Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இ.பி.கோ. 55

இ.பி.கோ. 55 – அத்தியாயம் 18

அத்தியாயம் – 18

மாணிக்கத்தின் விபத்து குறித்து விசாரிக்க அவரின் வீட்டுப்பக்கம் சென்றிருந்தான் அகிலன். அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு வலக்காலில் முறிவா இடக்காலில் முறிவா என்று கேட்டுப்பார்க்க, அது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது நினைவில் இல்லை என்றனர். அந்த பகுதிக்கு சமீபத்தில் குடி வந்தவர்களுக்கு அவரின் விபத்து குறித்து தெரியவே இல்லை. என்னடா இது என்று நினைத்துக்கொண்டே அன்று விசாரித்த டீக்கடைக்கு சென்றான். 

இவனைக் கண்டதும் டீ போட, வேண்டாம் என்று மறுத்தவன் மாணிக்கத்தின் விபத்து குறித்துக் கேட்க, தெரியவில்லை என்றான்.

“நல்லா யோசிச்சு பாருங்க. கடைக்கு எப்போவாச்சு டீ குடிக்க வந்திருப்பாரே? அப்போ இடதுகாலுக்கு சப்போர்ட் வச்சிருந்தாரா இல்லை வலது காலுக்கா?” என்று அகிலன் எடுத்துக்கொடுக்க, “அவர் டீ குடிக்க இங்கெல்லாம் வரமாட்டாரு. எப்பவாச்சும் அவங்க வீட்டுக்கு விருந்தாளிக வந்தா அவர் சம்சாரம் டீ வாங்கிட்டு வர சொல்லி ஆள் அனுப்புவாங்க.” 



Advertisement

“வேற யாரும் அவரை நல்லா தெரிஞ்சவங்க அவரோட நல்லா பழகுனவங்க இருக்காங்களா? அதாவது முன்னாடி இந்த ஏரியால இருந்து இப்போ வேற இடத்துக்கு மாறுனவங்க?” என்று கேட்க, யோசித்த கடைக்காரன், “அவருக்கு எதிர் வீட்டுல கிளார்க் ஒருத்தர் இருந்தார். இப்போ பக்கத்து தெருவுக்கு மாறி போயிட்டாங்க. அவங்களை கேட்டுப் பாக்கலாம் சார்.”

நம்பிக்கை வரப்பெற்றவனாய் அவரது விவரங்கள் கேட்க, அவரின் பெயரையே அத்தனை யோசித்து சொன்னான் கடைக்காரன். இனி விஷயம் தேறாது என்று புரிந்து போனது. எந்த துறையில் வேலைப் பார்க்கிறார் என்று கேட்டு தெரிந்துகொண்டு அந்த அலுவலகத்தில் கேட்டுப்பார்க்கலாம் என்று முடிவெடுத்தவனாய் கிளம்பினான்.

அதே சமயம் மான்சியின் ஃபார்முக்கு வந்த அதிராவை அங்கிருந்தவர்கள் நல்விதமாகவே வரவேற்றனர். எந்த மாதிரியான விவசாய முறைகளை கையாள்கிறார்கள் என்னென்ன உரங்கள் பயன்படுத்துகிறார்கள் என்று கேட்க, அனைத்தையும் தெளிவாக விளக்கினார்கள்.

Advertisement

மண்ணின் தரத்தை பாதிக்காத வண்ணம் செயற்கை உரங்களுக்கு மாற்றாக கால்நடை கழிவுகள், மண்புழு உரம், பழங்களின் தோள்களை காய வைத்து உரமாக்கி உபயோகிப்பது போன்ற வழிமுறைகளை கையாள்வதாக தெரிவித்தார்கள்.

Advertisement

பூச்சுக்களை தடுக்க வேப்ப எண்ணெய் கலவையும் அரசால் விற்கப்படும் இயற்கை பூச்சிக்கொல்லிகளையும் வாங்கி உபயோகப்படுத்துவதாக சொல்ல, அதை பார்க்க வேண்டும் என்றாள் அதிரா. அந்த பண்ணையின் மேனேஜர் உரங்கள் சேமித்து வைத்திருக்கும் அறைக்கு அழைத்துச் செல்ல, உடன் வந்த பரிதியிடம் அனைத்தையும் புகைப்படம் எடுக்கச் சொன்னாள். அவளும் ஒவ்வொன்றாய் எடுத்துப்பார்த்து அதிலிருக்கும் பொருட்கள் என்னனென்ன என்று படித்துப்பார்க்க,

“என்ன இஸ்யூ மேம்?” என்று மேனேஜர் கேட்கவும் தான் வாய் திறந்தாள்.

“இங்க டீடிடி, போரேட் அந்த மாதிரி பூச்சிக்கொல்லி ஏதாவது யூஸ் பண்றீங்களா?”

Advertisement

“அதெல்லாம் டாக்சிக் மேடம். இந்த இடத்துக்குள்ள அதெல்லாம் அலவ்டே இல்லை. நாங்க முழுக்க முழுக்க இயற்கையை சார்ந்து விவசாயம் பண்றோம். மனுஷங்களை மட்டுமில்லை இந்த சுற்றுசூழலுக்கு, கால்நடைகளுக்கு, பறவைகளுக்கு உகந்த மாதிரி யாருக்கும் பாதிப்பு வராத மாதிரி செய்றோம். நீங்க ஏதோ தப்பான புரிதல்ல கேக்குறீங்க.” என்று பதறினார் மேனேஜர். 

அப்படியா என்பது போல் அவரைப் பார்த்த அதிரா ஒன்றும் சொல்லாமல் பரிதியை பார்க்க, அவன் ஒவ்வொன்றாய் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான். அவன் எடுத்து முடிக்கும்வரை காத்திருந்தவள் சுற்றத்தை நோட்டமிட்டபடி கிளம்பினாள்.

“போட்டோஸ் காமிங்க பரிதி…” என்று அலைபேசி வாங்கிப் பார்க்க, 

“என்னாச்சு மேடம்?”

“மான்சி உடம்புல டீடீடி(ddt) அப்படீங்குற பூச்சிக்கொல்லி குறிப்பிட்ட அளவுல இருக்கு. 1940 காலகட்டத்துல தயாரிச்சு 1970 வரைக்கும் மலேரியா கொசுக்கள், டைப்பஸ் மாதிரியான வியாதிகளை கட்டுப்படுத்த, அப்புறம் பூச்சிக்கொல்லியாவும் உபயோகிச்சிட்டு இருந்தாங்க. ஆரம்பத்துல பூச்சுக்களை கட்டுப்படுத்துற வரமா பாக்கப்பட்ட இந்த கெமிக்கல் மனிதர்களுக்கு மட்டுமில்லை இந்த பூமில இருக்குற மண், நீர், செடி, கொடி, மரம், பறவைகள் எல்லாத்துக்கும் கேடுன்னு உணர்ந்து 1960, 1970 இந்த காலகட்டத்துல டீடீடி உற்பத்தியும் பயன்பாடும் உலகம் முழுக்க தடை செய்யப்பட்டதா அறிவிக்கப்பட்டிருக்கு. நம்ம நாட்டுல சட்டத்துக்கு புறம்பா 1990 வரைக்கும் விவசாயத்துக்கு உபயோகிச்சிருக்காங்க. 

உலக முழுக்க இதோட உற்பத்தியை நிறுத்திட்டாங்க ஒரே ஒரு நாட்டை தவிர. அது நம்மதான்.” என்று நிறுத்த அதிர்ந்து பார்த்தான் பரிதி.

“ஒரு தடவை இந்த டீடிடியை ஸ்ப்ரே பண்ணா மண்ணுக்குள்ள ஊடுருவி பல தசாப்தம் தாண்டியும் அதோட வீரியம் இருக்கும்னு கண்டுபுடிச்சிருக்காங்க.”

“அப்புறம் ஏன் மேம் நம்ம நாட்டுல மட்டும் இன்னும் உற்பத்தி பண்றாங்க?”

“மலேரியாவை கண்ட்ரோல் பண்றதுக்காக உற்பத்தி பண்றாங்க பரிதி. இன்னமும் மலேரியா கொசுக்களை அழிக்க நாம இதை நம்பித்தான் இருக்கோம். அமிர்தத்துல கொஞ்சம் நஞ்சு கலந்தாலும் மொத்தமா நஞ்சாகிடும். அது மாதிரிதான் மலேரியாவை கட்டுப்படுத்துறோம்னு சொல்லி இதை யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. ஆப்ரிக்கா மாதிரியான பின்தங்கிய நாடு அப்புறம் வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதியும் பண்றாங்களாம். இந்த வருஷத்துக்குள்ள தயாரிப்பை நிறுத்தணும்னு ஸ்டாக்ஹாம் கூட்டத்தின் விதிகள் சொல்லுது. ஆனா டீடீடிக்கு மாற்றா கண்டுபுடிச்சிருக்குற கெமிக்கல் அவ்வளவு பயன் தரலைனு சொல்லி அடுத்த வருஷத்துக்குள்ள தயாரிப்பை நிறுத்த முயற்சி செய்றோம்னு சொல்லி இருக்காங்க நம்ம கவர்மென்ட்.”

“மான்சி இறப்புக்கு இதுதான் காரணமா?”

“மேபீ… இதை சுவாசிச்ச உடனே எல்லாம் யாரும் இறக்க வாய்ப்பில்லை. ரொம்ப நாள் இதை சுவாசிச்சா சுவாச கோளாறு, நுரையீரல் பாதிப்பு வரலாம்னு சொல்றாங்க. டீடீடியால இறப்பு எல்லாம் ரேர் அல்மோஸ்ட் நில்னு கேள்விப்பட்டேன்.”

“மான்சி இறக்குறதுக்கு மூணு மாசம் முன்னாடி மலேரியா வந்துச்சுனு சொன்னாங்களே. அப்போ இந்த கெமிக்கல் ஸ்ப்ரே பண்ணி இருப்பாங்களோ?”

“எஸ், உங்க கெஸ் கரெக்ட் பரிதி. மான்சி வீட்டுல அப்புறம் பண்ணை இந்த ரெண்டு இடத்துலயும் மலேரியாவுக்கு மருந்து அடிச்சிருக்காங்க. அதனால மான்சி குடும்பமும் பண்ணையில வேலை பாக்குறவங்களும் ஒரு சின்ன அமவுண்ட் சுவாசிச்சிருக்க வாய்ப்பிருக்கு. ஆனா இறக்குற அளவுக்குன்னா தொடர்ந்து அதோட எக்ஸ்போஷர் இல்லைனா ஒரே நேரத்துல அளவுக்கு அதிகாகமா மான்சி சுவாசிச்சி இருந்திருக்கணும். அப்படி பாத்தா அவங்களோட ஃபார்ம் தான் நம்மளோட சந்தேக வலையத்துக்குள்ள வருது. நீங்க இந்த போட்டோல இருக்குற மருந்தெல்லாம் வெளில வாங்கி நச்சுப்பொருள் கலந்திருக்கான்னு செக் பண்ணிட்டு மான்சியோட ஃபார்ம்ல யூஸ் பண்ற அந்த உரம் எல்லாத்தையும் ஸீஸ் பண்ணி செக் பண்ணுங்க பரிதி.” 

“பூச்சிகொல்லினால மான்சி இறந்ததாகவே அஸ்யூம் பண்ணிக்கிட்டாலும், அப்போ அந்த ஆட்டோ? தலை சுத்துது மேம்.” என்று தலையை படித்தான் பரிதி.

“அதுதான் எனக்கும் இடிக்குது பரிதி. ஒருவேளை ஆர்கானிக் பார்மிங் பண்றோங்குற பேர்ல ஏதாவது மோசடி கும்பல் சுத்துதோ? அதுல மான்சி மாட்டி அசம்பாவிதம் நடந்திருக்குமோ?”

“நாம இப்போ யூகம் மட்டும்தான் பண்ண முடியும்.”

“லெட்ஸ் சீ.” 

பரிதி சென்றபின் அலைபேசி எடுத்துப் பார்த்தாள் அதிரா. காலை உணவு, மதிய உணவு, பழச்சாறு அனைத்தையும் உண்டு, குடித்துவிட்டதாக தகவல் வந்திருந்தது அகிலனிடமிருந்து. அவள் வீட்டில் உணவருந்த துவங்கிய இந்த இரண்டு நாளாக இப்படி வேளைக்கு வேளை அவன் செய்தி அனுப்புவது அவளை  இதமாய் உணரச் செய்தது.

முதல் நாள் இரவு அவன் சமைக்க தெரியாது சமைத்த கூத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வந்தது.

அன்று இரவு…

முகம் கழுவி, கொண்டையை அவிழ்த்து முடியை விரித்துவிட்டு, உடை மாற்றி வந்தவளை குழப்பத்துடன் பார்த்த அகிலன், “இதென்ன இத்தனை டயட் சொல்றாங்க? பேலியோங்குறாங்க, கீட்டோங்குறாங்க, லிக்விட் டயட்டுங்குறாங்க, வீகனுங்குறாங்க இதெல்லாம் என்ன?” என்றுதான் கேட்டிருந்தான். 

“லோ கார்ப் மாதிரி இதுவும் டயட்தான்.”

“என்னமோ போங்க. என்ன செய்யணும் இப்போ?” போனை வைத்துவிட்டு அவளைப் பார்த்தான்.

“சாலட்.”

“எது இந்த வெள்ளரி, கேரட்டை வெட்டிப்போட்டு சாப்டுறதுதானே, ஜுஜுபி அது.” என்று அலட்சியமாய் சொன்னவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள், எழுந்து கிட்சன் செல்ல, இவன் பின்தொடர்ந்தான்.

ப்ரிட்ஜ் கதவை இடக்கையால் திறந்துவிட்டு அவனைப் பார்க்க அருகே வந்தான் அகிலன்.

காய்கறி ட்ரேவை காட்டியவள், “இது எல்லாத்தையும் எடுத்து வாஷ் பண்ணு. அப்படியே எக் பாயில் பண்ணு.” என்று அவள் சொல்ல சொல்ல செய்தான்.

“காய்கறிக்கு வலிக்க போகுது… நல்லா தேய்ச்சி கழுவு.” அவன் கழுவும் அழகை எட்டிப் பார்த்து அதிரா கேலி செய்ய, “ரொம்பத்தான்.” என்று உதட்டை சுழித்தபடி கழுவி எடுத்து வர, காய்கறி நறுக்க வசதியாய் கத்தியும் போர்டும் எடுத்து வைத்திருந்தாள் அதிரா.

“நறுக்கணுமா இப்போ?” என்று கேட்டுக்கொண்டே கத்தியை எடுத்தவன் முன் சக்கரை வள்ளி கிழங்கையும் வெங்காயத்தையும் எடுத்து வைத்தாள்.

“வெங்காயமா?” என்று பாவமாய் அவன் பார்க்க,

“வெங்காயம்தான் ஏன்?” குழப்பமாய் பார்த்தாள் அதிரா.

“முதல் நாளே அழ வைக்குறீங்களே நியாயமா?” என்று கண்ணீரை துடைப்பது போல் பாவனை செய்ய, உதட்டை மடித்து சிரித்தாள் அதிரா.

“நான் அழுதா உங்களுக்கு சிரிப்பு வருதோ.” என்று உதட்டை பிதுக்கிக்கொண்டே வெங்காயத்தின் தோலை உரித்தான்.

தோல் உரிக்கும் போதே எரிச்சலில் விழிகள் குளங்கள் கட்ட, உள்ளே சென்று சிறு கர்சீப் எடுத்து வந்து கொடுத்தவள், “துடைச்சிக்கோ.” 

“உங்க அக்கறையை கண்டு புல்லரிச்சிடுச்சு.” என்று நக்கலடித்துக்கொண்டே கர்சீப் வாங்கி கண்களில் ஒத்தினான்.

எரிச்சலில் அவன் கண்களை மூடிமூடித் திறக்க, பாவமாய் பார்த்தவள், “என்னால முடிஞ்சா நான் ஏன் அழ வைக்க போறேன்.” என்க, பாதி கண்ணை திறந்துப் பார்த்தவன், “அதுக்காக நீங்க அழுவீங்களா. அதெல்லாம் ஒன்னும் வேணாம். நான் எதுக்கு இருக்கேன்.” என்றபடியே நறுக்க ஏதுவாக வெங்காயத்தை வைக்க, எப்படி நறுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள் அதிரா.

தப்பும் தவறுமாக வெட்டியவனை திருத்த கை துறுதுறுத்தாலும் அவனை நெருங்கி சென்று திருத்த வேண்டி வரும் என்பதால் தள்ளி நின்றே உதவினாள் அதிரா. 

சக்கரை வள்ளிக்கிழங்கை எடுத்தவன் அப்படியே நறுக்கப்போக, கழுவ சொல்லி உதவியதோடு உணவில் எப்படி சரிவிகித புரதம், கொழுப்பு, நார்சத்து இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் சென்றும் சொல்லிக்கொடுத்தாள்.

அனைத்தையும் அவனில் பேக் செய்து, முட்டை வேக வைத்து இறுதியாக தட்டில் பரப்பி உண்ண அமரும்போது இருவருக்குமே மனம் நிறைவாக இருந்தது. இடக்கையால் ஸ்பூனில் அவள் உண்ணும் போது அதை பிடுங்கி தூரப்போட்டுவிட்டு தானே ஊட்டிவிட வேண்டும் என்று பரபரத்தது அவன் உள்ளமும் கரமும். தினம் தனியாய் உண்பவளுக்கு அவனது துணை இதமளிக்க, அடுத்தடுத்த இரவை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

அன்று இரவு தாமதமாகவே அதிரா வீட்டிற்கு வந்தான் அகிலன். அவனுக்காக காத்திருந்து காத்திருந்து பசியெடுக்க தனியாகவே உண்டுவிட்டாள் அதிரா.

“ஏன் இவ்ளோ லேட்.” 

“…” உச்சுக்கொட்டி முகத்தை அழுந்த துடைத்தான் அகிலன்.

“உன்னைத்தான் கேட்டேன். இதுதான் சாப்பிட வர நேரமா?”

“ம்ச்… உங்களுக்கென்ன எப்போ தோணுதோ அப்போ கிளம்பிடலாம். எனக்கு அப்படியா?” என்று சிடுசிடுக்க, அவனையே அழுத்தமாக பார்த்தாள் அதிரா.

சில நொடிகள் அமைதியில் கழிய நெற்றியில் அடித்துக்கொண்டு அவனே தெளிந்து நிமிர்ந்தவன் சின்னக் குரலில், “சாரி.”

“அப்பப்போ குணம் தலைகாட்டுதுல்ல.” என்றவள் குரலில் இருந்த வேறுபாட்டில் தன்னை தானே நொந்து கொண்டவன்,

“மாணிக்கம் கேஸ் பத்தி விசாரிக்க போனேனு இன்ஸ்பெக்டருக்கு தெரிஞ்சி அதிகம் வேலை குடுத்துட்டாரு. அந்த எரிச்சல்ல…” என்றவனை இடைமறித்தாள் அதிரா.

“எரிச்சலை காட்டலாம் தப்பில்லை. ஆனா அந்த வேகத்துல பேசுனதை அதோட விட்டுரனும். கடைசி வரைக்கும் பிடிச்சிட்டு இருந்தா எதுவுமே தங்காது, இன்னும் சிக்கல்தான் ஆகும்.” என்றவளை புரிந்தும் புரியாத பார்வை பார்த்தான் அகிலன்.

அவன் பார்வை புரிந்தாலும் விளக்க முயலவில்லை அதிரா, “சாப்பாடு ரெடியா இருக்கு.” என்று மேசை நோக்கி கண்காண்பிக்க, “பேக் பண்ணி எடுத்துட்டு போறேன். கசகசன்னு இருக்கு, ப்ரெஷ் ஆகிட்டு சாப்டுக்குறேன்.”

“ஏற்கனவே லேட் ஆகிடுச்சு. இங்கேயே ப்ரெஷ் ஆகிட்டு வா.” என்று விருந்தினர் தங்கும் அறையைக் காட்டினாள்.

அவளது அக்கறையில் அலுப்பு பின்சென்று புத்துணர்ச்சி பிறக்க, அறைக்குச் சென்று முகம் கழுவி வந்து அவனே உணவை தட்டில் வைத்துக்கொண்டு அவள் எதிரே உண்ண அமர்ந்தான். 

“என்ன இது டேஸ்ட் வித்தியாசமா இருக்கு. நான் சப்பாத்தினு நினைச்சேன்.” என்று கையில் பிய்த்து வைத்திருந்ததை காட்டிக் கேட்டான் அகிலன்.

“கம்பு சப்பாத்தி. இதெல்லாம் கொஞ்சம் நேரமே சாப்பிட்டா செரிமானத்துக்கு சுலபமா இருக்கும். லேட் ஆகிட்டு சோ, சாப்புட்டு சின்ன வாக் போய்ட்டு தூங்கு, தண்ணி நிறையா குடி.” என்றவள், 

“நாளையிலிருந்து பழம் கட் பண்ணி வைக்க சொல்றேன். சாப்டுடு.”

ஏன் என்பது போல் அவன் பார்க்க,

“ஜூஸை விட அப்படியே சாப்புடுறதுதான் நல்லது. உனக்கு பழகட்டுமேனு இத்தனை நாள் ஜூஸ் போட சொல்லியிருந்தேன்.”

உணவை மென்றபடி, “நீங்களும் பழமா சாப்புட வேண்டியதுதானே ஏன் ஜூஸ் குடிக்குறீங்க?”

“தினம் குடிக்க மாட்டேன். என்னைக்காவது குடிப்பேன் அன்னைக்கு பாத்துட்டு நீயா நான் ஜூஸ்தான் குடிப்பேன்னு முடிவு பண்ணிட்ட.” என்றவள் தூக்கம் வருவதற்கு அறிகுறியாக கொட்டாவி விட்டாள்.

“அதுக்குள்ள தூக்கம் வந்துடுச்சா? நான் வாக் போலாம்னு நினைச்சேன்.” ஏமாற்றத்தில் சின்ன குரலில் சொன்னான் அவன்.

“கரெக்ட் டைம் தூங்கணும் அகிலன். நம்ம வேலையில எப்போ வேணும்னாலும் எமெர்ஜென்சி வரலாம். எல்லாத்துக்கும் ரெடியா இருக்கனும். அதுக்கு உடம்பும் மனசும் ஒத்துழைக்கணும். தூக்கத்துல காம்ப்ரமைஸ் பண்ணாத.” என்று சொல்ல, ஆயாசமாய் அவளைப் பார்த்தவன்,

“இந்த வேலையைத் தவிர வேற எதையும் யோசிக்க மாட்டிங்களா?” என்று கேட்க, மெலிதாக சிரித்தவள்,

“யோசிக்க வேண்டிய அவசியம் பெருசா வந்தது இல்லை. டெல்லில வேலை பாக்கும் போது பிரெண்ட்ஸ் இருப்பாங்க. பிடிவாதமா மாசம் ஒருமுறை பார்ட்டி பண்ண கூட்டிட்டு போயிடுவாங்க. அப்புறம் அப்புறம் வேலையில கான்சென்ட்ரேட் பண்ணுனேன். புக்ஸ் படிப்பேன், சாங்ஸ் கேப்பேன்.”  

“எனக்கெல்லாம் வாரம் ஒருமுறை ஊர் சுத்திடனும். எப்படித்தான் இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்கீங்களோ?” என்றவன் கை கழுவிட்டு வந்து அமர,

“நாள் முழுக்க கேஸ், விசாரணைன்னு ஊர் சுத்திட்டு தானே இருக்கோம். சோ வீட்டைத்தான் மிஸ் பண்ணுவேன்.” என்றாள் அதிரா.

“தப்பு. என்ஜாய் பண்ற இடத்தையெல்லாம் நீங்க இன்னும் பாக்கல அதான் இப்படி பேசுறீங்க.”

“தோடா… டெல்லி, ஜெய்ப்பூர், சூரத்னு பாத்துட்டேன்.”

“எல்லாம் பாத்தும் இன்ட்ரெஸ்ட் வரலைன்னா கூட வந்த ஆள் உங்களுக்கு ஒழுங்கா கம்பெனி கொடுக்கலைனு அர்த்தம். ஈசிஆர்ல கோவளம் ப்ளூ ஃப்லேக்(flag) பீச் இருக்கு. சன் ரைஸ் அண்ட் சன் செட் நல்லா இருக்கும். இடமும் நீட்டா இருக்கும். அங்க போனா கண்டிப்பா உங்களுக்கு புடிக்கும்.” என்றவனை அதிரா கூர்ந்து பார்க்க,

தடுமாறியவன், “தூக்கம் வருதுன்னு சொன்னீங்க தூங்குங்க.” என்று எழுந்துவிட்டான். 

வாசல் வரை சென்றவன் நெற்றியில் அடித்துக்கொண்டு திரும்பிப்பார்த்து, “சொல்ல மறந்தே போய்ட்டேன். மாணிக்கத்துக்கு வலது கால்ல தான் ஆக்சிடென்ட் ஆச்சாம். விசாரிச்சிட்டேன்.”

“குட். அவரோட தம்பியை கான்டெக்ட் பண்ணி இந்தியா வர சொல்லு.” என்றதும் தலையசைத்து விடை பெற்றான் அகிலன்.

நாட்கள் வழக்கம் போல் செல்ல, வழக்கும் அதன் போக்கில் விசாரணையில் சிக்கிக்கொண்டு தவித்தது. உரங்களை ஆராய்ந்து சொல்லும்படி மான்சி இடத்திலிருந்து கைப்பற்றியதையும் அதே கம்பெனி உரத்தை வெளியே கடைகளிலும் வாங்கிக் கொடுத்திருந்தான் பரிதி. வழக்குக்கு பெரிதாக பத்திரிகைத்துறையிலிருந்தும் கூட செய்திகள் வராது போக, அதன் முக்கியத்துவம் குறைந்தது போல் அனைத்தும் ஆமை வேகத்தில் நகர்ந்தது. மான்சி வீட்டினர் தனியே உளவாளி வைத்து குற்றவாளியை தேடிக்கொண்டிருந்தனர். அவர்களாலும் கண்டுபிடிக்க முடியாது திணறினர். 

இயல்பான அந்த நாளொன்றில் இரவு உணவு முடித்த அகிலன்,”தங்கச்சி வளைகாப்புக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு. நீங்க வரீங்க தானே?” என்று அதிராவை எதிர்பார்ப்புடன் ஏறிட்டான்.

“பாக்குறேன் அகிலன்.” என்று அவள் மழுப்ப, இவன் முகம் கூம்பிவிட்டது.

அவன் முகவாட்டம் அவளையும் வாட்ட, பேச்சை மாற்றும் பொருட்டு, “நீ எப்போ ஊருக்கு போற?” 

“ரெண்டு நாள் முன்னாடி போறேன்.”

“ஏற்பாடு எல்லாம் செஞ்சாச்சா?”

“அம்மா பாத்துப்பாங்க.” என்ற அவனது பதிலில் அதிருப்தியானவள், 

“தங்கச்சி விஷேஷத்துக்குன்னு ஆகஸ்ட் மாசம் ஊருக்கு போனவன் திரும்ப இப்போ அக்டோபர் தான் போற. அம்மா தனியா இருக்காங்கல்ல அடிக்கடி போய் பாத்துகிட்டா குறைஞ்சா போயிடுவ? எல்லாத்தையும் அவங்க தலையில கட்டிட்டு இங்க இருக்கியா?” என்று உரிமையாய் அதட்ட,

“போன்லேயே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்.” என்றான் அவன்.

“அப்போ போன்லேயே பங்ஷன் அட்டென்ட் பண்ண வேண்டியதுதானே?” காட்டமாகவே கேட்டாள் அதிரா.

“…”

“வாரத்துக்கு ஒருநாள் லீவ் எடுக்குற தானே. ஊருக்கு போனா என்ன குறைஞ்சிட போற?”

பதில் சொல்ல முடியாமல் திணறியவன், “அப்படியே பழகிட்டேன்.”

“இப்போ பழக்கத்தை எல்லாம் மாத்திட்டு வரதான… இதையும் மாத்து. ஒருநாள் சேர்த்து லீவ் எடுத்துட்டு ஊருக்கு போ.” என்றவளின் பேச்சை மீற முடியாது மறுநாள் இரவு ஊருக்கு கிளம்பினான். 

அன்று மாலை உரங்களை ஆராய்ச்சி செய்து அறிக்கை வந்திருக்க, அதை கொடுக்க வந்திருந்தான் பரிதி.

“மான்சி ஃபார்ம்லேந்து எடுத்த உரத்துல எந்த கெமிக்கல் கலப்படமும் இல்லை மேம். ஆனா…” 

“?”

“அவங்களே சுயமா தயாரிக்குற மேன்யூர்ல சில கெமிக்கல்ஸ் அதிகமா இருக்கு.” என்றதும் அறிக்கையை வாங்கிப் பார்த்தாள் அதிரா.

“ஃபைப்ரோனில், க்ளோபரிபோஸ் இது இரண்டும் கவர்மெண்ட் அப்ரூவ் பண்ண லிமிட்டைவிட அதிகமாவே அவங்க உரத்துல இருக்கு. இயற்கை விவசாயத்துல இதெல்லாம் யூஸ் பண்ணவே மாட்டாங்க. பட் இவங்க அதிகமா யூஸ் பண்றாங்க. ஃபைப்ரோனில் ஒன்பது செடிகளுக்கு தான் கொடுக்கணுமாம் ஆனா மான்சி இடத்துல பதினைஞ்சி விதமான செடிகளுக்கு கொடுக்கிறதா அங்க வேலை பாக்குற ஒருத்தவங்க சொன்னங்க.” என்று பரிதி விளக்கம் கொடுத்ததும் சட்டென எழுந்தவள்,

“இப்போ மான்சி ஃபார்மை யார் பாத்துக்குறா?”

“அவங்க அப்பா…”

“ஓ… அந்த மேனேஜரை புடிச்சி விசாரிக்கணும் பரிதி. இயற்கை முறைனு சொல்லி விளம்பரப்படுத்தி ஏமாத்து வேலை பாக்குறாங்க. க்விக்.” என்றவள் அப்போதே மேனேஜரை கஸ்டடியில் எடுத்துவிட்டாள்.

அவரோ தனக்கு எதுவும் தெரியாது என்று சாதிக்க, பரிதியை அவர்கள் பாணியில் விசாரிக்கும்படி சொல்லிவிட்டு அவள் அறைக்கு வந்துவிட்டாள். மேசையில் இருந்த கேலண்டர் அன்றைய தேதியை காண்பிக்க, நாளை அகிலன் தங்கையின் வளைகாப்பு என்று நினைவு வந்தது. ஊருக்கு சென்ற பின்னும் அலைபேசியில் அழைத்து அவளை வரச் சொல்லியிருந்தான். 

என்ன செய்வது என்று யோசனையில் இருந்தவள் வலக்கையை தூக்கிப் பார்த்தாள். கையின் செயல்திறன் குறைந்திருக்கிறது என்று யாரும் கண்டுகொள்ள முடியா வண்ணம் சற்று கையை உயர்த்த முடிந்தது, ஓரளவு பொருட்களை பிடிக்கவும் முடிந்தது. சமாளித்து விடலாம் என்று எண்ணியவள் மறுநாள் விடுப்பு சொல்லிவிட்டு திருச்சி செல்ல கார் ஏற்பாடு செய்துகொண்டாள்.

இரவு வீடு வந்து வள்ளியிடம் மறுநாள் மாலை வந்தால் போதும் என்றவள் மறுநாள் காலை உண்பதற்கு இரவே தயார் செய்து வைக்கும்படி சொல்லிவிட்டாள்.

பிரம்மா முகூர்த்த நேரத்தில் விழித்து குளித்தவள் கப்போர்டை திறந்து வைத்துக்கொண்டு என்ன உடுத்துவது என்று குழம்பிப் போய் நின்றாள். அவளிடம் இருப்பவை யாவும் சட்டை பேண்டுகளே. ஒன்றிரண்டு குர்தி, ஜீன்ஸ் இருந்தது. இதை எப்படி போட்டுட்டு போறது என்று முழித்தவளுக்கு சடுதியில் ஒரு தீபாவளிக்கு விஷு வாங்கிக்கொடுத்த சல்வார் நினைவு வர அதை தேடி எடுத்துப் போட்டுக்கொண்டாள்.

முகத்திற்கு அதிக ஒப்பனை செய்யாது ஈரப்பதத்தை சரிவிகிதமாக வைத்துக்கொள்ள உதவும் க்ரீமை தடவிக்கொண்டவள் சிறிய பொட்டு வைத்து முடியை வாரி ஒரு பக்கமாக போட்டுக்கொண்டாள். மனம் ஒப்பவில்லை. முடியை விரித்துவிட்டு செல்வதற்கு ஒருமாதிரியாக இருந்தாலும் அவளுக்கும் வேறு வழியும் இருக்கவில்லை. ஒரு கையை பின்னே கொண்டு செல்ல முடியவில்லை. ஓரளவு பிசிறு தெரியா வண்ணம் இடக்கையால் முடியை பின்னே சேர்த்து வைத்து க்ளிப் போட்டாள். சில முடிகள் க்ளிப்பில் அடங்காமல் தனித்து நின்றது. பெருமூச்சிழுத்து அதை காதுக்கு பின் ஒதுக்கியவள் ஒருவாறாக கிளம்பிச் செல்ல, கார் பயணம் முழுதும் ஒருவித மோனநிலையில் சென்றது. லேசாக படபடப்பது போல் மெல்லிய அதிர்வு ஆட்கொண்டது. 

திருச்சி நெருங்கியதும் எங்கு செல்ல வேண்டும் என்று டிரைவர் கேட்கவும்தான் நெற்றியில் அடித்துக்கொண்டவள் லேசாக முளைத்த கோபத்துடன் அகிலனுக்கு அழைத்தாள்.

வா வானு பிடிவாதமா கூப்பிட மட்டும் தெரியுது. ஆனா எங்கன்னு இடம் சொல்லத் தெரியல, அவனை கடிந்துக்கொண்டே அவன் அழைப்பை ஏற்க காத்திருந்தாள்.

அவள் பொறுமையை அதிகம் சோதிக்காது அழைப்பை ஏற்றான் அகிலன். இவள் எங்கு வர வேண்டும் என்று கேட்க, அவனது உல்லாச கூச்சல் இவளது செவி தீண்டி இதழ்களை நிறைத்தது.

“கத்தி முடிச்சிட்டேன்னா லொகேஷன் அனுப்பு. எனக்கு நிறைய வேலை இருக்கு.”

“ஓஹோ…” கேலியாய் உதட்டை வளைத்தவன் விலாசம் அனுப்பிவிட்டு வாயிலையே குத்தகை எடுத்து அமர்ந்துவிட்டான். விழாவுக்கு வருவோர் கூட உள்ளே நிற்காமல் ஏன் இங்கு நிற்கிறாய் என்று கேட்டுவிட்டார்கள். தெரிந்தவருக்காக காத்திருக்கிறேன் என்று பதில் சொல்லி சமாளித்தான். சிலருக்கு முறைப்பை பதிலாய் கொடுத்தான். 

அரைமணி நேரம் கழித்தே கார் வந்து நிற்க, வேகமாக எழுந்து சென்றான் அகிலன். சல்வார் துப்பட்டாவை சரிசெய்தபடி காரிலிருந்து இறங்கினாள் அதிரா.

முட்டி வரை இருந்த லேவெண்டர் நிற சல்வாரை வெள்ளி நிற ஜரிகை வேலைப்பாடுகள் எடுப்பாய் காண்பிக்க, மடிப்பு மடிப்பாக ப்ரில்ஸ் வைத்த பெரிய பெலஸோ பேண்டுக்கு ஏதுவாய் நெட் வகையிலான துப்பட்டா போட்டிருந்தாள். பார்க்கவே அத்தனை ரம்மியமாய் இருந்தது.

கழுத்தில் சிறிய சங்கிலியும் தளர்வாய் விட்டிருந்த சிகையையும் ரசித்த வண்ணம் அவளை நெருங்கியவன் தாராளமாக விரிந்த புன்னகையுடன், “ட்ரெஸ் நல்லாயிருக்கு.” 

“நல்லாயிருக்குல்ல… விஷு வாங்கிக்கொடுத்தான்.” என்று அவள் இயல்பாய் சொல்லி தன்னை ஒருமுறை குனிந்து பார்க்க, அகிலனின் முகம் ஊசிப்போன புஸ்வானமாகிவிட்டது.

அவன் அமைதியாகவும் அவள் நிமிர்ந்து பார்க்க, வேஷ்டி சட்டையில் நெற்றியில் திருநீறு இட்டு பார்க்க கொஞ்சம் கரவுசரவாக பவ்யமாய் தெரிந்தான். இதுகூட நல்லாயிருக்கே என்ற எண்ணத்துடன் அதிரா பார்வையை சுழலவிட்டாள். அதிகம் கூட்டமில்லாத சிறிய அம்மன் கோவில் அது. கார் கதவை சாற்றிவிட்டு ஹேண்ட்பேக்கை  மாட்டியவண்ணம் அதிரா முன்னே நடக்க, இவனும் ஆவலுடன் நடந்தான். 

கோவிலினுள் நுழைந்ததும் எங்கிருந்தோ வந்த சந்துரு பவ்யமாக வணக்கம் வைக்க, தலையசைத்தவள் முதலில் அம்மனை வழிபட, நண்பன் கையை கிள்ளினான் சந்துரு.

“இவங்களை கூப்பிட்டிருக்கேன்னு மூச்சுக்கூட விடல.”

“ஷ்… அதான் இப்போ தெரிஞ்சிடுச்சுல்ல.” என்ற அகிலன் நண்பனை அப்படியே விட்டுவிட்டு அதிராவுடன் நகர்ந்துவிட்டான்.

“சாப்டீங்களா?” 

“ம்ம்…”

சற்று தள்ளி வளையல் அடுக்கும் விழா ஆரவாரமின்றி அமைதியாய் சென்று கொண்டிருக்க, வேகமாய் முன்னே சென்ற அகிலன் அவன் அம்மாவிடம் ஏதோ சொல்லி அழைத்து வந்தான்.

வேக வேகமாக இவளை நோக்கி வந்த பார்வதி பணிவாய் வணக்கம் வைத்து மெலிதாய் சிரிக்க, அம்மா என்று அறிமுகப்படுத்தி வைத்தான். இவளும் தலையசைத்து புன்னகைக்க,

“இதோ வந்துடுறேன்.” என்று விரைந்து கூட்டத்தினுள் சென்றவர் திரும்ப வரும் போது கையில் ஒரு முழப்பூவுடன் வந்தார்.

அதிரா தயக்கத்துடன் பார்க்க, புரிந்து கொண்டவனாய், “நீயே வச்சிவிடுமா.” என்று அகிலன் அன்னையை உசுப்ப, அவனது உயரதிகாரி என்று அறிமுகப்படுத்தி இருந்ததால் தயங்கி நின்றார் பார்வதி.

அவரின் யோசனை தோய்ந்த முகத்தில், “சின்ன ஆக்சிடென்ட், கையை பின்னாடி கொண்டு போக முடியாது.” என்று அகிலன் சொல்ல, தானே முன்வந்து அவருக்கு ஏதுவாக திரும்பி நின்று தலையைக் காட்டினாள் அதிரா.

“அப்படியே முடியை தளர பின்னி விட்டுருமா.” என்ற அகிலனை பார்வதியும் அதிராவும் ஒன்றுபோல் அதிர்ந்து பார்க்க, “ஓகே தானே?” என்று அதிராவைத்தான் பார்த்தான் அகிலன்.

எல்லாமே புதிதாய் தெரிய ஏதோ வேறொரு மாய உலகத்தில் சஞ்சரிப்பது போன்று உணர்ந்த அதிரா சம்மதமாய் தலையசைக்க, அவர்களை சற்று தள்ளி ஒதுக்குபுறமாய் அழைத்துப் போய்விட்டான்.

பார்வதி கையாலேயே அவளின் முடியை கோதிவிட்டு இருபக்கமும் கொஞ்சமாய் முடியெடுத்து அவள் போட்டிருந்த க்ளிப்பை நடுவே போட்டுவிட்டு இடை வரை நீண்டிருந்த முடியை தளர பின்னிவிட்டார்.

“முடி நல்லா அடர்த்தியா இருக்கு.” என்ற பார்வதிக்கு சின்ன சிரிப்பை உதிர்த்தவள் இடக்கை கொண்டு தலை நிறைத்திருந்த பூவை தொட்டுப்பார்த்தாள்.

“இது முல்லையா மல்லியா ஆன்ட்டி?”

“மல்லிப்பூ மா. உங்களை வர சொல்லிட்டு இவன் எங்க போனான்…” கண்களாலேயே மகனைத் தேடியவர் அவனைக் காணாது அதிராவை தன்னுடன் அழைத்துச் சென்று அவள் அமர ஏதுவாய் நாற்காலியைத் தேட,

“நான் கீழ உக்காந்துக்குறேன். எனக்கு பிரச்சனை இல்லை.” என்ற அதிரா அப்படியே கூட்டத்தின் பின் சென்று அமர்ந்துகொண்டாள்.

“ஏன்மா இப்படி… நீங்க எந்திரிங்க. நான் சேர் எடுத்துட்டு வரேன்.” தவிப்பாய் அவளிடம் வந்தார் பார்வதி.

“பரவாயில்லை ஆன்ட்டி. நீங்க பங்ஷனை பாருங்க.” 

“நான் போய் என்ன பண்ண போறேன்மா. எல்லாம் என் ஒப்படியா பாத்துப்பாங்க. இதெல்லாம் சுமங்கலிங்க பண்ணா விஷேசம்.” என்று அவளுடனே அமர்ந்து கொண்டார்.

“என்ன இப்படி சொல்றீங்க? அது உங்க பொண்ணு. உங்களைவிட வேற யாரு அவங்களும் அவங்க குழந்தையும் நல்லாயிருக்கணும்னு நினைக்க முடியும். நீங்க முன்னாடி போங்க ஆன்ட்டி.”

“இதெல்லாம் முன்ன நின்னு செய்யலைனாலும் என் பசங்க நல்லாயிருக்கணும்னு தான் தினம் வேண்டிக்குறேன். ஒரு நல்லது நடந்துட்டு இருக்கும் போது என்னால யார் மனசுலையும் சலனம் வரவேண்டாம். நான் கடைசியா வளையல் போட்டு விடுவேன், மத்த சாங்கியம் எல்லாம் எங்க பங்காளிங்க, சம்மந்திங்க பாத்துப்பாங்க.” என்றவரின் கூற்றை ஏற்க முடியவில்லை என்றாலும் விழா நடக்கும் இடத்தில் தேவையின்றி பேச வேண்டாம் என்று அமைதியாக இருந்துகொண்டாள் அதிரா.

அரைமணி நேரம் சென்று வியர்க்க வியர்க்க ஒரு பையுடன் உள்ளே வந்தான் அகிலன். கூட்டத்தின் இறுதியில் இவர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்களை நெருங்கியவன் பையிலிருந்த பழச்சாறை எடுத்து அதிராவிடம் நீட்டினான்.

“இதுக்காக போனியா?” அதிர்வுடன் பார்த்தாள் அதிரா.

“இங்க டீ, காபி தான் சொல்லியிருக்கு. அதான் வாங்கிட்டு வந்தேன். ஜீனி போடாமத்தான் வாங்கியிருக்கேன். குடிங்க.” என்றவனை அவரது பெரியப்பா அழைக்க, அவன் செல்ல தயங்கி நின்றான்.

தனக்காக பார்க்கிறான் என்று புரிந்துகொண்டவள் கண்மூடி அவனை போகச்சொல்ல கையிலிருந்த பையை அவளிடமே கொடுத்துவிட்டு சென்றான். பையில் ஏதோ இருப்பது போன்று கனமாய் இருக்க, யோசனையுடன் அதை பிரித்துப்பார்த்தாள்.

அவள் உடுத்தியிருக்கும் உடை நிறத்தில் வளையல் செட் ஒன்று இருந்தது. என்ன முயன்றும் இதழ்களை இழுத்துப்பிடிக்க முடியவில்லை. சுகமான அந்த உணர்வில் முகம் பூரித்து மகிழ்ச்சியாய் இருந்தது. அந்த பூரிப்புடன் விழிகளை சுழலவிட இவளையே பார்த்தபடி யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான் அகிலன். பையைக் காண்பித்து முறைக்க முயன்று தோற்றுப்போனவள் முகத்தை திருப்பிக்கொண்டாள். அவளது இன்பமான அவஸ்தையை ரசித்தபடி எதிர் இருப்பவரிடம் பெயருக்கு பேசிக்கொண்டிருந்தான் அகிலன். 

இது அனைத்தையும் வேடிக்கை பார்த்திருந்த சந்துரு அதிர்ந்து தலையில் கைவைத்துவிட்டான். இவன்தான் இப்படின்னா அவங்களுமா என்ற அதிர்வு அவனிடம். 

பின்னே ஜூஸ் வாங்கும் போது உடனிருந்தவனுக்கு அகிலன் அவளுக்கு வளையல் வாங்கும் போதும் அதிர்ந்து, வசவி அவனுக்கு கிறுக்கு பிடித்துவிட்டது மேடமிடம் சமத்தையாக மொத்து வாங்கப் போகிறான் என்று எண்ணிக்கொண்டிருந்ததற்கு மாறாக அந்த பையை தன்னோடு இறுக்கி பிடித்தபடி அமர்ந்திருந்தாள் அதிரா. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!