Skip to content
Post Views: 8,935
கள்ளி காட்டு காதலியே!
அத்தியாயம் 7
பிரபா கல்லூரி செல்ல தயாரானாள். முகம் வாட்டமாக இருந்தது. முன்பே அமைதி தான். இப்போது இன்னும் அமைதியாகி போனாள். என்ன யோசிக்கிறாள் என்று பிடிபட வில்லை.
விக்ரம் எப்பவும் போல என் பணி உன்னை தொடர்வதே என்பது போல் அவளோடு விருதுநகர் பஸ் ஏற, பிரபா ஒன்றும் கண்டு கொள்ள வில்லை. சகஜமாக அவளுக்கு பின் அமர்ந்து, அவளுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து கொண்டான். அதற்கும் அவளிடம் இருந்து எந்த ரியாக்சனும் இல்லை. இதை எதிர்பார்த்தேன் என்பது போல தான் அவள் சாதாரணமாக இருந்தாள்.
Advertisement
விருதுநகர் வந்து இறங்கிய உடன் தன் கல்லூரி செல்லும் ஸ்டாப்க்கு சென்று நின்றவள், அவன் புறம் திரும்பவே இல்லை. அவனும், அவள் பார்வையெல்லாம் எதிர் பார்க்க வில்லை. ஒரு துணை, பாதுகாப்பு அவ்வளவே. பொது வெளியில் அவளை நெருங்கி சங்கட படத்த கூடாது அல்லவா…
அடுத்தடுத்து மினி பஸ், ஷேர் ஆட்டோ என்று எது வந்தாலும் ஏறாமல் பிரபா நிற்க. புரியாமல் பார்த்தவன், அவனே சென்று ஒரு ஆட்டோ பிடித்து வந்தான்.
அவளை விட்டு தள்ளி நிற்க, முதலில் பிரபா ஏறி கொண்டாள். டிரைவர் அருகில் விக்ரம் அமர்ந்து கொண்டான். நிமிர்ந்து அவனை பார்த்தவளின் கண்கள் லேசாக கலங்கியது.
Advertisement
கண்ணாடி வழியே அவள் முகம் பார்த்தவன்,
Advertisement
“என் விருதுநகர் பஸ் கவுர போதோ, அதுக்கு தான் பாவமா பாக்குறாளா…” யோசனையாக வந்தான் விக்ரம்.
பிரபா, அவளின் கல்லூரிக்கு ஒரு ஸ்டாப் முன்னாடியே நிறுத்த சொல்லி இறங்கி கொண்டாள்.
“கண்டிப்பா ஆப்பு தான்…” என்று நினைத்து கொண்டே விக்ரம் இறங்க,
Advertisement
அங்கிருக்கும் ஒரு சின்ன பூங்காவின் உள்ளே பிரபா நடக்க, அவளை பின் தொடர்ந்து வந்தான் விக்ரம்.
அங்கிருக்கும் ஒரு கல் மேடையில் பிரபா அமர, விக்ரம் தன்னை திட படுத்தி கொண்டான். அடுத்து என்னவென்று அவனுக்கு தெரிந்தது.
அவள் நிமிர்ந்து விக்ரமை பார்த்தாள். கண் லேசாக கலங்க, வார்த்தையை தேடி கொண்டு இருந்தாள். அவளே சொல்லட்டும் என்று விக்ரம் நின்று தான் இருந்தேன்.
“இது வேணாம் பிளீஸ்…” மெல்லிய நீர் வர சொல்லி விட்டாள்.
“எது?…” கேட்டது விக்ரம் தான்.
“ இது எல்லாம் தான். நீங்க என்னை பாக்குறது, பின் தொடருறது, எனக்காக பூ வாங்கி கொடுக்குறது, துணைக்கு வாராது… இப்படி எதுவும் வேணாம்…” குரல் உள்ளே போக சொன்னாள் பிரபா.
“ஏன்?…” ஒற்றை வார்த்தை தான் விக்ரம் பக்கமிருந்து வந்தது.
“ஏன்னு உங்களுக்கு தெரியாதா? என் பேரை கெடுக்காதீங்க…”
“உன் பேர் கெடுற மாதிரி நான் என்ன பண்ணேன். பொது இடத்துல உன் கிட்ட பேச கூட மாட்டேன். தள்ளி நின்னு தான் பார்க்க கூட செய்வேன்…”
“அது தான், ஏன் பார்க்கணும்? ஏன் பேசணும்? நீங்க யார் எனக்கு…” தயக்கத்தை விடுத்து பேச தொடங்கினாள்.
“நான் யாருமே இல்லை தான். இனி எல்லாமாவும் இருக்க ஆசை பட்டு தான் உன்னை பாக்குறேன், பேச நினைக்கிறேன்…” தெளிவாக சொன்னான் விக்ரம்.
“ஆனா, எனக்கு எல்லாரும் இருக்காங்க. எனக்கு குடும்பமும் இருக்கு. அதுல வேற யாரும் எனக்கு வேண்டாம்…” சொல்ல நினைத்ததை சொல்லியே விட்டாள்.
ஒரு பெருமூச்சு விட்டான் விக்ரம். தன் பேண்ட் பாக்கெட்டில் இரு கையையும் நுழைத்து, வானத்தை அண்ணாந்து பார்த்தான். என்னவோ யோசித்தான். பின் அவளை பார்த்து,
“பிரபா…வதி எனக்கு உன்னை பிடிச்சு இருக்கு. ரொம்பவே பிடிச்சு இருக்கு. இந்த வாழ்க்கையை உன் கூட பகிர்ந்துகிற அளவுக்கு பிடிச்சு இருக்கு. உன் கூட வாழவும் ஆசையா இருக்கு. உன்னை கடைசி வரை தாங்கவும் ஆசையா இருக்கு. இதுவரை உன்னை நான் தொட்டது இல்லை. உன் வாசத்தை உணர்ந்தது கூட இல்லை. ரெண்டு அடி தள்ளியே தான் நிப்பேன்…”
“ஆனாலும், என்னால உன்னை உணர முடியுது. உன்னை உட்கார வச்சு பார்த்துட்டே கூட இருக்கலாம், அப்படியொரு ஈர்ப்பு உன் மேல. நிச்சயம் அதுக்கு தான் நான் ஆசை படுறேன். காலத்துக்கும் நீ தான்னு முடிவு பண்ணி தான் உன்னை தொடர்ந்தேன். நிச்சயம் கை விட மாட்டேன். யார் வந்தாலும், எந்த சூழ்நிலையிலும் என் காதல் உன்னோடு தான். ஒரு அழகான வாழ்க்கையை உன் கூட வாழ ரொம்ப ஆசையா இருக்கேன். என் வாழ்க்கையோட முடிவில கூட என் பக்கத்துல நீ நிக்கனும்ன்னு நினைக்கிறேன்… இனி, நீ தான் சொல்லணும்…” தன் விருப்பத்தை முறையாக, பொறுமையாக சொல்லி விட்டான் விக்ரம்.
அவனையே பார்த்து இருந்தவளுக்கு, அவன் பேசிய வார்த்தையை கேட்டதும் கரகரவென நீர் இறங்கியது.
“பிரபா…” என்று விக்ரம் அழைத்தும், அவளிடம் பதில் இல்லை.
பெரிய, பெரிய மூச்சுக்களை எடுத்து தன்னை நிதான படுத்த நினைத்தாள். ஆனால் முடியவில்லை. நிலைமையின் தீவிரம் இருவருக்கும் புரிந்தது.
எது நடந்தாலும் பார்த்து விடலாம், இருக்கும் ஒரு வாழ்க்கையை நான் விரும்பியவளோடு அமைத்து கொள்ள எனக்கு உரிமை இல்லையா? என்ற நிலைப்பாட்டில் கோட்டுக்கு அந்த பக்கம் விக்ரம் நின்று கொண்டான்.
பின் வாங்க போவதில்லை ஒரு கை பார்ப்போம் என்று… அவனை போல பெண்ணாள் அவளுக்குரிய கோட்டை தாண்ட முடியவில்லை. அவள் யாரை கடப்பாள் பெற்ற தகப்பனையும், தாயையும் அல்லவா!… கடக்க முடியும் என்று தோன்ற வில்லை. அதனால் தான், அவனை கடந்து விட நினைத்து விட்டாள்.
உடலில் தீவிரமாக பரவும் நோயை ஆரம்பத்திலேயே அப்புற படுத்த வேண்டும். இல்லையேல், அதற்கு உடல் அகபட்டு விடும் என்பது போல, விக்ரம் உடன், மண் மேல் விழுந்த தூறல் போல விருப்பம் இருக்கும் போதே விலகி விட நினைத்தாள்.
காட்டாற்று வெள்ளம் கரை புரண்ட பின் கதறி பயனில்லை. முன்பே முடிவெடுத்து தான் ஊருக்கு வந்தது. அதை அவன் கண் பார்த்து சொல்ல தான் முடியவில்லை.
எந்த முகாந்திரமும் இல்லாமல் முழு அன்பை செலுத்தியவன் மேல் வெறுப்பு காட்டி ஒதுங்க தெரியவில்லை இந்த மனதுக்கு…
விக்ரமுக்கு, அவளை புரிந்தது. அவள் தனக்குள் போராடுகிறாள் என்றும் தெரிந்தது. கொஞ்சம் பாவமாகவும் இருந்தது, இருந்தாலும் முடிவு அவளது தான். ஒரு கை கொண்டு என்றும் ஓசை எழுப்ப முடியாதே…
“பிரபா… என்னை பாரு, என் கண்ணை பார்த்து பேசு. நான் வேணாமா? என்னை பிடிக்கலையா? எனக்கு பதில் வேணும் பிரபா?…” என்று விக்ரம் சொல்ல,
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “உங்களை பிடிச்சுருமோன்னு பயமா இருக்கு. எனக்குன்னு இருக்குற எல்லை கோட்டை தாண்டிருவனோன்னு பயமா இருக்கு. என்னையும் மீறி என் மனசு உங்களை தொடருமொன்னு பயமா தான் இருக்கு. நான் சரியா இருந்த வரைக்கும் உங்க நடத்தை எல்லாம் பைத்தியக்காரதனமா தான் தெரிஞ்சது. அது என்னை பாதிக்கவே இல்லை…”
“எப்போ என்னன்னு தெரியலை. பைத்தியம்ன்னு நானே ஒதுக்கின எல்லாத்தையும் எம் மனசு எதிர்பார்க்குது. அந்த எதிர்பார்ப்பு தேடலா மாறும் முன்ன தடுக்க நினைக்கிறேன்… என்னைக்கும் நடக்காத ஒரு விசயத்துக்கு மனசு ஏன் ஆசைபடனும். செத்தவங்க உயிரோட வர முடியாது. அப்படி தான் என் எதிர்பார்ப்பும். என்னால முடியலை, மனசு பாரமா அழுத்துது விட்டுடூங்க…” திணறி கூட ஒருவாறு சொல்லி முடித்து விட்டாள்.
விக்ரம் அவளையே பார்த்தான். தன்னை பார்த்தாலே அரண்டு ஓடுவாள். இன்று நிதானமாக பேசுகிறாள். நிறைய யோசித்திருக்கிறாள் என்று பிரிந்தது.
“என் கையால ஒரு தாலி, வேணாமா பிரபா…” வார்த்தையில் தூண்டில் போட அவனுக்காக சொல்லி தர வேண்டும். தன் காதலை காப்பாற்றி கொள்ள நினைத்தான்.
பிரபாக்கு அழுகை நிற்க வில்லை. சத்தமில்லாமல் தான் வந்தது. இப்படியொரு வார்த்தை சொல்லி விட்டான். காதல் என்பதை விட தாலி என்றால் அது ஒரு மாதிரி மனதை உறுத்தும். விக்ரம் எதார்த்தமாக சொல்ல, முள் போல சிக்கி கொண்டது பிரபாக்கு.
தாலி வரை யோசித்தானா. அவ்வளவு நேசமா தன் மீது, ஏன் வந்தது?… விக்ரம் நல்லவன். ஜாதகம் பார்த்து, சமூகம் சேர்த்து, பொருத்தம் பார்த்து, முறை பார்த்து, படிப்பு, வேலை, அந்தஸ்து என்று அனைத்தையும் கூட்டி சேர்த்து வரும் ஒருவனை விட விக்ரம் உயர்ந்தவன். ஆம், உயர்ந்தவனே…
வலவளவென பேசினாலும், நையாண்டி மிகுந்து இருந்தாலும் உண்மையானவன், நேர்மையானவன், சுத்தமானவன். கண்ணை மூடி கூட கழுத்தை நீட்டலாம். ஆனால், முடியாது. அவன் சொன்ன வார்த்தை, அவள் இழப்பை காட்டியது. ஒரு நல்லவனை இழந்து விட்டாய் என்று காட்டியது. இழப்பின் வீரியத்தை அவன் முகம் பார்த்த போது உணர்ந்தாள். எத்தனை அக்கறையானவன். இனி, எனக்கில்லை. அது தானே அவள் எடுத்த முடிவு.
“வேண்டாம். நீங்க நிச்சயம் எனக்கு வேண்டாம். என்னால, என் குடும்பத்தை இழக்க முடியாது. என் அப்பா கண் பார்த்து கடக்க முடியும்ன்னு தோணலை. எங்க சொந்தத்துல மேல படிக்கிறது நான் தான். அது தப்புன்ற மாதிரி என் நடத்தை இருக்க கூடாது…” என்று கண்ணை துடைத்து கொண்டவள்,
“நான் அஞ்சு வருசமா இங்க படிக்க வாரேன். சேர்க்கும் போது கொண்டு வந்து விட்டதோட சரி. அதுக்கப்புறம் ஒரு நாள் கூட என் கூடவே வந்ததில்லை. அக்கறை இல்லாததால கிடையாது. அது என் மேல வச்சு இருக்குற நம்பிக்கை. என்னை காத்து நிக்கவோ, வேவு பார்க்கவோ இல்லை. அந்த நம்பிக்கையை நான் காப்பத்தனும் தான… என்னை நம்பி இவ்வளவு தூரம் அனுப்புறாங்க. எங்க அம்மா எப்பவும் சொல்லுவாங்க, “பொம்பளை பிள்ளையை பெத்தா, பக்கத்து வீடு கூட ஒரு சொல் சொல்லாம கட்டி கொடுக்கணும்ன்னு. என் கல்யாணம் தான் அவங்க கௌரவம், என்னால அதை உடைக்க முடியாது…” என்று பிரபா சொல்ல,
“கௌரவம், பல பேர் குடும்பத்தை நாசமாக்குறதே இந்த கௌரவம் தான்…” முணுமுணுத்து கொண்டான் விக்ரம்.
“இப்பவே நீங்க ஒதுங்கி போயிட்டா, என் உயிர் தப்பிக்கும்…”
“ பிரபா…” என்று சத்தமாக அதட்டல் போட,
“நிஜம். இப்படி ஒரு விசயம்ன்னு எங்க அம்மாக்கு தெரிஞ்சா போதும், அவங்களே எனக்கு சோத்துல விசம் வச்சுடுவாங்க. அப்புறம் எங்க அப்பா… அவர் முகத்தை என்னால நிமிந்து கூட பார்க்க முடியாம போயிடும். அதையும் விட உங்க வீடு? ஏத்துபாங்களா? சொல்லுங்க?…”
விக்ரம் அமைதியாக நிக்க,
“எங்க அப்பாகிட்ட கூட கோபத்திலும் ஒரு நிதானம் இருக்கும். ஆனா, உங்க அப்பா? ரொம்ப மோசமானவர்…”
முகம் சுண்டி போனது விக்ரமுக்கு. சும்மா கூட அவளோடு வாதாட மனமில்லை. நேற்று தான், தன் மாமாவின் மூலம் தன் தந்தையின் இன்னொரு முகத்தை கண்டான். அதில் நேரடியாக பதிக்கப்பட்ட பெண்ணும் இருக்க, பிரபா பயம் நியாயானதாக பட்டது.
“நான் அமைதியா ஒதுங்கி போறது, உங்களை சீண்டி விடும். நீங்க எனக்காக செய்ற எல்லாத்தையும், நான் மெளனமாக கடக்கிறது, என் மேல ஒரு நம்பிக்கையை தரலாம். நான் சரின்னு சொல்லாம கூட என் பார்வையே உங்களுக்கு பதில் சொல்லலாம். உண்மை தான் என் கவனம் உங்க மேல படருது. அடுத்து என்னன்ற ஆர்வமும், பயமும் என்னை படுத்துது. பிடிக்கவும் செய்யுது, பயமாவும் இருக்கு. ஆனா, இது வேணாம். ரொம்ப தெளிவான, சரியான முடிவு இது தான். நம்ம ரெண்டு பேருக்கும்…” என்றவள் நிமிர்ந்து விக்ரம் முகம் பார்க்க,
அவன் அமைதியாக நின்றானே தவிர வேற ஒன்றும் பேச வில்லை.
“எனக்கு வாழ்க்கையை அது போக்குல அமைதியா வாழனும். என் ஊர், என் உறவு, என் வட்டம் எல்லாம் எனக்கு வேணும். அதை விட்டு ஊரா விட்டு ஓடி போறது, பயந்து பயந்து வாழ்றது, நிலையிலாம அலைய என்னால முடியாது. என் மனசு நீங்க தான்னு உறுதியா நின்னா, உங்களையும் விட்டு கொடுக்க முடியாது, என் குடும்பத்தையும் விட்டு கொடுக்க முடியாது. ரெண்டும் எனக்கு மீள முடியாத வலி. எனக்கு அந்த வலி வேணாம். உங்க மேல இருக்குற ஆர்வத்தை, நான் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த போறதில்லை. இதுவே, நம்ம கடைசி சந்திப்பா இருக்கணும்…” கடைசி வரியை சொல்லும் போது குரல் உள்ளே போனது.
“வா, போலாம்…” என்றான் விக்ரம்.
புரியாமல் பிரபா நிமிர்ந்து பார்க்க,
“இதுவே கடைசி சந்திப்பா இருக்கட்டும்…” என்று விக்ரம் முடித்து விட்டான்.
மனசு அழுத்தியது. முயன்று எழுந்து கொண்டாள் பிரபா. விக்ரம் மீண்டும் ஒரு ஆட்டோ பிடித்து வந்தான். இருவரும் ஏறி கொள்ள, மெளனம் மட்டுமே நிலவியது.
பிரபாவை கல்லூரியில் இறக்கி விட்டவன், ஒரு தலையசைப்போடு கிளம்பி விட்டான். அவனையே பார்த்து நின்றவள், சோர்ந்த நடையோடு உள்ளே சென்றாள். அவள் நட்பு வட்டம் இருக்க,
“என்ன பிரபா, பார்க்க டல்லா தெரியுற…” ஜெனி கேட்க.
“ஒன்னுமில்லைடி. பஸ்ல வந்தேன்ல, அதான்…” சமாளித்தாள் பிரபா.
“உன் ஆள் கூட சண்டையா…” என்று சித்ரா கேட்க.
“என்ன? என் ஆளா? அதெல்லாம் ஒன்னுமில்ல…” வேகமாக பதில் வந்தது.
“ஆமா, போன தடவை வந்த போது உன் பேக்ல பூ, ஸ்நாக்ஸ், சாப்பாடு எல்லாம் இருந்தது. இன்னைக்கு வெறும் பை மட்டும் தான் இருக்கு…” அவள் பையை பார்த்து ஜெனி கேட்க.
ஒன்றுமே பேச தெரியாமல் முழித்தாள் பிரபா.
“என்னடி ஆச்சு. வரும் போது பேய் எதும் பிடிச்சுருச்சா…” மோனா கேட்க.
யாருக்கும் பதில் சொல்லாமல், உடையை கூட மாற்றாமல் அப்படியே படுத்து கொண்டாள்.
என்ன ஆச்சு என்ற மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள,
“பிரபா…” என்று வெளியில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது.
பிரபா மெல்ல எட்டி பார்க்க,
“உனக்கு விசிட்டர்ஸ் வந்து இருக்காங்க…” என்று சொல்ல,
ஜெனி, “என்ன? இப்போ தான ஊர்ல இருந்தே வந்தோம்…”
பிரபாக்கும் குழப்பம் தான். யாராக இருக்கும்? கீழ சென்று பார்க்க. அங்கு நின்றது விக்ரம் தான்.
அவனை கண்டதும் திகைத்து போய் நிற்க,
கொஞ்சம் தயங்கியவன், “நீ சாப்பாடு கொண்டு வரல. இங்க வேற எந்த கடையும் கிடையாது. அதான் சாப்பாடு மட்டும் வாங்கி வந்தேன். இந்தா…”
பிரபா, அவனையே பார்த்து நிற்க,
“வேற எந்த உள்நோக்கமும் கிடையாது. சாப்பாடு கொண்டு வரல, ஒரு உதவி, அக்கறை மட்டும் தான்…” என்றவன், பார்சலை அவள் கையில் திணித்து விட்டு, போய் விட்டான்.
“இது தான் விசயமா. லவ்வர்ஸ் சண்டை. ஆனாலும் உன் கருத்த மச்சானுக்கு உன் மேல நிறைய லவ் போல, தேடி வந்து சாப்பாடு கொடுத்துட்டு போறார்…” கிண்டல் போல சித்ரா பேசினாலும், பிரபா நினைவு எல்லாம் விக்ரம் தான்.
இதோ இந்த மாதிரி அக்கறையும் பாசமும் தான். அவன் புறம் தன்னை சாய்த்து விடுமோ என்று பயம் வந்தது.
“ பிரபா, சாப்பாடு மட்டும் தான் இருக்கு. பூவ காணம். என்னவாம் சண்டை போட்டையா…” என்று ஜெனி கேட்க.
அவன் நிலைப்பாட்டை சொல்லாமல் சொல்லி விட்டான். ஆனால், பிரபாக்கு தான் எதிர்பார்த்தது நடந்தும், சந்தோசமில்லை.
திரும்ப ஊர் வந்தவன் முகமே சரியில்லை என்று நண்பர்கள் கண்டாலும் என்னவென்று கேட்க வில்லை. விக்ரம் முழு அமைதி தான்.
பிரபா கேட்ட ஒரு கேள்விக்கு கூட விக்ரமிடம் பதில் இல்லை. அவனால் யாரையும் சரிகட்ட முடியாது. இது சினிமா அல்ல, வில்லன்கள் கடைசியில் திருந்த. நிஜம் இப்படி தான் இருக்கும். இது எல்லாவற்றையும் தாங்கி நிற்பது தான் காதல். அந்த காதல் அவனுக்கு இருக்கு, அவளிடம் கேள்வி குறி தான்?…
ஒரு வாரம் கடந்தது. மதனுக்கு உர மூடை ஏத்த டவுனுக்கு வந்து இருந்தார்கள் விக்ரமும், அருணும். மதன் தான் ஆட்டோ ஓட்டி வந்தது. உர மூடை வர காத்து இருக்க, அருண் செய்தித்தாளை பார்த்து கொண்டு இருந்தான். விக்ரம் நினைவு எல்லாம் வேற எங்கோ இருந்தது.
“மச்சான். இங்க பாருடா அநியாயத்தை?…” கத்தினான் அருண்.
“என்னடா?…” என்றான் மதன்.
“ அறுவத்தி அஞ்சு வயசு ஆளுக்கு இருபத்தி ரெண்டு வயசு பொண்ணு கூட கல்யாணமாம்டா. அதுவும் காதல் கல்யாணமாம். சொந்தபந்தம் எல்லாம் சேர்ந்து தான் கட்டி வைக்கிறாங்க…”
“அதுக்கென்னடா?…”
“என்னடா இப்படி சொல்ற? அறுபத்தி அஞ்சு வயசு ஆள் எல்லாம் கண்ணுக்கு தெரியுற பிள்ளைகளுக்கு நாம ஏன் மச்சான் தெரியலை…” என்று அருண் சீரியசாக கேட்க.
“டேய், நீ வேற ஏண்டா?…”
“பரவாயில்லை மச்சான். அறுபத்தி அஞ்சு வயசு வரைன்னா, நமக்கு இன்னும் நாள் இருக்கு, அவசரமில்லை. என்னடா விக்ரம்?…”
“பேசாம போங்கடா. நானே நொந்து போய் இருக்கேன்…” தாளாமல் விக்ரம் சொல்ல.
“ஒரு வாரமா இப்படி தான் இருக்க. எந்த கப்பல்டா கவுந்துச்சு…”
“கப்பல் இல்லை மச்சான். பஸ், என்னோட விருதுநகர் பஸ் தான் கவுந்து போச்சு…”
“எதே!” என்ற அருண். “சரி விடு மச்சான். கயிறு கட்டி தூக்குவோம்…”
“இல்லைடா அது முடியாது. பஸ் பள்ளத்துல விழுகல கடல்லே விழுந்து போச்சு…”
“போச்சா…” என்று குதூகலமாக சொன்ன மதன். விக்ரமின் பார்வையில்,
“சோகமா தான் மச்சான் கேட்டேன். பொண்ணுக இப்படி தான் பார்வை பிடிக்கிற மாதிரி தெரியும், வார்த்தை பிடிக்காத மாதிரி இருக்கும்…” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே,
“குளத்து கரை ஆட்டோ வருமா தம்பி…” ஒரு பெண் வந்து கேட்க.
“ஐயோ, இது ஆள் ஏத்துற ஆட்டோ இல்லங்க, வேற பாருங்க…” என்று சொல்லி கொண்டே வந்தவனின் பார்வை, அப்படியே நின்று போனது.
அருணின் வாய் மெல்ல ரேவதி என்று முணுமுணுக்க, வேகமாக நிமிர்ந்து பார்த்தான் விக்ரம். மதனும் அவ்வாறே தான் பார்த்தான்.
error: Content is protected !!