Skip to content
Post Views: 7,988
நான்கு நாட்கள் ஆகிறது அவள் அந்த ரூமிலிருந்து வெளியே வந்து, உணவை மட்டும் அவனுடைய கட்டாயத்தில் வாங்கிக்கொள்கிறாள் மற்றபடி அமைதி மட்டுமே, அவளை மற்றவர்கள் யாரும் தொல்லை செய்யவுமில்லை கந்தசாமி மூலம் அணைத்து விவரங்களும் குடும்பத்திற்கு தெரியவந்தது நம்பவே முடியவில்லை யாராலும்.
Advertisement
இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனார்கள்.
Advertisement
Advertisement
Advertisement
“ இவ்ளோ பிரச்சனை இருக்குற பொண்ணை போய்க் கட்டிட்டு வந்திருக்கணுமா வேற பொண்ணா இல்ல இன்னும் என்னல்லாம் இருக்குனு யாருக்கு தெரியும்” என்ற கனகத்தை “ஏய் எழுந்திருச்சு வெளில போடி” என்றார் செந்தில்.
“என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு உனக்கு மட்டும் எப்படி இப்படிலாம் யோசனை போகுது” என்றவர் “வீட்டுக்குப் போ” என்று அவரை அனுப்பிவைத்துவிட்டார்.
“பிள்ளைக்கிட்ட யாரும் எதுவும் கேக்காதீங்க எல்லாத்தயும் சேனா பாத்துப்பான் இனிமே நாமதான் ஆறுதலா இருக்கணும்” என்றார் செந்தில்.
“பவுனு… அம்மா இல்லன்னு நினச்சு வளந்த பிள்ளை ஆனா இப்போ அம்மா உயிரோடு இருக்கு ஆனா நம்ம கூடத்தான் இருக்க பிடிக்கலைன்ற உண்மை தெரிஞ்சிருக்கு அதுலேயிருந்து வெளில வரது கொஞ்சம் கஷ்டம்தான் மருமகளா இல்லாம மகளா பாத்துக்கோ” என்றார் கந்தசாமி.
“ராசா இம்புட்டையும் மணசுல வெச்சுதான் இவ்ளோ அவசரமா கல்யாணத்தை நடத்தியிருக்கு மனசுக்குள்ள இதை வெச்சுகிட்டு எவ்ளோ மறுவி கிடத்திருக்கும் எப்படி அந்தப் பிள்ளைக்கிட்ட சொல்லன்னு, இது தெரியாம நான் வேற பிள்ளை மனசை கஷ்டப்படுத்திட்டேன்” என்று ஒருபக்கம் கோசலை கண்ணீர் சிந்தினார் யாருக்கு யார் ஆறுதல் சொல்ல.
உயிரை உருக்கியது அவனின் குட்டிமாவின் அழுகை முகம்மெல்லாம் சிவந்து விட்டது அவனுக்குக் கோபத்தையும் இயலாமையும் கட்டுப்படுத்தி, மெல்ல அவளை நெருங்கியவன் அவள் முகத்தை நிமிர்த்த “ஏன் எல்லாரும் என்னை இப்படி ஏமாத்தினாங்க தேவா” என்றாள் தேம்பிக்கொண்டே, அவன் அடித்ததில் ஒரு பக்க கன்னம் சிவந்து வீங்கியிருந்தது.
அவள் முகத்தைத் தன் வயிற்றில் அழுத்திக்கொண்டான் என்ன சொல்ல முடியும் போகட்டும் விடு என்று தட்டிவிட்டு செல்லமுடியுமா, அவள் அருகில் அமர்ந்தவன் கன்னத்தைத் தடவிக்கொடுத்து “சாரிடா” என்றான் உடைந்த குரலில் அதற்கும் அவளிடம் அமைதி மட்டுமே, அன்று முழுதும் அவன் மடியிலே தலை சாய்த்திருந்தாள் இரவில் அவன் அணைப்பில் கிடந்தாலும் உறங்கவில்லை அவனும் அவளைப் பார்த்தே விழித்துக்கிடந்தான்.
மறுநாள் சந்தியா வீட்டிற்க்கே வந்துவிட்டார் தூங்க மருந்து கொடுத்தார் “இப்படி சரியா வராது சேனா சீக்கிரம் இதிலேருந்து வெளில கொண்டுவாங்க” என்றார்.
“மயூ… எங்கேயாவது போலாமா கொஞ்ச நாள்” என்றவனை பார்த்தவள் “வேண்டாம்” என்றாள்.
“எனக்குப் பயமா இருக்குடி உன்னை இப்படி பாக்கமுடியல உன்னை இழந்துடுவேனோன்னு ரொம்ப பயமா இருக்கு, விட்டுட்டு போனவங்கள பத்தி கவலைப்பட்டு என்னை விட்டுட போறியா நான் வேண்டாமா உனக்கு” என்றவனை பாய்ந்து கட்டிக்கொண்டாள்.
“எனக்கு உன்னை விட்டா யார் இருக்க ஏன் இப்படி பேசுறீங்க” என்றவளை பார்த்தவன் “நீ இப்போ என்னடி பண்ணிட்டு இருக்க இதுவரைக்கும் எதுக்குமே பயந்ததில்ல ஆனா இப்போ தினம் தினம் பயம்காட்டுற, என் வாழ்க்கையே ஒண்ணுமில்லாம ஆயிடும் குட்டிமா நீ இல்லனா” என்றவனின் இதழோடு இதழ் பதித்தாள் மயூரி, என்னை விலகிச் செல்லாதே என்று அவளை இறுக்கிக்கொண்டான் தன்னுடன்.
இத்தனை நாட்களாக இருவரும் அனுபவித்த வேதனைகளை அந்த முத்தத்தில் கரைத்துக்கொண்டிருந்தனர் “சாரி… சரியாயிடுவேன் இனிமே இப்படிலாம் பேசக் கூடாது” என்றவள் அவனைக் கட்டிலில் தள்ளி அவன்மீது ஏறிப் படுத்துக்கொண்டாள் மேகமூட்டம் விலகியதை போல மனம் இருவருக்கும் கொஞ்சம் லேசானது.
கேட்ட எந்த விஷயத்தையும் நம்பவே முடியவில்லை தெய்வானையால் “எப்படிம்மா என்கூடவே தான இருந்தா எனக்குத் தெரியவே இல்லையே, அதும் அவர்கூட எப்படிம்மா!” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
“என்னமோ போ அப்படியே இருந்தாலும் இந்தக் குழந்தையை விட்டுட்டு போக எப்படிம்மா இவளுக்கு மனசு வந்துது, நம்ம சேனாகிட்ட வந்துட்டதால பரவாயில்ல கட்டிக்கிட்டவன் வேற எவனாவதா இருந்திருந்தா மிச்சமிருக்கிற வாழ்க்கையும் பாழா போயிருக்கும் என்னண்னு கேள்வி கேக்க ஆள் இல்லன்னு அந்தப் பிள்ளையை ஏதாவது பண்ணிட் டா கூடத் தெரியாது” என்று புலம்பினார்.
ஒருவாரத்திற்கு பிறகு அவளே அவனிடம் கேட்டுநின்றாள் “நான் மறுபடியும் வேலைக்கு போகட்டுமா” என்று.
“தாராளமா போ” என்றவனை தன்னை நோக்கி திரும்பியவள் “என் மேல கோபம் வரலையா” என்க.
“எதுக்கு கோபம் வரணும்” என்றான் அவள் விழிகளில் இதழ் பதித்து.
“கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் ஆயிடுச்சு”.
“ஆமா அதுக்கு…” என்றான் சிரிப்பை அடக்கி.
“நமக்கு இன்னும்… நமக்கு இன்னும்… பச் உங்களுக்கு தெரியும்” என்று சிணுங்கியவளை இன்னும் அருகில் இழுத்தவன் அவள் செவியில் “எனக்கு பஸ்ட் நைட் தான் வேணும்னு இல்ல பஸ்ட் பகல் கூட ஒகே” என்றவனை அப்படியே விழிவிரித்து பார்த்து நின்றாள் அவள்.
“ஒய்” என்றவன் “இன்னும் டைம் இருக்கு தேவையில்லாத குப்பை எல்லாம் தூக்கி போட்டுட்டு என்னோட மயூரியா மாறு நான் வெய்ட் பண்றேன், வா சர்ச்சுல விட்டுட்டு போறேன்” என்றான் அதன்படி அவனுடன் சென்று இறங்கிக்கொண்டாள்.
“மயூ வெளில சாப்பிடாத அப்பா சாப்பாடு கொண்டுவருவார்” என்று சொல்லிச்சென்றான், முன்பே அவளிடம் கூறிவிட்டார்கள் சாப்பாடு வீட்டிலிருந்து வந்துவிடும் என்று, உங்களுக்கு கஷ்டம் என்று அவர்களிடம் சொல்லிப்பார்த்துவிட்டாள் “ஒரு கஷ்டமும் இல்ல எப்படியும் சமைக்கத்தான் போறேன்” என்றார் பவுனு.
“நானாம்மா தூக்கிட்டு வரப்போறேன் வண்டியில தான வரேன்” என்றுவிட்டார் கந்தசாமி, அவளை பேசவே விடவில்லை யாரும்.
“என்னப்பா சொல்றீங்க ஏன் சொத்தை விக்க முடியாது நீங்க சம்பாரிச்சதுதானே அப்பறம் என்ன” என்றாள் மிராண்டா.
“மயூரி கேஸ் போட்டுருக்கா மிராண்டா, தாத்தா சொத்துல எனக்கு முழு உரிமை இருக்கு என்னோட அனுமதி இல்லாம சொத்துக்களை விக்கக்கூடாதுன்னு கேஸ் போட்டுருக்கா, வர லாபத்தை எடுத்துக்கலாம் ஆனா அவளுக்கு தெரியாம விக்கமுடியாது” என்றார் ஒஸ்கர்.
“இப்படி சொன்னா எப்படி? அதை நம்பித்தான் நாங்க இருக்கோம் இங்க பணம் செட்டில் பண்ணாம லண்டன் போகமுடியாதுப்பா” என்றாள், ஓஸ்கருக்கு தலையிடியாக இருந்தது, இங்கே மயூரி நேரே கோர்ட்டுக்கே சென்றுவிட்டாள் சொத்துக்களை விற்க ஸ்டே வாங்கிவிட்டாள், அங்கானால் பணம் வேண்டும் பணம் வேண்டும் என்று மகள் பிடுங்குகிறாள் என்ன செய்ய என்றே தெரியவில்லை.
மயூரிக்கு சொத்தின்மேல் நாட்டமில்லை சொத்தை விற்க ஸ்டே வாங்க வேண்டும் என்று சேனா வந்து சொல்லக் காரணம் கேட்க்காமல் அவன் கேட்ட இடங்களில் கையெழுத்து போட்டிருந்தாள்.
“பெருசா காதல் அன்பு அப்படிலாம் பேசின இப்போ என்ன சொத்துக்காகக் கேஸ் போட்டுருக்க” என்று சேனாவிடம் சண்டைக்கு நின்றார் ஒஸ்கர்.
“உங்க சொத்து யாருக்கு வேணும்” என்றவனை பார்த்தவர் “அப்பறம் எதுக்கு கேஸ் போட்டிருக்க” என்க.
“உங்களுக்கு இருந்தது ஒரே ஒரு பொண்ணு அவங்களும் உயிரோடு இல்ல அப்போ இந்தச் சொத்தெல்லாம் உங்க பேத்திக்குத்தானே அவளுக்குக் கூடத் தெரியாம எதுக்கு இதை விக்கப் பாக்குறீங்க” என்றான்.
“அவ என் பேத்தியே இல்ல நான் சொன்னதை கேக்காம எப்போ உன்னைக் கல்யாணம் செஞ்சிகிட்டாலோ அப்போவே உறவு முடிஞ்சிடுச்சு” என்றார் கோபமாக.
“அவரைப் பார்த்துச் சிரித்தவன் உறவா… அது எப்போ இருந்துச்சு உங்களுக்கு ஒரு பலி ஆடுதானே அவ” என்றவன்.
“இங்கபாருங்க மிஸ்டர் ஒஸ்கர் எங்களுக்குச் சொத்து வேண்டாம் ஆனா அத நீங்க விக்கக் கூடாது அதை வெச்சுத்தானே உங்க பொண்ணு கடனை அடைக்கத் திட்டம் போட்டுருக்கீங்க அது நடக்காது, மயூரி உங்க பேத்தின்னு நாங்க சொல்லியிருக்கோம் அவ உங்க பேத்தி இல்லனா அதை நிரூபிக்க வேண்டியது உங்க பிரச்சனை இல்ல என் பொண்ணுக்கு கடன் இருக்கு அதை அடைக்க இந்தச் சொத்து வேணும்னு நீங்கக் கோர்ட்ல சொன்னா நாங்க செத்து போன பொண்ணுக்கு எப்படி கடன் வந்துச்சுன்னு கேப்போம்” என்றான் தன் ஜீப்பில் ஏறி அமர்ந்துகொண்டு.
“எந்தப்பக்கம் போனாலும் அந்தப்பக்கம் நான் இருப்பேன்” என்று பாடிக்கொண்டே அவரைக் கடந்து சென்றான் ஜீப்பில்.
“அடியே கெரகம் பிடிச்சவளே என்னடி சொல்ற” என்று தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டார் கனகம்.
“இருக்குற ரெண்டாயே உன் புருஷனால பாத்துக்க முடியல, வருஷத்துக்கு ரெண்டு லக்ஷம் இப்போவே நாங்கதான் குடுத்துட்டு இருக்கோம் இதுல மூணாவதா… என்னடி இதெல்லாம்” என்றார்.
“நான் என்னமா பண்றது ரெண்டும் பொண்ணா போச்சு ஒரு பையன் வேணும்னு சொல்றார்” என்றாள் கார்த்திகா.
“இதுவும் பொண்ணா இருந்தா என்னடி பண்ணுவ” என்ற தாயை பார்த்தவள் “மா ஏன் அபசகுனமா பேசுற அப்படிலாம் ஒன்னும் நடக்காது இந்தத் தடவ பையன்தான்” என்றாள்.
முதல் இரண்டு பிரசவமே கார்த்திகாவின் புகுந்த வீட்டில் பார்க்கவில்லை இவர்களே பார்த்து அனுப்பினர் இப்பொழுது மூன்றாவது இதைமட்டும் பார்ப்பார்களா என்ன, இப்பொழுது இதை எப்படி கணவனிடம் சொல்வது, திருமணம் முடித்துச் சென்ற பெண்பிள்ளைகள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது பெற்றவர்களுக்குச் சந்தோஷம்தான் ஆனால் பிள்ளையைப் பெறுவது மட்டும் அவர்கள் மற்றது அனைத்தையும் பெண் வீட்டினர் செய்ய வேண்டும் என்றால் அவர்களும் என்னதான் செய்வார்கள்.
“கல்யாணம் முடிஞ்ச மறுநாள் அவ வாந்தி எடுப்பான்னு சொல்லிட்டு இருந்த இப்போ நீதான் வாந்தி எடுத்திருக்க, எத்தனை மாசம்” என்க.
“மூணு” என்றாள் கார்த்திகா.
“என்ன சொல்றாங்க உன் மாமியார்”.
“அவங்க என்ன சொல்ல ஊருக்குப் போய்ட்டாங்க பொண்ணு வீட்டுக்கு”.
“ஏன் இங்கேயிருந்து உனக்கு உதவி பண்ணலாம்ல ரெண்டு பிள்ளைங்களை ஸ்கூலுக்கு விட்டுப் புருஷனையும் வேலைக்கு அனுப்பி எப்படிடி சம்மாளிப்ப” என்றார் கனகம்.
அவள் எழவே முடியாமல் சோர்ந்து சோர்ந்து படுத்துக்கொண்டாள் மசக்கை படுத்தியது “ஹ்ம்ம் அவங்க மகளுக்குப் பிரசவம் பாக்க போயிருக்காங்க” என்க.
“இதென்னடி அதிசமயா இருக்கு மொத பிரசவம் தாய் வீட்டிலதான”.
“ஆமா ஆனா அவ வீட்டுக்காரர் அங்கேயே பாக்கணும் சொல்றார் அவருக்கு அம்மா இல்லல அதனால நீங்களே வந்து நின்னு பாருங்கன்னு சொல்லிட்டாரு, மாப்பிளை சொன்னா மீற முடியுமா என் மாமியார் பொட்டிய கட்டிட்டாங்க, அவங்க இருந்தாலும் எனக்குப் பெருசா ஒன்னும் செய்யப்போறதில்லை பிள்ளைங்க அங்கயிருந்துதான் பள்ளிக்கூடம் போகணும் நீ வந்துதான் ஆகனும்மா வேற வழியில்லை” என்றாள் அவள்.
“ஏதாவது யோசிச்சுதான் பேசுறியா உன் தங்கச்சி காலேஜ் போறா அப்பாவுக்குச் சாப்பாட்டுக்கு என்ன பண்றது, இப்போதான் வாடகைக்கு தனியா வந்தேன் அது பொறுக்கலயா உனக்கு” என்று அவளைக் கரித்துக்கொட்ட.
“உனக்கு என்னைவிட இப்போ தனிக்குடித்தனம் தான் முக்கியமா, அப்பாவும் விழியும் அங்க பெரியப்பா வீட்டில நின்னுக்கட்டும் முன்னாடி அப்படித்தானே இருந்தோம் அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க” என்றவளை பார்த்தவர் “என்னடி எல்லாத்தயும் நீயே முடிவு பண்ணிட்டு வந்துட்ட போல இப்படி செய் அப்படி செய்ன்னு எனக்கு ஆர்டர் போடுற” என்றவர் கணவனின் வண்டி சத்தம் கேட்டதும் அமைதியானார்.
கார்த்திகாவை பார்த்த செந்தில் மனைவியையும் ஒருமுறை பார்த்துக்கொண்டே “வாமா என்ன இந்த நேரம் வந்திருக்க” என்க.
எப்படி சொல்ல என்ன சொல்ல என்று தடுமாறிய கனகம் மெதுவாக அவரிடம் விஷயத்தைக் கூறினார், செந்தில் ஒன்றும் பேசவில்லை இதில் அவர் சொல்ல என்ன இருக்கிறது தாயை போலத் தந்தையால் சில விஷயங்களைப் பேச முடிவதில்லை.
“சந்தோசம் உடம்பை பாத்துக்கோ” என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டிருக்க வந்துவிட்டான் அவரின் அருமை மருமகன்.
“அப்புறம் மாமா மறுபடியும் தாத்தா ஆகப்போறீங்க” என்றான் ஏதோ சாதித்தவனை போல “அத்தையை நாங்க கூட்டிட்டு போறோம் பிள்ளை பிறக்கிற வரைக்கும் பாக்கணும் அப்புறம் பிள்ளை பிறந்தும் பார்க்கணும் ஆள் இல்லாம கஷ்டம், இங்கன்னா நீங்கப் பெரிய மாமா வீட்டில தங்கிக்கலாமே” என்றவன்.
“அத்தை நாளைக்கு கிளம்பனும் எல்லாத்தயும் எடுத்துவெச்சுக்கோங்க” என்றுவேறு கூற செந்தில் அமைதியாகக் கனகத்தை பார்த்தார் வினை விதைத்தவள் நீதானே அறுவடை செய்துகொள் என்று.
சாயந்திரம் காலேஜ் முடிந்து வீட்டிற்கு வந்த வேல்விழி “அம்மா நான் காலேஜ் ஹாஸ்டல்ல தங்கிக்குறேன்” என்றாள்.
“எதுக்கு விழி அதெல்லாம் வேணாம் பெரியப்பா வீட்ல இருந்துக்கலாம்” என்றார் செந்தில்.
அம்மாவிடம் சென்றவள் “மா இப்போ அண்ணியும் வந்துட்டாங்க அவங்களுக்கு எந்த வேலையும் தெரியாது நான் இவ்ளோ தூரம் பஸ்ல போயிட்டு வந்துட்டு வீட்ல அவங்கள மாதிரிக் கால் ஆட்டிட்டு ஒக்கார முடியுமா வேலை செய்யணும், அதோட எனக்குப் படிக்கவும் இருக்கும்”.
“அதுவும் இல்லாம பெரியம்மா எனக்காகக் காலைல எழுந்து சாப்பாடு எல்லாம் கட்டணும் அவங்களுக்கு தொல்லைதானே அது அப்புறம் அண்ணனுக்கும் பிடிக்காம போகும் இதுனா எந்தப் பிரச்சனையும் இல்ல லீவுக்கு நான் வீட்டுக்கு வரேன்” என்க அவள் கூறிய அனைத்தும் கனகத்திற்கு சரியாகத் தோன்றியது.
“ஆமா நீங்க உங்க அண்ணன் வீட்ல தங்கிக்கோங்க அவ ஹாஸ்டல்ல நிக்கட்டும் அதுதான் சரி, நம்மால ஏன் மத்தவங்க கஷ்டப்பட்டாங்கன்னு பேச்சு வரணும்” என்றார் கனகம்.
விஷயம் அறிந்ததும் சேனா மறுத்தான் “அதுக்கு அவசியமில்லை சித்தப்பா இங்க யாருக்கும் கஷ்டமில்லை வீட்டு வேலைக்கு ஆள் வெச்சுட்டேன் சமையல் மட்டும்தான், மயூக்கு சமைக்க தெரியாதுதான் ஆனா சும்மா வேடிக்கை பாத்துட்டு நிக்கமாட்டா அம்மாக்கு அவதான் ஹெல்ப் பண்றா” என்றவன்.
“உன்னால முடிஞ்சா செய் இல்லையா படிக்குறதை மட்டும் பாரு நாங்க பாத்துக்குறோம், ஆனா ஹாஸ்டெல் வேண்டாம் இப்போ அதுக்கு அவசியம் இல்ல” என்றான் கண்டனமாக.
“இப்போ ஹாஸ்டல் போனா நான் என்ன கெட்டு போய்டுவேனா என்னமோ தப்பு செய்றமாதிரி பேசுறாரு” என்று கண்ணைக் கசக்கினாள் வேல்விழி.
“இங்கபாரு சேனா உன் பொண்டாட்டி மாதிரி படிக்குற வயசுலயே காதல்னு நிக்குல என் பொண்ணுங்க கல்யாணத்தை கூட வீட்டில யாருக்கும் தெரியாம பண்ணிக்கிட்டா அவளை மாதிரி நினச்சு என் பொண்ணுங்களை பேசாத” என்றதும் “நிறுத்துங்க” என்றான் கர்ஜனையாக.
“அவளைப் பத்தி இன்னும் ஒரு வார்த்தை நீங்கப் பேசுனீங்க” என்றவன் அவதாரத்தில் மொத்தமாக ஆடிப்போய்விட்டார் கனகம்.
“இந்தாடி உன் பொண்ணுங்களை நீயே பாத்துக்கோ நாங்க யாரும் எந்தக் கேள்வியும் கேக்குல, நீ ஹாஸ்டல்ல விடு இல்ல உன்கூடவே கூட்டிட்டு போ உன் இஷடம் ஆனா இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணை பேச உனக்கு அருகதையில்லை” என்ற கோசலை.
“சின்னவனே உன் பொண்டாட்டியை வீட்டுக்குப் போகச்சொல்லு” என்றார் ஆத்திரத்தோடு, பவுனுக்கு மனதே விட்டுபோனது என்ன வார்த்தைகள் இது அந்தப் பெண் என்ன கெடுதல் செய்துவிட்டாள் இவளுக்கு ச்சீ என்றானது அவருக்கு.
“சித்தப்பா நீங்க இங்கேயே தங்கிடுங்க மத்தவங்க விஷயத்தை அவங்களே பாத்துக்கட்டும்” என்றவன் வேல்விழியை அழுத்தமாகப் பார்த்தான்.
“இந்த வயசுல நாம செய்ற எல்லாமே சரின்னு தோணும் மத்த எல்லாரும் முட்டாள் தனமா பேசுறதா ஒரு நினைப்பிருக்கும் நம்மகிட்ட பழகுறவங்களோட உண்மையான குணத்தை தெரிஞ்சிக்க ஒரு பக்குவம் வரணும், அது வரவரைக்கும் நம்ம வாழ்க்கைல எந்த முக்கியமான முடிவையும் எடுக்காம இருக்கறது நல்லது, இதுக்குமேல உன் இஷ்டம்” என்றவன் அவனுடைய அறைக்குச் சென்றுவிட்டான்.
உள்ளே நுழைந்தவனின் மீது பூக்குவியலாக வந்து விழுந்தாள் மயூரி “எதுக்கு இவ்ளோ கோவம்” என்று அவன் மீசையை பிடித்து இழுக்க அவள் இழுப்புக்கு நின்றுகொடுத்தான், அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள் “என்னைப் பாருங்க” என்றவள்.
“அவங்க என்ன தப்பா சொல்லிட்டாங்க எல்லாமே உண்மைதானே பெரியப்பொண்ணா ஆகுறதுக்கு முன்னாடில இருந்தே இந்தப் போலீஸ் மேல எனக்குக் காதல் தானே” என்க.
“மயூ” என்றான் கோபமாக.
“இல்லையா” என்றாள் தலை சாய்த்து பார்த்து.
“அப்படிப்பாத்தா எனக்கு எட்டு வயசுல இருந்து உன்மேல காதல்டி” என்றவன் “காதல் தப்பில்ல அதை அவங்க சொன்னவிதம்தான் தப்பு, என் முன்னாடியே உன்னை அப்படி பேசுறாங்க எப்படி வந்துச்சு இந்தத் தைரியம்” என்றவனுக்கு மீண்டும் கோபத்தில் முகம் சிவக்க.
“சரி… சரி… போட்டும் கூல் பண்ணவா” என்க.
“வேண்டாம் போடி” என்றான் அவளைத் தன் அணைப்பிலிருந்து மாற்றாமல்.
“என் புருஷன் நான் கூல் பண்ணுவேன் நீங்க என்ன வேண்டாம் சொல்றது” என்றவள் “ஒன்னு ரெண்டு” என்று அவன் நெஞ்சில், மீசை நுனியில் கன்னத்தில் நெற்றியில் என்று முத்தம் வைக்க அவள் முகத்தைக் கைகளில் தாங்கியவன் எப்பொழுதும் போல அவள் விழிகளில் இதழ் பதித்து பின் இதழைச் சிறைசெய்தான்.
வேல்விழி ஹாஸ்டலில் சேர்ந்துகொண்டாள் கனகம் கார்த்திகாவின் வீட்டிற்கும் சென்றுவிட செந்தில் இங்கேயே தாங்கிக்கொண்டார், சேனாவிடம் மன்னிப்பை வேண்டி அவர் நிற்க “ஏன் சித்தப்பா இப்படி பண்றீங்க அவங்க பேசினதை விட நீங்க இப்படி என் முன்னாடி நிக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு இனிமே இப்படி செய்யாதீங்க சித்தப்பா” என்றான் வருத்தத்தோடு.
வீட்டில் ஒருத்தியாகத் தன்னை பொருத்திக்கொண்டாள் மயூரி அந்த வீட்டில் மெல்ல மெல்ல சந்தோசம் மீண்டுகொண்டிருந்தது, செந்திலுக்கும் அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வாள் அவளைப் பார்க்கும்போதெல்லாம் மனைவி பேசியதை எண்ணி வருந்துவார் அவர்.
திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் கடந்திருந்தது மெல்ல மெல்ல அவளை மாற்றிக் கொண்டுவந்திருந்தான் ஒஸ்கர் அவளை நெருங்காமல் பார்த்துக்கொண்டான், கிரைம் பிரெஞ்சிலிருந்து போலீஸ் சர்வீஸுக்கு மாற்றல் தர ஒத்துக்கொண்டார் சிவசங்கர்.
“சேனா எனக்கு உன்னை அனுப்ப கொஞ்சம் கூட விருப்பமில்லை பட் இது உன்னோட கனவு அதனால மட்டும்தான் இப்போ ஐ.ஜி கிட்ட பேசியிருக்கேன் ஒன் வீக்ல ஆர்டர் வந்துடும்” என்றார் அதுவே அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி, அந்தச் சந்தோஷத்தோடு வீட்டிற்கு வந்தவன் அப்படியே அவளை வாரிச் சுருட்டிக்கொண்டான்.
“என்னாச்சு!” என்றாள் அவனின் வேகத்தில், அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் சில நொடிகள் அபப்டியே நின்றான் “தேவா” என்றவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தவன் “கனவு நிஜமாகப்போவுது சீக்கிரம் ஆர்டர் வந்திடும்” என்க.
அவனை அனைத்துக்கொண்டவளுக்கு வார்த்தைகளே வரவில்லை “கங்கிராட்ஸ்” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்து “ஹாப்பி…” என்க.
“சோ ஹாப்பி” என்றான்.
“வீட்ல சொல்ல வேண்டாமா” என்றாள்.
“சொல்லணும்… இப்போயில்ல யூனிபார்ம் போட்டுட்டு அவங்க முன்னாடி வந்து நிக்கணும்” என்றான் அத்தனை சந்தோஷத்தோடு.
“நான் ஒன்னு கேக்கவா” என்றவளை பார்த்தவன் “கேளுடா” என்க.
“எனக்கு ஹனிமூன் போகணும்” என்றாள்.
இப்பொழுது விழிகளை விரிப்பது அவன் முறையானது “எங்கபோகலாம்” என்றான் அவளை மடியில் அமர்த்திக்கொண்டு.
“ஓசூர்” என்றவளை பார்த்தவன் “அங்கேயே… கோவா சிம்லா அப்படி சொல்லாம ஓசூர் சொல்ற” என்றான் புரியாமல்.
“கோவா சிம்லா போனா எல்லா இடத்தையும் சுத்தி பாத்துட்டே இருப்பீங்க ஓசூர் நீங்க அடிக்கடி போன இடம் சுத்தி பாக்க ஒண்ணுமில்ல அதனால இந்தத் தேவசேனாபதி மயூரியை மட்டுமே பார்ப்பார்” என்றவளிடம் அவனுக்கான ஏக்கம் தளும்பி நின்றது.
பயணம் செய்த அலுப்பு தீரக் குளித்து வந்து பால்கனியில் நின்றிருந்தாள் மயூரி முடியில் நீர் முத்துக்கள் ஒழுகிக்கொண்டிருக்க பின்னிலிருந்து அவள் இடையோடு கைசேர்த்து அனைத்தவன் கழுத்து வளைவில் முத்தம்பதிக்க விழிகளை மூடி நின்றாள், அவள் முகத்தி திருப்பித் தன்னை பார்க்க வைத்தவன் “மயூ…” என்க.
அந்த அழைப்பில் உடல் சிலிர்த்து சிவக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள், அந்த விழிகளைப் பார்த்து நின்றவன் “மெஸ்மரைஸிங்” என்றான் கிறக்கமாக.
“என் கண்ணு மட்டும்தான் பிடிக்குமா” என்றவளை இடையோடு சேர்த்து தூக்கியவன் “இந்தச் சேனாபதி முதல் முதலா தடுமாறி விழுந்த இடம் எப்போவும் ஸ்பெஷல் தான், அதோட இனிமேதான சொல்லப்போறேன் என்ன என்ன பிடிக்கும்னு” என்றவன் அந்தக் கண்ணாடி கதவை அடைத்துத் திரைசீலையிட்டு மூடி அதே வேகத்தில் அவளை அள்ளிக்கொண்டு கட்டிலில் விழுந்தான்.
“தேவா… கூசுது… அச்சோ…” என்ற கொஞ்சல்கள் அடங்கிச் சிணுங்கல்களாக மாறிக்கொண்டிருந்தது, குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஓசூரின் காலநிலைக்கு மாறாக அவர்கள் தகித்துக்கொண்டிருந்தார்கள்.
கை கோர்க்கும்
போதெல்லாம் கை ரேகை
தேயட்டும் முத்தத்தின்
எண்ணிக்கை முடிவின்றி
போகட்டும்
பகலெல்லாம்
இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல்
நீண்டாலென்ன
நம் உயிர்
ரெண்டும் உடல்
ஒன்றில் வாழ்ந்தால்
என்ன
error: Content is protected !!