கே அலமாரியில் இருக்கிற பைல்ஸ் டீடெய்ல்ஸ் பத்தி தெரியுமா?”
“எஸ் சார் இதோட செக்ஷன் ஆபிஸரோடு நான் அசிஸ்டென்ட்டா இருந்து இருக்கிறேன் நீங்க எந்த பைல்னு சொன்னா நான் எடுத்து தரேன்” என்றாள்.
அவன் விவரங்களைச் சொல்ல இவள் உடனே கோப்புக்களை எடுத்துக் கொடுத்தாள்.திரும்பவும் தன் வேலையில் மூழ்கியவள் அவன் சொன்ன விவரங்களில் முதலாக இறக்குமதி விவரங்களை அடங்கிய கோப்புகளை அவனுக்கு அனுப்பினாள்.
மற்ற விவரங்களை அவர்களின் தொழிற்சாலை உள்ள இடத்திற்கு நேரில் சென்று விவரங்களை கேட்டு கோப்புகளை தயார் செய்வதாக குறுஞ்செய்தி அனுப்பினாள்.அதைப் பார்த்த அவனோ சரியென்று பதில் அனுப்பினான்.
அலுவலகத்தை விட்டு பாவை வெளியே வந்து மின் தூக்கியில் செல்வதற்காக காத்திருக்க அங்கே கிம் வந்தான்.மின் தூக்கி வரவும் இருவரும் ஒன்றாக உள்ளே சென்றனர்.
பாவை அப்பொழுது தான் கிம்மை உற்று நோக்கினாள்.நேற்று அவள் பார்த்த கே- நாடகத்தில் வந்திருந்த கதாநாயகனைப் போன்ற தோற்றத்தில் ஓரளவு பொருத்தமாய் இருப்பதாக இவள் அவனை அளவெடுத்து பார்த்துக் கொண்டிருக்க…
அவனோ ‘இந்தப் பெண் ஏன் தன்னை இப்படி பார்க்கிறாள்?’ என்று அவளை உற்றுப் பார்த்தான்.அவன் அவளை பார்க்கிறான் என்று தெரிந்து பார்வையை திருப்பிக் கொண்டாள்.முதலில் இவள் இறங்கி விட்டு தன் அப்பாவிற்காக அலுவலகத்தின் வாயிலில் காத்திருந்தாள்.
அடித்தளத்திற்கு சென்று தன் காரை எடுத்து விட்டு வாயிலில் வந்தவன் பாவை நிற்பதைப் பார்த்து “காரை நிறுத்தியவன் கண்ணாடியை இறக்கி விட்டு பாவை அழைக்கும் நேரம் பாவையின் தந்தை ரமணா இருசக்கர வாகனத்தில் வந்து நின்றார்.
அவரைப் பார்த்து பாவை புன்னகையோடு “அப்பா என்ன இவ்வளவு லேட்டாகிட்டீங்க பாருங்க எனக்கு கால் வலிக்குது” என்று பொய்யாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினாள்.
அதைக்கேட்ட ரமணாவோ “டிராபிக்மா அதான் லேட்டு” என்று மகளை அழைத்துக் கொண்டுச் சென்றார்.அங்கே காரை நிறுத்தி கிம் கவனித்தது எல்லாம் பாவை அறியாத விஷயங்கள் ஒன்று. இவனின் நான்கு சக்கர வாகனமும் தன் பயணத்தை தொடர்ந்தது.
வாணிக்கு நாள் தள்ளிப் போய் இருக்க மருத்துவமனையில் காட்டினாள்.ஆனால் அவள் நினைத்தது போல் இப்போது எதுவும் கருவுற்று இருக்கவில்லை.திருமணம் முடிந்து மாதங்களே ஆகி இருப்பதால் இன்னும் சில மாதங்கள் காத்திருக்கலாம் என்று மருத்துவர் பரிந்துரைத்தார்.இதை நினைத்து வாணி கவலையில் இருந்தாள்.
செல்வியோ மகளிடம் “கொஞ்ச நாள் போனால் எல்லாம் சரியாகிடும் வாணி கவலைப்படாதே கூடிய சீக்கிரம் நல்ல செய்தி வரும்” என்று அவளுக்கு ஆறுதலாகப் பேசினார்.பாவைக்கும் வீட்டில் நடக்கும் விஷயங்கள் பற்றி தெரியும்.ஆனால் எதையும் தெரிந்துக் கொண்டது போல் காட்டிக் கொள்ள மாட்டாள்.
மறுநாள்…
வாணி தன் கணவன் வீட்டுக்குச் சென்றாள்.பாவையால் அவளோடு இருக்க முடியாமல் வேலைக்கு செல்ல வேண்டி இருந்தது.
பாவை தன் இருக்கையில் போய் அமர்ந்துக் கொண்டவளுக்கு இன்று நகரத்தை விட்டு வெளியே அமர்ந்திருந்த அவர்கள் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலைக்கு செல்ல வேண்டி இருப்பதால் அதற்கான அனுமதியை கிம்மிடம் வாங்குவதற்காக அவனுடைய அறைக்குச் சென்றாள்.
அவனும் எங்கேயோ செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தான்.பாவையைப் பார்த்து ‘’என்ன விஷயம்?’ என்பதுபோல் அவனின் பார்வை இருந்தது.
“சார் இன்னைக்கு பேக்டரி போகனும் நான் போய் லெஜ்ஜர்லாம் பார்த்தால் தான் தெரியும் சார்” என்றாள்.
உடனே அவன் “நானும் அங்கே தான் போறேன் நீங்க என்கூட வந்துடுங்க ஒன்றாக போகலாம்” என்றான்.
பாவைக்கு இந்த விஷயம் சரியாக வருமா? என்று தெரியவில்லை.இருந்தாலும் வேறு வழியில்லாமல் சரியென்று ஒத்துக் கொண்டாள்.
விமலாவிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு கிம்முடன் சென்றாள்.விமலா “பாவை உனக்கு செம சான்ஸ்டி ஹான்ஸ்ஸம் பாஸோட தனியா டீரிப் ஜாலி தான்”
“ஐயோ உன் எண்ணத்தை என்னச் சொல்ல? அப்பவும் எதாவது வேலை சொல்லுவாங்களோன்னு யோசிச்சு இருக்கேன்” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே வரும் பொழுது கையில் மடிக்கணினியை எடுத்து வரச் சொன்னான்.
அப்பொழுதே பாவைக்கு புரிந்து போனது.எதாவது ஒரு வைத்திருப்பான் என்று நினைத்தவள் அதை விமலாவிடமும் சொல்லிச் சென்றாள்.அவனே காரை ஓட்டுவதால் முன்னால் அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.
இரண்டு மணிநேர அவனோடு பயணம் செய்யும் அந்த நேரத்திலும் அவளுக்கு இன்னொரு வேலையை கொடுத்திருந்தான் கிம்.
அதைக்கேட்டு மனதில் புலம்பியபடி காரினுள் மடிக்கணினியில் வேலைப் பார்த்தபடி வந்தாள்.இதற்கிடையில் விமலாக்கு வேற குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.
“உன் ஹான்ஸெம் பாஸ் டிராவல்ல கூட வேலை வாங்கி கொல்லுறாரு” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.அதைப் பார்த்து சோகமான இமோஜி ஒன்றை அனுப்பி இருந்தாள் விமலா.
வண்டி சீரான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது.அவள் வேலையை முடித்து விட்டு அவனிடம் காட்டி சரியென்று ஒப்புதல் பெற வேண்டி இருந்தது.அதனால் அவன் புறம் திரும்பி “சார் வொர்க் முடிஞ்சிடுச்சு நீங்க செக் பண்ணீங்கன்னா மெயில் சென்ட் பண்ணிடுவேன்” என்றாள் முகத்தை சிடுசிடுப்பாக…
அவனோ அதை எல்லாம் கவனிக்காதது போல் “நான் செக் பண்ற டைம்ல உங்களால காரை ஓட்ட முடியுமா?”
அவளோ அதிர்ச்சியாகி “சார் எனக்கு கார் ஓட்டத் தெரியாது நாம வேணும்னா பக்கத்தில் இருக்கிற எதாவது காபி ஷாப்ல
கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு நீங்களும் செக் செய்துட்டு போகலாமே சார்” என்றாள்.
அவள் சொல்வதும் அவனுக்கு சரியென்று தோன்ற போகும் வழியினில் ஒரு கடையைப் பார்த்து நிறுத்தினான்.
இருவரும் உள்ளே நுழைந்தனர்.அவன் காபிக்குச் சொல்லி இருக்க இவளோ தேநீரும் உடன் சேர்த்து சாப்பிட பிஸ்கட்டும் ஆர்டர் செய்தாள்.அவனிடம் மடிக்கணினியைக் கொடுத்து விட்டு எழுந்துச் சென்று விட்டாள்.
முகத்தை கழுவி விட்டு கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் நேராக வந்து எதிர்புறமாக இருக்கையில் அமர்ந்தாள்.சுற்றி இருந்தவர்களின் பார்வை இவர்கள் இருவரும் மீதும் இருந்தது.அதை எல்லாம் கவனிக்காதது போல் இருந்தாள் பாவை.
அவனின் கவனம் முழுவதும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சலில் இருக்க படித்துக் கொண்டிருந்தான்.இருவருடைய சிற்றுண்டியும் பணியாள் வந்து கொடுத்து விட்டு இருக்க அவனுக்காக காத்திருக்காமல் பாவை தன் தேநீரை எடுத்து பிஸ்கட்டில் தேநீரை மூழ்க வைத்து இரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
திடீரென்று தன் பார்வை விலக்கி நிமிர்ந்து பார்த்தவன் பாவை தேநீரை குடிப்பதை பார்த்தான். எந்தவொரு அலட்டலும் இல்லாமல் அவள் எப்பொழுதும் போல் நடந்துக் கொண்டாள்.
அவனைக் கவர வேண்டும் என்பதற்காக எந்தவொரு செயலையும் செய்யாமல் தன் வேலையைப் பார்த்தாள்.இதே அவனுடைய நாட்டுப் பெண்களாக இருந்தால் பக்கத்தில் ஒரு ஆடவர்கள் இருந்தால் ரொம்ப கவனமாக நடந்துக் கொள்வார்கள்.அதோடு அருகில் இருப்பவர்கள் தங்களை கவனிக்குமாறு எதாவது செயலைச் செய்வார்கள்.அந்த மாதிரி எதுவும் செய்யாமல் அவள் அவளாகவே இருந்தது முதன் முதலில் பாவையின் பக்கம் கிம்மின் கவனம் செல்ல ஆரம்பித்தது.
