Skip to content
Post Views: 10,224
கள்ளி காட்டு காதலியே!
அத்தியாயம் 17
ரேவதி வார்த்தைகள் தமிழ் செல்வத்திற்கு ஒரு மாதிரி தாக்கத்தை கொடுத்தது. அவள் சொன்ன பாணியில் யோசிக்க வில்லை. அவரை பொறுத்த வரை, மகள் சரிவராத இடத்தில் மனதை செலுத்தி விட்டாள். சொந்தத்தில் பேசி முடித்தால், நாளை ஒரு பிரச்சனை என்றாலும் இழுத்து செல்வார்கள் அல்லவா… இதை தான் அவர் நினைத்தது. ரேவதி வார்த்தைகள் முற்றிலும் நிதர்சனமாக இருந்தது.
“எங்க அக்காகாரி பேச்சை கேட்காத மாமா. அவ ஊரு முன்னாடி கௌரவமா வாழணும்ன்னு நெனைக்கிறா. பெத்த பிள்ளை சந்தோசத்தை விட, வேற என்ன கௌரவம் வேண்டி கிடக்கு… அந்த பையனுக்கு என்ன குறைச்சல். அவன் நீதிபதி மகனா பார்க்காத. உங்க மகளுக்கு புருசனாகுற தகுதி இருக்கான்னு மட்டும் பாரு மாமா. காசு, பணத்தையும் தாண்டி நல்ல குணம் இருக்கணும். நிச்சயம் அந்த தம்பி நல்ல பையன் தான்…”
Advertisement
“ஆனாலும் எனக்கு மனசு ஒப்பல ரேவதி. எப்படி ஒத்துக்க முடியும். பழக்க வழக்கம் வேற சம்மந்தம் பண்றது வேற ரேவதி. நிச்சயம் ஒத்து வராது. அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் புடிச்சா போதுமா…” என்று தமிழ் செல்வம் கேள்வி கேட்க.
“வேற யாருக்கு பிடிக்கணும் மாமா. வாழ போறது அவங்க ரெண்டு பேர் தான். கல்யாணம் பண்றதுக்கு சொந்தம் வேணும் சரி தான். ஆனா, சேர்ந்து வாழ… வாழ போற ரெண்டு பேர் சம்மதம் வேணும். நான் யார் மாமா உங்களுக்கு?… பொண்டாட்டியோட ஒன்னு விட்ட தங்கச்சி…”
“உம் பொண்டாட்டி சித்திரைன்னு கூட சிரிச்சு என்கிட்ட பேச மாட்டா. நீங்க எம் மேலயும், எம் மக மேலயும் காட்டுற அக்கறை கூட அவளுக்கு வராது. ஆனா என்ன வீடு தேடி ஆக்கான்னு வந்தா ஒதுக்க மாட்டா… எம் பிள்ளைக்கு சாப்பாடு போட கணக்கு பார்க்க மாட்டா. ஒரு பொங்கல், கோவில், விசேஷம்ன்னா எம் பிள்ளைக்கு புது துணி எடுத்து கொடுப்பா… பிரபா போட்டு இருக்குற பழைய துணிய கூட நான் வாங்கி போயிருக்கேன்…” சாதாரணமாக சொன்னாலும், கண்ணில் நீர் நிறைந்தது.
Advertisement
“ ரேவதி, ஏத்தா என்ன இது…” மறுகலாக செல்வம் சொல்ல,
Advertisement
“இல்லை மாமா. இந்த செல்வி எப்ப பாரு வெடுக்குன்னு பேசுற. அவ வீட்டுக்கு போகாட்டி என்னன்னு ரோசத்தோட என்னால ஒதுங்கி போக முடிஞ்சுசா… ஏன் போகல, எனக்கு வேற நாதி இல்லை. சொந்தம்ன்னு இவ ஒருத்தி தான் ஆதரிக்கிறா… சொந்த அண்ணன், என் கௌரவம் போச்சு, மானம் போச்சுன்னு அன்னைக்கு என் காலவே முடக்கி போட்டான். நாங்க பாக்குறவன தான் கட்டணும்ன்னு நிலையா நின்னு அந்தாளுக்கு கட்டி வச்சான்…”
“அன்னைக்கு டவுன்ல அரிசி மூட்டையை தூக்க முடியாம, நம்ம அண்ணன் போகுதேன்னு அண்ணன்னு சத்தம் போடுறேன் காது கேட்காத மாதிரி பக்கத்து சந்துல நுழைஞ்சு போயிட்டான். ஏன்?… கூட பிறந்தாலும் எம் பொழப்பு என்னவோ அது தான் என் மரியாதை. தங்கச்சின்னு கிட்ட வந்தா, கூடவே ஒட்டிபேன்னு பயம் அவனுக்கு… எம் மனசு துடிச்சு போச்சு. ஒன்னா பொறந்து, ஒரு வீட்டுல வளர்ந்த, ஒத்த தாய் மக்க நாங்க… காலம் எப்படி வேணாலும் மாறி போகும் மாமா. எதுவும் நம்ம கைல நிக்காது…” என்றவள், தன் சேலை முந்தியை கொண்டு கண்ணை துடைத்தவள்,
“சீ போ நாயே, நீயா வந்தா வா, இல்லையா போன்னு என்னால ரோசபட்டு தள்ளி நிற்க முடியல. ஐயோ! நமக்கு நாதி இல்லை. ஒத்த பிள்ளைக்கு சொந்தமில்லை. நாளைக்கு நமக்கு நாலு பேரு வேணும். எம் மக ஒத்தையில நின்னு போக கூடாதுன்னு குத்தல் பேச்சு எல்லாத்தையும் இந்த காதுல வாங்கி, அந்த பக்கம் விட்டு, சொந்தம்ன்னு இழுத்துக்கு போறேன் ஏன்?… மலை மாதிரி எம் புருசன் என் பக்கம் நின்னு இருந்தா, யார் ஆதரவையும் தேடி நான் ஏன் போக போறேன். எம் புருசன் ஆதரவு எனக்கு இருந்திருந்தா நான் ஏன் நதியத்து போக போறேன். செத்த மனுசன் நம்ம பொண்டாட்டி, நம்ம பிள்ளைன்னு எங்களுக்கு ஏதாவது சேர்த்து வச்சு இருந்தா, கால் வயித்து கஞ்சிக்கு நாயா நான் ஏன் ஓடுறேன். கொண்டவன் துணை நின்னா யாரையும் வந்து பாருன்னு நிக்கலாம். சரியில்லாத ஆளுக்கு கட்டி கொடுத்து காலத்துக்கும் நீங்க தாங்க முடியாது…”
Advertisement
“எங்க அக்கா சொன்ன மாதிரி தான். ஒரு பொண்ணுக்கு புருசன் தான் கடைசி வரைக்கும். சொந்தமெல்லாம் அப்புறம் தான். எனக்கு புருசன் சரியா அமஞ்சு இருந்தா என் வாழ்க்கையும் செல்விய மாதிரி பெருமையா தான் இருந்திருக்கும். அன்னைக்கு ஆட்டமா ஆடுச்சு எங்க அம்மை, இன்னைக்கு தொண்டை குழி நெருக்கி பிடிக்கக் நேரம் வராம கிடக்கு. ஒத்த பொம்பளை பிள்ளையும் ஆதரவு இல்லாம நிக்குதேன்னு உசுரு துடிச்சு கிடக்கு. பொம்பளை பிள்ளை வாழ்க்கை நம்ம மானதுக்கும், கௌரவத்துக்கும் இல்லை மாமா. மனுச ஜென்மம் எல்லாரும் பொறந்த பொறப்புக்கான பாட்டை அனுபவிக்க தான். அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சு கொடுங்க, சந்தோஷத்தோடு பாட்டை பார்க்கட்டும். கடைசியா ஒன்னு சொல்றேன் மாமா. பெத்தவங்க நாம பிள்ளைக பாவத்துல விழுக கூடாது…” சொல்லி விட்டு சென்ற ரேவதியின் வார்த்தை செல்வத்தின் நெஞ்சிலே நிற்க,
அருகில் வந்த செல்வி, “விட்டு தள்ளுங்க, அவ கிடக்கா ராசிகெட்ட சிரிக்கி. அவளுக்கு விதி விட்டா எம் பிள்ளைக்குமா அப்படி அமையும். போடுற பாரு வாயில பொச கெட்டவ…” என்று பேசி கொண்டே வந்தவர் கணவன் பார்த்த பார்வையில் கப்சிப் என்று வாயை மூடி கொண்டார்.
தமிழ் செல்வத்திற்க்கும் ரேவதி சொல்வது நியாயமாக பட்டது. எத்தனை சொந்தங்கள் தாங்கி பிடித்தாலும், சரியான கணவன் அமையாவிட்டால் ஒரு பெண் நிம்மதியான வாழ்க்கை எப்படி வாழ முடியும். ரேவதி வாழ்க்கையே சாட்சி. முப்பத்தி ஐந்து வயது பெண். இனி அவள் காலம் என்று முடியும். அதுவரை அவள் பட போகும் பாடு…
தனி ஒருவனாக விக்ரம் நல்ல மனிதன் என்று தான் தோன்றியது. வேற சமூகம் என்பதை தவிர எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பையன். ஆனால், நீதி்பதி. அவரை நினைக்கையில் மனம் ஒரு நிலையில் இல்லை. பெருத்த யோசனை தான்.
விக்ரம் அன்று இரவும் செல்வம் வீடு வந்தான். ஒருமுறை பேசி விட்டு ஒதுங்கி போக முடியாது. நிலைமையும் தீவிரமாக உள்ளது.
“ சார்…” என்று அழைக்க, அவனை பார்த்தவருக்கு ஒரு பெரு மூச்சு வந்தது.
முன்பிருந்த கோபம் இல்லையென்று கண்டவன்,
“எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க சார். நிச்சயம் பிரபா இல்லாம எனக்கு வாழ்க்கை இல்லை. நான் இல்லாம அவளும் நிம்மதியா இருக்க மாட்டா… உங்க கைல நின்ன பொண்ணு, உங்க பேச்சை என்னிக்காவது மீறி இருக்காளா… அதையும் தாண்டி என் மேல விருப்பம் வந்ததுன்னா, உங்க பொண்ணு மனசை புரிஞ்சுக்கோங்க சார்…”
“இது சரிப்படும்ன்னு எனக்கு தோணலை தம்பி…”
“நீங்களும் சாதி பாக்குறீங்களா சார். படிச்சவங்க தான சார் நீங்க, நாட்டுக்காக பிரமாணம் எடுக்கும் போது எல்லா உயிரும் சமம், தாய் நாட்டுக்காக காவல் காப்பேன்னு தான சத்தியம் செய்வீங்க. அங்கேயும் உங்க ஆளுகன்னு தனியா ஏதாவது இருக்கா?…”
“என்ன தம்பி. சரி விடுங்க, சாதி என்ன சாதி. மனுச இனத்தில் ஏற்ற தாழ்வு எதுவுமில்லை, எனக்கு தெரியும். நானும் அப்படி பட்ட ஆள் இல்லை. நான் என்னை சார்த்தவங்களோடு நிக்குறத பாதுகாப்பா நினைக்கிறேன். எது ஒன்னுன்னாலும் அவங்க எனக்கு கூட நிப்பாங்க. நாளைக்கு என் பொண்ணை கட்டி கொடுத்தாலும், எங்க வட்டம் தெரியும், நடைமுறை தெரியும், பழக்க வழக்கம் தெரியும். தயக்கமில்லை, நல்லது, கெட்டது , செய்முறை, கல்யாணம், காதுகுத்து, சடங்கு எல்லாம் ஒரு பாதுகாப்புல, வரைமுறைகுள்ள நிக்கும். நான் பொண்ணை பெத்தவன், என் மகளுக்கு நல்ல இடம், பாதுகாப்புன்னு நினைக்கிறேன். அதுல என்ன தப்பு…” என்று தீர்க்கமாக செல்வம் கேட்க.
“தப்பில்லை சார். நான் சொல்றது மனுசங்களை நம்புங்க சார். எல்லா விதமான சமூகத்திற்குள்ளும் நல்லவன், கெட்டவன் ரெண்டும் கலந்து தான் நிற்பான். உங்க சொந்ததுல கல்யாணம் பண்ண ஒரு பிரச்சனைன்னா ஆள் வருவாங்க, ஆதரவு தருவாங்கன்னு சொல்றீங்க…”
“ஆமா, நாங்க பார்த்து வச்ச கல்யாணமா இருந்தா, நாளைக்கு ஒரு பிரச்சனை வரும் போது நாங்க முன்ன நிப்போம். பெரியவங்க கூட வருவாங்க தம்பி…”
“அப்படி எவ்வளவு பிரச்சனைக்கு சார் சொந்த பந்தம் போய் நிக்க முடியும். ஒரு கட்டத்துல புருசன், பொண்டாட்டி மட்டும் தான்னு ஆகிரும். அப்ப தேவை, நல்ல வாழ்க்கை துணை தான் சார். நான் நிச்சயம் உங்க பொண்ணுக்கு நல்ல துணையா இருப்பேன் சார்…” என்றவன்,
“எங்களுக்குள்ள அப்படி என்ன பெருசா சண்டை வர போகுது. அவ தான் வேணும்ன்னு நான் நிக்கிறேன். அவளுக்காக தான் எல்லாரையும் எதிர்த்தும் நிக்கிறேன். நான் தான் வேணும்ன்னு அவ உறுதியா இருக்கா… அப்படியே எங்களுக்குள்ள சண்டை வந்தா தான் என்னவாம்?… எந்த புருசன், பொண்டாட்டி தான் சண்டை போட்டுகாம இருக்காங்க. எல்லா குடும்பத்திலும் சண்டை வரும், சமாதானமும் வரும் சார்…” என்று எண்ண சொன்னாலும் பதில் வைத்திருந்தான் விக்ரமன்.
தமிழ் செல்வம் முகம் யோசனையானது. விக்ரம் நல்லவன் என்றும் புரிந்தது. ஆனாலும் அவன் குடும்பம் என்ற ஒன்றில் இருந்து அவரால் வெளி வர முடியவில்லை.
“சார், பெண்களுக்கான சுதந்திரம்ன்னா என்ன சார்?… நீங்க தான் பிரபாவ படிக்க வச்சீங்க, அவளுக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ண, சாப்பிட, சிந்திக்க, கருத்து சொல்ல, பேச, நடக்க எல்லாம் நீங்க தான் உங்க பொண்ணுக்கு சுதந்திரம் கொடுத்தீங்க. படிச்சு இருக்கா, எல்லாத்தையும் புரிஞ்சு சிந்திக்கிறா, சரியாகவும் யோசிக்கிறா… அவளோட வாழ்க்கையில எல்லா முடிவுகளையும் சுதந்திரமா எடுக்க வச்சு, ஒரு வழிகாட்டியா நின்னிங்க… இப்போ மட்டும் ஏன் சார்?… “
“என்னை கேட்டா அது அவங்களோட உரிமைன்னு சொல்லுவேன். ஒரு பொண்ணு வாழ்றதுக்கு, சுதந்திரமா செயல்படுறது எல்லாம் அவங்களோட உரிமை. நீ இப்படி இருன்னு சொல்றது ஒரு வகை வழிகாட்டல். நீ இப்படி தான் இருக்கனும்ன்றது கட்டளை. நீங்க எங்களுக்கு வழிகாட்டுங்க சார். எங்க காதல் தெரிஞ்ச உடனே, அதுல இருக்கிற நியாயத்தை யாருமே புரிஞ்சுக்கல. இது சரிவராதுன்னு நீங்க சொல்றது எல்லாம் உங்க கொள்கைகளோட முட்டாள் தனம். எங்க அன்போ, பாசமோ உங்க கண்ணுக்கு ஏன் தெரிய மாட்டாது. அப்படி யோசிங்க, எங்க ரெண்டு பேர் மனசும் புரியும்…” என்றவன் கிளம்பி விட்டான்.
இன்று விக்ரம் கண்களால் பிரபாவை தேட வில்லை. அவனுக்கு புரிந்தது, தன் பெற்றவர்கள் எதிரில் தன்னை காண தயங்குகிறாள் என்று…
பிரபாவும் அப்படித்தான் நினைத்தாள். அவர்களை மீறி காதலில் விழுந்து, அவர்கள் சொல்லியும் அவன் தான் வேண்டும் என்று நிற்கிறாள். அதையும் மீறி அவர்கள் முன் கதாலால் விக்ரமை காண முடியும் என்று தோன்ற வில்லை. எப்படியும் விக்ரம் சரி செய்வான் என்றே நினைத்தாள்.
மதனிடம் இருந்து விக்ரமுக்கு கால் வர, அவன் வரும் வழியில் தான் நின்று இருந்தார்கள்.
“என்ன மச்சான்?…” என்று விக்ரம் கேட்க.
“மாப்பிள்ளை, அது வந்து…” என்று மதன் இழுக்க,
“என்னடா, சொல்லுங்க?… எதுக்கு தயக்கம்…”
“இன்னைக்கு நம்ம களத்து மேட்டு பக்கம் பாறை ஒடைக்க வேட்டு வைக்கிற ரெண்டு பேர பார்த்தேன்டா…”
“அதுக்கு என்னடா இப்போ…” என்று விக்ரம் கேட்க.
“ இல்லடா, அவனுங்க மாமாக்கு தான் ரொம்ப பழக்கம். உங்க சின்ன மாமன் குவாரிக்கு அவனுங்க தான் வேட்டு வைப்பாங்க…” என்று இழுக்க, விக்ரம் புரிந்து கொண்டான்.
கள்ளி காட்டில் யார் கல் குவாரி வைத்து இருக்கிறார்கள். தன் தந்தை ஏதும் திட்டம் போடுகிறா… யோசனையாக விக்ரம் பார்க்க.
“அங்க முக்காவசி பேர் மாடு, ஆடு தாண்ட வச்சு இருக்காங்க…” என்று மதன் சொன்ன நொடி அதிர்ந்து போனான் விக்ரம்.
அடுத்து எல்லோரும் பரபரப்பாக பிரபா வீடு நோக்கி ஓட, செல்வம் வெளியில் தான் அமர்ந்து இருந்தார்.
என்னவோ என்று எழுந்து பார்க்க, இவர்கள் மூவரும் வீட்டுக்கு பின்னாடி இருக்கும், கொட்டகைக்கு தான் ஓடினார்கள். அங்கு ஒரு இடம் விடாமல் தேடி பார்க்க, அந்த மாதிரி எங்கும் இல்லை. கொஞ்சம் ஆசுவாசம் வந்தது.
“என்ன வேணும் உங்களுக்கு?…” சந்தேகமாக செல்வம் கேட்க, உள்ளே இருந்து செல்வியும் வந்து விட்டார்.
“சார்… மாடு, ஆடு எல்லாம் இங்க தான இருக்கு…” என்று மதன் கேட்க.
“ஆமா, ஏன்ப்பா? என்ன விசயம்?…”
“வேற எங்ககையும் மாடு கட்டி கெடக்கா சார்…”
“ ஆமா, தோட்டத்துல மூணு மாடு கட்டி கிடக்கு. என்ன விசயம், மொத அதை சொல்லுங்க?…” ஒரு பதட்டம் தமிழ் செல்வத்திற்க்கு.
ஒன்றும் சொல்லாமல் மூணு பேரும் தோட்டத்தை நோக்கி ஓட, அவர்களை தொடர்ந்து செல்வமும், செல்வியும் பதட்டத்தோடு நடந்தார்கள்.
அவர்கள் எது நடக்க கூடாது என்று பயந்தார்களோ அது தான் நடந்து இருந்தது. தமிழ் செல்வத்திற்கு பிரதான தொழிலே மாட்டு பண்ணை தான். இருவது மாடுகளுக்கு மேல் வைத்து பார்க்கிறார். நீர் பற்றாக்குறையால் விவசாயம் பார்க்க முடியாமல் போக, மாடு, ஆடு வளர்ப்பு தான் முக்கிய தொழிலாக போனது…
இறந்து கிடந்த மூணு மாட்டையும் கண்டு வயிற்றிலும், நெஞ்சிலும் அடித்து கொண்டு கதறினார்கள் செல்வமும், செல்வியும். ரொம்ப கொடூர சாவு… ஏற்று கொள்ளவே முடியவில்லை. நீதிபதி இப்படி செய்ய கூடியவர் என்று இதுவரை யோசித்தது கூட இல்லை. தற்பெருமை அதிகம் என்று தான் நினைத்து இருந்தார். அடுத்தவர்கள் வாழ்வாதாரத்தில் கை வைப்பார் என்று கொஞ்சம் கூட நினைக்க வில்லை.
செல்வி விடாமல் கதறி கொண்டு இருந்தார். கிராமங்களில் மாடு இறந்தாலும், இழவு வீடு மாதிரி தான். அப்படி வீட்டில் ஒருவராக தான் வளர்ப்பார்கள். அவர்கள் வாழ்க்கையே அதை கொண்டு தான்.
விக்ரம் கூனி குறுகி போனான். தன் தந்தை செய்தார் என்று நம்ப முடியவில்லை. அவன் கணிப்பில் அடங்காமல் நின்றார். அருண், மதன் கூட கண்களில் நீர் வந்தது.
மிரட்டல். இது ஒரு வகை மறைமுக மிரட்டல். வீட்டில் அத்தனை மாடு இருக்க, தோட்டத்தில் இருக்கும் மாடு மட்டும் குறி வைப்பது ஏன்?… சேதாரம் குறைவாக ஆனால், அதிக சேதாரமாகிவிடும் என்று மறைமுக மிரட்டல் விடுகிறார். தாங்க முடியவில்லை. ஒருவனை அடக்கும் முறை இது தான…
தமிழ் செல்வம் எழுந்து வந்தவர், ஓங்கி ஒரு அறை விக்ரம் கன்னத்தில் விட்டார்.
“சார்…” என்று பதறி போனார்கள் மதன், அருண் இருவரும்.
செல்வம் விடவில்லை, “பாவிகளா, என் வீட்டு செல்வத்தை கொன்னுட்டீங்களே…” என்று விக்ரம் சட்டையை பிடித்தவர், மேலும் ரெண்டு அடி போட. மெளனமாக வாங்கி கொண்டான்.
வேற என்ன செய்வது, நடந்ததை அவனாலே ஜீரணிக்க முடியவில்லை. மனிதனை கொன்றால் தான் கொலையா?…
பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கும் போது வாங்க தான் வேண்டும். மதனும், அருணும் ஓடி வந்து செல்வத்தை பிரித்தார்கள். அவர்களுக்கும் அடி விழுந்தது.
தமிழ் செல்வம் ஒரு நிலையில் இல்லை. கொஞ்ச நேரத்திற்கு முன் தான் வந்து மாத்தி கட்டி வைத்து போனார். அப்போது கூட அதன் உடலை தடவி கொடுத்தார். ஐயோ! என்று தலையில் அடித்து கொண்டார்.
செல்விக்கு அழுகை, அரட்டல் ஓய வில்லை, “நாசமா போவீங்க. நீங்க நல்லா இருப்பீங்களா… இப்படி எங்க கண்ணீரையும், வயித்தெரிச்சலையும் வாங்கி கொட்றீ ங்க, உன் குடும்பம் விளங்குமா? எங்க பிள்ளை மாதிரி வளர்த்தோமே…” என்று நெஞ்சில் அடித்து கொண்டு விக்ரமை பார்த்து சொல்ல,
அவன் கண்களில் நீர் திரண்டது. அவன் வாழ்க்கையில் பார்க்காத சூழல். கண்ணீர் விட்டு அழுபவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும். விக்ரம் வேகமாக வீட்டுக்கு வந்தான்.
“அப்பா… அப்பா, எங்க இருக்க…” என்று கத்த,
நீதிபதி சாதரணமாக வெளியே வந்தார்.
“என்னடா விக்ரம்…”
“நேருக்கு நேரா மோத முடியாம, முதுகுல குத்திட்டீங்க தான… எனக்கு தாங்க முடியாத வலிய கொடுத்துட்டீங்க. என்கிட்ட சொல்லி ஒன்னும் ஆகலன்னு, அவங்களை ஏன்ப்பா அடிச்சீங்க. உங்களை நான் எப்படி வச்சு இருந்தேன் தெரியுமா?…” மகனின் கண்களில் வழிந்த கண்ணீர் சுட்டது.
ஆனாலும், அவரால் பின் வாங்க முடியாது. அது என்னவோ அவரால் தன் முறைமையை மாற்ற முடியவில்லை.
“நான் பிறந்ததுல பார்த்து வார ஒன்னை என்னால ஈசியா கடக்க முடியாது விக்ரம். நீ மாற தான் வேண்டும்…” கைகளை பின்னால் கட்டி கொண்டு, உறுதியாக நிமிர்ந்து நின்று பதில் சொன்னார் நீதிபதி.
“எனக்கு இன்னும் தான் வைராக்கியம் அதிகமாகுது… நானும் பின் வாங்க மாட்டேன். பிரபாவதி தான் நீதிபதியோட மருகள்…”
“அப்ப சரி, பார்த்துக்கலாம். எல்லாத்துக்கும் தயாரா இருக்க சொல்லு, அந்த மிலிட்டரிகாரனை…”
“நான் இருக்கேன், இங்க தான பிறந்தேன். எனக்கும் அருவா தூக்க தெரியும்…” என்றவன்,
“நமக்கு நாலு பக்கமும் மலை சூழ்ந்து இருக்கு… புயல் ,வெள்ளம், நிலநடுக்கம், மழை, வெயில் எதுவும் தாக்காது. ஆனா, ஒன்னு தாக்கி அழியும். இங்க தான் உங்களை மாதிரி மனுசன் மிருகம் இருக்கே, ஒருத்தரை ஒருத்தன் வெட்டி சாகுற வியாதி வந்து இருக்கு…”
“அப்பா, இந்த உலகம் எல்லாருக்கும் பொதுவானது… இங்க இருக்குற காக்கா, குருவில இருந்து நாய் நரி வரைக்கும் வாழ முழு உரிமையும் இருக்கு. ஆனா, இந்த மனுச ஜென்மத்துக்கு தான், தான் பெரிய புத்திசாலின்னு நினைப்பு. இந்த உலகம் தங்களுக்கு மட்டும் தான்னு சுத்தி இருக்குற எல்லாத்தையும் அழிச்சாங்க. இப்போ, யார் பெரியவன்னு ஒருத்தன, ஒருத்தன் அழிச்சுட்டு இருக்காங்க…” நீதிபதி தளர வில்லை. முக இறுக்கமும், நிமிர்ந்த நெஞ்சும் மடிய வில்லை.
“கொஞ்சம் சரித்திரத்தை திருப்பி பாருங்க. இந்த உலகத்துக்கு அழிவு புதுசு இல்லை. முதன் முதல்ல பிளேக்ன்னு ஒரு உயிர் கொல்லி, உலகத்துல ஒரு பங்கு மக்கள் போயிட்டாங்க. அடுத்து ஸ்பானிஷ் ப்புளு, அப்புறம் சிற்றம்மை, மலேரியா, டெங்கு, கொரோனான்னு ஒவ்வொண்ணும் ஒரு பகுதி மக்களை கொண்டு போயிட்டு தான் இருக்கு. சொந்த பிள்ளைகளை கூட தள்ளி வச்சாங்க. எல்லாம் என்ன உணர்த்துது மனுசனுக்கு மனுசன் தான் துணை. கஷ்ட காலம் வரும் போது உங்க ஆணவம், திமிர், பெருமை எல்லாம் போய் உயிர் வாழ்ந்த போதும். ஆனா, அதுவே நல்லா இருக்கும் போது நான், அந்த ஆணவம் தான் தூக்கி நிக்கும்…”
“அவ்வளவு ஏன் சொல்லணும்… அஞ்சு வருசத்துக்கு முன்னாடி உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு, காப்பாத்த முடியாம போகும்ன்னு நினைச்ச போது ஒரு டாக்டர் தான் வந்து காப்பாத்துனாங்க. அந்த டாக்டர பார்த்து நீங்க கையெடுத்து கும்பிட்டீங்க, அம்மா, அந்த டாக்டர் கால்லயே விழுந்தாங்க. அப்ப எங்க போச்சு உங்க கௌரவம், ஆணவம், நீதிபதி அப்படின்ற உங்க மரியாதை…”
“விக்ரம்…”
“அட, அத கூட விடுங்க. வருசா வருசம் ஐயனார் கோவிலுக்கு பூஜை நடக்கும் போது ஐயன் சாமி ஆடுற ஆள் யாரு… உங்க ஆளா, அவர் கால்ல ஏன் விழுகுறீங்க. நீங்க தான் நீதிபதியாச்சே…”
“யோசிக்கிறது தப்பா இருக்கு, செய்யிற செயல் தப்பு. ஆனா, ஆண்டவான்னு கையெடுத்து சாமிய மட்டும் கும்புடுவீங்க. அந்த சாமி உங்களுக்கு வரம் கொடுக்கணும். வருசா வருசம் கெடா வெட்டி, அன்னதானம் போட்டு உங்க தப்பை ஆண்டவன் கிட்ட கூட சரிகட்டுறீ ங்க. கடவுள் என்ன மனுசனா லஞ்சம் வாங்க…”
“செத்ததுக்கு அப்புறம் நாம என்ன கொண்டு போக போறோம். நீங்க செஞ்ச தானமும், தர்மமும் உங்களுக்கு நல்லது செய்யுமே தவிர உங்க தப்புக்கு கூலி ஆகாது. இங்க வயசான எல்லாரும் என்ன கேட்பாங்க தெரியுமா? கடவுளே! எனக்கு நல்ல சாவ கொடுன்னு… பிறப்பு பெருமையா இருந்து பிரோஜனம் இல்லைப்பா. ஒருத்தனோட சாவு நல்ல முறையில் இருக்கணும். என்ன பாவம் பண்ணான்னோ கடவுள் நல்ல சாவை கூட கொடுக்கல… இப்படி தான் உலகம் பேசும். அந்தம்மா, வயித்தலையும், நெஞ்சுலையும் அடிச்சு அழுதே, அந்த கண்ணீர் உங்களுக்கு நல்ல முடிவை தேடி தரும்மாப்பா…”
“விக்ரம்…” பதறினார் நீதிபதி. விக்ரம் வார்த்தை அவரை என்னவோ செய்தது.
“பிறப்பால நீங்க ஒரு இந்து. உங்களுக்கு பிறந்து நானும் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன் தான். நீங்க எனக்கு என்ன சொல்லி தந்தீங்க, நாம செய்யிற ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை இருக்கு. நாம செய்ற நல்லது, கெட்டதை தரம் பிரிச்சு கடவுள் எழுதி வைப்பார். செத்ததுக்கு அப்புறம் நல்லது செஞ்சா சொர்க்கத்துக்கு, கெட்டது செஞ்சா எம தர்மன் நம்மளை நரகத்தில் தள்ளிடுவாங்க. அதுனால நல்லது மட்ட தான் செய்யணும்ன்னு எனக்கு நீங்க தான் சொல்லி கொடுத்தீங்க்…”
“செத்ததுக்கு அப்புறம் நமக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. அது தான் இவ்வளவு நாள் நாம வாழ்ந்த வாழ்க்கையை தீர்மானிக்கும். கடவுள் கட்டளை படி நல்லது செஞ்சவன் கடவுள் கிட்டையும், கெட்டது செஞ்சவன் கடவுளை தரிசிக்க முடியாது. இப்போ நீங்க வாழ்ந்த வாழ்க்கை என்ன?…”
நீதிபதி முகம் மாறியது. அவர் மனம் உள்ளே குத்தியது.
“அப்பா, இந்திரா அக்கா மொத வாடகை வீட்டுல தான் இருந்தாங்க. அந்த வீட்டை சரி பண்ணனும்ன்னு சொல்லும் போது நீங்க என்ன சொன்னீங்க. எதுக்குமா வீண் செலவு. இது வெறும் வாடகை வீடு. எந்தளவுக்கு பாதுகாப்பு பண்ணனுமோ, அந்தளவுக்கு பண்ண போதும்ன்னு சொன்னீங்க… இன்னைக்கு அதை தான் நான் உங்க கிட்ட சொல்றேன். இந்த உசுரும், உடம்பும் எழுவது வருசத்துக்கு மட்டும் தான். மிஞ்சி போனா எம்பது. நாமளும் வாடகைக்கு தான் கொஞ்ச காலம் இருக்கோம். வெறும் டெம்பர்வரி வாழ்க்கைக்கு, உங்க மனுச தன்மையை இழந்து நிக்காதீங்க, கடவுளை தரிசிக்க மாட்டீங்க…” என்றவன்,
தன் தந்தையின் கை பிடித்து சாமி அறைக்கு அழைத்து சென்றான். அங்கு வேற எந்த சாமி போட்டோவும் இல்லாமல், சிவ லிங்கம் மட்டும் இருந்தது. ராமேஸ்வரம் போயிருக்கும் போது வாங்கி வந்தது.
திலகவதி கூட, “,சாமி சிலையை வச்சு தங்கரிக்க முடியாது கோவிலுக்கு கொடுத்துடுங்க…” என்று சொன்ன போதும், சிவன் மேல் கொண்ட பக்தியால் தன் வீட்டிலே சிவனுக்கு இடம் ஒதுக்கி வைத்தார் நீதிபதி.
விக்ரம், தன் தந்தை தோலில் இருந்த துண்டை எடுத்து போட்டவன், சட்டையையும் கழட்டி விட்டான்.
“விக்ரம், என்ன பண்ற…” என்று தந்தை அதாட்ட,
“இத்தனை வருசம் நீங்க வணங்குற எம் பெருமான் கிட்ட உங்களை வெளிப்படுத்தி தான் ஆகணும். பொதுவா, டிவில, காலண்டர்ல சாமிய காட்டும் போது பின்னாடி ஒரு ஒளி தெரியும். அது என்ன தெரியுமா பரிசுத்தம், தூய்மை, உண்மை. அந்த கடவுள் கிட்ட தீய எண்ணம் கொண்டவங்க சாமிய பார்க்க முடியாது. இன்னைக்கு உங்க கண் நீங்க வழங்குற கடவுளை நேருக்கு நேர் பார்க்க முடியுதான்னு பாருங்க. மனுசங்க கிட்ட தான் ஒழிக்க முடியும், கடவுள் கிட்ட ஓடி ஒழிய முடியாது…” என்றவன்,
அந்த சிவ லிங்க அருணாச்சல மூர்த்தி முன்னாடி அகள் விளக்கு எரிய, அதை பார்த்தவன்,
“சித்ரா பவுர்ணமி, ஏகாதசி, அமாவாசை, பிரதோஷம்ன்னு சாமிக்கு விரதம் இருப்பீங்க தான. இன்னைக்கு நீங்க வணங்குற கடவுள் கிட்ட பேசியே ஆகணும். வேற எப்படியும் நீங்க திருந்த மாட்டீங்க…” என்றவன் கதவை அடைத்து விட்டு வெளியே வந்து விட்டான்.
சிவனையும், அதில் இருக்கும் திருநீர் பட்டடையையும், எறியும் ஒளி விளக்கையும் பார்க்கையில், ஊது பத்தி வாசனையோடு வரும் சம்பங்கி மாலை மனமும், கடவுள் தரிசனமும் உடல் சிலிர்த்தது. மெல்ல சாமி அருகே சென்றார்.
விக்ரம், அந்த ஊரில் இருக்கும் தண்ணீர் தொட்டி மேலே படுத்து கிடந்தான். நாளைக்கு மாட்டுக்கு வேட்டு வச்ச விசயம் வெளியே வரும். அந்த ஊர்காரன் சும்மா இருக்க மாட்டான். அவன் வர, இவர்களும் போக… எதை விக்ரம் தடுக்க நினைத்தானோ, அதுவே நடக்க போகிறது.
error: Content is protected !!