தந்தையை நேரே தனது இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல சொல்லியிருந்தான் விஷ்ணு. ஒரு மணிநேரம் கழித்து விஷாலினி கண்விழித்தாள். இவளுக்கு எதிர்புறம் நின்று சன்னக்குரலில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான் விஷ்ணு.
சீருடையில் முதல்முறை பார்க்கிறாள் விஷாலினி. மாமா சொல்லியிருப்பாங்க, டியூட்டிலயிருந்து அப்படியே வந்துட்டார் என்று நிம்மதியாய் பார்த்திருந்தாள் அவனின் முதுகை.
பத்து நிமிடம்வரை பேசியிருந்து திரும்ப, “எப்போ வந்திங்க? அம்மா எங்க?” என்றாள்.
குரல் அத்தனை சோர்வாய் இருக்க, “நடக்க முடியுமா? இல்ல இங்கையே எதாவது சாப்பிட வாங்கி வரவா?” என்றான்.
எழுந்து நடந்தாள் விஷ்ணுவோடு. மருத்துவமணை வாயிலுக்கு வந்ததும் “மாமா கிளம்பிட்டாங்களாமா?” என்றாள்.
“அப்பா கிளம்பிட்டார்”
“அப்போ நீங்கதான் சென்னை கொண்டுபோய் விடப்போறிங்களா?”
பதில் சொல்லாமல் வேனில் ஏறப்பணித்து ஹோட்டல் முன்னே நிறுத்தினான். “இல்ல எனக்கு வேணாம்” என்றாள் சன்னக்குரலில்.
“ஒழுங்கா இறங்கு” என்று கட்டளையிட, “நேத்து காலைல குளிச்சது. ஒரு மாதிரி இருக்கு, வீட்டுக்கு போய் குளிச்சிட்டு சாப்பிட்டுக்கிறேன்” என்றாள்.
“இரண்டு நிமிஷத்துல வந்திடறேன்” என்று இறங்கியவன், பழரசம் வாங்கிக்கொண்டு, தனது சமையலருக்கு அழைத்து சமைக்க பணித்து, சமையலர் மனைவியிடம் வேறொரு பணியை உதவியாக சொல்லி முடித்து, “அரைமணி நேரத்துல வந்திடுவேன், அதுக்குள்ள வாங்கி வச்சிடுங்க” என்று இணைப்பை துண்டித்து விஷாலினியிடம் வந்து பழரசத்தை நீட்டினான்.
மறுக்காமல் வாங்கி குடித்தாள். ஆனால் பாட்டியின் கடைசி நிமிடங்கள் நியாபகம் வர கண்ணீர் வெளியேறியது. குடித்து முடித்து இறுக்கையில் சாய்ந்தபடி கண்மூடிக்கொண்டாள். அரைமணி நேர பயணத்திற்கு பிறகு வண்டியை நிறுத்தி “இறங்கு” என்றான்.
‘அதுக்குள்ள வந்திட்டோமா?’ என்று பார்க்க, “சென்னைக்கு காலைல போய்க்கலாம், இது என் குவாட்ரஸ், இறங்கு” என்றான்.
அதிர்ந்து விழித்தாள் விஷாலினி. “எதுக்கு இவ்வளோ அதிர்ச்சி? நீ இருக்கிற கன்டிஷன்ல இப்போ சென்னை போக முடியாது. ரெஸ்ட் எடுத்துட்டு காலைல கிளம்பிக்கலாம். இறங்கு” என்றான் தன்மையாக.
விஷ்ணுவிடம் வந்த கான்ஸ்டபிள், “ஐயா உள்ள இருக்கார் சார்” என்றார்.
விஷ்ணுவோடு தனித்திருக்கும் நிலையை எண்ணி தடதடக்கும் இதயத்தோடு உள்ளே நுழைந்தவள், அங்கே கோபாலனை கண்டதும் முகம் மலர, “மாமா” என்றாள் பெரும் ஆசுவாசமாக.
“வாடா, இப்போ உடம்பு பரவால்லையா?” என்றார்.
“ம்” என்றவளுக்கு கண்கலங்க, “அழக்கூடாது” என்று கோபாலன் தேற்றினார்.
“ஐயா…” என்று சமையலர் ஒரு பையை நீட்டினார்.
“நைட் டிரஸ்தானே வாங்கினாங்க?” என்று ஆராய, “ஆமாம் ஐயா, பெரிய ஐயா என் வெய்ஃப்கிட்ட மேடத்தோட ஃபோட்டோவை காட்டினார். அதை வச்சி வாங்கிட்டு வந்தா, மேடத்துக்கு சரியா இருக்கும்ங்க” என்றார்.
வாங்கி விஷாலினியிடம் கொடுத்து, “இதுல டிரஸ் இருக்கு, அந்த ரூம்ல போய் குளிச்சிட்டு வா” என்றான்.
இவள் அறைக்குள் செல்ல, “ஒரு நிமிஷம்” என்று தானும் அறைக்குள் நுழைந்து தனது துண்டை எடுத்துக் கொடுத்து, “ரொம்ப லேட் பண்ணிடாத, செம்ம பசியில இருக்கேன்” என்று வெளியேறினான்.
பக்கத்து அறையில் குளித்து வந்தவன், “நீங்க சாப்பிட்டிங்களாப்பா?” என்று கேட்டபடி அமர்ந்தான் ஆயாசமாக.
“சாப்பிட்டேன்ப்பா, நீயும் வந்த பின்ன சாப்பிடலாம்னா சமைக்கிற தம்பி விடவேயில்ல” என்றார்.
“முதல்ல நம்பவேயில்ல, உங்க ஆசைக்கு சம்மதிச்சானானு கேட்டா. உன் மகன் இரண்டு வருசத்துக்கு மேல விஷாலினியை விரும்பறானு சொன்னேன். வரட்டும் பேசிக்கிறேனு கோபத்துல இருக்கா, அவகிட்ட சொல்லாம என்கிட்ட சொல்லிட்டியாம், அவ சம்மதம் கேட்காமலே சம்மந்தம் பண்ணிட்டோமாம்” என்றார் சிரிப்போடு.
விஷாலினி கதவை திறக்கும் சத்தம் கேட்க, ஏதும் பேச வேண்டாம் என்று செய்கை செய்தான். விஷாலினி வர, “வந்து உக்காரு” என்று சமையலரை பார்த்தான்.
சமையலர் சாதம் பரிமாற, விஷ்ணு மதியம் சாப்பிடவில்லை என்றால் இரவு சாதம்தான் உண்பான் ஆகையால் “மதியம் சாப்பிடலயா விஷ்ணு” என்றார்.
“இல்லப்பா, பல கேஸ்ல சம்மந்தப்பட்ட அக்கியுஸ்ட், இரண்டு நாள் அலைஞ்சி பிடிச்சோம். கொஞ்சம் அசந்தாலும் தப்பிச்சிடுவான். பெரிய புள்ளிகள் சப்போர்ட் உள்ளவன்” என்றான்.
கோபாலன் முகம் மிகவும் சோர்ந்திருக்க, “தூங்கனும்னா போய் படுங்கப்பா” என்றான்.
உண்மையில் எப்போது படுப்போம் என்ற நிலைதான் கோபாலனுக்கு. மகன் விஷாலினியோடு தனித்திருப்பான் என்ற எண்ணம் உறுத்திய போதும், நிச்சயம் கண்ணியம் தவறமாட்டான் என்ற நம்பிக்கையும் இருக்கவே “சரிப்பா” என்று உறங்கச் சென்றார் கோபாலன்.
“இங்க சம்பிரதாயம் இருக்கு விஷாலினி, நாளை மறுநாள் வந்திடறேன்”
“பாட்டியே போய்டுச்சு, என்ன சாங்கியம்? எல்லாம் நம்ம வீட்டுல விளக்கேத்தி கும்பிட்டுக்கலாம். பாட்டி ஏத்துப்பாங்க. காலைல கிளம்பிடுங்க” என்றாள் கட்டளையாக.
“சொன்னா புரிஞ்சிக்கோடா, சாங்கியம் கழிக்கலனா கருப்பு வளைக்கும்னு சொல்வாங்க” என்றார் கெஞ்சலாக.
“அப்போ என் மொபைலை எப்படி வாங்குறது? எனக்கு நாளைக்கு காலேஜ் போகனும், ப்ச் போம்மா” என்று கோபத்தோடு இணைப்பை துண்டித்தாள்.
“மொபைல்தான? காலைல எடுத்துக்கலாம் விடு” என்றான்.
“எனக்கு அங்க திரும்ப போக வேண்டாம்” என்றாள் இறுகிய முகத்தோடு.
“உனக்கு பிடிக்காத இடத்துக்கு நானும் உன்னை அனுப்பமாட்டேன். டிரைவர்கிட்ட சொல்லி வாங்கி வர சொல்றேன்” என்றவன் தந்தை உறங்கிவிட்டாரா என்று பார்த்து அறைக்கதவை சாற்றி வந்தான்.
இரண்டு நாளாய் அலைந்திருக்கிறான், தூங்கட்டும், நாமும் படுக்கலாம் என்றெழப்பார்க்க, மடியில் ஈரத் துண்டு இருக்கவே அதை காய வைக்க இடம் பார்த்தாள். “அந்த சேர் மேல போடு” என்றான்.
“இல்ல, என் டிரஸ்சும் காய வைக்கனும்”
“துவைச்சியா?”
“ம், காலைல போட்டுக்கனுமே”
“டிரிப்ஸ் போடுற அளவுக்கு வீக்கா இருந்திருக்க, துணியை துவைச்சிருக்க? ஒரு செட் வாங்கி தரமாட்டேனா?” என்று முறைக்க, இவள் பாவமாய் பார்க்க, “போய் எடுத்துட்டு வா” என்றான் கோபம் குறைத்து.
இவள் எடுத்து வர, “வா” என்று முன்னே நடந்தான்.
வெளியே வந்து இடத்தை காண்பிக்க, “நீங்க போங்க, நான் காய வச்சிட்டு வரேன்” என்றாள்.
சுற்றிலும் இருட்டாய் இருக்கவே, “காயப்போடு” என்று அங்கேயே நின்றான்.
இவள் உள்ளாடையை போட்டு அவசரமாக அதன்மேல் சுடிதாரை போட, சிரித்தபடி மொபைலை பார்ப்பதாய் பாவனை செய்தான்.
கிருஷ்ணனைப் பற்றி இவளுக்கும் சொல்ல வேண்டியிருக்க, “இல்ல, உங்களுக்கு?” என்றாள்.
“இப்படி உக்காரு” என்று வெளியில் போடப்பட்டிருந்த சோபாவை காண்பித்தான்.
விஷாலினி அமர, இவனும் அமர்ந்தான். அது இரண்டு பேர் மட்டுமே அமரும் வகையிலான மரத்திலாலான சோபா. இவன் காலை அகற்றி வைத்து தாராளமாய் அமர்ந்தான் அவளருகே.
இவள் உடல் குறுக, அது புரிந்தபோதும் தன்னை குறுக்கிக்கொள்ளாமல் “ஹம்… உன் பாட்டிம்மா என்ன சொன்னாங்க? உன்னை பார்த்ததும் சந்தோசப்பட்டாங்களா?” என்றான்.
“ம்… ரொம்ப ரொம்ப சந்தோசப்பட்டாங்க” என்று பாட்டியின் நினைவோடு மகிழ்வாய் சொல்லி, “ஆனா எனக்கு கதைகள் சொன்ன கணீர் குரல் உடைஞ்சி போயிருந்தது. என்கிட்ட நிறைய பேச நினைச்சாங்க, ஆனா அவங்களால சரியா பேச முடியல, சோறூட்டின கை சதையெல்லாம் வத்திப்போய் குச்சி போல இருந்தது.
சாப்பாடு சாப்பிட்டு ஆறேழு மாசம் இருக்குமாம். லிக்விடாதான் எடுத்திருந்திருக்காங்க, இப்போ கடைசியா இரண்டு மாசமா பேச முடியாதளவுக்கு இருந்திருக்காங்க, நான் கொஞ்சம் முன்னாடியே போய் பார்த்திருந்திருக்கலாம், தப்பு பண்ணிட்டேன்” என்று கலங்கினாள்.
“ப்ச் அழக்கூடாது. அவங்க கடமைலாம் நிறைவா முடிச்சிட்டு போயிருக்காங்க, உடல் வலியோட சாப்பிட முடியாம உயிரோட இருந்து அவங்களும் கஷ்டப்பட்டு, அதைப் பார்த்து நாமளும் கஷ்டப்படுறது ரொம்ப கஷ்டம். உயிரை விட்டாதானே உடல் உபாதையிலயிருந்து விடுதலை ஆக முடியும்?” என்றான் பொறுமையாக.
ஆமாம் என்பதாய் தலையசைத்து பாட்டியின் இறப்பை துக்கமென நினைக்காமல் பிறவிக்கான முக்தி என்பதை ஏற்க முயன்றாள்.
விஷ்ணு தன்னையே பார்த்திருப்பது புரிய, “அங்க கிருஷ்ணனு ஒரு கிறுக்கன் இருக்கான்” என்றாள் எரிச்சலோடு.
“ம் ஆன்ட்டி சொன்னாங்க, அவன் கிறுக்குத்தனம் இருக்கட்டும், நீ என்னவோ சொன்னியாமே?” என்றான் விசாரணையாக.
“நான் என்ன சொன்னேன்?” என யோசிக்க, “உன் மனசுல யாரோ இருக்காங்கனு சொன்னியாம்” என்று நினைவூட்டினான்.
இவள் நிமிர்ந்து விஷ்ணு முகம் பார்க்க, “உன்னை பிடிக்கல போடானு உண்மையை சொல்றதை விட்டுட்டு அவனை சமாளிக்க இதைத்தான் சொல்லனுமா? ஆன்ட்டி ரொம்ப பயந்துட்டாங்க” என்றான்.
இவள் அமைதியாக இருக்க, “எதுக்கு அப்படி சொன்ன?” என முறைத்தான்.
“பின்ன? இன்னொருத்தர் மனசுல நான் இருக்கேனு சொன்னா என்னை கிறுக்கினு நினைக்கமாட்டாங்களா?” என்று தலைகுனிந்தாள் பெரும் அவஸ்த்தையோடு.
அதிர்ந்தாலும், “என்ன சொல்ல வர? தெளிவா சொல்லு” என்றான்.
“அன்னைக்கு ஹோட்டல்ல வச்சி மாமன் மகன் எப்படி அண்ணனாக முடியும்னு க்ளாசெடுக்கும்போதே என்னடா இப்படி பேசுறாங்கனு தோணுச்சு. அந்த நேரம் என்னை சரி பண்ண எதேதோ சொல்றிங்கனு என்னை நானே சமாதானம் செய்துக்கிட்டேன்.
அதுக்கப்புறம் ரொம்ப நாள் கழிச்சு நீங்க போன் செய்தப்போ ‘ம்’ னு சொன்னதுக்கு திட்டுனிங்க. அப்போ நல்லாவே டவுட் ஆகிடுச்சு. அதுக்கப்புறம் இரண்டு வருசம் கழிச்சு நேர்ல பார்க்கும்போது நீங்க என்னை பார்த்த பார்வை என் சந்தேகத்தை க்ளியர் பண்ணிடுச்சு” என்றாள் கதைபோல.
‘அடிப்பாவி, எல்லாம் தெரிஞ்சிட்டுதான் அமுக்கமா இருந்தியா? என்ற கோபத்தில் “அது… பல்லை கட்டி, ஐபுரோ சரி பண்ணி முன்னை விட பார்க்க கொஞ்சம் சுமாரா இருந்த. அதனால கொஞ்சம் ஊன்றி பார்த்திருப்பேன், இதை காதல்னு நினைப்பியா?” என்றான்.
“ஓ… அப்போ இல்லையா? சரி விடுங்க” என்றாள் அசால்ட்டாக.
“உன்னை” என்று விஷாலினியிடம் நெருங்கி வர, “எல்லாம் புரிஞ்சாலும் நீங்களே சொல்லி கேட்கனும்னு வெய்ட் பண்ணத்தான் நினைச்சிருந்தேன். என் அம்மாவோட அண்ணன் மகன் என்னை ரொம்ப டென்ஷன் பண்ணிட்டான்.
அந்த குடும்பத்தாளுங்க காட்ற அன்பை என்னால சகிக்க முடியல, அதுக்காக அவங்களை நோகடிக்கலாம், பழிவாங்கலாம்னும் நினைக்க முடியல. என் பாட்டியோட வம்சம் இல்லையா?” என்றாள் கலக்கமாக.
“அதுக்கு என்ன பண்ணலாம்?” என்றான் கனிவாக.
“நான் அவனுக்கானவள் இல்லைனு தெளிவா புரிய வைங்க”
“உன் மனசுல யார் இருக்காங்கனு இன்னும் நீ சொல்லலையே… எப்படி புரிய வைக்க?” என்று இன்னும் நெருங்க, இவள் பதட்டத்தோடு சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றினாள்.
பதட்டம் இருந்தபோதும் தன் அருகாமையை விஷாலினி மறுக்காமல் இருப்பது வயதிற்கான ஆசையை உண்டாக்க, “உள்ள வா” என்று கைப்பிடித்து இழுத்துச் சென்றவன், முன் கதவை பூட்டிவிட்டு தனியறைக்கு அழைத்துச் சென்று, “விஷ்… க்கூம்… விஷாலினி… ஒரே ஒரு ஹக்… பண்ணிக்கவா?” என்று நெருங்கி நின்றான் ஏக்கத்தோடு.