Skip to content
Post Views: 9,853
கள்ளி காட்டு காதலியே!
அத்தியாயம் 6
“ ஏப்பா ஏய், ஆம்பளை பசங்க எல்லாம் பின்னாடி பாதுகாப்புக்கு நில்லுங்க, பொம்பளை பிள்ளைகளை முன்னாடி விடுங்க…”
அமைச்சர் வந்து விட்டார். ஊரின் பெரிய கை பேச, மற்றவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்து நின்றார்கள். பத்து நிமிடத்தில் தலைவர் கிளம்பி விட, பசங்க பாதுகாப்பாக தன் ஊர் பிள்ளைகளை அழைத்து சென்றார்கள்.
Advertisement
பிரபா, விக்ரம் என்ற ஒருவன் இருப்பது போல கூட காட்டி கொள்ள வில்லை. அவன் திசைக்கே திரும்ப வில்லை. ஆரம்பத்திலேயே தன் மனதை கட்டு படுத்தி கொண்டால், தேவையில்லாத வில்லங்கத்தை தவிர்க்கலாம் அல்லவா.
விக்ரம் பார்வை அவளையே சுற்றி வர, மதன் தான் சலித்து கொண்டான்.
பிரபாவை அழைத்து செல்ல கலை செல்வியே வந்து விட்டார். அந்த கூட்டத்திற்குள் மகளை காணாமல் தேட,
Advertisement
பார்த்த அருண், “அம்மா இங்க, இந்த பக்கம் வாங்க. நம்ம பிள்ளைக எல்லாம் இங்க தான் இருக்காங்க…”
Advertisement
“நில்லுங்கம்மா, வரட்டும். கூட்டம் அதிகம், உள்ள போகாதீங்க. வரிசையா தான் வருவாங்க…” என்றான் மதன்.
அவரை பார்த்த விக்ரம் டீ வாங்கி வந்தான்.
“இந்தாங்க அக்கா, டீய குடிங்க. வடை கொண்டு வரவா…” என்று நகர,
Advertisement
“வேணாம் தம்பி. டீ போதும், எண்ணெய் பலகாரம் எல்லாம் எடுக்க மாட்டேன்…” என்றவர்,
“போயிட்டு வரட்டுன்னு அனுப்பிட்டாலும், பொம்பளை பிள்ளை, கூட்டம் வேற அதான் ஓடி வந்தேன்…”
“சரிங்கக்கா, இருங்க ஆட்டோ வர சொல்றேன். அதுல போங்க…” என்ற விக்ரம் போன் எடுக்க,
“நாங்க எல்லாம் அம்மான்னு தான் சொல்றோம். உனக்கு என்ன அக்கா?…” மதன் கேட்க.
“டேய், அவங்களை பார்த்தா என் பெரிய அக்கா வயசு மாதிரி தான் இருக்கு. அதான் அக்கான்னு கூப்பிட்டேன்…”
“ஆமா, தம்பி. எனக்கு கொஞ்ச வயசு தான். சின்ன வயசுலே கட்டி கொடுத்துட்டாங்க…” என்றவர், மகள் வந்ததும் எழுந்து கொண்டார்.
விக்ரம் ஆட்டோ வரை உடன் வந்து அனுப்பி வைத்தான். பிரபா, சாதாரணமாக கூட பார்க்க வில்லை.
அடுத்து மூவரும் ஆலமரத்து ஐயனாரை பார்க்க சென்றார்கள். கடவுளை வணங்கி விட்டு, அங்கிருக்கும் மேடையில் படுத்து கொண்டார்கள்.
“கொஞ்ச நேரம் தூங்கணும் மச்சான்…” என்று மதன் சொல்ல,
அருண், “ஏண்டா, அவங்களை பார்த்தா உனக்கு பெரிய அக்கா நியாபகம் வருதா… யார் கிட்ட ரீல் விடுற…”
“ரீல் தாண்டா விட்டேன். அப்புறம் உங்களை மாதிரி அம்மான்னு சொல்லி, பிரபாவ எனக்கு தங்கச்சியாக்க சொல்றீங்களா?…” எகிறினான் விக்ரம்.
“இப்ப மட்டும் என்ன? அந்த ஊர்ல இருக்குற எல்லாரும் நம்மளை அண்ணன், தங்கச்சின்னு தான் பேசுவாங்க. நாமளும் அப்படி தான். அண்ணன், அக்கா, தங்கச்சின்னு சொல்றோம்… அப்படி பார்த்தா?…” நக்கலாக மதன் இழுக்க,
“ வாய மூடுடா நாயே!… அப்படி ஏதாவது சொல்லுவீங்கன்னு தான் அவங்களை அக்கான்னு சொல்றேன். அப்போ பிரபாவதி யாரு?…”
“யாரு?…” என்றான் மதன்.
“அக்கா மக என்னவோ, அதுதான் எனக்கு பிரபா…” என்று விக்ரம் சொல்ல,
“அட்ராசக்க, என் மச்சானுக்கு என்ன ஒரு தொலை நோக்கு பார்வை…” என்று அருண் கேலி பேச,
“வாய முடுடா பரதேசி. நீயே அவனுக்கு வாலுறுவி விடு… பார்த்த தான அரை மணி நேரம் பிள்ளையை காணலங்கவும் தேடி ஓடி வாராங்க. நம்ம வீட்டுலயும் பொம்பளை பிள்ளை இருக்கு, அடுத்த வீட்டு பிள்ளையை பார்க்கலாமா சொல்லு மச்சான்?…” என்று மதன் கோபமாக கேட்க.
“என் வீட்டு பிள்ளைக எல்லாம் எனக்கு அக்கா, தங்கச்சி மச்சான். அதான் அடுத்த வீட்டு பிள்ளையை பார்த்தேன்…” சாவகாசமாக விக்ரம் சொல்ல,
“டேய், வாய மூடுடா. சாமி இருக்குன்னு கூட பார்க்க மாட்டேன். வாயில எக்கு தப்பா வந்துரும். மாமன், மச்சான்றதுக்காக ரொம்ப தானடா என்னை படுத்துற…” என்ற மதன்,
“வாய் பேசுடி வாயாடி. அவங்க வீட்டு பிள்ளையை பார்த்தா சும்மா விடுவாங்களா?… பனை வெட்டுற கை. ஈசியா அருவா பிடிப்பான்…” என்று சொன்ன நொடி,
விட்டத்தை பார்த்து மல்லாக படுத்து பேசி கொண்டிருந்தவன், படாரென்று எழுந்து அமர்ந்தான்.
“ஏன் அவன் மட்டும் தான் அருவா தூக்குவான, நாம யார் மச்சான். நமக்கு கை இல்லை.எனக்கும் அருவா தூக்க தெரியும். ஜெய விக்ரமன் ஒத்தைக்கு ஒத்தை நிப்பான்…” விக்ரமும் எகிற,
“இது தான் மச்சான் நம்ம பைய புத்தின்றது. சமரசம்ன்னு ஒத்த வார்த்தை உன் வாயில இருந்து வந்துச்சா… நீ வெட்டுனா, நானும் வெட்டுவேன்னு நிக்கிற பாரு. அப்ப பிரச்சனை எங்க போய் முடியும்ன்னு நீயே யோசி…” என்ற மதன். கொஞ்சம் நிதானமாக,
“எந்த விட்டுலையும் அவங்க வீட்டு பொண்ணை பார்க்க விட மாட்டாங்க. பொண்ணுன்னா…”
“பொண்ணுன்னா என்னடா? பொண்ணுன்னா, பொண்ணு மட்டும் தான். அத்தோட முடி. அங்க வேற எந்த அர்த்தமும் கிடையாது. மிலிட்டரிலயே நாட்டை பாதுகாக்க பொண்ணுக துப்பாக்கிய தூக்கி நிக்கிறாங்க, பார்லிமென்ட், ஒலிம்பிக், விண்வெளின்னு ஆம்பிளைகளுக்கு சவால் விடுறாங்க. இவன் என்னன்னா பெண் என்பவள் அப்படின்னு எனக்கு பாடம் எடுக்குறான் மச்சான்…”
“மச்சான் கடவுள் ஆண், பெண் அப்படின்ற இனத்தை படைச்சதே சேர்ந்து வாழத்தான். நான் ஒரு ஆண், அவள் ஒரு பெண். எங்களுக்கு பிடிச்சு இருக்கு சேர்ந்து வாழ நினைக்கிறோம். இது தப்புன்னா நீ கை நீட்டி கேள்வி கேட்க வேண்டியது இதோ கம்மா கரையை காத்து நிக்கிற ஐயனாரை தான் கேட்கணும். ஏன்னா, இப்படி ஒரு தியரிய கொண்டு வந்ததே கடவுள் தான். நான் வெறும் அம்பு மச்சான், ஏவுனது கடவுள் மச்சான். ஒரு பொண்ணா பார்த்தா ஆணுக்கு காதல் வர தான் செய்யும். அப்படி செட் பண்ணி படச்சது கடவுள் மச்சான். நீ குற்றவாளின்னு கை நீட்ட வேண்டியது சாமிய தான்…” என்று விக்ரம் கண்ணை மூட,
“எப்படி எல்லாம் பேசுறான் பார் மச்சான். கடைசில சாமியவே குத்தம் சொல்லிட்டான்டா…” பரிதாபமாக மதன் சொல்ல,
“அவன் வாய் பத்தி தான் உனக்கு தெரியுமில்ல, அப்புறம் எதுக்குடா அவன் கிட்ட வாய குடுத்து வாங்கி கட்டுற… பேசாம இரு, என்ன நடக்குதுன்னு பார்ப்போம். நல்ல நட்பா துணை நிப்போம்…” என்று அருண் சொல்ல, மதனுக்கும் சரி தான் என்று தோன்றியது.
விக்ரம் விவரமில்லாதவன் அல்ல. அவனால் சமாளிக்க முடிந்தால், இவனுக்கு வேற என்ன வேணும், சேர்ந்து நல்ல முறையில் வாழ்ந்தால் சரி தான்.
மூவரும் கொஞ்சம் கண் அசந்து உறங்க, அவர்கள் காதோரம் வண்டி சத்தம் கெட்டது. யார் என்று முதலில் பார்த்தது அருண் தான். வந்திருந்தது விக்ரமின் முதல் அக்கா கணவர் செல்வ குமார்.
“டேய், மச்சான். உங்க பெரிய மாமா வந்திருகார்டா…” என்று சொல்ல,
சோம்பலாக கண் விழித்தான், “என்ன மாமாவா? எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க…” என்று எழுந்து விசாரிக்க,
படார் என்று விக்ரம் கன்னத்தில் ஒரு அறை விட்டார் செல்வம். அதிர்ச்சி குறையாமல் விக்ரம் பார்க்க,
அவனை முழுதாக எழுந்து கொள்ள கூட விடாமல் தொடர்ந்து அடிக்க ஆரம்பித்தார் செல்வம்.
பதறி போன அருண், “டேய் மதனு, எந்திரிடா. நம்ம மச்சான் அடி வாங்குறான்…”
“என்ன! யாரடா அடிக்கிறது…”” என்ற மதன், அங்கு செல்வ குமாரை பார்த்து திகைத்தாலும், அடுத்த நொடி இருவரும் ஓடி போய் தடுத்தார்கள்.
தடுப்பவர்களை தள்ளி விட்டு செல்வம் மேலும் முன்னேற, கோபம் வந்தது மதனுக்கு…
“நிறுத்துயா… அட, நிறுத்துன்னா. என்ன ஓவரா சலம்புற. ஏதோ பொண்ணு குடுத்துருக்கோம்ன்னு தான் அமைதியா போறோம். எங்க ஊருக்கு வந்து எங்க மேலயையே கை வைப்பியா… நாங்க மூணு பேரு, நீ தாங்குவியா? என்னன்னு சொல்லாம கூட அடிக்கிற…” எகிறினான் மதன்.
“ஏண்டா டேய், நான் அவனுக்கு அக்கா புருசன் மட்டும் தான. என் தாய்மாமன் மகன்டா. நான் தூக்கி வளத்தவன். அவன் மேல கை வைக்க எனக்கு உரிமை இல்லையா…” ஆதங்கமாக செல்வம் கேட்க.
“உரிமை இருக்கு தான். என்ன விளக்கெண்ணைக்கு அவன் மேல கை வைக்கிற. மொத அதை சொல்லு…” என்று காட்டமாக அருண் கேட்டான்.
பின்னே, நட்பாக நாங்கள் இருவர் உடன் இருக்க, என் நண்பன் மீது கை வைக்கலாமா…
விக்ரமை கோபமாக பார்த்த செல்வம், “துறை லவ் பண்றானாம். அதுவும் கள்ளி காட்டு பிள்ளையை…”
இந்த முறை கோபம் விக்ரமுக்கு…
“அதுவா விசயம். அதுக்கா என்னை அடிச்ச. ஆமா, அவளை தான் நான் கட்ட போறேன். அதுக்கு என்ன இப்போ…” என்னவோ என்று அடி வாங்கியவன், இது தான் என்ற பின் நிமிர்ந்து கொண்டான்.
“என்ன தெனாவட்டா? ஒழுங்கா அந்த பிள்ளையை மறந்திடு, இல்லை நடக்கிறதே வேற… உனக்கு காதலிக்க வேற ஆளே இல்லையா மாப்பிள்ளை. நிறைய பிரச்சனை வரும், நீ தாங்க மாட்ட. வெட்டியா உன் வாழ்க்கையும் கெட்டு, அந்த பிள்ளை வாழ்க்கையும் கெடும்…”
“அதை நான் பார்த்துக்கிறேன் மாமா. என்ன பிரச்சனை வந்தாலும் என்னால சமாளிக்க முடியும்…” திமிராக தான் பதில் சொன்னான் விக்ரம்.
“வேண்டாம் மாப்பிள்ளை நான் சொல்றத கேளு. குடி முழுகி போயிடும். காலத்துக்கும் நெஞ்சுல நரகத்திதை சுமக்கிற மாதிரி வலிக்கும். மாமா, உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன்…” செல்வமும் எடுத்து சொல்ல,
“அது சேராம பிரிஞ்சு போனாத்தான் அந்த வலி மாமா. நாங்க தான் பிரிய மாட்டோமே. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் போராடுவேன், யார் எதிர்த்தாலும் துணிஞ்சு தான் நிப்பேன்…” தைரியமாக தான் விக்ரம் பேசினான்.
“டேய் கூடவே சுத்துறீங்க தான. நீங்களாவது சொல்லி தொலைங்கடா. அவன் தான் காதல் மயக்கதுல பிணாத்துறான். உங்களுக்கு நிலவரம் புரியலையா?…” அவர்களிடமும் எகிறினார் செல்வம்.
“அவன் ரொம்ப விருப்ப படுறான். விடுங்க அண்ணா பார்த்துக்கலாம். இப்போ எவ்வளவோ முன்னேறியாச்சு… படிச்ச மக்களும் இருக்காங்க, புரிஞ்சுப்பாங்க…” என்று அருண் சொல்ல,
“அப்படி எல்லாம் யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க. படிக்காத மக்கள் யார் தான் இருக்கா?… ஆனாலும் யாரும் ஒதுக்க மாட்டாங்க. வெட்டியா போகும் ரெண்டு பேர் வாழ்க்கையும்… இப்பவே விட்டுட்டு, வலி தான். ஆனாலும், காலம் எல்லாத்தையும் சரி கட்டும். ஆனா, ரெண்டு பேர் மனசுலயும் ஆசையும், எதிர்பார்ப்பும் வந்துட்டா… வலி, அதிகமான வலி மட்டும் தான் மிஞ்சும். அதுவும் தாங்க முடியாத வலியா தான் இருக்கும். தினம் தினம் சாகனும். ஒரு ஊர்ல ரெண்டும் பேரும் யாரோ போல தள்ளி நிக்குறது ரொம்ப கொடுமை. மாமா சொல்றத கேளு விக்ரம்…” தன்மையாக நிலவரத்தை எடுத்து சொல்ல,
“ம்கூம், அவ தான் மாமா. உறுதியா இருக்கேன். நிச்சயம் பின் வாங்க மாட்டேன். ஊரே வந்தாலும் வரட்டும். எனக்கும் அருவா எடுக்க தெரியும். ஒரு கை நானும் பாக்குறேன்…” நின்று விட்டான் விக்ரம்.
அங்கிருக்கும் ஒரு கல்லில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான் செல்வ குமார்.
“மாமா…” என்று விக்ரம் நெருங்க,
வருத்தமான புன்னகையோடு நிமிர்ந்த செல்வம் முகத்தில் அவ்வளவு வேதனை.
“என்னாச்சு அண்ணா…” என்று மதனும் கிட்ட நெருங்க.
“பதினாறு வருசத்துக்கு முந்தி நான் பேசுன மாதிரியே, என் மாப்பிள்ளை பேசுறான்…” என்று செல்வம் வேதனையாக சொல்ல,
“என்ன சொல்றீங்க…” அதிர்ந்து போய் மூவரும் கேட்டார்கள். ஏனெனில் செல்வகுமார், விக்ரமின் அத்தை மகன் மட்டுமல்ல, அவனின் அக்காவின் கணவரும் கூட.
“இவனை நான் தான வளர்த்தேன். அதான் என்னை மாதிரியே வளர்ந்து நிக்குறான் போல… உங்களை மாதிரி தான் நானும், படிச்சவன், நாகரீகமாக தான் யோசிக்கணும். அறியாமையில் இருக்க கூடாது. எல்லா மக்களையும் அனுசரிச்சு தான் வாழனும். அப்படி எல்லாம் புதுமையை தான் யோசிச்சேன்…” என்ற செல்வம் நிமிர்ந்து பார்த்து,
“மாமா நீதி வீட்டு தோட்டத்தை அப்போ நான் தார் பார்த்துகிட்டேன். அப்போ எல்லாம் கள்ளி காட்டுக்கு ரோடு இருக்காது. ஊரை சுத்தி தான் போகணும். இல்லைன்னா மெயின் ரோடு வந்து காய்கறி லோடு ஏத்த ஒத்தையாடி பாதையில தான் நடந்து வருவாங்க. அப்போ தான் பார்த்தேன்…”
“யாரை…” என்றான் மதன்.
“ரேவதி…” சொல்லும் போதே செல்வ குமார் கண்கள் கலங்கியது.
அதிர்ச்சி குறையாமல் பார்த்தான் விக்ரம். அவன் மனம், தன் அக்காவை தான் நினைத்தது.
செல்வம் தொடர்ந்தார், “வாடமல்லி கலர்ல தாவணி போட்டு, காலையில அஞ்சு மணிக்கே தக்காளி லோடு ஏத்த அந்த ஒத்தையடி பாதையில தான் நடந்து வருவா. இடுப்பை தாண்டி நிக்கும் கட்டை முடி. அந்த தக்காளி கூடையை தலையில வச்சு, செருப்பு கூட போடாம, வேகமா எட்டு வச்சு நடந்த வரும்…”
செல்வம் முகத்தில் லேசான ரசனை தோன்றியது. அது அவனது பசுமையான நினைவுகளை தூண்டியதோ என்னவோ, முகம் பிரகாசித்தது.
“சூரியன் உதிக்கும் போது கிழக்கு பக்கம் பார்த்தா, ரேவதி நடந்து வாராது தான் தெரியும். தினமும் நாள் எனக்கு அப்படி தான் விடியும். கலகலப்பான பெண். ஆனா அப்பாவி. உலக விவரம் ஒன்னும் தெரியாது. குடும்பம், வீடு, தோட்டம் மட்டும் தான். ரேவதி அவளுக்கான வட்டத்துல நிம்மதியா தான் இருந்தா… ஆனா, நான்… படிச்ச அறிவாளி அல்லவா. எனக்கு எல்லாம் தெரியும்ன்னு மமதை. படிச்ச எனக்கு மனுசங்க சமம்ன்னு புரிந்தது. அதான் படிக்காத மக்களை பத்தி நான் யோசிக்கவே இல்லை…”
“அமைதியா வாழ்ந்த அந்த பிள்ளையை சுத்தி வந்தேன். பயந்து ஒதுங்கும் போதும் விடாமல் துரத்தி காதலிச்சேன். ஆரம்பத்துல வேண்டாம்ன்னு சொல்லி அழுதா, இந்த பாவி எங்க கேட்டேன். காதல்… பித்து பிடிச்ச மாதிரி தான் திரிஞ்சேன். விடாம தொரத்தி, கொஞ்சி, கெஞ்சி சமாதானம் செஞ்சு அவ மனசுல என்னை பதிய வச்சேன்…” என்றவன் அமைதியாகி போக,
“அப்புறம் என்ன ஆச்சு?…” கேட்டது மதன் தான். விக்ரம் எதுவும் பேச வில்லை. அவன் மனதெல்லாம் தன் மாமன் காதலித்தான் என்பதிலேயே நின்றது.
அது அவனுக்கு அதிர்ச்சியும் கூட. ஏனெனில், இந்திராவுடன் நல்ல வாழ்க்கை தான் வாழ்கிறான். இரு ஆண் பிள்ளைகள், நல்ல வசதி என்று நன்றாக தான் உள்ளான். இதுவரை ஒரு சண்டை சத்தம் என்று அக்கா வீடு வந்ததில்லை. அந்தளவுக்கு நன்றாக பார்த்து கொள்ளும் தன் மாமனா காதலித்தது…
அதுவும் ரேவதி பற்றி பேசும் பொழுது அவன் கண்ணில் தோன்றிய பரவசமும், கண்ணீரும் தற்போதும் செல்வம், ரேவதியை மறக்க வில்லை என்பது போல தான் தோற்றம் கொடுத்தது.
செல்வம் தொடர்ந்தான், “அப்புறம் என்ன ஆகும். காதல் வளர்ந்துச்சு. ரேவதி என்னை முழுசா நம்புனா, அவ பயப்படும் போதெல்லாம் நான் தான் தெம்பு சொல்லுவேன். வீட்டுக்கு மெல்ல விசயம் போச்சு. யாரும் பெருசா யோசிக்கும் முன்ன நான், ரேவதியை கூட்டிட்டு ஓடிட்டேன்…” என்று சொல்ல,
“என்ன…” என்று அதிர்ந்து போனார்கள் மூவரும். அவர்களுக்கு இதெல்லாம் தெரியாது. விக்ரம் கண்ணை இருக மூடி கொண்டான். அவனுக்கு தன் அக்கா நினைப்பு மட்டும் தான்.
“அப்புறம்…” என்றான் அருண். அவன் மனதில் கூட பயம் வந்தது. ஏனெனில் இருவரும் சேர வில்லையே.
“வேலூர்ல தான் நான் படிச்சேன். அங்க இருக்குற பிரண்ட்ஸ் மூலம் தான் கரூர் போனோம். ரேவதியை தனியா தங்க வச்சேன். நாலு நாள்ல கல்யாணம் பேசினோம். ரேவதிக்கு நிறைய கனவு, ஆசை. முகமெல்லாம் பூரிச்சு போய் இருந்துச்சு. நான் வாட மல்லி கலர்ல அவளுக்கு சேலை எடுத்தேன். எல்லாம் சரியா தான் போச்சு. ஆனா, நான் ஒரு முட்டாள்…” என்றான் தொண்டை கமர,
“என்ன பண்ணீங்க…” என்று மதன் கேட்க.
“என் நண்பன்னு நல்ல பாண்டிய நம்பினேன். அவனும் எனக்கு உதவி செய்றத தான் சொன்னான். இப்ப மாதிரி, முன்ன போக்குவரத்து கிடையாது. எப்படியும் கண்டு பிடிக்க மாச கணக்காகும்ன்னு நினைச்சேன். ஆனா, நல்ல பாண்டி காட்டி கொடுத்துட்டான். ரெண்டு பேரும் மாட்டிகிட்டோம்…” என்ன முயன்றும் செல்வம் கண்களில் நீர் எட்டி பார்த்தது.
“ஒரே கலவரம் தான். எனக்கு நல்ல அடி. என்னை விட ரேவதிக்கு தான். நான் கத்தி கதறினேன், அவங்க கால்ல கூட விழுந்தேன். மாட்டை அடிக்கிற மாதிரி அவளை, என் கண் முன்னாடியே அடிச்சாங்க. ஒரு கட்டத்துல எனக்கு சுத்தமா தெம்பு இல்லை. கத்த கூட வார்த்தை வரல. அவ அடி வாங்குறது என் கண் மட்டும் பார்த்துச்சு. என் உசுரு துடிக்குது. ஆனா, அவளை என்னால காத்து நிக்க முடியலை. நான் பாத்துக்கிறேன், என்னை நம்புன்னு சொல்லி ஊரை விட்டு கூட்டி வந்தேன். கடைசில அவ துடிக்கிறத மட்டும் தான் என்னால பார்க்க முடிஞ்சுச்சு…”
செல்வம் கண்களில் நீர் நிற்காமல் வழிந்தது. இந்த நிமிடமும் நெஞ்சு துடிச்சது. அந்த இடத்தில் தற்போது நிற்பது போல நினைவு. கை, கால் எல்லாம் நடுங்கியது.
கட்டிய சேலை கிழிந்து, மாராப்பு ஒரு பக்கம் கிடக்க, உதடு, வாய் எல்லாம் இரத்தம் வழிந்து, நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் வலியில் சுருண்டு கிடந்த ரேவதியின் தோற்றம் கண் முன் நின்றது. முதுகில் கட்டையால் அடித்த முதல் அடிக்கு மட்டுமே அவள் அலறி சத்தம் கொடுத்தது. அடுத்தடுத்து அவள் அண்ணன் அடிக்கும் போது சுருண்டு போனாள்.
“நானே விட்டுட்டேன். காலத்துக்கும் காப்பேன்னு சொல்லி, கடைசில நானே கை விட்டேன். அந்த நேரம் எனக்கு வேற யோசனை தோணல, எப்படியாவது அவளை காப்பத்தனும்ன்னு மட்டும் தான் மனசு சொல்லுச்சு… ஆனா, தப்பு பண்ணிட்டேன். சாகட்டும்னு விட்டு இருந்தா கூட அவளுக்கு ஒரு விடுதலையா இருந்து இருக்கும். அவ வாழணும்ன்னு நான் நினைச்சது. அவளை நரகத்துல பிடிச்சு தள்ளுன மாதிரி ஆகி போச்சு…”
“ஏன், என்ன ஆச்சு. கள்ளி காடு தான அவங்க. இப்போ எங்க இருக்காங்க…” என்று அருண் கேட்க.
மற்ற இருவரும் பாரம் ஏறிய மனதோடு கேள்வியாக பார்க்க,
விக்ரம் கேட்டான், “இதற்கு எல்லாம் யார் காரணம்?…” அவன் மனதில் ஒரு கணிப்பு இருந்தது.
அவனை பார்த்து சிரித்த செல்வம், “நீ நினைச்சது சரி தான். இது எல்லாம் உங்க அப்பா தான் செய்தார்…”
மதனும், அருணும் அதிர்ந்து போய் விக்ரமை பார்க்க,
செல்வம் தொடர்ந்தார், “என்னை இங்க வரவே விடலை மாமா. எங்க அப்பாவும், மாமாவும் சேர்ந்து தான் ரேவதி அண்ணானுக்கு தகவல் கொடுத்து, எல்லாம் செய்தாங்க. திருச்சியிலே சொந்தக்காரங்க வீட்டுல தங்க வச்சு, அடுத்த மாசமே இந்திராவோட என் கல்யாணத்தை முடிச்சுட்டாங்க. அங்கேயே எங்களை குடியும் வச்சாங்க. திரும்ப நான் ஊருக்கு வர விடவில்லை…” என்று பெருமூச்சு விட்ட செல்வம்,
“ஒரு நொடியில வாழ்க்கை மாறி போச்சு. திரும்பி பார்த்தா என் மனைவியா இந்திரா இருந்தா. மாமன் மகள், எல்லாமும் தெரியும். எனக்கு துணையா நின்னா. காலம் ஓடுச்சு, நிதர்சனம் புரிய ஆரம்பிச்சது. காதல் மட்டும் வாழ்க்கை இல்லைன்னு புரிஞ்சது. இந்திராவும் என்னை புரிஞ்சுக்க, எங்க வாழ்க்கை ஆரம்பிச்சது. கார் தொழில் தொடங்கினேன், மனைவி, ரெண்டு பிள்ளைன்னு வாழ்க்கை நிறைவா போச்சு. ஒரு கட்டத்துல இது தான் சரின்னு கூட தோணுச்சு. அவங்க வட்டத்துக்குள் நிக்கிறது தான் நல்லதுன்னு நினைச்சேன்…”
“ஆனாலும், வாழ்க்கைக்கு இன்னொரு பக்கம் இருக்கு தான. என்னை மாதிரியே ரேவதி வாழ்க்கையும் நல்லா இருக்கும்ன்னு தான் நினைச்சேன். கொஞ்சம் கூட மாத்தி நினைக்கல. நான் முழுசா இந்திராவுக்கு மட்டும் தான்னு தோணுன அப்புறம் தான் சொந்த ஊருக்கே வர விட்டாங்க. ஆனா, அங்க ரேவதி?…”
“அவங்களுக்கு என்ன?…” பதறி போய் கேட்டான் அருண்.
“பதினெட்டு வயசுல என்னை நம்பி ஓடி வந்த பொண்ணு. யார் கூடவோ போய் நாலு நாள் இருந்துட்டு வந்திருக்கான்னு ரேவதி பேர் ஊர் முழுக்க கெட்டு போச்சு. யாரும் கல்யாணம் பண்ண முன் வரல. நம்ம ஊர் பத்தி தெரியாதா. நடத்தை கெட்டவன்னு முத்திரை குத்தி ஒதுக்கி வச்சுட்டாங்க. என் பிரெண்டோட தங்கச்சி வீட்டுல தான் ரேவதியை தங்க வச்சேன். என் விரல் நுனி கூட அவ மேல படல. ஆனா, ஊர் அவளை தப்பானவன்னு தான் பேசுச்சு. அவ திரும்ப வந்திருக்க கூடாது போல. ரெண்டு வருசம் படாத கஷ்டம்மெல்லாம் பட்டு இருக்கா…” செல்வம் சொல்ல,
மற்ற மூவருக்கும் ரேவதி நிலை புரிந்தது. அவர்களும் கிராமத்தில் தான் வாழ்கிறார்கள். எப்படி எல்லாம் பேசுவார்கள் என்று அவர்கள் அறிந்ததே…
“காதலிச்சா அதுல ஜெயிக்கணும், இல்லையா காதலிச்சது கூட ஒரு பொண்ணு வெளிய சொல்ல கூடாது. காதலிச்சு, அதுல தோத்தும் போய், அது வெளியவும் தெரிஞ்சா வாழ்கிற வாழ்க்கை நரகமாகும். அந்த நிலை தான் ரேவதிக்கு… அவ அண்ணன் அடிச்ச அடியில ஒரு பக்க கால் சொட்டையா போச்சு. யார் முன் வருவா கல்யாணம் செய்ய?…”
“ரெண்டு வருசம் பார்த்து ஒன்னும் அமையலன்னவும் ஒரு வயசான ஆளுக்கு ரெண்டாம் தாரமா கட்டி வச்சுட்டாங்க. இதுல கொடுமை என்னன்னா, இருவது வயசு ரேவதி, பதினேழு வயசு பையனுக்கு அம்மாவா போன. அதுக்கப்புறமாவது கடவுள் அவளுக்கு கருணை காட்டி இருக்கலாம். எங்க? ரேவதி கையில மூணு வயசு பெண் குழந்தையை கொடுத்துட்டு அந்த ஆள் போய் சேர்ந்துட்டான். இருபத்தி அஞ்சு வயசுலேயே ரேவதி வாழ்க்கை முடிஞ்சு போச்சு. இருக்குற கொஞ்ச சொத்தும் ஆண் வாரிசுகளுக்கு போயிருச்சு. ஒரு வீடு மட்டும் கொடுத்திருக்காங்க போல. அதுல தான் பிள்ளையை வச்சுகிட்டு கூலி வேலைக்கு போறா…” கண்ணீர் வழிய தன் கதையை சொன்ன செல்வம்,
“இப்போ சொல்லு விக்ரம் இந்த காதல் உனக்கு வேணுமா? உங்களை ஒதுக்கி வச்சு துரத்தி விட்டா கூட பரவாயில்லை. ஆனா, அப்படியும் விட மாட்டாங்க. தேடி வந்து சாகடிப்பாங்க. அக்கா மகனவே விடாத உங்க அப்பா, உன்னை மட்டும் விடுவாரா. அந்த பொண்ணு நிலைமையை நினைச்சு பாரு…”
“விக்ரம் என் வாழ்க்கை நல்லா இருக்கு. என் மனைவி, பிள்ளைகள்ன்னு நிம்மதியான வாழ்க்கை. ஆனா ரேவதி?… அவளோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்ன்னு குற்ற உணர்ச்சியில் ஒவ்வொரு நாளும் செத்துட்டு இருக்கேன். அவ நல்லா வாழ்ந்து இருந்தா எப்படியோ… என் கண் முன்ன ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்ட படும் போது என்னையும் அறியாம என் நெஞ்சு கொதிக்குது. வெளிய சொல்லவும் முடியாது, வெளிப்படையா உதவவும் முடியாது. என்னை நம்பி வந்த என் மனைவிக்கு நான் உண்மையா இருக்கணும். எந்த வழியும் தெரியாம, ரேவதி கஷ்டத்தை பார்த்து மனசுக்குள்ளே நரகத்தை பாக்குறேன். என் நிலமை உனக்கு வேணாம் விக்ரம்…”
“பத்து பேர் கூட ஒரு ஆம்பளை போனா கூட அவனுக்கு பேர் ஆம்பளை தான். காலம் போனா அவனை நல்லவன்னு கூட பட்டம் கொடுப்பாங்க. ஆனா, ஒரு பொண்ணுக்கு அப்படி இல்லை. ஒரு ஆண் கூட பேர் சேர்ந்து வந்தா போதும், அந்த பொண்ணை முத்திரை குத்திடுவாங்க. வேணாம் விக்ரம். இனியொரு செல்வ குமார், ரேவதி உருவாக வேணாம். பாவம், அது படிக்கிற பிள்ளை. அது பாவம் நமக்கு வேணாம். ஏற்கனவே ஒரு பொண்ணோட பாவத்தை நாம தலை மேல வச்சு இருக்கோம்…” தாங்க முடியாமல் செல்வம் சொல்ல, முகம் இருக நின்று இருந்தான் விக்ரம்.
error: Content is protected !!