Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 10.2

“என்னை மன்னிச்சுடும்மா என்று கட்டிக்கொண்டாள் அன்னையை.

“குழந்தைகள் காது குத்து, குலதெய்வ கோவில் பூஜைனு குடும்பத்துல சின்ன விஷேசம்னாலும் பெரியவங்களுக்கான மரியாதை கொடுத்து அவங்களை முன்நிறுத்திதான் விஷேசம் பண்ணுவோம்.

ஆனா நீ… வாழ்க்கையில மிக முக்கியமான விசயமான கல்யாணத்தையே நாங்க இல்லாம பண்ணிக்கிட்ட. உன் மனசுல எங்களுக்கான இடமும் மரியாதையும் என்னனு காட்டிட்ட.

பெரியவங்க பார்த்து செய்து வைக்கிற கல்யாணத்துல பிரச்சனை வந்தா, அதை தட்டி கேட்க நாங்க இருப்போம். ஆனா பெத்த பிள்ளை நீயே எங்களை மதிக்காம கல்யாணம் செய்துக்கும்போது, உன் புருசன் வீட்டுல எங்களுக்கான மரியாதை எப்படி கிடைக்கும்? அப்படி மரியாதை இல்லாத வீட்டுக்கு நாங்க எதுக்கு வரனும்?என்றார் வேதனையோடு.



Advertisement

காவ்யா கண்ணில் நிற்காமல் கண்ணீர் வர, “தாய்க்கு அப்புறம் பொண்ணுங்களுக்கு பிறந்த வீட்டு உறவு விட்டு போய்டக்கூடாதுனுதான் தாய்மாமன் முறைனு முன்னோர்கள் வழக்கம் கொண்டு வந்திருப்பாங்க.

உன் அண்ணனை மதிக்காம கல்யாணம் செய்துக்கிட்ட நீ… எந்த முகத்தை வச்சிக்கிட்டு உன் குழந்தைக்கு முறை செய்ய அழைப்ப? மரியாதை கொடுக்க வேண்டிய இடத்துல உதாசினம் செய்துட்டு, உன் தேவைக்கு கூப்பிட்டா அவன் வருவானா? அப்படி வரனும்னு என் மகனுக்கு என்ன இருக்கு? என்று கேட்க குன்றிப்போனாள் காவ்யா.  

“காதல் வேணாம்னு பெரியவங்க பயப்படுறதுக்கு காரணம் உங்க ஆசையை நிராசையாக்கனும்ன்ற எண்ணத்துல இல்ல. ஊர்பேர் தெரியாதவனை நம்பி பிள்ளைங்க வாழ்க்கை நாசமாகிடுமோன்ற பயத்துலதான்.

Advertisement

நீங்களா தேடிக்கிற வாழ்க்கை சரியா அமையலைனா தினம் தினம் நரகம்தான். அப்படியொரு நிலைமை பிள்ளைகளுக்கு வரக்கூடாதுனுதான் பெத்தவங்க பாடா படுறோம்…

Advertisement

காதலிச்சவன் ஏமாத்துக்காரனா இருந்தா வாழ்க்கை எத்தனை பெரிய நரகமா இருக்கும்னு மேகலை பார்த்துக் கூடவா உனக்கு புரியல? என்றார் வேதனையோடு

காவ்யா பேச்சற்ற நிலையில் அமர்ந்திருந்தாள். சாப்பாடு மேஜையில் காத்திருக்க, விஷ்ணு குரல் கேட்கவும், “நான் அப்புறம் சாப்பிடறேன்ம்மா என்று தனதறைக்குள் வந்துவிட்டாள் காவ்யா.

தனது அப்பா ஒரு பெயிண்ட்டர், அம்மா இல்லத்தரசி. அண்ணன் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறான். சொந்த வீடில்லை. இப்படி வீட்டுலயிருந்து வந்த உனக்கு எங்க வீட்டு வசதி கசக்குதா?

Advertisement

நகை பணம்னு நான் உன்கிட்ட ஏதும் எதிர்பார்க்குல. பெரிய இடத்துல பொண்ணு அமையிலனு அம்மா ஆதங்கத்துல பேசுவாங்க. பெரியவங்க அப்படித்தான் இருப்பாங்க. நீதான் அட்ஜஸ்ட் பண்ணனும். தினமும் கம்பெனி விட்டு வந்ததும் நொய் நொய்னுட்டு இருக்காத, கடுப்பாகுது. என்ற திவாகரின் வார்த்தைகளை வலியோடு நினைத்திருந்தாள்.

பலமணி நேர யோசனைக்கு பிறகு, இத்தனை நடந்த பின்னும் கூட தனது வாழ்க்கை வீணாகிவிட்டதென்றும், பெற்றோருக்கு துரோகம் செய்துவிட்டோம் என்று மட்டும்தான் நினைத்திருந்தாள்.

அன்னையின் பேச்சிற்கு பின்னேதான் தான் புகுந்த இடத்தில் தனது பெற்றோரின் மரியாதையையும், உடன் பிறந்தவனின் மரியாதையும் பற்றி யோசித்தாள். இத்தனை குறுகிய எண்ணத்தோடா இருந்திருக்கிறோம் என்று பெரும் வேதனையில் உழன்றாள்.

தனக்கான மரியாதையோடு, தனது தாய் தந்தைக்கான மரியாதையும் திவாகர் மற்றும் அவனின் குடும்பத்தினர் கொடுக்க வேண்டும். இல்லையேல் திவாகரோடு வாழ்வை துறந்திடனும் என்று முடிவெடுத்தாள் காவ்யா. இப்படி முடிவெடுத்த பின்னே மனம் சற்று சமன்பட்டது.       

அடுத்த நாள் காலை மேகலையிடம் மன்னிப்பு வேண்டினாள் காவ்யா. “விஷாலினிக்கு பாட்டு, பரதம்னு நீ கத்துக்கிற எல்லாமும் கத்துக்கொடுத்த. நீயும் என் பொண்ணு மாதிரிதான். மன்னிப்பெல்லாம் வேண்டாம். இனி கவனமா இரு. எதுவானாலும் அம்மாகிட்ட கேட்டுட்டு முடிவெடு என்றார் மேகலை.     

தந்தை சொன்னது போல வீட்டருகே இருக்கும் கல்லூரியில் முதுநிலை படிப்பில் சேர்ந்திருந்தாள் காவ்யா

எட்டு மாதங்கள் முடிந்திருந்தது.

குரூப் ஒன் தேர்வின் அனைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெற்று DSP பதவிக்கான ஆர்டரை கையில் வைத்தபடி தந்தையின் வரவிற்காக காத்திருந்தான் தனதறையில்.

காவ்யா கல்லூரிக்கு சென்றிருந்தாள். அன்னை மட்டுமே வீட்டிலிருக்க, “ம்மா எதாவது ஸ்வீட் செய் என்றான்.

பல மாதங்களுக்கு பிறகு இன்றுதான் மதிய நேரம் விஷ்ணு வீட்டிலிருக்கிறான் என்பதே மகிழ்வை கொடுக்க, மகனின் முகப்பொலிவிலும் இனிப்பு கேட்டதிலும் மேலும் மகிழ்ந்து, கிச்சன் சென்றார் மகிழ்வோடு.

வேலை கிடைச்சிடுச்சா என்று கேட்க நினைத்தார் பிரபாவதி. ஆனால் அதுவல்லாது வேறு எதாவது விசயமாக இருந்தால் மகன் வருந்துவானே என்று ஏதும் கேளாமல் இனிப்பை செய்ய ஆரம்பித்தார்.

ஹாலில் அமர்ந்தவன் விஷாலினி தங்களை நோட்டமிட வழக்கமாய் நிற்கும் இடத்தில் பார்வையை பதித்தான். இன்று மட்டுமல்ல, சில மாதங்களாகவே வீட்டிற்குள் நுழையும் போதெல்லாம் அவளின் நினைவு வராத நாளில்லை. இங்கு நின்றுதானே அன்று அப்படி பேசினாள் என மெச்சிக்கொள்வான் மனதோடு.

எதாவது தேவையென்றால் போன் செய் என்றிருந்தான். ஆனால் விஷாலினி இதுவரை போன் செய்ததில்லை. மாதம் இரண்டு அல்லது மூன்று முறை வீட்டிற்கு வருவாள். நான்கு மாதம் முன்வரை வீட்டிற்கு வரும்போதெல்லாம் பார்ப்பான். ஆனால் பேச மாட்டான். பேசக்கூடாதென்றில்லை. இத்தனை வருடம் தள்ளியிருந்துவிட்டு தற்போது என்ன பேசுவதென்று பேசாமலிருந்தான்.

கடந்த நான்கு மாதமாக விஷாலினி வீட்டிற்கு வரும் நாள் விஷ்ணு வீட்டில் இருப்பதில்லை. வீட்டில் இருந்தால் படிக்கும் எண்ணம் வராமல் போகவே கிரௌண்டிலேயே அதிகம் இருந்தான்.

குரூப் ஒன் தேர்வின் இரண்டாம் நிலை தேர்வு முடிவிற்கு பின்னே நேர்காணலுக்கு தயாராக வேண்டி தந்தையோடு பணிக்கு செல்வதையும் தவிர்த்திருந்தான். காலையில் உடற்பயிற்சி, பிறகு வீட்டிற்கு வந்து குளித்து, உண்டு கிளம்பினான் என்றால் மாலை பயிற்சியையும முடித்து ஏழு மணிக்கு மேல்தான் வீட்டிற்கு வருவான். நேர்காணலுக்காக நிறைய படித்தான்.

உடலும் மனமும் சரியில்லாத போதும் குடும்பத்திற்காக உழைக்கும் தந்தையிடம் தனது செலவிற்கென அதிக பணம் வாங்க மனமில்லாமல் போகவே தினமும் மதியம் அம்மா உணவகத்தில் உண்டுகொண்டான்.

மகன் தன்னோடு வரும்போதும் இப்படியே அவனின் எதிர்காலம் அமைந்திடுமோ என்று வருந்தினார். நான்கு மாதமாக விஷ்ணு தன்னோடு வராத போதும், கிடைத்த வேலையை தவறவிட்டோம், படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று வருந்துகிறானோ என்ற கவலையில் இருந்தார் கோபாலன்.

தினமும் மதியம் சாப்பிட வரதில்ல, காசும் வேணாம் சொல்ற…  ஐநூறுரூபா எத்தனை நாளைக்குடா பத்தும்? என்னதான்டா நினைச்சிட்டிருக்க? என்று கோபாலன் கேட்பார். எனக்கு தேவைனா வாங்கிக்கிறேன்ப்பா என்றிடுவான்.          

கோபாலன் வீட்டிற்குள் நுழையவும் விஷ்ணுவிற்கு அழைப்பு வரவும் சரியாக இருந்தது. நீண்ட நாள்களுக்கு பிறகு மதிய நேரம் மகனை காணவும் மகிழ்வோடு உள்ளே வந்தார் கோபாலன்.

பெற்றோரோடு நேரத்தை இனிமையாக செலவிட நினைத்து அழைப்பை ஏற்கவில்லை விஷ்ணு. கணவனின் வரவில் “வாங்க வாங்க… எதோ சந்தோசமான விஷயம் போல, ஸ்வீட் செய்ய சொன்னான் என பரபரத்தார் பிரபாவதி.

கோபாலன் முகம் மலர, விஷ்ணு அமைதியாய் சிரிக்க, மீணடும் அழைப்பு வந்தது விஷாலினியிடமிருந்து. விஷ்ணு மொபைலை எடுக்கப்போக, பிரபாவதி, “அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல என்னனு சொல்லு என்றார் ஆர்வமாக.

“எதோ DSP வேலையாம். அதுக்கு ட்ரைனிங்க்கு வர சொல்லியிருக்காங்க என்றான் நிறைந்த புன்னகையோடு.

ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது. மகனை ஆரத் தழுவிக்கொண்டார் கோபாலன். தானும் அணைத்துக்கொண்டவன், “ரொம்ப மெலிஞ்சிட்டிங்கப்பா” என்றான் வருத்தத்தோடு.

ஐந்து மாதம் முன்பு காவ்யாவின் கணவன் வீட்டிற்கு வர அழைத்திருக்கிறான். இனி பெற்றோர் அனுமதியில்லாமல் வரமாட்டேன். உன் பெற்றோரும் நீயும் என்னை தரக்குறைவாக நடத்தியதற்கு மன்னிப்பு கேட்டு, என் வீட்டிற்கு முறைப்படி அழைக்க வரவேண்டும்.

என் பெற்றாரிடம் மரியாதையாக பேச வேண்டும். இத்தனை செய்தாலும் என் பெற்றோர் சம்மதித்தால் மட்டுமே வருவேன் என்று திவாகரிடம் சொல்லிவிட்டாள் காவ்யா. மனைவி மூலம் இவ்விசயத்தை அறிந்திருந்தார் கோபாலன். ஆனால் மகனிடம் இதுகுறித்து ஏதும் சொல்லவில்லை.

மகள் கவலையோடு, மகனும் இலக்கில்லாமல் இருப்பதுபோல் தோன்ற வேதனையில் உடல் மெலிந்துவிட்டார் கோபாலன்.

“இனிமேல் எனக்கென்ன கவலை. உடம்பு தானா சரியாகிடும்” என்றார் மகிழ்வோடு.

விஷ்ணுவிற்கு மீண்டும் அழைப்பு வர, “கால் வந்திட்டே இருக்கு, இருங்கப்பா” என்று தந்தையிடமிருந்து விலகி மொபைலை எடுத்தவனுக்கு, அழைப்பு விஷாலினியிடமிருந்து என்றதும் ஆர்வத்தோடு அழைப்பை ஏற்றான்.

“இது… அவங்க நம்பர்தானே?” என்றவள், “ச்சு” என தன்னை தானே நிந்தித்து, “நீங்க” என்றதும், “நான் விஷ்ணு, ஏன் உளர்ற? எதாவது பிரச்சனையா?” என்றான்.

“நான்… எனக்கு… எனக்கு பதட்டமா இருக்கு, அந்தாள்… அந்தாள்…” என திணறி, “எனக்கு என்ன பண்ணனு தெரியல” என்றாள்.

யார் என்னவென்றெல்லாம் விஷ்ணு கேட்கவில்லை. “இதோ கிளம்பறேன், ஹாஃப் ஆன் ஹார்ல உன் காலேஜ்ல இருப்பேன், பதட்டப்படாத… காலேஜ்க்குள்ள நான் எங்க வரனும்னு மெஸேஜ் பண்ணு” என்று இணைப்பை துண்டித்து “ப்பா கட்டிடத்துக்கு போக வேணாம், வீட்ல இருங்க. வந்திடறேன்” என்று அவசரமாய் சொல்லி பைக்கை எடுத்தான்.

நாற்பத்தைந்து நிமிடங்களில் விஷாலினி படிக்கும் கல்லூரி முன் வந்தவன், குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாளா என்று தனது மொபைலை எடுத்து பார்த்தான்.

கல்லூரி மெயின் கேட்டில் காத்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள் விஷாலினி. இதுதான் மெயின் கேட் என்று யோசித்தவாறு கண்களை சுழற்றியபடி விஷ்ணு விஷாலினிக்கு அழைக்க, “இங்கதான் இருக்கேன்” என்று கையை உயர்த்தியபடி அவளும் கண்களை சுழற்றினாள். விஷாலினியை பார்த்தவன் நொடி நேரத்தில் அவள் முன்னே போய் நின்றான்.

கலங்கிய கண்களோடு அவளை பார்த்தவனது மனம் பதறித்தான் போனது. “என்னாச்சு? எதுக்கு அழுதிருக்க? அந்தாள்னு யாரை சொன்ன?” என்றான்.

“என் அப்பனாம். என்கிட்ட பேசனுமாம். எனக்கு அந்தாளோட பேச பயமில்ல. ஆனா… ஆனா… இந்தாளை திரும்ப என்னைக்கு பார்க்கிறேனோ அன்னைக்கு என் உயிர் போய்டும்னு, நான் வயித்துல இருக்கும்போதே என் அம்மா சொல்லியிருக்காங்க. அதான் பயமாகிடுச்சு.

நான் பேச மறுத்துட்டா அம்மாகிட்ட வந்திடுவானோனு ரொம்ப பயமாயிருக்கு. அந்தாள்கிட்ட நானே பேசிடறேன். ஆனா எப்போவும் எங்கம்மாவை பார்க்க முடியாத மாதிரி நீங்க எதாவது பண்றிங்களா?” என்றாள் மிகுந்த பரிதவிப்போடு.

“இதெல்லாம் ஒரு விசயமா? பண்ணிக்கலாம் பண்ணிக்கலாம்… பயப்படாத” என தேற்றி, “எங்க அவன்?” என்றான் கண்கள் சிவக்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!