Skip to content
Post Views: 10,627
கள்ளி காட்டு காதலியே!
அத்தியாயம் 10
சந்திரா, அவர்கள் இருவரையும் குறுகுருவென பார்க்க, விக்ரம் பார்வையை திருப்பி கொண்டான்.
பிரபா வெடுக்கென்று வேற பக்கம் பார்த்து நின்று கொண்டாள். லேசாக மழை விழ தொடங்க, நகர்ந்து போக முடியாது. இது ஒரு சின்ன பஸ் ஸ்டாண்ட். ஒரு டீ கடை மட்டும் தான் இருக்கும். இங்கிருந்து வரும் மினி பஸ் அல்லது ஷேர் ஆட்டோ தான் ஊருக்கு செல்ல வேண்டும்.
Advertisement
தள்ளி போய் நின்றால் உடை நனையும், வெள்ளை நிற சுடிதார். நீர் பட்டால் அவ்வளவு தான். முகத்தை தூக்கி வைத்து கொண்டு நின்று இருந்தாள்.
விக்ரம் தன் அக்காவை பார்த்தான். பிள்ளையை தூக்கி கொண்டு போய் டீயும், பிஸ்கட்டும் வாங்கி வந்தான். அங்கிருக்கும் ஒரு நாற்காலியை அக்கா அமர எடுத்து போட்டான்.
ஒரு சந்தேகத்தோடு தான் சந்திரா பார்த்து கொண்டு இருந்தாள். விக்ரம் என்னவோ தயவாக பார்ப்பதும், அவள் என்னவோ முறுக்கி கொண்டு நிற்பதும் பெருத்த சந்தேகமாக இருந்தது.
Advertisement
விக்ரம், அவன் அக்காக்கு செய்வதை எல்லாம் பார்த்து கொண்டு தான் இருந்தாள் பிரபா. அவனின் அக்கறையும், கவனிப்பும் அவளுக்கு புகைந்தது. தான் ஒரு பொருட்டே இல்லை அவனுக்கு, அவ்வளவு தான் அவன் காதல் போல… நெஞ்சு வலித்தது.
Advertisement
அவனோடு உரிமையாக கேட்கவும் முடியவில்லை, நீ யாரோ எனக்கு என்ன என்று போகவும் முடியவில்லை. முகம் மீண்டும் சோர்ந்தது.
விக்ரம் அவளை கண்டு கொள்ளாமல், மழை கொஞ்சம் நின்றதும் தன் அக்காவை மட்டும் ஏற்றி கொண்டு சென்று விட்டான். முகம் வேற பக்கம் திருப்பி இருந்தாலும், அவனை ஓர கண்ணால் பார்த்து கொண்டு இருந்தவளுக்கு அவன் செய்கை பெருத்த அடியாக இருந்தது. அவ்வளவு தான நான்… எக்கேடும் போ என்று போய் விட்டான்.
போ… எனக்கு என்ன வந்தது. இதற்கு முன் நீயா என்னை பாதுகாத்தாய். இத்தனை வருடம் நான் தனியாக சென்று வந்த பாதை தானே, எனக்கொன்றும் பயமில்லை.
Advertisement
அட, விடு பிரபா. இவனெல்லாம் ஒரு ஆள் என்று… நல்லா கருப்பு சாமிக்கு பேண்ட் சட்டை போட்ட மாதிரி. அவன் போட்டு இருக்கும் சட்டையை மட்டும் கழட்டி விட்டு, கோவில் வாசலில் அமர்ந்தாள் போதும் சாமி என்று எண்ணெயை ஊற்றி, வெண்ணெயை தடவி விடுவார்கள். அப்படி ஒரு வள்ளலான முகம். இதில் பத்தாவது பெயில் வேற…
பதினெட்டு வயதில் நீ கண்ட கனவுக்கு கால் வாசி கூட கிடையாது. வீட்டிலே நல்ல மாப்பிள்ளை பார்ப்பார்கள். இந்த சிடுமூஞ்சி சின்ன சாமி, கரிமேட்டு கருவாயன், எத்து பல்லு ஏகாம்பரம், இருட்டுல நிக்க வச்சா கண்டு பிடிக்க முடியாத இருளப்பன், உனக்கு வேணாம் பிரபா.
பலவாறு மனதை சமன் செய்தாலும், ஒத்தையில விட்டுட்டு போட்டான் படுபாவி. உயிரே, உயிரேன்னு பாடி வந்தான் உருப்படாதவன், இன்னைக்கு பாதியில விட்டுட்டு போயிட்டான்… மனதோடு புலம்பி கொண்டு விக்ரம் சென்ற சாலையையே பார்த்து நிக்க,
அவன் வண்டி சத்தம் கேட்டதும், படக்கென்று வேற பக்கம் திரும்பி கொண்டாள். அவனை தேடவே இல்லை என்பது போல ஒரு பாவனை. அவள் அருகே சடன் பிரேக் போட்டு நின்றவன், அவளை பார்த்தவாறு இறங்கி கொண்டே, அவளை ஒட்டி கடந்து சென்று பின் பக்கம் நின்று கொண்டான். அவளோடு பேசவெல்லாம் முயற்சிக்க வில்லை.
அவளுக்கு இப்போது தான் மனம் கொஞ்சம் அமைதியானது. அவன் அக்கா தான், இருந்தாலும் என்னை கண்டு கொள்ளாமல் இருப்பதா…
அவளுக்கு பின் நின்று இருந்த விக்ரம் அவளையே ரசித்து கொண்டு இருந்தான். மழை நின்று ஊத காத்து அடிக்க ஆரம்பித்தது. பிரபா உடல் குளிரில் காற்றில் சிலிர்க்க , கையை தேய்த்து விட்டு கொண்டாள். அவளின் பின் கழுத்தில் முத்து முத்தாக மழை துளி நின்று இருக்க, தன் துப்பட்டா கொண்டு துடைத்து விட்டாள் பிரபாவதி. அவளை ரசிக்கும் பாவனையில் பார்த்து நின்றான் விக்ரம்.
“சிறு தண்ணி தோளோம்,
மாரோடும் விழுந்து
தொடாத எடமும்
தொடுதே…
ஒத்த மழைதுளி பார்த்த
இடம், பித்து குழி இவன்
பார்க்கலையே!…”
பிரபா அறிவாள், விக்ரம் தன்னை பார்க்கிறான் என்று… முன்பு விக்ரம் பார்க்கும் போது ஒரு மாதிரி அசௌகரியமாக, பயமாக இருக்கும். இப்போது அவன் பார்வைக்கு மனம் படபடவென அடித்து கொண்டது. மனதில் அருவி மேல் எழுந்து விழுவது போல ஒரு உணர்வு. பார்வை ஒன்று தான், பார்ப்பவனும் ஒன்று தான். இவள் மனம் தான் வேறாகி நின்றது.
அடுத்து ஆட்டோ வரும் வரை இவர்கள் நாடகம் இப்படியே தொடர, ஆட்டோ வந்த பின் அவளையே பின் தொடர்ந்து வந்தவன், அவள் ஊர் எல்லையில் வண்டியை திருப்பி கொண்டான்.
ஒரு பரவச மன நிலையில் தான் பிரபா வீடு சென்றது. இந்த முறை ஒரு சம்மந்தம் அமைந்து விடும் என்று அப்பா பேசியது கூட அவள் உற்சாகத்தை குறைக்க வில்லை. அது தான் விக்ரம் வந்து விட்டானே. அவள் வேண்டாம் என்று சொன்ன வார்த்தை அப்படியே இருக்க, அதை குறித்து கவலையின்றி அவள் உற்சாகமாக தான் இருந்தாள்.
லீவு என்று வந்து விட்டால் தூங்கியே பொழுது ஓடும் பிரபாக்கு. நல்லா தலைக்கு குளிர எண்ணெய் வைத்து, ஒரு பழைய நைட்டியில் டிவியை விட்டு நகராமல் உண்ண, உறங்க என்று தான் இருப்பாள். வீட்டு வேலை செய்ய தெரியும், செய்ய மாட்டாள்.
நான் லீவுக்கு வந்தது ரெஸ்ட் எடுக்க, வேலை பார்க்க இல்லை. எல்லா வேலையையும் நான் எங்க வீட்டுல போய் பார்த்துக்கிறேன் என்று சட்டம் பேசி சுத்தி திரிவாள்.
சமீபமாக கல்யாண பேச்சு எடுத்ததில் இருந்து செல்வியும் அதிக வேலை சொல்வது கிடையாது. இன்னொரு வீட்டுக்கு போக போகிறாள் என்று… இன்று என்னவோ இருக்கும் வேலை எல்லாம் இழுத்து போட்டு செய்தாள்.
காலை, மாலை என்று ரெண்டு நேரமும் குளித்து, முழு அலங்காரத்தில் தான் இருந்தாள். செல்வி கூட கல்யாண கலை வந்திருச்சோ தன் பெண்ணுக்கு என்று ஆசையாக முகம் பார்த்து இருந்தார்.
அன்று மாலை தான் காட்டு மாரியம்மன் கோவிலில் விக்ரம் குடும்பம் பூஜைக்கு கொடுத்திருந்தது. அது பிரபாக்கு தெரியும். அன்று ஆடி பூரணமும் இருக்க, செல்வி மகளை கிளப்பி விட்டார்.
அவளுக்கு விருப்பம் இல்லை. விக்ரமின் பார்வையும், அதில் தெரிந்த நேசமும் வேறு கதை சொல்ல… அவர்கள் வீட்டு பூஜைக்கு செல்ல பிடிக்க வில்லை. அது பொது கோவில், மூன்று ஊருக்கும்… விக்ரம் குடும்பம் மாதிரி பலர் பூஜைக்கு கொடுத்து இருப்பார்கள்.
“அடியே! பிரபா. வெரசா கிளம்பிடி. நான், உனக்கு நேத்தி கடன் போட போறேன். உனக்கு தாலி எடுத்து கொடுத்தா, சாமிக்கு தாலி வாங்கி சாத்துறதா வேண்டிக்க போறேன். நீயும் கூட இருக்கணும் வா…” என்று அதட்ட,
வேற வழி என்று கிளம்பினாள். ஒரு சாதாரண காட்டன் சுடிதாரை எடுத்தவள், பின் வைத்து விட்டாள். எப்படி இருந்தால் என்ன, விக்ரம் கோவிலுக்கு வருவான். அவனுக்கு சேலை கட்டி இருந்தால் மிக பிடிக்கும்…
அவசரமாக தன் கப்போர்டை ஆராய, தேன் கலர் காட்டன் சேலை பிடித்தது. ரொம்ப நேரமெடுத்து தன்னை அலங்கரித்தாள். செல்வி ஒரு குட்டி நெக்லஸ், மாங்காய் ஆரம் கொண்டு வந்து கொடுத்தார்.
முன்பெல்லாம் எங்கும் அழைத்து செல்ல மாட்டார். கல்யாணம் பண்ணும் எண்ணத்தில் இருக்க, நாலு பேர் பார்க்கும் படி தான் கூட்டி செல்கிறார்.
அந்த கோவில் உள் நுழையும் போதே, பிரபாக்கு மனசு படபடப்பாக இருந்தது. பார்வையால் அலசியபடி தான் நடந்தாள். அங்கிருக்கும் ஒரு வேப்ப மரத்து அடியில் தன் நண்பர் படையோடு நின்று பேசி கொண்டு இருந்தான் விக்ரம். நல்ல அடர்ந்த மெருன் நிற சட்டை, வெள்ளை வேஷ்டி என்று அவனும் அமர்க்களமாக தான் இருந்தான்.
எதார்த்தமாக சுற்றி வந்த விக்ரமின் பார்வை வட்டத்தில் பிரபா பட்டு விட, அடுத்து அவன் பார்வை வேற எங்கும் நகர வில்லை. முகம் சாரணமாக இருந்தாலும் அவன் கண்களின் நெகிழ்ச்சி அவன் மன நிலையை சொல்ல, சிவந்த முகத்தை வேற பக்கம் திருப்பி கொண்டாள் பிரபா.
பூஜை ஆரம்பிக்க விக்ரம் தள்ளி தான் நின்று இருந்தான். இதுவெல்லாம் பெண்கள் விசயம். அம்மா வற்புறுத்த தான் வந்தது, அத்தோடு பிரபாவை பார்க்கும் எண்ணமும் தான்.
இவர்களது கிராமம். அதுவும் வேற வேற சமூக அமைப்பு கொண்டவர்கள். சாதாரணமாக சந்திப்பது, நட்பாக பேசுவது எல்லாம் நடக்காத ஒன்று. ஆண் பிள்ளைகளோடு பேசுவது போல சகஜமாக பெண் பிள்ளைகளை நெருங்க முடியாது.
பொதுவான இடங்கள் கோவில், பஸ் ஸ்டாண்டு, விசேஷம் என்ற இடத்தில் மட்டும் தான் பார்த்து கொள்ள முடியும். அதை கணக்கிட்டு தான் விக்ரமும் வந்தது. அவள் மனம் தன் புறம் சாய தொடங்கி விட்டது என்று முன்பே அறிவான். இப்போது இன்னும் உறுதியாகி விட்டது. ஆனாலும், அவனுக்கு ஒரு வார்த்தை வேணும். அவள் வாயை திறந்து சொல்லும் வார்த்தை வேணும்…
பிரபா, தன் வாழ் நாளில் திருட்டு தனமாக ஒருவனை சைட் அடிப்போம் என்று கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டாள். இன்று அது தான் நடந்து கொண்டிருக்கிறது.
செல்வி அங்கிருக்கும் பெண்களோடு சேர்ந்து கோவில் வேலையை பார்க்க, பிரபா கோவிலை சுற்றி பார்த்து கொண்டு இருந்தாள். விக்ரம், அவளை சுற்றி பார்த்து கொண்டு இருந்தான். திலகவதி, பூஜை செய்து வாங்கிய மஞ்சள், தாலி காயிறு, குங்குமம், வளையல், மல்லிகை பூ என்று அங்கிருக்கும் பெண்களுக்கு கொடுத்து கொண்டு இருந்தார்.
செல்வி தான், “ பிரபா நீயும் போய் வாங்க… சாமிக்கு படச்சது. வரிசையில் நின்னு வாங்க வெட்கப்படாம போய் வாங்கி வா. அப்ப தான் உனக்கு ஒரு நல்லது நடக்கும்…” என்று பிரபாவை தள்ளி விட்டார்.
தாங்கள் தான் வந்த வரன் சரியில்லை என்று தட்டி கழித்தாலும், சரியானது அமைய வில்லையே. மகளுக்கு மஞ்சள், குங்குமம் கையில் கிடைக்க வேண்டும். அதுவும் எதார்த்தமாக, யாரோ ஒருவர் கொண்டு வந்து தர, ஏன் தள்ளி நிற்க வேண்டும்.
பிரபா பிகு ஒன்றும் பண்ண வில்லை. பெண்கள் கூட்டம் அதிகம் தான். அவளும் போய் நின்று கொண்டாள். இவளோடு வயது பெண்களும் நின்று இருந்தார்கள். அவர்களுக்கும் வரன் பார்ப்பார்களா இருக்கும்…
விக்ரம் கொஞ்சம் தாயை நெருங்கி வந்தான். பிரபா முன்னே வர, பேச்சு குரல் கேட்டது. திலகவதி தான்,
“ஆமா, என் தம்பி மக தான். கீர்த்தனா, எம் மகனுக்கு எடுக்க தான் ஆசை. முன்னவே பேசி வச்சது…” என்ற குரலில், பிரபா பட்டென்று நின்று கொண்டாள்.
விக்ரம், அவள் முகத்தையே தான் பார்த்து இருந்தான். பிரபா முகம் மாறி விட்டது. வீட்டில் சும்மா பேசுவது தான். திலகவதிக்கு தம்பி மகளை எடுக்க ஆசை. விக்ரம் ஒத்து கொள்ள மாட்டான். இவர்களாக பேசி வைக்கிறார்கள். அவனுக்கு கீர்த்தியை பத்தியம் தெரியும். அவள் சம்மதிக்க மாட்டாள். அவள் வேற ஒருவனை விரும்புவது விக்ரமுக்கு தெரியும். வீட்டில் சொல்ல முடியாமல், இவனை வைத்து சமாளித்து கொண்டு இருக்கிறாள்.
இது எதுவும் புரியாமல், பிரபா மனம் புண் பட்டது. இதுவரை விக்ரம் மேல் இருந்த நம்பிக்கை குறைந்தது. அவன் தாயே சொல்லி இருக்க, வேற யோசிக்க முடியவில்லை. அதுவும் மாப்பிள்ளை மாதிரி தயாராகி விக்ரம் வேறு வந்திருந்தான். அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
கண் கலங்கும் போல் இருக்க, நகர்ந்து நின்று கொண்டாள். அவனுக்கு கல்யாணம் பேசி முடித்து இருக்கிறார்கள், அதற்கு பூஜை செய்து மஞ்சள், குங்குமம் கொடுக்க, அதை வாங்க இவள் வரிசையில் நிற்கிறாள். அவ்வளவு தானா எல்லாம் என்று தோன்ற, விலகி விட்டாள். ரொம்ப பலவீனமாக உணர்ந்தாள்.
உன் சந்தோசத்தை நீயே வைத்து கொள் என்று பிரபா நகர, விக்ரம் தன் அக்கா சந்திராவுக்கு கண்ணை காட்டினான். பொது இடத்தில் அவளோடு பேசவும் , புரிய வைக்கவும் முடியாது.
சந்திரா, “ பிரபாவதி, என்ன தள்ளி நிக்கிற… வா, வந்து வாங்கி போ. சாமி கும்பிட்டு கொண்டு வந்தது, கிடைக்கணும் வா…” என்று சத்தம் கொடுக்க,
மறுத்து பேச முடியாமல் மீண்டும் வந்தாள் பிரபா. இவளின் கலங்கிய கண், விக்ரமுக்கு கொஞ்சம் வலித்தது. எதையும் உடைத்து பேசவும் மாட்டாள். முகத்தை மட்டும் தூக்கி வைத்து கொள்வாள். நான் என்னன்னு பேச, நொந்து கொண்டான் விக்ரம்.
முயன்று, முகத்தை சீராக்கி கொண்டு, திலகவதியை நோக்கி பிரபா கை நீட்ட, அங்கு எல்லாம் முடிந்து இருந்தது.
“அச்சோ, எல்லாம் முடிஞ்சு போச்சும்மா…” தயங்கி சொன்னார் திலகவதி.
வேகமாக அருகே வந்த விக்ரம், “என்னம்மா, ஒன்னு கூட இல்லை. கொஞ்சம் பூவாது கொடுத்து விடும்மா…” அவனுக்கும் மனசு கேட்க வில்லை. பிரபா கை நீட்டி நிற்க, வெறும் கையோடு அனுப்ப முடியுமா…
“இல்லை விக்ரம். முன்னூறு வாங்கினோம். எல்லாம் போச்சு…” என்றார் தாய். விக்ரம் சங்கடத்தோடு அவளை பார்க்க,
“ பரவாயில்லைங்க…” என்று நகர்ந்தாள் பிரபா. கொஞ்சம் சங்கடமான நிலை தான். கோவிலுக்கு வந்து, கை நீட்டி கேட்டும் கிடைக்க வில்லை. ஒன்று கூட மிச்சமில்லை. அதுவும் தாலி கயிறு, மஞ்சள், குங்குமம்.
நகர்ந்ததும் பிரபா கண் கலங்கி விட்டது. எல்லாமே அவளுக்கு எதிர்பதமாக இருப்பதாக தோற்றம். எத்தனை ஆசையாக கிளம்பி வந்தாள். என்னென்னவோ நினைப்பு இருக்க, எல்லாம் வேற மாதிரி நின்றது.
தான் மட்டும் தனியான உணர்வு. இங்கிருக்கும் எல்லோரும் தான் கை நீட்டி வாங்கினார்கள். எனக்கு மட்டும் ஏன் தட்டி போக வேண்டும். அதுவும் திலகவதி கையில், மனசை அடக்கவே முடியவில்லை.
அதுவும் கோவிலில் நடந்ததால் மனம் அது தான் என்று நம்பியது. கை கூடாது போல, அதான் கடவுள் தட்டி விட்டார் என்றெல்லாம் தோன்ற, கண்ணில் பொங்கி வந்தது கண்ணீர். தாயை நினைத்து தன் அழுகையை அடக்கி கொண்டாள்.
அவளின் சிவந்த நிறத்துக்கு, அழுகையை அடக்கி நின்றது, ஒரு மாதிரி கண், முகமெல்லாம் சிவந்து இருந்தது. அவளின் மூக்கு அழுகைக்கு துடித்தது. விக்ரம், பின்னந்தலையை தடவி கொண்டான்.
அவள் அழுத முகத்தை சந்திரா, அருண், மதன் எல்லாம் கொஞ்சம் பாவமாக அவளை பார்க்க. அது வேறு அவளுக்கு அவமானமாக, அசிங்கமாக இருந்தது. வேற யார் என்றாலும் இவ்வளவு ஃபீல் பண்ணி இருக்க மாட்டாள்.
விக்ரமை பிடித்து இருக்க, அவன் அம்மா கையால் தனக்கு மட்டும் மஞ்சள் குங்குமம் கிடைக்க வில்லையே என்ற ஆதங்கம். விக்ரம், தன் அம்மா வைத்திருக்கும் தாம்பாள தட்டை பார்த்தவன், அவரை முறைத்தான்,
“ஏன் ம்மா… அதுதான் இங்க இருக்கே. அந்த பிள்ளைக்கு குடுத்தா என்ன…” காட்டமாக மகன் கேட்க.
“ டேய், எல்லாருக்கும் குடுக்க எடுத்து வச்சது முடிஞ்சு போச்சு. இது சாமி கும்பிட்டு, நம்ம வீட்டுக்கு கொண்டு போக வச்சு இருக்கேன். சாமி அறையில வைக்கணும்…” என்று திலகவதி சொல்ல,
“ஆமா, வைப்பாங்க சாமி ரூம்ல. ஏம்மா, கை நிட்டி கேட்ட பிள்ளைக்கு கொடுக்காம, சும்மா ரூம்ல போய் வைக்க எடுத்து வச்சு இருக்க. பூ, மஞ்சள், குங்குமம் எல்லாம் ஒளிச்சு வைக்க கூடாது. மத்தவங்க அதை ஒரு அபசகுணமா நினைப்பாங்க. அந்த பிள்ளை கல்யாணம் ஆகாத பிள்ளை,அதை மட்டும் விட்டா, என்ன நினைக்கும்…” என்றவன், ஒரு கவரில், அங்கிருந்த எல்லாவற்றையும் எடுத்து போட்டு கொண்டான்.
பிரபா, பிரகாரம் சுற்ற, அவள் முன்னே வந்து நின்றவன், அவளை நோக்கி கை நீட்டினான்.
அவள், அவனை முறைத்து விட்டு கடந்து செல்ல,
“ம்ச், பிரபா. என்ன இது? உன் கோபத்தை அப்புறம் காட்டு. முதல்ல கை நீட்டி இதை வாங்கி வை…”
அவள் அதை தொடவே இல்லை.
“என்னடி!…” என்று அதட்டியவன், “புடி முதல்ல…” என்று சொல்ல, அவள் கண்டு கொள்ளவே இல்லை. இனி பேச முடியாது, கவனிக்க படுவோம்.
“போடி, எல்லாம் நீ எடுத்த முடிவு தான. என்னை எதுக்கு முறைக்கிற…” கோபமாக சொல்லி நகர்ந்து விட்டான்.
அதுக்கும் பிரபாக்கு அழுகை தான் வந்தது. “நான் எடுத்த முடிவா. நானா உன்னை காதலிக்க சொன்னேன். எல்லாம் நீயா முடிவெடுத்து, என் மனசையும் கலச்சு விட்டு… இப்போ எல்லாம் என் முடிவாம்… போடா கருப்பணசாமி…” விசுக்கென்று நடந்து சென்று தாய் அருகே நின்று கொண்டாள்.
செல்வி, “பிரா, அந்த வேப்ப மரத்துக்கு விளக்கு போட்டு வா…” என்று சொல்ல, பிரபா நகர்ந்தாள்.
பிரகாரம் உள்ளே இருக்கும் சாமிக்கு இணையாக மதிப்பார்கள் வேப்ப மரத்தை… திருமணம் ஆகாத பெண்கள் விளக்கு போட, ஆண்கள் மஞ்சள் கயிற்றை கட்டி விடுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் வளையல், சேலை தொட்டி என்று கட்டுவார்கள்.
பிரபா, அதன் அருகே அமர்ந்து மஞ்சளை வட்டமாக கொட்டி, அதில் குங்குமம் வைத்து, எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அதை பிழிந்து விட்டு, பின் பக்கம் திருப்பி விளக்கு போட,
திலகவதி, விக்ரமை இழுத்து கொண்டு வந்தார்.
“அம்மா,நீ சொன்ன கோவிலுக்கு வந்தேன். அத்தோடு என்னை விடு, அதை விட்டு இம்புட்டு பொம்பளை பிள்ளைக முன்னாடி என்னை அசிங்க படுத்தாத. நான் மாட்டேன். எனக்கு எவ்வளவு அவமானம்…” எகிறினான்.
“என்னடா அசிங்கம் எல்லாரும் செய்றது தான். உனக்கு நல்ல படியா கல்யாணம் நடக்கணும். அதுக்கு தான் வேண்டுதல். ம்ம், சீக்கிரம் மஞ்சள் கயிறை கட்டு…” என்றார் திலகவதி.
அவர்கள் பேசுவதை என்னவோ என்று கேட்ட பிரபாவும், அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்க்க, கையில் மஞ்சள் கயிற்றோடு விக்ரம் நின்று இருந்தான். அவனுக்கு சைடில் தான் பிரபா இருந்தது. இதுவரை எரிச்சலாக இருந்த விக்ரம் முகம் நொடியில் உல்லாசமாக மாற,
“மாமா, உனக்கு பொண்ணு தரணும்ன்னு வேண்டிக்கடா…”
“இந்த மாமா மக, அயித்தை மக விட்டு கொஞ்சம் வெளிய வாம்மா…. நாலு பக்கமும் பொண்ணு தேடனும். உன் பக்கம் மட்டும் பார்த்தா… நான் இப்படி மஞ்சள் கயித்தோடு கோவில், கோவிலா அலைய வேண்டிய தான்…” நக்கல் குரலில் விக்ரம் சொல்ல,
“வாய் பேசாம சட்டுன்னு கட்டு. நான் போய் தட்டு, பை எல்லாம் எடுத்து வாரேன்…” என்று கிளம்ப,
விக்ரம், பிரபாவை பார்த்து புருவம் உயர்த்தினான்.
அவள் தலையை சிலுப்பி கொண்டாள்.
“என்ன மூஞ்சிய தூக்குற. பேசாம ஓடிரு… அன்னைக்கே நீ சரின்னு சொல்லிருந்தா, நான் எதுக்கு வேப்ப மரத்துக்கு தாலிய கட்ட போறேன்…” என்றவன், அவளை பார்த்தவாறே, ஒரு மர கிளையில் மஞ்சள் கயிற்றை கட்டினான்.
பிரபா விளக்கு போட்டு முடித்து இருக்க, “ அட பாவிகளா! எனக்கு பொண்ணு அமையல, அவளுக்கு மாப்பிள்ளை அமையல. எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சா என்னவாம். அதை விட்டு குலம், கோத்திரம்ன்னு நீங்க திரிய, நாங்க இப்படி சந்நியாசியா திரியிறோம்…” மனதோடு புலம்பி கொண்டான் விக்ரம்.
பிரபா எழுந்து நடையை கட்ட,
“ பிரபாவதி…” என்ற சத்தம். திரும்பி பார்க்க, சந்திரா.
“உன்னை தான் தேடுனேன்…” என்றவள், தன் கையில் இருந்த விக்ரம் கொடுத்த கவரில் இருந்து, வளையல்களை எடுத்து பிரபா கையில் அணிந்து விட்டவள்.
“என் தம்பி சொன்னான். எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. அவன் விளையாட்டா திரிஞ்சாலும், உண்மையா மட்டும் தான் இருப்பான். நான் ஆள் பார்த்து எல்லாம் பழக மாட்டேன். எங்க அக்கா கொஞ்சம் ஒரு மாதிரி தான். விக்ரம் எல்லாம் பார்த்துப்பான். இன்னொரு நாள் பேசலாம், அடுத்த வெள்ளி கோவிலுக்கு வா…” என்று அவசரமாக பேசியவள்,
“உங்க அம்மா வாராங்க…” என்று நகர்ந்து விட்டாள்.
பிரபா தன் கையில் இருந்த வளையல்களையே பார்க்க,
“பிரபா, பொங்கல் தாராங்க வா…” என்று தாய் வர, அவரோடு தான் உள்ளே வந்தாள்.
திரும்பி வரும் பிரபாவின் முகம் தெளிவாக இருக்க. அதை பார்த்து தான் விக்ரம்க்கு நிம்மதியாக இருந்தது.
பிரபா அந்த வளையல்களை கலட்டவே இல்லை. தங்க வளையல் கூட கலட்டி வைத்து விட்டாள். அதோடு தான் விடுதிக்கும் வந்தது.
“என்னடி கல்யாணம் பண்ணாம ,வளைகாப்பு பண்ணிட்டாங்க உங்க வீட்டுல…” கேலி செய்தாள் ஜெனி.
அவள் சொல்வது போல தான் பிரபா அணிந்து இருந்தாள். அவசரத்தில் கொடுக்கும் போது கையில் கிடைத்தது தான் வரும். பிரபா, நாலு, நாலு என்று எட்டு வளையல் ரெண்டு கையிலும் அணிந்து இருக்க, எல்லாம் வேற வேற கலர்.
சாமி கிட்ட வச்சு கொடுத்தது என்று ஒன்னு ரெண்டு நாள் அணிவார்கள், தெரியும். இவள் என்னவோ, சந்திராவே போட்டு விட, கழட்ட மனமில்லை.
அந்த வாரம் முழுக்க தொட்டு தொட்டு பார்த்து கொண்டாள். துவைக்கும் போது கூட மெல்ல தான் துவைத்தாள்.
“பைத்தியம் முத்திருச்சு…” என்று சித்ரா கிண்டல் பண்ணிய போதும், பிரபா கண்டு கொள்ளவே இல்லை. அவ்வளவு ஆசையாக அந்த வளையலை போட்டு இருந்தாள்.
அடுத்த வாரம் ஊருக்கு வரும் போது தான் நடந்தது விபரீதம். பிரபா பஸ்ஸில் இருந்து இறங்கும் போதே, விக்ரமை கவனித்து விட்டாள். ஆனால், கண்டு கொள்ள வில்லை.
அவன் ரெண்டில் ஒன்று முடிவு காண காத்திருந்தான். சும்மா சும்மா முகத்தை தூக்குவதும், அழுவது, கிட்ட போனால் முறைப்பதும் அவனுக்கு ஆகாது. என்ன சொல்ற? என்று கேட்க நெருங்க,
பிரபா விலகி நடந்தாள். அவனுக்கு பொறுமை போய், பிரபா என்று சத்தம் கொடுக்க, “டேய் இருடா. பொது இடம்” என்று மதன் சொல்ல,
“பிரபா…” என்று விக்ரம் கையை பிடிக்க,
மிரண்டு போனவள் கையை இழுக்க, அவன் விட வில்லை. பயந்து போய் பிரபா வேகமாக இழுக்க, அவள் விழுந்து விடுவாளோ என்று தான் விக்ரம் பட்டென்று கையை விட்டான்.
அதில் பேலன்ஸ் செய்ய முடியாமல் பிரபா பஸ்ஸில் மோத, ஒரு பக்கமாக மோதியதில் அனிச்சையாக இரு கையையையும் வைத்து தடுத்தாள். அதில் ரெண்டு கையில் இருந்த கண்ணாடி வளையல்கள் உடைந்து போனது. ஒன்று கூட மிச்சமில்லை.
பதறி போய் இருவரும் அவளை தூக்க போக, மதன் அவசரமாக அவள் கையை பிடித்து பார்த்தான். காயம் ஏதும் இருக்கிறதா என்று…
வளையல் மட்டும் தானா என்று ஆசுவாசம் அவர்களுக்கு.
பிரபாக்கு தான் கண்ணீர் கரை கண்டு விட்டது. அவன் கொடுத்த மல்லிகை பூவை கூட காய்ந்த பின் ஒரு கவரில் போட்டு பாதுகாத்து வருகிறாள்.
பஸ் ஸ்டாண்ட் நடு பகுதி நிற்க முடியாமல், தன் பையை திறந்தவள் வேகமாக கீழ கிடந்த வளையல்களை எல்லாம் மண்ணோடு அள்ளி பையில் போட்டு கொண்டாள்.
அதன் பிறகு தான் கவனித்த விக்ரம், “பிரபா…” என்று அழைக்க,
அவள் நிமிர்ந்தே பார்க்காமல், கிளம்பி விட்டாள்.
“ஏண்டா, அவசரப்பட்ட எருமை?…” என்று மதன் முதுகில் ஒன்று போட
“ டேய் ரெடிமேடா நான் நிக்கிறேன். அவ உடைஞ்சு போன வளையலை பாக்குறாடா…” என்றவன், அவளை தேட…
பிரபா சென்று இருந்தாள். என்ன நினைக்கிறாள் இவள்… யோசனையானது.
கால்வாய் நீர் வரத்து பற்றி ஊரில் பொது கூட்டம் போட பட்டது. அந்த மூணு ஊருக்கும் பொதுவான இடம், கள்ளி காட்டின் எல்லை தான். அங்கு தான் கூட்டம் கூடியது. ஊர் பொது மக்கள் கூட, பேச்சு வார்த்தை ஆரம்பித்தார்கள்.
அங்கிருந்து சற்று தள்ளி தான் பிரபாவதி வீடு. ரெண்டு நாளா அவளை காண முடியாமல் இருந்தவன், பொது கூட்டத்திற்கு வந்து விட்டான், அவள் தென்படுகிறாளா என்று பார்க்க.
பிரபா தாய், தந்தை அங்கு இருக்க, அவளை காண வில்லை. சற்று தள்ளி பார்க்க அவள் தம்பி இருந்தான்.
ஒரு நொடி யோசித்தவன், வேக நடை போட்டு பிரபா வீட்டு பக்கம் நடந்தான். அதை பார்த்து பதறி போன மதன்,
“ஐயோ! டேய் விக்ரம்…” மெல்ல தான் கூப்பிட முடிந்தது. சத்தம் போட்டால் மூணு ஊரும் திரும்பி பார்க்கும். அப்புறம் வேற வினையே வேணாம்.
கூட்டம் வேறு முடிவை நெருங்க, பயந்து போனவன், “டேய் அருண். வெட்டருவாக்கும், வேல் கம்புக்கும் வேலை வச்சுட்டாண்டா இந்த பரதேசி…”
error: Content is protected !!