Skip to content
Post Views: 8,917
கள்ளி காட்டு காதலியே!
அத்தியாயம் 11
பொது கூட்டம் கலைந்தது. மூன்று ஊர் மக்களும் பேசியபடி தங்கள் ஊர் நோக்கி நடக்க, மதனுக்கு பதட்டம் அதிகமாகியது. மூன்று ஊர்களில் முதல் ஊர் கள்ளி காடு தான்.
சிக்கினால் சிக்கன், மாட்டுனா மட்டன். பாரபட்சமின்றி வெளுத்து விடுவார்கள். என்ன செய்ய, யோசித்தான், பட்டென்று அருண் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விழுந்தது.
Advertisement
துடித்து போனான் அருண். “என்னடா பண்ற பரதேசி…”
“வாடா, மல்லுகட்ட…”
“நான் எதுக்குடா உன் கூட மல்லு கட்டணும்…” வலியில் கன்னத்தை பொத்தியபடி அருண் கேட்க.
Advertisement
“கொஞ்ச நேரத்துக்கு சமாளிக்க. அப்புறம் மாப்பிள்ளை வந்துடுவான்…” என்று தன் யோசனையை மதன் சொல்லு, புரிந்து கொண்டான் அருண்.
Advertisement
இருவரும் கட்டி கொண்டு புரள, நகர்ந்த மக்கள் , என்னவோ கலவரம் என்று திரும்பி பார்க்க. அவர்கள் வட்டாரம் வந்து பிரித்து விட்டார்கள்.
“என்னங்கடா ஆச்சு, எதுக்கு அடிச்சுக்கிறிங்க?…”
“இவன் சொல்றான், ஐயனார் கெடா வெட்டுக்கு அவங்க தெரு தான் கரகம் எடுக்கணுமாம். அப்போ, நாங்க யாரு?…” என்று கோபம் போல மதன் கேட்க.
Advertisement
“என்னங்கடா லூசுதனமா பேசுறீங்க… குளத்துகரை கரகம் எடுக்கும், கள்ளி காடு பொங்க வைக்கும், சின்ன குளம் பூஜை போடும். காலங்காலமாக அப்படி தானே, நீங்க என்ன ஒரு ஊர்குள்ள சண்டை. எப்பா, நீதிபதி, என்னன்னு கேளு இவனுங்களா…” என்று பெரிய மனிதர் ஒருவர் சொல்ல,
“என்னங்கடா, ஆளாளுக்கு கரியத்தனம் பண்றீங்க. படிச்சுட்டு வெட்டியா திரியிற உங்களுக்கு உட்கார வச்சு சோறு போடுறாங்க, அந்த கொழுப்பு…” என்று நீதிபதி சத்தம் போட,
அவர் பேசியதை காதிலே வாங்காமல் மதன் நிற்க.
“கோவில் பேச்சை பேசி முடிச்சு விடுங்க, இல்லன்னா இவனை மாதிரி நாலு பேர் கிளம்பி வருவாங்க…”
“சரிதான்ப்பா, மூணு ஊரும் இருக்கே. மாசி கோவில பேசி முடிங்க…” என்று அங்கிருந்தவர்களும் சத்தம் கொடுக்க,
நீதிபதி, “எங்கடா அந்த சண்டியர்? உங்க கூடதான வெட்டியா சுத்துவான். எண்ணெயையும், திரியுமா தான் இருப்பீங்க. ராத்திரி நேரம் எங்க போனான்…” அவருக்கு ஏதோ ஒரு சந்தேகம்.
இவர்களோடு தான் விக்ரம் வந்தான். தனியே செல்ல வாய்ப்பில்லை.
“அவனுக்கு வயித்த கலக்கி விட்டுச்சு, வீட்டுக்கு போயிட்டான்…” என்றான் அருண்.
“ நல்லா காரணம் சொன்ன பரதேசி. இனி கண்டு பிடிச்சுடுவார்…” புலம்பி கொண்டான் மதன்.
கோவில் பேச்சு ஆரம்பிக்க, மக்கள் திரும்ப அதே இடத்திற்கு வந்தார்கள்.
அப்போது தான் பிரபா குளித்து விட்டு வந்தாள். இரவில் உறங்கும் முன் ஒரு முறை குளிக்க வேண்டும். லேசாக வேர்த்தால் கூட பிரபாக்கு ஆகாது.
பொதுவாக கிராமப்புறங்களில் வீட்டை பூட்டி போட்டு வைத்திருக்க மாட்டார்கள். சும்மா தாள் போடாமல் சாத்தி தான் இருக்கும். பிரபா வீடும் அப்படித்தான், கதவை திறந்து வரும் சத்தம் கேட்க.
“என்னடா கூட்டம் முடிஞ்சதா, துணைக்கு அம்மா அனுப்புச்சா…” தன் தம்பி என்று கேட்டபடி வந்தாள் பிரபா.
சத்தியமாக பிரபா, அங்கு விக்ரமை எதிர்பார்க்க வில்லை. என்ன தைரியம்… இரவு நேரத்தில் ஒரு பெண் தனியாக இருக்கும் வீட்டில் ஒரு ஆண் நுழைந்தால்,
நெஞ்சை பிடித்தாள் பிரபா. அக்கம் பக்கத்தில் யாராவது பார்த்து இருந்தால்,
“நான் நல்லா நோட்டம் பார்த்து தான் வந்தேன். யாரும் பார்க்கல…” என்றவன்,
“உன்கிட்ட பேச தான் வந்தேன் பிரபா. உன்னை தனியா பிடிக்க முடியலை. நீயும் பிடி கொடுக்க மாட்ற…” என்று ஒரு பெருமூச்சு விட்டவன்,
“இனியும் எனக்கு பொறுமையில்லை. நான் காத்திருந்தாலும் அதுக்கு ஒரு பலன் இருக்கணும். நான் வேணாம்ன்னா முடிவா சொல்லு பிரபா. எனக்கு யார பார்த்தும் பயமில்லை. தைரியமா ஒரு கை பார்ப்பேன். ஆனா, அதுக்கு நீ கூட இருக்கணும். உன் சம்மதம் இல்லாம நான் போராடி வேஸ்ட்…”
பிரபா மீண்டும் அமைதி தான். தலை நிமிர வில்லை. இதற்கு பயந்து தான் ஓடினாள் போல… அவனை கண்டால் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். என்ன பதில் சொல்ல…
விக்ரம், அவனை பிடித்தும் இருக்கிறது, இல்லை ஒத்துவராது வேண்டாம் என்றும் நினைக்கிறது மனம். அவள் மனமே ரெண்டாக சிந்திக்க, முடிவெடுக்க தெரியவில்லை.
விக்ரம், அவளை பார்த்தவன், “என்னை பிடிக்காத பொண்ண, நான் கட்டாய படுத்த மாட்டேன். நிச்சயம் ஒதுங்கி போவேன். முன்ன போன மாதிரி…” என்ற ஒற்றை சொல்லில் பிரபா வாய் திறந்தாள்.
“பிடிக்கலன்னு யார் சொன்னா?…” சத்தமில்லாமல் மெல்ல சொல்ல,
விக்ரம் காதில் லேசாக என்றாலும், அவள் சொன்ன வார்த்தை விழுந்தது. அது ஒரு புன் சிரிப்பை கொடுக்க. அடக்கி கொண்டு,
“என்ன சொல்ற, சத்தமா சொல்லு… ஒரு தடவை பேசலாம். விருப்பமில்லைன்னா நான் உன் கண்ணுல கூட பட மாட்டேன்…” அவளை பேச வைக்க முயன்றான்.
அவன் சென்று விடுவேன் என்று சொன்ன சொல், அவளை எழுப்ப,
“பிடிக்கலன்னு யார் சொன்னா… பிடிச்சிருக்கு…” தயங்கி தான் என்றாலும் சொல்லி விட்டாள்.
“அப்புறம் ஏன் என்னை பார்த்து ஓடுற… மேடம்க்கு நான் இல்லாட்டி தான் தைரியம் வரும் போல…” லேசான சிரிப்போடு விக்ரம் கேட்க.
“பயமா இருக்கு…” என்றாள் கலங்கும் கண்களில்.
நியாயமான பயம் தான். அது விக்ரமுக்கும் புரிய,
“விடு. நான் இருக்கேன், பார்த்துக்கலாம்…” என்று தைரியம் சொல்ல,
இவ்வளவு தூரம் வந்து, தனக்குள்ளே போராடி, ஒரு வழியாக காதலை சொன்ன பின்னும் ஒரு ஆசுவாசம் பெண்ணுக்கு வர வில்லை. அதுக்கப்புறம் என்ற பயம் தான் அதிகமானது.
அவளை புரிந்து கொண்டான், “பிரபா உன்னோட பயம் எனக்கு புரியுது. கொஞ்சம் நிதானமா யோசிச்சு பார்த்தா, எப்படி சமாளிக்க போறோம்ன்னு எனக்கே லேசா பயமா தான் இருக்கு…”
“அப்புறம் ஏன் என் பின்னாடி வந்து காதல் சொன்னீங்க…” ரோசமாக பிரபா கேட்க.
“என்ன செய்ய, எனக்கு இந்த கள்ளி காட்டுகாரிய தான் பிடிச்சு இருக்கு… இவளுக்கா எதையும் தாங்கி நில்லுடா விக்ரம்ன்னு உள்ள ஒரு குரல்…” என்று சிரிப்போடு சொல்லியவன்,
“ நான் என்னவோ எதிர்பார்த்தேன். ஆனா, நீ பயந்து போயே இருக்க…” என்றான் விக்ரம்.
ஆசை, மனம், காதல் எல்லாம் சரிதான். ஆனால், அதை தொட்டு வரும் பிரச்சனை. அதில் உள்ள நடைமுறை சிக்கல்…
“எனக்கு என்ன சொல்லன்னு தெரியல. அடுத்து என்னன்னு நினைச்சாலே பயம் நெஞ்சு நடுங்குது. எப்படியும் உங்க நினைப்பு எனக்கு வர கூடாது. உங்களை மறந்து என் வழியில போகணும்ன்னு தான் முடிவு எடுத்தேன். என்னையும் மீறி தான் என் மனசு உங்க மேல போயிருச்சு…”
“உங்க அளவுக்கு கூட நான் தெளிவு இல்லை. வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகுன்னு தான் நினைப்பு எல்லாம். எதுவுமே மாறாத…”
“எதுவும் மாறாது பிரபா. நிச்சயம் மாறாது. நம்ம விருப்பம் தெரிஞ்சாலும், அவங்களுக்காக நம்மளை தான் மாத்திக்க சொல்லுவாங்க…” விக்ரம் சொல்லும் போதே பிரபா முகம் கலவரத்தை காட்டியது.
அவன் விடவில்லை. நாளைக்கு ஒரு பிரச்சனையை வந்த பின், பின்வாங்க கூடாது. நம்பிக்கையோடு பிடித்த கையை உறுதியாக விடவும் கூடாது. என்ன நடந்தாலும், யார் சொன்னாலும்…
“பெரிய பிரச்சனையாக தான் வரும். நான் முடிஞ்ச அளவுக்கு ஊர் பிரச்சனையாகாம தடுக்க பாப்பேன். நம்ம ரெண்டு குடும்பமும் ஒத்துக்க மாட்டாங்க, ஊர விட்டு ஓடி போய் தான் வாழணும். அதுக்கான வழிய தான் நான் தேடுறேன். யாரையும் ரொம்ப காயப்படுத்தாம நாம வெளியேறனும்…” யோசனையிலே விக்ரம் சொல்ல, பிரபா நெஞ்சு நடுங்கி போனது.
அவன் சொன்னவற்றை கற்பனையாக கூட நினைக்க முடியவில்லை. அம்மா, அப்பா, தம்பி, என் வீடு, என் ஊர் எல்லாத்தையும் துறந்து ஓட வேண்டும். அப்பா, ஐயோ!…அவரை எப்படி பார்ப்பேன்.
அதுவும் அம்மா, அவரை நேருக்கு நேர் எதிர் கொள்ளவே முடியாது. எனக்காக பார்த்து, பார்த்து எடுத்த நகை, சேலை, என் கல்யாணத்தை குறித்த பெற்றவர்கள் கனவு, நான் ஓடி போனால் பெற்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை, எங்க பக்கம் நான் தான் ரெண்டு டிகிரி படித்தது. அதை குறையாக, பெண் பிள்ளையை படிக்க வைத்ததால் தான் ஓடி போனாள் என்று பேச்சு வரும். சொந்தத்தில் ஒருத்தரும் மதிக்க மாட்டார்கள்… எப்படி எதிர் கொள்வார் தந்தை.
மிலிட்டரிகாரர் என்று ஊரில் ஒரு மரியாதை இருக்கே. அது என்னால் தான் கெட போகுதா?… நான் போய் விட்டால் என் தம்பி. நினைக்க நினைக்க ஏன் இந்த காதல் என்று தான் தோன்றியது.
ஆனால், விக்ரமிடம் சொல்ல வில்லை. முன் போல அவள் ஏதேனும் பேசி, அவன் ஊரை விட்டு போய் விட்டால். அவன் கட்டாய படுத்த மாட்டான். ஆனால், வேண்டாம் என்ற திடம் அவளிடம் தான் இல்லை.
இனி நிச்சயம் விக்ரமை யாரோ போல ஒதுக்கி போக முடியாது. அவனும் வேண்டும், ஊரும் வேண்டும். என்ன செய்ய?…
அவளையே பார்த்தவன், “பிரபா, நீ நினைக்கிறது எனக்கு புரியுது. என்னை தாண்டி வார பிரச்சனையை நீ யோசிக்கிற. முதல்ல என்னை யோசி…” என்று விக்ரம் சொல்ல,
என்ன சொல்கிறான் என்று தான் பிரபா பார்த்தாள்.
“உன் நிலை எனக்கு புரியுது பிரபா. ஆனா, நமக்கான வாய்ப்பு என்னன்னா… ஒன்னு நம்ம நமக்காக வாழ்ற வாழ்க்கை. அடுத்து நீ பார்த்து பயப்படுற இந்த ஊருக்காகவும், சொந்தத்துக்காகவும் வாழ்கிற வாழ்க்கை. நீ, என்னை பாரு. நான் விக்ரம். இது தான் என் உடல், நிறம், படிப்பு, குணம் எல்லாம். உன்கிட்ட எதையும் மறைக்கல…”
“என்னை மட்டும் நினை, நான் உனக்கு சரியா? என்னோடு உன் வாழ்க்கை சந்தோசமா இருக்குமா? காலத்துக்கும் துணை நிப்பேனா? அதுக்கும் மேல, எல்லோரும் நம்மளை ஒதுக்கி தான் வைப்பாங்க. உனக்கு நான், எனக்கு நீ அது தான் என்னைக்கும்… பின்னாடி ஒரு காலத்துல நம்ம குடும்பம் மாறலாம் இல்லை மாறாமல் கூட போகலாம். அதையும் கடந்து தான் நம்ம வாழ்க்கை. அதுக்கு நான் தயாராக தான் இருக்கேன், உறுதியாகவும்… இனி நீ சொல்லு?…”
“உனக்கு என்னை பிடிக்கலன்னு சொல்லு, பொருத்தம் இல்லன்னு சொல்லு, எல்லாத்தையும் விட்டு உன் கூட வர அளவுக்கு நீ எனக்கு முக்கியமில்லைன்னு சொல்லு, விக்ரம், உன்னை என்னால கடக்க முடியும்னு சொல்லு, என்னோட எதிர்பார்ப்பு, ஆசை எல்லாம் வேற, அதுல நீ இல்லன்னு சொல்லு… நான் விலகி போயிடுவேன் பிரபா. இது மட்டும் தான் என்னை, உன்கிட்ட இருந்து தடுத்து நிறுத்தும்…” என்று சொல்ல, பிரபா கண்கள் மீண்டும் கலங்கியது.
“அதை விட்டு நாம வேற, வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க, ஊர் கலவரம் வரும், பிரச்சனை வரும்ன்னு சொல்றது எல்லாம் என்கிட்ட மதிப்பே இல்லை…” விக்ரம் தெளிவாக சொல்ல,
“இதுவரை நீங்க ஒரு நாளும் யோசிச்சது இல்லையா? நாம ரெண்டு பேருமே வேற, வேற… ஊரா விடுங்க. நாளைக்கு நமக்குள்ள கூட அந்த வேறுபாடு வரலாம்…”
“அப்படி வேறுபாடா நான் நினைச்சு இருந்தா, உன் பின்னாடி ஏன் நாய் மாதிரி அலைய போறேன். எங்க பக்கம் இல்லாத பொண்ணுங்களா… எனக்கு உன்னை பிடிச்சு இருக்கு. எல்லா பிரச்சனையும் கண் முன்னாடி தெரிஞ்சும், உன்னை கை பிடிக்கிற அளவுக்கு எனக்கு உன்னை பிடிச்சு இருக்கு. எம் மனசுல எந்த வேறுபாடும் இல்லை. இனி என்னைக்கும் அப்படி ஒரு நினைப்பு என் மனசுல வராது…” தெளிவாக சொன்னான் விக்ரம்.
“பையன் வீட்டுல கொஞ்ச நாள் அப்புறம் ஏத்துப்பாங்க. ஆனா எங்க வீட்டுல… ம்கூம், மொத்தமா ஒதுக்கி வச்சிடுவாங்க. காலத்துக்கும் என்னால சேர முடியாது. என்னை பெத்தவங்களுக்கு ரொம்ப பெரிய தலைகுனிவு. நாளைக்கு எங்க அப்பா, அம்மாக்கு ஒன்னுன்னா கூட என்னை உள்ள விட மாட்டாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் வார வாழ்க்கை தான் காலத்துக்கும், அது தான் எனக்கு குடும்பம்ன்னு வாழ்ந்தாலும், நான் பிறந்த பிறப்பு மாறாது. என்னோட இடம் இது தான். அந்த வலி காலத்துக்கும் நெஞ்சுல நிக்கும் தான…” கண்ணீர் பொங்கியது.
பெரும் கேவல் வேறு வந்தது. மீண்டும், மீண்டும் அவள் விக்ரமை காயப்படுத்துகிறாள். நீ மட்டும் போதும் என்றவனை உதாசீனப்படுத்திகிறாள். காண கிடைக்காத பொக்கிஷம் தான் அவன். வேற்றுமையில் ஒற்றுமை கண்டவன். எல்லோரும் தூக்கி பிடித்து, உயர்ந்ததாக கருதிய ஒன்றை, என்னிடம் மதிப்பில்லை என்று தூக்கி போட்டவன். உண்மையில் உயர்ந்தவன்.
படித்தவன், பணக்காரன், நல்ல வேலையில் இருப்பவன், அழகான ஆண் மகன் கிடைப்பது எளிது. நற்பண்புகளும், உயர்ந்த எண்ணமும், தெளிவான சிந்தனையும் கொண்டவன் கிடைப்பது அரிது. அப்படி பட்ட ஒருவன் தான் விக்ரம்.
விக்ரம் குணம் பிரபா நன்கு அறிந்து கொண்டாள். அதனால் தான் , வரும் பிரச்சினையின் வீரியம் புரிந்தும் ஒதுக்கி தள்ள முடியாமல் அழுது கொண்டிருக்கிறாள். அவளையே பார்த்தவன்,
“பிரபா, பயந்தா நாம , நம்ம வாழ்க்கையை இழந்துருவோம். வாழ்க்கைன்னு நான் சொன்னது நீ என்னையும், நான் உன்னையும் தான்…” அதுவரை அழுது கொண்டிருந்தவள் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் எதை நினைத்து பயந்தாளோ அதை தான் சொல்கிறான். வலி அதிகமானது.
“உன்னால முடியுமா? என்னை வேறொரு பொண்ணு கூட பார்க்க… என்னை மறந்து நீயும் வேறொரு…” அதற்கு மேல் அவனுக்கு சொல்ல வாய் வர வில்லை.
“காதல், கல்யாணம் எல்லாம் பெரிய விசயம், பெரிய முடிவு. நாள் முழுக்க அழுது மட்டுமே காதலை கரைக்க முடியாது. காலத்துக்கும் வலி தான். இதுக்கு அப்புறம் நமக்கு ஒரு வாழ்க்கை இல்லன்னு சொல்ல மாட்டேன். ஆனா, காதலோட வலி இருக்கும். வாழ்க்கை முழுக்க… இன்னைக்கு நீ யோசிக்கிற எல்லாம், நாளைக்கு வயதாகி முடங்கி போகும் போது நினைச்சு பார்ப்போம், நமக்காக நாம கொஞ்சம் வாழ்ந்து இருக்கலாமேன்னு. அப்போ எதையும் திரும்ப பெற முடியாது…”
“பிரபா, நீ என்னோடு வந்தாலும் என்னோட மனைவின்னு அடையாளம் உன்னை வந்து சேரும் தான். அதை தாண்டி நீ, உங்க அப்பாக்கு மகன்றது மாறாது. உன் அடையாளமும் உன்னை விட்டு போகாது. உனக்கான உரிமையும் யாரும் எடுத்துக்க முடியாது. ஆனா, நம்ம வாழ்க்கை அப்படி இல்லை. ஒரு நொடியில வாழ்க்கை மாறி போகும். கடந்துட்ட திரும்ப பெற முடியாது உறவு நம்மோடது…” உண்மை பிரபாக்கும் புரிந்தது.
பிரச்சனையின் பயத்தை விட, இழப்பின் வலி அதிகம். இத்தனை நாள் தங்களை வளர்த்த, கட்டமைத்த அனைத்தையும் வலியோடு உதறி, தங்களுக்கான பதையை தீர்மானித்து கொண்டார்கள். இந்த வாழ்க்கை தங்களது அல்லவா!…
“நாம எல்லாம் சாதாரண மனுசங்க. எதிர்காலத்தை பத்தி நம்பிக்கையோடு சிந்திக்கிற மனுசங்க. எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அடுத்து கானுற கனவு, சிந்தனை எல்லாம் நம்மிக்கையானதா தான் இருக்கும். எதிர்காலத்தை பத்தி நினைக்கிற யாரும் தப்பு நடக்குமான்னு நினைக்க மாட்டாங்க. நல்லதா தான் நினைப்பாங்க. நாமளும் அப்படி நல்லதவே நினைப்போம் பிரபா. நல்லதாவே நடக்கும். தவறா தான் போகும்னு ஏன் யோசிக்கணும். காலம் மாறும். எல்லாரும் மனுசங்க தான, மாறுவாங்க…” என்று நம்பிக்கையோடு அவளை நோக்கி கை நீட்ட,
அழுது கொண்டிருந்தாலும் அவனின் கையை மெல்ல பிடித்து கொண்டாள். பட்டும் படாமல் மெல்ல அவளை தோல் அனைத்து, அவளின் நறுமணம் நாசியை நிறைக்க நின்றான் விக்ரம்.
மிக உணர்ச்சிகரமான நிகழ்வு தான். ஆனால், தருணம் விவாதங்களாகவும், தர்க்கங்களாகவும் தான் இருந்தது. இருவருக்கும் உள்ளத்தில் ஒரு நிறைவு. உயிரில்லாத கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கு உயிருள்ள மனித மனங்களின் உணர்ச்சிகளை ஏன் கொள்ள வேண்டும். முடிவு எடுத்தாகி விட்டது, காதலே பிரதானம் என்று…
இந்த காதல் ஒரு வகையில் நியாயம் கலந்த சுயநலம். இவர்களின் நியாயமான ஒன்று, பெற்றவர்கள் பார்வையில் சுயநலமாக பார்க்க படும். பிள்ளைகளுக்கும் நியாயமான பக்கங்கள் உண்டு என்று பெற்றவர்கள் சிந்திக்காதவரை காதல் சுயநலமானது தான்.
இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திய பின்னும் விக்ரம் தள்ளி தான் நின்றான். பிரபா படிப்பு முக்கியம், அதற்கு முன் இவர்கள் விசயம் வெளி வர கூடாது. ஆனால், காதல் ஆசை யாரை விட்டது. ரேவதியிடம் மாட்டி கொண்டார்கள்.
error: Content is protected !!