Skip to content
Post Views: 13,157
அத்தியாயம் 14
விஷாலினியின் நிலை தெரிந்தும் விஷ்ணுவால் அங்கே செல்ல முடியாமல் போனது. குற்றவாளி கொடுத்த வாக்குமூலத்தையும், குற்றவாளியையும் கோர்ட்டில் சமர்ப்பித்தாக வேண்டும்.
விசயம் பெரியது மட்டுமல்லாது குற்றப் பின்னனியில் சில பெரிய புள்ளிகளும் சம்மந்தப்பட்டிருப்பதால் யாரை நம்பியும் விடாமல் தானே அழைத்துச் சென்றாக வேண்டிய சூழலில் இருந்தான் விஷ்ணுவர்தன்.
Advertisement
அதிகாலையிலேயே விஷாலினியின் பாட்டி உயிர் பிரிந்திருந்தது. கோபாலனுக்கு அழைத்து விசயத்தை சொல்லியிருந்தார் மேகலை. கோபாலன் மனைவியோடு காஞ்சிபுரம் வந்தார்.
விஷ்ணு விஷாலினிக்கு அழைக்கும்போது பாட்டியின் பூத உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. விஷ்ணு தந்தைக்கு அழைக்கவே விசயத்தை விளக்கினார் கோபாலன்.
“நான் வரவரைக்கும் விஷாலினியோடவே இருங்கப்பா, குற்றவாளியை கோர்ட்ல ஆஜர்பண்ணி திரும்ப ஜெயில்ல விட்டுட்டு வர எப்படியும் ஈவ்னிங் ஆகிடும்” என்றான்.
Advertisement
மாலை மூன்று மணிபோல் விஷ்ணுவிற்கு அழைத்து, விஷாலினி மயக்கமடைந்ததாகவும் அருகிலுள்ள மருத்துவமணையில் அனுமதிக்கபட்டிருப்பதை சொன்னார் கோபாலன்.
Advertisement
வெகுவாய் பதறிப்போனான் விஷ்ணு. “டாக்டர் சரியா கவனிக்குறாங்களா? அந்த ஊர் ஸ்டேஷன் என் கன்ட்ரோல்தான், ரொம்ப அவசியம்னா கான்ஸ்டபிளை அனுப்பி வைக்கட்டுமாப்பா?” என்றான்.
“வேண்டாம்ப்பா, ரொம்ப வருசம் கழிச்சு மேகலை இங்க வந்திருக்கு, கான்ஸ்டபிள் வந்தா என்னவோ ஏதோனு நினைப்பாங்க. நான் பார்த்துக்கிறேன், நீ வேலை முடிச்சிட்டு சீக்கிரம் வா” என்றார் கோபாலன்.
மாலை ஏழுமணிபோல் மருத்துவமணைக்கு வந்தான் விஷ்ணுவர்தன். விஷாலினி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
Advertisement
மேகலை “இங்க வந்து ஏதும் சாப்பிடாமலே இருந்திருக்கா தம்பி. தனியா சாப்பிட்டுக்கிறேனு சாப்பாடை அம்மா ரூமுக்கு எடுத்துட்டு போய்ட்டா, சரி இங்க இருக்கிறவங்களோட பழகப்பிடிக்காம அம்மாவோட இருக்க நினைக்கிறானு நானும் நினைச்சிட்டேன்.
தோட்டக்காரன்கிட்ட கொடுத்து இவ சாப்பாட்டை மாட்டுக்கு போட சொல்லி கொடுத்திருக்கா. நேத்து காலைல அங்க இரண்டு இட்லி சாப்பிட்டதுதான்” என்று கலங்கினார்.
விஷாலினிக்கு பாட்டியின் மீதுள்ள பாசம் அறிந்தவன்தான் விஷ்ணு. பாட்டி இழப்பை தாளமுடியாமல் மயக்கம் வந்திருக்கும் என்றுதான் நினைத்தான். இவர்கள் வீட்டில் உண்ணப் பிடிக்காமல் பட்டினி இருப்பாள் என்று யோசிக்கவேயில்லை.
“இப்படியா கவனிக்காம விடுவிங்க? இவ குணம் உங்களுக்கு தெரியும்தான?” என்றான் சிறு கோபத்தோடு.
“டாக்டர் சொல்லித்தான் இவ சாப்பிடலன்றதே தெரிய வந்தது. நைட்டெல்லாம் அம்மா பக்கத்துலயே இருந்தா. தூங்குனு சொன்னாலும் கேட்கல. காலைல அம்மா இறந்ததும் அழ ஆரம்பிச்சவ… எடுக்குறவரை யார் அடக்குனாலும் அழறதையும் நிறுத்தவேயில்ல.
காலைல அம்மா போன துக்கத்துல நானும் இவ பசியை நினைக்காம விட்டுட்டேன்” என்று தவறுணர்ந்து மேகலை கண்ணீர் விட, “சரி விடுங்க, டாக்டர் என்ன சொன்னாங்க?” என்றான்.
“இனி பயப்பட வேண்டாம். நல்லா தூங்கி எழுந்தா சரியாகிடுவானு சொன்னாங்க” என்றார்.
“நீங்க சாப்பிட்டிங்களா?”
மேகலை கலங்க, தனது டிரைவருக்கு அழைத்தான். டிரைவர் வர, “இரண்டு பேருக்கு சாப்பிட வாங்கி வாங்க” என்று பணத்தை நீட்டினான்.
பிறகுதான் அன்னை நியாபகம் வர, “அம்மா எங்கப்பா?” என்றான்.
“காவ்யா தனியா இருப்பானு அவளை சாயங்காலமே அனுப்பிட்டேன் விஷ்ணு”
“எப்படி போனாங்க? தனியாவா?”
“இல்ல, மேகலையோட அண்ணன் அவர் டிரைவரை அனுப்பி வச்சார். நம்ம கார்லதான் போயிருக்கா” என்றார்.
“ஓ…” என்றவனுக்கு தற்போதுதான் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது. ம்… ஆன்ட்டி வீட்டுல இவங்களை ஏத்துருப்பாங்க. அது விஷாலினிக்கு பிடித்திருக்காது. பாட்டிக்காக சகித்திருப்பாள் என்று நினைத்தவாறு விஷாலினியை பார்த்தான்.
நிறைய அழுதிருக்கிறாள் என்று வீங்கிய கண்கள் சொன்னது. சில நொடிதான் பார்த்தான். பின்னே மேகலை அருகே இருக்கும்போது எப்படி பார்ப்பது? பார்வையை திருப்பியவன், மேகலை அமர்ந்திருந்த விதம் கண்டு “வேற ஏதும் பிரச்சனையாப்பா?” என்றான் ரகசிய குரலில்.
“அப்படித்தான் போல விஷ்ணு, என்னைப் பார்த்ததும் இன்னும் அழுதா விஷாலினி. அழாதடா, வயசான எல்லாருக்கும் வரதுதானேனு எவ்வளோ சொன்னேன். அழுகையை நிறுத்தவேயில்ல” என்றார் தவிப்பாக.
அன்னை இறந்த சோகத்தோடு, அங்கே நடந்த சில முக்கிய நிகழ்வுகளும், மகளின் ரோசமும் மேகலையை நிலைகுலையச் செய்தது. அதிலும் மகள் உண்ணாமலிருக்க தான் உண்டிருக்கிறோம் என்பதை தாளமுடியவில்லை.
இந்நிலையில் அப்பா மகன் ரகசிய சம்பாசனைகளை கவனிக்கும் நிலையில் இல்லை மேகலை. அதீத சோர்வோடு எதையோ நினைத்தவாறு அமர்ந்திருந்தார்.
“இல்லப்பா, ரொம்ப வருசம் கழிச்சி வந்திருக்காங்கள்ல? இதை வச்சு அங்க எதாவது பிரச்சனை ஆனதா? ஆன்ட்டி முகமும் சரியில்லையே” என்றான் சந்தேகமாக.
“அப்படி ஏதும் தெரியல விஷ்ணு. ஆனா அங்க கிருஷ்ணனும், ப்ரியாவும் விஷாலினிக்கு ஆறுதல்தான் சொன்னாங்க”
ப்ரியா என்ற பெயர் பாதிக்கவில்லை, “யார் அந்த கிருஷ்ணன்?” என்றான்.
“மேகலையோட அண்ணன் மகன்” என்று கோபாலன் சொன்னதும் சிந்தனை கலைந்து கோபாலனை பார்த்தார் மேகலை.
“ஓ…” என்றவன், “இவளுக்கு புது உறவுகள் பிடிக்காது, அவளை டிஸ்டர்ப் பண்ணாதிங்கனு உங்கண்ணன் மகன்கிட்ட நீங்க சொல்லியிருக்கலாமில்ல ஆன்ட்டி?” என்றான்.
“ஒருநாள் இருக்கப்போறோம், எதுக்கு மனஸ்தாபம்னு நினைச்சேன். நேத்து சாயங்காலமே கிளம்பறதா இருந்தோம். பாட்டி எழட்டும் சொல்லிட்டு போலாம்மானு விஷாலினிதான் கிளம்ப மறுத்துட்டா” என்றார் வருத்தத்தோடு.
“என்ன நடந்தது ஆன்ட்டி?”
“என் அண்ணன் மகனுக்கு விஷாலினியை பிடிச்சிடுச்சு போல. விஷாலினி யாரோடவும் அங்க பேசல. அவ குணத்தை கண்டுபிடிச்சிட்டான் போல. பாட்டி சொன்னா கேட்பானு, பழைய படங்கள்ல வரமாதிரி, இனி அத்தையை நம்ம வீட்டுலயே வச்சிக்கிறேன் பாட்டினு அம்மாகிட்ட சொன்னான்.
என் அம்மா முகம் மலர்ந்து போச்சு. அத்தை பொண்ணையும்தான் பாட்டி. அவளை என்னோட பேச சொல்லுங்கனு சொன்னான். முடியாம இருக்கிறவங்ககிட்ட என்ன பேசுறிங்கனு விஷாலினி அவனை முறைச்சா.
பாட்டிக்கு உன்மேல ரொம்ப பாசம். நீ இந்த வீட்டுக்கு வரனும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க. பாட்டி நிம்மதிக்காக இங்கயே இருக்கேனு சொல்லேன். சந்தோசப்படுவாங்கனு சொன்னான்.
என் அம்மா விஷாலினியை பார்க்கவும், பாட்டிம்மானு சொன்னா. என் அம்மாவால பேசவே முடியல. இவனாவே நீங்க கவலைப்படாதிங்க பாட்டி, இனி இவங்களை விடமாட்டேன், உன் பேத்திதான் இந்த வீட்டுக்கு விளக்கேத்த வரப்போறானு சொல்லிட்டான்.
கிருஷ்ணன் அப்படி சொல்லவும் என் அம்மாக்கு ஆசை வந்துடுச்சு போல. விஷாலினியை பார்க்கவும் மறுப்பா தலையசைச்சா. அந்த நேரம் என் அம்மா என்ன நினைச்சுச தெரியல… ஒரு கையில விஷாலினியையும் இன்னொரு கையில கிருஷ்ணனையும் பிடிச்சிட்டு நல்லாயிருப்பிங்க கண்ணுனு சொன்னுச்சு. கிருஷ்ணன் அதையே கல்யாணத்துக்கான சம்மதமா எடுத்துக்கிட்டான் போல” என்றார் தவிப்பாக.
“அவன் சம்மதமா எடுத்துக்கிட்டது இருக்கட்டும். நீங்க இதுக்கு சம்மதிப்பிங்களா?” என்றான் இறுகிய முகத்தோடு.
“எனக்கு சம்மதமில்ல தம்பி. ஆனா”
“என்ன ஆனா?”
“என் மனசுல வேற ஒருத்தர் இருக்காங்க, தேவையில்லாம எதையும் யோசிக்காதிங்கனு கிருஷ்ணன்கிட்ட சொன்னா” என்றார் பெரும் கவலையாக.
கோபாலன் பெரிதாய் அதிர, “அவனை அவாய்ட் பண்ண அப்படி சொல்லியிருப்பா. நீங்க கவலைப்படாதிங்க” என்றான் இலகுவாக.
“இல்ல தம்பி. அவ சொன்ன விதம், அதை சொல்லும்போது அவ முக பாவனைலாம்…” என்று தவிக்க, விஷ்ணுவின் டிரைவர் உணவோடு வந்தார்.
“முதல்ல சாப்பிடுங்க, மத்தது அப்புறம் பேசலாம்” என்றான்.
“இல்ல தம்பி, எனக்கு பசிக்கல”
“அப்பாவும் சாப்பிடாம இருக்கார் ஆன்ட்டி, நீங்க சாப்பிடாம அவர் சாப்பிடுவாரா?” என உரிமையாய் அதட்ட, “அண்ணா நீங்க சாப்பிடுங்க” என்றார் கெஞ்சலாக.
“வயித்தை காயப்போட்டா போன உசிர் வந்திடுமா? காலைலயிருந்து சாப்பிடலதான? எனக்கும் நல்ல பசி, இரண்டு பேரும் சாப்பிடலாம். எடுத்து வைம்மா” என்று கை கழுவ போனார்.
கோபாலனுக்காக இருவருக்கும் பிரித்து வைக்க, உணவு உள்ளிறங்க மறுத்தது மேகலைக்கு. உணவிலிருந்து கையை உதற, “சாப்பிடுங்க ஆன்ட்டி” என்றான் கட்டளைபோல.
“இல்ல தம்பி, என்னால முடியல, விஷாலினி எழட்டும், இரண்டு பேரும் சாப்பிடறோம்” என்றார்.
“நிச்சயம் விஷாலினி மனசுல யாரும் இருக்கமாட்டாங்க, சாப்பிடுங்க” என்றான்.
அப்பொழுதும் மேகலை முகம் கலவரத்திலேயே இருக்க, “அப்படியேன்னாலும் விஷ்ணு பார்த்துப்பான். சாப்பிடும்மா” என்றார் கோபாலன்.
“எதாவது பிரச்சனைனா விஷ்ணு தம்பி பார்த்துக்கும்தான். ஆனா இவ மனசுல யார் இருக்காங்கனு தெரியலயே. விஷாலினிகிட்டயிருந்து இப்படி எதிர்பார்க்கல” என்றார் வேதனையோடு.
“என்னையும் அப்பாவையும் மீறி உங்க பொண்ணை யாரும் கட்டிட்டு போக முடியாது” என்றான் உறுதியாக.
மேகலையின் முகம் வாட்டமாகவே இருக்க, “விஷாலினியை விஷ்ணுக்கு கொடுக்க உனக்கு சம்மதமா மேகலை” என்றார் கோபாலன்.
பேரதிர்வோடு விழிவிரித்த மேகலை, “நிஜமாத்தான் கேக்குறிங்களா? உங்களுக்கு என் பொண்ணை பிடிக்குமா?” என்றார் தவிப்போடு.
“விஷாலினியை எனக்கு பிடிக்குமானு உனக்கு தெரியாதா மேகலை?”
“இல்லண்ணா, உங்களுக்கு பிடிச்சா போதுமா? விஷ்ணுக்கு பிடிக்கனுமே”
“எனக்கும் பிடிக்கும் ஆன்ட்டி”
“அவமேல உள்ள அக்கறையில” என்று தயங்க, “அக்கறையும் இருக்கு, விருப்பமும் இருக்கு. அதனாலதான் அவளை அண்ணானு சொல்ல வேணாம்னு சொன்னேன், படிப்பு முடியவும் பேசலாம்னு இருந்தேன். உங்க கவலையை தாங்க முடியாம அப்பா இப்போவே சொல்லிட்டார்”
“எனக்கு பரிபூரண சம்மதம் தம்பி. ஆனா விஷாலினி அவ மனசுல வேற ஒருத்தர் இருக்கானு சொன்னாளே”
“அதை நான் பார்த்துக்கிறேன். இப்போ சாப்பிடுங்க” என்றான்.
“அண்ணி சம்மதிப்பாங்களாண்ணா?”
“இதை நான் சொல்லித்தான் தெரிஞ்சுக்கனுமா மேகலை?” என்றார் இன்முகத்தோடு.
இப்படி திருப்பத்தை எதிர்பார்க்கவேயில்லை மேகலை. மகளுக்கு திருமணம் முடித்துக்கொடுத்தாலும் கோபாலனின் ஆதரவு வேண்டும் என்பதற்காக தனது வீட்டை விலைக்கு கொடுத்து அவர்களை இங்கேயே நிரந்தரமாக வைத்துக்கொள்ள நினைத்தவர்.
கிருஷ்ணனை எப்படி சமாளிப்பது என்று தவித்திருக்கும் நேரம் மகளை மருமகளாக கேட்டதும் பெரிய இக்கட்டிலிருந்து விடுதலையடைந்து போல் தோன்ற உடனே சம்மதித்தார்.
“கிருஷ்ணன் பிரச்சனை செய்தா அடிக்கவெல்லாம் வேண்டாம் தம்பி, தன்மையா சொல்லிக்கலாம்” என்றார்.
“எதையும் யோசிக்காம சாப்பிடுங்க” என்றான்.
பிறகு மேகலை உண்டுமுடிக்க, சாந்தியிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று பேசி முடித்து, “அண்ணா அண்ணியை பத்திரமா வீட்டுல விட்டுட்டு வந்துட்டாங்களாம். உங்க கார் வந்துடுச்சு, விஷாலினி முழிச்சதும் அவளை அழைச்சிட்டு சென்னை போய்டுறிங்களா?” என்றார்.
“இன்னைக்கு என் குவாட்ரஸ்ல தங்கிக்கலாம் ஆன்ட்டி” என்றான்.
“எனக்கு இங்க முடிக்கவேண்டிய சம்பிரதாயம் இருக்கு தம்பி, என்னால இன்னைக்கு எங்கேயும் வர முடியாது”
“அப்போ அப்பாவையும் விஷாலினியையும் அழைச்சிட்டு போறேன். காலைல இரண்டு பேரும் சென்னை கிளம்பிடுவாங்க. நீங்க இங்க செய்ய வேண்டியதை முடிச்சிட்டு சொல்லுங்க, டேக்ஸி புக் பண்ணிவிடறேன்” என்றான்.
சரியென தலையசைத்து, “கிருஷ்ணன் விஷாலினியை பார்க்க கிளம்புறேன்னான், நான் வேணாம்னு சொல்லிட்டேன். இரண்டு பேரும் வீட்டுக்கு வருவோம்னு நினைச்சிட்டிருப்பாங்க” என்றார்.
“கிருஷ்ணன் வரட்டுமே, விஷாலினி அவனுக்கில்லைனு புரிய வைக்கனும்தானே?” என்றான் விஷ்ணு.
“ஆமாம்தான். ஆனா இங்க வச்சு ஏதும் வேண்டாம். நான் கிளம்பறேன், விஷாலினி முழிச்சதும் நீங்க அழைச்சிட்டு போங்க” என்று எழுந்தார்.
“தனியா வேண்டாம் ஆன்ட்டி, நானே வரேன்” என்றான்.
“வேணாம் தம்பி, யுனிஃபார்ம்ல இருக்கிங்க, என்னவோ ஏதோனு நினைப்பாங்க. இங்க எல்லாம் எனக்கு தெரிஞ்ச இடம்தான். தனியா போறது எனக்கு பிரச்சனையில்ல”
விஷ்ணுவிற்கும் விஷாலினியோடு இருக்கும் ஆவல் இருக்க, “அப்பாவும் நீங்களும் டேக்ஸில போங்க, உங்களை விட்டுட்டு அப்பா கார் எடுத்துட்டு வந்திடட்டும்” என்று தனது டிரைவரையும் அவர்களோடு அனுப்பி வைத்தான்.
error: Content is protected !!