Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய்

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 27 (நிறைவு பகுதி)

அத்தியாயம்    27  (2)

இவள் சென்று குளித்து வருவதற்குள் இருவரும் முழித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள், கட்டிலில்.

தாயைப் பார்த்ததும் இருகைகளையும் தூக்கி தாவினான் ரித்து.  சிரித்துக் கொண்டே வந்து மகனை தூக்கி கொஞ்சியவள், அவனுக்கு பசியாற்றினாள்.

அவனுக்கு பால் புகட்டியவுடன் உடல் துடைத்து, சட்டை மாற்றி வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் பார்க்கிற்கு சென்றனர் பானுவும், சங்கரும் மகனைத் தூக்கிக் கொண்டு.



Advertisement

பார்க்கிற்கு செல்வதென்றாலே ரித்துக்கு குழியாகிடும்.  அங்கு விளையாடும் சிறுவர்களைப் பார்த்து தானும் அவர்களைப் போல விளையாட விரும்பி, கீழே இறங்க முயற்சி செய்வான்.  கீழே விடாமல் ஊஞ்சலில் உட்கார வைத்து மெல்ல ஆட்டி, விளையாட வைத்து, அழைத்து வருவார்கள் பானுவும் சங்கரும்.  சில சமயம் அழுது அடம்பிடித்து, அந்த பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவதும் உண்டு.

அன்றும் அதுபோலவே வெகுநேரம் வரை பார்க்கில் ஆட்டம் போட்டு வந்தவன், வீட்டிற்கு வந்து பால் குடித்து, களைப்பினால் உறங்கிவிட்டான்.  பானுவும் உண்டுவிட்டு மகனுடனேயே படுத்து உறங்கியிருந்தாள்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள், சில்லென கன்னத்தில் ஈரத்தை உணர்ந்து, கண் விழித்து பார்த்தாள்.  சங்கர் நின்றிருந்தான் பக்கத்தில்.  திரும்பவும் அவளது கன்னத்தில் முத்தமிட்டவன், உதட்டில் கைவைத்து, சைகையால் சத்தம் போடாமல் அவளை எழுந்து வரச் சொன்னான்.

Advertisement

திரும்பி மகனைப் பார்த்தாள்.  அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான்.  ரித்து புரளாமல் இருப்பதற்காக இரு பக்கமும் தலையணையை வைத்துவிட்டு, எழுந்து வெளியே வந்தாள்.

Advertisement

அங்கே ஹாலின், பால்கனியில் இருந்த மூங்கில் கூடை ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தான் சங்கர்.  அவனுக்கு முன்னால் ஸ்டூல் போட்டு, அதில் கேக் வைக்கப்பட்டிருந்தது.  அங்கிருந்தே கைநீட்டி மனைவியை அழைத்தான் அருகே வரச்சொல்லி.

அதைப் பார்த்ததும் பானுவின் முகத்தில் குறுநகை தோன்றியது.  மெல்ல நடந்து அருகே வந்து நின்றவளை,  கையைப் பிடித்து இழுத்து மடியில் சாய்த்து அமர வைத்து, தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டு, அவளது பின்னங்கழுத்தில் முகம் புதைத்து “ஹேப்பி பர்த்டே பேபி…………” என்றான் ஹஸ்கி வாய்ஸில்.

கணவனை உணர்ந்து மென்னகை புரிந்தவள், அவனது கையை விலக்கி உட்கார்ந்தவாக்கிலேயே திரும்பி அவன் முகம் பார்த்தாள்.

Advertisement

“என்னடி வேணும்…?  பர்த்டேக்கு……….”

“ம்கூம்………..”

“என்ன ம்கூம்…………?  நானும் ஒரு வாரமா……. கேட்டுட்டிருக்கேன்……..  ஒன்னும் சொல்லல நீ……….”

எதிரில் ஹார்ட் வடிவில், அதே ரெட் வெல்வட் கேக்.  அதன் மீது ஒற்றை மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது.

பானுவை மடியில் தாங்கியிருந்தவன், உட்கார்ந்த வாக்கிலேயே அவளது முதுகை தன் நெஞ்சோடு அழுந்த அணைத்தபடியே எழுந்து நின்றான்.  பானுவின் காதோடு… உதட்டைவைத்து காதல் ததும்பும் குரலில்… “ஹேப்பி பர்த்டே பியூட்டி” என ஹஸ்கி வாய்சில் வாழ்த்து சொல்லி, மெழுகுவர்த்தி ஊத வைத்து, கேக் கட் பண்ண வைத்தான் பானுவை.

சந்தோஷமாக கேக்கை கட் செய்தவள்,  ஒரு சிறிய கேக்துண்டை எடுத்து சங்கருக்கு ஊட்டி விட்டாள்.  அவனும் அவளுக்கு கேக் எடுத்து ஊட்டினான்.

திரும்பி பக்கத்தில் இருந்து ஒரு பாக்ஸை எடுத்து, “என்னோட அழகிக்கு… மாமாவோட சர்ப்ரைஸ்” என அவளிடம் கொடுத்தான் ஒற்றை கண்ணை சிமிட்டிபடியே.

அதனை கையில் வாங்கியவள், ஆச்சர்யமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“பிரிச்சு பாரு……..டி”

பாக்ஸை பிரித்து பார்த்தவளுக்கு ஆனந்தம் கலந்த ஆச்சர்யத்தில் முகம் பிரகாசித்தது.

வெகு நாட்களுக்கு முன்பு பிரபல நகை கடையிலிருந்து பேப்பரில் வந்திருந்த ஒரு நகைக்கான விளம்பரப் படத்தைக் காட்டி, நல்லாயிருக்கு இல்ல, என்றிருந்தாள் சங்கரிடம்.  அதை மறக்காமல் நினைவு வைத்து… அதே மாடலில் வாங்கி வந்திருந்தான் சங்கர்.

“பிடிச்சிருக்கா…. பேபி”

“ஹ்ம்ம்…”  என ஒற்றை விரலால் அதனை வருடி நின்றாள் ஆசையாக பார்த்துக்கொண்டே.

அவள் கையிலிருந்த பாக்ஸை வாங்கி, உள்ளிருந்த செயினை வெளியில் எடுத்தவன், பானுவின் கழுத்தில் மாட்டிவிட்டு.  அவளை திருப்பி அங்கிருந்த கண்ணாடியில் பார்க்க வைத்தான்.

மெல்லிய நூலிழைப் போன்ற செயினில், ஹார்ட் ஷேப்பில் சின்ன சைஸில் வைரக்கற்கள் பதித்த பென்டன்ட் என அழகாக இருந்தது அவள் கழுத்தில் அந்த செயின்.

பானு, “பியூட்டிபுல்லா இருக்குங்க…. தேங்க்ஸ்”.

அவளைத் திருப்பி தோளில் கைப்போட்டு நெற்றியில் முட்டியவன், அவளது கண்களில் முத்தமிட்டு, கன்னக்கதுப்புகளில் உதடுகளால் உரசி நின்றான்.

“பாப்பு….. முழிச்சிப்பான்”.

ஹ்ம்ம்…

“அத்தை வரப்போறாங்க…..”

ஹ்ம்ம்..   ரொம்ப நாளாச்சில்ல நாம இரண்டுபேரும் இதுமாதிரி தனியாயிருந்து என அங்கிருந்த மூங்கில் கூடை ஊஞ்சலில் அமர்ந்தவன், அவளையும் மடியில் அமர்த்திக் கொண்டு, மனைவியின் முதுகை தன் நெஞ்சோடு சாய்த்து அழுத்தி கட்டிக் கொண்டு, அவளது கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்தான்.

பானு…..

ஹ்ம்ம்…

“ஐ லவ் யூ டி…..”

“நானும்….”

“சந்தோஷமாயிருக்கியா….”

“ரொம்ப….”

“நான் லக்கிதான்டி… நீ கிடைக்க….  ஐ லவ் யூடி…  பொண்டாட்டி..” என கொஞ்சினான்.

வெகு நாட்கள் ஆகியிருந்தது, அவர்கள் இருவரும் இது போல தனியாக அமர்ந்து மனம் விட்டு பேசி…  மகன் பிறந்ததற்கு பிறகு இருவருக்குமிடையான தனிமை குறைந்திருந்தது.

இன்று அதற்கான வாய்ப்பு கிடைக்கவும், அதனை இழக்க மனமில்லாமல், அந்த ஏகாந்தத்தை அனுபவித்து களித்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு.

“ம்மா………… நானு….. நானு………..” என மழலையில் மிழற்றி சினுங்கிய மகளை கீழே இறக்கி விட்டாள் பூர்ணி.  பட்டுப் பாவாடை சட்டையில், காலில் போட்டிருந்த வெள்ளிகொலுசு ஒலியெழுப்ப தத்தி தத்தி…………. நடக்க ஆரம்பித்தாள் வெண்ணிலா.  பார்க்கவே ஓவியமாக இருந்தது.

பொருட்கள் ஏதும் இல்லாத அந்த வெறும் கட்டடத்தில் அவளது கொலுசில் பதித்திருந்த முத்துக்களின் ஒலி எழுப்பிய சத்தம் நாலாப்புறமும் பட்டு காற்றில் எதிரொலித்தது.

தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த மதுசூதனன் மகளின் கொலுசொலியை அடையாளம் கண்டு, திரும்பி பார்த்து சிரித்தான்.

குட்டி தேவதை தன் பிஞ்சு பாதங்களை தரையில் பதித்து நடந்து வரும் அழகை ரசித்து, மகளையே பார்த்திருந்தான் மது.  தகப்பனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள் நிலா.  அவள் பின்னாலேயே பூர்ணி மகளுக்கு அரணாக வந்து கொண்டிருந்தாள்.

மதுவை நெருங்கியதும், அவனது கால்களைக் கட்டிக் கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தவளை வாரி அள்ளிக்கொண்டான்… புன்னகையுடன்.

“பாப்பா சூப்பரா நடக்கறீங்களே….?” என மகளை கொஞ்சியவன், பூர்ணியிடம் திரும்பி “சாப்பிட்டாளா…….?” என்றான்.

பூர்ணி, “பாதிதான்… மீதியை துப்பியாச்சு…. உங்க பொண்ணு.  ரொம்ப விவரம்.  இந்நேரம் ஜம்மு பாட்டி செய்யற இட்லின்னா சத்தமில்லாம இறங்கியிருக்கும்.  இன்னைக்கு ஒரு நாள் பொங்கல் சாப்பிடுடின்னா…  அழிச்சாட்டியம் பண்றாள்” என அலுத்துகொண்டாள்.

மது சிரித்துகொண்டே, “ஏன்டா………….. தங்கம்?   சரியா சாப்பிடலனா……. பாப்பாக்கு பசிக்குமே…” என கொஞ்சினான்.

“ம்க்கும் விளங்கிடும்…. சாப்பிட சொல்லி மிரட்டுவாருன்னு பார்த்தா… கொஞ்சிட்டிருக்காரு… இது ஆவறதில்ல…”

மது நிலாவைத் தூக்கி வைத்திருப்பதைப் பார்த்து, பானுவின் மடியில் உட்கார்ந்திருந்த அவளது மகன் ரித்துவும் இறங்கி வந்தான் மதுவிடம் தூக்கச்சொல்லி.  நிலாவை விட ரித்து இரண்டு வயது பெரியவன்.  அவனையும் இன்னொரு தோளில் தூக்கியவன், இருவரையும் தூக்கிக் கொண்டு வெளியே நடந்தான்.

இவர்கள் வெளியே சென்றதும், பூர்ணி சென்று வீட்டு மனிதர்களுடன் அமர்ந்து கொண்டாள்.

பூர்ணியின் பேரில் புதிதாக கட்டியிருந்த திருமண மண்டபம் திறப்பு விழா பூஜைக்குதான், குடும்பம் சகிதமாக எல்லோரும் வந்திருந்தனர்.

அதிகாலையிலேயே திறப்பு விழாவிற்கான பூஜைகள் எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது.  வந்திருந்தவர்களுக்கு எல்லாம் இங்கேயே விருந்தும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

பூர்ணியின் வீட்டிலிருந்தும் எல்லோரும் வந்திருந்தனர்.  பூஜை முடிந்து, காலை சாப்பாடு முடியும் வரை இருந்தவர்கள், அதன்பின் சாப்பிட்டு கிளம்பியிருந்தனர்.

செல்விக்கு பரம சந்தோஷம் பூர்ணியின் வாழ்வைப் பார்த்து.  அவருக்கு பூரண திருப்தி.  தன் தங்கை மகளது வாழ்வை கண்டு.  சென்னையில் பூர்ணியின் பெயரில் இருந்த சொத்துக்களை எல்லாம் விற்று எடுத்து வந்து, சிதம்பரம் அவுட்டரில் நிலம் வாங்கிப் போட்டு, இதோ அதில் திருமண மண்டபமும் கட்டிவிட்டான் மதுசூதனன்.

மதுசூதனனுக்கு இங்கிருக்கும் அவனது தொழிலை பார்க்கவே நேரம் இன்றி ஓடியவன், சென்னையில் இருந்த பூர்ணியின் சொத்துக்களை பார்க்க, பராமரிக்க சிரமப்பட்டான்.

அவனது சிரமத்தை பார்த்த பூர்ணி அவற்றை விற்று, இங்கு ஏதாவது இன்வெஸ்ட் செய்யலாம் என யோசனை கூறியிருந்தாள்.

அவனுக்கும் அந்த யோசனை சரியாக படவே அதன்படியே அவற்றையெல்லாம் விற்று வந்த பணத்தில், நிலம் வாங்கி கல்யாண மண்டபமும் கட்டியிருந்தான் பூர்ணியின் பெயரில்.

அவர்களே எதிர்பாராத அளவு சொத்தின் மதிப்பு கூடியிருந்ததால், அதிலிருந்து வந்த பணத்தை வைத்தே லோன் இல்லாமல் கட்டி முடித்தான்.

காலி மனை, வீடுகள், கடைகள் என எல்லாவற்றையும் விற்று, அதில் கிடைத்த பணத்தில் பெரிய இடமாகவே வாங்கி, திருமண மண்டபத்தை பெரிய பரப்பளவில் விஸ்தாரமாகவே கட்டியிருந்தான்.

கிட்டத்தட்ட திருமண கூடத்தில் ஆயிரம் பேர் உட்காரும் அளவு பிளான் செய்து கட்டியிருந்தான்.

வெளியே குழந்தைகளை அழைத்துச் சென்ற மது, அவர்களுக்கு பிடித்த சாக்லேட், ஐஸ்கிரீம் என எல்லாம் வாங்கிக் கொடுத்து அழைத்து வந்திருந்தான்.

பானு, “ண்ணா ஏற்கனவே அவனுக்கு சளி, இதுல ஐஸ்கிரீம் வேறயா………”

“அடிக்கிற வெய்யிலுக்கு எதுவும் செய்யாதுடா….”

இருவரும் கையிலிருந்ததை அங்கிருந்த காலி சேரில் வைத்து, ஆளுக்கு ஒன்று என பிரித்து பங்கு போட்டு சாப்பிட ஆரம்பித்தனர்.

பூர்ணி, “இப்ப அவள் டிரஸெல்லாம் சாக்லேட் ஆகப்போகுது பாருங்க” என மதுவை முறைத்தாள்.

ஜமுனா பேத்தியை தூக்கி அங்கிருந்த சேரில் உட்கார வைத்து,  பக்கத்திலேயே பேரனையும் சேர் போட்டு அமரவைத்தார்.

மது சங்கரை அழைத்துச் சென்று எல்லா இடத்தையும் சுத்தி காண்பித்தான்.

சங்கர், “நல்லா பிளான் பண்ணி கட்டியிருக்கீங்க… மச்சான்”  பல நாள் ஐடியாவோ….?

ஹா… ஹா… அதுலாம் இல்ல மாப்பிள்ளை.  முதல்ல லேன்டா வாங்கி போடலாம்னுதான் பேசிட்டிருந்தோம்.  “சும்மா லேன்டா வச்சிருக்கறதவிட, கல்யாண மண்டபமா கட்டிட்டோம்னா…. வருமானத்துக்கும் வழியான மாதிரியாயிருக்கும், யோசனை பண்ணிதான்….. கையோட கட்டிட்டோம்…”

ஹ்ம்ம். நல்ல ஐடியாதான்…..

முன்பக்கம் பார்க்கிங்கிற்கு என நிறைய இடம் விட்டு கட்டியிருந்தார்கள். அதேபோல மண்டபத்தை சுற்றியும் கார்டன் வைப்பதற்காக இடம் விட்டு,  அதில் பூச்செடிகளையும் நட்டிருந்தனர்.

மண்டபத்தின் முன்புறம் வாஸ்துப்படி சின்னதாக வினாயகர் சிலை வைத்து கோவில் எழுப்பியிருந்தனர்.

கீழே திருமண கூடமும், மேலே சாப்பாட்டிற்கான இடமும், அதன் மேலே தங்குவதற்கான அறைகள் கட்டப்பட்டிருந்தன.

சங்கர், பிளான் எல்லாம் யாரோடது மச்சான், நீங்களா……? தங்கச்சியா……..?

மது. இரண்டு பேரும் சேர்ந்து தான் பிளான் பண்ணோம்.  இப்ப இது அவுட்டரா இருந்தாலும், போக போக டெவலப் ஆகிடும்னு, முடிவு பண்ணி கட்டினோம்.

பக்கத்திலேயே ஹைவேஸ் ரோடு போடறதால நிச்சயம் டெவலப் ஆகிடும் என்றான் சங்கர்.

மதியம் போல் எல்லோரும் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினர்.  மாலை வரை அவர்களுடனேயே இருந்த சரசு, சங்கர், பானு எல்லோரும் இரவு உணவை அங்கேயே முடித்து, ரித்துவை தூக்கிகொண்டு, அவர்களது வீட்டிற்கு சென்றனர்.

அதிகாலையிலேயே எழுந்திருந்த அசதியில் ஜமுனா, கலியமூர்த்திகூட சென்று படுத்துவிட்டனர்.  மகளுக்கு கதை சொல்லி உறங்க வைத்த பூர்ணி, அவளுக்கு போர்வை போர்த்தி, நெற்றியில் முத்தமிட்டு, மெல்ல திரும்பி கணவனோடு ஒட்டி படுத்தாள்.

மது, ‘’பாப்பா தூங்கிட்டாளா…………..?’’

பூர்ணி, “ஆச்சு………  தூங்கறதுக்குள்ள ஒரு வழி பண்றா….. உங்க பொண்ணு.  தினம் இவளுக்காகவே புது புது கதையா தேடி…… படிக்க வேண்டயதா….. இருக்கு.  கதை சொல்லலனா… தூங்கமாட்டேன்றாள்…”

மது, “ஹா… ஹா… டீச்சரம்மாக்கு…… அதைவிட என்ன வேலையாம்………..?”  என இறுக்கிக் கொண்டான், அவனோடு சேர்த்து.

காலமும் சூழ்நிலையும் எதையும் மாற்றவல்லது.  மனத்தின் எண்ணங்களும் ஆசைகளும் அகற்கு தகுந்தாற் போல மாறவல்லது.

வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து, நிதர்சனத்தை உணர்ந்து, தெளிந்த நீரோடைபோல காலத்தின் போக்கில் வாழ ஆரம்பித்த மதுசூதனன் பூர்ணி தம்பதியருக்கும், சங்கர் பானு ஜோடிக்கும் வாழ்வு வசமாகி, வசந்தமானது.

இனி இவர்கள் வாழ்வில் எல்லாம் சுபமே.

சுபம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!