Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய்

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 27 (நிறைவுப் பகுதி)

அத்தியாயம்        27       (1)

மாலை நேரம் 7.00 மணி.

குறித்த நேரத்திற்கு இரண்டு நாள் முன்னமே டாக்டர் அட்வைஸ்படி, மருத்துவமனையில் சேர்த்திருந்தனர் பானுவை.  டாக்டர் குறித்து கொடுத்த டெலிவரி டேட்டும் இன்றுதான். ஆனால் இன்னும் பானுக்கு பிரவச வலி எடுத்திருக்கவில்லை.



Advertisement

காலையிலிருந்து வீட்டினர் மொத்தமும் மருத்துவமனையில்தான் குழுமியிருந்தனர்.  மாலை ஆகவும்தான் கலியமூர்த்தி, ராகவன் மது எல்லோரும் கிளம்பி வீட்டிற்கு சென்றனர்.

இன்னும் பிரசவ வலி எடுக்காததில் வீட்டினர் எல்லாம் பயந்து போயிருந்தனர்.  டாக்டர் ஷ்யாமளாதான் அவர்களை தைரியப்படுத்தி, இன்னும் டைம் இருக்கு, அவசரப்பட வேண்டாம் பொறுத்திருந்து பார்க்கலாம் எனக் கூறி அமைதிபடுத்தியிருந்தார்.

ஜமுனா, சரசு, சங்கர், பூர்ணி நால்வரும் மருத்துவமனையில் பானுவுடன் இருந்தனர்.

Advertisement

ம்மா…… “சொன்ன நேரத்துக்கு சரியா வலி வந்திருக்கனும்ல…… ஏன் வரல…? என்னாச்சு….? பேசாம பானுவை சென்னைக்கே, அங்க காண்பிச்ச டாக்டர்கிட்டயே கூட்டிட்டு போலாமா…?” என சரசை ஒரு வழியாக்கி கொண்டிருந்தான்… சங்கர், பயத்தில்…

Advertisement

அவனை சமாதானப்படுத்தி அமர வைப்பது சரசுக்கு போராட்டமாக இருந்தது.  அவருமே உள்ளுக்குள் பயந்திருந்தார்.  ஏன் இன்னும் பிரசவவலி எடுக்க வில்லை என்று?  இதில் மகன் ஒரு பக்கம் அவரை பாடாய்… படுத்திக் கொண்டிருந்தான்.

“தலைபிரசவமல்லவா….?  குடும்பத்தினர் எல்லோருமே நெஞ்சில் பயத்துடன்தான் அமர்ந்திருந்தனர்”.

ஜமுனா மனதினுள்ளேயே தெய்வங்களுக்கு எல்லாம் வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தார்…, மகளுக்கு நல்லபடியாக பிரசவம் ஆகவேண்டும் என்று.

Advertisement

மருமகனுக்கு மனைவியின் மேலிருக்கும் பாசத்தை நினைத்து சந்தோஷமாக இருந்தாலும்,  மகளுக்கு இன்னும் பிரசவத்திற்கான எந்த அறிகுறியும் தெரியாத வேதனையில் உழன்றுகொண்டிருந்தார் ஜமுனா மனதிலேயே.

“மகனுடைய டென்ஷன் புரிந்ததால்… சரசு நிதானமாக, அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவர் என்ன சொல்லியும் சங்கருக்கு சமாதானமாகவில்லை.  உள்ளுக்குள் எரிமலை வெடிப்பதுபோல உணர்வு பிழம்புகள் தகித்துகொண்டிருந்தது அவனுக்கு.  நேற்றுவரை இருந்த சந்தோஷம் எல்லாம் மாயமாகியிருந்தது”.

நேரம் ஆக ஆக நெஞ்சுக்குள் திக் திக் என பயம்தான் அதிகமாகியது அவனுக்கு.  ஒருபக்கம் மனைவி.   இன்னொரு பக்கம் அவனது குழந்தை.  இரண்டு உயிரும் எந்த சிக்கலும் இல்லாமல் பிழைக்கவேண்டுமே… என தவித்து நின்றான் உலைகலனாக.

இங்கும் அங்கும் நிலையில்லாமல் தவித்துக்கொண்டிருந்தான், ஒரு இடத்தில் நிலையாக நில்லாமல்.

மனைவியைப் பார்ப்பதும், வெளியே வந்து உட்காருவதும், என பதட்டமாகவே இருந்தான்.

சரசும் இரண்டு மணிநேரத்திற்கு, ஒரு முறை டாக்டரை சென்று பார்த்து விட்டு வந்தார்.  மருத்துவர் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.  இன்னும் டைம் இருக்கு வெயிட் பண்ணுவோம் என அவரை ஆறுதல்படுத்தி அனுப்பினார்.

சங்கருக்குதான் டென்ஷன் ஏறியது.  மாலை பானுவை வந்து பார்த்த மருத்துவர், அவளை பரிசோதித்தபின் வலி எடுப்பதற்கான இன்ஜெக்‌ஷனை போட்டு சென்றிருந்தார்.

சங்கர் “வெயிட் பண்ணவேணாம் டாக்டர், ஆப்பரேஷன் பண்ணிடலாம்” என் கூறியும் மறுத்துவிட்டார் மருத்துவர்.

“உங்க இஷ்டத்துக்கு ஆப்பரேஷன் பண்ண முடியாது.  பெயினுக்கான இன்ஜெக்‌ஷன் போட்டிருக்கேன், பெயின் வருதான்னு பார்ப்போம்” என்று விட்டார்.

“என்னம்மா…..?  இப்படி கோவமா பேசிட்டு போறாங்க…………?”

“பின்ன காலையில இருந்து நீ பண்ற அலம்பல் அப்படி.  நாம எல்லோரும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர்னு அவங்களை காலையில இருந்து போட்டு பிடுங்கனதுல கடுப்பாகியிருப்பாங்க….”

“இதுக்குதான் சென்னையிலே டெலிவரி பார்த்துக்கறேன்னு… சொன்னேன்.  யார் கேட்டீங்க…?.  பெரிய கைராசிக்கார டாக்டர்… அதுஇதுன்னு சொல்லி இங்க வரவச்சிட்டு…. என முறைத்து நின்றான் அன்னையை”.

“டேய் அவசரத்துக்கு பொறந்தவனே… சும்மாயிரேன்டா….. உனக்கு மட்டுமில்ல, எங்களுக்கும் தான் டென்ஷனாயிருக்கு.  கொஞ்ச நேரம் அமைதியாயிரு.  இல்லனா வீட்டுக்கு கிளம்பு நீ.  நாங்க இத்தனை பேர் இருக்கோமில்ல.  நாங்க பார்த்துக்கறோம்… என்று விட்டார் கடுப்பாக.

“இருக்கவங்களையும் டென்ஷன் பண்ணிட்டு… ” என முனக ஆரம்பித்துவிட்டார் சரசுவும்.

அவருக்கும் பயத்தில் மனது பதைத்தது.  அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளவும் முடியவில்லை.  பக்கத்தில் ஜமுனா இதையெல்லாம் பார்த்துகொண்டுதான் அமர்ந்திருந்தார்.  அவரும் பயத்தில் ஏதும் பேச முடியாமல் மௌனமாக இருந்தார்.

மருமகனின் மனநிலை புரிந்தது.  அவன் பேச பேச இன்னும் அவருக்கு பீதியானது.  சென்னையிலேயே பிரசவம் பார்த்துக் கொள்கிறேன் என்றவனை, தாய் வீட்டில் தான் தலைபிரசவம் பார்க்க வேண்டும் என இங்கே வர வைத்திருந்தார்.

இப்பொழுது மகளை நினைத்து மனதில் பயத்துடன் எதுவும் பேச முடியாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

மது அவர்களுக்கு எல்லாம் இரவுக்கான சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

பூர்ணியிடம் சாப்பாட்டை தந்தவன், ஜமுனாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.  அவரது முகம் சரியில்லாததைப் பார்த்து, ‘’என்னமா என்றான்’’.

இங்கே நடந்தை மகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“மாப்பிள்ளைக்குதான் தெரியாது, உங்களுக்குமா தெரியாது….?  இவங்க எவ்வளவு எக்ஸ்பீரியன்ஸான டாக்டர்.  இங்க சுத்தி இருக்கற ஊருக்காரங்க எல்லாம் இவங்ககிட்ட வந்துதான் பார்க்கிறாங்க”.

“கைராசியான டாக்டர் ம்மா.  அவங்க பார்த்துப்பாங்க.  பயப்படாதீங்க”.

சங்கருக்கும் தைரியம் சொல்லி, அவனை சமாதானப்படுத்தி மெல்ல சாப்பிட வைத்தான்.

இரவு பதினொரு மணி ஆகியும் எல்லோரும் அங்கேயே உட்கார்ந்திருந்தனர்.

இதில் சங்கர் வேறு மனைவி அசைந்தால் கூட “வலிக்குதா…?” என கேட்டு அவளையும் பாடாய் படுத்திக்கொண்டிருந்தான்.  சரசுதான் அவன் செய்த அலப்பறையில்… பல்லைக் கடித்துகொண்டு, அவனை வெளியே இழுத்து வந்து அமர வைத்தார்.

“அவளையும் டென்ஷன் பண்ணாத, அவள் பிள்ளைய வயித்துல சுமந்துட்டு இருக்கா…………” என அவனை கடிந்து கொண்டார்.

ஒரு வழியாக, இவர்களை எல்லாம் பாடாய் படுத்தி, விடியும் தருவாயில், சங்கர் பானுவின் மகவு இப்பூவுலகைக் காண வெளியே வந்தது.

பிரசவ அறையிலிருந்து நர்ஸ் வந்து, உங்களுக்கு பையன் பிறந்திருக்கான்னு சொல்ற வரைக்கும் அங்கிருந்த எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்தனர்.

“பேரன் பிறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டவுடன் சரசு கதறி அழுதுவிட்டார்.  ஆனந்தம் என்றாலும், அதுவரை கட்டி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் வெடித்து… கண்ணீராக வெளியே வந்தது.”

சங்கருக்கும் கண்ணீர் வந்துவிட்டது, அவரது அழுகையை பார்த்து.. அன்னையை கட்டி அணைத்து, அவரை சமாதானப்படுத்தினான்.

“ஸாரி ம்மா……., ஸாரி……… என்னோட டென்ஷன் எல்லாம் உன்கிட்ட திணிச்சுட்டேன்….. ஸாரி……… ஸாரி……………..” என அவரது கண்களைத் துடைத்து விட்டு, ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினான்.

ஜமுனாக்கும் கண்களில் நீர் வந்து விட்டது, சரசுவைப் பார்த்து.  பாவம் இத்தனை நேரம் அவர் தவித்த தவிப்பை கண்களால் பார்த்து பரித்தவித்திருந்தாரே.

அவரும் வந்து சரசுவின் கைகளைப் பிடித்து, அவரது தோள்களை ஆதுரமாக, அணைத்து கொண்டார்.

கொஞ்ச நேரத்தில் டாக்டர் குழந்தையுடன் வெளியே வந்தார்.  “ரோஜா குவியலை…, பூத்துவாலையில் சுற்றி வைத்தது போலிருந்த நிசுவை, சரசு கை நீட்டி வாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்”.

பேரனை கையில் ஏந்தியதும், இத்தனை நேரம் அவர் பட்ட போராட்டம் எல்லாம் பனி போல் கரைந்திருந்தது.  மகனைக் கண்டதும் அள்ளி எடுத்து, ஆரத்தழுவி, கொஞ்ச துடித்த உணர்வுகளை மட்டுப்படுத்தி, அன்னையின் அருகில் நின்று மகனை ஆசையாக பார்த்து கண்களில் நிரப்பிக்கொண்டிருந்தான்.

மகனின் முகத்தைப் பார்த்த சரசு, அவனை அங்கிருந்த சேரில் உட்கார வைத்து, குழந்தையை எப்படி பிடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்து, அவனது மடியில் பேரனை வைத்துகொடுத்து, அவரும் பிடித்து நின்றார் துணையாக.

“மகனை மடியில் தாங்கியதும் சந்தோஷத்தில் உள்ளம் துள்ளி குதித்து, ஆரவாரம் செய்து… ஆர்ப்பரித்து மகிழ்ந்தது தந்தைக்கு.  வாழ்வின் அடுத்த பரிணாமத்திற்கு அடி எடுத்துவைத்த, பொக்கிஷமான தருணம் அல்லவா…?  தன்னை தந்தையாக்கிய தனயனை உயிர் உருக, உள்ளம் மகிழ பார்த்திருந்தான்”.

ஜமுனாவும் பேரனைத் தூக்கி கொஞ்சினார்.  மதுவும் பூர்ணியும் மருமகனை பக்கத்தில் இருந்து பார்த்து ரசித்தனர்.  ஜமுனா பூர்ணியிடம் தூக்கிறியான்னு கேட்டும், ‘’ எனக்கு பயமாயிருக்கு அத்த’’ என மறுத்துவிட்டாள்.

சில நிமிடங்களில் செவிலியர் வந்து குழந்தையை  வாங்கிச் சென்றிருந்தனர்.

சுகப்பிரசவம் தான் என்பதால் பானுவையும் குழந்தையையும் மூன்று நாட்களில் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தனர்.

இரவு படுப்பதற்கு மட்டும் சங்கர் அம்மாவுடன் வீட்டுக்கு செல்பவன் பகல் முழுதும் மனைவி குழந்தையுடனேயே இருந்தான்.  மகனது ஒவ்வொரு அசைவும்… அவனுக்கு அதிசயமே.

அவன் சினுங்கினால் கூட பொறுக்காமல்… தூங்கும் மனைவியை எழுப்பி விடுவான்.  ஜமுனாவுக்கு அவனது அழிச்சாட்டியத்தில் சிரிப்புதான்… வந்தது.

சரசு மகனை கிண்டல் செய்து… கலாய்த்தாலும், அவன் அதையெல்லாம் கண்டுகொள்வதேயில்லை.

குழந்தை பிறந்து இரண்டு வாரம் சென்றதும், நாள் பார்த்து தீட்டு கழித்து, குழந்தைக்கு  “ரித்தேஷ்” என பெயர் வைத்து கொண்டாடினர்.

சங்கர் வாரம் தவறாமல் மனைவியையும் மகனையும் சென்னையிலிருந்து வந்து பார்த்து சென்றான்.  மூன்று மாதத்திலேயே சென்னைக்கு அழைத்து செல்கிறேன் என்றவனை சரசு மறுத்துவிட்டார்.

“அங்க கூட்டிட்டு போய் யாருடா பார்க்கிறது.  பச்ச குழந்தைய வச்சிட்டு விவரம் தெரிஞ்ச நாங்களே இங்க முழிக்கறோம்.  சமயத்துல அவன் அழும் போது… எதுக்கு அழறான்னு…? ஒன்னும் புரிய மாட்டேன்னுது”.

“அங்க தனியா, அவள் என்ன பண்ணுவாள்…?  என்னாலயும் தனியா அங்க இருந்து, அம்மா பிள்ளை இரண்டு பேரையும் பார்த்துக்கறது கஷ்டம்.  இங்கனா… நாங்க இத்தனை பேர் இருக்கோம், பார்த்துக்க ஒத்தாசையா இருக்கும்” என கூறி மறுத்துவிட்டார்.

அவனுக்கும் அன்னை சொல்வதில் இருந்த உண்மை புரிந்ததால் வற்புறுத்தாமல் விட்டுவிட்டான்.   வாராவாரம் வந்து செல்வது, அவனுக்கும் சிரமமாக இருந்தது.  மகனையும் மனைவியையும் பார்க்காமல் இருக்கவும்… முடியவில்லை அவனால்.

ஐந்து மாதம் முடியும் தருவாயில் நல்ல நாள் பார்த்து மனைவியையும், மகனையும் தாயுடன் சேர்த்து அழைத்துச் சென்றான்.

ஜமுனாவும் மகளுடன் சென்று ஒரு வாரம் தங்கியிருந்து வந்தார்.

                                                                       _____________

மதுசூதனன் தான் நினைத்தது போலவே தொழிலில் முன்னேற ஆரம்பித்திருந்தான்.  அவனது அயராத உழைப்பும், நேர்மையும், சின்சியரும், சிரத்தையும் அவனை முன்னேற்றப் பாதையில் செல்ல வழிவகுத்தது.

அனுபவமில்லாத தொழிலை ஆரம்பித்து அதில் அடிப்பட்டு கற்றுத் தெளிந்திருந்தான்.  எத்தனை இடர்பாடுகள், பிரச்சினைகள் வந்திருந்தாலும் தனது விடா முயற்சியால், வென்று நின்றான்.

பக்கத்து இடத்தையும் லீசுக்கு எடுத்து தொழிலை விஸ்தாரப்படுத்திய பிறகு, தொழிலில் இன்னும் ஏறுமுகம் தான் அவனுக்கு.  தந்தையையும் தன்னுடன் அழைத்துக் கொண்டான்.

வியாபாரம் பெருகியதால் அவன் மட்டுமே பார்க்க முடியாமல் மேற்பார்வைக்கு என்று ஆளையும் வேலைக்கு வைத்திருந்தான்.

தந்தையை கடையை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு. வெளியில் விசேஷங்களுக்கான ஆர்டர் எடுப்பது, சப்ளை செய்வது என அதில் தன் கவனத்தை அதிகமாக செலுத்த ஆரம்பித்திருந்தான்.    தொழிலும் நாளுக்குநாள் முன்னேறியது.

ஆனால்… இன்னும் அவனால் பூர்ணி எதிர்பார்த்த மாதிரி, அவளுடன் நேரம் தான் செலவழிக்க முடியவில்லை.  அவனுக்கும் ஆசை இருந்தாலும், அவனது வேலை அவனை நிற்க விடாமல் ஓடிக் கொண்டேயிருக்க வைத்தது.

மனைவியின் ஆசை… எதிர்பார்ப்பு… எல்லாம் புரிந்தாலும், அவனால் ஏதும் செய்ய முடியாமல் இருந்தான்.  சமயத்தில் இதை வைத்து அவனுடன் அவள் சண்டை இழுத்தாலும், சாஸ்டாங்கமாக மனைவியிடம் சரண்டர் ஆகிவிடுவான்.

அப்புறம் எங்கே அவள் பிரச்சினை செய்வது.  பழக பழக இவன் இப்படிதான் என அவளும் விட்டு விட்டாள்.

அவளும் தனது மேற்படிப்பில் பிஸியாக இருந்ததால் எதையும் கண்டு கொள்ளவில்லை.

அன்று மதுசூதனன் வேலை முடித்து வீட்டிற்கு வரவே நேரமாகியிருந்தது.  காலையில் இருந்து வேர்வையில் நின்று வேலை பார்த்தவனுக்கு, வீட்டிற்கு வந்து, ஒரு குளியல் போட்டதும்தான் பிரஷானது போல் இருந்தது.

அவன் வந்தது கூட தெரியாமல் பூர்ணி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.  பூர்ணியின் அருகில் வந்து படுத்தவன், அவளைச் சுற்றி கைகளை போட்டு தன்னோடு இறுக்கி, அணைத்துக் கொண்டு படுத்தான்.

இவனது தொடுதலில் முழித்தவள், கண்களைத் திறந்து பார்த்தாள்.

“தூங்குடா…  எழுப்பிட்டனா….”

ஹ்ம்ம்…. என முனகிக் கொண்டே கணவனது மார்பில் ஒன்றியவள், திரும்பி கடிகாரத்தைப் பார்த்து, அவனை முறைத்தாள்.

அவள் எதற்கு முறைக்கிறாள் என தெரிந்தவன்,  “வேலையிருந்ததுடா…”

“மணி என்ன ஆகுது…..?  வர வர ரொம்ப அநியாயம் பண்றீங்க நீங்க…” என திரும்பி படுத்துகொண்டாள்.

“ஒரு பெரிய ஆர்டர் டா.  நாளைக்கு டெலிவரி பண்ணனும்.  அதுக்கான அரேன்ஜ்மன்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டு வர லேட்டாகிடுச்சு”.

“அதான் இதெல்லாம் பார்க்கன்னு, வேலைக்கு ஆள் வைச்சிருக்கீங்க இல்ல, அவங்க பார்க்கமாட்டாங்களா…?”

“வேலை செய்யறவங்க இவ்வளவு நேரம் இருப்பாங்களா….?  கடை  க்ளோஸ் பண்ற டைம்கு  வீட்டுக்கு கிளம்பிடுவாங்க டா”.

“என்னவோ பண்ணுங்க.  சொல்ற எதையும் கேட்கறதில்ல” என முனகிக்கொண்டே படுத்துவிட்டாள்.

பூர்ணி…

ஹ்ம்ம்…

“முகத்தை அந்த பக்கம் திருப்பிகிட்டா… எப்படி பேசறதாம்?  என்னை பாருடா…”

“எப்பப்பாரு… நடுராத்திரில வந்து டிஸ்டர்ப் பண்ணவேண்டியது.  இதான் உங்களுக்கு பொண்டாட்டியோட பேசற நேரமா…?”

அவளை அலேக்காக தூக்கி தன் மேல் படுக்க வைத்தவன், அவளது தாடையைப் பிடித்து நிமிர்த்தி, “நமக்கு பாப்பா இருந்தா எப்படியிருக்கும்…?”

“ங்கே….” என முழித்தாள்.  என்ன ஆச்சு இவனுக்கு…?  நான் குழந்தைய பத்தி பேசனாகூட இன்ட்ரஸ்ட் காமிக்க மாட்டான்.  இன்னைக்கு என்னவோ அதிசயமால்ல இருக்கு.  பேசறது இவன்தானா…. என பார்த்தாள்.

“உன்னை மாதிரியே… இந்த குட்டி மூக்கு,  இந்த ஆரஞ்சு உதடு, இந்த அழகான கண்ணுன்னு…, இது எல்லாம் வச்சு, அப்படியே உன்னை மாதிரியே அழகா ஒரு குட்டி நிலா எனக்கு வேணும்… டா  பெத்துதரியா….”

என்னமோ கடையில பொம்மை விக்குது வாங்கி தரியான்ல கேட்கறான்.  அதுவும் பொம்பளை பிள்ளை….  என்னை மாதிரியேதான் வேணுமாமே சாருக்கு.  நிச்சயம் இவனுக்கு இன்னைக்கு என்னவோ ஆயிடுச்சு..

“அதிசயமா இருக்கு.  அன்டைம்ல வந்ததால ஏதாவது காத்து கருப்பு பிடிச்சுடுத்தா என புருஷனை…”

“கிண்டல் பண்ணாதடா…?  ஏன் எனக்கெல்லாம் ஆசை இருக்ககூடாதா…?”

“யார் வேணாம்னு சொன்னா….?  இல்ல… எப்பவும் அந்த தொழிலே கதின்னு இருப்பீங்களே….  அதான் மைல்டா டவுட்டு வந்துச்சு….”

“அவளது காதை செல்லமாக பிடித்து திருகியவன், உனக்கு என் தொழிலை பேசலனா தூக்கம் வராதே…  சொல்லுடா…..”

……………..

“செல்லம்மா….”

“ஹ்ம்ம்………”

“நாம குழந்தை பெத்துக்கலாமா….?”

அவனது வார்த்தையில் இன்னும் நம்பிக்கை வராமல் குறுகுறு என பார்த்தவள், “என்ன திடீர்னு ஞானோதயம்?  இத்தனை நாள், நான் கேட்டப்ப எல்லாம்… ஐயா வாயே திறக்கல”.

அவளது முகத்தில் ஆட்காட்டி விரலால் கோலமிட்டவன்,  “என்னவோ கொஞ்ச நாளாவே பாப்பா வேணும்னு ஆசையா இருக்குடா…..” என்றான்.

………….

“பிஸ்னச பார்த்தா……… இன்னும் தள்ளிப் போயிட்டேதான் இருக்கும்.  அதுவரைக்கும்…, என்னால அவ்வளவு நாள்லாம்…, வெயிட் பண்ண முடியாது.  நீ என்ன சொல்ற…? உனக்கு ஓகேவா……?”

“நிஜமாதான் கேட்கறீங்களா….., இல்ல என்னை கன்வின்ஸ் பண்றதுக்காக…”

“ச்ச ச்ச  என்னடா… நீ.  இதுல போய்… விளையாடுவேனா…  ம்ம்….  இன்னுமா என் பொண்டாட்டிக்கு…, என மேல நம்பிக்கை வரல…..” என மூக்கோடு மூக்கை வைத்து உரசினான் சரசமாக.

“அப்படின்னா… எனக்கும் டபுள் ஓகே சாரே… என அவனை இறுக அணைத்துகொண்டவள், இதழ் விரித்து சிரித்தாள்.

                                                       _____________

காலிங் பெல் சத்தத்தில் சரசின் கையிலிருந்த ரித்தேஷ் துள்ளி இறங்கி கதவை நோக்கி தவழ ஆரம்பித்தான் வேகமாக.

“ரித்து குட்டி இருடா….” என  பேரனை பார்த்து சிரித்துகொண்டே… அவனைத் தாண்டி வந்து கதவைத் திறந்தார் சரசு.  வெளியில் நின்றிருந்த தந்தையைப் பார்த்ததும், சந்தோஷத்தில் துள்ளி குதித்தான் ரித்தேஷ்.

“உன்னையே சமாளிச்சுடலாம் போல.  உன்பிள்ளைய சமாளிக்க முடியலடா ப்பா… பெல் சவுண்ட் கேட்டதும், என் கையிலிருந்து துள்ளி குதிச்சு இறங்கி, என்ன பாஸ்டா வர்றான்ற உன் பையன்.  இன்னும் ஒரு வயசுகூட ஆகல.  அதுக்குள்ளவே, அப்பா வர்ற நேரம், அம்மா வர்ற நேரம் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கு இந்த வாண்டு…” என பேரனின் புகழ் பாடினார் சரசு.

மகனைப் பார்த்ததும் சங்கருக்கு புன்னைகை வந்தது.  உள்ளே நுழைந்ததும் “அப்பாக்காக வெயிட் பண்ணீங்களா…. செல்லம்” என மகனை வாரியெடுத்துக்  கொஞ்சினான்.

தந்தையைக் கண்ட குஷியில் பொக்கை வாயைத் திறந்து, எச்சில் ஒழுக, சிரித்தது குழந்தை.

சரசு, “டேய் எத்தனை தடவை சொல்லியிருக்கேன், வெளியிலிருந்து வந்ததும் அப்படியே குழந்தைய தூக்காதன்னு….”

“இவனைப் பார்த்தவுடனே தூக்கிட்டேன் ம்மா……., இவனைப் பிடிங்க, பிரஷ் ஆகிட்டு வரேன்” என உள்ளே சென்றான்.  அதற்குள் சினுங்க ஆரம்பித்துவிட்டான் குழந்தை.

சரசு, குழந்தையை தூக்கிக் கொண்டே கிட்சனிற்கு சென்று அவனுக்கு பால் சூடு செய்து, குடிக்கும் பதத்திற்கு ஆத்தி புட்டியில் போட்டு கொண்டுவந்தார்.

அதற்குள் சங்கரும் வந்து மகனை வாங்கிக் கொண்டான்.  சோபாவில் உட்கார்ந்து மடியில் மகனை உட்கார வைத்து, பாலை புகட்டினான்.

சமத்தாக பால் புட்டியை தனது இரு கரத்தாலும் பிடித்துக் கொண்டு, தந்தையின் கையில் சாய்ந்து கொண்டு, சங்கரை பார்த்துக் கொண்டே பாலைக் குடித்தது.

“நான் பார்த்துக்கறேன் ம்மா……  நீங்க போய் கொஞ்ச நேரம் படுங்க”.

சரசுக்கும் ஓய்வு தேவைப்பட்டதால் தலையசைத்து சென்று படுத்தார்.

மகனுடன் உட்கார்ந்து வெகு நேரம் விளையாடிக் கொண்டிருந்தவன், அவன் தூக்கத்திற்கு சொக்கவும், தூக்கிக் கொண்டு போய் தட்டிக் கொடுத்து தூங்க வைத்து, தானும் அவனுடன் படுத்து விட்டான்.

மாலை வேலையிலிருந்து பானு வந்து பார்க்கும் போது மகன் தந்தையின் மீது காலைப் போட்டுக்கொண்டு உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து முறுவலித்தாள்.

சங்கர் மகனை அவனது கைகளால் அணைவாக பிடித்துக் கொண்டு படுத்திருந்தான்.  மகனும் தந்தையின் கழுத்தை கட்டிகொண்டு படுத்திருந்தான்.

அன்று சனிக்கிழமை, சங்கர் அரைநாளிலேயே வீட்டிற்கு வந்திருந்தான்.  பானு வேலை முடித்து வருவதற்கு மாலை ஆகியிருந்தது.

கணவனும் மகனும் தூங்கும் அழகை நின்று ரசித்தவள், அப்படியே அதனை போனில் போட்டோ எடுத்து சேமித்துக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!